12

     புதல்வனைப் பற்றிய கவலைகளிலும் தனக்குத்தானே செய்து கொள்ளும் சமாதானங்களிலும் செல்லம் ஊசலாடிக் கொண்டிருக்கையில் பாலு அவள் கனவிலும் நினைத்திராத இடத்திலே அநாதை போல் படுத்திருந்தான். அவன் கோபித்துக் கொண்டு கடிதம் எழுதியது உண்மைதான். ஆனாலும் பரீட்சை முடிந்ததும் அங்கே போக வேண்டும், தாயிடமும் தந்தையிடமும் எல்லாவற்றையும் குறித்து விரிவாகப் பேசி நன்மையானதொரு முடிவுக்கு வரத் துடித்துக் கொண்டிருந்தானே ஒழிய, ஒரேயடியாகப் போகக்கூடாது என்று மூர்க்கப் பிடிவாதம் கொண்டிருக்கவில்லை.

     “வீட்டை நான் இருக்கும் வரை வைத்துக் கொள்கிறேன், சாவியை என்னிடம் கொடு” என்று விமலாவிடமிருந்து வீட்டின் உரிமையைக் கொஞ்ச காலம் வாங்கிக் கொண்டிருந்தான். கடைசி நாள் பரீட்சையன்று அவனுக்குக் காலை எழுந்திருக்கையிலேயே தலை கனத்தது; உடம்பு வலித்தது. பரீட்சை எழுதிவிட்டு வரும்போதே ஜுரம் அவனைப் படுக்கையில் தள்ளும் அளவுக்கு ஏறிவிட்டது. அன்றிரவெல்லாம் அவனுக்குத் தன் நினைவு கூடச் சரியாக இல்லை.

     பொழுது விடிந்த போது, முகத்திலும், உடலிலும் தனக்கு அம்மை முத்துக்கள் கண்டிருப்பதை அவன் அறிந்தான். அன்று பகல் முழுவதும் அவன் கவனிப்பார் எவருமின்றி, எழுந்திருக்கவும் வலுவின்றி நோவுடன் சொல்லொணா அவஸ்தையில் உழன்றான். மாலையில் அண்டை வீட்டுக்காரர் அவன் வேண்டிக் கொண்டபடி அவனை நகர எல்லையை விட்டுத் தள்ளி இருக்கும் தொத்து நோய்களுக்கான பிரத்தியேக வைத்தியசாலையில் சேர்த்து விட்டார். நோயின் வாதனை, அறியாமை நிரம்பிய ஏழையோடு ஏழையாக நாதியற்றுப் படுத்துக் கிடக்கும் சிறுமை அங்குள்ள சிப்பந்திகளின் மரியாதையற்ற அலட்சியமான நடத்தை, எல்லாம் அந்த ஆறுவாரங்களிலும் மேலாகவே நினைத்துப் பெருமை கொள்ளும் இயல்பு வாய்ந்த அந்த மென்மையான உள்ளத்தை மௌன வேதனையில் வாட்டி எடுத்தன.

     அவன் வரவில்லை என்பதை ஊரிலுள்ளவர்கள் எப்படி நினைக்கிறார்களோ?

     மீனா போகாத போனாலும் கங்காதரமாயினும் போயிருக்க மாட்டாரா?

     ஜானகிக்குப் பாவம், விருப்பம் இருக்கிறதோ இல்லையோ! அவன் இருந்து யாருக்கு என்ன பயன்? விமலாவும் மூர்த்தியும் அப்போது அங்கு இருந்தால் அவன் இத்தனை சிறுமைகளுக்கு ஆளாவானா?

     ஆனால் அவர்கள் ஊரை விட்டுச் சென்றதும் ஒரு விதத்தில் நல்லதுதான். பற்றாக்குறையால் அவர்கள் தவித்தும் பரந்த மனசுடன் பொறுத்துக் கொண்டு இருந்தார்கள்.

