![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 1 அக்டோபர் 2025 11:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
15 பிறக்கும் போதே நல்லவராகவும் பொல்லாதவராகவும் தைரியமுள்ளவராகவும் கோழையாகவும் எவரும் உருப்பெற்று விடுவதில்லை. உரத்துக்கும் விளை நிலத்துக்கும் கவனிப்புக்கும் தக்கபடியே விதை பலன் தருகிறதே ஒழிய முற்றிலும் இயல்பாக எதுவும் அமைந்து விடுவதில்லை. பாலு சுபாவத்தில் மென்மையானவன், தன் மதிப்புள்ளவன் தான். ஆனால் பொல்லாத சந்தர்ப்பம் அவனைத் தன் குணங்களிலிருந்து நழுவச் செய்தது. மாதவபுரம் சென்றவர்கள் அவனுக்கு ஒரு தகவல் கொடுக்கக் கூடாதா? அல்லது எட்டித்தான் பார்க்கக் கூடாதா? அவன் என்ன செய்வான்? காதல் அவனுக்குப் பசியா வரத்தைக் கொடுக்கவில்லையே? ஒரு நாள், இரண்டு நாள் என்று எப்படியோ சொற்பத்தைக் கொண்டு தள்ளினான். கொஞ்சம் பழக்கமாயிருந்த மாணவர் விடுதி மாணவன் ஒருவனிடம் கடன் பெற்று மூன்றாவது தினத்தையும் கழித்தான். அன்று பரீட்சை முடிந்து மாலை வீடு திரும்பி வாசல் கதவு திறந்திருக்காதா என்று ஏங்கிய வண்ணம் வருகையில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. வெறும் பசி வந்தாலே பத்தும் பறந்து போகுமே? அத்துடன் மென்மையான உள்ளமும் நோக நேர்ந்து விட்டால் என்னென்ன எண்ணங்கள் கிளைக்காது? கூடத்து அலமாரியிலும், சமையற் கட்டிலும் மீனா பணம் வைத்திருப்பதுண்டு. பூட்டை உடைத்துப் பார்த்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. இனியும் நாளைத் தள்ள முடியாது என்ற நிலை வரவே, அவனுக்குப் பூட்டை உடைத்துக் கதவைத் திறப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அந்தச் செயலுக்குத் துணிவு கொண்டான். முன் கூடத்தில் சாதாரணமானதொரு பூட்டே போடப்பட்டிருந்தது. அதை அதிக சிரமமின்றியே உடைத்து விட்டான். அலமாரியின் கதவிலும் சிறிய பூட்டொன்று தொங்கியது. ஆனால் சுவற்றில் உள்ள ‘ஸ்டாண்டில்’ புத்தர் சிலைக்குப் பின்னால் அந்த அலமாரிப் பூட்டுக்கு சாவி கிடைத்தது. எனவே அவன் அலமாரியைத் திறந்து அன்ன உருக்கொண்ட மீனாவின் வெள்ளிச் சிமிழையும் எடுத்து விட்டான். பரபரப்புடன் அதன் வயிற்றில் இருந்த மூடியைத் திருகினான். அது கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தது. யாரும் காணாமல் பிறர் பொருளை எடுப்பது முதல் தடவை அல்லவா? அடிமனசில் அச்சம் படபடத்தது. ஆனால் அவன் எத்தனைக் கெத்தனை அவசரப்பட்டானோ, அத்தனைக்கத்தனை அந்தப் பாழாய்ப் போன சிமிழின் மூடி வெகு அழுத்தமாகப் பதிந்து இருந்தது. கீழே வைத்து நெம்பி அவன் அதைத் திறக்க முயலுகையிலேயே வாசலிலே கதவு திறந்து