10 சுடர்ப் பொறிகள்... மிஸ் யமுனா எம்.ஏ. என்று எழுதப்பட்ட கரும்பலகை வாயிலில் தெரிகிறது. வாயிலில் கார்களாக நிற்பதிலிருந்து, உயர்படிக்காரர்கள் பலர் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று புரிகிறது. யமுனாவும் இந்துநாத்தும் வண்டியிலிருந்து இறங்குகையில் சுருண்ட கிராப்பும் இறங்கிய கிருதாவுமாக ஒரு இளைஞன் முன்வந்து கைகூப்புகிறான். வயது இருபதுக்குள் தானிருக்கும். அழகிய பூ வேலை செய்த அரைக்கை ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்திருக்கிறான். "ரமேஷ்..." "பேராசிரியர் சூரிய நாராயணா..." தலை நரைத்துப் பல் விழுந்த கிழவரை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அவர் தாம் தலைமை தாங்கப் போகிறார். "அந்த நாளில் உங்கப்பா, என்னுடைய - காலேஜ் மேட்..." என்று அவர் முன் வரிசை ஒற்றைப் பல் தெரியச் சிரிக்கிறார். யமுனாவுக்கு எப்போதும் ஏற்படாத நடுக்கமும் குழப்பமும் தோன்றுகின்றன. இம்மாதிரியான கூட்டம் ஒன்றில் அவள் பேசியதில்லை என்று, நினைவு குறுக்கிடுகிறது. எதிரே வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் முகங்களில் ஒன்று கூடப் பெண்ணுக்குரியதில்லை! இன்றைய இளம் பெண்கள், அரசியலிலோ, வேறு வகையான சமுதாய வாழ்விலோ எந்த அளவுக்கு ஆர்வம் கொள்கின்றனர் என்பதற்கு ஓர் அளவு கோலாக அந்தக் கூட்டம் இருப்பதாக நினைக்கிறாள். சிந்தனைகள் விஷய வட்டத்துள் வராமலே சுழல்கின்றன. குறுந்தாடி, நீண்ட கிருதாக்கள், அரும்பு மீசை, உள்ளத்தின் விகாரங்களை வெளியாக்கும் வகையில் ரோமக் கோலங்கள்... காந்தியடிகள் கூடச் சில படங்களில் மீசை வைத்துக் கொண்டிருக்கிறார். 'சிலருக்கு இயற்கையாக மீசை சாந்த இயல்பைக் காட்டுவதில்லை. அம்மாவனின்...' அவள் தன்னைக் குலுக்கிக் கொள்வது போல் நிமிர்ந்து உட்காருகிறாள். அந்த ரமேஷ்தான் அவளை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். "காந்தியின் வழியிலேயே எண்ணங்களை வளர்க்க, அதே பாதையில் முதிர்ந்திருக்கும் அவர் பேச்சைக் கேட்க இங்கே கூடியிருக்கும் கூட்டத்தை வரவேற்கிறேன். மாறுபட்ட கருத்துக்கள் மோதிச் சிதறிக் குழம்பிக் கலங்கி புதிய எண்ணங்கள் உருவாக வேண்டும் என்பது எங்கள் நோக்கம்..." முகங்களைப் பார்த்துக் கொண்டே இருந்ந்தவர்களுக்குச் சட்டென்று எல்லாம் அசைவற்று நின்றாற் போல் இருக்கிறது. வரவேற்புரையின் வாசகங்கள் செவிகளில் எழுந்து எங்கோ பொருளின்றி வறண்டு போகின்றன. அங்கே சுதீர்... சுதீர் தான்... வாயிலில் யாருடனோ பேசிக் கொண்டு... ஒரு கணம் சித்தத்தை உள் நிறுத்தி இறையருள் வேண்டுகிறாள். பேசும்போது 'தான்' என்ற உணர்வு குறுக்கிடும் போது, அடுத்து என்ன என்று பொருளே மறக்கக் குழம்பி விடுவாள். முன்பு கல்லூரியில் மேடையேறி வரவேற்புரை, நன்றி நவிலல் கூறிப் பழகிய நாட்களில் அவளுக்கு இத்தகைய அநுபவங்கள் நேர்ந்ததுண்டு. அந்தக் கூச்சங்களெல்லாம் திரும்பி வந்து விட்டாற் போலிருக்கின்றன. 