உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சிலையும் நீயே சிற்பியும் நீயே 1. நம்பி கை வை! நம்பிக்கை வை! "ஒரு சிறிய விதைக்குள் தான் மாபெரும் தேக்கு மரம் உறங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு முட்டைக்குள் தான் பறவை வெளிவரக் காத்திருக்கிறது. ஒரு பாறைக்குள் தான் ஒரு அழகிய சிற்பம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. உங்கள் உயர்ந்த கனவுகளுக்குள் தான் உங்கள் இலட்சியம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது" என்கிறார் இங்கிலாந்து சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன். ஆம்... உங்களுக்குள் தான் ஒரு சாதனையாளர் ஒளிந்து கொண்டு இருக்கிறார். சாதிக்க ஆசைப்பட்டு, தன் திறமையையும், உழைப்பையும் பெருக்கிக் கொள்பவர்களுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் சாதனையாளர் மெல்ல மெல்ல வெளிப்படுகிறார். ஒரு பாறை வெறும் பாறையாக, குத்துக்கல்லாக ஒரு இடத்தில் இருக்கும் போது அது யார் கண்ணிலும் படுவதில்லை. போவோர் வருவோரின் கவனத்தையும் ஈர்ப்பதில்லை. அதுவே சிற்பி ஒருவரால் திறம்பட செதுக்கப்பட்டு, சுற்றிலுமுள்ள தேவையற்ற கற்துகள்கள் உளி கொண்டு நீக்கப்பட்டு, சிலையாக வடிவமைக்கப்பட்டு நிறுத்தப்படும் போது, அது அனைவராலும் கவரப்பட்டு ஒரு தனி அந்தஸ்தைப் பெற்று விடுகிறது. நீங்கள் வெறும் பாறையாக - சாதாரண மனிதராகவே இருந்து விடுகிறீர்களா? அல்லது அழகிய சிற்பமாக சாதனையாளராக உருவாக விரும்புகிறீர்களா? யாருக்குத்தான் சாதனையாளராக வேண்டும் என்ற ஆசை இருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? அப்போது இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள். அதாவது உங்கள் 'மனம்' என்னும் உளி கொண்டு உங்களிடமுள்ள கோபம், பேராசை, பொறாமை, சோம்பல் போன்ற தேவையற்ற கற்துகள்களை நீக்கிவிட்டு உங்களை நீங்களே செதுக்கினால் அழகிய சிற்பமாக, ஒரு சாதனையாளராக சாதிப்பீர்கள். இது உறுதி. ஆம்... உங்கள் சிலையை வடிவமைக்கும் சிற்பி நீங்கள் தான். சிலையும் நீயே! சிற்பியும் நீயே! உங்களைச் சாதனையாளராக்க, வெற்றி கண்ட மனிதராக்க, சரித்திர நாயகராக்க பின்பற்றக் கூடிய ஒரு சில சுய முன்னேற்றக் கருத்துக்களைக் கூறும் கட்டுரைத் தொகுப்பு இது. எந்த ஒரு சாதனையாளராகட்டும், எந்த ஒரு சரித்திர புருஷனாகட்டும் அவர் வாழ்க்கை வரலாற்றை - வெற்றிச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் அதில் ஆணிவேராக இருப்பது எது தெரியுமா? 'நம்பிக்கை'. நம்மால் அதைச் சாதித்து விட முடியும், நம்மால் வெற்றி காண முடியும் என்று ஆழ் மனதில் விதைக்கப்பட்ட நம்பிக்கை விதைதான், விருட்சமாகி சாதனைக் கனிகளைத் தந்திருக்கிறது. "மனிதன் நம்பிக்கை (சிரத்தை) மயமானவன். நம்பிக்கை அவனவனிடம் உள்ள இயல்புக்குத் தக்கபடி இருக்கும். எவனுக்கு எதில் நம்பிக்கை உண்டாகிறதோ அவன் அதுவாகவே ஆகிறான்" என்கிறது பகவத் கீதை. ஆம்... ஆழ் மனதில் நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் வெல்வீர்கள். 'நம்பிக்கை' பற்றி ஒரு சிறு கதை உண்டு. ஒரு நாட்டில் பல மாதங்களாக மழையே இல்லை. வானம் பொய்த்து விட்டதை நினைத்து உழவர் தவிக்க, உணவுப் பஞ்சத்தால் மக்களும் தவிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு துறவியின் கூற்றுப்படி, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி வருண பகவானை நோக்கி ஜெபம் செய்ய ஆரம்பித்தார்கள். வரும் போது ஒவ்வொருவரும் உட்கார விரிப்பு, குடிக்கத் தண்ணீர் என அவரவர்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வந்திருந்தார்கள். ஜெபம் ஆரம்பித்து ஓரிரு மணி நேரம் ஆனது. மேகங்கள் திரள ஆரம்பித்தன. வருண பகவான் கண் திறந்தார். மழை கொட்டியது. யாருக்காக? ஒரே ஒரு குழந்தைக்காக. ஆம்... அந்தக் கூட்டத்தில் ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை மட்டும் நிச்சயமாக மழை வரும் என்று நம்பி, மனதில் ஆழமாக நினைத்து 'குடை' எடுத்து வந்திருந்தது. மற்ற அனைவரும் ஏதோ ஜெபம் செய்கிறோம், மழை உடனே வரவா போகுது? என்ற ஒரு அவநம்பிக்கையில் குடை தேவையில்லை என்று நினைத்திருக்கிறார்கள். ஒரு சிறு குழந்தையின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு இறைவன் இறங்கி வருகிறான் என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் உங்களைப் பற்றி, உங்கள் சாதனை பற்றி ஆழ்ந்த நம்பிக்கை வைத்தால் தெய்வ பலம் நிச்சயமாகக் கை கொடுக்கும் என நம்பலாம் அல்லவா? "யானையின் பலம் எதிலே? தும்பிக்கையிலே! மனிதனோட பலம் எதிலே? நம்பிக்கையிலே!" என்ற திரைப்படப் பாடல் வரிகளை நினைவு கூறுங்கள். சாதனையாளர்கள் சிலரை நினைவு கூர்வோமா? போலியோவால் கால்களில் சக்தி இழந்து, மருத்துவரால் நடக்க இயலாதவர் என்று கைவிடப்பட்ட வால்டர் டேவிஸ். தன் மேல் உள்ள ஆழ்ந்த நம்பிக்ககயால், உயரம் தாண்டும் போட்டியில் நிறைய பயிற்சிகள் எடுத்து 6 அடி 11 1/2 அங்குலம் தாண்டி உலக சாதனை படைத்தார். ஏழை விறகு வெட்டியின் மகனாகப் பிறந்த ஆபிரஹாம் லிங்கன் தன் மேல் எவ்வளவு தூரம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தால் அமெரிக்க ஜனாதிபதி அந்தஸ்து அளவிற்கு உயர்ந்திருக்க முடியும்! வலது கால் முழுவதும் செயலற்ற நிலையில் சக்கர நாற்காலியிலேயே உலகைச் சுற்றி வந்து 12 ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாகப் பணியாற்றிய ரூஸ்வெல்ட்டின் தன்னம்பிக்கையை அளவிட முடியுமா? காது தனக்கு சுத்தமாகக் கேட்கவில்லையே என்று சோர்ந்து விடவில்லை பீத்தோவன். 'ஒன்பதாவது சிம்பொனி' என்ற இசையை அமைத்து உலகப் புகழ் பெற்ற இசை அமைப்பாளரானார். "பாரடைஸ் லாஸ்ட்" உள்பட புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகளை மக்களுக்கு வழங்கிய கவிஞர் மில்ட்டன் பார்வையற்றவர். "கத்தியின்றி இரத்தமின்றி சுதந்திரம் பெறுவோம்" என்ற ஆழ்ந்த நம்பிக்கையால் அஹிம்சை முறையினால் சுதந்திரம் பெற்றுத் தந்தாரே நம் மகாத்மா. இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களில் பலருக்கு பல விஷயங்களில் நல்ல திறமை இருக்கலாம். உழைக்கும் தன்மையும் இருக்கலாம். ஆனால் இவை இருந்தும் நீங்கள் இன்னும் சாதனையாளர் வரிசையில் சேராமல் தடுப்பது எது? 'நிச்சயம் வெற்றி பெறுவேன்' என உங்களை நீங்கள் முழுமையாக நம்பாததே காரணம். முதலில் "உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். அதன்பின் இறைவனை நம்புங்கள். உங்களால் இந்த உலகையே அசைத்துக் காட்ட முடியும்" என்கிறார் சுவாமி விவேகானந்தர். உங்கள் மேல் நீங்கள் முழு நம்பிக்கை வைத்தால் போதும். இறை நம்பிக்கையும் கூடவே இருந்தால், இறையருள் ஓடி வந்து உங்களுக்கு உதவும். "இறை சக்தியானது நம் கண்ணுக்குத் தெரியாமலேயே பின்புலத்தில் நமது பலவீனத்திற்கு மாற்றாகச் செயல்படுகிறது. நம்முடைய நம்பிக்கையும், வைராக்கியமும் தோற்றவிடத்தும் அது நம்மை ஆதரித்துக் காக்கிறது. பார்வை இழந்தவர்களுக்குப் பார்வை அளிப்பதும், முடவர்களை மலையேற வைப்பதும் இந்த சக்தியே" என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர். பஞ்ச பூதங்களில் கலந்துள்ள இறை சக்தியின் ஒரு துகளே உங்களில் உயிர் சக்தியாக இருக்கிறது. உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உயிர் சக்தியை இயக்கிப் பாருங்கள். இறை சக்தியும் உங்களுள் கலந்துவிட, பிறகென்ன... சாதனையாளர் பட்டியலில் உங்கள் பெயரும் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும். உங்களை நீங்களே செதுக்க ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? நிச்சயம் அழகிய சிற்பம் உருவாவது உறுதி, வாழ்த்துக்கள். சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|