![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 1 அக்டோபர் 2025 11:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
10 “நிச்சயமாக ஏதோ இருக்கிறது போல் தான் தோன்றுகிறது விமலா. நானும் அரைமணியாகப் பார்க்கிறேன், கண்ணாடியும் சீப்பும் தேய்ந்து விடும் போல இருக்கிறது. ஆனந்தம் வேறு அடக்க முடியாமல் பொங்குகிறது. டேய், நான் உன்னுடன் பெண்ணைப் பார்க்க வந்து காபி டிபனை ஒரு கை பார்க்கலாம் என்று நாக்கைத் தீட்டிக் கொண்டு காத்திருக்கிறேன். நீ குறுக்கு வழியில் இறங்கி ஏமாற்றி விடுவாய் போலிருக்கிறதே? இப்போதேயானும் சொல்லி விடு அதை!” என்றான் மூர்த்தி. “நீ...ங்கள் ஒன்று அத்தான், காலணாவுக்கு வழியில்லாதவனிடம் போய் இந்தப் பேச்செல்லாம் பேசிக் கொண்டு!” என்று சிரிப்பினிடையே பகர்ந்த பாலு சீப்பைக் கண்ணாடியின் மேல் வைத்துவிட்டுச் சாப்பிட வந்து உட்கார்ந்தான். “காலணா இல்லாது போனால் என்ன? காதலுக்குத்தான் கண்ணே கிடையாதே? ஒரு லட்சாதிபதியின் மகளுக்கும் உனக்கும் இடையே வந்து சிக்கிக் கொள்கிறது. அப்புறம் உன்னைக் காலணாவுக்கு வழியில்லாதவன் என்று சொல்ல முடியுமா?...” “ஆமாம், பாலுவின் ஜாதகப்படி, ‘அவள்’ மூலமாக நிறைய சொத்து வர இருக்கிறதாம். நம் மேம்பாலத்து ஜோசியன் அவனுக்குப் பத்து வயசிலேயே அதைச் சொல்லி இருக்கிறான். ஏற்கெனவே யாரோ மரக்கடை கணபதியாமே? படிக்க வைத்துப் பெண்ணையும் கொடுக்கிறேன் என்று வந்தாராம். அம்மாவுக்குக் கூட இஷ்டம் தான். அவள் தான் சொன்னாள். அப்பா தான் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம், அதுதான் நம்மிடத்தில் வந்து தாளம் போடுகிறான்...” என்று விமலாவும் கணவனுக்கிணைய அவனைக் கேலி செய்தாள். “அப்படியா சங்கதி? அப்படியானால் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பழக வேண்டும். ஏன் விமலா? அந்த ஜோசியன் சொத்து எப்படி வரும் என்று சொல்லி இருக்கிறான்? வீடாகவா, நிலமாகவா, அல்லது ரொக்கமாகவேவா? ஒரு தட்டுமுட்டு என்றால் கைமாற்றுக் கேட்க வருவேனப்பா. இப்போதே சொல்லி வைக்கிறேன், மறந்து போய்விடாதே!” “ஐயோ, போயும் போயும் ஐந்து பத்து கை மாற்றுத் தானா உங்களுக்கு அவனிடம் கேட்கத் தோன்ற வேண்டும்? யாசித்தாலும் கௌரவம் வேண்டாமா? ஜம்மென்று மெருகழியாத காரில் போய்க் கொண்டிருப்பான். அன்று மோஹனை அழைத்து வரும் போது ஆஸ்பத்திரிக்கு அருகில் பஸ்ஸுக்குக் காத்து நின்றோமே கால் கடுக்க? அது போல் குழந்தையையும் தோளில் சாத்திக் கொண்டு நிற்போம். அந்த மாதிரி சமயங்களில் பார்த்தால் கொஞ்சம் கவனித்து ஒரு ‘லிப்ட்’ கொடுடாப்பா என்றாலும் கௌரமாக இருக்கும்...” என்று விமலா