![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 1 அக்டோபர் 2025 11:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
16 “பிள்ளையாவது பிள்ளை, அணில் பிள்ளை, தென்னம் பிள்ளை! இவர்களுக்கெல்லாம் சோறு போடுவதை விட தெரு நாய்க்கு ஒரு பிடி சோறு போட்டாலும் நன்றி காட்டும். பாலு, பாலு என்று உருகினாள். தேகத்தைச் செருப்பாக உழைத்து அந்தப் பிள்ளையைப் படிக்க வைத்தாள். கடைசியில் என்ன ஆச்சு? எங்கேயோ வேலை செய்கிறானாம், சம்பாதிக்கிறானாம்! நிசமோ, பொய்யோ, யாருக்குத் தெரியும்? அழுது அழுது அரை உடம்பாக உருகி விட்டாள். அளவுக்கு மேல் பாசம் விஷமாக்கி விடுகிறது அவர்களையே!” இப்படிப் பேசிய முத்தம்மாளுக்குக் குழந்தை குட்டிகள் கிடையாது. ஊர்ப் பள்ளிக்கூடத்தில் அவளுடைய புருஷன் குமாஸ்தாவாக வேலை செய்கிறார். அவள் நாலெழுத்துப் படித்திராது போனாலும் எந்த விஷயத்தையும் அக்குவேறு ஆணி வேறாக அலசிப் பேசி விடுவாள். யாருமே அவளுக்கு லட்சியமில்லை. உலகிலேயே தன் அபிப்பிராயம் தான் மிகவும் சிலாக்கியமானது என்பது அவளுடைய எண்ணமோ என்று அவளுடைய பேச்சைக் கேட்பவர்களுக்கு நினைக்கத் தோன்றும். “என்ன இருந்தாலும் பாலு கெட்டிக்காரன்; செல்லம் அதிர்ஷ்டக் கட்டை; மகன் உதவவில்லை” என்றாள் முத்தம்மாளின் சிநேகிதி உமா. “கெட்டிக்காரன் தான். பொன் ஊசியானால் கண்ணைக் குத்திக் கொள்ளலாமா? தாயாரை என்னென்ன பேச்சுக்கள் பேசினான்? அவளாகக் கண்டு பொறுத்தாள். நானானால் நாயே, வெளியே நட, இது என் வீடு என்று முன்னமேயே சொல்லியிருப்பேன். ஆயிரத்தில் பிறந்து இருந்தாலும் அடக்கம் வேண்டாமா? வருஷம் சித்திரைக்கு இரண்டு ஓடிவிட்டது. ஒரு உபயோகமில்லை, பாவம்...” “பெண்ணைத்தான் கட்டிக் கொடுத்தாளே, அந்த மருமகனானும் நல்ல குணவானாக வாய்க்கக் கூடாதா? ஒரே முசுடு. இந்த மூன்று வருஷ காலத்தில் மூன்று நாட்கள் கூடச் சேர்ந்தாப் போல அந்தப் பெண்ணை இங்கே அனுப்பி வைக்க மாட்டேன் என்கிறான். ஒருநாள் இரண்டு நாள் வந்து விட்டு ஓடிப் போய் விடுகிறது. இந்தக் காலத்துப் பையன்களே மொத்தத்தில் குணக் கட்டை...” “ஜானகி மட்டும் என்னவாம்? அடே... யப்பா! என்ன ராங்கியும் கர்வமும் வந்து விட்டது அந்தப் பெண்ணுக்கு? கண்டால் கூடப் பேசுவதில்லை. ம்... அற்பப் பணம்! அந்தக் கிழவரைக் கூடப் போன மறுநாளே அண்ட விடாமல் அடித்து விட்டாளேயம்மா! அவர் வெறுத்துத்தான் காசியோ இமாசலமோ போய் விட்டாராம்!” முத்தம்மாள் காரமாகப் பேசிவிட்டுப் புடைவையைப் பட்பட்டென்று கல்லில் அறைந்தாள். சுயமாக ஒரு விஷயத்தைக் குறித்து அநுபவம் இல்லாத போனால் அதைப் பற்றி வெகு தாராளமாகத் துணிவுடன் பேசலாம். செல்லமா