சாத்தப்படும் ஓசை கேட்டு விட்டது. பாலுவுக்குக் குப்பென்று வியர்த்தது. “ஹால் கதவு திறந்திருக்கிறதே?...” - மீனாவின் குரல்தான்! அவன் என்ன, பழக்கப்பட்டவனா? நெஞ்சம் தடுமாற, கைகள் நடுங்க, செயலற்று நின்றான். வாசல் படியில் நின்ற மீனா அவனை எப்படி விழித்துப் பார்த்தாள் என்பதை விவரிக்கத் தேவையில்லை. பொல்லாத சந்தர்ப்பம் தான் அவனைத் திருடனாக்கியதே? கிழவரோ சாகவும் இல்லை, பிழைப்பதாகவும் தோன்றவில்லை, ஊருக்குப் போய் ஒரு நடை பார்த்து வரலாம் என்று கிளம்பி வந்த மீனாவும் அவள் பாட்டியும் அதே சமயத்தில் தானா வந்து நுழைய வேண்டும்? இல்லை, வந்தது கங்காதரமாகவோ, ரவியாகவோ இருந்திருக்கக் கூடாதா? “ஏண்டா பாலு? என்ன காரியமடா இது?” ஏழு உலகங்களும் கிடுகிடுத்து விட்டாற் போல இருந்தது. “இல்லை அக்கா, நாலு நாளாக நீங்களும் போய் விட்டீர்கள், நான் எப்படி ஒன்றுமில்லாமல் இருப்பேன்?...” சமயத்தில் தைரியம் அவனைக் கைவிடவில்லை என்றாலும் அவனுக்கு உயிர் போய்த் திரும்பி வந்தது. “அதற்காக? இதுதானா காரியம்? நாங்கள் எங்கே தீவாந்திரத்துக்கு ஓடி விட்டோமா? இந்த வழக்கம் நன்றாக இருக்கிறதே? அடுத்த வீட்டு சரஸ்வதியிடம் கூடச் சொல்லி விட்டுப் போயிருந்தேனே? நான் இந்த வீட்டிலே இனிமேல் யாரை நம்பி யாரை நம்பாமல் இருக்க? சமயத்தில் வந்தேன் தெரிந்தது. என்னென்ன போயிருக்கிறதோ? யார் கண்டார்கள்? வெளியில் சொன்னால் வெட்கக் கேடு!” முகவுரையைத் துவங்கித் தந்த பின் நீட்டிக் கொண்டு போவதற்கு அவளைத் தொடர்ந்து வந்த பாட்டிக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்? வீட்டில் எப்போதோ காணாமல் போன பொருள்களுக்கும், அவனுடைய ஆடம்பரமான நடை உடை இவற்றுக்கும் முடிபோட்டுக் கற்பனை மெருகிட்டு அவள் நீட்டிக் கொண்டே போனாள்! பாலு சிறுத்துச் சுருங்கிக் கடுகிலும் கடுகாகி விட்டான். ஆனாலும் துடித்த ரத்தம் இளமை வேகத்துடன் கொந்தளித்தது. “இதோ பாருங்கள் அக்கா? கண்டபடி பேசாதீர்கள், ஆமாம்! நான் ஏழையானாலும் திருடனல்ல. மானமுள்ளவன். போய் ஐந்து நாட்களாயிற்றே, நான் என்ன செய்வேன் என்று நினைத்தீர்கள்? உங்கள் காலடியில் வந்து தினம் இரண்டணாக் கொடு என்று கேட்டு வாங்கிப் போகிறவன் தானே நான்? என்ன செய்வேன் என்று நினைத்தீர்கள்? உங்கள் தூசி ஒன்று கூட எனக்கு வேண்டாம்!” என்று உதறி விட்டு அவன் கடுகடுப்புடன் வெளியே வந்து விட்டான். கலாசாலை மூட இன்னும் நான்கு நாட்களே இருந்தன. இத்தனை நாட்களாக அவன் மானத்தையும் கௌரவத்தையும் எண்ணிக் கூசியிருந்தான். இப்போது எல்லாம் பறந்து விட்டது. ஏளனமோ கேலியோ எதையும் பொருட்படுத்தாமல் முன்பு கடன் வாங்கியிருந்த ஹாஸ்டல் மாணவனிடமே