21

     மனிதருக்கும் தாம் இழைக்கும் நன்மைகளையோ, தீமைகளையோ நிமிர்ந்து பார்த்து விளைவுகளை எண்ணாமல் காலம் ஓடி விடுகிறது. இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. பாலு அன்று சென்னைக்கு வந்தான்.

     விமலாவின் வீட்டுக் கூடத் தூணிலே சாய்ந்து நின்றிருந்தாள் செல்லம். பழைய செல்லமா அவள்? அந்தக் குறுகிய காலத்துக்குள் அவளுடைய கேசம் தும்பைப் பூவாய் மாறி விட்டது. உடலிலே கொஞ்ச நஞ்சம் இருந்த வளமும் வற்றிச் சுருக்கங்கள் கண்டு விட்டன. பெருங் காற்றிலும் மழையிலும் சுழன்று சுழன்று பேயாட்டம் ஆடியதன் பலனாகக் கிளைகளிழந்து வெறிச்சிட்டு நிற்கும் மரத்தின் நினைவு வந்தது அவளைப் பார்க்கையில்.

     அன்று ஏதோ விடுமுறை நாள். கூடத்திலே வேதாவும் மோஹனும் ஒரு கிழிந்த பலூனுக்காக சண்டையிட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். முற்றத்துக் குழாயடியில் முழங்கால் வரையிலும் சிற்றாடையைத் தூக்கிக் கட்டிக் கொண்டு மூர்த்தியின் தங்கை சீதா தோய்த்த துணிகளை அலசிப் பிழிந்து கொண்டிருந்தாள். பாலு உள்ளே வந்ததைப் பார்த்து விட்டுச் சட்டென்று துணியைப் போட்ட அவள், “மன்னி!” என்று அழைத்த வண்ணம் அடுப்படியில் இருந்த விமலாவிடம் செய்தி தெரிவிக்க ஓடினாள். கூடத்திலேயே நின்ற செல்லம் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆனால் அவன் அவளை நிமிர்ந்து நோக்கவுமில்லை, பேசவுமில்லை. மௌனமாக வந்து முற்றத்துக் குழாயடியில் முகத்தை அலம்பிக் கொண்டான். சமையலறையிலிருந்து வெளிப்பட்டு வந்த விமலா, “இப்போதுதான் வருகிறாயா” என்று விசாரித்ததற்குப் பதில் கூறி விட்டுக் கூடத்து அறைக்குள் போய் உட்கார்ந்தான். ‘மார்க்கெட்டு’க்குச் சென்றிருந்த மூர்த்தி கறிகாய்ப் பையும் கையுமாக வந்தான். முன்போல அவனிடம் கூட பாலு நெருங்கிக் கலகலப்பாகப் பேசவில்லை. கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறினான். அவ்வளவுதான்.

     அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். செல்லம் சமையலறையிலே அடைந்து விட்டாள். விமலா வாசலில் வெண்ணெய் வியாபாரியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள். சீதாவின் வளைக்கரங்கள் தான் உணவு படைத்தன.

     சாயமில்லாது, மெருகில்லாது கண்ணாடி வளையல்களணிந்த அந்தக் கைகள் பாலுவுக்கு ஜானகியை நினைப்பூட்டின. அவன் சட்டென்று ஏதோ நினைவு வந்தவன் போல் நிமிர்ந்தான். எளிமை தவழும் அந்த விழிகள் அவனைத் தடுத்து நிறுத்தி விட்டன.

     அழகு, அறிவு, அடக்கம் எல்லாம் நிறைந்த பெண் தான் அவள். ஆனாலும் இந்தக் காசு வெறி பிடித்த உலகுக்கு அவளுடைய அருமை எங்கே தெரியப் போகிறது? ஜானகியைப் போலவோ, சுதாவைப் போலவோ... சே? அவனுடைய கண்களில் ஏன் நீர் துளிர்க்கிறது?

     “ஏன் பாலு? மிளகாயைக் கடித்து விட்டாயா?” என்று கேட்டான் அவனைக் கவனித்த மூர்த்தி.

     அவனுடைய உள்ளம் அன்று நிலையிலேயே இல்லை. விடுமுறை நாளைக் கொண்டாடுபவன் போல் சாப்பிட்டு விட்டு மூர்த்தி கூடத்து அறையில் பழைய பெட்டி ஒன்றைக் குடைந்து கொண்டிருந்தான். சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டிக் கொண்டு மௌனமாக அவனையே பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்த பாலு, “அத்தான்?” என்றான் சட்டென்று.

     மூர்த்தி ஏனென்று கேட்கும் பாவனையில் திரும்பிப் பார்த்தான்.

     “சீதாவை நான் கல்யாணம் செய்து கொள்ளுகிறேன், அத்தான்!” என்றான். மூர்த்தியின் முகத்தில் வியப்பு மேலோங்கியது.

     கையிலிருந்த சாமானை நழுவ விட்டுவிட்டு, “விமலா, விமலா!” என்று உற்சாகத்துடன் கூவினான்.