அவளைத் திருப்பிக் கேட்கப் போகிறாள்? அவள் உண்மையாகவே துயரத்தை அநுபவிப்பவள், முத்தம்மாளோ அநுபவிப்பவர்களைப் பார்த்து விமர்சனம் செய்பவள். விஷத்தால் துடிப்பவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா? கரை உயரே அரச மரத்தடியில் சேலையைப் பிழிந்து உடுத்திக் கொண்டு இருந்த செல்லத்துக்கு இந்தப் பேச்சுக்கள் காதில் விழாமல் இல்லை. முத்தம்மாளின் பேச்சுக்கு அவள் மதிப்பு வைக்கவில்லை. ஆனால் நெஞ்சம் குமுறியது. அதன் சூழ்ச்சியில் தானே பாலு இன்று அவளை மறந்து எங்கோ போய்விட்டான்? சுபாவமாகவே அவன் கல்நெஞ்சுக்காரனாக இருப்பான் என்பதை அவள் நம்பவில்லை. அவளிடம் செல்வமாகிய சக்தி இருந்திருந்தால் குடும்பத்தில் பூசல்களும் குழப்பங்களும் கிளம்பியே இருக்காது. எவரையும் அவள் உதவி கேட்கப் போயிருந்திருக்கப் போவதில்லை. அவனும் ஆசையின் வேகம் தாளாமல் இவ்வளவு அல்லல்களுக்கு ஆளாகியிருக்க மாட்டான். அவளுடைய ஆசைகள், மனக்கோட்டைகள் எல்லாம் அந்த அஸ்திவார மில்லாமலேயே தவிடு பொடியாகி விட்டன. பாசமும் ஆசையும் பணத்தினின்று வேறுபட்டு அப்பால் நிற்பவை என்று தான் சொல்லுகிறார்கள். என்றாலும் இளம் உள்ளம் ஒரு நிலையில் நிற்காதது. அது அவளுக்குத் தெரிந்திருந்தது. அதனால் பணமாகிய பசையிருந்தால் பாலு ஒட்டாமல் போகும் சந்தர்ப்பமே வாய்த்திருக்காது என்று செல்லம் வறுமையின் மீதுதான் குற்றத்தைச் சுமத்தினாள். அவன் ஆயிரம் குற்றங்கள் செய்திருந்தாலும், அவளை எத்தனை உதாசீனங்கள் செய்த போதிலும் அவள் மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஆனால் அவளுடைய உள்ளம் ஒரே ஒரு திருப்திக்குத்தான் ஏங்கியது. அவன் எங்கு இருந்தாலும் அவளுடைய அன்பின் தன்மையைப் புரிந்து கொண்டால் போதும். நம் அம்மா நமக்காக எத்தனையோ துன்பப்பட்டவள், அவள் ஒரு போதும் நமக்குக் கெடுதல் செய்ய மாட்டாள் என்பதை அவன் உணர்ந்தால் போதும். அவன் உணருவானா? அந்தக் காலம் வருமா?... ஆற்றங்கரைக் காற்று ஈரப் புடைவையைப் பிரிக்கையிலேயே படபடத்தது. அவள் ஒருபுறம் பிடித்துக் கொண்டு உதறியதும் டர்ரென்று கிழிந்தது. வலுவில்லாத பழம் புடைவை! அவளுடைய குடும்பமும் இன்று அப்படித்தான் ஆகி விட்டது. ஏற்கெனவே வலுவில்லாமல் நைந்திருந்ததை வெவ்வேறு விதமான சிக்கல்களில் வறுமை வேறு புகுந்து ஆட்டி அலைத்துக் கிழித்து விட்டது. அந்த இரண்டாண்டுகளில் அவள் மட்டுமா அரை உடம்பாகி நைந்து விட்டாள்? ரங்கநாதத்துக்கு முன்போல் தொழிலே இப்போது நன்றாக நடக்கவில்லை. ஊரில் அவருக்குப் போட்டியாக இரண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சேர்ந்து ‘ட்யூடோரியல்’ பள்ளி திறந்து