சிலையும் நீயே சிற்பியும் நீயே 22. “உள்ளத்தனையது உயர்வு”
“வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.” - இது வள்ளுவர் வாக்கு. நீர் மட்டத்தின் உயரத்திற்குத் தகுந்தவாறு தாமரையின் தண்டுப் பகுதி நீள்வதால், அழகான தாமரை மலர் மிதந்து அதன் அழகு உலகிற்கு வெளிப்படுகிறது. அதேபோல்தான் மனிதரின் உயர்வான வாழ்வும், உள்ளம் விரிய விரிய, பரந்த மனப்பான்மை ஆக ஆக அவன் திறமை எனும் அழகு வெளிப்பட்டு உயர்வு தானாக அவனைத் தேடி வருகிறது. உங்களில் எத்தனையோ பேருக்கு நல்ல அறிவு இருக்கலாம். திறமை இருக்கலாம், உழைப்பும் இருக்கலாம். திறமையை வெளிப்படுத்த வசதி வாய்ப்புகளும் இருக்கலாம். ஆனால் ஏன் நீங்கள் இன்னமும் உயர்வடையவில்லை? உங்கள் திறமையும் உழைப்பும் ஏன் வெளி உலகிற்கு வராமல் அப்படியே குளத்தில் மூழ்கிய தாமரை போல் அமுங்கிக் கிடக்கிறது? உங்கள் மனம் தாமரைத் தண்டு போல நீளவில்லை, உயரவில்லை. அதாவது மனமானது பரந்து விரியாமல் சுருங்கிக் கிடக்கிறது. மனம் குறுகக் குறுக, குறுகிய மனப்பான்மை உங்களுக்குள் வேரூன்ற, உங்கள் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுகிறது. பரந்த மனப்பான்மை என்றால் என்ன? தன்னைப் போலவே பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்கிற எண்ணம். அது இருந்தாலே போதும் மனம் பரந்து விரிந்து விடுகிறது. மனம் பரந்து விரிய விரிய, உள்ளம் உயர உயர உங்கள் வாழ்விலும் உயர்வு தானாகவே தேடி வரும், என்பதில் சந்தேகம் இல்லை. பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்று ஒருவன் நினைக்கும் போதே அவனுள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா? தன்னிடமிருப்பதைப் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்று மனதார நினைக்கும் போது அவனுள் “ஈகைக்குணம்” வளர்கிறது. பிறர் நன்றாக வாழ ஏதாவது உபகாரம் செய்ய நினைக்கும் போது, அவனுள் “சேவை மனப்பான்மை” வளர்கிறது. பிறருக்காக, அநீதியை எதிர்த்து அவர்களுக்காகப் பேச நினைக்கும் போது அவனுள் ‘தர்ம சிந்தனை’ மேலோங்குகிறது. பிறருக்காக அறிவுரை, ஆலோசனைகள் சொல்ல முற்படும்பொழுது, அவனிடமிருந்த ‘அறிவு’ வெளிப்படுகிறது. பிறருக்காகப் பரிந்து பேசி சமுதாயத்தினர் முன் துணிவுடன் நிற்கும் போது, அவனிடம் ஒரு புது ‘தைரியம்’ பிறக்கிறது. பிறகென்ன... அறிவுடன் சிந்தித்து, தைரியம் வெளிப்பட, தர்ம சிந்தனையுடன், சேவை மனப்பான்மையுடன் ஈகை குணத்துடன் ஒருவன் வாழும் பொழுது உயர்வு தானாகவே அவனைத் தேடி வருகிறது. அதிலும் இத் துணை குணநலன்களுடன், பிறருக்காக இதைச் செய்ய முற்படும் பொழுதே இறை அருள் தானாகவே வந்து சேர, அவன் உயர்வு உலகத்தவர் முன் வெளிப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து புரிகிறதல்லவா? ‘உள்ளத்தனையது உயர்வு’ என்று. இதற்கு ஒரு குட்டிக் கதை இதோ: ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். சொர்க்கலோகம் போல் வாழ்க்கை இருந்தும் அவன் எப்போதும் மனவாட்டத்துடன், கவலையுடன் இருந்தான். என்னதான் பொன் ஆபரணங்களையும், பட்டாடைகளையும் சுகபோகங்களையும் அவன் முன் குவித்த போதும் அவன் மனவாட்டத்தைப் போக்க முடியவில்லை. இதனால் கவலைப்பட்ட அவன் தந்தையாகிய அரசர், “இளவரசர் கவலையைப் போக்க என்ன வழி?” என்று ஒரு குருவை அழைத்துக் கேட்டார். இளவரசரின் கவலையை நான் போக்கி விடுகிறேன் என்று உறுதி கூறிய குரு, இளவரசனிடம், “நான் ஒரு வாசகம் எழுதித் தருவேன். அதிகாலையில் எழுந்து