9

     சுகமும் துக்கமும் வாழ்க்கையில் மாறிமாறி வரும் இரவும் பகலும் போன்றவை என்கிறார்களே, அது எத்தனை உண்மையானது? கையிலிருந்த பற்றாத் தொகையை நிரப்பக் காலணாவும் கடன் வாங்கத் துணிவோ, சம்பாதிக்கும் ஆற்றலோ இன்றி பாலு திண்டாடும் நிலையில் இருக்கையில் அவனுடைய கருத்தை அசைக்கும் கன்னி விழிகள் குறுக்கிட வேண்டுமா?

     எந்த விதத்தில் குழந்தைக்கு மருந்து வாங்கிப் போகலாம் என்று நிர்ப்பந்தத்திலும் வேதனையிலும் சுழன்ற அவனுக்கு அன்று கலாசாலைப் பக்கம் செல்லவே கால்கள் மறுத்தன. எங்கெங் கெல்லாமோ சுற்றினான். யோசனை செய்தான். யாரிடம் என்ன சொல்லி கடன் கேட்பது என்பது அவனுக்குத் தெரியவில்லை. சக மாணவர்கள் எவரிடமும் கடன் கேட்கும் அளவுக்கு அவன் நெருங்கிப் பழகியிருக்கவில்லை. சங்கோசம் வேறு குறுக்கிட்டது.

     விமலாவை எந்த முகம் கொண்டு பார்ப்பது?

     நிலைமையை விவரித்து ஊருக்குக் கட்டாயம் எழுதத் தான் போகிறான். ஆனால் அன்று மாலைக்குள் எப்படிப் பணம் கிடைக்கும்? புத்தகத்தை, சட்டையை விற்கலாம் என்ற அபூர்வ யோசனையைக் கூடச் செயலாற்ற இயலாதபடி அவனிடம் இன்றியமையாத அளவில்தான் இருந்தன. மேலும் அப்படியும் கூடத் தேவையான பணம் கிடைக்காது.

     குழந்தைக்கு ஏதானும் அபாயம் நேர்ந்து விட்டால்?.. அவன் என்ன செய்வான்?

     நடைபாதையில் வெறித்து நோக்கிய வண்ணம் அவன் குறியில்லாமல் நடந்து கொண்டிருந்தான்.

     “ஹலோ, என்னப்பா, பாலு? பார்க்காதது போல் நடக்கிறாயே? இங்கேயா இருக்கிறாய்?” என்று கேட்டு அவன் முதுகில் யாரோ தட்டினார்கள்.

     கனவுலகில் திரும்பிப் பார்ப்பது போல அவன் பார்த்தான்.

     நோயால் நலிந்து நம்பிக்கையைக் கைவிடும் நிலையில் உள்ளவனுக்கு சஞ்சீவி மருந்து கிடைத்தாற் போல இருந்தது அவனுக்கு. மடிப்புக் கலையாத நிஜாரும், ‘லினன்’ புஷ்கோட்டுமாக பௌடர் வாசனை குப்பென்று வீச, ரவிதான் அவன் முதுகை இன்னும் பலமாகத் தட்டினான்.

     “இங்கே தான் இருக்கிறாயாடா? எனக்குத் தெரியவே இல்லையே? நடையைப் பார்த்ததுமே பாலு போல் இருக்கிறதே என்று சந்தேகம் தட்டியது. காலேஜில் சேர்ந்திருக்கிறாயா?...” என்று விசாரித்தான்.

     ‘இவனை விடக் கூடாது, கடவுளாகத்தான் கருணை கூர்ந்து இவனை அனுப்பி இருக்கிறார்’ என்று கடன் கேட்கும் யோசனையில் தாவிவிட்ட பாலு, “நான் இங்கே தான் பி.ஏ. க்குச் சேர்ந்திருக்கிறேன். விமலாவின் வீட்டில் இருக்கிறேன்...” என்றான்.

