17

     நிலமங்கை கருநீல ஆடையும் பசும் பொன்னணிகளும் பூண்டு நகைபுரியும் மேற்குக் கடற்கரைப் பக்கத்திலேதான் நந்தாவின் ‘மக்கள் இல்லம்’ இருந்தது. அப்போது வைகாசி மாதம். மழை ஆரம்பித்து இன்னும் பலமாகவில்லை. ஒருநாள் தூற்றல் விழுவதும் இரண்டு நாட்கள் காய்வதுமாக இருந்தது. கடும் கோபக் கிரணங்களை விடுத்துப் பொன்னிறம் கொண்டு, தாபமுற்ற நிலமங்கையின் மேனியைத் தழுவி ஆதவன் ஜாலம் செய்யும் வேளை.

     அவனுடைய பொன்னிறத்திலே கருநீல உப்பங்கழி இரு வண்ணம் பெற்று ஒளிர்ந்தது. கரையிலே இல்லத்துச் சிறுவர் சிறுமியர் ஆடிக் களித்தனர். அவர்களுக்குள் சாதி சழக்குக் கிடையாது. ஏழை பணக்காரர் என்ற வேற்றுமையில்லை. இவைகளை அந்த இளம் உள்ளங்களில் கற்பிப்பவரும் எவரும் கிடையாது.

     அவர்கள் கபடமற்றுச் சிரித்து விளையாடினார்கள்; சிறு படகுகள் தள்ளிக் களித்தார்கள்; மணல் வீடுகள் கட்டி மகிழ்ந்தார்கள். அவர்களுடைய கள்ளமற்ற ஆரவாரத்தின் ஒலி முடிவில்லாதது போல் கரையோரத்தில் நீண்டு விரிந்து இருந்த தென்னை மரச் சூழலில் இனிமையாக ஒலித்தது. கரையோரம் குறுக்காக விழுந்திருந்த தென்னை மரம் ஒன்றில் பாலு உட்கார்ந்திருந்தான். கண்ணுக்கு இனிய காட்சி. மனசிலே குழப்பமில்லாத நிலை. கையிலே மணிக்கவிதைத் தொகுதி ஒன்று. அவன் ஏதோ தளையிலிருந்து விடுபட்டவன் போல் கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தான். பரீட்சைக்கு என்று தேநீரைக் குடித்துக் கொண்டு விளக்கை எரித்துக் கொண்டு விழுந்து விழுந்து படித்த போதெல்லாம் காணாத இன்பத்தை இப்போது அவன் கண்டான். அப்போதெல்லாம் மனசிலே பதியாத பொருள் இப்போது தெளிவாகத் துலங்கியது.

     பரீட்சை, படித்துத் தேற வேண்டும், ஆண்டுகளை விழுங்கிப் பட்டத்தை வாங்க வேண்டும் என்ற பரபரப்பில், நிர்ப்பந்தத்தில் ஏதோ அவசர வேலையை முடிப்பது போல் புத்தகங்களை உருப்போடுவதில் இன்பமோ, பயனோ ஏது? குறுகிய வாயுள்ள ஜாடிக்குள் சாமானை அள்ளிப் போடும் போது கீழே விழுந்த அளவு விழும், உள்ளே சென்ற அளவு செல்லும், அவ்வளவு தான். அவன் பட்டம் பெறுவதற்காகப் படித்த பல விஷயங்களில் இப்போது அவனுக்கு நினைவில் தங்கி இருப்பவை மிகச் சில. கலையிலே, கவிதையிலே, இலக்கியத்திலே அவன் உண்மையான ஆர்வம் கொண்டு அந்த வேகத்தில் கலாசாலையைத் தேடிப் போயிருக்கவில்லை. அந்த ஆர்வம் இந்தச் சுதந்திர நிலையில் தான் அவனுக்கு எழும்பியது. மஞம் எவ்விதத் தளையுமின்றி இருக்கும் போதே கவிதையின் இன்பத்தை, பேரறிஞர்களின் மணி மொழிகளில் பதிந்து கிடக்கும் பொருட் செறிவை உணர்ந்து அநுபவிக்கக் கூடியதாக இருக்கிறது.

     “பேப்பர் இந்தாங்க ஸார்!...”

