16

     பரஸ்பரம் ஒருவர் இரகசியத்தை மற்றவர் காப்பது என்ற அடிப்படையில் அந்த அழகிய இளம் நடிகையும் அவளது தந்தை வயதுள்ள திருமலையும் ஒருவரையொருவர் மணந்து கொண்டனர். சண்பகம் இறந்திருந்தது வசதியாகப் போயிற்று. அவளது வருமானத்துக்கும் அவனே அதிபதியானான். மார்க்கெட்டில் புகழும் செல்வாக்கும் உள்ள ஒரு பெரிய நடிகைக்கு அவனே உரிமையாளனானான். அவளைப் படத்துக்குப் புக் செய்கிறவர்கள், பிளாக்கிலும், ஒயிட்டிலும் பணம் கொடுக்கிறவர்கள் எல்லோருமே திருமலையை முதலில் சந்தித்தாக வேண்டியிருந்தது. திருமலை அவளுக்கும் அவள் செல்வத்துக்கும், அழகிற்கும் சேர்த்தே எஜமானன் ஆனான். அவனுடைய இந்தப் புதிய பதவிகள் கட்சியில் அவன் செல்வாக்கை அதிகமாக்கின. இயக்க மூலவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடமாக அவள் வீட்டுத் தோட்டமும், ஏ.சி. அறையும் பயன்பட்டன. அடிக்கடி அங்கே நல்ல விருந்து சமைத்துப் போடப்பட்டது. தலைவருக்கும், மற்றப் பிரமுகர்களுக்கும் தேவையானபோது கார்கள் உபயோகத்துக்குத் தரப்பட்டன. திருவின் செல்வாக்கு மட்டுமின்றிக் கவர்ச்சியும் அதிகமாயிருந்தது. இன்ன நடிகையின் புதுக்கணவர் என்று பெயர் பரவி அதனாலும் அவனைப் பார்ப்பதற்கு எங்கும் ஒரு கூட்டம் கூடியது. அதனால் அவனுக்கே ஒரு நட்சத்திர அந்தஸ்து வந்திருந்தது. ஒரு சூப்பர் ஸ்டாரின் கணவன் என்றால் சும்மாவா? அவன் சில்க் ஜிப்பா, பட்டு வேட்டி, வைர மோதிரம், இண்டிமேட் செண்ட் வாசனை எல்லாம் சூழ வந்தாலே ஒரு களை கட்டியது. சினிமாப் பத்திரிகைகளில் எல்லாம் அவனைப் பற்றிய கிசுகிசு, தகவல் செய்தி, துணுக்குகள் அதிகமாக வெளிவரத் தொடங்கின. முன்பு இருந்தது போல் இயக்கத்தில் இதையெல்லாம் எதிர்க்கவோ தடுக்கவோ ஆட்கள் யாருமில்லை. கட்சிக்குள் ஈர்க்கப்பட்ட பெருவாரியான ஆட்களே இப்போது அவனால்தான் ஈர்க்கப்பட்டனர். சினிமாவுக்குக் கதை எழுத, வசனம் எழுத, பாடல் எழுத, நடிக்க, ஏரியா விநியோக உரிமையைப் பெற என்று விதம் விதமானவர்கள் இவன் சிபாரிசை நாடி வந்தனர். அவனை மதித்துக் கைகட்டி நின்றனர்.

