13

     திருடனுக்கும் கொலைகாரனுக்கும் கூட மன அமைதி கிட்டினாலும் கிட்டும். மனச்சாட்சி ஒப்பாமல் பொய்யுரைத்து ஒருவரை ஏமாற்றியவனுக்கு அந்தப் பொய் கூறும் எண்ணம் தோன்றும் போதே நிம்மதி தொலைந்து விடுகிறது எனலாம். அதுவும் அவன் கூறிய பொய் எதிர்பார்த்தபடி யல்லாமல் நேர்மாறான பலனைக் கொடுத்துத் தோல்வியடைந்து விட்டாலோ, மனச்சாட்சி அவனை உயிருடன் வதைக்கத் தொடங்கி விடுகிறது.

     கந்தையா மென்மையான உத்தியோகத்தில் ஈடுபட்டு அமைதியுடன் வாழ்ந்திருக்கவில்லை. திருட்டும், கொலையும், வஞ்சகமும் அவருடனேயே உத்தியோக வாழ்க்கையில் பிணைக்கப்பட்டிருந்தன. என்றாலும் அவர் மனக்குரலுக்கு விரோதமாக ஒரு போதும் சென்றதில்லை. அப்படி உத்தியோகத்தின் கடமை அவரை நெருக்கிய சமயம் அதிகாரத்தையும் பதவியையும் அவர் ஒரு நொடியில் உதறித் தள்ளத் தயங்கவில்லை. அத்தகையவர் எப்படி அந்தப் பொய்யைச் சொன்னார்? அதுவும் அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் யார்?

     வெளுத்ததெல்லாம் பாலென்று நம்பும் அப்பாவி ரங்கநாதம், கௌரவத்துக்கும் ஏழைமைக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு ஆசைக் கயிற்றில் ஏறப் பார்க்கும் அபலை செல்லம். அவர்கள் மட்டும் தானா? வெறும் ஏமாற்றம் தானா? பொய் சாதாரணமாக விதைக்கப்பட்டதல்லவே?

     கந்தையாவும் பொய்தான் விதைத்திருந்தார். பொய் வென்றால் அவருக்கும் வெற்றி, எல்லோருக்கும் நல்லது.

     ஆனால் அவர் திட்டமிட்டபடி எல்லாம் நடக்க வேண்டுமே?

     அது நடக்கவில்லை. பொய்யும் தோற்று விட்டது. ஆனால் அதன் பலன்... கொச்சியிலிருந்து திருச்சிக்கு வரும் எக்ஸ்பிரஸ் வண்டி தடக் தடக்கென்று தண்டவாளத்தில் ஒலியிட்டுக் கொண்டு மைல்களைக் கடந்து கொண்டு இருந்தது. உயர் வகுப்புப் பெட்டியிலே அமர்ந்து பிரயாணம் செய்த கந்தையா வெளியே தெரிந்த இருளை வெறித்துப் பார்த்த வண்ணம் தம் மனச்சாட்சியுடன் போராடிக் கொண்டிருந்தார்.

     ரங்கநாதத்துக்கும் செல்லத்துக்கும் அவருடைய எண்ணம் வெளிப்படாமல் போகுமா?

     அவர் என்ன செய்வார்? ஒரு மகன், இளமையிலேயே தாயை இழந்தவன் என்று அவனுக்குக் கண்களை மூடிக் கொண்டு சலுகைகளையும் உரிமைகளையும் கொடுத்து செல்லப் பிள்ளையாக வளர்த்தவர், அவன் எந்தப் பாதையில் செல்லுகிறான் என்பதைக் கவனியாமல் அல்லவோ இருந்து விட்டார்?

     அவர் கவனிக்கவில்லை. ஆனால் அவர் அளித்திருந்த அதீதமான சலுகைகளை, செல்வத்தை, இளமையை, எழிலை, ஆற்றலை எல்லாவற்றையும் மாயையான சுக போகங்களிலே செலவிடச் சொல்லிக் கொடுத்து, அவனையும் கவனித்துத் தம்மையும் கவனித்துக் கொள்ளும் கயவர் கூட்டம் இல்லையா? நாசப் பாதையில் வெறி கொண்டு செல்லும் அவனை அவர் நல்ல பாதையில் திருப்பச் செய்த முயற்சிகளெல்லாம் விழலுக்கிறைத்த நீராயின. அவன் வழியிலேதான் அவன் சென்றான். அவர் திகைத்தார்; கலங்கினார்; செய்வதின்னதென் றறியாமல் விழித்தார்.