     ...இத்தனை கஷ்டப்பட்டு என்ன படிப்பு வேண்டியிருக்கிறது? உழைப்பு, கஷ்ட நஷ்டங்கள், பேச்சு வார்ர்த்தைகள், மனஸ்தாபங்கள், இத்தனை துன்பங்களும் அவனைப் போல் கல்வி கற்கும் எவரும் அனுபவிக்க மாட்டார்கள்! இந்தத் துன்பங்களுக்கெல்லாம் அந்தப் பட்டம் சேர்த்து அவனுக்குப் பலனைக் கொடுக்குமா? கஷ்டப்பட்டவர்களுக்குத் தக்க பலன் பின்னால் கட்டாயம் உண்டு என்பார்களே?... இனி எப்படி அவன் படிப்பைத் தொடரப் போகிறான்?

     தனிமையிலே இந்தப் பிரச்சினை வேறு துன்பக் கேணியைத் துருவெடுப்பது போல அவனை வருத்திக் குலைத்தது.

     சில சமயங்களில் மனசை நோய்க் கிருமிகளென வந்து அப்பிக் கொள்ளும் இந்தச் சிந்தனைகளை விரட்டித் தள்ளுபவன் போல் தலையை ஆட்டி அவன் கண்களை மூடிக் கொள்வான். அப்போதெல்லாம் எங்கிருந்தோ ஒரு மலர் வந்து அவனுடைய உள்ளத்தின் உள்ளே புகுந்து ஒட்டிக் கொள்ளும். அதன் மென்மையான ஸ்பரிசம் அவனுடைய அழன்ற இதயத்துக்கு இதமாக இருந்தது. அந்த இதத்துக்கு இன்னும் சுகம் தருவது போல் தொடர்ந்து கேட்கும் வளையல் ஒலி; அந்த ஒலியைப் பின்னணியாகக் கொண்டு ஒரு இன்பநாதம்...

     அந்த நாதம் அவனுடைய இதய நரம்புகளைச் சிலிர்க்கச் செய்தது. பாலு துன்பத்தின் நடுவே உண்டாகும் இந்தப் புது அநுபவத்தின் போதையில் மூழ்கிக் கிடப்பான்.

     தான் அசைந்து விட்டால், கண்களைத் திறந்து விட்டால், அந்த மலர் குறுநகை செய்து தன்னை விட்டுப் பறந்து போய்விடுமோ என்று பயந்து அவன் அசையாமலேயே இருப்பான். பொல்லாத கவலைகள் எப்படியோ புகுந்து அவன் சிந்தையை அந்த நிலையிலிருந்து உலுக்கிவிடும்.

     சோபையிழந்து, வலுவிழந்து அரையுடம்பாய் அவன் மறுபடி விநாயகா காலனி வீட்டில் காலெடுத்து வைக்கும் போது அவனுக்குக் கல்லூரி திறந்து இரண்டு நாட்களாகி விட்டன.

     வீடு தூசி படிந்து களையிழந்து கிடந்தது. அவன் அன்று கொண்டு வந்து போட்டிருந்த புத்தகம் அவன் பெட்டி மீது அப்படியே இருந்தது. ஊரிலிருந்து தன்னைத் தேடி ஏதேனும் கடிதம் வந்திருக்கிறதா என்று ஆவலுடன் பார்த்த அவனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அவனுக்காக அங்கு ஒரு செய்தியும் வந்து காத்திருக்கவில்லை.

     வெறுப்பு மண்டியது. எல்லோரும் தன்னைக் கை விட்டு விட்டார்கள் என்று நினைத்தான்.

     ஒரு மாத வாடகை எண்ண வேண்டும். சாப்பாடு, காலேஜ் சம்பளம் இவைகளுக்கு அதிகப்படியாகப் பணம் வேண்டும்... ஒரு கடிதம் கூட அவர்கள் போட்டிருக்கவில்லை. அவன் என்ன ஆனான் என்றும் கவலைப்படவில்லை!

     நோயில் ஏற்கெனவே தளர்ந்து விட்ட மனம் இன்னும் நலிவு கண்டுவிட்டால்?

     பச்சைக் குழந்தை போல அவனுக்கு அழுகை வந்தது.

     அந்தச் சமயம் அவள் வந்து அவன் அருகில் உட்கார்ந்தாற் போலவும், தன் மென் கரத்தை அவனுடைய பொட்டு உதிராத நெற்றியில் வைத்து ‘அழாதீர்கள், நான் இல்லையா?’ என்று கேட்பது போலவும் அவன் கற்பனை செய்து பார்த்தான்.