முடிக்கு முன் மூர்த்தி குறுக்கிட்டான். “இது ரொம்ப கௌரவமாக்கும்! ஒன்றரையணா விவகாரம்! ஐந்து பத்து கை மாற்று இதை விட எத்தனையோ உயர்ந்தது!” என்றான். தட்டில் சோற்றை வைத்துக் கொண்டு அதை உள்ளே செலுத்த இயலாமல் பாலு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான். அந்த தம்பதிகளிடையே தன்னுடைய நாட்கள் முடிவின் எல்லையைச் சமீபித்து விட்டன என்பதை அவன் அப்போது எப்படி அறிவான், பாவம்? அன்று பகல் நேரத்தில் கலாசாலையில் முதல் ‘பீரியட்’ முடிந்ததுமே பாலு வெளியே கிளம்பி விட்டான். கஜேந்திரபுரத்துக்குச் செல்ல அவனுக்கு அன்று பல முகாந்தரங்கள் இருந்தன. ‘வந்து போய்க் கொண்டு இருடா!’ என்று அவனுடைய அன்பான தமக்கை சொல்லி இருக்கிறாள். முதல் நாள் தான் ஊரிலிருந்து பணம் வந்திருக்கிறது. ரவியிடம் அன்று பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்... இவை மட்டும் தானா? இதற்குக் கலாசாலை முடிந்த பின் போகக் கூடாதா? மீனா அக்கா அவன் போனதும் மகிழ்ந்து குழைந்து உபசரிப்பது குறைந்து விடப் போகிறதா? ரவி தான் அவனுடைய பிச்சைக்காசு ஐந்து ரூபாயின்றி அடுத்த வேளைக்கு என்ன செய்யலாம் என்று மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு வியாகூலத்தில் முழுகியிருக்கப் போகிறானா? மூன்று மணி வேளை பார்த்து அவன் அங்கு செல்லுவதன் காரணம் இனியும் அறிய முடியாததல்லவே? வாசல் ‘காம்பவுண்டு’க் கதவைத் தாண்டி அவன் உள்ளே கால்வைக்கு முன்னரே சுருதியுடன் இழைந்த தீங்குரலின் கானம் அவனுக்கு நல்வரவளித்தது. அந்த கானத்துக்குரியவள்... அவன் பரபரப்புடன் வராந்தாவைக் கடந்து கூடத்தின் முன் நின்று பார்த்தான். அவன் அதிர்ஷ்டக்காரன் தான். கங்காதரத்துக்கு முன் அந்தப் பொற்பாவை தான் பாடிக் கொண்டிருந்தாள். நகங்களில் பட்டுப்போல் சிவப்புச் சாயம் ஒளிவிட அவளுடைய தந்தக் கரம் தம்பூரை மீட்டிக் கொண்டிருந்தது. மாணவியின் கானத்திலே மெய்ம்மறந்தவராகத் தாளம் போட்டுக் கொண்டு தலையை ஆட்டிக் கொண்டு இருந்தார் கங்காதரம். அழைத்து மரியாதை காட்டாத இடத்திலே கால் வைக்கக் கூடக் கூசும் அவனுடைய கௌரவ உணர்ச்சி எங்கே போயிற்றோ? பாலு மெள்ளப் போய்க் கூடத்தின் சுவரோம் போடப்பட்டிருந்த பெஞ்சியில் உட்கார்ந்தான். அதன் மேலிருந்த தினத்தாளைப் புரட்டிப் பார்ப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். உள்ளிருந்து கண்களைச் சுருக்கிக் கொண்டு ஜபமாலையும் கையுமாக வெளிப்பட்ட பாட்டியம்மாள் அவன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள். “ஏன் மீனா? பெஞ்சியில் உட்கார்ந்திருப்பது யார்? வருகிறவர், போகிறவர்கள் எல்லோரையும் உள்வரைக்கும் எதற்கு