1

     வைகாசி மாதத்திய பூர்ணிமை இரவு. பால் நிலவு தன் அமுத கிரணங்களால் உலகைத் தழுவிக் குளிர்வித்துக் கொண்டிருந்தது. அழகும் பசுமையும் செறிந்த பாலக்காட்டுப் பிரதேசத்தில் உள்ள மாதவபுரம் கிராமத்திலே தன்னுடைய வீட்டின் மேல்மாடியில் திறந்த வெளியிலேதான் கங்காதரம் பாடிக் கொண்டு இருந்தான். அடுத்த வீட்டு மாடியில் கைப்பிடிச் சுவரருகில் நின்றவளாக, செல்லம் அந்த இசையமுதத்தைப் பருகிக் கொண்டிருந்தாள்.

     பொதுவாக இசை பயின்று வித்வான்களாகத் திகழும் எல்லோரிடமுமே குரலினிமை, ஞானம், சக்தி எல்லாம் பொருந்தி இருப்பதில்லை. குரலின் இனிமையைக் கொண்டு மக்களைப் பரவசமடையச் செய்வோரிடத்தில் ஞானம் அதிகமாக இருப்பதில்லை. ஞான பண்டிதராக இருப்பவருக்கு வசதியில்லாத சாரீரத்தை அசாத்தியமான சாதனையின் மூலம் வசப்படுத்த வேண்டியிருக்கும். இரண்டும் பொருத்தமாக அமைந்திருக்கப் பெற்றவருக்கோ, சூழ்நிலை இசை பயிலும் வாய்ப்பையே அளித்திராது. கங்காதரம் அதிர்ஷ்டசாலி. கலைவாணி இசைச் செல்வத்தை அவனுக்குப் பரிபூரணமாக அருளியிருந்தாள்.

     இசை ஓய்ந்துவிட்டது. ஆனால் கேட்டவரின் கருத்திலே அழியாத சித்திரமாக இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது. செல்லம் கீழே இறங்கிச் செல்லவில்லை. கன்னி உள்ளம் துடிக்க, கங்காதரம் எழுந்து சுருதிப் பெட்டியுடன் தன் அறைக்குள் செல்லுவதைப் பார்க்க அவள் இன்னும் காத்திருந்தாள்.

     உள்ளே செல்லத் திரும்பிய அவன் தண்ணிலவிலே தங்கச்சிலை என நிற்கும் மங்கையைப் பார்த்துவிட்டான்.

     “யாரது? செல்லமா?...”

     அவள் வாய் திறக்கவில்லை.

     “இத்தனை நேரமும் நீ இங்கேயா இருந்தாய் செல்லம்? அட! தனியாகப் பாடிக் கொண்டிருந்ததாக நினைத்தேனே?”

     அவன் சிரித்தான்.

     அவனுடைய சாரீரத்தில் உதிரும் ரவைகளைப் போல, சிரிப்பிலும் பூ உதிர்வதைப் போல இருந்தது செல்லத்துக்கு.

     “வெகு நன்றாகப் பாடினீர்கள். இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. உம்... கற்றுக் கொடுப்பீர்களா?”

     தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்ட அவள் தன்னுடைய முல்லைப்பற்கள் தெரியப் புன்னகை செய்தாள்.

     “ஓ, கற்றுத் தருகிறேன். ஆனால் சும்மா சொல்லிக் கொடுக்க மாட்டேன். குருதட்சிணை இல்லாத வித்தை பயன்படாது. தெரியுமா செல்லம்?...”

     “...”

     “நீ எங்கள் வீட்டுக்கு வந்தால்தான் சொல்லிக் கொடுப்பேன். நான் கேட்பதைக் கொடுப்பவளாக வந்த பிறகு...”

     செல்லத்தின் பொங்கிய உள்ளம் இந்த வார்த்தைகளில் கட்டுக்கடங்காமல் பெருகியது. கண்களில் நீர் துளிர்த்தது.

     அது இன்பக் கண்ணீரோ, அல்லது துன்பமும் கலந்த கண்ணீரோ?

     “செல்லம்! மணி பத்தடிக்கிறது. வயசுப் பெண்ணுக்கு மொட்டை மாடியில் இன்னும் என்ன வேலை, செல்லம்!”