     அவனுடைய உள்ளம் கரைந்தது; கண்ணீர் பெருகியது.

     பாலு கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டு வாசலை வெறிக்கப் பார்த்தான். அவள் எட்டி நின்றாள். ‘பைத்தியக்காரா? நான் யார், நீ யார்? நான் கொம்புத் தேன், என்னைச் சுற்றிக் கொட்டும் வண்டுகளுண்டு. நீ கையும் காலும் இல்லாத முடவன்!’ என்று பரிகாசச் சிரிப்புச் சிரித்தாள். பித்து பிடித்தவன் போல் பாலு அப்படியே வெகு நேரம் உட்கார்ந்திருந்தான். அவன் சும்மாவே உட்கார்ந்திருந்தால் வயிறும் சும்மா இருக்குமா? ஏற்கெனவே சுண்டியிருப்பதாயிற்றே? அது ‘சோற்றுக்கு வழி என்ன?’ என்று அவனைக் கூவிக் கூவி அழைத்தது.

     இருக்கும் சில்லறையைத் திரட்டிக் கொண்டு சட்டையை மாட்டிக் கொண்டான். வெளியே மெள்ள வருகையில், சுள்ளென்று அடிக்கும் வெயிலில் தலையில் அங்கவஸ்திரத்தைப் பிரித்துப் போட்ட வண்ணம் அவன் இருப்பிடத்தை விசாரித்துக் கொண்டு கங்காதரம் வரக் கண்டான். வடுக்கள் விழுந்த முகத்துடன் வற்றிப் போய் நின்ற அவனைக் கண்டதும் அவர் ஒரு கணம் திகைத்து விட்டார்.

     “ஏண்டா பாலு? உடம்பு சரியில்லையா உனக்கு? சொல்லக் கூடாதாடா?” என்று பதட்டமாகக் கேட்டார்.

     “ஆமாம், பெரியம்மைதான். கடுமையில்லாமல் போய்விட்டது. ஆஸ்பத்திரியில் இருந்தேன் இத்தனை நாட்களும்... நீங்கள் கல்யாணத்துக்குப் போய் வந்துவிட்டீர்களா?” என்றான் பாலு.

     “ஒரு வார்த்தை சொல்லி அனுப்பக் கூடாதாடா? அல்லது ஒரு கார்டானும் எழுதிப் போட்டிருக்கலாமே? பெரியம்மையா போட்டிருந்தது? ‘ஐசொலேஷன்’ ஆஸ்பத்திரியிலா இருந்தாய்?...”

     பாலு மௌனமாகத் தலையை ஆட்டினான்.

     “அட அசடே? விமலா அன்று சொல்லிவிட்டுப் போனாள், நீ புறப்பட்டுப் போயிருப்பாயாக்கும் என்றல்லவா நினைத்தேன்? மீனா கூட பாலு வந்து தலையைக் காட்டினானா பாருங்கள்? ஊருக்குப் போகிறானே? என்று சொல்லிக் கொண்டிருந்தாளே? இப்படியா சங்கதி?...”

     “நீங்களும் கல்யாணத்துக்குப் போகவில்லையா?”

     “ஊஹூம்! எங்கே? உன் அப்பாவிடமிருந்து திடுமென பத்திரிகை வந்தது. மீனாவுக்கு சௌகரியப்படவில்லை. ரவியையானும் புறப்பட்டுப் போகச் சொல்லலாம் என்று பார்த்தேன். ‘டெஸ்ட் மாட்ச்’ என்று பட்டணம் போனவன் இன்னும் ஆளையே காணோம். இன்றுதான் இதோ உன் அம்மா கைப்பட மீனாவுக்குக் காகிதம் எழுதியிருக்கிறாள். ‘பாலு கோபப்பட்டுக் கொண்டு வரவுமில்லை, காகிதமும் போடவில்லை. அப்பாவும் கோபித்துக் கொண்டு எழுதமாட்டேன் என்கிறார். கொஞ்சம் போய் விசாரித்துப் பார்க்கச் சொல்லு, கவலையாக இருக்கிறது’ என்று. ஜானகிக்கு இப்போது எதற்குக் கல்யாணம், நிறுத்தவும் என்று எழுதியிருந்தாயாமே? என்ன கோபம் உனக்கு?”