     பாலு நிமிர்ந்தான். ஒரு குட்டிப் படகிலே, சின்னஞ்சிறு பாலகன் ஒருவன் அன்றைய செய்தித் தாளுடன் அவனை நோக்கிச் சிரித்துக் கொண்டு விசுக் விசுக்கென்று துடுப்பைப் போட்டு விரைந்து வந்து கொண்டிருந்தான். கொஞ்ச தூரத்திலே ‘சிச்சிச்’சென்ற சத்தத்துடன் நீரைக் கிழித்துக் கொண்டு ஒரு நீராவிப் படகு போய்க் கொண்டிருந்தது. அந்தப் படகிலே தான் செய்தித்தாள் வரும். பாலுவுக்குடையதை, அவன் அங்கிருந்தே அந்தப் பாலகனிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறான்.

     புன்னகையுடன் பாலு செய்தித்தாளைக் கையில் வாங்கும் போது கரையோரத்தில் கணகணவென்ற மணிச்சத்தம் ஒலித்தது. அந்தி மங்கும் வேளையாயிற்றே? பிராத்தனை நேரமல்லவா? கூட்டம் கூட்டமாகக் கூடு திரும்பும் பறவைகளைப் போல் குழந்தைகள் விளையாட்டிலிருந்து பிரிந்து ஓடினார்கள். சிறு படகுகள் எல்லாம் உப்பங்கழியிலிருந்து பிரிந்து உள்ளே செல்லும் கால்வாயில் கொண்டு நிறுத்தப்பட்டன.

     வெளிச்சம் மங்கி விட்டது என்றாலும் செய்தித்தாளைப் பிரித்து பாலு தலைப்புகளை மட்டும் பார்த்தான். ஓரிடத்தில் காணப்பட்ட தலைப்பு அவனுடைய விழிகளை அப்படியே தடுத்து நிறுத்தியது.

     “வேலையற்ற பட்டதாரியின் தற்கொலை. முருகூருக்குகருகில் தண்டவாளத்தில் விழுந்து மாண்டான்.

     “குமரேசன் என்ற இளைஞன் நேற்று காலை 3-45 மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வருகையில் முருகூருக்கருகில் தண்டவாளத்தில் விழுந்து உயிர் நீத்தான். குமரேசன் பி.ஏ. பட்டம் பெற்று இரண்டாண்டுகளாக வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்ததாகவும், குடும்பத்தைக் காப்பாற்ற இயலாத வறுமை நிலையில் மனமொடிந்து உயிரை விட்டதாகவும் அவனுடைய சட்டைப் பையில் இருந்த கடித மூலம் தெரிய வருகிறது...”

     இந்த விதமாக அந்த செய்தி ஓடியது.

     பாலுவின் மலர்ந்த முகம் வேதனையை எடுத்துக் காட்டியது.

     பி.ஏ. பட்டம் கலை பயின்ற பட்டதாரி!

     இந்தப் பட்டத்துக்காக அவனைப் போல் அந்த துரதிர்ஷ்ட வாலிபனும் எத்தனை கஷ்டப்பட்டானோ?

     இரண்டு வருஷங்களுக்கு முன் பாலுவும் அந்தக் குமரேசனின் நிலையில் தான் இருந்தான். ஒரு நோக்கு இல்லாமல் வெறுப்பும் நிராசையும் உந்த அவன் நீராவிப் படகு ஒன்றில் ஏறி உட்கார்ந்து பிரயாணம் செய்கையில், அதே கால்வாயில் குதித்து உயிரை விட்டு விடலாம் என்ற எண்ணம் தான் அவன் மனசில் நிரம்பி இருந்தது. கருணை வள்ளலான நந்தா அப்போது அவனருகில் படகில் பிரயாணம் செய்ய வந்து உட்காராது போனால், அவனும் குமரேசனைப் போல் தன் உயிரை முடித்துக் கொண்டிருப்பான். அவர் அவனுடைய வாடி மெலிந்த தோற்றத்தைக் கண்டு இளகிப் பேச்சுக் கொடுத்தார். தெய்வமே மனித உருவில் வந்தது போல் அவனைத் தடுத்தாட் கொண்டார்.