     கீழிருந்து கீச்சுக்குரலில் செல்லத்தின் தாய் பார்வதி கத்தினாள்.

     “இதோ வந்துட்டேனம்மா” என்று பதில் கொடுத்துக் கொண்டே அவள் ஓடினாள். மச்சுப்படியில் குதித்தவாறு இறங்கிக் கதவைச் சாத்தினாள். அவனுடைய நாவில் நடனம் செய்த இசை அவளுடைய உடலிலும் உள்ளத்திலும் புகுந்து விட்டாற் போலிருந்தது. இல்லாவிட்டால் ஏன் அது அப்படித் துள்ளுகிறது?

     இதெல்லாம் எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு நடந்தவை தான்.

     இருபத்து மூன்று வருஷங்களுக்குப் பிறகு இன்று செல்லத்தின் மனசில் அந்தச் சம்பவம் உயிருடன் தோன்றியது. அதே மொட்டைமாடி, அதே பூர்ணிமை இரவு; அதே பாட்டை கங்காதரம் வானவெளியில் சஞ்சரிக்கும் புள்ளென இசைக்கிறார். தன்னுடைய இன்ப வாழ்வு அமைவதற்கு வித்தாயிருக்கும் என்று அவள் கருதிய அந்த நிகழ்ச்சி அவள் மன அரங்கில் எப்படி உயிர் பெறாமலிருக்கும்? அவள் அன்று கண்ட கனவு பொய்த்து எத்தனையோ காலமாகிவிட்டது. கங்காதரம் இன்று இசையுலகிலே ஒளிரும் ஒரு தனிப்பெரும் சுடர். அது மட்டுமல்ல, கிட்டாததை அடியோடு மறந்து விடும்படி, எங்கோ தொலைதூரம் சென்றுவிடும்படியான வாய்ப்பைக் கூட விதி அவள் விஷயத்தில் இரங்கி ஏற்படுத்தியிருக்கவில்லை. அவள் நினைத்து நினைத்து ஆற்றாமைப்படும் வண்ணம் கங்காதரம் அவளுக்கு மருமகனாக வாய்த்திருந்தார். ஆம், கங்காதரத்துக்கு மாலையிட்ட மீனாவின் தந்தைக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படத்தான் அவள் கொடுத்து வைத்திருந்தாள்! மீனா அவருக்கு மாமன் மகள். முறைப்பெண். வறுமையில் உழன்ற செல்லத்துக்கு அந்த ஸ்தானம் கிடைக்காததில் அதிசயம் இல்லையே?

     அன்று கங்காதரத்தின் தந்தைக்கு எண்பதாம் ஆண்டு நிறைவு நடந்தது. அந்த வைபவத்துக்கு வந்திருந்த விருந்தினர் முன் தான் அவர் பாடிக் கொண்டு இருந்தார். செல்லமும் தன் கணவர், குழந்தைகளுடன் திருச்சிக்கருகிலிருந்த தங்கள் சொந்த ஊரிலிருந்து அந்த விழாவுக்குத்தான் வந்திருந்தாள்.

     “அம்மா, அம்மா? எங்கே போய் உட்கார்ந்திருக்கிறாய்? வண்டிக்கு நேரமாகிவிட்டதாம். பூலோகமா கைலாசமா என்று இப்போதுதான் பாட்டுக் கேட்கச் சமயமா? கீழே அக்கா கோபித்துக் கொள்கிறாள், உன்னை எங்கேயெல்லாம் போய்த் தேடுவது?”

     விமலா இரைந்து அவளைக் கூப்பிட்டாள். விமலா செல்லத்தின் வயிற்றில் பிறந்த மூத்த மகள். அவளுக்கு மணமாகி, இரு குழந்தைகளுக்கும் தாயாகி இருந்தாள்.

     விமலா சேலைச் சத்தத்துடன் மாடிப்படியில் விடுவிடென்று இறங்க, செல்லமும் அவளைப் பின் தொடர்ந்து கீழே வந்தாள்.