நிலமையை விவரமாகக் கூறி இன்னும் கொஞ்சம் உதவியையும் யாசித்தான். செல்லத்துக்கு, “உடனே தந்தி மூலம் பணம் அனுப்புக” என்ற கடிதம் ஆத்திரத்தையும் சுமந்து கொண்டு பறந்தது. ஒரு வருஷத்துப் படிப்பை முடித்துக் கொண்டவனாகப் பாலு பெற்றோரிடம் வந்து சேர்ந்தான். அவனிடமிருந்து விலாசம் மாறி அவசரமாகப் பணம் கேட்டுக் கடிதம் வந்த போதே செல்லம் நிலைமையை ஒருவாறு ஊகித்து விட்டாள். அவன் மனம் நோக அவர்கள் நடந்திருப்பார்கள் என்பது அவளுக்கு அறிய முடியாததல்லவே? ஆனால் ரங்கநாதம் தம் மகன் மீது தான் விவரமறியாமல் குற்றத்தைச் சுமத்தினார். “நான் சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே செல்லம், பாலுவுக்குப் பொறுமையே போதாது. ஏதானும் ஏறத்தாழ இருந்தால் உடனே புஸ்ஸென்று பொங்கி விடுவான்!” என்றார். உர்ரென்ற முகத்துடன் பெட்டியும் கையுமாக உள்ளே நுழைந்த மகனை, செல்லம், “வந்தாயா பாலு? உடம்பு ஒரேயடியாய் இப்படி எப்படியடா இளைத்தது?” என்று உருகிய வண்ணம் வரவேற்றாள். “உடம்புக்கென்ன உடம்புக்கு!” என்று கடுகடுப்புடன் பெட்டியை ‘டொக்’கென்று கீழே வைத்தான் குமாரன். “காலேஜ் நேற்றுத்தானே மூடினார்கள்?” என்று ரங்கநாதம் விசாரித்தார். “ஆமாம். காலேஜாம், காலேஜ்! கையிலே காசில்லாதவனுக்கு என்ன படிப்பு வேண்டியிருக்கிறது? நான் படிக்கப் போனதே தப்பு, முழு முட்டாள்தனம்!” தாயையும் தந்தையையும் கண்டவுடன் அவனுக்குத் தன்னுடைய ஏமாற்றங்களுக்கும் வருத்தங்களுக்கும் இவர்கள் தானே காரணகர்த்தர்கள் என்ற மாதிரியில் அவனுடைய கசப்பு கோபமாகக் கனிந்து ஜ்வலித்தது. ரங்கநாதம் அவனுடைய உள்ளக் கொதிப்பை உணரவில்லை. தான் நினைத்ததை அநுபவமாகக் கண்டபின் கூறுகிறான் என்று நினைத்தவராக, “நான் அப்போதே அதுதான் அபிப்பிராயப் பட்டேன். எனக்கு நிச்சயமாக இஷ்டமில்லை. நமக்கு இவ்வளவுதான் செய்யச் சக்தி உண்டு என்பது எனக்குத் தெரியாதா? சக்தியைத் தெரிந்து கொள்ளாமல் வெறும் ஆசையின் தூண்டுதலால் ஒரு காரியத்தில் இறங்குவது எப்போதும் முட்டாள்தனம்தான். நான் அப்போதே சொன்னேன். உன் அம்மாவும் கேட்கவில்லை. நீயும் காதில் போட்டுக் கொள்ளவில்லை...” என்றார் சம்பந்தமே இல்லாதவர் போல். ஏற்கெனவே மனம் வெறுத்துப் பேசும் பையனுக்கு நம்பிக்கையை ஊட்டாமல் அவர் விலகியவர் போல் விமர்சனம் செய்ததைக் கேட்ட செல்லத்துக்குக் கோபம் வந்தது. கணவன் மகனை விட மதிப்புக்குரியவன் என்பதை மறந்தாள். “போதும், வந்த குழந்தையிடம் நீங்கள் பேசும் லட்சணம்! என்ன முட்டாள்தனமாம் இப்போது? குடி முழுகி விட்டதா? அவர் கிடக்கிறார், நீ வாடா, பாலு” என்று அவள் பரிவுடன் அழைத்த போது சீறிய சர்ப்பம் அவள் பக்கம் பாய்ந்தது. ‘அப்பா