'ஆண்டவனே இன்று ஏன் இப்படியாகிறது?' என்று மனசைத் துடைத்துக் கொண்டு எதிரே குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் நினைத்துக் கொள்கிறாள். முடிவில் கரகோஷம் நீண்டு ஒலிக்கிறது. அவள் உட்கார்ந்த பிறகு கொல்லென்று அமைதி படிகிறது. ரமேஷ் மேடையில் நிற்கிறான். "நண்பர்கள் கேள்விகள் கேட்கத் துடித்துக் கொண்டிருப்பதை அறிவேன். கேள்விகள் சுருக்கமாக இருக்க வேண்டும். கால்வரையறை என்ற ஒன்றை நினைவில் வைத்துக் கொண்டு கேட்பது நல்லது..." இந்த ஒரு அம்சம் கூட்டத்தின் பிற்பகுதியில் தலை நீட்டும் என்பதை அவள் எதிர்பார்க்கவே இல்லையே? நினைக்க நேரமில்லை. கேள்விகள் வந்து விடுகின்றன. முதலில் ஒரு கிருதா மீசைக்காரன் எழுந்திருக்கிறான். "காந்தியம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத இலட்சியம். சந்திரனில் மனிதன் கால் வைக்கும் நாளில் கைராட்டையைக் கட்டிக் கொண்டு அழுவது மடத்தனம். விண்வெளியில் சீறிப் பாயும் நிலவுக் கப்பலை விட, கைராட்டை எந்த வகையில் மேன்மையாகிறது என்பதை விளக்க வேண்டும்?" ரமேஷ் அவளைப் புன்முறுவலுடன் பார்க்கிறான். அவளோ அமைதியுடன் "நான் கேள்விகளை குறித்துக் கொள்கிறேன். எல்லாக் கேள்விகளையும் கேட்டு விடட்டும்" என்று மறுமொழி கூறுகிறாள். "அஹிம்சை என்பதன் தத்துவம் என்ன? பிற நாடுகள் சர்வ நாச சக்தி படைத்த ஆயுதங்களைத் தயாரிக்கும் போது, இன்னொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டுகிறேன் என்று சொல்வது நகைபுக்கிடமில்லையா? இந்த அஹிம்சைத்தனத்தைப் பிறகு வாழ்விக்க, சகோதரியின் இனத்தில் ஒரு பூண்டு கூட மிஞ்சாதே? இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" "மனிதன் தேவைகளைக் குறைக்காமற் போனால் குலம் அழிந்து போகும் என்று அச்சுறுத்தும் சகோதரி மனிதன் வீடு வாசலுமின்றி, விலங்கோடு போர் புரிந்து பச்சை ஊனைப் புசித்த நாட்களில் தேவைகள் மிகக் குறைவாக இருந்ததால், அந்தக் காட்டுமிராண்டியே இன்றைய மனிதனை விட மேலானவன் என்று கருதுகிறாரா? எப்படி? விளக்கம் தேவை." ஒரு குறும்புக்காரன் குடும்பக் கட்டுப்பாட்டை ஆராய்கிறான். "காந்தியம் செயற்கைச் சாதனங்கள் உபயோகிக்காமல் கருத்தடை என்று சொல்கிறது. வருடம் 365 நாட்களும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தாலும், ஒரே ஒரு நாள் பொல்லாத எழுச்சி ஏமாற்றிவிடக் கூடுமே! இத்தனை