     பாலுவுக்கு வாஸ்தவமாக இப்போது கோபம் வந்தது.

     நடந்தது நடந்து விட்டது. இதையெல்லாம் அவனுடைய அம்மா மீனாவுக்கு எழுதுவானேன்? உண்மையாக அவளுக்கு அவன் மீது ஆதங்கம் இருந்தால் அவனுடைய மௌனத்துக்குத் தந்தியடித்துக் கேட்டிருக்க மாட்டாளா? மகன் படிக்க வேண்டும், பணம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும், தான் நகையும் புடைவையும் குலுங்க மீனாவுக்குச் சமமாக ஆக வேண்டும்! இதைத் தவிர அவளுக்கு என்ன குறிக்கோள் உண்டு வாழ்க்கையிலே?...

     “ஏன் உனக்கு என்ன கோபம்? விமலாவும் தான் போய்விட்டாள், உனக்கு என்ன உத்தேசம்? விட்டுச் சொல்லேன்? எனக்கு ஒன்றும் புரியவில்லையப்பா!” என்றார் அவன் மௌனத்தைக் கண்டு கங்காதரம்.

     “உத்தேசம் என்று எனக்குத் தனியாக என்ன இருக்கிறது? நினைப்பதை எல்லாம் உருவாக்கவும், செயலாக்கவும் என்னைப் போன்ற ஏழைக்கு ஏது சக்தி? படி என்றார்கள், வந்து சேர்ந்தேன். இங்கு இரு என்றால் இருப்பேன், இல்லை நீ படித்தது போது, மூட்டையைக் கட்டிக் கொண்டு வாடா என்றால் போவேன்” என்றான். கசப்பு விரக்தியாக முறுகி விட்டிருந்தது.

     “சரிதான், நீயும் ஆரம்பித்து விடாதே, ஏழை மோழை என்று. வா, போவோம். வீட்டுக்காரருக்குக் கணக்கை முடித்துத் தகவல் கொடுத்து விடலாம். வண்டி கூப்பிட்டு வருகிறேன், உன் சாமான்களை எடுத்து வை!” என்று கங்காதரம் வெளியே சென்றார்.

     முட்கள் நிறைந்ததானாலும் மலரின் மென்மையுடன் நாட்கள் கழிந்த அந்த இடத்தை நன்றியுடன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே பாலு பணக்காரர்கள் வாழும் வசதியான வீட்டை நோக்கிச் சென்றான். மீனா அவன் எதிர்பார்த்தபடி குற்றம் எதுவும் படித்து வரவேற்கவில்லை. “பாதி உடம்பாகி விட்டாயேடா?” என்று அவள் கேட்டது அவனுக்குப் புதுமையாகக் கூட இருந்தது. அன்றொரு நாள் அவன் பார்த்த மீனாவின் பாட்டி, அவனுக்குக் கலத்தில் இட்ட உணவு ருசித்தது.

     சாப்பிட்டு விட்டு வாசல்புறம் இருந்த அறையிலே பெஞ்சியின் மீது படுக்கையை விரித்துப் போட்டுக் கொண்டு படுத்தான். நல்ல உறக்கத்தின் சுகத்துக்கு ஈடு ஏது?

     வளையல்களின் ஓசை செவிகளில் ஒலித்தது. மெல்லிய அடிகளின் நடமாட்டம் அவனுடைய உள்ளத்தை மெதுவாக அசக்கியது.

     பாலு சட்டென்று ஏதோ நினைவு வந்து விட்டது போல் துள்ளிக் கொண்டு எழுந்தான். சுற்று முற்றும் கண்களைத் துடைத்துக் கொண்டு பரபரப்புடன் பார்த்தான்.

     அவனுக்கு நேர் எதிரே கூடத்தில் சுவற்றிலே சாய்ந்து ஏதோ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த அவள் அவன் உட்கார்ந்திருந்ததைக் கண்டு அவனை நோக்கி வந்தாள்.

     மாலை வெயில் அவனிருந்த அறையின் ஜன்னல் வழியாக அவனைக் குளிப்பாட்டி அவளுடைய மஞ்சள் தாவணியிலும் போய் ஒன்றியது. அந்த நீலப் பாவாடையும் மஞ்சள் மேலாடையும் பஞ்சவர்ணக் கிளியை நினைப்பூட்டின அவனுக்கு.