     ஆனால் அப்போதும் அவனுக்கு அந்தப் பட்டத்தில் மோகம் குறைந்திருக்கவில்லை. அவருடைய உதவி கொண்டு அதை முடித்த பின் தான் அதன் மூலம் தான் எவ்வாறு பயனடைகிறோம் என்பதை உணர முடிந்தது. உண்மையில் இப்போது அவன் செய்யும் உத்தியோகத்துக்கு அந்தப் பட்டம் வேண்டிய அவசியமே இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை! கல்வி அறிவின் வளர்ச்சிக்குத் தேவை. அந்த அறிவு வாழ்க்கையை மேம்பட்டு வளமுறச் செய்வதற்கு இணைந்ததாக இருக்க வேண்டும் என்பதை அவன் அப்போது உணர்ந்து படித்தானா? நந்தாவின் உதவி இல்லாமல் அவன் பி.ஏ. பட்டத்தை வாங்கி இருந்தாலும் அவன் இன்னும் வாழத் தெரியாத கோழையாகத்தான் அலைந்து கொண்டிருப்பான்!

     ஆனால் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லுவது போல, அந்தப் பட்ட மோகம் இல்லாது போனால் அவன் அத்தனை கஷ்டங்களையும் சிறுமைகளையும் அடைந்திருக்க மாட்டான். அவற்றின் அநுபவமில்லாமல் உலகை இத்தனை அளவு அவனால் தெரிந்து கொண்டிருக்க முடியாது!

     தாய், தந்தை, சுற்றம், நட்பு எல்லாம் பணம் என்ற விசையிலேதான் அன்பாக மலருகிறது. பெற்றோரின் அன்பு, சகோதர வாஞ்சை எல்லாவற்றையும் புத்தகத்தில் படிப்பது போல் வாழ்க்கையில் காண முடிவதில்லை! அவனுக்கு ஆதரவாக அவனுடைய பெற்றோர் என்ன வழி காட்டினார்கள்? உலக அரங்கிலே வழி தெரியாமல் அலையும் துரும்பு போன்றவன் தானே அவன் அப்போது? தங்கள் கடமையை மறந்து கசப்பை அல்லவோ காட்டினார்கள்? சகோதரி...! அவள் ஒரேயடியாக அப்படி எப்படி மாறினாள் என்பதுதான் பாலுவுக்கு இன்னமும் வியப்பாக இருந்தது.

     மக்களிடையே இலக்கியங்களில் காணப்படும் உண்மை அன்பு மலர்வது எப்போது? பணச்செருக்கு, போலி கௌரவம், வெளிப்பகட்டு, உதட்டுப் பேச்சு எல்லாம் ஒழிந்து மனிதத்தன்மை மாறாதவர்களாக ஆவது எப்போது? சற்று முன் அங்கு விளையாடிய குழந்தைகளைப் போல் எல்லோரும் மாறுவது எப்போது?... அப்படி ஒரு நாள் வருமா? அதிலும், பெண், வித்தியாசங்களை அதிகமாகப் பிஞ்சு உள்ளங்களில் விதைத்து நோகச் செய்கிறாளே, அவள் திருந்தும் நாள் வருமா? மீனாவைப் போன்ற, ஜானகியைப் போன்ற வீண் செருக்குற்ற பெண்கள் உண்மையிலே குடும்பங்களின் அணிகலன்களாகத் திகழும் நாள் வருமா?

     பாலு கையிலே விரித்த செய்தித்தாளுடன் நீரைப் பார்த்துக் கொண்டே இருந்தான். தங்க நிறக் கதிரவன், செஞ்ஜோதியாகி எதிரே தெரிந்த தென்னை மரங்களுக்கப்பால் ஆழ் கடலில் அமிழ்ந்து போனான்.

     “தனியே உட்கார்ந்திருக்கிறாய் போலிருக்கிறது?... பாலு?” என்று கேட்டுக் கொண்டு இளம் நந்தா வந்தான்.

     மங்களூர்ப் பக்கத்து மக்களுக்கே உரித்தான நிறம். ஒளி நிறைந்த கண்களிலே தவழும் அமைதியான பார்வை. உதட்டிலே எப்போதும் மங்காத அன்பைக் காட்டும் நகை. வேறுபாடில்லா அன்புலகைச் சமைக்கும் இளைஞர் பிரதிநிதிகளில் ஒருவனாக பாலுவுக்கு அவன் தோன்றினான்.

     எழுந்து நின்ற பாலு மெல்ல நகைத்து, “இந்த நாட்களில் நான் தனியே இருப்பது போலவே உணருவதில்லை” என்றான்.

     “ஓகோ?” என்று நந்தாவைப் பின் தொடர்ந்து வந்த ஹேமா கேட்டுக் கேலியாக நகைத்தாள்.

     “நான் நினைத்தேன், அப்படியானால் இங்கே அவள் எப்போது வரப்போகிறாள்?...”