விட்டார்கள். அநுபவம் பெற்ற ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்துக்குச் சொல்லிக் கொடுக்கவே ரங்கநாதத்தின் வீட்டுத் திண்ணையில் கூட்டம் குறைந்து விட்டது. சுந்துவுக்குப் பள்ளிக் கூடச் சம்பளம் கட்டுவதே பெரிதாக இருந்தது. வீட்டு வாசற்படியில் அவள் ஏறுமுன்னரே தட்டி மறைவில் யாரோ பேசும் குரல் கேட்டது. விடுமுறைக்கு வந்திருந்த பாலுவின் முன் நாளைய நண்பன் ராமுதான் தூணில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். “அவனே தான் என்று நிச்சயமா உனக்கு?” என்று கேட்டார் ரங்கநாதம். செல்லம் நின்று கவனித்தாள். “நிச்சயமா? என்ன மாமா? பாலுவைத் தெரியாதா எனக்கு? ஒரு நிமிஷம் முன்பு பார்த்திருந்தால் அவனைப் பிடித்திருப்பேனே? ஹோட்டல் வாசலில் அந்த வண்டி நின்றது. நான் மாடியிலிருந்து பார்த்தேன், அவன் மாதிரி இருந்தது. கிடுகிடென்று இறங்கி வருவதற்குள் வண்டி போய்விட்டது. ‘நந்தா சாரிட்டீஸ்’ வண்டி தான் அது. நான் நிச்சயம் இங்கு வருவான் என்றே நினைத்தேன்...” “பாலுவையா பார்த்தாய்?...” செல்லத்தின் துடித்த கேள்வி இது. “ஆமாம், இந்தப் பதினைந்தாம் மைலில் வந்திருக்கிறான். அழகான மகன்! உம்... கடன்!” செல்லத்தால் இதைக் கேட்டுக் கொண்டு நிற்க முடியவில்லை. உள்ளே சென்று குடத்தைக் கீழே வைத்தாள். ஈரத் துணியை மாற்றவில்லை. மேலே வேலைகள் இருக்கின்றன என்பதே அவளுக்கு மறந்து விட்டது. அவன் அத்தனை கல்நெஞ்சனாக எப்படி ஆனான்? பதினைந்து மைல் தூரம் வந்தவனுக்கு இங்கே வரத் தெரியவில்லையா? அவள் பெற்ற மகனைப் பார்த்து ஆனந்திக்கக் கூடக் கொடுத்து வைக்காத பாவியா? துரதிர்ஷ்டம் அவளை ஏன் துரத்தித் துரத்தி ஓடி வர வேண்டும்? ஊராரும் மற்றவரும் கைகொட்டிச் சிரிக்கவா? பாசம் விஷமா? அன்பு விஷமா? எல்லாத் தாயையும் போலவா அவள் இருந்தாள்? தன் உடல் பொருள் எல்லாவற்றையும் அவனுடைய நலனுக்கே அன்றோ அர்ப்பணித்திருந்தாள்?... அங்கிருந்து சென்ற பின் எத்தனை கஷ்டப்பட்டானோ? எந்த நிழலில் அண்டினானோ? அவர் அத்தனை வெருட்டியும், போனவன் திரும்பி மறுநாள் வந்து நின்றானே? படிப்பிலேதான் எத்தனை ஆசை? எப்படியானும் இன்னும் ஒரு வருஷம் முடிக்க வேண்டாமா என்று மீண்டும் வந்து கேட்டானே? அந்த மீனா எழுதிய கடிதத்தை வைத்துக் கொண்டு தானே அவரும் அப்படித் துரத்தியடித்தார்? அவனுடைய கஷ்டங்களுக்கெல்லாம் காரணகர்த்தா... அவர்கள் தானே? அவளும் தான் அன்று ஏன் அப்படிப் பேசாமலிருந்தாள்? அவரிடம் எப்படியோ சண்டையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வீட்டையானும் விற்று அவன் படிப்பைப் பூர்த்தி செய்ய அவரைச் சம்மதிக்க வைத்திருக்கக் கூடாதா?... அவன் இப்படி