     உடன் பழகி விட்டதன் காரணமாக உயிரற்ற ஜடப் பொருள்களின் மீதே பாசத்தை வைத்துவிட்டு இழக்க மனமில்லாமல் துடிக்கும் மனிதப் பிறவிக்கு ஒரே மகனை, செல்வத்தை, குலக்கொழுந்தை, எப்படிப் போனாலென்ன என்று விட்டுத் தொலைக்கும் அளவுக்குப் பாசம் எப்படித் தேயும்? அவர் விரக்தியை வளர்க்கப் பிரயத்தனங்கள் செய்தார். ஆசையை வெட்டி வெட்டிச் சாய்த்தார். ஆனாலும் அது அடியோடு அகலவில்லை. வெறுமே வெட்டி வீழ்த்தும் போதே கிளைத்து வளரும் அந்த ஆசைக்கு ஒரு தூண்டுதலும் எதிர்ப்பட்டு விட்டால்?

     ஆடம்பரமான அணி பணிகள் இல்லாமலேயே மிளிர்ந்த ஜானகியின் அழகு, அடக்கம், பொறுமை, பொறுப்பறியும் தன்மை, இவை எல்லாவற்றுக்கும் மேல் ஏழ்மையில் உழலும் பெற்றோர் எல்லாம் அவருடைய் ஆசைக்கு எழுச்சி கொடுத்தன. வளர்ச்சி பெற்று விரிந்தாடச் செய்தன. முதலில் தயங்கினார், தவித்தார்.

     கடைசியில் அவருடைய மகன் திருந்த வேண்டும் என்ற ஆசையே வென்று விட்டது. அக்கினிப் பரீட்சை செய்யத் துணிந்தார். வெறி கொண்டலையும் அவனுடைய மனசை அடக்கிச் சாந்தமான வழிக்குத் திருப்பி விட அவர் அவளைச் சோதனைப் பொருளாக ஆக்கி விட்டார். இந்த ஆசையையும் அவன் குறையையும் மறைத்துக் கொள்ளவே தான் அவர் பெருந்தன்மை என்னும் உயர்ந்த போர்வைக்குள் ஒளிந்து கொண்டார்.

     ஆனால் அவனுக்கு அவருடைய மெய்யன்பையோ, அவனுக்காக அவர் கூறியிருக்கும் பொய்யைப் பற்றியோ உணர்ந்து கொள்ள ஏது சக்தி? ஜானகியை மணந்து கொள்ள அவனுக்கு மிக மிக இனிப்பாகத்தான் இருந்தது. வேட்டைக்காரன் கையில் புறாவைத் தேடி, யாரேனும் கொடுத்தால் வேண்டாமென்று சொல்லுவானா?

     ஆனால் வேட்டைக்காரன் புறாவின் மணிமிடற்றையும் பளிச்சிடும் கண்களையும் சிவந்த கால்களையும் அது தலையைச் சாய்த்து ஒய்யார நடை நடக்கும் அழகையும் பார்த்து ரசிக்க மாட்டான். அந்த அழகில் ரசித்துக் கொலைத் தொழிலையே அவன் விட்டுவிடுவான் என்று கருதுவது முக்காலும் நடக்காது. அப்படி நினைப்பதே முட்டாள்தனம். ஸ்ரீதரனின் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்த ஜானகி இந்த நிலையில் தான் இருந்தாள்.

     திருமணம் கழிந்து அவளைக் கையுடன் அவன் அழைத்துச் சென்ற பிறகு, கந்தையா ஒரு வாரத்துக்கு முன்பு தான் மகன் எர்ணாகுளத்தில் குடும்பம் நடத்துவதைப் பார்க்கச் சென்றார். பார்த்து விட்டுத் திரும்பி வருகிறார். நம்பிக்கையை மனசில் ஏந்திக் கொண்டு சென்றவர் உள்ளக் குரலின் ஓலத்தை நிராசையுடன் சுமந்து வருகிறார்.