     அவன் இடி இடி என்று சிரித்தான். கஷ்டம் அறியாத அவனை யூக சக்தி குறைந்த அசடு என்று கூடச் சொல்லலாம்.

     “பி.ஏ.க்கா? ஏம்ப்பா? வேறு துறையில் இடம் கிடைக்கவில்லையா?” என்று அவன் திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டே பாலுவையும் இழுத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தான். சளசளவென்ற அவனுடைய பேச்சிலோ, அவன் வரவழைத்த சிற்றுண்டிகளிலோ பாலுவின் கவனம் கொஞ்சமும் செல்லவில்லை.

     சாப்பிட்டுவிட்டு ‘பில்’ கொடுக்க ரவி பர்ஸைத் திறந்தான். ரூபாய் நோட்டுகளும் சில்லறையுமாகப் பை குலுங்கியது.

     குடல் காயத் தவித்துக் கொண்டிருப்பவன் அறுசுவை உண்டியைக் கண் முன் பார்த்தானேயானால் எப்படித் துள்ளுவான்?

     “ரவி...?” என்றான் பாலு துடிக்கும் நெஞ்சுடன். “நான் இன்று ‘பர்ஸை’ப் பறிகொடுத்து விட்டேனடா...” என்றான் எப்படியோ.

     “அடடா... அதற்குத்தான் அப்போதிலிருந்து அழுது வடிகிறாயாடா? சட்டைப் பையிலேயே பர்ஸை எப்போதும் வைத்துக் கொள்ளக் கூடாது. நான் கையிலேயே தான் வைத்துக் கொள்வேன். எங்கே பஸ்ஸிலா கோட்டை விட்டாய்? இந்த ஊரிலும் கைதேர்ந்த ஆசாமிகள் இருக்கிறார்களடா...” என்று சிரித்தான்.

     பாலு நிசமாகவே அழுதுவிட்டான் என்று சொல்லி விடலாம்.

     “இல்லை ரவி, அக்கா குழந்தை மோஹனுக்கு உடம்பு சரியில்லை, மருந்து வாங்கப் பணம் தந்தாள். அத்துடன் நான் வைத்திருந்த சில்லறை, என் கத்தி, சாவி எல்லாம் போய்விட்டது. மருந்து வாங்கிப் போக வேண்டும். இங்கு மருந்துக் கடையில் வந்து பார்த்தேன், பை காலியாக இருக்கிறது. நாலு மணிக்கு இன்ஜெக்ஷன் கொடுக்க வேண்டும் என்று டாக்டர் வாங்கி வரச் சொன்னார்...”

     “அதற்கென்ன? எவ்வளவு வேண்டும்? ஐந்து ரூபாய் போதுமா? இந்தாடா, அழுது தொலைக்காதே! இதெல்லாம் ஒரு அனுபவமாக்கும்!”

     ரவிக்குத் தன் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட பாலு பணத்தை வாங்கிக் கொண்டான்.

     ஹோட்டல் வாசலில் அப்போது கஜேந்திரபுரம் போகும் பஸ் வந்து நின்றது. “பஸ் கூட வந்து விட்டது, வீட்டுக்கு வாயேன், பாலு? அடுத்த ‘ஸ்டாப்’பில் இறங்கினால் போதும்!” என்று ரவி அவனை அழைத்தான்.

     பாலு அவன் கொடுத்த ரூபாய் நோட்டைக் கையிலிருந்த சிறிய நோட்டுப் புத்தகத்தில் பத்திரமாக வைத்துக் கொண்டு ரவியுடன் பஸ்ஸில் ஏறினான். அந்த நேரத்தில் பஸ்ஸில் கூட்டமிருக்கவில்லை. பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்கெதிரே காலியாக இருந்த வரிசையில் ரவியும் பாலுவும் உட்கார்ந்தவுடன் பஸ் புறப்பட்டது. ரவி அந்தப் பெண்ணைக் கண்டதுமே புன்னகை செய்தான். “அப்பா ஊரிலில்லையே, சுதா? உனக்குத் தெரியாது? வீட்டுக்குத்தானே போகிறாய்?” என்று விசாரித்தான்.

