11

     கங்குல் தன் கரிய துகிலை ஒரு புறமாகச் சுருட்டிக் கொண்டு மறைய, கீழ்வானம் சிவந்தது. கிண்ணம் கவிழ்ந்தது போல் பொற்குழம்பு வான வீதியெங்கும் பரவியது. உதயகன்னியின் நெற்றிச் சுட்டியில் ஒளிரும் வைரமணி என ஆதவன் குபீரென உதயமானான்.

     ஆற்றங்கரையோரம் அடர்ந்து வளர்ந்திருந்த மரம் செடிகளில் வாழும் புள்ளினங்கள் அவனுக்கு உதயகீதம் பாடின. கலகலப்பைப் பரப்பின. தனி வழி செல்லும் பயம் நீங்கிய கன்னி காவேரி, தன்னுடைய அகண்ட இருதயம் மலர்ந்து விம்ம ஒளி நகை செய்தாள்.

     பி, பி என்ற முகவுரையுடன் நாதசுரக்காரன் பூபாள ராகத்தை ஊதத் தொடங்கினான்.

     ...வேளை வந்து விட்டது!

     வருமோ, வராதோ என்று தெரியாமலிருந்த அந்த நாள் வந்து விட்டது!

     பாலு படித்துத் தேறாமல், எங்கும் தேடி அலையாமல், ஆயிரம் பொய் சொல்லாமல், கைக்காசுக்குச் செலவு வைக்காமல் வந்து விட்டது!

     டுடும், டுடும், டுடும் என்ற தவுலின் ஒலி வந்து விட்டது, வந்து விட்டது என்று அவளுடைய காதுகளில் முழங்கியது.

     மருதோன்றியின் சாரம் பட்டுச் சிவந்திருந்த ஜானகியின் பாதங்களை ஸ்பரிசித்து மணப்பெண்ணான அவளை உற்ற தோழியாகக் கேலி செய்து கொண்டிருந்தாள் காவேரி.

     ‘ஏனம்மா, கதையில் தவிர வாழ்க்கையில் வராது என்று இருந்தாயே? அந்த நாளும் இதோ வந்து விட்டதே? ஏன் இன்னும் முகவாட்டம்?’ என்று அவள் சிரித்துக் கேட்பது போலிருந்தது.

     ‘ஒற்றை வளையல் இருந்த இடத்திலே குலுங்கக் குலுங்கப் பொன்வளையல்கள் இளம்பரிதியின் ஒளியிலே பளிச்சிடுகின்றன. பழுப்பேறிய மில் சேலை இருந்த இடுப்பிலே வழவழவென்று பட்டுச் சரிகைச் சேலை இரு வர்ணங்களில் ஜாலம் செய்கிறது. கழுத்திலே பொற்சரம், காதிலே வைரம், மூக்கிலே முத்து, தலையைத் திருப்ப முடியாத அளவுக்கு மலர்ச் சிங்காரம், இதோ வந்துவிட்டதே? இன்னும் என்ன வாட்டம்?’ என்று கரையிலே வீசிய மென் காற்று அவளுடைய காதோடு கேட்டு நகைத்தது.

     அவளுக்கு என்ன வாட்டம் இன்னும்?...

     சிற்றலைகளுடன் சிரிக்கும் ஆறு சுழித்துச் சுழித்து ஏன் சோக ஒலியை எழுப்ப வேண்டும்? நாதசுரத்தின் இன்னிசையை அந்தத் தவுலின் ஒலி வந்து விட்டது, வந்து விட்டது என்று ஏன் பயங்கரமாக முழக்கி அமுக்க வேண்டும்?

     பூ கனக்குமா? மணம் உள்ளத்தை அழுத்துமா? கங்கணம் குலுங்கிச் சிரிக்காதா? கையை வருத்துமா?...

     இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஜானகியின் பேதை உள்ளத்துக்குப் பதில் கூறத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு... வேளை வந்து விட்டது!

     செல்லம் ஆசைப்பட்டபடி மருமகன் வந்து குதித்து விட்டான். சோற்றுக்குத் துணிக்கு, நகை நாணயத்துக்குப் பஞ்சமில்லா இடம், பெரிய மனசைப் படைத்த மனிதர், பிக்குப் பிடுங்கல் இல்லாத குடும்பம், முதல் தாரம், இத்தனைக்கும் விலையுமில்லை.

