14

     ‘அவர்கள் கண்ணெதிரே அதே ஊரில் அவர்களுடைய உதவியின்றியே என் மகனைப் படிக்க வைப்பேன்’ என்று வீம்புடன் கூறிக் கொண்டாளே செல்லம், அதற்கு வீழ்ச்சி வந்தது. அதற்குரிய உரமில்லாமல் வெறும் வீம்பு கொண்டு பாராட்டப்படும் உறுதிக்கு நிலையேது? செல்லம் ஆற்றாத மனவெழுச்சிக்கு இடம் தந்து தந்து தானும் உழன்று பிறரையும் துன்புறுத்தும் பஞ்சை தானே? தன்னைத் தானே நொந்து கொள்ளும் வேதனையில் இன்று அவளுடைய பொறாமை உணர்ச்சி பொசுங்கி விட்டது. எப்படியோ அவனும் படித்துக் குறையையும் பூர்த்தி செய்யட்டும் என்ற ஆசை மட்டுமே அவளுடைய வேதனைகளில் மங்காமல் நின்றது.

     பாலுவுக்குப் புது இடத்தில் வந்து ஐந்தாறு நாட்கள் வரை எந்த அசௌகரியமும் தெரியவில்லை. உடலில் சோர்வு நீங்கிப் புதுத் தெம்பும் ஒளியும் பெற்றான். கங்காதரம் அவனுடைய பெற்றோருக்கு என்ன எழுதியிருந்தாரோ? அவர்கள் அவன் அங்கே தங்குவதைக் குறித்து அவனுக்கு ஆட்சேபித்தோ, விரும்பியோ ஒரு கடிதமும் எழுதவில்லை.

     பாலுவும் முதலில் அவ்வளவாகப் பாராட்டவில்லை.

     ஆனால் நாட்கள் செல்லச் செல்ல...?

     மூர்த்தியுடன் அவன் இருந்த நாட்களிலே அவனுக்குக் கைச்செலவுக்கு வேண்டிய பணம் ஊரிலிருந்து நேராக அவனுக்கே வருவது வழக்கம். இங்கே கங்காதரத்தின் பெயருக்கு அனுப்பப்பட்டு வந்தது. அவர் என்றுமே வீட்டின் செலவு, நிர்வாகம் இவைகளுக்குப் பொறுப்பாயிருப்பவர் அல்ல. பொக்கிஷம், நிர்வாகம் இரண்டும் மீனாவின் அதிகாரத்தில் தான் நடைபெற்று வந்தன. மேலும் அவன் அங்கு வந்த உடனேயே கங்காதரம் முன்னதாக அவனுடைய கலாசாலைச் சம்பளத்தைக் கட்டியிருந்தார். எனவே அவர் தபால்காரன் கையிலிருந்து பணத்தை வாங்கி அருகிலேயே நின்று பார்த்த மீனாவிடம் “பாலு கேட்டால் கொடு!” என்று அலட்சியமாகக் கொடுத்து விட்டார். அலட்சியமோ, வேண்டுமென்று செய்யப்பட்ட சூழ்ச்சி தானோ?

     ஏற்கெனவே கொட்டும் குணம் உண்டு. அத்துடன் அதிகாரமும் வழங்கி விட்டால் கேட்பானேன்? அவனுடைய அன்றாடச் சிறு செலவுகளுக்கும் கூட அவனுக்கு, மீனாவினால் படியளக்கப்பட்டு வந்தது!