     கூடத்தில் காந்த விளக்கின் வெளிச்சத்தில் குழந்தைகள் நான்கு வரிசைகளாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பரிசாரகர்கள் இருவர் ஓடி ஓடிப் பரிமாற இடுப்பில் கொத்துச்சாவி குலுங்க, கெட்டிக்கரை சரிகைச் சேலையைத் தூக்கிச் செருகிக் கொண்டு மீனாவும் குனியாமல் நெய் பரிமாறிக் கொண்டிருந்தாள். செல்லத்தைக் கண்டதுமே அவள், “உனக்குப் பாட்டுக் கேட்க இதுதான் சமயமா சித்தி? வந்த இடத்திலே அப்பாவையானும் கவனித்துக் கொள்ளக் கூடாதா?” என்றாள்.

     முறைக்கு மீனா மகளாக இருந்தாலும் வயசில் செல்லத்துக்குச் சமமானவள். அந்தஸ்திலோ, அவளால் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்தவள். விளக்கின் பகட்டான ஒளியிலே மீனாவின் காதுகளிலும் மூக்கிலும் இருந்த கமலங்கள் வர்ணக்கதிர்களை வாரி வீசி அவளுடைய குரலில் தொனித்த அதிகாரத்துக்கு அநுசரணையாக ஒளிர்ந்தன. தாலிச்சரடைத் தவிர வேறு ஒரு அணிக்கும் கொடுத்து வைக்காத தன் கழுத்தைச் சாயம் மங்கிய புடைவையின் தலைப்பால் இழுத்து மூடிக்கொண்டு மீனாவைத் தாண்டிச் செல்லுவதைத் தவிர, செல்லத்தினால் அப்போது ஏதும் பதில் பேச முடியவில்லை. வாசல்புறமிருந்த அறையில் மீனாவின் தந்தையான செல்லத்தின் கணவர் ரங்கநாதம் கீழே பாயில் உட்கார்ந்திருந்தார். விமலாவின் கணவன் மூர்த்தி, குழந்தைகளுடன் செல்லத்தினிடம் விடைபெறுவதற்காகக் காத்திருந்தான்.

     “போய் வருகிறோம். நீங்கள் போகும்போது கட்டாயம் அங்கு இறங்கிவிட்டுத்தான் போகவேண்டும். என்ன, விமலா நேரமாகிவிட்டது!” என்று அவன் அவசரப்படுத்தினான்.

     “வரட்டுமா, அம்மா? அப்பா?” என்று விமலா இருவரையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டாள்.

     “கோயம்புத்தூர் ஒரு மணி நேரத்தில் போகும் தூரம்தான். கட்டாயம் வரவேண்டும்!” என்று இறுதியாகக் கூறிவிட்டு அவர்கள் இருவரும் வாசலில் நின்ற வண்டியில் ஏறிக் கொண்டார்கள். அப்போதைய மனநிலையில் செல்லம் வாயைத் திரந்து ஒன்றுமே பேசவில்லை.

     வணடி புறப்பட்டுச் சென்றுவிட்டது. மாடியில் ரஸிகர் குழாம் கரகோஷம் செய்தது செல்லத்தின் காதுகளில் விழுந்தது.

     “மாடியில் இருந்தாயா செல்லம்? எனக்கு அருகில் வந்து கேட்க முடியவில்லையே என்ற தாபம் தான். இந்தக் குழந்தைகளின் இரைச்சலிலும் அந்த நாதம் காதில் விழும் போது எத்தனை இன்பமாக இருக்கிறது? நாட்கள் ஆக ஆக அவனுடைய சாரீரத்தில் மெருகு ஏறித்தான் வருகிறது. பெரியவர்கள் செய்திருக்கும் புண்ணியம்; நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்” என்றார் ரங்கநாதம் உணர்ச்சியுடன்.

     ஒரு கால் சுவாதீனத்தை இழந்தவர் அவர். மாடி ஏறி இறங்கச் சக்தி இல்லை அவருக்கு.

