சிலையும் நீயே சிற்பியும் நீயே

15. “எண்ணி... எண்ணிப் பேசலாமே!”

     சிலையும் நீயே! சிற்பியும் நீயே! என்கிற இந்தத் தொடரைப் படித்து அதன்படி உங்களை நீங்கள் நேர்த்தியான சிலையாக வடிவமைத்துக் கொண்டிருக்கும் சிறந்த சிற்பியாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் எது தெரியுமா? நீங்கள் பேசுகின்ற தருணங்களே! துணியை மீட்டரால் அளக்கிறோம். தண்ணீரை லிட்டரால் அளக்கிறோம். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் அளக்க ஒரு அளவுகோல் இருக்கிறது. சரி... ஒரு மனிதனை அளக்கும் அளவுகோல் எது தெரியுமா? அவனது நாக்கு. ஒரு மனிதனது பேச்சைக் கொண்டே அவனை அளந்து விட முடியும். அதனால் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் “யாகாவாராயினும் நாகாக்க” என்கிறார். எனவே, இன்றிலிருந்து நீங்கள் எண்ணி, எண்ணிப் பேசும் ஒரு கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

     அதென்ன? எண்ணி... எண்ணி... என்று கேட்கிறீர்களா எண்ணி - யோசித்து, சிந்தித்துப் பேச வேண்டும். எண்ணி - கணக்காக, அளவாகப் பேச வேண்டும்.

     “அன்றைக்கு நான் கோபத்திலே அப்படிப் பேசி இருக்கக் கூடாது. என் பேச்சாலே வேலையே போயிடுச்சு.”

     “அந்தம்மா வீட்டிலே பொண்ணு கொடுக்கவே பயமா இருக்கு. அவங்க ஒரேயடியா யாரையும் மதிக்காமே பேசுவாங்க.”

     “அன்று மட்டும் நான் துடுக்காப் பேசாமே இருந்திருந்தா நான் இந்நேரம் இப்படிப் பிறந்த வீட்டிலே வந்து உட்கார்ந்து இருக்க மாட்டேன்.”

     இதெல்லாம் எண்ணி, எண்ணிப் பேசாதவர்கள் கூறிப் புலம்பும் வார்த்தைகள்.

     இன்றல்ல... நேற்றல்ல... இதிகாச காலம் தொட்டே எண்ணி (யோசித்துப்) பேசாத வார்த்தைகளால் இழந்தவைகள் ஏராளம்.

     யோசிக்காமல் தனக்கு “இரண்டு வரங்கள் வேண்டும்” என்று கேட்ட கைகேயியின் வார்த்தைகளால் தசரதன் தன் உயிரையே இழந்தார்.

     சூதாட்டத்தில் துரியோதனனிடம் “பாஞ்சாலியைப் பணயம் வைக்கிறேன்” என்று சொன்ன தருமரின் வார்த்தைகளால் உருவானது பாரதப் போர்.

     யோசிக்காமல் பேசிய வார்த்தைகளால் எத்தனையோ சாம்ராஜ்யங்களே சரிந்திருப்பதை நோக்கும் போது எண்ணிப் பேச வேண்டியதன் அவசியம் புரிகிறது அல்லவா? வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, அன்றாடம் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. கடலில் தான் ஓயாத அடுத்தடுத்த அலைகள் என்பதில்லை. நம் சம்சார சாகரத்திஉம் ஓயாத அடுத்தடுத்த அலைகள். சந்தோஷ அலை, துக்க அலை என்று மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த அலைகளில் எதிர்நீச்சல் போடும் நாம், “நாக்கு” என்கிற துடுப்பை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். இனி எங்கெல்லாம் எண்ணிப் (யோசித்துப்) பேச வேண்டும் என்று பார்ப்போம்.

     - வீட்டுப் பெரியவர்களிடம்: வீட்டுப் பெரியவர்களிடம் பேசும் போது யோசித்துப் பேசுவதே நல்லது. அனுபவ அறிவு அதிகம் உள்ள அவர்களிடம் யோசிக்காமல் ‘தாட் பூட்’ என்று பேசினால் பின்னால் சங்கடத்திற்குள்ளாவது நீங்கள் தான். “உங்ககிட்டே கேட்கலே, உங்களுக்கு இதெல்லாம் புரியாது”, “வயசாயிடுச்சுன்னா ஒரு பக்கமா ஓரமா இருக்க வேண்டியது தானே” - இந்தப் பேச்செல்லாம் யோசிக்காமல் பேசி விடாதீர்கள். நீங்கள் உங்கள் பெற்றோரை மதிக்கும் அதே அளவே உங்கள் பிள்ளைகளால் நாளை நீங்கள் மதிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

