![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
19 சிறு நெருப்பைப் பெருந் தீ விழுங்கி விடும். மகன் மகன் என்று ஒரு புறம் வெந்த தாபத்தில் அவளுடைய பொறாமை யுணர்ச்சி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. விமலாவுக்குக் குறைப் பிரசவம் நேர்ந்ததற்காக அவள் சென்னைக்கு வந்திருந்தாள். பாலு அந்த மாதக் கடைசியில் அங்கு வருவான் என்று மூர்த்தியும் விமலாவும் கூறினார்கள். அவள் வந்த காரியம் முடிந்த பின்னும் இன்னும் தாமதித்தாள். ஆனால் அவன் வரவில்லை. மாதக் கடைசியும் போய்ப் புது மாதமும் பிறந்து விட்டது. அவன் ஏன் வரவில்லை? ஒரு வேளை அவள் அங்கு இருக்கிறாள் என்பதை அவன் அறிகிறானா? அதனால்தான் வரவில்லையா? பாலு ஏன் வரவில்லை? அவளுடைய கேள்விக்கு பதில், அவன் அவள் எதிர்பார்த்தபடி அங்கு செல்லாததன் காரணம், ‘ஹோட்டல் நீலமலை’யின் அறை ஒன்றில் இருந்தது. ‘அன்பரே’ என்று ஆரம்பமாகியிருந்த அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வரியும் அந்த எரியும் மின் கணப்பின் சுருள் கம்பிகளைப் போல அவனுடைய உள்ளத்தில் பதிந்தது; புண்ணாக்கியது. கடும் பனிக் குளிரில் கையும் காலும் விறைத்துச் சுருங்கி எரிச்சல் காண்கையில் அந்த எரிச்சலுக்கு சூடு ஒரு புறம் இதமாகவும் இருக்கும். அதுபோல் அந்த வரிகள் அவனுடைய உள்ளத்தைப் புண் செய்த போதிலும் ஒருபுறம் இன்பத்தை அளித்தன. பாலு திரும்பத் திரும்ப அந்தக் கடிதத்தைப் படித்தான். படித்து விட்டுச் சித்தம் குலைந்தவன் போல் சிரித்தான்; அழுதான்; விம்மினான். சுதா அவனைக் காதலித்தாள்; காதலிக்கிறாள்; என்று காதலிப்பாள். அது அழியாதது, அழிக்க முடியாதது. மலரைப் பிடித்துக் கசக்கி விடலாம். ஆனால் மணத்தைக் கசக்கி எறிய முடியாதே! சுதா அவனுக்கு எழுதியிருந்த கடிதம் இதுதான்:
“அன்பரே, இப்படி நான் அழைப்பதை நீங்கள் ஒரு போது ஏற்காமலிருக்க முடியாது. ஏற்காமலிருக்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். அப்படி நான் சந்தேகப் படுவதாக இருந்தால் இந்தக் கடிதத்தை எழுத மாட்டேன். எழுதினாலும் அப்படி விளிக்க மாட்டேன். எனக்காக உண்மையில் ஒரு உள்ளம் தனிமையில் ஏங்குகிறது என்பதை என் உள்ளம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் உணர்ந்திருக்கிறது. ஏனெனில் தூய உள்ளங்கள் ஒருதரம் கலந்த பின் ஒரு போதும் வெவ்வேறாவதில்லை. ஊனையும் உணர்வையும் உயிரையும் தாண்டி அப்பால் தொடரும் அன்புக்கு எவ்வகையிலும் அழிவு வர முடியாது. நான் மனிதர்களிருந்தும் அநாதையாக இருந்தேன். ஆதரவாளர் இருந்தும் ஆதரவற்றவளாக இருந்தேன். ஆம், அன்பென்ற உயிரில்லாமல் பிரதிபலனை மட்டும் எதிர் பார்த்து ஆதரவு தரும் மனிதர்கள் இருந்தென்ன, இல்லாதென்ன? தாயும் தந்தையும் அற்றவளாக எவரோ வழிப்போக்கரின் கருணையால் சிற்றப்பா என்று கருதப்படும் இவரிடம் நான் வந்தேன். என்னிடம் அழகு இருந்தது. அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே அருங்கலையின் அருள் இருந்தது. கசாப்புக் கடைக்காரனிடம் ஒரு இளம் மறி அடைக்கலம் புகுந்தால் அவன் அதை எந்தவிதமான சந்தோஷத்துடன் ஏற்பான்? அந்த வகையில் தான் அவர் எனக்கு சங்கீதம் பயிலுவித்தார். என் புகழ் பரவ மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டார். என்னை ஒத்த குழந்தைகளுடன் நான் ஓடியாட முடியுமா? களிக்க முடியுமா? ‘ஏய், சுதா? எழுந்திரு, சாதகம் பண்ண வேண்டாம்?’ என்ற அவருடைய குரல் கேட்காமல் அதிகாலையில் ஒரு நாளேனும் தூங்க மாட்டோமா என்று என் பிஞ்சு நெஞ்சில் இருந்த ஏக்கம் ஒரு நாள் கூட அகலவில்லை. கச்சேரி மேடைக்கு நான் முதன் முதலில் கொண்டு செல்லப்பட்ட போது எனக்கு வயசு பனிரண்டேதான். ஆசை காட்டப்பட்டு, அடிக்கப்பட்டு, பயமுறுத்தப்பட்டு, இப்படியெல்லாம் தான் நான் அக்காலத்தில் கச்சேரி மேடைக்குக் கொண்டு வரப்பட்டேன். நான் பயின்றிருந்த கலையை என் இஷ்டப்படி பாடிக் கொள்ளக் கூட எனக்குச் சுதந்திரம் கிடையாது. வீட்டுத் தோட்டத்தில், மாடியில், நிலவில், தனியாக இருக்கும் போதெல்லாம் என்னையுமறியாமல் என் கண்டத்திலிருந்து ஒலி எழும்பி இசை பரவும். அப்போதும், ‘தனிமையில் என்ன பாட்டு? தொண்டையை விருதாவாகப் பாடி இப்படி வீணடித்துக் கொண்டால் நாளைக்கு சபாவில் எப்படிப் பாடுவது?’ என்ற சொல் விலங்குகள் பறந்து வரும். உள்ளூர ஏங்கும் என் நெஞ்சுடன் நான் வேதனைப் படும் நாட்களிலேதான் நீங்கள் வந்தீர்கள். சொல்லாமல் கொள்ளாமல் எப்படியோ என் இதயத்தில் புகுந்து என் இதய வீணையை மீட்டி விட்டீர்கள். நாதம் ஜீவனுடன் ஒலிக்கலாயிற்று. ‘இது தான் கடைசிக் கச்சேர், இதுவே தான் கடைசியாக இருக்கும்!’ என்று உலகம் அறியாத பேதையாக அப்போதெல்லாம் நான் கோட்டைகள் கட்டினேன். காதல் பாதையில் வெகு சுலபமாக வந்து நீங்கள் என் கையைப் பிடித்து எங்கோ ஒரு ஆனந்த உலகுக்கு அழைத்துச் செல்லுவதாகக் கனவு கண்டேன். ஆனால் - காதல் கற்பனைக்கு இனியதாக இருக்கிறது; அநுபவிக்கும் போதோ அந்த இனிமையுடன் சொல்லொணாத் துயரமும் கூடியிருக்கிறது. விதி நம் உள்ளங்களை இணைத்து விட்டு உங்களை என் கண் காணாமல் பிரித்துச் சென்றது. அன்று புத்தூர் மைதானக் கச்சேரிக்கு நீங்கள் வந்திருந்தீர்கள். பாதியிலேயே எழுந்து சென்றீர்கள். முகத்தில் ரத்தம் கொதிக்க நீங்கள் எழுந்து சென்றீர்கள். அதற்குக் காரணம் என்னால் அறிய முடியாததல்லவே? நீங்கள் வந்து என்னை விடுவிப்பீர்கள் என்று நான் அல்லும் பகலும் எதிர்நோக்கி இருந்தேன். எனக்கு அந்தப் பாக்கியம் கிட்டவில்லை. இறைவனுக்காக மலர்ந்து நிற்கும் வண்ண மலர் இது என்று பனி விட்டு விடுவதில்லை. தன் கொடுமையைக் காட்டி விட்டுத்தான் செல்லுகிறது. தங்களுக்குரியவள், தாங்கள் வந்து என்னை அடையும் வரை நான் தூய்மையுடன் காத்து நிற்க வேண்டியவள் என்பதை என்னைச் சூழ்ந்த மக்கள் அங்கீகரிக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. புனிதமாக வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய மலரைச் சுற்றிப் பல விஷப் பூச்சிகள் வண்டுகள் என்ற பெயருடன் ரீங்காரம் செய்வதைப் போல, கலையின் பெயரைச் சொல்லிக் கலையின் விளக்கத்துக்குக் கேடு தரும் நெஞ்சுடனே பல கயவர்கள் என் மேல் விஷப் பார்வையைப் பதித்தார்கள்; பதிக்கிறார்கள். என்னைப் பாதுகாப்பதாகச் சொல்லி வருபவர் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லுகிறார். காசுக்காக