     தமிழ்நாடு முழுவதும் இராப்பகலாக ஓடியாடி அலைந்து பணத்தையும், மாணவர்களையும் அவனால் ஒன்று திரட்டி வைக்க முடிந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. காங்கிரஸ் ஆட்சியின் மீதும் கட்சியின் மீதும் பெரிதும் கசப்படைந்த ஆச்சாரியார் போன்ற மேதை கூட இப்பொழுது இந்தி எதிர்ப்பை ஆதரித்தார். காங்கிரஸுக்கு எதிரான அரசியல் கிட்டணி ஒன்று உருவாக வேண்டும் என்று அவரே விரும்பினார். இப்போது இயக்கப் பேச்சாளர்கள், ஆச்சாரியார், குல்லுக பட்டர் - போன்ற பழைய பழகிய அடைமொழிகளை மெல்ல மெல்ல கை விட்டுவிட்டு மூதறிஞர் ராஜாஜி என்று கொஞ்சம் அதிக மரியாதையோடு பேசத் தொடங்கியிருந்தனர். வேறு சில கட்சி களும் இடதுசாரி இயக்கங்களும் கூடப் புதிய கூட்டணியை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தன. அடித்தளத்து மக்கள், வர்த்தகர்கள், படித்தவர்கள் எல்லார் மத்தியிலும் அப்போதிருந்த ஆட்சியின் மீது ஒரு வெறுப்பு வளர்ந்து வரத் தொடங்கியிருந்தது. ஆட்சி செல்வாக்கிழந்திருந்தது.

     தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் குதித்தனர். சில கல்லூரிகளின் வளாகத்திற்குள் அரசியல் சட்டத்தையே தீயிட்டுக் கொளுத்துகிற அளவு மாணவர்கள் வெறியோடிருந்தனர். மாநிலத்தின் எல்லா நெடுஞ்சாலைகளிலும் கார்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பெட்ரோல் சேகரித்து அதைக் கொண்டு எரியூட்டல்களில் ஈடுபட்டனர். ரயில்களும், பஸ்களும் எரிக்கப்பட்டன. சாலைகள் மறிக்கப்பட்டன. வாகனங்களையும் ரயில்களையும் நிறுத்தி ‘இந்தி அரக்கி ஒழிக’, ‘லம்பரடி இந்தி ஒழிக’ என்றெல்லாம் தாரினால் எழுதினார்கள், வாழ்க்கையே ஸ்தம்பித்தது. கல்வி நிலையங்கள் கலவர நிலையங்களாயின. துப்பாக்கிப் பிரயோகங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் போலீஸ்காரர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அதற்கு முன்பு ஆச்சாரியார் ஆட்சியில் இருந்த காலத்தில் தாரினால் இந்திப் பெயர்ப் பலகையை அழித்தபோது வன்முறைகள் நிகழ வாய்ப்பின்றி அதை அவர் சமாளித்தார். இப்போதோ இரண்டு தரப்பிலும் வன்முறைகள் நிகழ்ந்தன. கை மீறிப் போன நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் ஆட்சி திணறியது. தொடங்கி வைத்தவர்களே எதிர்பாராத அளவு நாட்டில் தீப்பற்றி இருத்தது. மொழிப்பற்று மட்டும் இன்றி, விலைவாசி எதிர்ப்பு, சுதந்திரம் பெற்றதிலிருந்து விடாமல் ஆட்சியை நடத்தி வந்த ஒரு கட்சியின் மேல் ஏற்பட்ட சலிப்பு, எல்லாமாகச் சேர்ந்து கொண்டன. இந்தி எதிர்ப்புப் போரின் போது அவன் பம்பரமாக அலைய வேண்டி இருந்தது. பல இளைஞர்கள் தீக்குளித்தார்கள். ஒருநாள் மாலை பள்ளி ஒன்றின் முகப்பில் பஸ்ஸுக்குப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்று கொண்டிருந்த மாணவர் கும்பலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பக்கத்துக் குப்பத்தைச் சேர்ந்த பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் மாட்டிக் கொண்டு இறந்து போனான். அவன் இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்துச் சிறுவனா, படிக்கிற பையனா, போராட்டத்தில் ஈடுபட்டுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாண்டானா, கலவரத்தை வேடிக்கை பார்க்க வந்து நடுவில் சிக்கிக் கொண்டு மாண்டானா, என்றெல்லாம் விவரங்கள் தெரியாவிட்டாலும் அந்த இளம் சாவை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான் திருமலை.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.