உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
21 கொட்டும் பனிக்குளிர் கரைந்து வசந்தத்தின் எழில் வண்ணங்கள் தெரியாமலே, வேனில் நகரத்தை வறுத்தெடுக்கும் நெருப்பில் வாட்ட வருகிறது. நிறைத்து பெருகிய கங்கைத் தாயும் நகரின் வெம்மையைத் தணிக்க இயலாமல் வெய்துயிர்க்கிறாள். பச்சைகள் சருகாக உலர பசுவினங்கள் மெருகொழிந்து மடி வற்ற அயருகின்றன. செல்வத்தில் புரளுபவரைத் தாங்கி ஊர்திகள் சிம்லா, சிலிகுரி, டார்ஜிலிங், காட்மண்டு என்று பறக்கின்றன. பனிக் கொடியோனின் கொடுமைக்கு மீண்ட ஏழைகள், ஆண்டுக்கு அடுத்த கண்டமாக வெய்யோனின் கடுமையில் வெந்து கருகுகின்றனர். மூடிய கதவுகளுக்குள் பகற் சிறையும் வெட்ட வெளியில் இரவுமாக இடைக் குடும்பங்கள் வாடாது வாடிப் பொழுதைத் தள்ளும் கோடை. புளிப்புக் காயையும் சர்க்கரையையும் கலந்து வெயிலில் வைத்தால் பாகு கனியாகிவிடும் அனல் வெயில். உப்பிட்டு உலர்த்தும் பண்டம் சுக்காகிவிடும் வறட்சி. இந்த வெயிலில் சுருண்டு விழும் சோர்வைத் தாங்கி ரிக்ஷாக்காரன் பொதி சுமக்கிறான். ஏழைகளுக்கு வெப்பமேது? தட்பமேது? சம்பவின் குழந்தைகள் வழக்கம் போல் சாணம் பொறுக்குகின்றனர்; வரட்டி தட்டுகின்றனர். கங்கைத் துறைகளின் அங்காடிகளில் கரும்புச் சாறும் பனிக்கட்டியும் வழிந்தோடுகின்றன. கங்கையின் பரப்பில் சின்னஞ்சிறு படகுகள் பாய் விரித்துக் கொண்டு மிதக்கின்றன. குளிர் நிலவின் இனிய வெள்ளத்தில், குளிர்பனியின் துண்டங்களைப் போதை பானங்களில் மிதக்க விட்டு அருந்திக் களியாட்டம் அநுபவிக்கும் மாந்தர்களைத் தாங்கும் படகுகள். கங்கை அன்னையல்லவா? தன்னுள் அசுத்தம் செய்பவரையும் பரிந்து காத்து அமுதளிக்கிறாள். அந்தப் படகுகளையும் தன் மேனியில் சுமக்கிறாள். ஒட்டி ஒட்டி மணற்கரையில் அகன்று விலகிய கங்கையைப் போல் யமுனாவுக்கு இந்த வாழ்க்கை பழகிப் போகிறது. உலகில் கண் விழிக்கையில் அன்பும் அருளும் வழிந்தோடும் இன்ப விடுதலையாக அவள் இளம் பருவம் புலர்ந்தது. அச்சமும் வன்மையும் அறியாத கபடற்ற பனி மலர்போல் அவளுடைய அறிவு மலர்ந்தது. பின்னர் உலகத்துக் கபடுகளின் வெம்மையில் பதம் பெறும் வாழ்வின் மையத்தில் அவள் இப்போது நிற்கிறாள். இந்தப் பதம் பெறும் காலந்தான் எப்படி நீள்கிறது? இங்கே அருளும் அன்பும் பரிவும் வாழ்வை மணற்கரையாக்கி விட்டு ஒதுங்கி ஒதுங்கிச் செல்கிறது. மணலில் பொரி பொரியும் சூடு! அந்த வெப்பத்தில் அவள் தன்னந்தனியாக முன்னேறுகிறாள். இந்தக் கங்கையையே இடையாக்கி விட்டுப் பிரியும் மறு கரையைத் தொடுவது போல் துரை தனி உலகுக்குப் போய்விட்டான். இந்த வேனிலில் மாசத்தில் ஆறு நாட்கள் கூட அவன் வீட்டில் தங்கவில்லை. இமயத்தின் மடியில் அலுவல் என்று சென்று விடுகிறான். அங்கே புதிய அணைத்திட்டத்தில் வேலை ஒப்பந்தமாம். இயந்திரத் தளவாடங்கள், இன்னோரன்ன பிற சாமான்களைச் சுமந்து செல்லும் வண்டிகளோடு செல்வதாகச் சொல்கிறான். இப்போது அவனுடைய வாழ்க்கையில் எத்தனை மாறுதல்கள். புதிய இரும்பு அலமாரியைத் திறந்தால், வகைவகையான விசேசத் துணிகளில் கால் சட்டை, கோட்டுகள், மடிப்புக் கலையாத சீனத்துப் பருத்திச் சட்டைகள். அவை நேபாளத்தில் மலிவாம். அவன் பல் துலக்கும் புருஷிலிருந்து முகப்பொடி, பசை, காலுறை ஈறாக அந்நியப் பொருள்களைத் தவிர வேறு உபயோகிப்பதில்லை. அந்தச் சிறிய இல்லத்தில் அழகு ஆடம்பர சாதனங்கள் மாறி மாறி வருகின்றன; போகின்றன. இரண்டு