     அவனுடைய அந்த வார்த்தைகள் அந்த வீட்டிலே சந்தோஷக் கலகலப்பை உண்டு பண்ணி விட்டது.

     பாலுவுக்கு அங்கு வேலை முடிந்து விட்டது. அன்று அவன் ஊருக்குக் கிளம்ப இருந்தான். பத்து நாட்களில் சீதாவை ஏற்றுக் கொள்ள மீண்டும் அங்கு வருவான். எல்லோரும் சந்தோஷமாக அவரவர்க்குரிய வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் -

     ஒரே ஒரு உள்ளம் மட்டும் இன்னும் துடித்துக் கொண்டிருந்தது. ஆம், அன்னையிடம் ஒரு வார்த்தை பேசக் கூட பாலுவுக்கு அவனுடைய வெறுப்பு இடம் கொடுக்கவில்லை. ஜானகியின் நலனிலும் தன் கடமையை எண்ணாது தவறிய அவளை அவனுடைய மனம் முன்னிலும் அதிகமாக வெறுத்தது. நகையிலும் துணியிலும் வீண் பகட்டிலும் ஆசை கொண்டு கடமையினின்றும் வழுவும் சுயநலம் பிடித்த பெண் கூட்டங்களில் ஒருத்தியாக அவளைக் கருதியது.

     பொறுமையிலே சிறந்த பூமி தேவியை ஒத்தவள் அன்னை. பூமிதேவி தன் தன்மையைப் புரிந்து கொள்ளாது தன் மீதே அலட்சியம் பாராட்டும் மக்களையும், இன்னும் தனக்கே தீங்கிழைக்கும் மக்களையும் தாங்குகிறாள், தயை காட்டுகிறாள். ஆனால் எல்லை மீறும் போது அவளுடைய பொறுமையும் கனலாகக் கனிகிறது; வெடிக்கிறது. அந்த அன்னைக்குக் கோபம் வந்தால் மலைகள் மறைகின்றன; ஆறுகள் தடுமாறுகின்றன; கடல் பொங்குகிறது.

     செல்லத்தின் உள்ளத்திலே பாலுவுக்கென குவிந்திருந்த ஆசை மலையினும் பெரியது. அவனுக்கென இருந்த உறுதியும் தெம்பும் வற்றாத சக்தி பெற்றவை. அவனுக்கென இருந்த அன்பு கடலினும் ஆழமானது.

     அந்த அன்பு உள்ளம் இன்று பொங்குமாங்கடலாக ஆகிவிட்டது; அளவு மீறிக் கொந்தளித்தது. அவன் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்த அந்த அன்னை உள்ளத்துக்கு ஒரு விதத்திலா சோதனை வந்தது? ஆறு பெருகி வரும் வேகத்தில் மலையானாலும், பசுமை வயலானாலும், சோலையானாலும் பாராமல் ஒரே குறியில் செல்லுகிறதே, அப்படியன்றோ அவள் தனக்கென்றுள்ள மற்ற கடமைகளைக் கூட முழுதும் சிந்தியாமல் ஒரே நோக்கில் ஓடினாள்? இல்லாவிட்டால் கண்ணின் கருமணிக்குச் சமமான மாசற்ற அந்தக் குழந்தையை அவள் ஒரு மனிதனாக மதிக்கத் தகாதவனுக்குப் பலியாக்கத் துணிவாளா? பொருளை இழந்த பின் தான் அதன் முழு அருமையும் தெரிய வருகிறது என்பது எத்தனை உண்மையான வாக்கியம்.

     ராமுவின் வெம்பிய முகத்தையும், உயிர் போகும் தருவாயிலும் அவனை நோக்கி ஒளிர்ந்த அந்தக் கருநீல விழிகளையும் கவனித்திருந்த அவளுக்கு இப்போது அதை நினைத்தால் அடிவயிற்றைச் சுருட்டிக் கொண்டு வேதனை எழும்பியது. காதலின் தன்மையை உணர்ந்து வேதனை அடைந்தவளல்லவா அந்தத் தாய்? முகிழ்ந்து விரித்து மணம் வீச இடமின்றியே மோனத்தில் மறைந்த அந்தக் காதலை நினைக்கையிலேயே அவளுக்குக் கண்ணீர் வாராதோ?

     வாழ்க்கையில் எதிர் நோக்கிய பலன் கிடைக்காததால் குமுறிச் சுழன்று பொங்கிக் கொந்தளித்த அவளுக்கு மௌனமாகப் புத்தி புகட்டிய அவள் தாய்க்குச் சமமானவள்; தன்னிடம் இருக்கும் ரத்தினத்தைக் காக்க வேண்டித் தன்னை அண்டுபவர்களைச் சீறி விஷத்தைக் காட்டி அப்பால் வெருட்டும் நாக சர்ப்பம் போன்று தன்னுள் இருக்கும் புண் வெளியே தெரியக் கூடாது என்று தன்னை அண்டியவர்களிடம் வெறுப்பும் அகங்காரமும் காட்டினாளே அவள் மனிதத் தன்மையினின்றும் அப்பால் மேம்பட்டு நின்றவள்; தன்னுடைய விருப்பம், நலம் எல்லாவற்றையும் தன்னைப் பெற்றவருக்கும் உற்றவருக்கும் தியாகம் செய்த சுடர். அத்தகைய மணியை அவள் அறிந்து இழந்தாள்.

