6

     சாதாரணமாகப் பதினெட்டு வயதிலேதான் ஆண் விளையாட்டுப் பருவம் மாறி உலகத்துள் வருகிறான். உலக அனுபவத்தில் புரண்டு அவனுடைய இளமை வேகம் ஒரு நிலைக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கின்றன. ஆனால் பெண், அதே பிராயத்தில் இன்பம், துன்பம் இரண்டையும் அளவு மீறிக் காட்டாமல் அடக்கிக் கொண்டு குடும்பத் தேரை இழுத்துச் செல்லும் பொறுப்பை அடையத் தகுதி பெற்று விடுகிறாள். அதிலும் அதிகம் வசதிகளில்லாத குடும்பங்களிலே நெருக்கமாக வளரும் பெண் குழந்தைகள் இயல்பாகவே நுண்ணிய அறிவும் நிதான புத்தியும் உடையவராக இருந்து விட்டால் தங்கள் குடும்பங்களின் உண்மை நிலையை வெகு சீக்கிரம் உணர்ந்து விடுகிறார்கள்.

     இப்படிக் குடும்பத்தில் ஒவ்வொருவர் நிலையையும் அணு அணுவாக ஆராய்ந்து தன் பிராயத்துக்கு மீறிய பொறுப்பையும் புத்தியையும் அடைந்த பெண் ஜானகி. பாலுவை விட அவள் இரண்டாண்டுகள் இளையவள் தான். எல்லோரையும் போல அவளுக்கும் இளமையில் எழும் ஆசைகள் இல்லையா? ஊருக்குப் போக வேண்டும், அக்கா அத்தான் எல்லோருடனும் சந்தோஷமாகச் சில நாட்கள் கழிக்க வேண்டும் என்று அவளுடைய உள்ளத்திலும் ஆவல் இல்லையா? இருக்கத்தான் இருந்தது.

     ஆனால், தாயும் தந்தையும் எவ்வளவுக் கெவ்வளவு செலவைக் குறைக்க முயன்றார்கள் என்பதை அவள் அறிவாள். மேலும் எந்த நோக்கத்துடன் அவர்கள் தாத்தாவின் எண்பதாம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லுகிறார்கள் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். எனவே பெற்றோர் வற்புறுத்தாமலே அவள் ஊரில் தங்கி விட்டாள்.

     பொறுப்பை உணர்ந்து தன்னுடைய ஆசைகளை அடக்கிக் கொண்டு பிறருக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை அவளுடனேயே பிறந்ததோ என்னவோ?

     அன்று பிற்பகல் ஒரு மணி இருக்கும். அவர்களுடைய வீட்டின் கொல்லைப்புறம் ஓடும் கால்வாயில் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு ஜானகி துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்திலே வாய்க்கால் துறையிலே அக்கம்பக்கங்களில் கூட யாரும் இருக்கவில்லை. ஆனி மாதக் கடைசியாதலால் வாய்க்காலில் புதுத் தண்ணீர் இரண்டு தினங்கள் முன்புதான் விடப்பட்டிருந்தது. கரையோரம் செழித்து வளர்ந்திருந்த செவ்வரளிச் செடிகளில் கொத்துக் கொத்தாகப் பூக்கள் மலர்ந்திருந்தன. வாய்க்காலின் ஒருபுற மேடு முழுதும் வெயில் தெரியாமல் குளுகுளுவென்று வைத்திருக்கும் அடர்ந்த தென்னந் தோப்பில் மட்டைகள் ஒன்றோடொன்று காற்றில் உராயும் போது ஏற்படும் ஓசையும், மறுகரையில் மடை வழியாகக் கொடிக்காலுக்கு நீர் பாயும் சலசலவென்ற சத்தமும் அந்தப் பிற்பகல் வேளையில் இனிமையாக ஒலித்தன.

     ஜானகியின் சந்தண நிற மேனியை ஒரு மெல்லிய மில் சிற்றாடை அலங்கரித்தது. நீண்ட அமைதி தவழும் விழிகள்; இன்னும் வளர்ச்சியை முற்றிலும் பெறாத உடற் கட்டு. காதிலே மினுக் மினுக்கென்ற சிறிய ஒற்றைக்கல் சிவப்பு நட்சத்திரத்தைத் தவிர வேறு ஒரு ஆபரணமும் அவளுடைய மேனியில் இருக்கவில்லை. எப்போதும் அவள் துணி துவைக்கும் போது லொடக் லொடக்கென்று மணிக்கட்டில் வந்து விழும் ஒற்றைப் பொன் வளையலும் கூட இப்போது இல்லை. பாலுவுக்கு ஊருக்குப் போகக் கைச் செலவுக்காக அது சிட்டாகப் பறந்து விட்டது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அந்த ஒற்றை வளை அவளுடைய தந்தக் கையில் தேய்ந்து கொண்டிருந்தது. அவளுடைய கை வளர்ந்து உருட்சி பெறப் பெற அந்த வளையலும் தட்டார் உலையிலே காய்ந்து நீண்டு அவளுடைய கையை அலங்கரித்து வந்தது. இனி அவர்களுடைய வீட்டிலே பாங்கிக்கோ, கடைக்கோ போகக் கூடிய பண்டம் ஒன்றுமே கிடையாது - அவளுடைய சிவப்பு நட்சத்திரங்களையும் அம்மாவின் மங்கலச் சின்னங்களாக விளங்கும் அற்பப் பொன்னையும் தவிர! எல்லாம் பாலு படித்து வேலைக்கமரும் வரையில் அந்தந்த இடங்களில் இருக்க வேண்டியதுதான்! அதற்கு நடுவில் எங்கிருந்து பணம் வரப் போகிறது?