     என்றாலும் கல்யாணம் நிச்சயமான தினத்திலிருந்து செல்லத்தின் கொஞ்ச நஞ்ச மன நிம்மதியும் சந்தோஷமும் எங்கே போயின? பயங்கொண்ட புறாவைப் போல அடி நெஞ்சம் துடிப்பானேன்?

     நம் சமூகத்திலே பெண்களின் நல்வாழ்வு கடைச்சரக்கைப் போல இன்னும் வியாபாரப் பொருளாகத்தானே இருக்கிறது? இதன் காரணமாகப் பெண்களைப் பெற்ற பிரபுக்கள் ஆண்டியாகிறார்கள். ஏற்கெனவே ஆண்டியாக இருக்கும் அப்பாவிகளுக்குப் பிறக்கும் பெண்களோ தம் வாழ்வுக்கு விலையாகத் தம் இன்பத்தையோ, அன்பையோ, ஏன் நல்வாழ்வையோ கூடக் கொடுக்க வேண்டியதுதான்!

     செல்லத்துக்கு இது தெரியாதா? அவள் அறியாததா, அநுபவியாததா?

     கிழவர் உண்மையான பெருந்தன்மையுடன் தான் அவர்களுடன் சம்பந்தம் செய்ய முன்வந்திருக்கிறாரா? கத்தரிக்காய்க் கூடைக்காரியிடம் கூடக் காலணாவுக்கும் கறார் பேசும் கந்தையா உண்மையிலேயே பரந்த நோக்குடன் தான் மகனுக்கு விலை கூறவில்லையா?

     இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவளுடைய நெஞ்சின் ஆழத்தில் ஒரு பதில் இருந்தது. அது வெளியேயும் வராமல் உள்ளேயும் அமுங்காமல் முள்ளென உறுத்தி வேதனை செய்தது.

     முதல் தாரம் தான். உயரமாக வளர்ந்திருக்கிறான். படித்துப் பட்டம் பெற்று இருக்கிறான். ஆனால், சாந்தமோ, அறிவின் ஆழமோ இல்லாது அலையும் பார்வையும், வயதுக்குரிய ஒளியின்றி வறண்டிருக்கும் முகமும், முப்பதுக்கு மேற்பட்ட பிராயமும்... கிழவரின் பெருந்தன்மையும் ஒன்று கூடும் போது?...

     புத்தம் புது மலரை அர்ப்பணிக்கக் கூடிய தூய சந்நிதியாக இருக்குமா அவனுடைய உள்ளமும் உடலும்?

     உத்தியோகமாக ஊர் ஊராகப் போவதால் வறண்டு போயிருக்கலாம் முகம். உண்மையான சீர்த்திருத்த நோக்குடன் வரதட்சிணை வேண்டாம் என்று தான் சொல்லுவதிலிருந்து வெளியார் பையனுக்கு ஏதோ குற்றம் என்று கதை கட்டி விடுவதாகவும், அதனாலேயே அவனுடைய கல்யாணம் இத்தனை நாட்கள் தடைப்பட்டுப் போயிற்றென்றும் மகனுடைய இத்தனை நாளைய ‘பிரம்மசரி’யத்துக்குக் காரணமும் சொல்லுகிறார் கிழவர்.

     இன்னும் மனசை ஏன் அலைபாய விட வேண்டும். அவள்?

     ரங்கநாதத்துக்கு அளவற்ற திருப்தி, மகிழ்ச்சி. எதையும் துருவித் துருவி ஆராயும் வழக்கம் அவருடைய மனசுக்குக் கிடையாது. ஆனால் செல்லத்துக்கு அதுவே தானே வழக்கம்?

     “எனக்கு இஷ்டமில்லை, கல்யாணத்தை நிறுத்தவும்” என்று பாலுவும் வேறு கோபத்துடன் கடிதம் எழுதியிருந்தான்.

     ரங்கநாதம் அதை லட்சியமே செய்யவில்லை. “கிடக்கிறான், சிறு பையன், அவனுக்கென்ன தெரியும்? ஏதோ கோபத்தில் எழுதியிருக்கிறான்” என்று தள்ளிவிட்டு உற்சாகத்துடன் இருந்தார்.

     கல்யாண நாள் நெருங்க நெருங்க செல்லத்தின் இனமறியாத திகில் அதிகமாகிக் கொண்டு வந்தது.

     ஊரில் நடந்த திருமண வைபவங்களில் எல்லாம் மாப்பிள்ளை அப்படி இப்படி என்று குறை கூறிய ஜானகி தன் விஷயத்திலே மௌனம் சாதித்தாள்.