     ஊரில் இருக்கையில் அன்னையிடம் அதிகாரமாகச் செலவுக்குப் பணம் வாங்கினான். மூர்த்தியின் வீட்டிலோ தானே வைத்துக் கொண்டு போதும் போதாமல் செலவழிக்கும் பொறுப்பை ஏற்றுக் கஷ்டப்பட்டான். இங்கோ கையேந்தும் நிலைமைக்கு வந்து விட்டான்! கையேந்துதல் என்றாலும் சாதாரணமாகவா? சுயமரியாதையையும், கௌரவத்தையும் கால்தூசிக்குச் சமமாகத் தட்டி விட்டு அல்லவோ சமையலறை வாசல் படியில் நிற்க வேண்டியிருந்தது? மீனாவின் பாட்டிக்கு எதிரே இருக்கும் பொருள் இன்னதென்று தெளிவாகக் கண் தெரியாது. ஆனால் பாலு மடிப்புக் கலையாத சட்டை போடுவது மட்டும் எப்படியோ தெரிந்து விடும்! “ஏழைக் குடித்தனம், எப்படியோ படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று இருப்புக்குத் தகுந்தாற் போல் காணோமே? மைனர் போல அலங்காரத்தைப் பாரேன்?” என்று அவன் காது கேட்க மீனாவிடம் அவள் சொல்லுவாள்.

     பாலுவிடம் உடைகள் போதுமான அளவுக்குத்தான் உண்டு. அவ்வப்போது சலவைச்சாலையில் கொடுத்து அவன் வெளுத்துக் கொள்ளுவது வழக்கம். இங்கு மாதம் ஒரு முறையே சலவை கொண்டு வரும் வண்ணான் ஒருவன் வாடிக்கையாக இருந்தான். கங்காதரமோ, ரவியோ அவனைப் போல் நான்கு சட்டைகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளுபவர்கள் அல்லவே? வண்ணான் மடிப்புக்கு இருக்கும் மதிப்பைப் போல் தற்காலம் வேறு எதற்கு அதிக மதிப்பு இருக்கிறது? மதிப்பு வேண்டாம் என்று உதறித் தள்ளிவிடும் அளவுக்கு பாலு இன்னும் பக்குவம் அடையவில்லையே? எனவே அவன் ரகசியமாகத் தன் துணிகளை சலவைச்சாலையில் கொடுத்து அவசரமாக வாங்க வேண்டி இருந்தது. இதற்கென்று அவன் தனியாகப் பணம் கேட்க முடியுமா?

     இன்னும் இதைப் போல எத்தனை எத்தனையோ கஷ்டங்கள், ரவிக்கும் அவனுக்கும் இடையே பாராட்டப்படும் எத்தனை எத்தனையோ வித்தியாசங்கள் எல்லாம் அந்த இளம் ரத்தத்தைக் கொதிக்கச் செய்தன. அத்தனை நாட்களாக அவன் அவர்களுடைய குணத்தை அறியாமல் இருக்கவில்லை. எப்போதோ வந்து போயிருந்த அளவிலேயே வேண்டிய மட்டும் உணர்ந்திருந்தான். என்றாலும் அகப்பட்டுக் கொண்டு விட்டானே?

     இவற்றையெல்லாம் அவன் யாரிடம் சொல்லி அழுவான்? கங்காதரம் பெரிய மனிதர், நான்கு பேரின் புகழுக்குப் பாத்திரமானவர், அவன் வீட்டில் இருக்கிறான், கலாசாலைக்குப் போய் வருகிறான், என்பதைத் தான் கவனிக்க முடியுமே தவிர, இந்த அற்ப விஷயங்களை எல்லாம் அவரால் கவனிக்க இயலுமா? இல்லை, அவன் தான் அவருடைய காதிலே போடலாமா?

     ஒரு தரம் ஒரு வழக்கம் என்று ஏற்பட்ட பிறகு தாய்க்கும் தந்தைக்கும் ரகசியமாகக் கடிதம் எழுதிப் பணத்தைத் தன் பெயருக்கு அனுப்பச் சொல்லுவது நன்றாக இருக்குமா? மீனா சும்மா இருப்பாளா? ரங்கநாதம் அந்த ஏழை மருமகனுக்கு வைக்காத மதிப்பை இந்தப் பணக்கார மருமகனுக்கு வைத்திருக்கிறாரே?

     அன்று மாலை அவன் கலாசாலை முடிந்து வீடு திரும்பினான். வீட்டு வாசல் கதவு பூட்டப்பெற்று அவனை வரவேற்றது.