அதனைப் படித்து அதன்படி நடக்க வேண்டும். ஒரு சில நாட்களில் உங்களிடம் பெரும் மாற்றத்தைக் காணலாம்” என்று கூறி ஒரு வாசகத்தை எழுதித் தந்தார். குருவின் ஆணைப்படி நடந்த இளவரசன் மனதில் இனிய மாற்றம் ஏற்பட்டு சந்தோஷம் அடைந்தான். இளவரசன் மன மகிழ்ச்சியால் அரசர் மகிழ நாடே உற்சாகம் பெற்றது. குரு எழுதித் தந்த வாசகம் என்ன தெரியுமா? “யாருக்காவது தினமும் ஏதாவது நன்மை செய்” என்பதே. இன்றிலிருந்து, ஏன் இப்போதிருந்தே இந்த வாசகத்தின் படி கடைப்பிடித்து வாழ்ந்தும் பாருங்கள். தேவைப்பட்டால் உங்கள் கண்ணில் அடிக்கடி படும்படியாக இந்த வாசகத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மேஜை மேல், நீங்கள் அடிக்கடி பார்க்கும் சுவரில், நீங்கள் அடிக்கடி திறக்கும் ஆஃபீஸ் ப்ரிஃப்கேஸ் எனும் கைப்பெட்டியில், உங்கள் டைரியின் முதல் பக்கத்தில் இப்படி எதிலாவது இந்த வாசகத்தை எழுதி வைத்துக் கொண்டு, முதலில் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். மனதில் ஆழமாக ஒரு விஷயம் பதிந்து விட்டாலே போதும், செயல்பாடு எளிதாக நடைபெற்று விடும். நீங்கள் மனதார செய்த உதவியை, நன்மையை ஏற்றுக் கொண்ட சிலர் எளிதில் உங்கள் உதவியை, உங்களை மறப்பதில்லை. அவர்களும் உங்களைப் பற்றி நல்லவிதமாக நினைக்க நினைக்க அவர்களை அறியாமல் நாள்தோறும் உங்களை வாழ்த்துவார்கள். நம் வாழ்க்கையில் மற்றவர்களது வாழ்த்தும் ஆசியும் நமக்கு, நம் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று. எனவேதான் திருமண நாளில் நூற்றுக்கணக்கானோர் ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர பலர் தம்பதியரை வாழ்த்துகிறோம். ஒன்று சேர பலர் வாழ்த்தும் போது அவர்கள் வாழ்வு நிச்சயம் வளமுடையதாகி விடுகிறது. இதே போல் நாம் அன்றாடம் பிறருக்கு நன்மை செய்து வாழும் போது நாளடைவில் ஆயிரக்கணக்கான நெஞ்சங்கள் நம்மை வாழ்த்தும், உன்னதமான வாழ்வு தாமாகவே வந்து அமையும். “நன்மையின் பொருட்டு நல்லது செய்பவன் புகழையோ, வெகுமதியையோ பெற விரும்புவதில்லை. ஆனால் இறுதியில் அவன் இரண்டையும் பெறுவது உறுதி” என்கிறார் ‘பென்’ எனும் அறிஞர். சரி... யாருக்காவது ஏதாவது நன்மை செய்ய உங்களைத் தடுப்பது எது? இந்தக் கேள்வியைப் பலரிடம் கேட்டுப் பாருங்கள். அனைவரின் ஒட்டுமொத்தமான பதில் என்ன தெரியுமா? அவர்கள் சரியில்லை. அவர்கள் எனக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்வதில்லை. அவர்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை” என்பதே. நீங்களும் இவ்வாறு சொல்பவராக இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் பார்வையில் தான் கோளாறு இருக்கிறதே தவிர மற்றவரிடம் இல்லை. நீங்கள் மாற வேண்டுமே தவிர உலகமே ஒட்டுமொத்தமாக மாற வேண்டும் என்று நீங்கள் நினைப்பது தவறு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் இருப்பார்கள். அது படைப்பின் ரகசியம். அவரவர் பிறந்த வினைப்பயன்படி அவர்கள் எண்ணம், சொல், செயல், இருக்கும். அவர்கள் அனைவருமே திருந்தி நல்வழிப்பட்டால் தான், நீங்கள் அவர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும் என்று ஏன் பிடிவாதமாக நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் பங்கிற்கு நன்மைகள் பல செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் எதிரிலுள்ளோர் மாறுகிறார்களா, இல்லையா என்று பாருங்கள். ஒரு குட்டிக் கதை உண்டு. ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவன் எதிலுமே திருப்தி அடையாதவனாக நிம்மதி இழந்து காணப்பட்டான். உடனே அரண்மனை ஜோதிடரை அழைத்து எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் என்று கேட்க அவர் உடனே, “உங்களுக்கு அதிர்ஷ்ட நிறம் பச்சை. உங்கள் கண்ணில் படும் அனைத்துப் பொருட்களும் பச்சை நிறமாக இருந்தால் உங்கள் மனதில் ஒரு நிம்மதி பிறக்கும். தெளிவு ஏற்படும். இது உறுதி” என்றார். “ஃப்பூ... இதுதானா விஷயம்?” என்று ஆச்சரியப்பட்ட அரசர் அரண்மனை சேவகர்களை அழைத்து, “இந்த நகரம் முழுவதையும் பச்சை நிறமாக்குங்கள். என் கண்ணில் படும் அனைத்துப் பொருட்களும் பச்சையாக இருக்க வேண்டும். பச்சை நிறத்தைத் தவிர எதையும் என் கண் பார்க்கக் கூடாது” என்று கட்டளை இட்டார். சாலைக்குப் பச்சை வண்ணம், சாலை ஓர மரங்களுக்குப் பச்சை நிறம், வாகனங்களுக்கு பச்சை வண்ணம், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் அனைத்தையும் பச்சை வண்ணமாக மாற்றும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த ஊருக்கு வந்த முனிவர், அரசரைச் சந்திக்க வந்தார். “இந்த ஊரில் என்ன நடக்கிறது? ஒரே பச்சை வண்ணம் பூசப்படுகிறதே?” என வினவ அதற்கு அரசர், “ஜோதிடர் கூற்றுப்படி என் பார்வையில் படும் அனைத்துப் பொருட்களும் பச்சை நிறமாக இருக்க வேண்டும். அதற்குத்தான் இந்த ஏற்பாடு” என்று கூற, முனிவர் சிரித்தபடியே கூறினார், “இதற்கு நீங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை. எல்லாப் பொருட்களையும் பச்சை நிறமாக மாற்றுவதற்குப் பதிலாக நீங்கள் ஒரு பச்சைக் கண்ணாடி அணிய வேண்டியதுதானே! அதன் வழியே பார்க்கும் போது எல்லாமே பச்சையாகத் தெரியும் அல்லவா?” என்று கூற, முனிவரின் ஆலோசனையைக் கேட்டு வியந்த அரசர் அவ்வாறே செய்தார். மற்றவைகளை மாற்றிக் கொண்டு சிரமப்படுவதைக் காட்டிலும் அவரிடமே அவர் செய்த சின்ன மாற்றம் அவருக்கு பெரும் நிம்மதியைத் தேடித் தந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? அனைவரையும் மாற்றிக் கொண்டிருப்பதற்குப் பதில் நாம் மாறினால் எல்லாமே நல்லபடியாக மாறும் என்று புரிகிறதல்லவா? நம் எண்ணங்களின் சிந்தனைகளின் தரத்தை உயர்த்தி, நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் போது, எல்லாவற்றிலும் எல்லோரிடத்திலும் நல்லதைக் காணும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளும் போது, குறை நீக்கி நிறைகாணும் உயர்ந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் போது நம்மையறியாமலேயே பிறருக்காக வாழ ஆரம்பிப்போம். சுயநலமின்றி பிறருக்காக வாழும் ஓரிருவரை நினைவு கூர்ந்து பாருங்கள். கண்கள் பிரகாசிக்க, நிமிர்ந்த நடையுடன், தோற்றத்தில் ஒரு மிடுக்குடன், கலகலவென வளைய வருவார்கள். அவர்கள் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உற்சாகம் அவர்களைச் சுற்றி உள்ளோரையும் தொற்றிக் கொள்ள அங்கே மகிழ்ச்சி வெள்ளம் தான். ஆனந்தப் பிரவாகம் தான். எனவே, உலக சரித்திரத்தில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் சாதனை நாயகர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்தில் எழும் எண்ணங்களின் தரம் உயர உயர, உங்கள் வாழ்வின் தரமும் உயர்ந்து கொண்டே போகிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்வைத் தேட விரும்பினால், உங்கள் உள்ளத்தை உயர்த்து. உள்ளத்தனையதே உற்சாகம்! உள்ளத்தனையதே உயர்வு! |