வரச் சொல்லுகிறார்? வாசலுடன் நிறுத்தி வைக்கக் கூடாதோ?” என்று அவள் கேட்டுக் கொண்டே சென்றது பாலுவின் செவிகளுக்கும் வந்து எட்டியது. எழுந்து சங்கோசத்துடன் அவன் வாசல்படியில் வந்து நின்றான். பாட்டி கேட்ட கேள்வியில் மீனா வெளியே வந்து பார்த்தாள். “பாலுவா? ரவியைத் தேடி வந்தாயா? என்ன விசேஷம்?” என்று நேரடியாகக் கேட்ட அவள் பாட்டியின் பக்கம் திரும்பி, “அடி அம்மா? இந்தப் பையன் யார் தெரியுமோ?...” என்று பாலக்காட்டுப் பேச்சுக்கே உரிய ராகத்தில் நீட்டினாள். “யாரு?...” என்று கிழவியும் நீட்டினாள். “தம்பி! செல்லத்தின் பிள்ளை!” என்று மீனா பாட்டிக்கு அவனை அறிமுகம் செய்வித்தாள். கிழவி அசுவாரசியமாக ‘உம்’ கொட்டிவிட்டு ஜபமாலையை உருட்டிக் கொண்டு போனாள். “ஏண்டா? உன் அக்காவுக்கு இங்கே வந்து எட்டிப் பார்க்கக் கூடாதா? எனக்குத்தான் இத்தனை பெரிய வீட்டை விட்டு வர நேரம் கிடைக்கவில்லை. அவளுக்கென்ன? காலமே சாப்பிட்டு விட்டுப் புருஷன் ஆபீஸுக்குப் போனால் விளக்கு வைத்து வருகிறான். நான் வந்தால் தான் அவள் வரவேண்டுமா?” எவரையேனும் குறை கூறிக் கொண்டிருக்காவிட்டால் அவளுக்குப் பொழுது தான் போகாதோ, அல்லது வேறு விதமாகப் பேசவே தெரியாதோ அவளுக்கு! பாலு அவளுக்குப் பதில் எதுவும் கூறுமுன் பாட்டு முடிந்து விட்டது. கங்காதரம் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். “இங்கே படிக்கிறாயா?” என்று அவர் கேட்டார். “ஆமாம், பி.ஏ.க்குச் சேர்ந்திருக்கிறேன்...” “விமலா எங்கு இருக்கிறாள்?” “பீளமேடு போகும் வழியில் இருக்கிறதே, விநாயகா காலனி என்று?... அங்குதான்...” “இல்லை, நீயும் கூட இருக்கிறாயே, காலேஜுக்குப் போக வர சௌகரியமாக இருக்குமோ என்று கேட்கிறேன்...” “என்ன செய்வது? இருக்கும் சௌகரியம்தான்...” அவன் சிரித்து மழுப்பினான். “இல்லை, ரொம்பவும் அசௌகரியமாக இருந்தால் இங்கு வந்து இரு அப்பா. நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. என்ன?” அவர் சிரித்துக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தார். “...ம், இப்போது ஒன்றும் தெரியவில்லை” என்றான் பாலு. குனிந்து கீழே விரலால் கோலமிட்டுக் கொண்டிருந்த சுதா சட்டென எழுந்தாள். “நான் போகட்டுமா?” என்று கேட்டாள். “ம், இந்தா மீனா? சுதா போகிறாளாம் பார்!” என்று மனைவிக்குத் தகவல் கொடுத்து விட்டு அவர் மீண்டும் பாலுவின் பக்கம் திரும்பினார். சுதா தம்புராவை எடுத்துக் கூடத்தின் பக்கம் இருந்த அறைக்குள் வைத்துவிட்டு உள்ளே சென்றாள். பாலுவுக்கு வெளியே செல்ல மனம் பறந்தது. “மூர்த்திக்கு ஆபீஸ் எங்கு இருக்கிறது?” என்று