![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 1 அக்டோபர் 2025 11:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
8 அன்று பகல் மணி பதினொன்று இருக்கும். வீட்டில் ரங்கநாதம் ஜானகி, சுந்து மூவரும் இருக்கவில்லை. ஊர்ப் பெரிய மனிதர் ஒருவரின் குமாரத்திக்கு அன்று கல்யாணம். அந்தப் பெண் ரங்கநாதத்தினிடம் சேர்ந்தாற் போல நான்கு வருஷங்கள் ‘ட்யூஷன்’ படித்தவள். அவர்கள் வற்புறுத்தி வண்டியும் அனுப்பியிருந்ததால் அவர் குழந்தைகளுடன் சென்றிருந்தார். செல்லம் மட்டும் கூடத்தில் வாசல்படிக்கு நேராக உட்கார்ந்து பலகையில் உளுந்தை வைத்து உருட்டிக் கரம்பைகளைப் பிரித்துக் கொண்டு இருந்தாள். வாசலில் வேட்டி விசிறும் ஓசையும் அடிச் சத்தமும் அவள் கவனத்தைத் தூண்டியிட்டு இழுத்தன. அவள் நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த கண்கள் நிலைத்து விட்டன. அவளுடைய உள்ளம் ஏன் அப்படிச் சுருண்டு சீறி விழும் நீரின் மோதலைப் போல் கொந்தளிக்க வேண்டும்? “வாருங்கள்” என்று அவள் அழைக்கவில்லை. வாசல்படியிலே வந்து நின்ற கங்காதரத்துக்கு அவளுடைய அந்த வரவேற்பு எதிர்பாராததல்லவே? “மாமா இல்லையா?...” அந்தக் குரலில் தான் எத்தனை தயக்கமும், பதைப்பும்! “இல்லை!” வெடுக்கென்று ஒரே சொல்லில் வந்த பதிலுக்குப் பின் தெறித்த கடுமை அவருக்குப் போகலாம் என்பதைக் கூடத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் போகவில்லை. நிலைக்குள் குனிந்து உள்ளே தலையை நீட்டி “எங்கே போயிருக்கிறார்?” என்று விசாரித்தார். “எங்கேயோ கல்யாணம், போனார். எங்கேயோ போகிறோம், பிழைக்கிறோம். என்ன கேள்வி வேண்டி இருக்கிறது?” - உள்ளத்தின் வேகம் சொல்லிலும் வீசியது. அவர் வாசற்படியைத் தாண்டிக் கூடத்துக்குள் வந்தார். ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றார். ஜுரம் கண்டவளைப் போல அவளுக்கு ஏனோ படபடப்பு உண்டாக வேண்டும்? அவள் நேற்றுத்தான் மணமாகி அங்கு வந்திருக்கிறாளா? காரணம் தெரியவில்லை அவளுக்கு. “செல்லம்?” “செல்லம் இல்லை! செல்லம் செத்து விட்டாள்!” “ரொம்ப சரி. ஆனால் என் மேல் நீ இப்படிக் கோபம் கொள்வதனால் என்ன பயன்? நீ இப்படி இருப்பதனால் என் மனம் சந்தோஷமாக இருக்கிறதென்று நீ நினைக்கிறாயா?...” எரியும் தழலில் பச்சை இலை பட்டாலும் வெடிக்கத் தானே செய்யும்? “கோடானுகோடி ஏழைகளில் நானும் ஒருத்தி. பணம் பெற்ற அந்தஸ்துக்காரர்களுக்கு இங்கு என்ன வேலை? சமமில்லாத இந்த வீட்டில் இந்த மனிதர்களுடன் எதற்காக உறவு கொண்டாட வேண்டும்?” “அந்தஸ்து, கௌரவம் என்று என்னை வார்த்தைக்கு வார்த்தை துளைக்காதே செல்லம், என் மீது