ஒன்றும் தெரியாதவர், யார் திருப்பினாலும் திருப்பிக் கொடுக்கும் மெழுகு பொம்மை போன்றவர், அவரைத் தன் இஷ்டப்படி ஆட்டி வைப்பது இவள் தான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் தலையை விட்டு எல்லாக் காரியங்களையும் குழப்புவாள்’ என்றெல்லாம் அந்த முற்றாத மனசில் அன்று படிந்திருந்த எண்ணங்கள் தளதளத்து உஷ்ணத்துடன் கிளம்பின. “உன்னை யாரம்மா குறுக்கே விழச் சொல்லுகிறார்கள்? உன்னிடம் வந்து நான் கேட்கவில்லையே? உன்னால் தான் இத்தனை தூரமும் வந்தது. அப்பா எது பேசினாலும் வெட்டி வெட்டி உருப்படாமல் அடித்தாய்!” ஆ...! “ஏண்டா பாலு? நீயாடா இப்படிச் சொல்லுகிறாய்? நானா உருப்படாமல் அடித்தேன்?” “ஆமாம், உன்னாலேயேதான். போன வருஷம் மாதவபுரத்தில் நீ எத்தனை சாகசம் செய்தா? அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, அவள் பேச்சுக்குப் பேச்சு தூற்றுகிறாள். உன்னால் எங்களுக்கு மானம் போகிறது! அடக்கமாக நீ என்றைக்கு இருந்தாய்? என்னிடம் ஒன்று சொல்லுவது; அப்பாவிடம் ஒன்று சொல்லுவது, மூன்றாமவரிடம் வேறு விதமாகப் பேசுவது. விமலா வீட்டுக்கு என்னை அனுப்பினாயே, நிசமாகச் சொல், அவள் என்னைப் படிக்க வைத்துக் கொள்கிறேன் என்றா சொன்னாள்? மேலுக்கு என்ன ஜம்பம் வேண்டியிருக்கிறது?” தாயின் உள்ளம் அதிர்ந்தது. கண்ணீர் மாலை மாலையாக வடிந்தது. மகன் வருவான், வருவான் என்று ஆசையுடன் காத்திருந்ததற்குக் கிடைத்த அன்புச் சொற்களா இவை? அவன் அப்படி இருப்பான், இப்படி இருப்பான் என்ற கற்பனைகளை எழுப்பு அவனுடைய நலனுக்காகவே தன் ஒவ்வொரு அணுவையும் தியாகம் செய்யக் காத்திருக்கும் தாய்க்குக் கிடைக்கும் பிரதி பலனா இந்த வார்த்தைகள்? “அழுது அழுதுதானே குடும்பத்தை அதோகதியாகச் செய்தாய்? இன்னும் என்ன அழுகை? பெண்ணுக்கு வேறு கல்யாணம் செய்திருக்கிறாயே, அதில் வேறு என்னென்ன குழப்பிக் குட்டிச் சுவராக ஆக்கியிருக்கிறாயோ? பணம் தானே உனக்குப் பிரதானம்?...” சண்டமாருதம் வீசியது. ரங்கநாதம் கற்சிலையாக அமர்ந்திருந்தார். “விமலா அப்படிச் சொன்னாள் என்று அவரை நம்பும்படி குழையடித்து, என்னை அங்கு கொண்டு ஒட்ட வைத்து, பாவம், அவர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அங்கு தவித்தார்! வேண்டுமென்றே அவர் மாற்றலுக்கு முயன்றாரோ என்று கூடத் தோன்றுகிறது. சொல்லுவதெல்லாம் பொய்?...” “நான் ஒன்றும் அப்படியெல்லாம் பொய் கூறவில்லை. அப்படி இருந்தாலும் உனக்காகத்தானேடா நான் சொன்னேன்?” என்று விம்மினாள் தாய். “ஓகோ? இப்படித் திருப்பிக் கொள்கிறாயாக்கும்? பொய் சொன்னேனெறு ஒப்புக் கொள்கிறாயா? உனக்கு மானம் போகவில்லை? உபசாரமாக