என்னிடமிருக்கும் அருங்கலையை எந்த விதமாக வெல்லாமோ ‘கோலம்’ செய்ய ஒப்புக் கொள்கிறார். நிர்ப்பந்தத்தால் என்னை உடன்பட வைக்கிறார். இந்த இரண்டு மூன்றாண்டுகளில் என்னை நோக்குபவரின் கண்களிலே தூய்மையில்லை. என்னைப் பற்றிய பேச்சிலே தூய்மையில்லை. நெஞ்சிலே நேர்மையின்றி, நாவில் வந்தபடி பிதற்றப்படும் இந்தச் சொற்களுக்கு, புகழ் வார்த்தைகள், பாராட்டுக்கள் என்று பெயர்! நான் விநாடிக்கு விநாடி, நாளுக்கு நாள் புகழ் வார்த்தைகள் என்ற இந்த மயக்க மருந்தால் அழிவுப் பாதைக்கு இழுத்துச் செல்லப் படுகிறேன். குடிப்பவனுக்கு தான் குடிப்பது பிழை என்று தெரியும். போதை தெளிந்த நிலையில் அவன் வெட்கமுறுவான். ஆனால் அவனுடைய கண்களில் மதுப்புட்டி தென்பட்டு விட்டால் அவனுடைய அறிவு மங்கிவிடும். என் உள்ளத்தில் உறுதி இருக்கிறது. ஆனால் வலிவைக் கொடுக்கும் சூழ்நிலையோ, சந்தர்ப்பமோ இல்லை. இத்தனை நாட்கள் கழித்து நீங்கள் வந்தீர்கள்; தூய்மையுடன் பிரேமையாகிற மதுவேந்தி வந்தீர்கள்; என்னுள் வாடா விளக்காக என்றும் ஒளிரும் நீங்கள் என் கண்முன் வந்தீர்கள்... ஆனால், அன்பரே, வேண்டாம், போய் விடுங்கள். ஒரு முறை விஷத்தை உண்பதை விட ஓராயிரம் முறைகள் விஷக் காற்றைச் சுவாசிப்பது அதிகக் கெடுதலானதே தவிரக் குறைந்ததல்ல. பூவிதழ்கள் மங்கிவிட்டன. புறவிதழ்களின் பசுமைதான் மிஞ்சி இருக்கிறது. வெகு சீக்கிரம் மலர் உதிர்ந்து விடும். என் உள்ளத்தில் என்றென்றும் பசுமையாக நின்று நிலவுகிறீர்கள். அதுவே என் நிறைவு. ஆதலால் வேண்டாம், போய் விடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு என்னை நாடாதீர்கள். மாசில்லாத உங்கள் வாழ்க்கைக்கு ஒளி செய்ய உகந்ததொரு நல்விளக்கைத் தேடி ஏற்றுக் கொள்ளுங்கள். அன்புள்ள, சுதா” ‘என்னை வந்து நீங்கள் விடுவிப்பீர்கள் என்று அல்லும் பகலும் எதிர்நோக்கி இருந்தேன்...’ - இந்த வரியை நினைத்ததும் பாலுவின் கண்களில் நீர் பெருகியது. அவன் கோழை. தன்னை வாட்டிய வறுமையைக் கண்டு பயந்தான். வாழ்க்கையில் தெரியும் மேடு பள்ளங்களையும் பயங்கரமான திருப்பங்களையும் கண்டு மலைத்தான். பின்னால் தனக்கு அத்தனை அவசியமில்லாத பட்டத்தின் ஆசையிலும், அசட்டு கௌரவம் பாராட்டும் வீண் டம்பத்திலும் ஒன்றி ஒதுங்கினான். அப்போதே தைரியமாகச் சென்று அவளைக் கலை வரம்புக்கு அப்பால் இருக்கும் சகதியில் விழுந்து விடாதபடி காப்பாற்றி இருக்கலாம். உண்மை வழியிலே சென்று ஒளிர்ந்திருக்கலாம். அவன் அப்படிச் செய்யத் தவறி விட்டான்; பின் வாங்கினான்; கிடைத்தற்கரிய செல்வத்தை இழந்து விட்டான். காசு, காசு என்று அலையும் அற்பக் கூட்டம் அவனுடைய விலை மதிப்பற்ற பொக்கிஷத்தைப் பறித்து விட்டது. பாலு அன்று அறையை விட்டு வெளி வரவேயில்லை. வெளியே மனிதனின் ஆசைப் பேயைப் போல வெறி கொண்ட காற்று சுழன்று சுழன்று அடித்தது. நிறைந்த இன்பத்துடன் வந்து வெற்று இதயத்துடன் அங்கிருந்து அவன் புறப்படுகையில் அவனுடைய கைக்கு ஒரு தந்தி கிடைத்தது. ‘உடனே புறப்படவும். மிக அவசரம். சொந்த விஷயம், நந்தா’ என்று சென்னையிலிருந்து அவனைத் தேடி வந்திருந்த அந்தச் செய்தி அவனை ஒன்றும் கிளர்த்தி விடவில்லை. அவன் தான் கல்லாகி இருந்தானே? |