18

     வளைந்து வளைந்து மலைப்பாதையில் வண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆவணி மாதத் துவக்கம். வானத்திலே அற்புத நாடகங்கள் நடக்கும் காலம் அது. கார் மேகங்கள் மத யானைகள் போல ஒன்றோடொன்று மோதிப் பிளிறும். வானம் பொழியும். அடுத்து திரைப்படத்திலே காட்சிகள் மாறுவது போல் வானத்தில் கதிரவன் புன்முறுவல் செய்வான். பஞ்சுக் குவியல்கள் போன்று மேகக் குழந்தைகள் வான் திரையில் ஓடி ஓடிக் கண்ணாமுச்சி ஆடும். இயற்கையும் அங்கு வானம் செய்யும் ஜாலங்களுக்கு இணையக் காட்சி தருவாள். பாலுவுக்கு அந்தப் பாதையும் அவன் செல்லும் இடமும் புத்தம் புதியதல்ல. ஏற்கனவே போய்ப் பழகி இருந்த இடம் தான். ஆனாலும் அன்று அவனுக்கு அந்தப் பிரதேசம் என்றுமிலாத வகையில் மனசைப் பரவசப்படுத்துவதாக இருந்தது. பாதைக்குக் கீழும் மேலும் அடர்ந்து இருந்த மரங்களும் செடி கொடிகளும் பசுமையுடன் சிலிர்த்து நகை செய்வன போல் தோன்றியது.

     ‘சர்... கிர்...’ என்ற ரீங்காரத்தை எழுப்பிக் கொண்டு வண்டி மலைகளைச் சுற்றிச் சுற்றி ஏறியது. பாலுவுக்கு இன்ப மலையின் சிகரம் ஒன்றுக்கு சுகமாகக் கொண்டு செல்லப்படுவது போலிருந்தது.

     ஆயிற்று, இன்னும் சற்று நேரம் தான். மணி ஒன்பதரை, பத்து... பத்தரை... அவனுடைய இருதயத் துடிப்புடன் கடிகாரத் துடிப்பு போட்டி போட முடியாது போலிருந்தது. வறண்ட உள்ளங்களிலும் பசுமையைச் சொரியும் அழகிய மலைப் பிரதேசம். அங்கே... அவள், அந்தச் சந்திப்போ?

     காய்ந்து வெடிக்கும் நிலையிலுள்ள நிலம்; விசும்பில் மிதக்கும் கனத்த மேகங்கள்; சிலிர்க்கும் காற்று வீசுகிறது; அமுதம் பொழியும்; வறண்ட பூமியும் குளிரப் போகிறது!

     உம்... இல்லை. அது சரியில்லை. அவனுடைய உள்ளம் அவளை எண்ணி வறண்ட நிலையிலா இருந்தது?... இல்லை. அவளைப் பற்றிய நினைவில் இது நாள் வரை ஏக்கம் மட்டும் தோய்ந்திருந்தது. ஆனால் இப்போதோ?

     உலகிலே அவனுக்கு அவள் ஒருத்திதான் ஒளி. அவன் அறியாதவாறு அவனுடைய வாழ்க்கையில் அமுதத்தை வார்க்கும் மழை. மறைந்து இருந்து அவன் நலத்தை இதுநாள் கண்டு மகிழும் அவள் வானம். ஒளியும் மழையும் தரும் வானம் இன்றி செடிக்கு ஏது பசுமை? பாலுவின் மனம் இந்த விதமான கற்பனைகளில் மூழ்கித் திளைக்கையிலேயே ‘நந்தா சாரிட்டீஸ்’ வண்டி ‘ஹோட்டல் நீலமலை’யின் வாசலில் வந்து நின்றது. “தூற்றல் ஸார்... அப்பாடா, சிலுசிலுவென்று என்ன குளிர்?” என்று வண்டி யோட்டுபவனின் குரல் கேட்ட பின் தான் சுய நினைவுக்கு வந்து பாலு இறங்கினான். வாசலிலே -

     ‘பிரதம மந்திரியின் உதவி நிதிக்காக உதவும் இன்னிசைக் கச்சேரி. கானக்குயில் குமார் சுநந்தா அண்டு பார்ட்டியாரால்...’ என்ற கொட்டை எழுத்துக்களுடன் காணப்பட்ட விளம்பர அட்டை வருகிறவர், போகிறவர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. அவன் ஹோட்டலுக்குள் நுழைந்தான். ‘கௌண்ட’ரில் குமாரி சுநந்தாவின் சங்கீதக் கச்சேரிக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன.

     “என்றைக்கு ஸார் வர்றாங்க?”

