3

     மாடியில் கங்காதரத்தினிடம் போய் “அப்பா கூப்பிடுகிறார்” என்று சுந்து அழைக்கையில் அவர் மீனாவின் சொற்பிரயோகத்துக்கு இலக்காகி இருந்தார். பையன் வந்து அழைத்ததும் அவள் முடுக்கிவிட்ட யந்திரம் போல் இன்னும் வேகமாகச் சொற்களால் தாக்க ஆரம்பித்து விட்டாள். “வழவழ, கொழகொழ என்று தலையை ஆட்டி விட்டு வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ளக் கூடாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று தீர்த்து விட வேண்டும். ஆமாம், இல்லாவிட்டால் மீனா ரொம்பவும் பொல்லாதவளாக இருப்பேன்!” என்று இறுதியாக எச்சரிக்கை விடுத்தாள். செல்லத்தின் நோக்கம் என்ன என்பதுதான் அவளுக்கு முன்பே தெரியுமே?

     தலையை ஆட்டிவிட்டு கங்காதரம் ஒருவாறாகக் கீழே இறங்கி வந்தார்.

     “ஏன் மாமா? கூப்பிட்டீர்களாமே?” என்று கேட்டுக் கொண்டே ரங்கநாதம் இருந்த அறைவாசல் படியில் வந்து நின்றார். சுவரோரமாக உள்ளே செல்லமும் நின்றிருந்தாள்.

     “ஆமாம், உட்காரேன்?” என்றார் ரங்கநாதம்.

     அறை மூலையில் ஒரு பலாப்பழத்துண்டு இருந்தது. அதைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

     “அந்தப் பழத்துண்டை எடுத்து முதலில் அப்புறப்படுத்து சித்தி, ஏன் இப்படிக் கண்ட இடங்களில் பழத் துண்டுகளைப் போட்டு ஈ மொய்க்க விடுகிறீர்கள்?” என்றார் சற்றுக் கடுமையாய்.

     அவர் மனசில் எதுவுமின்றி சாதாரணமாகத்தான் அதைச் சொன்னார். ஆனால் செல்லத்தின் நுண்ணிய அறிவுக்கு அது, ‘பலாப்பழத்தில் மொய்க்கும் ஈக்களைப் போல் பணம் உள்ளவனைச் சுற்றி ஏனிப்படி மொய்க்கிறீர்கள்?’ என்று அவர் எரிச்சலுடன் கேட்பது போல் தொனித்தது.

     மௌனமாகவே அவள் அதை எடுத்து அப்புறப்படுத்தினாள்.

     கங்காதரம் உள்ளே வந்து உட்கார்ந்ததும், “ஒன்றுமில்லை... எனக்கே எப்படிக் கேட்பது என்று புரியவில்லை” என்று பீடிகையிட்டவராக ரங்கநாதம் மெள்ளச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் இப்படியும் பல்லை இளித்துக் கேட்கும் காலம் வந்ததே என்ற வேதனை விரவி இருந்தது.

     அவருடைய இந்த அநாவசியப் பீடிகை செல்லத்துக்குப் பிடிக்கவில்லை. சட்டென்று அவள், “ஒன்றுமில்லை, பாலுவைப் பற்றித்தான். இன்னும் இரண்டு வருஷங்களும் அப்படியே அங்கேயே ஓட்டிவிடலாம் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போதெல்லாம் வெறும் பி.ஏ.க்கு மதிப்பில்லையாமே? அவனும் படித்து விட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் என்ன செய்வது? கோயம்புத்தூரில் குடும்பம் வைக்கப் போவதாக மீனாவும் அக்காவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதுதான் ஒரு சபலம். இன்ஜினீயரிங் படிக்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு அதிகம் இருக்கிறது. நீங்கள் என்ன அபிப்பிராயப்படுகிறீர்கள் என்று தெரிந்து தான் மேற்கொண்டு எல்லாம் செய்ய வேண்டும்...” என்று எடுத்த எடுப்பிலேயே கூறி விட்டாள். ரங்கநாதம் கௌரவத்தை விட்டுக் கொடுத்துக் கொள்ளாமல் அவள் பேசும் திறமைக்கு உள்ளூற வியந்து கொண்டார்.

     கூட்டில் சிக்கிக் கொண்ட எலியைப் போல் கங்காதரத்தின் மனம் தத்தளித்தது. சங்கடத்தின் இறுக்கம் தாளாமல் நெற்றியில் குப்பென்று புதிதாக வியர்வைத் துளிகள் அரும்பின. எப்படியோ சமாளித்துக் கொண்டார்.