கங்காதரம் விசாரித்தார். “இங்கு தான், சின்னத்தம்பி ரோடுக்கு வருகிறார்...” “சந்தோஷம், எப்படியோ நீ படித்து முன்னுக்கு வந்து குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உனக்கு அசௌகரியமாக இருந்தால் இங்கு வா. வித்தியாசமாக நினைக்காதே... மீனா? பாலுவுக்குக் காபி கொண்டு வந்து கொடு!” என்று உத்தரவிட்டவர், “ரவியை எங்கே காணோம்?” என்று கேட்டார். “வேண்டாம் அத்தான்...” என்று பாலு ‘மரியாதை’யாக மறுத்து எழுந்திருக்கு முன் கணவனின் கேள்விக்கு “எங்கே போனானோ? சொல்லிக் கொண்டா போகிறான்?” என்று பதில் கொடுத்துக் கொண்டே மீனா வந்தாள். கையிலிருந்த காபித் தம்ளரை பாலுவிடம் நீட்டி, “விமலாவை வரச் சொல்லடா!” என்றாள் அதிகாரமாக. சூடான அந்தப் பானத்தை எப்படியோ விழுங்கி விட்டு, “நான் வருகிறேன் அக்கா, வருகிறேன் மாமா!” என்று தலையை ஆட்டி விடைபெற்றுக் கொண்டு அவன் வெளியே வந்தான். சூடான பானத்தைப் பருகியதாலோ என்னவோ வியர்வை அரும்பியது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவன் நடந்தான். அவன் பத்தடி கூடத் தாண்டியிருக்க மாட்டான், வாசற்கதவு மீண்டும் ஒருமுறை திறந்து சாத்தப்படுவதை அறிந்தான். அவள் யாரோ?... சே? அவனுக்கு ஏன் அசட்டுத்தனமாகப் புத்தி போகிறது? அன்று எதற்காக அங்கு வந்தான்?... மோசம், மிகவும் மோசம்! அந்தப் பக்கம் வருவதற்கு அவனுக்கு முக்கிய காரணம் எதுவுமே இல்லை. அழகி, பணக்காரி, கலைமகளின் அருளைப் பெற்றவள், அவளெங்கே? அவனெங்கே? ஊஹூம்! அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி விட வேண்டும்! மன உறுதியைக் கால்களில் காட்டுவது போல் அவன் வேகமாக நடக்கையில் ‘களுக்’கென்ற சிரிப்பொலி அவனைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. மாரன் அவ்வளவு லகுவில் தோற்று விடுவானா? இந்த மாதிரி எத்தனை அசட்டு வைராக்கியங்களைத் துகளாக அடித்து வெற்றி பெற்றிருக்கிறான்? “அதோ உங்கள் ஏழாம் நம்பர் பஸ் வருகிறதே? விருவிரென்று நீங்கள் ‘ஸ்டாப்பை’க் கடந்து நடக்கவும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்றாள் அந்தப் பின்னலழகி. அவனுடன் ஏதாவது பேச வேண்டும் என்றே அதைச் சொன்னாள் போலத் தோன்றியது அவனுக்கு. முகம் சிவக்க, பாலு வந்த பஸ்ஸில் தொற்றி ஏறினான். பெண்கள் உட்கார்ந்திருந்த வரிசைகளுக்கிடையே அவன் நிற்க நேர்ந்தது. ‘கண்டக்டர்’ பஸ்ஸை நிறுத்தி ஏதோ கணக்குப் பார்த்தான். “இதோ நிற்கிறாள் பார், நைலான் தாவணியுடன்? இந்தப் பெண் தான் மரக்கடை கணபதியின் பெண், குமாரி சுதா. கங்காதர பாகவதர் சிட்சை. பட்ட மரம் பாலாய்ச் சொரியும். அப்பேர்ப்பட்ட குரல். இங்கே டவுன் ஹாலிலே அடுத்த