     அவள் அவனை நோக்கி ஏன் வருகிறாள்? வீட்டிலே யாருமே இல்லையா என்ன? எல்லாவற்றுக்கும் மேல் அவனுடைய இருதயம் துள்ளிக் குதித்தது.

     அவள் அவனுக்கெதிரே நிலைப்படியில் வந்து நின்றாள்.

     அவளைக் காணாமலிருக்கும் போது என்னென்னவோ கற்பனை செய்கிறதே பாழும் மனம்? அவளிடம் பேசுவதற்கு யுக யுகாந்தரங்களுக்கு விஷயங்கள் இருப்பது போல் தோன்றுமே? எதிரே நிற்கையில் சமயத்துக்கு வார்த்தைகளே அஸ்தமித்து விட்டது போலன்றோ நா ஒட்டிக் கொள்கிறது?

     ஏதேனும் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில், “மாமா... இல்லை?” என்று கேட்டான்.

     “காணோமே யாரையுமே? வெயிலில் படுத்துக் கொண்டிருந்தீர்கள். ஜன்னல் கதவை சாத்தலாம் என்றால் அயர்ந்து தூங்கினீர்கள்... உங்களுக்கு அம்மை வார்த்திருந்ததா? முகத்தில்...”

     பல நாள் பழகியவள் போல் அவள் கேட்டாள். வழக்கமாகப் புன்னகை தவழும் அந்த முகம் பனித்துளிப்பட்ட மலர் போலிருந்தது.

     வறியவனுக்கு நிதி கிடைத்தால் எப்படி இருக்கும்? கொதிக்கும் மணலும் தகிக்கும் வானமும் வாட்ட நா வறள வழி நடக்கும் பிரயாணிக்கு, குளுகுளுவென்ற குடிசை நிழலும் ருசியான மோரும் கிடைத்தால் எப்படி இருக்கும்?

     இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டு போகலாம். ஆனால் பாலு அவளுடைய கேள்வியில் உணர்ந்த இதத்துக்கு அவை எதுவும் ஈடாக முடியாது. நோயின் கொடுமையில் வாடித் தளர்ந்திருக்கும் போது இனியவரின் இத மொழிகளுக்கும் அருகாமைக்கும் மனம் தாபப்படுவது இயல்பு. ஆனால், அவனுடைய அன்னை அப்போது பரிவுடன் வந்து விசாரித்திருந்தாலும் அவனுக்கு இத்தனை இதம் ஏற்பட்டிருக்குமா?... இருக்காது. அவள் எதிர்ப்பட்டால் அவன் அதுநாள் பட்ட கஷ்டங்களும் அநுபவித்த சிறுமைகளும் கவிந்து வரும். புதிதாக வருத்தம் ஊறும். இவளுடைய பேச்சிலே அமுதம் தோய்ந்து இருந்தது. அது அவனுடைய காய்ந்த நெஞ்சைக் குளிரத் தொட்டது.

     “ஆமாம், வைசூரி கண்டிருந்தது. இப்போது தேவலை” என்றான் அவன்.

     “வைசூரியா... இத்தனை நாளாக எங்கு இருந்தீர்கள்? உங்களுடைய அக்கா மாற்றிப் போய்விடவில்லை? அன்றொருநாள் வந்திருந்தாளே?...”

     “ஆமாம், ஆஸ்பத்திரியிலே இருந்தேன்...”

     “ஆஸ்பத்திரியிலா?”

     குரல் கம்மியது. தடுக்க இயலவில்லை. அவளுக்குக் கண்களின் ஓரம் பசைத்து விட்டது.

     இரக்கம் தோய்ந்த பரிவும், ஆறுதலுக்குத் தவிக்கும் உள்ளமும் மந்திரப் பூட்டும் சாவியும் போலும்! கபடற்ற இரு உள்ளங்களை ஒன்று சேர்க்கும் அன்புப் பொக்கிஷப் பேழையைத் திறந்து பெருக்க இவை ஆதாரமாக இருக்கின்றனவே?

     “எனக்குத் தெரிந்தால் வந்திருப்பேனே... எத்தனை நாட்கள் ஆகின்றன? வைசூரி... நினைத்தாலே எனக்கு...” வார்த்தைகளை முடிக்கு முன் துயரம் பெருகி நிறைந்தது அவளுடைய நயனங்களில்.