உனக்கு இரக்கம் இல்லையா? கட்டுப்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் எதிர்த்து வர இயலாத பலவீனன் நான். என்னை இன்னும் ஏன் வதைக்கிறாய்?... குழந்தைகள் கூட இல்லையா?” மனசுக்குள் வெம்பும் வேதனை அவருடைய குரலிலே கீறலிட்டு ஓடியது. “என்னுடைய குழந்தைகள் ஏழைக் குழந்தைகள், பிச்சைக்காரக் குழந்தைகள். இங்கு வந்து நின்று கொண்டு என் வயிற்றெரிச்சலை ஏன் கிளப்ப வேண்டும்?” “ஆத்திரத்தை நீ அடக்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஆத்திரப்படுவதனால் என்ன பயன்? சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் இளம் பிராயத்திலே விதவிதமான கனவுகளைப் பின்னி விடுகின்றன. அதன்படி நாம் நம்மைத் தயாராக்கிக் கொண்டாலும் வாழ்க்கை பெரும்பாலும் நமக்கிணைய அமைவதில்லையே? அதனால் ஏங்கி ஏங்கித் துன்புறுவதிலே என்ன லாபம், செல்லம்? நீ கிடைத்ததை சந்தோஷமாக ஏற்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதுவே என் மனசைப் புண்ணாகக் குடைந்து வருகிறது. இத்தனை வருஷ காலத்தில் நீயும் மாறி உன் நிலையில் பொருந்தி விடுவாய் என்று நானும் எத்தனையோ முறைகளில் எதிர்பார்த்தேன். நீ இன்னும் எரிமலையாகவே இருக்கிறாய். உனக்கும் எனக்கும் வாழ்வு வெவ்வேறு திசைகளில் திரும்பி எப்படியெல்லாமோ மாறிவிட்டன. வெவ்வேறு கடமைகள் இருக்கின்றன. இந்த ஏக்கத்தின் நிழலை அடியோடு அகற்றாமல் கடமையைச் சரிவரச் செய்ய முடியாது. அகற்றாமல் நீ துன்புறுவது குற்றமும் ஆகும்!” “கோழை என்று இத்தனை வருஷங்களுக்குப் பின் ஒத்துக் கொள்ளுபவர், அசட்டுத் துணிச்சலாக அன்று நம்பிக்கையை வளர்க்கலாமா, முற்றாத மனசிலே? வளர்த்து விட்டு ஒடித்து எறிந்தீர்களே?...” குரல் தழுதழுத்தது. முகத்தை மூடிக் கொண்டு சிறு குழந்தை போல அவள் விம்மினாள். இத்தனை வருஷங்களுக்கிடையே அவர்களுக்குள் இத்தகையதொரு சந்திப்பு ஏற்படுவதற்குச் சந்தர்ப்பமோ, சூழ்நிலையோ பொருந்தி இருக்கவில்லை. குமைந்து கொண்டு இருந்த அவள் நிலையும், அதைக் கிளறி விடுபவர் போல அவர் தென்பட்டதும் அவளை அந்தக் காலத்துக்கு, ஏமாற்றத்தின் பசுமை மாறாத நிலைக்குக் கொண்டு சென்றதில் விந்தையில்லையே? “அழாதே செல்லம், நான் மன்னிக்க முடியாத தவறு தான் செய்தேன். உன்னை நேருக்கு நேர் பார்க்கவோ, பேசவோ அதனாலேயே நான் கூசினேன். காலம் எந்த மனப் புண்ணுக்கும் மருந்தில்லையா? ஆத்திரமாகிய மன எழுச்சிக்கு இடம் கொடுக்காதே. அது சிறுகச் சிறுக உன்னைக் கீழே இழுத்துச் செல்லும். மாமாவோ குழந்தைகளோ வந்தால் என்ன நினைப்பார்கள்? அழாதே செல்லம், பாலு படிக்கிறானா மேலே?...” சற்று இளகியிருந்த