     “இன்று வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தாரே? வரவில்லை?” என்று அவனைத் திருப்பிக் கேட்டாள் அவள்.

     பாலு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ரவி இவ்வளவு சரளமாக விசாரிக்கும் அவள் யாராக இருப்பாள் என்று அவனுடைய உள்ளம் துழாவியது.

     செந்தாழை மடலையொத்த மேனி, கனிவு ததும்பும் கருவிழிகள். சற்றுப் பூசினாற் போன்ற உடற்கட்டு, பச்சைப் பட்டுப் பாவாடையை மறைத்த ரோஜா நிற மெல்லிய ஸில்க் தாவணி, கையிலே இருந்து நோட்டுப் புத்தகம், எல்லாவற்றையும் மாறி மாறி நோக்கிய அவன் அவள் ஒரு பெரிய தனவந்தர் மகளாக இருக்க வேண்டும், அத்தானிடம் சங்கீதம் பயிலுகிறாளோ என்னமோ என்ற முடிவுக்கு வந்தான்.

     அடுத்து பஸ் நின்றதும் அவர்கள் இறங்கினார்கள்.

     சுதா முன்னே நடந்தாள்.

     ‘இவள் யார்?’ என்று ரவியைக் கேட்க பாலுவுக்குத் தோன்றியது. ஆனால் நா எழவில்லை.

     “அப்பாதான் இல்லையே? வேகமாக போவானேன் சுதா?” என்றான் ரவி.

     “அப்படியானால் நான் வீட்டுக்கே வரவேண்டாம் என்கிறீர்களாக்கும்!” என்று திரும்பிப் பார்த்து விட்டு நின்ற அவள் பாலுவைத் தன் அகன்ற விழிகளைச் சுழற்றி ஒரு முறை நோக்கினாள்.

     வாசல் வராந்தாவில் பிரம்பு நாற்காலியில் சாய்ந்த வண்ணம் மீனா சுவாரசியமாக ஒரு கதைப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.

     அவர்களைக் கண்டதுமே எழுந்த அவள் பாலுவை நோக்கித் திடுக்கிட்டவள் போல, “ஏண்டா பாலுவா? இங்கே எங்கே வந்தாய்? வேலையாக இருக்கிறாயா என்ன?” என்று விசாரித்தாள்.

     சுதா அவர்களைத் தாண்டி கூடத்து வாசல்படிக்கு அருகில் நின்று அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்.

     மீனாவுக்கு பாலுவாகப் பதில் கூறுமுன் ரவி முந்திக் கொண்டான்.

     “இங்கே பி.ஏ.க்குச் சேர்ந்திருக்கிறானாம் அம்மா! விமலா வீட்டில் இருக்கிறானாம். பார், இன்று பர்ஸைக் கோட்டை விட்டிருக்கிறான் பஸ்ஸிலே!” என்று தெரிவித்து விட்டுப் பெரிதாகச் சிரித்தான்.

     பாலு நாக்கைக் கடித்துக் கொண்டான். மீனாவிடம் அவன் அந்த விஷயத்தைச் சொல்லாமலிருக்க வேண்டுமே?

     நல்லவேளை, மீனா அதிக நேரம் அவனுடன் பேச நிற்கவில்லை.

     “மாமா இன்னும் வரவில்லையே சுதா?” என்று கூறிக் கொண்டு உள்ளே போய் விட்டாள்.