     அந்த வளையலைக் கழற்ற அவளுடைய தாய்க்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை. “கல்யாணம் பண்ணும் வயசு, எல்லோரும் நகை செய்து போடுவார்கள், நான் கழற்றுகிறேன், பாவி!” என்று கூறும் போது அவளுக்குக் கண்கள் பசைத்து விட்டன. அதைக் கண்டு ஜானகிக்கும் கண்கள் கலங்கி விட்டன.

     “அசடே, நாளைக்கே அவன் நிறையச் சம்பாதிப்பான். உனக்கு இதற்கு மேல் பத்து மடங்கு நகைகள் வரும். எதற்குக் கண் கலங்குகிறாய்? நான் கழற்றும் வேளை நல்ல வேளையாக இருக்கட்டுமே? கங்கண ப்ராப்தம் வரக் கூடாதா? கிளிபோல் அழகுக்கும் புத்திக்கும் அருமை தெரிந்தவனானால் ஒரு காசு செல்வு வைக்காமல் கல்யாணம் பண்ணிக் கொள்ள வரலாம்...” என்று அவள் நடவாததொரு குருட்டு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்துப் பேசினாள். அது அலைபாயும் அவள் மனசைத் தேற்றிக் கொள்ளும் சமாதானச் சொற்கள் என்பதை ஜானகி எப்படி அறிவாள்?

     அவளுடைய திருமணத்தைக் குறித்துப் பெற்றோர் செய்திருந்த தீர்மானத்தையும் ஜானகி அறிவாள். அது இதுதான்:

     பாலு படித்து ஒரு வேலையில் அமர்ந்து விட்டானானால் உடனே வீட்டை ஈடுகாட்டி மூவாயிரமோ, நாலாயிரமோ கடன் வாங்கி அவளை மணம் செய்து கொடுப்பார்கள். பின் அவனுடைய மாத வரும்படியின் ஒரு பகுதி கடனடைக்கப் போகும்.

     இது நடைமுறையில் சாத்தியமாகுமா? பாலு வேலைக்கமர்ந்ததும் ஏற்கெனவே விழித்துக் கொண்டிருக்கும் கடன்கள் இல்லையா? இன்னும் அவன் படிக்கும் இரண்டாண்டுகளில் வேறு புதியனவாக எத்தனை கடன்கள் முளைக்குமோ? அவன் சம்பாதித்துச் சம்பாதித்து ஆயுள் முழுவதும் கடனடைக்க வேண்டியதுதானா?... பாவம், அவனுக்கு இத்தனை பொறுப்புகள் நம் மீது விழக் காத்திருக்கின்றன என்று தெரியுமா?...

     துணிகளை விரித்து ஓடும் நீரில் திருப்பித் திருப்பி அலசிய வண்ணம் சிந்தித்துக் கொண்டிருந்த அவளுடைய பிறை நுதலில் வியர்வை முத்துக்கள் அரும்பின.

     ‘சரக் சரக்’ என்று எதிர்க்கரையில் கேட்ட செருப்புச் சத்தம் அவளை நிமிர்ந்து பார்க்கச் செய்தது. வேட்டியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு கையில் செருப்பைக் கழற்றி எடுத்துக் கொண்டவராய் கந்தையா மறுகரையில் வாய்க்காலில் இறங்கினார். கந்தையாவுக்கு வயசு அறுபதிருக்கும். போலீஸ் இலாகாவில் அதிகாரியாக உத்தியோகம் வகித்து ஓய்வு பெற்றவர். நல்ல மனிதர். கொஞ்ச நாட்களாகத்தான் அவர் அங்கு வந்து சொந்தமான நிலத்தைச் சாகுபடி செய்வதிலே முனைந்திருக்கிறார். ஒரே ஒரு மகனைத் தவிர அவருக்கு வேறு சுற்றமே இருக்கவில்லை. “இந்த நேரத்தில் தனியாக இங்கு வரலாமா? ஏனம்மா?” என்று அவர் தன் நெற்றிச் சுருக்கங்கள் அகலப் புன்னகை செய்தார், ஜானகியைப் பார்த்ததும்.