அவர் மேலே படிக்க வையுங்கள் என்று சொன்னார். அவ்வளவு தானே? நீ இந்த ஜாலவேலையெல்லாம் ஏன் செய்தாய்? இப்போது இன்னும் ஒரு வருஷத்துக்கு என்ன செய்யப் போகிறாயாம்? கொஞ்சக் கஷ்டமா? ஏளனங்களா?...” அழுகையை மீறிக் கொண்டு ஆவேசத்துடன் செல்லம் பதில் கொடுத்தாள், “நடுவில் நிறுத்துவேனா? வீட்டை விற்றானும் உன்னை முழுப்படிப்பும் படிக்க வைப்பேன்!” “கிழித்தாய்!” என்றான் ஏளனமாக பாலு. தலைக்கு மேல் வளர்ந்த மகன் வெறுப்புடனும் ஆத்திரத்துடனும் தன்னை மீறி எகிறிப் பேசுவதை வேடிக்கை போல் ரங்கநாதம் இப்போதும் வாய்மூடி மௌனியாகவே பார்த்துக் கொண்டிருந்தார். நாட்கள் மலர்ந்தன; பெருமூச்சு விட்டுக் கொண்டு தேய்ந்தன; உற்சாகமின்றி உதிர்ந்தன. செல்லத்துக்கு மைந்தன் நீறு பூத்த நெருப்பு ஆகிவிட்டான். அண்டிக் கிளறினால் பொறிகள் பறக்குமோ என்ற பயம் அவளை ஒதுங்கச் செய்தது. ஆனால் தாபம் அவளை அவனிடம் பேச இழுத்தது. அவனைத் திருப்தி செய்ய மனம் துடித்தது. வீட்டைக் கிரயம் பேச ரங்கநாதத்தினிடம் தனிமையில் வற்புறுத்தலானாள். ரங்கநாதம் இம்முறை செல்லத்தின் வற்புறுத்தல்களுக்கு அசையவில்லை. ஆம், பாலுவின் மீறிய போக்கை அவர் வெறுத்தார். அதற்கு ஏற்ற மாதிரியில் அவருக்கு அன்று மீனாவின் அந்தக் கடிதம் கிடைத்தது. மாதவபுரத்தில் கிழவரின் சாவுச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின் சாவகாசமாக பாலுவைப் பற்றிய உண்மைகளை எல்லாம் அவள் நினைத்து எழுதியிருந்தாள். ஒழுங்கற்ற முறையில் அவன் கங்காதரத்தினிடம் சங்கீதம் பயில வரும் சிறு பெண்ணைச் சுற்றிப் பேச முயன்றதிலிருந்து, கையும் களவுமாக அவன் பிடிபட்டது வரை ஒன்றுமில்லாமல் அவருக்குத் தெரிவித்து, குலத்துக்கே ஒரு மாசாக அவன் வளர்ந்திருப்பதையும், அவனை இன்னமும் அடக்கி வழிக்குக் கொண்டு வராவிட்டால் அவருக்கே அவமானம் என்றும் அவள் மனவருத்தத்துடன் தந்தைக்கு எச்சரித்தாள். கடிதம் வந்த சமயத்தில் பாலு வீட்டில் இல்லை. கடிதத்தின் விவரங்களைக் கண்ட மாத்திரத்தில் அது எந்த இடத்திலிருந்து, யாரிடமிருந்து வந்திருக்கிறதென்பதைத் தெளியும் அளவுக்குக் கூட ரங்கநாதத்தின் பொறுமை மிஞ்சியிருக்கவில்லை. ஏற்கனவே அவன் போக்கில் வெறுப்புக் கொண்டிருந்த அவர் பிரளயகால ருத்திரனாகி விட்டார். கோபம் கொள்ளாதவர்கள் கொண்டால் கணப்பொழுதாக இருந்தாலும் உக்கிரம் அதிகமல்லவா? வீட்டு வாசல்படியேறி அவன் உள்ளே வந்ததுமே அவனை நிறுத்தி வைத்து அவர் ஆற்றாமை தாளாமல் இரைந்தார். “வேண்டாம், வேண்டாம்” என்று செல்லம் கண்ணீருடன் தடுத்து ஓலமிட்டதை அவர் பொருட்படுத்தவில்லை. ஏற்கெனவே எரியும் கொள்ளியாக இருந்தது அவன் உள்ளம். இந்த