     அப்புறம் ரவியின் தொணதொணப்பிலிருந்து விடுபட்டு வரும் வரை பாலுவுக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது. வனஸ்பதி சமையல் புத்தகத்திலிருந்து, ஒரு வாரத்தில் சுருக்கெழுத்து கற்றுக் கொடுக்கும் ஸ்தாபனத்தின் விவரங்களடங்கிய புத்தகம் வரை, பத்திரிகைகளில் பார்க்கும் விளம்பரங்களுக்கெல்லாம் தபால் பில்லைகள் அனுப்பித் தான் சேகரித்திருந்த அத்தனை துண்டுப் பிரசுரங்களையும் விலைப்பட்டியல்களையும் அவன் முன் கொண்டு வந்து பரப்பி விட்டான். அவைகளில் இருந்து ஏதானும் ஒரு அருமையான திட்டம் தன் ‘பிஸினஸ்’ மூளைக்கு எட்டலாம் என்பது அவனுடைய உறுதியான நம்பிக்கை.

     ஒரு வழியாக “மருந்து வாங்கிப் போக வேண்டும், நான் இன்னொரு நாள் வருகிறேன், ரவி” என்று பாலு விடை பெற்றுக் கொண்டு எழுந்தான். தயங்கி நின்ற அவனிடம் உள்ளிருந்தபடியே மீனா, “வருகிறாயாடா பாலு? வந்து போய்க் கொண்டிரு. விமலாவையும் வரச்சொல்லு” என்று விடை கொடுத்தாள்.

     அந்தத் தெரு முனை தான் பஸ் நிற்குமிடம்.

     ‘பஸ்ஸிலேயே போய் இறங்கி விடலாம். அங்கேயே மருந்துக் கடையும் கூட இருக்கிறது. நல்லவேளை, கடவுள் கருணை வள்ளல்தான்!’ என்ற உள்ள நிறைவுடன் அவன் தெருமுனைக்கு வந்து நின்றான்.

     சற்றைக்கெல்லாம் அவன் திரும்பிப் பார்க்கையில் அந்த ரோஜாத் தாவணிக்காரியும் கையில் நோட்டுப் புத்தக சகிதம் குறும்பு வெடிக்கும் சிரிப்புடன் அங்கு வந்து கொண்டிருந்தாள். அவளும் பஸ் ஏற வருகிறாள் போலும்! பாலுவின் உள்ளம் குருகுருத்தது. அவன் அவளைப் பார்க்காமல் மறுபுறம் நோக்கி நின்றான்.

     அவள் அவனுக்கு அருகில் வந்து விட்டாள். அவனுக்குத் திரும்பிப் பார்க்கவும் ஆசை இழுத்தது. சங்கோசமும் பின்னே தள்ளியது.

     அவள் கனைத்துக் கொண்டாள்.

     “உங்களுடைய நோட்டுப் புத்தகத்தை அங்கேயே வாசல் மேசையில் வைத்து விட்டீர்கள்... இந்தாருங்கள்!”

     இனிய குரல் அவன் செவிகளில் விழவே அவன் திடுக்கிட்டான்.

     பணம் இருக்கிறதென்று ஞாபகமாகக் கையில் நோட்டுப் புத்தகத்தை எடுத்தல்லவோ வந்திருக்கிறான்?

     மின்னல் வேகத்தில் அவன் கைப்புத்தகத்தைப் பார்த்தான்.

     அட பாவமே? அவன் புத்தி இப்படி எப்படிப் பேதலித்தது?

     ‘உங்கள் தேவைக்கு இன்றே எழுதுங்கள்!’ என்ற முகப்புடன் காணப்பட்ட ஒரு விலை விவரங்கள் அடங்கிய புத்தகம் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தது.

     “அடே? மறந்து இதைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டேனா?... தாங்க்ஸ்” என்று அசட்டுச் சிரிப்புடன் அவன் அவள் கையிலிருந்த தன் நோட்டுப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டான்.

     “நான் மேஜை மீது பார்த்தேன். அப்புறம் ரவியிடம் காட்டிக் கேட்டேன். அவர் நீங்கள் இங்குதானிருப்பீர்கள் என்று சொல்லவே வேகமாக வந்தேன். பர்ஸைப் பறி கொடுத்து விட்டு இதிலும் ரூபாய் நோட்டு வைத்திருக்கிறீர்களே?” என்றாள் அவள் குறுநகையுடன்.