     - அலுவலக மேலதிகாரியிடம் : எந்த ஒரு அதிகாரியும் தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர் வேலை செய்யத் தெரிந்தவராக, தான் சொல்வதைக் கேட்டு, திறமையாக வேலை செய்யத் தெரிந்தவராக இருப்பதையே விரும்புவார். தன்னை விட அறிவாளியாக, மேதாவித்தனத்தைக் காட்டுபவராக இருப்பதை விரும்புவதில்லை. அவரிடம் “இந்த ஒர்க்கை இப்படிச் செஞ்சாத்தான் சீக்கிரம் முடிக்க முடியும்”, “இது சரிப்பட்டு வராதுன்னு எனக்கு முன்னாலேயே தெரியும்” என்றெல்லாம் யோசிக்காமல் பேசாதீர்கள். தான் சொல்வதற்கு அவ்வப்போது கைதூக்கும் கீழ் ஊழியரையே ஒவ்வொரு மேலதிகாரியும் விரும்புவார். தலைதூக்கும் ஊழியரை விரும்புவதில்லை என்பதை மனதில் கொண்டு யோசித்துப் பேசுங்கள்.

     - மருத்துவமனையில் உள்ள நோயாளியிடம் : மருத்துவமனையில் உள்ள உங்கள் பேச்சு அந்த நோயாளிக்கு நோயை குணப்படுத்தும் மருந்து போல இருக்க வேண்டும். இருக்கும் நோயை அதிகப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. “நல்லா கவனிச்சுப் பார்க்கச் சொல்லு. அல்சர்ன்னுதான் என் பிரண்டு இதே ஆஸ்பத்திரிக்கு வந்தான். சரியா கவனிச்சுப் பார்க்கலே. கான்சர் முற்றி போன மாசம் இதே தேதியிலே தான் போயிட்டான்.” “நல்லா உடம்பை கவனிச்சுக்குங்க. இந்த வயசிலே ஏன் இப்படி? பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் கூடப் பண்ணலே.” இந்த மாதிரிப் பேச்செல்லாம் வேண்டாம்.

     - உங்கள் குழந்தைகளிடம் பேசும் போது : உங்கள் குழந்தைகளிடம் பேசும் போது கூட சமயங்களில் யோசித்துப் பேசுவதே நல்லது. உங்கள் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் உங்களையே பின்பற்றுகிறார்கள் என்பது எப்போதும் உங்கள் நினைவில் இருக்கட்டும். “எதிர்வீட்டு மாமா வந்தா ‘அப்பா வீட்டிலே இல்லே’ன்னு சொல்லு.” “இங்கே பாருடா, நானும் உங்க பெரியம்மாவும் பேசினதை உங்க அப்பாகிட்டே சொன்னேன்னு தெரிஞ்சுது, நீ அவ்வளவுதான்.” “உங்க டீச்சர் சொன்னாளாக்கும், அவளுக்கே ஒண்ணும் தெரியாது.” இப்படி பொய் சொல்லுதல், மறைத்தல், மதிக்காமல் இருத்தல் போன்றவைகளை நீங்களே கற்றுத் தராதீர்கள். பிறகு “யார்கிட்டே இந்தப் பழக்கமெல்லாம் கத்துக்கிட்டே?” என்று அதட்டாதீர்கள்.

     - வீட்டில் மற்றவர்களிடம் : வீட்டுக்கு வீடு வாசற்படி. அதாவது வீட்டுக்கு வீடு அவரவர்களுக்குத் தகுந்த பிரச்சனைகள். பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ள நாம் அதிலிருந்து விடுபட்டுக் கொள்ள வழிமுறைகளை நாமே கண்டுபிடித்துச் செயல்பட வேண்டும். அதை விடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி குறை கூறி வார்த்தைகளை அதிரங்களாக வீச வேண்டியதில்லை. “நான் போய்ச் சேர்ந்த பிறகு தான் இந்த வீடு உருப்படும்.” “போ... அப்படியே ஒழிஞ்சு போயிடு” என்கிற வார்த்தைகள் இனி வேண்டாம். கேட்கும் உள்ளங்கள் வேதனையால் கசக்கிப் பிழியப்படும்.

     - உங்களிடம் உதவி கேட்க வருபவரிடம் : வாழ்க்கையில் மனிதருக்கு ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவது இயற்கை. உங்கள் நெருங்கிய உறவினரோ, நண்பரோ உங்களிடம் பண உதவியோ வேறு ஏதேனும் உதவியோ கேட்டு வர நேரிடலாம். அவரிடம் பேசும் போது யோசித்தே பேசுங்கள். உங்களுக்குக் கொடுக்க முடிந்தால் கொடுத்து உதவுங்கள். மனதார வாழ்த்துவார்கள். கொடுக்க முடியாத பட்சத்தில் உதவ முடியாததற்கு வருத்தப்படுவதாகச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு “உனக்கு இந்த நிலைமை வந்திருக்க வேண்டாம்? உன் நிலைமை எதிரிக்கும் கூட வரக்கூடாது” போன்ற வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி, வெந்நீர் ஊற்றும் வேலையை மறந்தும் செய்யாதீர்கள்.