     “நாளைக்குத்தான் காலமே வர்றாங்க. இந்தப் பாழாய்ப் போகிற மழை நாளைக்குப் பிடிச்சுக்கிடாம இருக்கணுமே?...”

     “பாழாய்ப் போகிற மழையின்னு வையாதீங்கய்யா, அதுதான் அமிழ்தம் என்கிறார் வள்ளுவர்!”

     “குமாரி சுநந்தாவின் பாட்டுக்கு முன்பு அது அமிழ்தமாகாது. வள்ளுவர் அவுங்க பாட்டைக் கேட்டிருந்தால் வேறு விதமாகச் சொல்லி இருப்பார்!”

     வள்ளுவரைச் சந்தியில் இழுக்கும் இந்த ரசிக கோஷ்டியின் சிரிப்பொலி பாலுவின் முகத்தை விளக்கெண்ணெய் விழுங்குபவனைப் போல் ஆக்கியது.

     “ஏன் பிரதர்? குமாரி சுநந்தா முதல் தடவையாகத் திரையிலும் வரப் போகிறாங்களாமே? நட்சத்திர வானிலே போட்டிருக்குதே? திரைக்கேற்ற உருவம் தானா?...”

     “திரைக்கேற்ற உருவம் தானாவா? நீங்க பார்த்ததில்லையா? கச்சேரி மேடையிலே வந்து உட்கார்ந்தால் சபையிலுள்ள விளக்குகள் மங்கிப் போகும். இந்த மாதிரி ஒரு உருவத்தைத் திரைக்குக் கொண்டு வந்தால் திரை உலகுக்கே புது ஒளி வந்திடுமே? ஆனால் இதுநாள் வரை ஏன் முன் வரலேன்னுதான் தெரியலே...”

     பாலு விடுவிடென்று தன் அறையைத் தேடிச் சென்றான். உடல் சிலிர்க்கும் மலைச் சாரலிலும் அன்று முழுதும் அவனுக்கு எதிலும் நிலை கொள்ளவில்லை. படுக்கையிலும் இருப்பாக இல்லை; வேலையிலும் மனமில்லை; கவிதை காட்சி என்றும் பற்றிருக்கவில்லை.

     மறுநாள் பொழுது புலர்ந்தது. அறையின் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு மழைதானா, வெயில் வருமா என்று பார்ப்பவனைப் போல் பாலு வெளியே பார்த்தான்.

     சாரலும் தூற்றலும் நிற்கவே இல்லை. ஹோட்டலுக்குக் கீழே உள்ள பள்ளத்தில் சாக்கு, கம்பளித் துண்டுகள் ஆகியவற்றால் உடலை மூடிக் கொண்டு மண்ணின் செல்வ மைந்தர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். குன்றைச் சுற்றிச் சரிவிலே இருந்த உருளைக்கிழங்கு வயல்கள், பூமி தேவிக்கு வரிவரியாகக் கோடிட்ட பச்சைப் பாவாடை உடுத்தி அழகு செய்தாற் போலிருந்தன. பச்சைப் பாவாடை என்ற நினைவு தோன்றியதுதான் தாமதம். அந்தப் பச்சைப் பாவாடை அழகி அவனுடைய நெஞ்சில் நிறைந்து விட்டாள்.

     அன்று நடக்கப் போகும் கச்சேரிக்கு அவன் செல்லுவதாக இல்லை. மேடையின் மீது அமர்ந்து அவள் பாடி ரசிகக் கும்பலை மகிழ்விக்கும் காட்சியைத்தான் முன்பே அவன் பார்த்து விட்டானே? அந்தக் கச்சேரியே கடைசிக் கச்சேரியாக இருக்குமோ என்னமோ, ஒருவேளை!