     இதற்குள் அவன் ஏற வேண்டிய பஸ் வந்து விட்டது. கூட்டம் நிறைந்து இருந்த படியால் பாலுவுக்கு நிற்கத்தான் இடம் இருந்தது. வழி முழுவதும் பஸ்ஸில் குலுங்குவதாகவே அவனுக்கு நினைப்பில்லை. காந்திநகரில் வந்து இறங்கி மூலை மருந்துக் கடைக்கு வந்தான். நோட்டுப் புத்தகத்திலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு சட்டைப் பைக்குள் வெறும் காகிதத்தில் மடித்து வைத்திருந்த தன் சொந்தப் பணத்துக்காகக் கையை விட்டான்.

     சற்று முன் கருணை வள்ளலாக இருந்த கடவுளே? உன் கருணை இதுதானா?

     பொய்க்காகக் கைமேல் தண்டனையா?

     அவன் மடித்து வைத்திருந்த நான்கு ஒரு ரூபாய் நோட்டுகளும் விமலா கொடுத்திருந்த டாக்டரின் சீட்டுடன் அந்தர்த்தானமாகி விட்டிருந்தது! பஸ்ஸில் கூட்டத்தில் நெருங்கி நின்றானே?

     அவன் சொன்ன பொய் செய்த வினையோ, அன்றி அந்தக் கன்னி விழிகள் தந்த மயக்கம் செய்த வினையோ?

     மருந்துப் பெட்டியும் கையுமாகத்தான் வீட்டுக்குள் நுழைய வேண்டும் என்று வீட்டை விட்டு இறங்கியவனுக்குக் கடனுடன் காதல் தானா கிடைத்தது? வீட்டின் பக்கம் அண்ட அண்ட நடை தளர்ந்தது. வீட்டின் முன் வந்ததும் அவனுடைய இருண்ட முகம் திகைத்தது.

     கதவு ஏன் பூட்டப்பட்டிருக்கிறது?

     அடுத்த வீட்டுச் சிறுமி அவனைக் கண்டதும் சாவியுடன் ஓடி வந்தாள்.

     “மாமாவும் மாமியும் மோஹனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போயிருக்காங்கோ. சாவி கொடுக்கச் சொன்னாங்கோ!” என்று சாவியை நீட்டினாள்.

     மனப்பளு குறைந்தவனாகப் பாலு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். கைமாற்று கிடைக்காததால் பகல் நேரத்துடன் மூர்த்தி திரும்பி வர, இருவரும் குழந்தையைச் சர்க்கார் வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். டாக்டர் விரும்பிய படி குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் திரும்புகையில் மாலை மணி ஏழடித்து விட்டது.

     விமலா அவனைக் கண்டதுமே தனியாக வந்து, “இப்போது கொஞ்சம் தேவலை, நீ வேறு மருந்தை வாங்கி விட்டாயா பாலு?” என்று கவலையுடன் விசாரித்தாள்.

     பாலு ஒரே நொடியில் சமாளித்துக் கொண்டு விட்டான்.

     “ஆமாம், வாங்கி வந்து படியேறினேன். கதவு பூட்டியிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் விட்டதாக பானு சொன்னாள். கடைக்காரன் பில் போட்டாகி விட்டது, திருப்பி எடுக்கவே மாட்டேன் என்று தகராறு செய்தான். அவனிடம் வாதாடித் திருப்பினேன்” என்று ஒரு அண்டப் புளுகைக் கற்பித்து உண்மையை மறைத்து விட்டான்.

     தலைவாரிக் கொண்டு கண்ணாடியின் முன் நின்ற பாலுவுக்கு அன்று இப்படிப் பொய் சொல்லும் திறமை தனக்கு எப்படி உண்டாயிற்று என்பதை நினைக்கையிலேயே உள்ளூற மகிழ்ச்சி பொங்கியது.