     சிலை போல் நின்ற செல்லத்துக்குத் துயரம் பெருகி வந்தது. முப்பத்தெட்டு வயசைக் கடந்துவிட்ட அவளுக்கு, இரு பேரக் குழந்தைகளையும் பெற்றுவிட்ட அந்தப் பாட்டிக்கு, வாழ்வின் ஏமாற்றம் அப்போதுதான் உறுத்தியது போலும்! மனக்கிளர்ச்சிக்கு இடம் தந்து தளர்ந்து விட்ட இருதயத்துக்கு நிதானம் ஏது, பொறுமை ஏது?

     அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த ரங்கநாதம் திடுக்கிட்டார். அவள் வாழ்க்கையில் நிறைவைக் காணவில்லை என்பதை அவர் அறியாது போனாலும், நகைகள், பட்டுச் சேலைகள் இவை இல்லாத குறையினால் தன்னை அதிகம் வாட்டிக் கொள்கிறாள் என்பதை நன்கு உணர்ந்து இருந்தார். மீனாவோ, தன் சகோதரி கமலம்மாளோ அவளை அதனால் மரியாதைக்குறைவாக ஏதேனும் சொல்லியிருக்கலாம். அதுவே அவள் வருத்தத்துக்குக் காரணம் என்று நினைத்தவராக அவர், “சே, செல்லம், என்ன இது? விட்டுத்தள்ளு, அவர்கள் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் இருப்பதுதான் அழகு. உனக்கு நான் சொல்லித்தர வேண்டுமா செல்லம்?...” என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றார்.

     ஆனால் உள்ளூரக் கனிந்து தகிக்கும் அந்தக் கொதிப்பு அவருடைய இந்த நான்கு சொற்களில் ஆறி விடுமா? அவள் ஆறவில்லை.

     அப்போது மீனா ஏதோ காரியமாகத் தாம்பாளமும் கையுமாக அங்கு வந்தாள். “நீங்கள் சாப்பிட்டாயிற்றா மாமா?” என்று கேட்டுக் கொண்டு கங்காதரமும் அங்கு வந்தார்.

     செல்லம் கண்ணீர்க் கறைபடிந்த முகத்துடன் நிற்பதைக் கண்டு, “என்ன இது?” என்றார் சகஜமாக அவர்.

     ரங்கநாதம் தலையைக் குனிந்து கொண்டார். செல்லத்தின் கண்ணீர் கங்காதரத்தின் கேள்வியில் இன்னும் பெருகியது. மீனா படபடப்பாக ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

     இந்தச் சமயத்தில்தான் லாலலலா... என்று உல்லாசமாக ஒரு ஹிந்தி மெட்டை இழுத்துக் கொண்டு நிஜாரும் ஜோடுமாக ரவி அங்கு வந்தான். அவனைத் தொடர்ந்து முகம் மலர எளிய தோற்றமுடைய பாலுவும் வந்தான். அவனுடைய கையில் அன்று மாலை வந்த செய்தித்தாள் இருந்தது.

     ரவி, மீனா - கங்காதரத்தின் செல்வ மகன். பாலு செல்லத்தின் ஆசை மகன்.

     “அப்பா பாலுவுக்கு ‘ஃபஸ்ட்கிளாஸ்’” என்று ரவி சந்தோஷத்துடன் கூவினான்.

     “எங்கே?” என்று கங்காதரம் மகிழ்ச்சியுடன் பாலுவை நோக்கித் திரும்பினார்.

     செல்லத்தின் கண்கள் கண்ணீரிடையே மலர்ந்து நின்றன. அவளுடைய ஆற்றாமை எங்கேயோ ஓடிவிட்டது. “என் மகன், என் மகன் தான்!” என்ற பூரிப்பில் ஓங்கி நிமிர்ந்து நின்றது அவள் உள்ளம்.

     ஒரு பெண்ணுக்கு முதல் ஆதரவும் பெருமையும் தந்தையிடத்தில், அடுத்து கணவனிடத்தில். கடைசியாக அவள் மகனின் பெருமையிலும் ஆதரவிலும் இன்பம் காண்கிறாள். முதல் இரண்டு பருவங்களிலும் ஏமாற்றமும் துயரமுமே கண்டிருந்த செல்லத்தின் உள்ளம் தாய்மைக் கொடியில் பசைத்து, மலர்ச்சியை எதிர்பார்த்துத் தளிர்த்தது இயல்பானதுதானே?



அன்புக் கடல் : 1 2