     அவளைப் போன்ற பெண் குழந்தை, “மாப்பிள்ளை பிடித்திருக்கிறானா அம்மா?” என்று பெற்றோர் கேட்கையில் பின் வேறென்ன சொல்லுவாள்?

     ஏன்? செல்லத்தையும் கூட அன்று ரங்கநாதத்துக்கு முன் விலை பேசப்படும் பொருளைப் போல நிறுத்தித்தான் வைத்தார்கள். கமலம்மாளே, ‘என் தம்பியைப் பிடித்திருக்கிறதாடி செல்லம்?’ என்று கேட்கவும் செய்தாள்.

     இவர் கையைத் தாம் நாம் பிடித்தாக வேண்டும், வேறு வழியில்லை என்பது ஒரு விதமாகத் தீர்ந்து விட்ட பிறகு இந்தக் கேள்விகளெல்லாம் வெறும் சம்பிரதாயமாகத் தானே அமைந்து விட்டன?

     ஜானகிக்கும்... ஏறக்குறைய அப்படித்தானே நேர்ந்திருக்கிறது?... வேண்டாம், இந்தக் கல்யாணம் வேண்டாம், நிறுத்தி விடலாம்.

     பையனைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொடுக்கும் மனிதர் யாரையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த வீட்டில் பெண் மக்கள் எவரும் இல்லை. மேலும் கிழவரும் கண்டிப்பானவர். அதனாலோ என்னவோ வம்பு வேண்டுமானால் கிளம்பியிருக்கலாம். சந்தேகத்துடன் சம்பந்தம் செய்வானேன்? பாலுவும் கூட ஒரு நல்ல காரியம் என்று ஆரம்பித்து எழுதியிருக்கையில் வேண்டாம் என்று தடுத்து எழுதியிருக்கிறான்... அவள் அடித்துப் பேசிய பின்னும் ரங்கநாதம் கேட்க மாட்டாரா?...

     இந்தத் தீர்மானம் வேகத்துடன் தான் எழும்பி வந்தது. ஆனால் பொங்கும் திரவத்தில் கொழுப்புக் கலந்திருந்தால் உள்ளே அமுங்கி விடுகிறதன்றோ? அவளுக்கு இந்த எண்ணம் எழும்பியதே ஒழிய செயலாற்றும் துணிவு வரவில்லை.

     ஆராயாமல் அரை நொடியில் நிறுத்தி விடலாம்; ஆனால் ஜானகிக்கு எப்படி எப்போது கல்யாணம் செய்ய முடியப் போகிறது? பாலு படித்தால், சம்பாதித்தால், மலை போன்ற இந்தப் பொறுப்பையும் அவன் தலையில் ஏற்றி வைக்க முடியுமா? மேலும் அவனுக்கு இத்தனை பொறுப்புகளை வைத்தால் இளம் வயதில் அவன் சந்தோஷமாக இருப்பது எப்படி? அவனுடைய மலர்ச்சிதானே அவள் கனவு? மலரும் பருவத்தில் நெருக்கத்தை ஏற்படுத்திப் பாரத்தையும் ஏற்றி வைப்பது போல் பெண்ணைக் குன்றிமணி பொன்னுக்கும் வழியில்லாமல் நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கலாமா? அவனுடைய எதிர்காலம் வளமையுடன் கொழிக்க வேண்டுமென்றால் இந்தத் திருமணம் நடப்பதில் இரட்டிப்பு நன்மையாயிற்றே? கொடிக்குத் தன்னுடைய காய் கனமாகுமா என்பார்கள். எனினும் தற்போதைய அவளுடைய நிலையில் கனமாகத்தானே இருக்கிறது? ஜானகி வேறு வீட்டுக்குப் போய் அவளைத் தாங்கும் அளவுக்குச் சக்தி பெற்றால் பாலுவை இன்னும் சிரமமில்லாமல் படிக்க வைக்கலாமே?...

     அவளுள் ஊறியிருந்த இந்த ஆசையே அவளுக்குக் கல்யாணத்தை நிறுத்தத் துணிவை உண்டாக்காமல் தடுத்தது. மனசின் மறுகோடியில் தோன்றும் எதிர்க் கேள்விகளை எல்லாம் அது விழுங்கி ஜீரணம் செய்து விட்டது.