     “அவளா? யார் ஹேமா?” என்று புரியாமல் கேட்டான் நந்தா.

     “யார் என்றால், அவள் தான்! அவரைக் கேளுங்கள்!” என்று ஹேமா பின்னும் நகைத்தாள்.

     பாலுவின் உடலில் புது ரத்தம் பாய்ந்து ஓடுவது போல் இருந்தது.

     அவள்...!

     “அட? என்னிடம் சொல்லவே யில்லையே? உனக்கு எப்படித் தெரிந்தது, ஹேமா?”

     “அவரே தான் இந்நாட்களில் தனியே இருப்பதாக உணருவதில்லை என்றாரே? இதைக் கூட அறிவது கஷ்டமா?...”

     அவர்களுடைய சிரிப்பின் ஒலி சுதாவின் கானத்தை நினைப்பூட்டியது அவனுக்கு.

     “ஹேமா சொல்வது நிசம்தானா, பாலு?...”

     பாலுவும் முறுவலித்தான். “இல்லை, நான் இங்கு வருவதற்கு முன் இருந்த உலகம் வேறு. அந்த உலகில் மனிதர்கள் என்னை நிறையச் சூழ்ந்திருந்தார்கள். ஆனாலும் எப்போதும் அநாதரவாக இருப்பது போல் தனிமையை உணர்ந்தேன். இங்கு தனிமையிலும் அவ்விதம் தோன்றவில்லை. மனித இனத்தில் தேய்ந்து வரும் அன்பைப் பாதுகாக்க முடியும் என்று நம்பிக்கையுடன் முயலும் நீங்கள் இருக்கையில்... நான் வேறு என்ன சொல்லுவேன்?...”

     அவன் குரல் நெகிழ்ந்தது.

     “இவர் என்ன சொல்லுகிறார்?” என்று கேட்டாள் அந்தப் பாவை.

     “அதுதான் எனக்கும் புரியவில்லை, ஹேமா!” என்று அவளுடன் சேர்ந்து அவள் கணவனும் நகைத்தான்.

     “உங்களுக்குப் புரியாவிட்டால் வேண்டாம், பிறருக்குப் புரிய வைக்கிறீர்கள்!” என்றான் பாலு.

     வானிலே எண்ணற்ற விண்மீன்கள் சுடரிட்டன. அவைகளின் நடுவே வெள்ளி ஓடம் கம்பீரமாக மிதந்தது. பாலு அந்த அன்புத் தம்பதிகளுடன் பேசிவிட்டுத் தன் விடுதியை நோக்கி நடந்தான். அவனுடைய மனசிலே அன்று நிறைவு இருந்தது. சுதாவின் அழகிய முகம் அங்கே தோன்றித் தோன்றி மறைந்தது. அவள் அவனுடையவளாக, என்றென்றும் அவனுக்குச் சொந்தமானவளாக அவாளா? இந்த நந்தா தம்பதிகளைப் போல அவர்களும் அன்புக்காக வாழ்ந்து வேற்றுமையில்லாத புது உலகைச் சிருஷ்டி செய்யும் பணியில் ஈடுபட முடியுமா? இன்றையக் குழந்தைகளே நாளைய உலகை உருவாக்கும் சிற்பிகள். அந்தப் பளிங்கு உள்ளங்களிலே இன்று பதியும் எண்ணங்களே நாளை அவர்களை உருவாக்குகின்றன. எனவே அந்தப் பிஞ்சுப் பாலர்களிடையே அன்பை விதைத்து நன்மையைப் பரப்பும் பணிக்கு அவளும் தன் நாட்களை அவனுடன் அர்ப்பணிப்பாளா?

     அன்று அவன் கண்ட நிலையில் இன்று அவள் இல்லை. திரைச் சங்கீதம் அவளைப் புகழேணியின் உச்சிக்கு வழி காட்டி விட்டது. திரண்ட பொருளையும் அவள் தேடியிருப்பாள். என்றாலும் அவளுடைய உள்ளம் அன்று போலவே இருக்கும் என்று அவன் நம்பினான்.