     ‘எங்கே சென்றார்கள்?...’ என்று அயர்ந்தவனாக அவன் நிற்கையிலேயே வாசல் ‘காம்பவுண்டுக்’ கதவைத் தள்ளிக் கொண்டு சுதாவும் வந்தாள்.

     “சரிதான் போ, நான் நிற்பது போதாதா? நீயும் வந்தாயா?” என்று பாலு அவளை வரவேற்றான்.

     “ஏன், அவர்கள் எல்லோரும் எங்கு சென்றார்கள்?”

     “எனக்குத் தெரிந்தால் இங்கு நிற்பேனா, பூட்டைப் பார்த்துக் கொண்டு?”

     “உங்களிடம் சொல்லவேயில்லையா?”

     “உனக்குச் சொல்லி அனுப்புவார்களே?”

     “சொல்லி அனுப்பி இருப்பதால் தான் உங்களைப் பார்க்க இங்கு வந்து நிற்கிறேனாக்கும்!”

     அவளுடைய விழிகளில் குறும்பு தெறித்தது. இதழ்களில் முறுவல் வெடித்தது. அவர்கள் போய்விட்டார்களே என்று சற்று முன் சங்கடப்பட்ட பாலு, இப்போது சந்தோஷப்பட்டான்.

     “வெறுமே நின்றால்?” என்று கேட்டாள் அவள்.

     “பின் என்ன செய்வது? பூட்டை உடைக்கலாமா?” என்று திருப்பிக் கேட்டான் பாலு.

     “ஆனால் நின்று கொண்டிருங்கள்!” என்று கூறிவிட்டு அவள் குழந்தை போல் காம்பவுண்டுக் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே ஓடினாள்.

     ஒரு நொடியில் அடுத்த வீட்டுக்குள் நுழைந்து திரும்பிய அவளுடைய கையில் ஆடிய சாவி வளையம் அவனைப் பரிகசித்தது.

     “எனக்கு இந்த யோசனை எட்டவில்லை. நீ கெட்டிக்காரிதான், சுதா” என்றான் பாலு.

     “முகஸ்துதி ஒன்றும் வேண்டாம், சாவி, பூட்டு, வீடு எல்லாம் பத்திரம், நான் போகிறேன்” என்று வெடுக்கெனக் கூறிய அவள் திரும்பினாள்.

     கதவைத் திறந்து கொண்டே அவன், “இந்தா? அவர்கள் எல்லோரும் எங்கேயாம்? அதைக் கேட்கவில்லையா?” என்று கேட்டான்.

     “ஓ, சொல்ல மறந்தேனே, மாதவபுரத்திலே தாத்தாவுக்கு உடம்பு சரியில்லையாம். சட்புட்டென்று மூட்டை கட்டி அனுப்புவதற்காக எல்லோரும் போயிருக்கிறார்களாம்!”

     “அப்படியானால்?...”

     “அப்படியானால் நான் போகிறேன்!”

     ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அவள் திரும்பினாள்.

     பாலுவுக்கு எங்கிருந்தோ துணிச்சல் வந்து விட்டது.

     “சுதா” என்று அழைத்தான். படபடப்புடன் உள்லே சென்றான்.

     அவனுடைய அறைக் கதவைத் தவிர மீதி எல்லா இடங்களும் பூட்டப்பட்டிருந்தன. பின்புறம் குழாயடி, ஸ்நான அறை என்று செல்ல வேண்டுமானால் கூட வாசல் வழியாக வீட்டைச் சுற்றித்தான் போக வேண்டும்.

     அவர்கள் எப்போது வருவார்களோ? அதுவரையில்...

     மேசை, அலமாரி எங்கேயானும் கடிதம், பணம் ஏதானும் வைக்கப்பட்டிருக்கிறதா என்று குடைந்து பார்த்தான்; ஒன்றும் இல்லை.

     அவசரத்தில் அவர்களுக்கு அவனுடைய நினைவே எழவில்லை போலும்? அவனுக்கு ஒரு கணம் தலை சுழன்றது; அயர்ந்து போய் உட்கார்ந்திருப்பான். ஆனால் வாசல் படியில் அவள் ஒய்யாரமாகச் சாய்ந்து நின்றாளே?