     வீட்டை ஒழித்து சாமான்களைக் கட்டி விமலா சென்னைக்கு அனுப்பி விட்டாள். மூர்த்தியின் தங்கை, தம்பி, தாய் மூவரும் அங்கு குடும்பமாக இருந்ததால் அவர்களுக்கு அவசரமாக இடம் தேடும் அவசியம் இருக்கவில்லை. குழந்தைகளுடன் விமலாவையும் கொண்டு வந்து ஊரில் விட்டு விட்டு அவன் சென்னைக்குப் போய்விட்டான். பாலுவுக்கு அவள் வரும் சமயம் பரீட்சை நடந்து கொண்டு இருந்தது. விமலாவைக் கண்டதுமே செல்லம், “ஏன் இப்படிக் கடிதம் எழுதினான் பாலு?” என்று விசாரித்தாள்.

     “அவனுக்கென்னவோ கோபம். அவனுடைய படிப்பு பூர்த்தியாக வேண்டாமா அம்மா? இப்போது ஒன்றும் செலவில்லை என்றாலும் நம் கௌரவத்தை விட்டுக் கொடுத்துக் கொள்ளலாமா, நம் குடும்பங்களில் ஏழை வீட்டுப் பெண்ணைக் கொண்டு மனம் நோகச் செய்யாமல் யார் வைத்திருக்கிறார்கள் என்று கேட்கிறான். அவனுக்கு இவ்வளவு தூரம் அவரைப் பற்றித் தெரிய நியாயமில்லை இல்லையா? ஜானகி அதிர்ஷ்டக்காரியம்மா...” என்றாள் விமலா.

     அவளுக்குத் தங்கையின் அதிர்ஷ்டத்தைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாகக் கூட இருந்தது.

     விமலாவினுடைய இந்த அபிப்பிராயத்தில் செல்லம் இன்னும் சிறிது தெம்பு கொண்டாள். அவளே தெம்படைந்த பிறகு, அந்தக் கல்யாணம் ஏன் நடக்காமல் போகிறது?

     ஜானகி ஸ்ரீதரனுக்கு மனைவியானால். காவேரிக் கரையில் உள்ள சத்திரத்திலே திருமண வைபவம் ஆடம்பரமாகத்தான் நிறைவேறியது. ஆனால் பாலு மட்டும் வரவில்லை. ரயில் வண்டியின் கூவும் ஒலி கேட்கும் போதெல்லாம், வாசலில் வண்டிச் சத்தம் கேட்கும் போதெல்லாம், செல்லத்தின் மனம் மரத்திலே சிக்கிக் கொண்டு காற்றிலே படபடக்கும் பட்டத்தைப் போல் துடித்தது. பாலு வரவேயில்லை.

     ஸ்ரீதரன் திரைப்படம் தயாரிக்கப்படும் ஒரு ஸ்தாபனத்தில் ஒளிப்பதிவு இலாகாவில் வேலை பெற்றிருந்தான். மனைவியை மணம் நிகழ்ந்த மறுதினமே தன்னுடன் திருவனந்தபுரம் அழைத்துச் செல்வதாக இருந்தான்.

     செல்லம் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஓரிரண்டு மாதங்கள் அவள் இருப்பாள். பின் கொஞ்சம் பழக்கம் ஏற்பட்ட பிறகு பெரியவர் அழைத்துச் சென்று அங்கே குடும்பத்தை ஆரம்பித்து வைப்பார் என்று அவள் எண்ணியிருந்தாள்.

     இந்தச் செய்தியில் அவள் கலங்கினாள். இன்னும் ஒரே நாள் தானா?

     பட்டுச் சேலையைக் கலைந்த் நூல் சிற்றாடையைச் சுற்றிக் கொண்டு ஜானகி தலையலங்காரத்தையும் அவிழ்த்துக் கொண்டிருந்தாள். இரைச்சல், அமளி ஓய்ந்து கண்ட கண்ட இடங்களில் யார் யாரோ படுத்துத் தூங்கினர்.

     மகளைத் தனிமையில் தேடி வந்தாள் செல்லம். வாழைக் குருத்துப் போன்ற அவள் இரண்டு நாளைய அலைச்சலிலும் சோர்விலும் வாடி நிற்பதைக் கண்டதும் அவளுடைய தணதணப்பு உச்ச நிலைக்கு வந்து விட்டது.