     அவனை அங்கு கண்டவுடன் அவளுடைய விரிந்த நயனங்கள் அசையாமல் நிலைத்துவிடும். அதில் அன்பு அதிகமாகுமா, சோகம் அதிகமாகுமா, வியப்பு மிஞ்சுமா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? அவளைப் பொது வாழ்விலிருந்து ஒரேயடியாக மறைத்து விட வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையுடையவன் அல்ல அவன். ஆனால், கலை கலை என்று போலி வேடம் பூண்டு கீழ்த்தரமான நோக்குடன் சபையை நிறைக்கும் மனிதர்களிடையே அவளுடைய சங்கீதத்தை விற்க வரக்கூடாது. மேடைக் கச்சேரிக்காக, புகழுக்காக, பொருளுக்காக என்ற குறிகள் இல்லாது விடுதலையுடன் வளர்ந்தால் சுதாவின் சங்கீதம் இன்னும் இனிமை பயக்கக் கூடியதாக சோபிக்கும் என்பதில் என்ன சந்தேகம்? அங்கே, தூய்மை நிறைந்த உள்ளங்களுக்கு மத்தியிலே, தென்னை மரச் சூழலின் இனிய சலசலப்புக்கிடையே அவனுடைய சுதாவின் இன்ப கீதம் கேட்பவர்களின் ஆத்மாவை லயிக்கச் செய்யும். கருநீல உப்பங்கழியிலே சிறு படகிலே செல்லும் போது, அவளுடைய மதுரகீதம் மென்காற்றின் அலைகளூடே சென்று மோனத்தில் கலக்கும். அவளிடமிருக்கும் கலை வியாபாரச் சரக்கல்ல. சங்கீதம் தரம் மலிந்து வியாபாரச் சரக்காகி அவளையே விழுங்கி விடாதபடி அவன் மீட்க வேண்டும். அது அவன் கடமை. அன்புப் பணி. அந்த நேரம் நெருங்கி விட்டது.

     பாலு பார்த்துக் கொண்டே இருந்தான். மாடி முகப்பிலிருந்து கொண்டு அவன் கீழே வைத்த விழிகளை எடுக்காமல் இருக்கையிலேயே முன்னும் பின்னும் ஒரே அளவில் நீண்ட வடிவமுடைய சிவப்பு வர்ண வண்டி ஒன்று சரிவான பாதையில் வந்தது. ஹோட்டல் வாசலில் வந்து நின்றது. கதவு திறந்து ‘பங்’கென்று அடிபடும் ஓசை கேட்டது. ஹோட்டல் வாசலிலேயே அவளை வரவேற்கச் சில ரசிகர்கள் நின்றனர். அத்தனை பற்களும் தெரிந்தன. எல்லோருக்கும் ஒரே புன்னகை, ஒரே கைகுவிப்பு.

     அந்த மாடியில் கலகலப்பு நிறைந்தது. வந்து போகும் ஜோடுகளின் ஓசை, சிரிப்பின் ஒலி, பேச்சுச் சத்தம், எல்லாவற்றிலும் அவளுடைய உயிர்த் துடிப்பு கலந்திருந்தது போல் இருந்தது.

     அவன் தன்னுடைய அறையினின்றும் வெளியே வந்து அவளை நேருக்கு நேர் பார்க்கவில்லை. உதட்டிலே புன்னகையும் உள்ளத்தே தகாத எண்ணமும் கொண்ட போலி கோஷ்டியைச் சேர்ந்தவனா அவன்? அவளை அவன் தனியே அன்றோ சந்திக்க வேண்டும்?

     இத்தனை நாட்கள் பொறுத்திருந்தவனால் இன்னும் ஒருநாள் பொறுக்க முடியாதா?... கடைசியில் அவன் காத்திருந்த பொழுது வந்தது.

     மெல்ல அடிமேலடி வைத்து அந்த அறைக்குச் சென்றான். வெறுமே சாத்தப்பட்டிருந்த கதவை நுனி விரல்களால் மெதுவாகத் தட்டினான்.

     “வரலாம்...” என்று வந்த குரல் கட்டிப் போயிருந்தது. அந்தக் குரலுக்கு உடையவள் அவள் தானா? கதவைப் பரபரப்பாகத் தள்ளினான் அவன்.

     அவன் என்ன, அவள் கண்களுக்கு அப்படி விசுவரூபமாகத் தோன்றினானா? அந்த அகன்ற விழிகளில் இருந்த குறுகுறுப்பு எங்கே போயிற்று? தளதளவென்றிருந்த கன்னங்களின் பொலிவு போலிப் பூச்சுக்கு வெட்கி மறைந்து விட்டதா?

     பாலுவின் அடி நெஞ்சிலிருந்து ஏதோ ஒரு கவாடம் மேலுக்கு எழும்பித் தொண்டையை அடைத்தது.

     ‘மாண்டல் பீஸின்’ மேல் வைக்கப்பட்டிருந்த மின்கணப்பின் வரிவரியான சுடர்க் கம்பிகள் அந்த அறை முழுதும் வியாபித்து விட்டது போல் தெரிந்தது. அந்தச் சுடர் வளையங்களுக்கு மத்தியிலா சுதா இருந்தாள்? அவள் சுதாவா? அவனுடைய உள்ளத்திலே உறைந்திருந்த சுதாவா?... அவனுடைய இருதயம் தான் துடிக்க மறந்ததா, உலகமே துடிக்க மறந்து விட்டதா?