அநியாயப் பழிகளையும் கேட்கையில் இன்னும் பற்றிக் கொள்ளக் கேட்பானேன்? அக்கா தன்னை வைத்துக் கொண்டிருந்த ‘அருமை’யைப் பற்றி ஆத்திரத்துடன் அவன் கொட்டுகையிலே, தந்தை என்ற மரியாதையை மீறும் வகையில் பேசி விட்டான். இருபுறமும் உக்கிரம் ஏறத் தெருக் கூடி விடும் போல இருந்தது. ரங்கநாதம், “சீ! வெளியே இறங்கு, உனக்கும் எனக்கும் விட்டது!” என்று முடிவு கட்டினார். கரடுமுரடான பாதையில் வந்து பாறைகளில் இடைப்படும் போது சிற்றாறு வேகத்துடன் மோதுகிறது. திசை மாற முயலுகிறது. ஒரு நிலை இல்லாமல் தத்தளிக்கிறது. இந்தக் குழப்பத்திலே பெரும் தடங்கலும் எதிர்ப்பட்டு விட்டால் அது ஒரேயடியாகத் தன்போக்கை வாட்டமான வேறு வழியில் திருப்பி விடுகிறது. தந்தையின் கோபத்தீயால் வெருட்டப்பட்ட பாலுவுக்கு ஒரு நோக்கோ, சிந்தனையோ, யோசனையோ ஒன்றும் இருக்கவில்லை; விருட்டென்று வெளியே நடந்தான். கொதிக்கும் உள்ளத்துடன் பாலு நோக்கில்லாமல் நடந்தான். ரயில்வண்டி நிலையத்தின் பக்கம் வந்ததும் அவனுடைய நடை தளர்ந்தது. பழைய நாட்களின் நினைவுகள் உள்ளத்தில் பளிச்சிட்டன. சட்டென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கொட்டை எழுத்து விளம்பரத்தாள் அவன் கவனத்தை இழுத்தது. ‘ஸ்ரீராம நவமி உற்சவ வைபவம். இன்னிசைக் கச்சேரி குமாரி சுநந்தா. புத்தூர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில்...’ இந்த விஷயங்கள் அவன் கருத்திலே வந்து ஒட்டிக் கொண்டன. கச்சேரி, அன்று தான் மாலை ஏழு மணிக்கு ஆரம்பமாகப் போகிறது! கானாறு பெருகி வரும் வேகத்தில் கடுந்தீயானாலும் அவிந்து தானே போகிறது? பாலு அன்று மாலை ஆறரை மணிக்கு ஸ்ரீராம நவமி உற்சவம் நடக்கும் கச்சேரிப் பந்தலை அணுகிக் கொண்டிருந்தான். அப்போது பந்தலில் ஸ்ரீராமனுடைய குணாதிசயங்களை விவரித்து யாரோ ஒருவர் உபந்நியாசம் செய்து கொண்டிருந்தார். பந்தலின் நான்கு புறங்களிலும் பொருத்தப் பட்டிருந்த ஒலிபெருக்கி அந்தக் கிழக்குரலை இடிக் குரலாக மாற்றிப் பரப்பிக் கொண்டிருந்தது. பந்தல் வாசலிலிருந்து வழியில் அரை பர்லாங் தூரத்துக்கு ஸைகிள்களுடன் இளவட்டங்களின் கூட்டம் வரிசையாகக் குழுமியிருந்தது. தூக்கிய காலர்கள், ஸென்ட், பௌடர் இத்யாதி வைபவங்களுக்குப் பஞ்சமே இருக்கவில்லை. குண்டு மல்லிகையும் கதம்பமும் எந்தப் பக்கம் திரும்பினாலும் மணத்தை அள்ளிச் சொரிய, விதம் விதமான சேலைகளுக்கும் ‘சோளி’களுக்கும், நகைகளுக்கும் விளம்பரதாரர்களாகப் பெண்கள் பந்தலின் ஒரு பகுதி முழுவதும் அடைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உபந்நியாசத்தை ரஸித்தார்களா, அல்லது கோஷ்டி கோஷ்டியாகச் சேர்ந்து ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்க வந்திருந்தார்களா என்பதை நிர்ணயித்துச் சொல்ல முடியாது. பாலுவுக்கு சுதா தன்னைக் கவனிக்க வேண்டும் என்று ஆவல். ஆதலால் ‘ஸென்ட்’ வாடை மூக்கைத் துளைக்க ஸில்க் ஜிப்பாவும் சரிகை அங்கவஸ்திரமுமாகக் கையில் வைர மோதிரம் தெரியத் தாளம்போடும் ‘சங்கீத ரஸிகர்’களின் அருவருப்பையும் சிள்ளென்ற சொற்களையும் பாராட்டாமல் அவன் முன் வரிசைக்கு வந்தான். “யாரடா அவன்? முந்திரிக் கொட்டை போல முந்தி முந்திப் போகிறானே?” “அதுதானே கேட்கிறேன்? என்னவோ குமாரி சுநந்தா தன்னைத்தான் பார்க்கப் போகிறாள் என்ற மாதிரியில் அல்லவோ போகிறான்?...” - ஒரு பெருஞ் சிரிப்பு இதைத் தொடர்ந்து வந்து பாலுவின் செவிகளில் மோதியது. அவன் பல்லைக் கடித்துக் கொண்டான். கிழட்டு பாகவதரின் உபந்நியாசத்தைக் கேட்கவா அந்தக் கூட்டம் காத்திருந்தது? அவர் அறிந்துதான் போலும், கூட்டத்தின் பெருக்கத்தையும் ஆரவாரத்தையும் கண்டதும் கடையைக் கட்டிக் கொண்டு போனார். பாலுவின் கண்கள் மேடையின் மீதே லயித்தன. கறுவலான மிருதங்கக்காரர் கழுத்தில் தங்கச் சங்கிலியும் காதில் வைரக் கடுக்கனும் ஒளியிட முதலில் மேடைக்கு வந்தார். ஒட்டி வெட்டப்பட்ட கிராப்புத் தலையுடன் குண்டு போலிருந்த பிடில்காரர், தம்பூரைத் தூக்கிக் கொண்டு ஒரு பையன், இப்படி எல்லோரும் மேடையில் வந்து அமர்ந்து விட்டனர். விளக்குகள் எல்லாம் அமைக்கப்பட்டதும் மின்சார விசை வந்து அவைகள் ஜ்வலிக்கப் போவதை எதிர்பார்ப்பது போல மக்கள் பொறுமையைக் கையில் பிடித்து ஒரு முகமாக மேடையையே நோக்கினார்கள். பளீரென்று ஜோதி உதயமாகி மேடையில் இடம் கொண்டது. சடபுடவென்று கைகள் கொட்டின. பாலுவுக்குச் சங்கீத நுணுக்கம் ஒன்றும் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சுதாவின் கண்டத்திலிருந்து எழும்பிய இனிய நாதம் அவனுடைய நினைவைக் கட்டி ஒரு இன்பமயமான உலகுக்கு இழுத்துச் சென்றது. செயற்கை நிலவைப் பொழியும் பாதரசக் குழாய் விளக்குகள், எப்பக்கம் திரும்பினாலும் நானாவித வாசனைகளுடன் நானாவித நிறங்களிலே மின்னும் பெண்கள் - ஆண்கள், எல்லாமே அவனுடைய பூவுலக நினைவிலிருந்து பெயர்ந்துவிட்டன. ஒரு சமயம் அந்த நாதம் அலையலையாகச் சுருண்டு பொங்கி ஆர்ப்பரித்து அவனுடைய தாப இதயத்தைக் குளிர வைப்பது போலிருந்தது. இன்னொரு சமயம் அவனை ஜிவ்வென்று எழுப்பி வான வீதியிலே தாரகைகளுக்கு நடுவே கொண்டு விட்டது போலிருந்தது. மற்றோர் போழ்தில் மலர்க் குவியலிலே தாலாட்டியது போலிருந்தது. நேரம் சென்றது அவனுக்கு நினைவில்லை. எதிரே சுதா மட்டும் இருந்தாள். அவன் அந்தத் தனி உலகில் மிதந்தான். பாட்டு நின்றது. அதன் நாடியான தம்பூரின் சுருதியும் நின்றது. பாலு கண்களை அகல விழித்து சுதாவை மது உண்டவன் போல் நோக்கினான். அவளுடைய இதழ்களில் முறுவல் மலர்ந்தது. பின்னிருந்து, ‘இதற்கு ஆசைப்படாதே!’ என்பது போல அவனுடைய முதுகிலே ஒரு குத்து விழுந்தது. முதுகைத் தடவிக் கொண்டு பாலு பின்னே திரும்பினான். “என்னய்யா, முன்னாடித்தான் போய் உட்கார்ந்தீர், கல்லுப் பிள்ளையார் போல் கூப்பிடக் கூப்பிட அசைய மாட்டேங்கிறீரே? இந்தச் சீட்டை மேடையிலே தள்ளுங்க” என்றார் அந்த ‘ரசிக’ ஆசாமி. மேடையின் மீது பிரமுகர் ஒருவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் தலையைத் தட்டித் தட்டிப் பேசிக் கொண்டிருந்தார். பாலு சீட்டைத் திருப்பிப் பார்த்தான். ‘ஆசை கொண்டேன் கிளியே’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. பாலுவுக்கு உடல் துடித்தது. உதடுகள் துடித்தன. மேடை மீதிருந்த சுதா அவன் நிலைத்த விழிகளுடன் பார்ப்பதை யறிந்து தன் கொவ்வைச் செவ்விதழ்களை அகற்றி மென் நகை செய்தாள். பிரமுகம் இன்னும் சிரமப்பட்டுப் பேச முயன்று கொண்டிருந்தார். “குமாரி ஜம்முனுதான் இருக்கிறாள். அடிக்கடி இந்தப் பக்கம் பார்த்து சிரிக்கிறாள், இல்லை பிரதர்?...” “பாட்டு மட்டும்தான் பிரமாதம்னு நினைச்சேன், ஆளும் பிரமாதம் தான்!” கொல்லென்ற சிரிப்பு. “இவன் கண்றாவிப் பிரசங்கத்தை யார் கேட்டாங்க? ஆமாம், இந்தக் குமாரி வந்து...” “அதோ கருணைக் கிழங்கு போல உட்கார்ந்திருக்கிறாரே வலப்பக்கம் மேடையிலே? அவர் மகள் தானாம்...” “அட? அவன் மகளா? அமாவாசையும் பௌர்ணமையும் போல இருக்கிறாங்களே?...” “வளர்ப்பு மகள் பிரதர், வளர்ப்பு மகள்!” “ஏய்யா, அதோ அவர்கிட்டக் கொடுத்தேன், சீட்டை முன்னுக்குக் கொடுக்கச் சொல்லுங்க!” பாலுவின் முதுகில் இன்னொரு தரம் விரல்கள் சுண்டின. ‘ஆசை கொண்டேன் கிளியே...!’ அது என்ன பாட்டின் தலைப்பா? அப்படி ஒரு பாட்டு இருக்கிறதா? அல்லது மிட்டாய் உருவம் கொண்டு தோற்றும் நஞ்சைப் போல் கலைப் போர்வையைப் போர்த்துக் கொண்டு வரும் கயவர்களின் கூற்றா? பாட்டின் உருவத்தில் நேர்மையற்ற நெஞ்சின் தன்மையை எடுத்துச் சொல்கிறார்களா? பாலு கையிலிருந்த துண்டுக் காகிதத்தைக் கசக்கினான். இந்த ரசிகர் குழாத்தை மகிழ்விக்கவா அவள் அங்கு பாடுகிறாள்? உண்மையில் அங்கு சங்கீதத்தை அறிந்து ரசிக்கும் மகாஜனங்கள் மட்டுமா வந்திருக்கின்றனர்? சுதாவை, தனக்கு மட்டும் சொந்தமாக அவன் நினைக்கும் சுதாவை அந்தக் கழுகுகளிடமிருந்து மீட்டு அவர்களுடைய கண்பார்வைக் கொட்டாமல் எங்கோ தூக்கிக் கொண்டு போய்விட வேண்டும் போல் அவனுடைய நெஞ்சம் துடித்தது. பாலு எழுந்து வேகமாக வெளியே சென்றான். |