     “நாளைக்கே போக வேண்டுமென்கிறார்களேடி ஜானகி?...” என்று கேட்டாள். புடைவை மடிப்பதில் அதிக கவனம் காட்டிய ஜானகி, “முன்பே தெரிந்தது தானே அம்மா? நான் இங்கேயே இருப்பதற்காகவா கல்யாணம் செய்து கொடுத்தீர்கள்?” என்று பதில் கொடுத்தாள்.

     “ஏண்டி கண்ணே, உன்னை வேண்டாம் என்று சொல்லுவோமா அப்படி? அசட்டுப் பிசட்டென்று பேசாதே. நாளைக்கே போவாயோ? உன்னுடன் பேசினாரா ஜானகி?...”

     ஜானகி வெட்கப்பட்டாளா, கோபம் கொண்டாளா, அல்லது வெட்கத்தை மறைக்கப் பொய்க் கோபம் கொண்டாளா என்பதைச் செல்லத்தினால் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய மனம் தெளிவாக இருந்தால் தானே எதுவும் நன்றாகப் புரியும்?

     புருவங்களைச் சுருக்கிக் கொண்டு, “இதெல்லாம் என்னம்மா கேள்விகள்? நாளைக்கே போகாவிட்டாலும் பத்து நாட்கள் கழித்தேனும் போகத்தானே வேண்டும்?” என்றாள் ஜானகி.

     “உனக்குப் போக வேண்டுமே என்றில்லையாடி ஜானா?...”

     “ஊஹூம்...!”

     நிமிர்ந்து நோக்காமல் அவள் தலையை ஆட்டினாள்.

     “தனியே போகப் பயமாக இல்லையாம்மா?”

     “சும்மாச்சும்மா இதெல்லாம் என்னம்மா கேள்வி?”

     சூரியோதயத்தைக் கண்டு கமலம் அஞ்சி மூடிக் கொள்ளுமா? மணம் புரிந்து கொண்ட கணவனுடன் செல்ல விவரம் அறிந்த பெண் ஏன் பயப்படுகிறாள்?

     அந்த இளம் உள்ளம் வாழ்வில் மலர்ந்திருக்கும் உதயத்திலே பொங்கிப் பூரிக்கவில்லை என்பது செல்லத்துக்கு எப்படியோ தெரிந்தது.

     “போனவுடன் கடிதம் போடுவாயா ஜான்கி?...”

     “உம்... ஏனம்மா, பாலு அண்ணா வரவேயில்லையே?”

     “தானே வருவான். அத்தானை விசாரிக்கச் சொல்லி அப்பா கடிதம் எழுதுவார். ஜான்கி, மாப்பிள்ளை பிரியமாக இருக்கிறாராம்மா, எனக்குக் கடிதாசி எழுதுவாயாடி கண்ணே? மனசை என்னமோ செய்கிறதே?...” தாய் மகளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தாள்.

     மறுநாள் அந்த மகள் தான் அதுவரை வளர்ந்து உருவான வீட்டிலிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டு விட்டாள்.

     அவள் வண்டியில் ஏறிக் கொள்ள, வண்டி புழுதியைக் கிளப்பிக் கொண்டு கண்ணுக்கெட்டாமல் மறைந்ததும் செல்லத்துக்குக் கண்ணீர் பெருகி வந்தது. உள்ளே எங்கே வந்தாலும் ஓசைப்படாமல் பூனை போல அவள் பதுமையென வந்து நிற்பது போலிருந்தது.

     “ஜானகி யாருடனும் போயிருக்கிறாளா? எதற்காக இப்படி அழுகிறாயம்மா? இதற்குக் கல்யாணம் ஏன் பண்ணிக் கொடுத்தாயாம்?” என்று விமலா கூடக் கடிந்து கொண்டாள்.

     “என்றுமே அவளுக்கு ஜானகி என்றால் கொஞ்சம் பாசம் அதிகம் உண்டு. முதல் தடவையாகப் பிரிந்து போகிறாளோ இல்லையோ?” என்றார் அவள் மனசை அறியாத ரங்கநாதம்.

     “அந்தக் கிழவர் தான் கொஞ்ச நாட்கள் கூடப் போயிருக்கக் கூடாதோ? இந்த நாளையப் பையன்களும் அரவணைப்பதில்லை, பெரியவர்களும் கடமையுடன் ஒதுங்கி விடுகிறார்கள். மாப்பிள்ளை கொஞ்சம் கடுமையுள்ளவனாகத்தான் இருப்பான் போலிருக்கிறது. நேற்று அவள் உள்ளே ஏதோ செய்து கொண்டிருந்தாள். ‘ஏய், ஜானகி? கூப்பிடுகிறேனே, காதில் விழவில்லை’ என்று கேட்டுக் கொண்டே வந்தான், மிரண்டு விட்டாள் பாவம். புதிசு, கல்யாணமாகி முழுக்க மூன்று நாட்கள் கூட ஆகவில்லை, இப்படி அதட்டுகிறாப் போல் கூப்பிடுகிறானே என்று எண்ணிக் கொண்டேன்” என்று உதவியாக வேலை செய்ய வந்திருந்த பார்வதி விவரித்தாள்.