     வெளிச்சம் குபீரென்று பாய்கையில் இருள் இருந்த இடம் தெரியாமல் எப்படி ஓடி விடுகிறது?

     அவளுடைய முக விலாசத்தில் அவனை வாட்ட இருந்த எல்லாப் பிரச்சினைகளும் பறந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய மாதவபுரம் தாத்தாவையும் மற்ற எல்லோரையும் அவனுடைய உள்ளம் வாழ்த்தியது.

     “கூப்பிட்டீர்கள் உள்ளே வந்து அது இது எல்லாவற்றையும் குடைகிறீர்களே? பர்ஸைக் காணோமா? வைத்துவிட்டுப் போனோமா என்று பார்க்கிறீர்களா?” என்று அவள் கேட்டாள்.

     “ஏதானும் இருந்தால்தானே பர்ஸ் பறிபோக? அவர்களாக ஏதானும் வைத்துப் போயிருக்கிறார்களாக்கும் என்று பார்த்தேன். நான் வெறும் வறளி என்பது அவர்களுக்கு நினைவுக்கு வரும் சமயமா அது?...” என்று அசட்டுப் புன்னகை செய்தான் பாலு.

     அவளுடைய முகம் ஒரு கணத்தில் இருண்டது. “அப்புறம்?” என்றாள்.

     “அப்புறம் என்ன? எனக்கு இப்போது பசி, தாகம், கவலை எல்லாம் மறந்து விட்டது. சிரிக்கிறேன்...”

     உள்ளத்தில் இன்பம் பொங்கி வருவதை அவனால் அணையிட முடியவில்லை. அவனுடைய பேச்சின் உட்பொருள் அவளுக்குப் புரியாமலா இருக்கும்?

     முகத்திலே செவ்வொளி ஜிவ்வெனப் படர்ந்தது, வாயடைத்து விட்டது.

     கண்கள் மட்டும் ஒளி வெள்ளத்தை அவன் மீது வீசி அவனைத் திணற அடித்தது. சிரிப்பு ஓய்ந்தது. உணர்ச்சி நெஞ்சை முட்டியது.

     “சுதா...!”

     அந்தக் கள்ளிக்கு இப்போது அவனை நேருக்கு நேர் பார்க்க எங்கிருந்து தான் சங்கோசம் வந்ததோ?

     “நான் பணக்காரனில்லை சுதா, உன்...”

     சொல்ல வந்ததை அவனால் முடிக்க இயலவில்லை. தான் சக்தியற்றவன் என்ற துன்ப நினைவுடன் மோதி மீதி வார்த்தைகள் உருவாகு முன்னே கலைந்து போயின. பிறரிடம் தன்னுடைய இயலாமையைக் காட்டிக் கொள்ளக் கூசும்படியான சுயகௌரவம் வாய்ந்த அவன் எப்படித்தான் அந்தப் பெண்ணிடம் தன் வறுமை நிலையைக் கூறினானோ? தன் இன்பத்திலும் துன்பத்திலும் வறுமையிலும் வாழ்க்கையிலும் பங்கு கொள்ளும் அளவுக்கு அவள் அன்பு கொண்டு விட்டாள் என்று தெளிந்து தான் அவ்விதம் துணிந்து கூறினான் போலும்!

     “நீங்கள் பணக்காரராக இல்லாவிட்டால் நான் மட்டும் என்னவாம்?” என்று அவள் திருப்பி அவனைக் கேட்டாள்.

     “நீயா? கலைமகளும் அலைமகளும் தம் அருள் மழையைப் பொழியப் பெற்ற ஒரு அழகி...” கேலியாகக் கூறிவிட்டு பாலு நகைத்தான்.

     “ஓகோ? இப்படி வெள்ளத்தில் திணறும் மங்கையைக் கண்டால் பழங்காலத்துத் தமிழ் மகனாக இருந்தால் என்ன செய்வானாம் தெரியுமா?”