     தன்னிடம் உள்ள தெய்வீகக் கலையைக் காசுக்குள் கட்டுப்படுத்த அவள் விரும்பவில்லை; அது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் கூண்டுப் பறவை. சுதந்திரத்துக்காக ஏங்கித் தவிக்கும் நிலையில் இரும்புக் கம்பிகளுக்குள்ளிருந்து பேசும் கிளியைப் போல் அவள் கானம் செய்கிறாள். அந்தக் கிளியைப் பார்த்து நிற்கும் கழுகுக் கண்கள் பல உள்ளன என்ற உண்மை அவன் மனசிலே தீவிரமாகப் பதிந்திருந்தது. அவளை விடுவிக்கும் நிலையைத் தான் எப்படியேனும் அடையவேண்டும் என்ற ஆர்வமே அவனை ஓய்ந்து விடாதபடி கைகொடுத்தது என்று கூடச் சொல்லலாம். இன்று அவன் சுயமாகத் தேடித் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்பவன் மட்டுமல்ல. தன் நிழலில் அவளுக்கு ஆதரவு தர அவனுக்குச் சக்தி உண்டு.

     அவளுடைய உள்ளம் அன்று போலவே இன்றும் இருக்கும் என்று அவன் நம்புவதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. மண்ணுக்குள்ளே மறைந்து கிடக்கும் புதை பொருளைப் போல அது அவனுடைய உள்ளத்தின் ஆழத்திலே இருந்தது.

     ஹேமா அதை வெளியிடும் பாவத்தில் தான் ‘அவளா’என்று கேட்டாளோ என்று கூட அவன் நினைத்தான். ஆண்களை விடப் பெண்கள் ரகசியங்களை மூடி வைக்கும் திறமை குறைந்தவர்கள் என்பதே பாலுவின் எண்ணம். மனிதர்கள் வாழ்க்கைக்கென்று காசை மதியாமல் காசுக்காக வாழ்க்கையை மதிக்கும் இந்நாளில் சிறகில்லாத பட்சியின் நிலையில் தவித்த அவன் மேல் அவர் அத்தனை கருணை கொள்ளக் காரணம் என்ன? அவருடைய இயல்பான அன்பு உணர்ச்சி மட்டும் தானா?

     முதலில் பாலு அப்படித்தான் நம்பினான். ஆனால் அவர் காட்டிய அன்பு அவனைத் திகைக்கச் செய்தது. அவன்பிழைக்க வழியறியாமல் தவிக்கும் எத்தனையோ படித்த இளைஞர்களில் ஒருவன் தான். அவனிடம் வேறு எந்த விசேஷமும் இருக்கவில்லை. அவர் தம்முடைய அன்பினால், அவனுக்குத் தம் ஸ்தாபனங்களில் ஒன்றில் ஏதேனும் வேலை கொடுத்துக் காப்பாற்றியிருக்கலாம். அத்துடன் நின்றிருந்தால் பாலுவுக்குச் சந்தேகம் தோன்றாது. ஆனால் அவர் அவன் எதிர்பார்த்ததற்கு மேல் விசேஷ சிரத்தை காட்டினார். அவன் அரைகுறையாக விட்டிருந்த படிப்பைப் பூர்த்தி செய்ய விரும்புவதை அறிந்தார். அவன் படிக்க உதவினார். வேலையும் தந்தார். இத்தனைக்கும் காரணம் இயல்பாகவே அவரிடமிருந்த இரக்கமும் அன்பும் மட்டும்தானா?

     ‘இல்லை’ என்று அவனுடைய உள்மனம் கூறியது. தன் மனம் விட்டுப் பெரிய நந்தாவிடம் அவன் எத்தனையோ முறைகள் நன்றியைத் தெரிவித்திருக்கிறான். அவர் பதிலுக்குச் சிரித்து விட்டுப் போய்விடுவார். அந்தச் சிரிப்பில் ஏதோ ஒளிந்திருப்பது போல் அவனுக்குத் தோன்றும். ஒரு எண்ணம் மனசிலே எப்படியோ விழுந்து ஊறி விட்டால் அதற்கேற்ப ஒரு சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் முளை விட்டு வளர்ந்து விடுகிறது.