     “நன்றாகச் சொன்னாய்! அவளா பயந்தவள்? கிளம்பு என்ற உடன் கிளம்பி விட்டாளே! இங்கே அம்மா வேண்டுமானால் கண்ணைக் கசக்குகிறாள். அவள் ஒரு பொட்டு நீர் கூட விடவில்லை. ஜம்மென்று வண்டியில் போய் உட்கார்ந்து விட்டாள்!” என்றாள் விமலா.

     ‘நன்றாகவே வைத்துக் கொள்ளுவான். அவளுக்கு ஒரு குறையும் வராது. கடவுள் அத்தனை சோதிக்க மாட்டார்!’ என்று செல்லம் மனசைத் தேற்றிக் கொண்டாள்.

     அவளைப் பற்றிய சஞ்சலங்களை ஒதுக்கியதும் பாலுவைப் பற்றிய கவலைகள் அவளுடைய மனசை ஆக்கிரமித்துக் கொண்டன.

     ஒரே பிடிவாதமாக அல்லவோ, லீவுக்கு வந்தால் கூட கல்யாணத்துக்கும் தங்கி விட வேண்டியிருக்கும் என்று நினைத்து விடுமுறைக்கும் கூட அவன் அங்கு வரவில்லை?

     பார்த்து ஆறேழு மாதங்கள் ஆகிவிட்ட மகனைப் பார்க்க வேண்டும் என்ற தாபம் அவனை நினைத்த உடனேயே அவளை உந்தியது.

     கங்காதரமும் மீனாவும் திருமண வைபவத்துக்கு வருவதையே அவள் விரும்பவில்லை. “நான் இல்லாதவள், ஏதோ ஒன்றுக்குமில்லாமல் பெண்ணைக் கொடுக்கிறேன். அவள் இங்கே வம்புக்கு வர நீங்கள் வரிந்து வரிந்து அழைக்க வேண்டாம்!” என்று ரங்கநாதத்தினிடம் கண்டிப்பாகக் கூறி இருந்தாள். அவரும் அதை ஆமோதித்தார்.

     கல்யாணம், வேடிக்கையாகக் கூடிக் கொண்டாட வந்திருக்கிறோம் என்று அவள் தான் நினைப்பாளா, இவள் தான் விடுவாளா? பந்துக்கள் என்று இம்மாதிரி சந்தர்ப்பங்களில் கூடும் போது தானே பெரும்பாலான பெண் மக்களுள் ஒருவரைப் பற்றி ஒருவர் குறைகள், மனஸ்தாபங்கள் எல்லாம் வெடிக்கின்றன? விமலா ஊரை விட்டுக் கிளம்பு முன் கஜேந்திரபுரம் சென்றிருந்ததாகவும், மீனா தங்களைக் கலந்து கல்யாணம் நிச்சயம் செய்யாத குற்றத்தைப் பெரிதாக்கி ஏதேதோ கூறியதாகவும் செல்லத்தினிடம் தெரிவித்திருந்தாள். அவள் எண்ணியது வீண் போகவில்லை.

     ஆனால் பாலு எங்கிருக்கிறான்? விநாயகா காலனி வீட்டுக்கு முப்பது ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு ஹோட்டலில் சாப்பிடப் பணம் ஏது அவனிடம்?

     இந்தக் கேள்விகளிலும் அத்தனை உக்கிரம் தோன்றாதபடி செல்லத்துக்கு ஒரு அசட்டு ஆதாரம் இருந்தது.

     பாலு கங்காதரத்தின் வீட்டுக்கு அடிக்கடி போய் வருவதாக விமலா சொல்லியிருந்தாள் அல்லவா? மீனா கண்டு கொள்ளாமல் அவர் ஏதேனும் பண உதவி செய்கிறாரோ என்னவோ? அவள் அத்தனை காய்ந்து விழுந்தும் ஊஞ்சல் பலகையில் பணத்தை வைத்திருந்தாரே?...