     எல்லாம் யாருக்காக?... அந்த ஆசை மைந்தன் இன்னும் அவளை அறியவில்லை.

     பலகணிக்குள்ளிருந்து வெளியே தூரத்தில் நிற்கும் குழந்தையைத் தாய் நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ளுவாள். ஆனால் வெளியே நிற்கும் குழந்தையால் பலகணிக்கு உள்ளே இருக்கும் தாயை அத்தனை தெளிவாகப் பார்க்க முடியாது.

     பெட்டியும் கையுமாக பாலு ஊருக்குக் கிளம்பி விட்டான்.

     “போய் வருகிறேன் அத்தான், விமலா!” என்று அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டான். குழந்தைகளுக்குத் தன் அன்பைத் தெரிவித்தான். மறைவாக நின்று தன்னைப் பார்த்த இரு கரு விழிகளையும் கூட அவனையுமறியாமல் அவனுடைய பார்வை சந்தித்து நன்றியைத் தெரிவித்து விட்டது. ஆனால் அறை வாசல்படியிலேயே துடித்துக் கொண்டு நிற்கும் ஒரு உயிருக்கு? அவனுடைய கனிவு ததும்பும் ‘அம்மா’ என்ற அழைப்புக்காக நம்பிக்கைக் கொடியை இன்னும் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் ஜீவனுக்கு?

     அவன் வாசல்படியைத் தாண்டி விட்டான். பின்னும் எதையோ விட்டுச் செல்வது போன்ற உணர்வு; அவன் திரும்பினான்.

     பாறையில் மோதி மோதித் துடிப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்த கடல் இதற்குள் பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டது. கரையை மீறி அது பொங்கிப் பொங்கிப் பெருகியது.

     “பாலு...!” - ஒரே சத்தம் தான். அடி வயிற்றிலிருந்து ஏக்கத்தையும் பாசத்தையும் அன்பையும் தாபத்தையும் கக்கிக் கொண்டு வந்தது அலறல்.

     அந்தக் குரலிலே என்ன இருந்தது? கல்லான இருதயமும் கலங்கி விட்டதா?

     “அம்மா...!” என்ற எதிரொலி எழும்பியது.

     கண்கள் சுழல, கரகரவென்று நீர் மல்க நின்ற தாயை மைந்தன் கீழே விழாமல் தாங்கிக் கொண்டான்.

     “அம்மா? என்னம்மா? உனக்கு என்னம்மா?...”

     அவளுடைய செவிகளில் இன்பம் பாய்ந்ததா? கொதித்துக் கொந்தளித்துப் பொங்கிப் பெருகிய அந்த நெஞ்சு குளிர அமுதம் பாய்ந்ததா?

     “அம்மா, என்னம்மா? விமலா! அம்மாவைப் பாரேன்?”

     பாலு கத்தினான். எல்லோரும் ஓடி வந்து சூழ்ந்து கொண்டார்கள். செல்லத்தின் கனவு வீணாகவில்லை. கடைசி கடைசியாக அவள் எதிர்பார்த்துத் தாங்கிக் கொண்டிருந்த நம்பிக்கை மாய்ந்து விடவில்லை. அவளுக்கும் மலர்ச்சி கிடைத்து விட்டது.

     “உனக்கு எப்போதும் நான் நன்மையேதான் நினைத்தேன், பாலு. என்னை வெறுக்க மாட்டாயே?...”

     அவனுடைய வெறுப்பு, கசப்பு எல்லாம் அந்தத் திணறும் அன்புக் கடலில் கரைந்து விட்டது.

     “இல்லை” என்று அவன் தலையை ஆட்டினான்.

     கீழ் வானத்திலே அமுத கலசம் போல் சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தான். அதற்காகவே காத்திருந்தவன் போல் பிழம்பாகி சொலித்துக் கொண்டிருந்த ஆதவன் மேல் திசையில் ஆழ்ந்தான்.

     கண்ணீர் துளிர்க்கத் தன்னையே கவிந்து நோக்கும் மகனையே பார்த்துக் கொண்டு தாய் தான் அடைந்த மலர்ச்சியுடன் முடிவில் ஒன்றி விட்டாள். ஒரு இலட்சியத்துக்காகவே உயிர் வாழும் பூச்சி இனமும் கூடத் தம் இலட்சியம் மலர்ந்ததும் துன்பத்தின் வடுவிலாத இன்ப முடிவை எய்தி விடுகின்றதன்றோ?

(முற்றும்)