மாசம் கச்சேரி செய்யப் போகிறாளாம்!...” பஸ்ஸிலே இருந்த ஒரு வயதான மாது சுதாவுக்கு வியாக்கியானம் செய்து கொண்டிருந்தாள். யாரேனும் பாலுவை ஓங்கி அடித்தார்களா? அவன் முகம் ஒரு கணத்தில் ஏன் அப்படிப் பேயறைந்தாற் போல ஆக வேண்டும்? பஸ் ‘புர்’ரென்று கிளம்பியது. சுதாவின் உருவம் இடுக்கு வழியே அவனுக்குத் தெரிந்து ஓடியது. மரக்கடை கணபதி! மரக்கடை கணபதி! “பெரிய முறைப்பு முறைத்தீர்களே? இப்போது என்ன சொல்கிறாயடா பயலே?” என்று சுதாவின் கன்னம் குழிந்த புன்னகையிலே கணபதியின் கேலிச் சிரிப்பா மிளிர்ந்தது? சுழலும் உள்ளத்துடன் வீட்டுக்கு வந்த அவனுக்கு இரு செய்திகளை வைத்துக் கொண்டு மூர்த்தியும் விமலாவும் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஒன்று ஊரிலிருந்து வந்திருந்த கடிதம். அது எதிர்பாராத செய்தியைத் தாங்கி வந்திருந்தது. “ஜானகிக்குக் கல்யாணமாம், இதோ பார் கடிதத்தை!” என்று விமலா மஞ்சள் தடவப் பெற்ற கடிதத்தை அவனிடம் நீட்டவும் அவனுக்குக் கனவா நினைவா என்று புரியவில்லை. “கல்யாணமா? ஜானகிக்கா?” என்று திகைப்பும் வியப்புமாக அவன் கடிதத்தைப் பிரித்தான். மூர்த்தியின் பெயருக்குத்தான் கடிதம் எழுதப்பட்டிருந்தது. “காலம் வந்தால் எதுவும் நிற்காது என்று பெரியவர்கள் சொல்லுவது பொய்ப்பதில்லை. ஜானகிக்குக் கங்கண ப்ராப்தம் வந்து விட்டது போலிருக்கிறது. பையன் படித்தவன். தகப்பனார் போலீஸ் சூபரின்டென்டெண்டாக இருந்து ஓய்வு பெற்று இவ்வூரில் இருக்கிறார். பாலுவுக்குக் கூடத் தெரியும். ஜானகியின் அழகையும் குணத்தையும் கண்டு அவராகவே தம் மகனுக்கு இரு செலவும் போட்டுக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கேட்டார். மிக நல்ல மனிதர். நாம் யோசிக்க என்ன இருக்கிறது? எப்படியும் அவளுக்கு ஒரு நாள் மணம் செய்விக்கத்தானே வேண்டும்? இதை விட நல்ல இடமாக நான் எங்கிருந்து தேடப் போகிறேன்? ஏதோ கடவுள் சித்தம், தை பிறந்ததும் முதல் முகூர்த்தம் ஏற்பாடு செய்து இருக்கிறோம். வேறு மனிதர்கள் யாரும் இங்கு இருந்து நடத்துவதற்கு இல்லை என்பது உனக்குத் தெரியாததல்ல. எனவே, விமலா குழந்தைகளுடன் நீ முன்னதாகவே வந்து விட வேண்டும். பரீட்சை சமீபித்துக் கொண்டிருப்பதால் பாலு மும்முரமாகப் படித்துக் கொண்டிருப்பான் என்று நம்புகிறேன்...” கடிதத்தை முழுதும் முடிக்கவும் பொறுமையின்றிக் கீழே விட்டெறிந்தான் பாலு. “அப்பாவுக்கும் ஏனிப்படிப் புத்தி போகிறது? எனக்கு ஏதாவது பிடித்தால் தானே? குடுகுடுவென்று ஜானகிக்கு இப்போது யார் கல்யாணம் நிச்சயம் செய்யச் சொன்னார்கள்? அதிகமாக எனக்கு ஒரு பத்து ரூபாய் அனுப்பத் திணறுகிறார்கள்? என்ன