     இனி... எங்கெல்லாம் எண்ணி (கணக்காக) அளந்து, பேச வேண்டும் என்று பார்ப்போம்.

     - வீட்டில் வேலை பார்ப்பவரிடம்: உங்களிடம் வேலை பார்க்க வந்தவர்கள் வேலை பார்த்து, சம்பளம் வாங்க மட்டுமே வந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களில் சிலர் வேலைக்காரியிடம் வீட்டு விஷயங்கள் அனைத்தையும் நெருங்கிய தோழியிடம் சொல்வதைப் போல சொல்வீர்கள். அவளும் உங்கள் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் கடுகு முதல் பாங்க் லாக்கரில் இருக்கும் காசு மாலை வரை தெரிந்து வைத்திருப்பாள். இடையிடையே உங்களுக்கே அறிவுரையும் ஆலோசனையையும் வழங்க ஆரம்பிக்கும் போதுதான் நீங்கள் விழித்துக் கொள்கிறீர்கள். அவளை வெறுக்க ஆரம்பிக்கிறீர்கள். இந்த நிலைக்குக் காரணம் யார்? முழுக்க முழுக்க நீங்கள் தான். ஆரம்பத்திலிருந்தே நீங்கள் அவளிடம் அளந்து பேசி இருந்தால் அவளும் நிலைத்து வேலை பார்த்திருப்பாள்.

     திருமணமான புதிதில் புகுந்த வீட்டினரிடம் : உங்களுக்கு சமீபத்தில் திருமணமாகி புகுந்த வீட்டில் வலது கால் எடுத்து வைத்திருக்கிறீர்களா? இந்த நேரத்தில் தான் நீங்கள் எண்ணி, எண்ணி அதாவது யோசித்து, அளந்து பேச வேண்டியது அவசியம். உங்கள் பிறந்த வீட்டு விஷயங்கள் அவ்வளவையும் மெகாசிரியல் மாதிரி தத்ரூபமாக ஒன்றுவிடாமல் மனதில் பதிய வைத்துக் கொள்வதோடு, ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படும் நேரம், “நீயே தான் ஒரு தடவை சொன்னே. உங்க சித்தி சரியில்லேன்னு” என்று சொல்லும் போதுதான் உங்கள் தேவையற்ற லொட லொட பேச்சின் விளைவு உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்.

     - உடன் பணிபுரிவோரிடம் : உங்களுடன் பணிபுரிவோர் அனைவரும் நல்ல எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. உடன் பணிபுரிபவர்களுக்கும், நண்பர்களுக்கும் வித்தியாசத்தை நன்கு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். கூட வேலை பார்ப்பவர் அனைவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்ல முடியாது. தேவையில்லாமல் வீட்டு ரகசியங்கள், சக நண்பர்கள் பற்றிய கிசுகிசுக்கள் போன்றவைகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டாம். கணக்காக, அளவாக நட்பு வைத்துக் கொண்டால் போதும். அந்த நட்பு நீடித்திருக்கும்.

     - முதன் முதலில் அறிமுகம் ஆகும் போது : உறவினர், நண்பர்களிடம் முதன் முதலாக அறிமுகம் ஆகிறீர்களா? இப்போது நீங்கள் அளந்து பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய தற்பெருமை, உங்கள் குடும்பம் பற்றிய செல்வச் சிறப்பு போன்றவற்றை எடுத்த உடனேயே எடுத்து விட வேண்டாம். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள். பொது விஷயங்கள் சில பேசுங்கள். “இன்னும் கொஞ்ச நேரம் நம்முடன் பேச மாட்டார்களா?” என்று அவர் நினைக்கும்படி உங்கள் பேச்சு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். “அடுத்தமுறை இவர்கிட்டே வந்து மாட்டக்கூடாது” என்று அவர் நினைக்காதபடி வைத்துக் கொள்ளுங்கள்.

     - இன்டர்வியூ நேரத்தின் போது : புதிதாக வேலை தேடிச் செல்கிறீர்களா? அல்லது பதவி உயர்வு இன்டர்வியூவா? இந்த நேரத்திலும் நீங்கள் உங்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு மைனஸ் மதிப்பெண்களையே வழங்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கேட்ட கேள்விக்குத் தெளிவான, சுருக்கமான விடையே தேர்வு செய்யப்படுவதற்கு ஏற்றது.

     மொத்தத்தில் அளவான பேச்சு உங்கள் வாழ்க்கைத் தரத்தை நிச்சயமாக உயர்த்தும்.

     “பேசாத வார்த்தைக்கு நீங்கள் எஜமான், பேசிய வார்த்தை உங்களுக்கு எஜமான்”

     என்கிறார் அறிஞர் கார்லைல்.

     என்றுமே எஜமானாக இருக்க விரும்பும் நீங்கள் இனிமேல் எண்ணி, எண்ணிப் பேசுவீர்கள் தானே!