     அவளும் பதிலுக்குத் தன் இதழ்கள் மலர, “பிசாசு கிசாசு என்று உங்களுக்குக் கூடவா நம்பிக்கை இருக்கிறது? நீங்கள் எப்படித்தான் போலீஸ் உத்தியோகம் பார்த்தீர்கள் மாமா?” என்று குறும்பாகக் கேட்டாள்.

     அதை ரசித்து அவரும் மனம் விட்டு நகைத்தார்.

     “பிசாசை விட பயங்கரமாக மனிதர்களே இல்லையாம்மா? அதனால் தான் சொன்னேன். மூன்று, நாலு மணிக்கு வந்து துவையேன்?” என்றார் கந்தையா.

     தலையை ஆட்டிச் சிரித்துவிட்டு ஜானகி பிழிந்த துணிகளுடன் கரையேறினாள். வீட்டின் பின்புறக் கதவு தாளிடப்பட்டிருந்தது.

     “அம்மா, அம்மா!” என்று ஜானகி கத்தினாள்; கதவை இடித்தாள், பதிலே வரவில்லை.

     ‘எல்லோருக்குமே காது செவிடாகிப் போய் விட்டதா?’ என்ற ஆத்திரத்துடன் அவள் பாதி நனைந்து போயிருந்த சேலை தடுக்க, சந்து வழியாகச் சுற்றி வீட்டின் முன்புறம் வந்தாள்.

     வாசல் திண்ணையில் பாலுவும் அவனுடைய நண்பன் ராமுவும் பேசிக் கொண்டிருந்தார்கள். செல்லம் கையில் கரண்டியுடன் வாசல்படியில் நின்று அவர்களுடைய பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ரங்கநாதம் ஒன்றையுமே கவனியாதவராகத் திண்ணை ஓரத்தில் ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தார்.

     ஜானகியைக் கண்டதுமே செல்லம், “ஐயோ, கதவைச் சாத்திவிட்டானா சுந்துத் தடியன்? கூப்பிடக் கூடாதா ஜானகி?” என்று அங்கலாய்த்து விட்டுப் பரபரவென்று உள்ளே சென்றாள்.

     ஜானகி பிழிந்து வந்த துணிகளைப் பிரித்து உலர்த்தலானாள்.

     அதைக் கண்ட ராமு, “நீ ஒரு முழுச் சோம்பேறியடா பாலு! உன் இடுப்புத் துணியைக் கூடப் பாவம், ஜானகி தோய்த்து வந்திருக்கிறாள் இத்தனை நாட்களாக. இனி மேல் கஷ்டப்படுவாய் பார், கஷ்டப்படப் போகிறாய்!” என்று விளையாட்டாகக் கூறி நகைத்தான்.

     “டேய், உன் வாயால் நன்றாக இரு என்று ஆசீர்வாதம் பண்ணினால் பலிக்காதே ஒழிய இது பலித்து விடமடா பழி, கஷ்டப்படுவாய் என்று ஏன் சாபம் கொடுக்கிறாய்?” என்றான் பாலுவும் பதிலுக்கு சிரித்த வண்ணம். ராமு பாலுவுக்கு நெடுநாளையத் தோழன். ஒரு வருஷத்துக்கு முன்புதான் அவன் சென்னையில் வைத்தியக் கல்வி கற்கச் சேர்ந்திருந்தான். விடுமுறைக்கு ஊர் வந்திருந்த அவன் அன்று பாலு ஊருக்குப் புறப்பட இருந்ததால் அவனுடனேயே இருந்தான்.

     அவர்களுடைய பேச்சு முன் சொன்ன விதமாகத் திரும்பவே, ஜானகியும், “ஏன், இங்கே தங்கை இருந்தால் அங்கே அக்கா!” என்று அவர்களுடைய நகைப்பில் பங்கு பற்றினாள்.

     “அக்கா ஒன்றும் இந்தச் சோம்பேறிக்குத் துணி துவைத்துப் போடமாட்டாள். அவளுக்கு அத்தனைக் கவனிக்க வேண்டும்!” என்று ஜானகியைப் பார்த்துக் கொண்டு ராமு கூறியதும் ‘கொல்’லென்ற சிரிப்பொலி மீண்டும் ஒலித்தது.

     ஜானகியின் நன்றி ததும்பிய நோக்கும், கண்ணாடிக்குள் ஒளிர்ந்த ராமுவின் விழிகளிலிருந்து வந்த பார்வையும் ஒரு கணம் ஒன்றுபட்டன.