அன்னங்களின் உருவில் டிரான்சிஸ்டர்; பெரிய சாவி போன்ற சிகரெட் லைட்டர்; மணிமண்டபம் அமைப்பில் இயங்கும் கடிகாரம் - இப்படி எத்தனையோ? அவளை அவன் விருந்துகளுக்கு அழைப்பதில்லை. ஆனால் விருந்தென்று சொல்லி உடை அணிந்து சென்றால் இரவு சிறிது மதிமழுங்கித் தள்ளாடும் நிலையில்தான் வருகிறான். அவளோ அவனை எதிர்க்க முயன்று இயலாமல் போராடுகிறாள். சமையல் அறையை ஒட்டிய அறையில் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுகிறாள். தன் செலவில் மீதி கண்டு பால் வாங்கிக் கொடுக்கிறாள். ஏழைக் குடில்களில் சென்று அறிவுரை நல்குகிறாள். வானில் சந்திரன் பவனி வரும் நாட்களில் நிலா முற்றத்தில் இருந்து ஏழைக் குழந்தைகளுக்கு அவள் கதைகள் சொல்லும்போது, அந்தக் கானகச் சூழலில் அம்மாவனின் மேல் உராய்ந்து கொண்டு கதைகள் கேட்ட காலம் நினைவில் முட்டுகிறது. அந்த அம்மாவனுக்கு அவள் ஒரு கடிதம் கூட எழுதவில்லை! எழுதத் தோன்றவில்லை; ஏன்? வாழ்க்கையைப் பற்றிப் பல வேறு சமயங்களில் அவர் அவளுக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். 'ஒரு சிகரெட்டைச் சிறுகிட்டியெங்கிலும் தேச்சு மினுக்கிக் கலாவஸ்து வாங்குவதுபோல்...' என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும்... நினைவுகள் மோனத் திரையில் சித்திரம் வரையாமலில்லையே? வசந்தம் வரும்போது அந்தக் கானகங்களில் தாம் என்னென்ன வாசனைகள் காற்றிலேறிப் பவனி வரும்! காட்டெலுமிச்சை மலர்ந்து கம்மென்று சுவாசமெல்லாம் நிரம்பும். இருளப் பெண்கள் நிலவில் வட்டமாகக் கூடிக் கும்மி அடிப்பார்கள். அந்தக் கானக மூலைக்கு ஓடோடிச் சென்றுவிட வேண்டும் போலிருக்கிறது. தன் வாழ்க்கையின் சிக்கல்களையும் சங்கடங்களையும் தாயிடம் சொல்லிக் கரைய வேண்டும் என்ற மனவெழுச்சி உந்தித் தள்ளுகிறது. 'உயிரே போனாலும் அன்பு வழியே, அருள்வழி. சோதனைகளை மலர் முகத்துடன் ஏற்றுக் கொள்' என்ற அறிவுரைகளைத் தவிர அந்தத் தாய் வேறென்ன சொல்வாள்? எனவே மறு நிமிடமே தேறுகிறாள். ஆனால், நிலவில்லாத இரவொன்றில் துரை அருகில் இருக்கும்போது, தன்னந்தனியாய் கானகத்தீவில் இருப்பது போல் அச்சம் உண்டாகிறது. இரவின் அடங்கிய அமைதியில் எங்கோ கேட்கும் ஒலிகள் கூட வலுப்பெற்று அவளுடைய தெளிவில்லாத சிந்தைக்குள் வன்மைக்குரிய ஒலிகளாகத் தோன்றுகின்றது. படிகள் வழியே இறங்கிச் செல்பவள் திடீரென்று இடறிவிட்டாற் போன்றதொரு குலுக்கலுடன் அதிர்ந்து விழித்துக் கொள்கிறாள். எந்த முன்னுணர்வின் அறிகுறி இந்த அச்சம், படி இடறல்? கவலைகளிலும் துன்பங்களிலும் மனம் சோரும் போது பற்றுக் கோடு இறைவன் நாமம்தான் என்று சின்னஞ்சிறு பிராயத்தில் எத்தனை முறை கேட்டு நம்பியிருக்கிறாள்? ஆனால் இன்று அருகிலிருக்கும் துணையைச் சென்று பற்றிக் கொள்ளும் வேட்கையே மிகுகிறது. அப்போது இந்துநாத் ஏளனம் செய்வது போல் ஒரு தோற்றம். "நீ உயர் குடும்பப் பெண் என்று உன்னைக் கருதிக் கொள்கிறாயே வெட்கமில்லை?" இந்துநாத்தை விட, துரை எந்த வகையில் முன்னேற்றமடைந்தவன். அவளுடைய் லட்சியங்களைக் கொண்டு அரசியல் களத்தின் ஒரு சிறு பகுதியையேனும் தூய்மையாக்கப் போராட வாய்ப்பிருந்திருக்கும். பெரியப்பா பெரியவர், அவரை அப்படி உதறி எறிந்தாற்போல் பேசியிருக்க வேண்டாமோ? லட்சியங்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே எத்தனை வித்தியாசங்கள். கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து