ஒரேயடியாகப் போய்விடுவான் என்று அந்தப் பஞ்சையுள்ளம் நினைத்திருக்க வில்லையே? செல்லத்தைப் போன்ற அபலையான தாய்க்கு, கண்ணீரே உற்ற துணையாயிற்று. அவளுக்கு வேறு ஆறுதல் தான் ஏது? ‘தபால்’ என்ற குரல் அவளை உலுக்கியது. தபால் என்ற குரலைக் கேட்டாலேயே அவளுக்கு உடல் சிலிர்க்கும்; உள்ளம் துடிக்கும். ஆனால் சில கணங்களுக்குத்தான். ‘நான் சௌக்கியமாக இருக்கிறேன்’ என்று அவளுக்குக் ‘கண் துடைக்க’ ஜானகி போடும் கடிதங்களையும் விமலாவின் பஞ்சப்பாட்டைத் தாங்கி வரும் கடிதங்களையும் தவிர வேறு அவளுடைய இதய தாபத்தைத் தணிக்க இளநீர் போன்ற மதுரமான மொழியில் ‘அம்மா’ என்று குளிர விளிக்கும் அவனுடைய கடிதம் வரப் போகிறதா? தன் கன்று இல்லை, இது வைக்கோல் பொம்மை என்று பசுவுக்குத் தெரியும். அதன் கண்களில் நீர் பெருகுகிறது. ஆனாலும் பாலைச் சுரந்து கொடுக்க அது மறுக்கிறதா? இல்லையே? அது தாயுள்ளத்தின் இயல்பு. வராது என்று எங்கோ மூலையில் ஒரு குரல் கூறினாலும் மனம் துடிக்கத்தான் துடித்தது. “காகிதம் எங்கேயிருந்து வந்திருக்கிறது?...” செல்லம் அலைபாய்ந்த நெஞ்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ரங்கநாதத்தைக் கேட்டாள். முகத்திலே ஒரு ஆவல். ‘பாலுவிடமிருந்து’ என்ற இனிய சொல் அவருடைய வாயிலிருந்து வராதா? ‘அம்மா, நான் நடந்து கொண்ட விதமெல்லாம் தவறு, உங்கள் கிருபையால் நான் சுகமாக இருக்கிறேன்’ என்ற அவனுடைய மணி எழுத்துக்கள் அதனுள் அடங்கி இருக்காதா? ஆனால், ரங்கநாதம் படித்து விட்டு ஏன் அந்தக் கடிதத்தைத் தூக்கி எறிகிறார்? “இந்த அழகான மகனுக்கு வீட்டை விற்றுக்...” என்ற அவருடைய வார்த்தைகள் சுள்ளென்று உறைத்தன. அவள் கடிதத்தைப் பரபரப்புடன் எடுத்தாள். குண்டு குண்டான பாலுவின் கையெழுத்தில்லை அதில்; கோணல் மாணலான புரியாத விமலாவின் எழுத்துக்கள் தான் கடிதத்தை நிரப்பி இருந்தன.
“அன்புள்ள அம்மாவுக்கு, அநேக கோடி வணக்கங்கள். இங்கு குழந்தைகளுடன் நாங்கள் சுகமாக இருக்கிறோம். அப்பா, நீ, சுந்து எல்லோரும் சுகம் என்று நம்புகிறேன். பாலு இங்கே இரண்டு தினங்கள் முன்பு வந்திருந்தான். அவன் இருக்குமிடமோ, வரப்போகிறான் என்பதோ எனக்குத்தான் இத்தனை நாட்களாகத் தெரியாதே? சாயங்காலம் ஐந்து மணி இருக்கும்; வந்தான். இரவு முழுதும் இருந்து விட்டுக் காலையில் கிளம்பி விட்டான். நீங்கள் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருப்பீர்கள் என்பதனால் தான் அவன் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியிருப்பதையும் மீறி நான் எழுதுகிறேன். உங்கள் விஷயத்தில் அவன் மனம் கல்லாகி விட்டது. ஏதோ போதாத காலம், இனியும் உனக்கு