     அவரைக் கண்டதும் அவள் அழுது, ‘இப்படி மாட்டி விட்டீர்களே?’ என்று கத்தி இருந்தாலும் அவருக்கு இத்தனை குத்தல் ஏற்பட்டிருக்காது. அவரை விட வயதிலும் கல்வி கேள்விகளிலும் உலக அநுபவங்களிலும் பன் மடங்கு சிறிய அந்தப் பெண் அவரைத் தன் போலிப் புன்னகையால், பணிவால், உபசரிப்பால், மௌனமாகவே சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டாள். வன்மையை விட இனிமைக்கு வலிமை அதிகம் என்பதை நிரூபித்து விட்டாள்.

     சந்தேகக் கண்களுக்குப் பித்தளைக்கும் தங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போகுமா?

     ஜானகி சிரித்துப் பேச முயன்றாள். ஆனால் அவளுடைய முறுவலில் கள்ளமற்ற குழந்தைத்தனம் பிரதிபலிக்கவில்லை. பருவத்தின் பளபளப்பு அந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே எங்கோ ஓடி ஒளிந்து விட்டது. நீல நிறத் தடாகங்களென அமைதியுடன் ஒளிர்ந்த அந்த விழிகள் கண்ணீர் பெருக்கிப் பெருக்கியோ என்னவோ, இருண்ட வானத்தின் கீழ் களையிழந்து காணப்படுவன போல் சோகத்தின் சாயையில் மங்கி இருந்தன.

     அவர் அங்கு கால் வைத்த சமயம் அவன் வீட்டில் இருந்ததாகத் தோன்றவில்லை.

     “ஸ்ரீதர் இல்லையாம்மா?” என்று விசாரிக்கையில் அவருடைய குற்றமுள்ள குரல் நடுங்கியது.

     “இருக்கிறார், தூங்குகிறார் மாமா. இரவு வெகுநேரம் கழித்து வந்தார்” என்று தரையைப் பார்த்துக் கொண்டு பகர்ந்த அவள் குரலில் உயிரே இருக்கவில்லை. சட்டென்று அவள் பேச்சை மாற்றினாள். ஊரைப் பற்றி, வீட்டைப் பற்றி, பாலுவைப் பற்றி, அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் தனக்குத் தெரிந்தவரை எப்படியோ பதிலளித்தார்.

     உச்சிப் பொழுதில் துயில் நீத்து எழுந்த அவனுக்கு காலை ஆகாரத்தைக் கையிலேந்தித் திரையை நீக்கி மெல்ல உள்ளே சென்ற ஜானகியை அவர் பார்த்தார்.

     “அப்பா வந்திருக்கிறார்...” என்று அவள் தெரிவித்த செய்திக்கு அன்பும் பொறுப்பும் வாய்ந்த குடும்பத் தலைவனாகவும், கணவனாகவும் இருந்தால் அப்படியா பதிலளிப்பான்?

     “அதுதான் தெரிகிறதே? உள்ளே ஒருவன் தூங்குகிறானே என்று கூச்சம் கூட இல்லாமல் நீதான் இத்தனை நேரம் பேசு பேசு என்று பேசினாயே? யார் அழைத்தார்களாம் இப்போது அவரை?...”

     இதுதான் அருமந்த மகனிடம் அவருக்குக் கிடைத்த வரவேற்பு! பெயருக்கேனும் அவருக்கு மரியாதை காட்டுவது போல் நடிக்கவாயினும் கூடாதா?

     அங்கு தங்கியிருந்த அந்த ஒரு வாரமும் அவர் அந்த அபலைப் பெண்ணுக்குத் தாம் இழைத்திருக்கும் கொடுமையின் விளைவுகளை நன்கு பார்த்தார். அவருடைய உள்ளம் சீறியது. மகன் என்ற பாசத்தின் கொடி அந்தச் சீறலில் கருகி வீழ்ந்தது. அவர் அவனை வாயில் வந்தபடி பேசினார்.

     ஜான்கியை மீட்கும் எண்ணத்துடன் தம்முடன் அழைத்தார். அவள் வருவதற்கு ஒப்பவில்லை. அது மட்டுமில்லை. “அம்மா அப்பாவிடம் ஒன்றும் தெரிவித்து விடாதீர்கள், நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று முறையிட்டுக் கொண்டாள்.

     அவளுடைய கண்களில் நீர் துளிர்த்ததை அப்போது தான் அவர் முதன் முதலாகக் கண்டார். வாழ்வின் இன்பப் படியில் காலை எடுத்து வைத்ததுமே மீள முடியாத சேற்றில் அழுந்தி இருக்கிறோம் என்று அறிந்தும் அவளுடைய உறுதியை என்னவென்று சொல்வது?