     “யார் நீங்கள்?” என்ற கட்டைக் குரல் அசாதாரணமான பயங்கர அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது. கருணைக்கிழங்குக்கு உபமானமாக அன்றொருவன் கூறிய கணபதிதான் ஸ்நான அறையினின்றும் வெளிப்பட்டு சோபாவில் வந்து உட்கார்ந்தார்.

     “உட்காருங்கள், நீங்கள் யாரென்பதை... அறியலாமா...” என்ற கேள்வியைப் போட்டு அவனை எந்த வகையில் சேர்க்கலாம் என்ற பாவத்தில் மேலும் கீழும் பார்த்தார் அவர், ஒரு போலிப் புன்னகையுடன். பாலுவுக்குத் தலை சுற்றியது.

     என்ன மடத்தனம்? அவரை அவன் எதிர்பார்க்கவுமில்லை, நினைக்கவுமில்லை! முதல் நாள் காலையில் அவர் அவளுக்குப் பின்னால் வண்டியிலிருந்து இறங்கி வந்ததைக் கூடவா அவன் கவனிக்கவில்லை?

     எப்படி கவனித்திருப்பான்? அவனுடைய பார்வையை, செயலை, நினைவை எல்லாவற்றையும் அவளே கொள்ளை கொண்டு விட்டாளே?

     அவளைக் கண்டதும் என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் இத்தனை நாட்களாகக் கட்டிய கோட்டைகளெல்லாம் என்ன ஆயிற்று/ அவனுடைய கற்பனைக் கோட்டைகளே அதிர்ந்து விட்டனவா? அவன் எண்ணியிருந்தபடி அந்த அகன்ற விழிகளில் அன்போ, பிரிவின் தாபமோ, திடீர் மகிழ்ச்சியோ இருக்கவில்லை. நிலைத்து நின்ற விழிகளை அவன் பார்க்க இயலாதபடி அவள் சட்டென்று பின்புறம் திரும்பிக் கொண்டாள்!

     நீண்டு தொங்கும் அவளுடைய பின்னலிலே இன்று பொய்க் கூந்தலின் குஞ்சம் தொங்கியது. சிவந்த பாதம் தெரியாதபடி மெல்லிய சாம்பல் நிற ‘ஜார்ஜெட்’ சேலை கீழ் வரை புரண்டது. பாலு அவள் மீது பதித்த விழிகளை அகற்றவேயில்லை.

     “நீங்கள் யாரென்று தெரியவில்லையே? உட்காருங்கள்!” என்றார் மீண்டும் கணபதி.

     பதிலே கூறாமல் அவளையே நிலைத்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்த மரியாதையைக் கொடுத்தது. அவனுடைய தோற்றமும் உடுப்புகளும் தான். அவை இல்லாத பழைய பாலுவாக அவன் இருந்திருந்தால் அவனுக்கு அவரிடமிருந்து வேறுவிதமான ‘மரியாதை’ கிடைத்திருக்கும்!

     எப்படியோ அவன் சுதாரித்துக் கொண்டான்.

     “இல்லை, மன்னிக்கவும், நான் தவறுதலாக வந்து விட்டேன்...” என்று எப்படியோ வார்த்தைகளைக் கொட்டிக் குழப்பி விட்டு விடுவிடென்று அவன் தன்னுடைய அறைக்கு வந்து விட்டான்.

     வெளியே சாரல் காற்று விர்ரென்று அடித்தது. நீர்த்துளிகள் திறந்திருந்த கண்ணாடி ஜன்னலின் வழியாக வந்து படுக்கையை நனைத்தன.

     பாலுவின் உள்ளத்தில் எரிமலை புரண்டு வந்து விட்டதா? இல்லாவிட்டால் அந்தக் குளிர்ச்சியிலும் அவனுடைய நெஞ்சம் ஏன் அப்படிக் கொதிக்க வேண்டும்?

     அவளுடன் அவன் வாய் திறந்து பேசவில்லை. மனசில் உள்ளதை இருவரும் வெளியிட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவனுக்கு எப்படியோ புலனாகியது.

     அடுக்கடுக்காக அழகாக எழும்பிய மாளிகையின் அஸ்திவாரம் தகர்ந்து விட்டது. அந்த மாளிகையின் உயிராக இருந்த ஒளி உறங்கி விட்டது. அவளுடைய விழிகள் அவனுக்கு எப்படியோ அதைத் தெரிவித்தன. இன்பமலையின் சிகரத்திலிருந்து உருண்டு கீழே விழுந்தவன் போல் அவன் துடித்தான்.