அப்பா அம்மாவிடம் என்னடா கோபம்? என்று நான் எத்தனையோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். கோபம் என்ன, என் கடமை, அடுத்த மாதத்திலிருந்து பணம் கூட அனுப்பலாம் என்றிருக்கிறேன். ஆனால் அதைத் தவிர அவர்கள் மேல் எனக்குப் பிடிப்பு அற்று விட்டது என்று வெறுத்துப் பேசுகிறான். அவன் இப்போது ‘நந்தா சாரிட்டீஸ்’ என்ற தர்ம ஸ்தாபனத்தின் சோப்பு தொழிற்சாலையில் வேலையாக இருக்கிறான். இந்த மாதத்தில் இருந்துதான் ‘விற்பனை ஏஜண்டாக’ நியமிக்கப்பட்டிருக்கிறானாம். நந்தா என்ற அதன் ஸ்தாபகர்தான் அவனுக்குக் கருணை வள்ளலாக இருந்திருக்கிறார். அவருடைய குடும்பம் முழுவதுமே, மகன், மருமகள் எல்லோரும் அந்தத் தர்மப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்களாம். ஆஸ்பத்திரி, அநாதை விடுதி, ஏழை மாணவர்களுக்குப் படிக்க உதவி என்று இப்படி எத்தனையோ பணிகளை அவர்களுடைய ஸ்தாபனம் ஆற்றி வருகிறதாம். கொச்சியிலிருந்து ஆலப்புழை போகும் வழியாமே? அங்கேதான் அவர்களுடைய ‘மக்கள் இல்லம்’, கயிறு, பாய் முடையும் தொழிற்சாலை இவைகள் எல்லாம் இருக்கின்றனவாம். அவர்களுடைய தொழிற்சாலையின் மூலம் வரும் அத்தனை லாபமும் இந்த ஸ்தாபனத்துக்குத்தான் போகிறதாம். நீங்கள் ஆதரவு கொடுக்க மாட்டீர்கள் என்று தீர்ந்த பின்னும் அவனுக்குப் படிப்பை நிறுத்த இஷ்டமில்லையாம். எப்படியானும் முடித்து விட வேண்டும் என்ற ஆசையில் ஜானகியின் வீட்டுக்குக் கூடப் போனானாம். அவன் போயிருந்த சமயம் புருஷன் கூட இல்லையாம். முழுதும் முடியாவிட்டால் தற்கால சாந்திக்காகவேனும் அவளால் உதவியிருக்க முடியாதா? இல்லை, புருஷனிடம் சொல்லி ஏதானும் வேலைக்கேனும் சிபாரிசு செய்திருக்கக் கூடாதா? ஒன்றுமே வேண்டாம், நான் என்னடா செய்வேன் பாலு என்றிருக்கக் கூடாதா? அவள் லட்சியமே செய்யவில்லையாம். அவன் வீடு தேடி வந்திருக்கும் சமயம் முகம் கொடுத்துக் கூடப் பேசாமல் எங்கேயோ போனாளாம், வந்தாளாம். கடைசியில், இப்படி எல்லாம் நீ என்னை வந்து கேட்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. அவருக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்ளுவார்? நீ இங்கு வந்ததே தெரிய வேண்டாம். குறையும் முடிக்க சக்தி இல்லாமல் ஏன் காலேஜில் சேர்த்தார்களாம்? என்று முகத்தில் அடித்தாற் போல் பேசி அவனைத் திருப்பி விட்டாளாம். பணம் வந்தால் உடன் பிறந்த பாசம் கூடப் போய் விடுமா? எனக்கும் தான் கேட்கவே அதிசயமாக இருக்கிறது. இந்தப் பட்டணத்துக்கு அவள் புருஷன் ஆயிரம் நடை வருகிறான். நானே ஒரு தடவை ‘பார்க்’ ஸ்டேஷன் அருகில் பார்த்தேன். பார்த்தும் கூடப் பாராதவனாகப் போய் விட்டான். ‘ஜானகி