     ‘அவளை அழைத்துப் போகிறேன் நான். நீ இங்கு அவளை வைத்திருக்கும் லட்சணத்துக்கு!’ என்று மகனிடம் கடுமையாக அவர் கூறிய போது, ‘அவள் என் மனைவி. உங்களுக்கு இந்த விஷயத்தில் தலையிட உரிமையில்லை! போகலாம்’ என்று அவன் உரிமையல்லவோ கொண்டாடினான்? அன்பு செய்யத் தவறும் அவன் கசக்கி எறிய உரிமை கொண்டாடும் விந்தையை, மதியீனத்தை நினைக்கும் போது, கந்தையாவுக்குச் சிரிக்கத் தோன்றவில்லை; துயரம் வெடித்து வந்தது.

     மகள் எப்படி இருக்கிறாள் என்று விசாரிக்கும் அந்தப் பெற்றோருக்கு அவர் என்ன பதில் கூறப் போகிறார்?

     ஓடும் அந்த ரயில் வண்டி தடம் புரண்டு அவருக்கு முடிவை அளித்து விடக் கூடாதா? அவருடைய மனசை அறுக்கும் குற்றத்துக்குத் தண்டனை தானாக வரக் கூடாதா?

     ‘ஏன்? உன்னுடைய சுயநலத்துக்காக எத்தனையோ நிரபராதிகள் உயிரை இழுக்க வேண்டுமா? நீ செய்த குற்றத்துக்கு அந்த வகையில் சட்டென்று எப்படியப்பா தண்டனை நேரும்? கொஞ்ச கொஞ்சமாகத்தான் அநுபவிக்க வேண்டும்’ என்று மனசின் எதிர்க்குரல் கேலிச் சிரிப்புச் சிரித்தது.

     வண்டி பாதையை விட்டு விலகாமல், அவருக்கு ஒரு துளி சேதத்தையும் ஏற்படுத்தாமல் மறுநாள் காலையில் அவரை ஊரில் கொண்டு வந்து சேர்த்து விட்டது.

     முதுமையை அடைந்திருந்த போதிலும் இன்னும் தளர்ச்சி காணாமலேயே இருந்த அவருக்கு அன்று சக்தியே போய்விட்டது போலிருந்தது. ஒரு மாட்டு வண்டியைப் பிடித்துக் கொண்டு அவர் அதில் ஏறி உட்கார்ந்தார்.

     வாசலில் வண்டி வந்து நிற்பதைக் கண்ணுற்ற செல்லத்துக்கு, கையிலிருந்த சாமான் நழுவியது.

     ஜானகியையும் அழைத்து வருகிறார் போலிருக்கிறது, இல்லாவிட்டால் வண்டி ஏன் வைக்கிறார்?... குழந்தை எப்படி இருக்கிறாளோ...

     தாவிக் குதித்த மனசுக்குப் போட்டியாக அவள் வாசலுக்குத் தாவி வந்தாள்.

     ஆனால்...

     செல்வக் கணவன் வீட்டிலிருந்து புதிதாகத் தாய்மனை வரும் மங்கை, அன்பும் ஆசையும் குலுங்க அவசரத்துடன் இறங்கி ஓடி வரவில்லை. சோகத்தின் எல்லைக்குள் மூழ்கிய இருண்ட முகத்துடன் கிழவர் இறங்கினார். வெற்று வண்டி வட்டமிட்டுக் கொண்டு சென்றது.

     நிலைத்து நின்ற செல்லத்துக்குச் சுய உணர்வு வருவதற்குச் சில விநாடிகள் சென்றன.

     “குழந்தை வரவில்லையா?...” என்று கேட்டாள்.

     “இ...ல்...லை...!”

     கணீரென்று ஒலிக்கும் இயல்பு வாய்ந்த அந்தக் குரலில் சொல் ஏன் இப்படித் தேய்ந்து மாய்ந்து போக வேண்டும்?

     கிழவர் ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார். ரங்கநாதம் அப்போது கொல்லைப்புறம் குளித்துக் கொண்டிருந்தார். ‘ட்யூஷனு’க்கு வந்திருந்த பிள்ளைகள் வாசலில் கலகலவென்று சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். செல்லத்துக்கு வேலையே ஓடவில்லை. காபியைக் கலந்து கொண்டு வந்து கிழவரின் முன் வைத்தாள்.