கோடியும் மகாத்மாக்களாகி விடலாம் என்று அம்மையார் கருதுகிறாரோ? அது எப்படி முடியும்?" "இலட்சியங்கள் செயலளவுக்கு எளிதாக இருந்தாலே நிலைக்க முடியும். காந்திய இலட்சியங்கள் அவர் காலத்திலேயே படுதோல்வி கண்டன. இன்று அடிபட்டு வீழ்ந்த அவற்றைக் குற்றுயிரும் குலையுயிருமாகத் தட்டியெழுப்ப வேண்டிய அவசியம் என்ன?" கேள்விகளைக் கேட்பவர்கள், மான்போல் நிற்கும் ஒருத்தியைத் தாக்க வந்திருக்கும் காட்டெருதுகளைப் போல் கேள்விகளைத் தொடுக்கின்றனர். இந்துநாத் பரபரப்புடன் ரமேஷைப் பார்த்து, "இதென்ன ஸார், இர்ரலவெண்ட் கேள்வியெல்லாம் கேட்க விடுகிறீர்கள்? இது இண்டலக்சுவல் மீட்டிங்கா, இல்லே உங்கள் சட்டசபைன்னு நினைச்சேளா?" என்று சீறுகிறான். "இது யாரையா பேச்சாளருக்கு வக்காலத்து வாங்கிட்டு வருபவன்?" "கருத்து மோதல் என்றால் கத்தரிக்காய் என்று எண்ணமா?" கேலி, கிண்டல், சிரிப்பு, ஏளனம், தீ வெடிகள்... "அமைதி அமைதி!" என்று சூரியநாராயணர் மேசையைத் தட்டுகிறார். "நீங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லப் போறேளோன்னோ?" என்று யமுனாவிடம் குனிந்து மெல்லிய குரலில் கேட்கிறார். யமுனா புன்முறுவலுடன் ஒலி பெருக்கியின் முன் வந்து நிற்கிறாள். ஒலி பெருக்கித் தண்டைப் பற்றிக் கொண்டு அவள் புன்னகை புரிகிறாள். நெற்றி வியர்க்கிறது. இந்துநாத் மலைத்துப் போனாற்போல் உட்கார்ந்திருக்கிறான். தொலைவில் ஒரு கறுவல் முகம் உயர்கிறது. "காந்தி மேலை நாட்டுக் கல்வி முறையை எதிர்த்தார். தம் மக்களுக்கு அக்கல்வியைக் கற்பிக்கவில்லை. ஆனால் முழுசும் மேல் நாட்டுக் காற்றிலேயே வளர்ந்த ஒருவரைத் தமக்குப் பிறகு தன் மொழியைப் பேசுவார் என்று தேர்ந்தது எதனால்?" "மன்னிக்க வேண்டும் நண்பரே! நான் உயரிய இலட்சியங்களைப் பற்றியே பேச வந்தேனே ஒழிய காந்தி என்ற தனி மனிதரைப் பற்றியே பேச வரவில்லை" என்று அவள் ஒதுங்கப் பார்க்கிறாள். "ஹோ, ஹோ" என்ற ஆரவாரங்களும் கேலிகளும் எழுகின்றன. "தோல்வி... வெட்கம்... அவருடைய இலட்சியங்களில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள்!" என்ற ஆர்ப்பாட்டங்கள். "நான்சென்ஸ்! இதென்ன கசாப்புக் கடையா?" என்று இரட்டைக் குரலில் கத்துகிறான் இந்துநாத். சூரியநாராயணர் அவளைப் பரிதாபமாகப் பார்க்கிறார். 