அவள் நெஞ்சம் இந்தக் கேள்வியில் மீண்டும் கடுமை கொண்டது. “ஆமாம், எந்த விதமேனும் நீங்கள் எனக்கு இரக்கம் காட்டுவீர்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் பணமும் பதவியும் ஏழைமையுடன் என்றும் ஒட்டாது. அவை எண்ணெயும் தண்ணீரும் போல என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லி விட்டீர்கள்...” “அப்படி ஒரேயடியாகக் குற்றம் சாட்டாதே செல்லம், மீனாவின் மனசில் ஏற்கெனவே உன்னைப் பற்றி வெள்ளையான அபிப்பிராயம் இல்லை. அவளுக்கு நான் சாதாரணமாக ஏதானும் உதவினால் கூடச் சந்தேகமாகத் தோன்றுகிறது. விஷ வார்த்தைகளை வீசுகிறாள். அவளுடைய எதிர்ப்புக்கிடமாக பாலுவை உடன் வைத்துக் கொண்டால் அவள் என்னவெல்லாம் பேசுவாளோ? அது எனக்கு மட்டுமா இழுக்கு? நீ அப்போதிருந்த நிலையில் உள்ள சிறு பெண்ணா, செல்லம்? வெற்று உள்ளத்துடன் பேசு, பழகு. நீ அபலை. கணவனாலும் போதுமான அளவு தாங்கக்கூடிய சக்தி கிடையாது என்று எனக்குத் தெரியும். என்னை அத்தனை கேவலமானவனாக நினைக்காதே செல்லம்...” இத்தனை சொற்களும் அவளுக்கு ஆறுதல் அளிப்பதாக இல்லை. “இந்த விளக்கமெல்லாம் எனக்கு எதற்கு? ஒரே வார்த்தையில் தான் நான் அப்போதே சொல்லி விட்டேனே? நாங்கள் கீழானவர்கள், நீங்கள் உயர இருப்பவர்கள். தெரியாமல் வந்தேன், வெட்கம் கெட்டு உதவி கேட்டேன். அவமானப்பட்டுத் திரும்பினேன். இவ்வளவுதானே?” படபடப்பாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அவள் அங்கு நிற்காமலேயே பின் கட்டுக்குள் மறைந்து விட்டாள். கங்காதரம் திகைத்தார்; தயங்கினார். இரண்டொரு நிமிஷங்களில், “நான்... வரட்டுமா? ரேடியோ கச்சேரிக்காக வந்தேன். மாமா வந்தால் சொல்லு...” என்ற குரல் அவளைத் தேடி வந்தது. அடுத்த கணத்தில் அவருடைய அடிச் சத்தம் மெல்லச் சென்றது; சென்று மறைந்து விட்டது. கங்காதரம் போய்விட்டார். மழை பெய்த பிறகுதானே ஆற்று வெள்ளம் பெருகி வருகிறது? ‘மீனா அவதூறு சொல்லுவாளாம்! என்ன சாதுரியம், என்ன உருக்கம்? இவரை யார் இங்கே வரச் சொன்னார்கள்?... என் குழந்தை, என் குழந்தை எப்படியோ படித்து முன்னுக்கு வருவான்’ என்று கனலும் கண்ணீரும் ஒருங்கே திரண்டு வந்தன. அவள் பல்லைக் கடித்துக் கொண்டாள். கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் கூடை உளுந்தைக் கொட்டிக் கொண்டு கீழே உட்கார்ந்தாள். வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. செல்லம் எட்டிப் பார்க்கு முன் கல்யாண வீட்டின் சந்தணமும் தாம்பூலமும் மணக்க ஜானகியும் சுந்துவும் குதித்துக் கொண்டு வந்தார்கள். பின்னால் இறங்கிய ரங்கநாதம் திண்ணையிலேயே துண்டை விரித்துக் கொண்டு