     ஈரத் துண்டுடன் ரங்கநாதம் கூடத்தில் நுழைந்தார். “இப்போதுதான் வருகிறீர்களா? வண்டி ‘லேட்டோ’?” என்று மலர்ந்த முகத்துடன் விசாரித்தார். ஜானகி சுகமாக வாழ்க்கை நடத்துவாள் என்று வெள்ளை உள்ளத்துடன் நம்பியிருந்த அவருக்கு அவளைப் பற்றிய கேள்வி கூட முதலில் எழவில்லை!

     “இல்லையே?” என்று அவருக்கு பதிலளித்த கந்தையா செல்லத்தை நோக்கி, “இப்போது காபி வேண்டாமம்மா, நான் இன்னும் பல்லே துலக்கவில்லை” என்றார்.

     முகவாட்டத்தையும் கம்மிய குரலையும் கவனித்த ரங்கநாதம், “இரவு நல்ல தூக்கமில்லை போலிருக்கிறது. வண்டியில் கூட்டம் அதிகமோ?” என்று கேட்டார்.

     காலிப் பாத்திரத்தை எடுத்துப் போன செல்லம் வாசல்படிக்கு அப்பால் நின்று அளவற்ற துடிப்புடன் கிழவரைப் பார்த்தாள்.

     சுருங்கிய அந்த விழிகளில் நீர் தளும்புவானேன்?

     “நான் பெரிய பாவத்தைச் செய்தவன் ரங்கநாதம்!...”

     செல்லத்துக்குக் கூரை பெயர்ந்து தலை மேல் விழுந்து விட்டது போலிருந்தது. ரங்கநாதம் துணுக்குற்று அவரைப் பார்த்தார்.

     “அவன் எனக்கு மகனல்ல!” என்றது அந்தத் தழதழத்த குரல்.

     ‘ஏன் இப்படிச் சொல்லுகிறார்? பாவம், இந்தக் காலத்துப் பையன்களே அப்பாவிடமிருந்து பணம் கறக்கும் வரையில் தானே மதிக்கிறார்கள்? என்ன அவமரியாதை செய்து அனுப்பினானோ? ஜானகியும் அவனுடன் சேர்ந்து கொண்டு மமதையால்...’ - அப்பாவி ரங்கநாதத்தின் மனம் கந்தையாவின் பேச்சுக்கு இப்படி வியாக்கியானம் செய்தது!

     “ஏன் வருத்தப் படுகிறீர்கள்? என்ன செய்வது? இந்தக் காலத்தில் பையன்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். ஜானகியும் கூடவா உங்களை...”

     “உங்கள் குழந்தை தெய்வம். நான் பாவத்தைச் செய்தவன்” என்றார் அவர் மீண்டும் மீண்டும். உண்மை புரிந்து அவர் கேட்கிறாரா, இல்லையா என்பதை எல்லாம் அந்த நிலையில் தெளிந்து கொண்டவராகக் கந்தையா பேசவில்லை. தள்ளாத காலத்தில் பையன் ஏதோ மனஸ்தாபமாகப் பேசி மனமுடைய அனுப்பி இருக்கிறான் என்று தான் ரங்கநாதம் அவருக்காகப் பச்சாதாபப் பட்டார்.

     ‘எப்படியோ, ஜானகி அவனுக்கு ஒத்து விட்டாளே? அவருக்கு அதுதானே வேண்டியது?’ என்று எண்ணிய ரங்கநாதம், “அப்படியெல்லாம் சொல்லாதீர்கள், விட்டுத் தள்ளுங்கள்! உங்களுக்கென்ன, அங்கே அவர்களா தாங்க வேண்டும்?” என்று தேற்றினார்.

     பின்னர் கந்தையா விடை பெற்றுக் கொண்டு தம் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்.

     அவர் இதற்குப் பிறகு அந்த ஊரில் இருந்ததெல்லாம் சில நாட்கள் தான். சொத்துக்கு ஒரு வழி செய்து விட்டு அவர் ஒரு நாள் மன அமைதியை நாடிக் கிளம்பி விட்டார்.

     ரங்கநாதம் எல்லாவற்றையுமே சாதாரணமாக நினைக்கையில் அந்தத் தாயுள்ளம் மட்டும் அனலில் விழுந்த புழுவைப் போல் துடித்தது. கணவனுக்குத் தெரியாத வேதனையில் வெதும்பியது.