'வயசுப் பெண்ணாக லட்சணமாகக் கல்யாணம் கார்த்திகைன்னு குடும்பத்தில் இருந்து பேர் சொல்ல மாட்டாயோ! இப்படி இதுக நார்நாராகக் கிழிச்சிப் போட வந்து மாட்டிப்பியோ?' என்று இரங்குகிறார். "காந்தியைத் தனிமனிதர்னு விட்டு வைக்கலியே? இந்த நாடு கண்ணை மூடிண்டு அவர் சொன்னதைச் செய்யணும்னு தானே இப்ப சொல்கிறீர்கள்?" என்று மீண்டும் ஓர் குரல் ஒலிக்கிறது. "கல்வி என்பது மனசைப் பண்படுத்த வேண்டும். அந்த வகையில் இந்நாட்டில் ஏட்டுக் கல்வி முறை பயனளிக்கவில்லை என்று அவர் கண்டாரே ஒழிய, மேலை நாட்டுக் கல்வியை அவர் வெறுக்கவில்லை. செயல்திறனும், கூரிய மதியும், நாட்டு மக்களைக் கவரும் சொல்வன்மையும் கூடிய ஒருவரை அவர் தமக்குப் பின் வாரிசாக்கியதில் தவறில்லையே?" "ஏன்? அந்த வகையில் பல தலைவர்கள் இருந்தார்களே? அவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?" அவளைத் திக்குமுக்காடச் செய்து ரசிக்கவே இந்தக் கேள்விகள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. "இதை விரிப்பதோ விவரிப்பதோ இன்றைய கூட்டத்துக்குப் புறம்பான விஷயம்..." யமுனாவுக்குச் செவி மடல்கள் குப்பென்று எரிகின்றன. இந்த அவதூறுகளை வீசுபவன் சுதீர்தான். "அம்மணி, காந்தியம் எந்நாளும் நடைமுறைக்கு ஒத்து வரமுடியாத பிதற்றல் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்!" என்று கறுவல் முகம் எழும்பி உட்கார்ந்து கெக்கலி கொட்டுகிறது. பஜனை மண்டபத்தில் கூச்சலும், குழப்பமும் உண்டாகும்போது 'நமப் பார்வதி பதயே!' என்று எழுப்புவார்களே, அப்படி சூரியநாராயணர் மேசையைத் தட்டி விட்டு எழுந்திருக்கிறார். "ஒரு பேச்சாளரை நாம் பேசக் கூப்பிட்டிருக்கிறோம். ஒரு விஷயம் பேசச் சொல்கிறோம்; பேசுகிறார். கேள்வி கேட்பதே நாகரிகக் குறை. அதிலும் இது... அவசியமில்லைன்னு நினைக்கிறேன்" என்று தொடங்கி நன்றி கூறி கூட்டத்தை முடிக்க வழி செய்கிறார். யமுனா கெட்ட கனவினிடையே விழித்த குழந்தையைப் போல் உட்கார்ந்திருக்கிறாள். நன்றி கூறும் சம்பிரதாயச் சொற்கள் செவிகளில் விழுமுன் கரைந்து போகின்றன. "பிரமாதமாகப் பேசினே. இதுகள் அசத்துகள். கேள்வி கேட்கறதுக்குன்னே கூட்டத்துக்கு வரும்..." என்று விடை கொடுத்துவிட்டு சூரியநாராயணர் மாலையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு பெரிய காருக்குள் ஏறிச் செல்கிறார். வழியனுப்ப வருவது போல் நான்கு பேர் தொடர்ந்து வருகையில் சுதீர் அவளுக்காக வழியில் நிற்பான் என்று எதிர்பார்க்கிறாள். நெஞ்சு சோர்ந்து விழுகிறது. சிகரெட்டும் கையுமாக இந்துநாத்தான் கதவடியில் நிற்கிறான். இப்போது வண்டியின் பின்னால் அவளருகில்தான் உட்காருகிறான். ஆனால் அவள் சிந்தையில் அவன் அருகில் இருப்பதே உறைக்கவில்லை. பெரிய தோல்வி கண்ட ஏமாற்றத்தில் திரும்பத் திரும்ப எதை எதையோ எண்ணிச் சோருகிறாள். "கொன்னுட்டே போ, யமுனா!" வண்டி தார்ப்பாதையில் செல்கிறது. தெருவெல்லாம் ஒளி மயங்கள் - நெரிசல்கள் - போக்குவரத்து ஊர்திகள். "கடைசியில் வளைச்சு வளைச்சுக் கேள்வி