சௌக்கியமா’ என்று அருகில் போய்க் கேட்டு மானத்தை இழக்க எனக்குத் துணிவு இல்லை. நானாக அவளுக்கு நாலு கடிதம் எழுதினேன். ஒரு பதில் மரியாதைக்குக் கூடக் கிடையாது. நான் ஏழை; ஒட்டினால் அவளுக்கு அந்தஸ்து குறைந்து போகும் இல்லையா? எப்படியோ அவனாக முன்னுக்கு வந்து விட்டான். எப்போதுமே இந்த அத்தானிடம் அவன் கலகலப்பாகப் பேசிப் பழகுவான் இல்லையா? இப்போதும் அப்படியே தான் இருக்கிறான். பேச்சு வாக்கில் அவர் அவன் கல்யாண சம்பந்தமாகக் கூட விஷயத்தை விசாரித்து விட்டார். எங்கள் சீதாவை அவனுக்குக் கொடுக்கலாம் என்பது வெகு நாட்களாகவே எங்களுக்கு இருக்கும் எண்ணம். அதிர்ந்து பேச மாட்டாள். சகல விதங்களிலும் குடும்பத்துக்கு ஏற்ற பெண். ஆனால் அவன், பேச்சு எடுத்ததுமே, ‘அந்த விஷயத்தில் உங்களுடைய இஷ்டத்துக்கு ஒத்து வர இயலாமல் இருப்பதற்கு மன்னித்து விடுங்கள், அத்தான்’ என்று கூறி விட்டான். அவனுடைய உறுதியைப் பார்த்தால் ஏற்கனவே ஏதோ முடிவு செய்து வைத்திருக்கிறான் போல் தோன்றுகிறது. அவனாக முன்னுக்கு வந்திருக்கிறான், தனக்குப் பிடித்த பெண்ணாக, வாழ்க்கைக்கு ஏற்றவளாக அவனாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இல்லையா? இந்த நாட்களில் அநேகமாக இப்படித்தானே நடக்கிறது? உங்களுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று அவன் சொல்லியும் மனம் கேட்கவில்லை எல்லாம் எழுதி விட்டான். இப்படிக்கு, விமலா.” செல்லத்துக்குக் கைகள் நடுங்கின. அவளுடைய நெஞ்சின் அடித்தளத்திலிருந்து ஒரு ஊற்று குபீரெனக் கிளம்பியது. அந்தப் பெருக்கிலே சொற்கள் திணறின. ஆதவனைக் கண்டதும் பனிப் போர்வை உருகித் துன்பம் கரைய இன்பத்தை வரவேற்கும் நிலையிலுள்ள இயற்கை யன்னையைப் போல இருந்தாள் அந்த அன்னை. “இதற்கா உங்களுக்குக் கோபம் வந்தது?...” “பின் சந்தோஷம் பொங்குமோ? தானாக முன்னுக்கு வந்தானாமே, தானாக? வாழ்க்கைக்குப் பிடித்தவளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவானாம்! அவன் சொல்லி இராத போனால் விமலா எழுதியிருப்பாளா? அந்தப் பெண் ஒரு போக்கு, இந்தப் பையன் ஒரு உதவாக்கரை. விட்டுத் தொலைக்க வேண்டியதுதான்!...” “ஐயோ, அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். குழந்தை எத்தனை கஷ்டங்களோ பட்டிருக்கிறான். அவன் எந்தப் பெண்ணைப் பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டாலும் நாம் சந்தோஷமாக ஒப்ப வேண்டும். நானே போய் அவனைக் கேட்பேன்...” என்ற அவளை ரங்கநாதம் திகைப்புடன் நோக்கினார். “செல்லம், உனக்கு என்ன, பித்துப் பிடித்து விட்டதா?...” “ஆமாம் பெற்ற மனம் தானே?” என்றாள் கண்ணீர் பெருக அன்னை. |