![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
20 சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்து இறங்குகையிலேயே பாலு, களை குன்றிய முகத்துடன் இளம் நந்தா தன்னை எதிர்நோக்கி நிற்பதைக் கண்டான். அவனும் பாலுவின் ஒளி மங்கிய முகத்தைக் கவனிக்காமலிருந்திருக்க முடியாது. “உன்னிடம் இத்தனை நாட்களாக ஒரு விஷயம் மறைக்கப்பட்டது, பாலு” என்றான் அவன். பாலு புருவங்களைச் சுளித்து அவனை உற்று நோக்கினான். “உன் நலனில் மிகுந்த சிரத்தை கொண்டு நீயறியாமல் ஒருவர் உனக்கு இதுநாள் உதவி வந்திருக்கிறார். அவர் தன்னை யாரென்று அறிவித்துக் கொள்ள இத்தனை நாட்கள் வரை இஷ்டப்படவில்லை...” பாலுவின் உறைந்த நெஞ்சம் மீண்டும் உருகிப் பெருகியது. “உனக்கு ஏற்கெனவே தெரியுமா பாலு? நீ அறிவாயா?...” ‘அவள் சுதாதானே...’ என்று அவன் கேட்க நினைத்தது வெளியே வரவில்லை. வார்த்தைகளை நெஞ்சம் பிடித்துக் கொண்டது. “அவர், உன் சகோதரி ஜானகிதான்...” என்றான் நந்தா. “ஜானகியா?” பாலுவின் விழிகள் குத்திட்டு நின்றன. “உனக்குத் தெரியக்கூடாது என்பது அவருடைய விருப்பம். நீ பலமுறைகள் அறிய முயன்றான். ஸ்தாபனம் இவ்வளவு தனிப்பட்ட முறையில் உன்னிடம் சலுகை காட்டியதை நீ முற்றிலும் நம்பவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். பாலு, நம் ஸ்தாபனத்துக்குப் பெரும் கொடை தந்து உதவியவர், அப்பாவின் அத்தியந்த நண்பர் ஒருவர் உண்டு. அவருடைய சொந்த மருமகள் தான் உன் சகோதரி. ஒரு நாள் உன்னுடைய அநாதரவான நிலையைத் தெரிவித்து அப்பாவை உடனே சற்றுக் கவனிக்கும்படி உன் சகோதரி திடீரென வந்து கேட்டுக் கொண்டதும், அவர் உன்னை யதேச்சையாக மறுநாளே தோணித் துறையில் சந்தித்ததும் கூடி விடவே, நீ எங்களுள் ஒருவனாக ஆனாய்...” பட்டணத்துத் தார் ரோடில் வண்டிச் சக்கரங்கள் உருண்டு உருண்டு பறந்தன. பாலுவின் மனம் அதற்கு முன் பறந்தது. ஜானகி... அவள் அவனைக் கைகொடுத்துக் காப்பாற்றி இருக்கிறாளா? கண் முன் உதாசீனம் செய்வானேன்? பல வாணங்கள் தீட்டப்பெற்ற ஒரே வட்டம் சுழலுகையில் வண்ண பேதங்கள் தெரிகின்றனவா? பாலுவும் அப்படித்தான் சுழன்றான். பல லட்ச ரூபாய்களை விழுங்கி விட்டுப் புதிதாக எழும்பியிருக்கும் நவீன வசதிகள் கொண்டதொரு வைத்தியசாலைக் கட்டிடத்துக்குள் வண்டி நுழைந்தது. நந்தா வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான். பாலுவும் யந்திரம் போல் தொடர்ந்து சென்றான். மாடியறை ஒவ்வொன்றாகக் கடந்து கடைசி அறைக்கு வருகையில் அவர்களுடைய நடை மெதுவாகியது. அது ஒரு விசாலமான அறை. ஜன்னலுக்கு நேராகத் தெரிந்த கட்டிலின் மேலுள்ள படுக்கையில் இளஞ் சூரியனின் கதிர்கள் வந்து விளையாடிக் கொண்டிருந்தன. ஊசி விழும் சப்தம் கேட்கும்படியாக நிசப்தம் நிலவியது அங்கே. ஜானகி அந்தப் படுக்கையில் படுத்திருந்தாள். கிள்ளி