     “சரிதான், ஆனால் இன்ஜினீயரிங் படித்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுகிறதா இந்த நாட்களில்? குறைந்த படிப்பாக இருந்தாலும் எந்த வேலை கிடைத்தாலும் ஒப்புக் கொள்ள மனம் வரும். அதிகப் படிப்புப் படித்தால் அதற்குக் குறைந்த அந்தஸ்தில் வேலை செய்யவும் மனம் வராது. இரண்டும் கெட்டான் பிழைப்பு...” என்று அவர் இழுத்தார்.

     செல்லத்துக்கு உள்ளம் பொருமியது. இந்த உதவியைக் கூடவா மறுத்து விடுவார் என்று அவள் நம்பியிருந்தாள்.

     வெளியே எங்கோ சென்றிருந்த பாலு இந்த சமயத்தில் அங்கு வரவும் அவளுடைய பொருமல் வெடித்து விட்டது.

     இன்னது பேசுகிறோம் என்ற வரம்பை இழந்தவளாக, “எதற்கு வீண் ஆசைப்படுகிறாயடா பாலு? அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதாம். ஏழை வயிற்றில் பிறந்து விட்டு என்ன ஆசை வேண்டியிருக்கிறது?” என்று படபடத்தாள்.

     கங்காதரம் உளறிவிட்டு விழிக்கிறாரா, சமத்காரமாகத் தப்பித்துக் கொள்கிறாரா என்றறிய விரைந்து வந்து கொண்டிருந்த மீனா செல்லத்தின் பொருமல் கேட்டுப் பாய்ந்து வந்தாள்.

     “ஏனிப்படிக் காய்ந்து விழுகிறாயாம்? ஆகாது உனக்கு இது! என் அப்பா நன்றாக இருக்க வேண்டும்!” என்றாள்.

     இத்தகைய பழிச் சொற்களைச் செல்லம் பொறுப்பாளா?

     அழும் குரலில் அவளும் எதிர்ப்பாணம் தொடுக்கையில் பாலுவுக்குக் கோபம் வந்தது.

     “என்னம்மா இது? எதற்கு இப்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாயாம்? போ இங்கிருந்து!” என்று தாயை அதட்டினான்.

     வாழ்வில் வெற்றி கண்டு களிக்கையில் அதன் காரணங்களைப் பற்றி யாரும் அதிகமாக நினைப்பதில்லை. ஆனால் தோல்வியோ, ஏமாற்றமோ கிட்டி விட்டால் அது எத்தனை காலத்துக்கு முந்தையச் சூழ்நிலையின் காரணமாக ஏற்பட்டதாக இருந்தாலும் விடுவதில்லை. நினைத்து நினைத்து மருகுகிறது மனம். செல்லத்துக்கு அப்போதுதான் ரங்கநாதத்தைக் கைப்பற்றியது போலிருந்தது. சேலைத் தலைப்பால் முகத்தை அழுத்திக் கொண்டு அங்கிருந்து அகன்றாள். செல்லம் அங்கிருந்து சென்ற பின்னர் கங்காதரத்துக்கு ஏதோ கட்டவிழ்ந்தது போலிருந்தது.

     “இதோ பார் பாலு, பெரிய படிப்புப் படித்தால் மட்டும் வேலை சுலபமாகக் கிடைத்து விடுகிறாதா? இன்னும் மேல்படிப்பு, மேல்படிப்பு என்று நாலைந்து வருஷம் அவதிப்படுவதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு தொழிற்சாலையிலோ, வியாபார ஸ்தாபனத்திலோ வேலைக்கு நுழைந்தாயானால் சொந்த சாமர்த்தியம் உண்டானால் தானாகவே முன்னுக்கு வருகிறாய். மாமாவுக்கு அசக்தராகி வருகிறார். குடும்பத்தில் இன்னும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் இருக்கின்றன. ஜானகிக்குக் கல்யாணம் செய்ய வேண்டாமா? எனக்குத் தெரிந்த சில பேர்களிடம் சிபாரிசு செய்கிறேன். ஒரு வேலையில் ஒட்டிக் கொள். உன் திறமையை அதில் காட்டு” என்று மெதுவாக எடுத்துச் சொன்னார். இந்த அபிப்பிராயம் பாலுவுக்குப் பிடித்ததோ இல்லையோ, ரங்கநாதத்துக்குப் பிடித்துவிட்டது. அவன் படிப்பு விஷயமாக உதவி கிடைத்தாலும் இன்னும் நான்கு வருஷங்களுக்கு குடும்ப பாரத்தை எப்படித் தாங்குவது? அவன் வேலைக்குப் போனால் அவனைப் பற்றிய கவலையும் விடும், குடும்பத்துக்கும் கொஞ்சம் ஆதரவு இருக்குமல்லவா?