     “உனக்கு ஏன் இத்தனை பயம், சுதா? எனக்குத் தேவலையாகி விட்டதே?” என்றான் பாலு.

     “ஏன் பயமா? என் அப்பாவும் அம்மாவும் பர்மாவிலிருந்து வரும் வழியில் பெரியம்மை கண்டு தான் போனார்கள். அவர்கள் இருந்தால்...” பொலபொலவென்று கண்ணீர் முத்துக்கள் உதிர்ந்தன.

     ஒரு கணம் பாலுவின் உடலில் துடிப்பு நின்றது. தொடர்ந்து கட்டிப்பிடிக்க இயலாத வேகத்துடன் துடிக்கலாயிற்று.

     “அப்படியானால்... நீ, நீ ‘டிம்பர் வொர்க்ஸ்’ கணபதி...யின் மகள் இல்லை?”

     “அவர் என் சித்தப்பா தான். ஏன்? உங்களுக்குத் தெரியுமா?”

     “சித்தப்பாவா... இல்லை கேட்டேன். அவருக்கு சொந்த மகள் வேறு இருக்கிறாள் அல்லவா?”

     அவள் அவனை வியப்புடன் பார்த்தாள்.

     “இருக்கிறாள். ஒரே ஒரு மகள் உண்டு, ஏன் கேட்கிறீர்கள்?”

     “ஒன்றுமில்லை, என் சிநேகிதன் ஒருவனுக்கு அவர் மகளைக் கொடுப்பதாகப் பேச்சு நடந்தது, நீதானாக்கும் என்று நினைத்தேன்...”

     கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சுதா ஒரு மாதிரியாகப் புன்னகை செய்தாள்.

     “உங்கள் சிநேகிதர் என்ன சொன்னார்?”

     “அவனுக்கு அப்பாவிடம் கோபம், மறுத்து விட்டான்...”

     “நல்லவேளை...” என்று அவள் நிறுத்திய போது பாலுவுக்குத் துணுக்கென்றது.

     “ஏன்?” என்று திருப்பிக் கேட்டான்.

     “ஏனா? உங்களுக்கு அவசியம் தெரிய வேண்டுமா? அப்படியானால் சொல்லுகிறேன்! ஒருவரிடமும் சொல்லாதீர்கள். அவளுக்கு திடீர் திடீர் என்று வலிப்பு வரும் கெட்ட வியாதி ஒன்று உண்டு. அதை மறைத்து அவளை ஒரு ஏமாந்தவன் காலில் கட்டப் பார்க்கிறார்கள்” என்று படபடப்பாக அவளாகவே உண்மையைத் தெரிவித்த போது பாலுவுக்குக் கண்களைக் கொட்டக் கூடத் தோன்றவில்லை. எத்தனை பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளாமல் தப்பினான்!

     “செருப்பு வைத்திருக்கிறதே? சுதா வந்திருக்கிறாளா என்ன? அவர் இல்லையே? எங்கோ காரியமாகப் போகிறேன், அவளுக்கு ‘போன்’ பண்ணுகிறேன் என்றாரே? சுதா?...” என்று வாசலில் நுழையும் போதே அண்டை வீட்டிலிருந்து வரும் மீனா குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.

     “நானும் இப்போதுதான் வந்து நுழைந்தேன். ‘போன்’ பண்ணினாரா? இல்லையே? நானே இன்று நேரம் கழித்துக் கிளம்பினேன். பஸ்ஸுக்காக வேறு வெகு நேரம் காத்திருந்தேன். வீட்டுக்குள்ளே யாரையும் காணோமே என்று பார்த்தேன்; வந்து விட்டீர்கள். பாட்டி எங்கே?...” என்று விசாரித்துக் கொண்டு அவள் மீனாவைத் தொடர்ந்து சென்றாள்.

     அவளுடைய ‘கற்பனாசக்தி’ அவனை எங்கோ ஒரு இன்ப உலகுக்கு இழுத்துச் சென்றது. மீனா அக்காவின் வீட்டிலே இருக்கிறோம் என்ற உணர்வே அவனுக்கு இருக்கவில்லை!