செலவில்லை என்றாலும் கல்யாணம் லேசில் முடிந்து விடுமா? ஒரே குளறுபடி! ஒரு காரியத்தையும் ஒழுங்காகச் செய்ய மாட்டார்கள்! எனக்குத் தெரியும், எல்லாம் இந்த அம்மாவால் வருவதுதான்!...” “இரு தம்பி, இந்த மாப்பிள்ளையைப் பற்றி உனக்குத் தெரியும் என்கிறாரே? யார் என்று சொல்லிவிட்டு இரை...” “ஒரு கிழம், கந்தையா வென்று. வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு எந்நேரமும் வாய்க்கால் கரையிலேயே நிற்கும். போலீஸ் உத்தியோகஸ்தராக இருந்தாராம்! தாடியும் மீசையுமாகப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது அவரை. முகத்திலே சிடுசிடுவென்று எள் வெடிக்க எந்நேரமும் சிம்னிபோல் புகையைவிடும் ஒரு மகன் உண்டு அவருக்கு. எங்கோ மலையாளத்திலோ, மங்களூர்ப் பக்கமோ வேலையாக இருப்பதாகக் கேள்வி. அவன் வந்தால் ஒரு வினாடிக்கு ஒரு உடை உடுத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனிலோ, பெண் பள்ளிக்கூட முனையிலோ நிற்பதைக் காணலாம். நானும் ராமுவும் அவனை மறைவில் கேலி கூடச் செய்வோம். அவனுக்கா ஜானகியைக் கொடுப்பது?... அவரே கல்யாணம் செய்து கொள்ளுகிறாராம், அவரே!...” “அட, அவரே கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை தம்பி, மகனுக்குத்தான் நடத்தி வைக்கப் போகிறார். உனக்கேன் இத்தனை கோபம்? சீர்திருத்த மனசோடு செலவு வைக்காமல் சம்பந்தம் செய்து கொள்ள முன் வந்திருக்கும் அவரைப் பாராட்ட வேண்டாமா? நிதானம் வேண்டும் தம்பி உனக்கு...” என்றான் மூர்த்தி. ஆனால் பாலுவுக்கு நிதானம் வரவில்லை. சரியான காரணம் புரியாமலேயே அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. “உம்... நம் விஷயத்தையும் சொல்லி விடலாமா விமலா? உன் தம்பியின் உக்கிரத்தைப் பார்த்தால் பயமாக அல்லவோ இருக்கிறது?” என்று மூர்த்தி புதிர் போட்டான். “போங்கள் அத்தான், எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை!” என்று அவன் கூறியதைச் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே வெறுப்புடன் உட்கார்ந்தான் பாலு. “நமக்குப் பிடிக்கிறதே நடக்கிறதா? என்னப்பா செய்கிறது? எனக்கும் கூடத்தான் இப்போது இந்த ஊரை விட்டுப் பெயர இஷ்டமில்லை!” என்றான் மூர்த்தி இன்னும் கூடமாகவே. “உங்களுக்கு எல்லாம் விளையாட்டாக இருக்கிறது அத்தான். நான் இப்போது விளையாடவில்லை. ‘ஸீரியஸ்’ஸாகச் சொல்லுகிறேன்” என்ற பாலுவுக்கு மூக்கின் நுனி சிவந்து பளபளத்தது. “நான் மட்டும் என்ன விளையாடுகிறேனா? எனக்கு மதறாஸுக்கு மாற்றல் உத்தரவு வந்திருக்கிறது, போகாமல் என்ன செய்ய?” என்று மூர்த்தி கூறியதும் பாலு அயர்ந்து போய்விட்டான்! |