உட்கார்ந்தார். “நீ ஏன் வரவில்லை என்று மரகதம்மா ரொம்பவும் கோபித்துக் கொண்டார்கள், அம்மா. கல்யாணம் எத்தனை பெரிசு தெரியுமா? பந்தலே கோவில் வாசல் வரையிலும் போட்டிருக்கிறார்கள். பாவம், பங்கஜத்தைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை, அப்படி நகையால் மூடி வைத்திருக்கிறார்கள்!” என்று நகைத்த ஜானகி சட்டென்று நினைவுக்கு வந்தவளாக, “மாப்பிள்ளை ஒரு சிடுமூஞ்சி போலிருக்கிறது அம்மா, சிரிப்பையே காணோம், முறைப்பாக இருக்கிறார்!” என்று கூறிவிட்டுக் கலகலவென்று மீண்டும் நகைத்தாள். சிரிக்கும் மகளைக் கண்டு வெம்பி வாடிய தாயுள்ளம் பெருமூச்செறிந்தது. ‘அந்த மாப்பிள்ளை நெட்டை, இந்த மாப்பிள்ளை குட்டை, இவன் முகத்தில் சிரிப்பில்லை என்று ஊரில் நடக்கும் கல்யாணப் பையன்களுக்கெல்லாம் அனுபவம் வாய்ந்த கிழவியைப் போல அபிப்பிராயம் கொடுக்கிறாளே, இந்தப் பெண்ணுக்குக் குறையொன்றுமில்லாத மணாளனைத் தேடி எப்போது அவன் கையில் ஒப்படைக்கப் போகிறோம்? அதை நினைக்காமலிருப்பாளா, குழந்தை?’ ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்த ஜானகி அதன் மேலிருந்த தலைக்கு வைத்துப் படுக்கும் கட்டை மணையை அகற்றினாள். “அம்மா? ஏதம்மா பணம்?” செல்லம் விரிந்த விழிகள் அசைவறப் பார்த்தாள். புதிய ரூபாய் நோட்டுகள்... ஆம், அவர் தான் வைத்து விட்டுப் போயிருக்க வேண்டும்! யாரேனும் பணம் கேட்டார்களா? இதை எதற்காக வைத்து விட்டுப் போக வேண்டும்? ‘ஏன்? நீதான் ஏழை, ஏழை என்றாயே? அதுதான் வைத்திருக்கிறார்!’ மனசில் கேலிச் சிரிப்பின் குரல் ஒலித்தது. அதே சமயம் அவளுடைய உள்ளத்தீ அந்த நோட்டுக்களை சுட்டெரித்து விட வேண்டும் போல் துடித்தது. பணம்... பணம்! அவளுக்குத் தேவைதான். அவளுடைய அப்போதைய தேவைக்கு அந்த ஐம்பது ரூபாய்களைப் போல எத்தனை ஐம்பது ரூபாய்கள் இருந்தாலும் வேண்டியதுதான். அப்படியிருக்க அவளுக்கு அத்தனை வெறுப்பு ஏன்? தாய் திகைத்து நிற்பதைக் கண்டு, “ஏம்மா? உனக்கே தெரியவில்லையா? எப்படியம்மா வந்து குதித்தது?...” என்று ஜானகி வியந்து கேட்டாள். செல்லம் பதிலே கூறாமல் பணத்தை அவள் கையிலிருந்து வாங்கினாள். விடுவிடென்று உள்ளே சென்றாள். எரித்து விட வேண்டும் என்று எழுந்த ஆக்ரோஷத்தை மகனின் மீதிருந்த பாசத்தின் வேகம் அமுக்கி விட்டது. பணம் அவனுக்கு உபயோகப்படும். ஜானகிக்கு இன்னொரு தரம் பணம் ஏது என்று கேட்கப் பயமாக இருந்தது. அவள் கேட்க வாயசைக்கும் போதே செல்லத்தின் முகத்தில் அத்தனை கடுமையைக் கண்டாள். ‘ஏது பணம்? அம்மாவின் முகம் ஏன் இப்படி மாற வேண்டும்? யாரேனும் வந்தார்களா?’ என்றெல்லாம் ஜானகியின் பேதை மனம் குழம்பியது. |