எறியப்பட்ட முல்லை மலரின் நினைவு பாலுவின் நெஞ்சில் பதிந்தது. அவளைக் குனிந்து இரு விழிகள் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த டாக்டர் யார்?... பாலு பார்க்கையிலேயே அவன் கண்களிலிருந்து ஒரு சொட்டு நீர் வெள்ளை விரிப்பில் விழுந்தது. அவன் யார்? நந்தா முன்னுக்குச் சென்றான். “ராமு...!” - பாலுவின் மூளையில் பளீரென்று ஒரு நினைவு உராய்ந்து ஒரு மின்பொறியை உதிர்த்தது. அவன் சிலையாக நின்றான். “பாலு!” “அண்ணா!” என்று பரிதாபமாக ஒலித்தது ஜானகியின் குரல். எல்லாவற்றையும் அமுக்கிக் கொண்டு தாயின் குரல் அப்போது அங்கு பாய்ந்து வந்தது. செல்லம் அலையக் குலைய ஓடி வந்தாள். அவள் பின் மூர்த்தியும் வந்தான். தாயுள்ளத்திலிருந்து பொங்கி வந்த துயரம் கண்ணீர் முத்துக்களாக வெடித்துக் கன்னங்களை நனைத்தது. “நான் வேண்டுமென்று தெரிந்து உன்னைக் குழியில் வீழ்த்தினேனடி, கண்ணே. நான் மகாபாவி. ஜானகி அகங்காரி என்று பிறர் குறை கூறினார்கள், தூஷித்தார்கள். எல்லாவற்றையும் மனசுக்குள் வைத்து உருகி விட்டாயேடி, நான் இதைப் பார்க்கவா இங்கு வந்தேன்?...” கனலாகக் கனிந்து அவளை எரித்த வேதனை சொற்களாகப் பீறிட்டுக் கொண்டு வந்தது. “இப்படியெல்லாம் சொல்லாதேயம்மா. எனக்கு இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒருநாளும் குறைவாக நினைக்க வில்லையம்மா...” “எனக்குத் தெரியுமடி தங்கம், பெற்று வளர்த்த நானே குருடானேன், அறிந்து உன்னைத் தள்ளிய பாவி நான். குறையையும் நிறைவாக மிதித்து எனக்கும் புத்தி சொல்லுவாயே? உன் குணம், மனசு எல்லா அருமையையும் அறிந்து... நான் பாவி, உனக்கு அம்மா இல்லை...” “இப்படியெல்லாம் சொல்லாதேயம்மா...” கட்டிலின் தலைமாட்டிலே உட்கார்ந்த தாயின் மடியிலே அவள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். குடம் நிறைந்து விட்டது. ஒலிக்கு ஏது இடம்? அணையும் தருவாயில் இருக்கும் அந்தச் சுடரை நிலைக்க வைக்க ராமு யார் யாரையோ கூட்டி வந்தான். ஏதேதோ முயற்சிகள் செய்தான். ஆனால் எண்ணெய் வறண்டு, திரியும் எரிந்து நுனிக்கு வந்து விட்டது. இனி புது எண்ணெய் ஊற்றி என்ன பயன்? எங்கோ பாரிஸிலோ, வியன்னாவிலோ இன்ப வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் உரியவன் அறியாமலேயே அந்தச் சுடர் முடிவிலே பூப்போலப் பொறியை உதிர்த்து விட்டு அணைந்து விட்டது. சுடர் அவியப் போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அணைந்த பின் தானே இருள் கவிகிறது? கண்ணீர் விட்டேயறியாத நந்தாவுக்கும் கூட கண்களில் நீர் நிறைந்து விட்டது. பாலுவுக்குச் சிந்திக்கும் சக்தி கண்ணீர் எல்லாம் வறண்டு விட்டன. இன்பம், துன்பம் இரண்டும் எல்லை மீறினால் ஒன்று தான் என்பார்கள். எல்லா உணர்ச்சிகளுமே எல்லை மீறிச் சூழ்ந்திருந்தால்? |