கேட்டானே, அவனைத் தெரியுமா, யார்னு?" "ஹம்...?" "அவன் தான் சுதீர்குமார். கீழ வெண்மணிக்கப்புறம் ஆளே தலைமறைவா இருந்தாப்பல. இன்னிக்கு வந்திருக்கிறான்..." "ஓ..." "ஆனாலும் நீ படுபிரமாதம்? பாலிடிக்ஸில் பிரமாதமா ஷைன் பண்ணுவே!" "..." "என்ன பேசலே? அன்னிக்கு நான் சொன்னதை எதிர் பாராம சரின்னு ஒப்புக் கொண்டுட்டே. அப்ப..." வண்டி ஓர் ஒளிமயமான உலகில் முன் வந்து நிற்கிறது. ஒரு... ஓட்டல். "வீட்டுக்குப் போலாமே? மணி எட்டரையாகிறதே?" "எனக்குத் தெரியாதா? நீ இறங்கு சொல்றேன்." "எதற்கு? வீட்டுக்குப் போகணும் எனக்கு..." "எனக்கே ஒரே பசி, உன்னால்... அடக்கிட்டிருந்தேன்." அவள் இறங்க வேண்டித்தானிருந்தது. மேல்மாடி... எங்கோ நீளப் போகிறான். குடும்பம் என்று போட்டிருக்கிறது. ஆனாலும் குடும்பம் ஒன்றும் அங்கு இல்லை. "எனக்கு ஒன்றும் வேண்டாம்." அவன் பொருட்படுத்தவில்லை. ஏதோ இனிப்பு கொண்டு வரச் சொல்கிறான் போலிருக்கிறது. சர்வர் போன பின் அங்கே யாரையும் காணவில்லை. தோளில் அவன் கை படிகிறது. சுரீரென்ற உணர்வுடன் குலுங்கி எழுந்திருக்கிறாள். ஆனால் அவன் ஒன்றும் நடவாதது போல் சிரிக்கிறான். "சீ, விடுங்கள்!" "ரொம்பக் கோவிச்சுக்கிறியே?" கையை எடுத்துவிட்டான். ஆனால் அவளுடைய செருப்புக் கால்மேல் அவன் வெற்றுப் பாதம் படிகிறது. அப்போது சிப்பந்தி இரண்டு இனிப்பையும் தம்ளரையும் வைத்துவிட்டுப் போகிறான். "என்ன, கத்தப் போறியா? நாளைக்குப் பேர் பேப்பரில் வரணும்னு ஆசையானால் கத்து...!" அவளுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. "காலை எடுக்கிறாயா, என்ன வேணும்; ஸ்கௌன்டரல்..." செருப்பைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு நிற்கிறாள். "ஏனிப்படி கோவிச்சுக்கிறே கண்ணம்மா? கல்யாணமாறதுக்கு முன்ன கொஞ்சம் உரிமை எடுத்துக்கக் கூடாதா...? "கல்யாணமா? என்ன பேத்தல்?" "ஆஹா... ஹா... உனக்கு இன்னும் பெரியப்பா சொல்லலையா கண்ணு? என்னம்மா வெட்கப்பட்டு நடிக்கிறே, போ!" "நான்சென்ஸ். இந்த மாதிரி எண்ணங்களை அடியோடு ஒழிச்சிடுங்க." "பார், பார்; உன்னை வேறு எவன் கல்யாணம் பண்ணிண்டாலும் என்னை விட அருமை தெரிஞ்சு நல்லது செய்ய மாட்டான். நான் இன்னிக்குக் கூட்டத்தைச் சமாளிச்சுக் கொடுத்ததற்கே நீ இந்த பூச்சாண்டித் தனத்தை மூட்டை கட்டி வைக்கணும். நீ யாருக்காகவும் பயப்பட வேண்டாம்...!" "ஹம்..." ஒரு உறுமல் உறுமிவிட்டு நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுகிறாள். எதிரே வரும் பணியாளன் மீது மோதாத குறையாக ஓடி வருகிறாள். ஜுர வேகமாக இருக்கிறது. எந்த பஸ்ஸில் ஏறுகிறோம் என்று தெரியாமலேயே, அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று ஏறுகிறாள். |