     முகம் சிவக்க அவனை நிமிர்ந்து பாராமலே அவளும் கேலியாகக் கேட்டாள்.

     “எனக்குத் தெரியாதே, சுதா?”

     “...வெள்ளத்தில் மூழ்கி அவளைக் காப்பாற்றுவானாம்.”

     அவனுக்கு வாழ்தவமாகவே அவள் எதை மனசில் வைத்துக் கொண்டு பேசினாள் என்பது புரியவில்லை.

     “தண்ணீர் வெள்ளமாக இருந்தால் நானும் ஒரு கை பார்ப்பேன். அருள் வெள்ளத்திலே நான் எப்படிக் குதிப்பது?”

     “அருள் வெள்ளமில்லை. புகழ் வெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாமல் தான் பார்த்துக் கொள்ளச் சொன்னேன். என் சித்தப்பா என்னைக் கொண்டு செல்லும் திசை எனக்குப் பிடிக்கவில்லை.”

     “இஷ்டமில்லை என்று சொல்லேன்?”

     “எவ்வளவு சுலபமாகக் கையாலாகாத யோசனை சொல்லித் தருகிறீர்கள்?... சித்தப்பா என் மூலமாகப் பொருளும் புகழும் சேர்க்க ஆசைப்படுகிறார். அவருடைய ஆசைக்காகவே நான் சங்கீதத்தை விருத்தி செய்து, சட்ட திட்டங்களுக்குள் அதைப் புகுத்திப் பணம் சம்பாதிக்க வேண்டும்... நீங்கள் மனம் வைப்பீர்கள், என்னைப் பற்றி விசாரிப்பீர்கள் என்று நானும் கூச்சத்தை விட்டு உங்கள் கண்முன் நடமாடிப் பார்க்கிறேன். பணமில்லாதவர் என்கிறீர்களே? பணம் இல்லாதவரிடம் தான் மனிதத் தன்மை இருப்பதாக எனக்குப் படுகிறது. நான் பார்க்கும் பணக்காரர்களிடம் மனிதத் தன்மையே இல்லையே?...” கேலியில் ஆரம்பமான அந்த உளம் கனிந்த சொற்கள் கண்ணீரில் வந்து நின்றன.

     சாதாரணமாகவே பெண்ணின் கண்ணீருக்கு இளகாத ஆணே கிடையாது. சுதா அழகி; அவனுடைய உள்ளம் கொள்ளை கொண்டவள். கண்ணீரோ உண்மையான உள்ள உருக்கத்தினின்றும் வெளிப்படுவது. கடவுள் அவரவர்க்கு ஏற்ற வகையில் துன்பத்தை எப்படிப் பார்த்துக் கொடுக்கிறார்?

     “சுதா, எனக்கு இப்போது புரிந்து விட்டது. இன்னும் கொஞ்ச காலம், எப்படியோ பொறுத்துக் கொள். அப்புறம் உன்னுடைய இஷ்டம் போல் வானம்பாடியாகப் பாடிக் கொண்டிருக்கலாம். உன் கலையை நீ நிச்சயமாக விற்க வேண்டாம். ஏனென்றால் கொடுப்பதற்கு என்னிடம் காசு கிடையாது!” - அவளும் கண்ணீருக்கிடையே அவனுடன் சேர்ந்து நகைத்தாள். அன்று முழுதும் பாலு பரம்பொருளை கண்டு விட்ட முனியின் நிலையில் இருந்தான் என்றால் மிகையாகாது. பசி, தாகம், பரீட்சை, கவலை, தூக்கம் என்று ஒன்றுமே நினைவு இருக்கவில்லை. நினைவெல்லாம் கனவாகி, கனவெல்லாம் நினைவாகி விட்டது போல் இருந்தது.

     தூய உள்ளங்களின் கலப்பிலே முகிழ்ந்த காதல் வெடித்துப் பரப்பிய இன்ப மணத்தின் மயக்கம் அது.