     தன்னுடைய கஷ்டங்களுக்கெல்லாம் தெய்வாதீனமாக இப்படி ஒரு ஆனந்த விடுதலை வரும் என்று அவன் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. பல சமயங்களில் அவன் இது கதையோ, வாழ்க்கையோ என்று பிரமையடைந்து இருக்கிறான். அப்படி அவன் பிரமையடைந்து நம்புவதற்கேதுவாக அவனுக்கு அந்த வருஷம் துணைப்பாடமாக இருந்த கதைப் புத்தகம் அமைந்திருந்தது. அந்தக் கதைக்கும், அவனுடைய வாழ்க்கையில் நேர்ந்திருக்கும் சம்பவங்கள் எதற்கும் ஏதும் நெருங்கிய தொடர்பு இல்லாது போனாலும், தான் யூகிப்பது சரியே என்று அவன் சந்தேகத்தை உறுதியாக்கக் காரணமாக இருந்தது. பிரபல ஆங்கில ஆசிரியர் ஒருவர் எழுதிய நாவல் அது. அதில் வரும் கதாநாயகனுக்கு எதிர்பாராத விதமாகத்தான் திடீர் அதிர்ஷ்டம் அடிக்கிறது. அவன் தாய் தந்தையற்ற சிறுவனாக இருக்கையிலேயே அவன் யாரென்று அறிந்து கொள்ளாத வண்ணம் மறைவிலிருந்து ஒருவர் அவனுக்குக் கல்வியும் செல்வமும் அளித்து அவன் மனிதனாக ஆவதில் சிரத்தை காட்டுகிறார். பையன் குறிப்பிட்ட ஒருவரையே மனசில் வைத்து அவர் உதவிதான் என்று எண்ணியிருக்க, அவன் சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து அந்தச் செல்வமும் அன்பும் கிடைத்திருக்கிறது. இந்த உண்மை தெரிய வரும் போது அவன் உள்ளமுருகி விடுகிறான்.

     பாலு இந்தக் கதையில் மூழ்கிப் போனான். உண்மையில் அவனுக்கு வந்திருக்கும் உதவியும் இப்படி மறைமுகமாகத் தூண்டப்பெற்று வந்திருக்கலாம் அல்லவா? இல்லாவிட்டால், கலாசாலைகளில் படிக்கும் எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு ‘நந்தா’ உபகாரச் சம்பளம் வழங்கப் படுகிறது என்றாலும் அதற்குரிய பரீட்சை தேற வேண்டும்; மேலும் பாதியில் தான் அவன் உதவி பெறுகிறான். மாதா மாதம் நந்தாவிடமிருந்து - தனியாகவன்றோ அவனுக்குப் பணம் வந்தது? அது எப்படி? நந்தா குடும்பத்தினர் அவனிடம் நெருங்கி விசுவாசம் காட்டுவானேன்? குடும்பத்தில் ஒருவன் போலல்லவோ அவன் கருதப்படுகிறான்?

     அவனுக்கு வேண்டியவராக, அவன் நலனில் மிகுந்த சிரத்தை கொள்ளக் கூடியவராக இந்த உலகில் அவன் யாரை நினைக்கப் போகிறான்? தாய், தந்தை, சகோதரி முதலிய அவனைச் சேர்ந்த பந்துக்கள் தாம் அவனை நேரிலேயே விரட்டி விட்டார்களே? பின் வேறு யாராக இருக்க முடியும்?

     அவள், அவளாகத்தான் இருக்க வேண்டும்!

     பெரிய நந்தா இன்னாரைத்தான் அறிவார், இன்னாரை அறிய மாட்டார் என்று சொல்ல முடியுமா? பகிரங்கமாக சுதாவால் அவனுக்கு எப்படி உதவி செய்ய முடியும்?... எனவே அவள் தான் மறைமுகமாக அவனைக் கண்காணித்து வர வேண்டும்!

     நாடகத்தின் காட்சிகளும் ஜோடனைகளும் நடிகர்களும் அற்புதமாக இருந்த போதிலும் திரை தூக்குபவனின் ஒத்துழைப்பு இன்றி அவை உயிர் பெற முடியாது. அப்படி அவனுடைய முன்னேற்றத்தில் சிரத்தை கொண்ட ஒருவர் உண்டு... அது... சுதாவாகத்தான் இருக்க வேண்டும்! ஹேமா இதைக் கருத்தில் வைத்துத்தான் அவனிடம் கேலியாகக் கேட்டு இருக்கிறாள்.

     இந்த முடிவுக்கு வந்ததும் அவனுடைய உள்ளம் சுதாவை நோக்கித் தாவியது. அவனுடைய மனக்கண் முன் அவள் நின்றாள். பெருமிதமும், பூரிப்பும், நன்றியுணர்ச்சியும் அவனுடைய விழிகளில் போட்டியிட்டன. ‘சுதா...!’ என்ற சொல்லிலே அவன் கரைந்து போனான்.

     டாண் டாண் என்று மாதா கோயிலின் மணி கம்பீரமாக ஒலித்தது.