     “நீ சொல்லுவது உண்மையான விஷயம். பட்டத்திலும் பதவியிலும் என்ன இருக்கிறது? அதிர்ஷ்டம் என்பது தனியானது. அவள் கிடக்கிறாள், எதற்கெடுத்தாலும் அவளுக்கு வர வர ஆத்திரம் வருகிறது. நீ மனசில் வைத்துக் கொள்ளாதே” என்று ரங்கநாதம் மருமகனைச் சமாதானம் செய்யும் தோரணையில் பேசினார்.

     ஜன்னலில் சாய்ந்து நின்ற பாலுவின் உள்ளம் ஏமாற்றம் தாளாமல் துடிதுடித்தது. காது மடல்கள் குப்பென்று சிவந்தன. சரேலென்று வெளியே வந்தான்.

     “கங்காதரம் இருக்கிறாரோ?”

     படியேறி வந்து கேட்ட கனவானுக்கு பாலு பதில் கூறுமுன் கங்காதரமே வாசலுக்கு வந்து விட்டார்.

     “ஓ, வர வேண்டும், வர வேண்டும், டேய் பாலு? உள்ளிருந்து நாற்காலியை எடுத்து வா!” என்று வந்தவரை அவர் தடபுடலாக வரவேற்றார். பாலுவுக்கு அவரைத் தெரியும். அன்று நடந்த வைபவத்துக்கு அவர் வந்திருந்தார். உணர்ச்சியை விழுங்கியவனாக அவன் கூடத்திலிருந்த நாற்காலியை எடுத்து வந்து வாசல் வராந்தாவில் போட்டான்.

     “அக்காவிடம் சொல்லிக் காபி பலகாரம் வாங்கிவா, மரக்கடை கணபதி இவர், தெரியுமல்லவா?” என்று பின்னும் பாலுவின் காதோடு வந்து கட்டளை இட்டார் கங்காதரம்.

     ‘இந்த மாதிரி வேலைகள் ஏவுவதற்கு மட்டும் சகஜம் பாராட்டலாம் போலிருக்கிறது!’ என்று மனசுக்குள் முணுமுணுத்த வண்ணம் அவன் உள்ளே சென்றான்.

     கையில் சிற்றுண்டித் தட்டையும் காபியையும் ஏந்தி அவன் வாசலுக்கு வருகையில் மச்சுப்படி வளையின் கீழ் அழுத கண்களும் சிவந்த மூக்குமாகச் செல்லம் நிற்பதைப் பார்க்க நேரிட்டது. அவனுடைய ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு எழும்பியது. பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டான்.

     அவர்கள் வராந்தாவில் இல்லை. அறையில் ரங்கநாதத்துக்கு எதிரே கீழே ஜமக்காளத்தில் அமர்ந்திருந்தனர்.

     பெயருக்கேற்ற தோற்றம் பெற்றிருந்த கணபதி தலையை ஆட்டிச் சிரித்துக் கொண்டே, “அவன் என்ன கோர்ஸுக்கு இஷ்டப்படுகிறானோ, அதைப் படிக்கட்டுமே? பெண்ணுக்கும் வயசே அதிகம் ஆகவில்லையே? பையனுக்கு வயசு பத்தொன்பது தானே என்று யோசிக்கவே வேண்டாம்!” என்று அருகில் வந்த பாலுவையும் பார்த்தார்.

     பாலுவுக்குக் கையிலிருந்த தட்டு நழுவி விடும் போல் இருந்தது. அவன் படிக்க உதவி இந்த ரூபத்திலா வர வேண்டும்? மேல் படிப்புக்கு வசதி செய்கிறேன் என்று வலுவில் வந்து ஏன் ஆசை காட்டுகிறார்? பாலு பார்த்துக் கொண்டே நிற்கையில், “உங்களுடன் சம்பந்தம் செய்து கொள்வதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கங்காதரத்தின் நண்பர் என்பதே எனக்குப் போதும்...” என்று ரங்கநாதம் இழுத்தார்.

     பாலுவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவருக்குமா புத்தி கெட்டுப் போக வேண்டும்? முகத்தைச் சுளித்து நேர் எதிரே இருந்த தந்தையைக் கடுமையாக நோக்கினான்.

     புன்னகை தவழ்ந்தது ரங்கநாதத்தின் சுருக்கங்கள் கண்ட வறண்ட முகத்தில்.

     “ஆனால் நான் இத்தனை சீக்கிரம் பையனுக்கு மணம் செய்ய உத்தேசித்திருக்கவில்லை. எனக்கும் வயசு வந்த பெண் குழந்தை இருக்கிறாள். எனவே... இது இப்போது உசிதமாகப் படவில்லை!” என்று முடித்தார்.

     ‘அப்பாடா’ என்று நிம்மதியாகப் பாலு மூச்சு விட்டான்.

     ‘இவனுக்கும் இத்தனை ராங்கியா?’ என்று கேட்பது போல் கணபதி முறைப்புடன் எழுந்து சென்றார்.



அன்புக் கடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11