வானைப் பார்க்கிறாள். வானகக் கருமையெல்லாம் உள்ளத்துள் புகுந்து கொண்டாற் போல் சோகம் அழுத்துகிறது. வாழ்க்கையில் அவள் அறிந்து யாருக்கும் தீங்கு செய்யவில்லையே? பூங்காவாக மலர்ந்தது, ஒரு வருஷக் கோடையில் கருகினாற்போல் எப்படித் தடம் தெரியாமல் போயிற்று? சுதீர் மேல்நாட்டுக்குப் படிக்கச் செல்லு முன்பு எதிர்காலம் பற்றிய நினைப்பே நாணம் கவிழும் மலர்க் குவியலாக இருந்ததே? அவள் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது கமலம்மா ஆசிரமத்துக்கு வந்தார். ஒரு கதர்ச் சால்வையைப் போர்த்துக் கொண்டு நெடுநெடுவென்று உயரமாக, பெரிய வைரத்தோடுகள் சுடரிட, குங்குமப் பொட்டுத் துலங்க, கண்முன் நிற்பது போலிருக்கிறது. ஆசிரமத்துக்கு, காரின் டிக்கியிலிருந்து அரிசி மூட்டைகள் இறங்கின. அவளுடைய தாய் விரைந்து வந்து வரவேற்கிறாள். அந்தத் தடவை கடுகடுவென்ற முகத்துடன் சுதீர்தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்திருந்தான். "அப்ப, என்னிக்கு வரட்டும்?" என்றான் அவளைத் திரும்பிப் பாராமல். "இதென்ன இப்படிப் பறக்கிறான்? சுதீருக்கு யார் மேல் கோபம்?" ருக்மிணியின் கேள்வி காதில் விழாதவன் போல அவன் யமுனாவை முறைத்துப் பார்த்துவிட்டு வண்டியில் உட்கார்ந்து திருப்பிக் கொண்டு போனான். கமலம்மா சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தார். "யமுனாவிடம் கோபம் போலிருக்கு; நான் உள்ளே வரமாட்டேன்னான்..." என்றார். கமலம்மா தன் மென்மையான கரங்களினால் அவளுக்குப் பின்னல் போடுவார். யமுனா அவருடைய சேலையைத் துவைத்து உலர்த்துவாள். கவிதை படிக்கச் சொல்லிக் கேட்பார். தாகூரின் கனிசேகரித்தலைப் படிக்கச் சொல்லாமலிருக்க மாட்டார். பிரார்த்தனை நேரத்தில் சுருதியோடு சேராத பெருங்குரலில் பாடுவார். அந்த முறை அவரை அழைத்துப் போக டிரைவர் தான் வண்டி கொண்டு வந்தான். தந்தையிடம் விடைபெற்றுக் கொள்ள கமலம்மா நின்றார். "எனக்கு அவனை அனுப்பவே இஷ்டமில்லே. இங்கே இல்லாத படிப்பா?..." என்றார். "அதில்லை கமலம்மா, இந்த வயசில் பலவகையான கருத்துக்களோடு சுதந்திரமாகப் பரிசயப்படுவது நல்லதுதான். போய்விட்டு வரட்டும்" என்றார் அப்பா. "எனக்கு அவனுக்குக் கல்யாணத்தைப் பண்ணி வைத்து அனுப்பணும்கிறதுதான் ஒரே எண்ணம். அங்கே போய் எப்படியேனும் ஆனால் என்ன செய்வது?... வயசு ஆகலை என்கிறார் அவன் அப்பா. அவனோ கல்யாணம்னாலே சண்டைக்கு வருகிறான்..." "வயசு என்ன ஆகிறது?" "இருபத்தொண்ணு; யமுனாவுக்கும் பதினைஞ்சு முடிஞ்சிருக்கா?" கமலம்மா அரைகுறையாக நிறுத்திக் கொண்டவராக அவளைப் பார்க்கையில் அவள் எங்கோ வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு, அதற்குப் பிறகு... சுதீர், வேறு சுதீராக அம்மாவுடன் வந்து பேசினான். அவளைப் பார்த்து நெஞ்சைச் சுண்டி இழுக்கும்படி சிரித்தான்; கேலி செய்தான். கமலம்மா பிறகு திருமணம் பற்றிப் பேசவேயில்லை. இப்போது ஏன் இந்த நினைவுகளெல்லாம் வருகின்றன? கட்டில் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் அவளுக்குள் உணர்வு மரத்துப் போயிருக்க வேண்டும். அவள் உறக்கம் கலைந்து துள்ளினாற் போல் எழுந்து உட்காருகிறாள். "யமுனா? என்ன இது?" "...ஒண்ணுமில்லீங்க...?" "பின்ன ஏன் அழுதுகிட்டிருக்கே?" அவள் திருட்டுக் குற்றம் செய்தவளைப் போல் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். தன் மீதே அவளுக்குக் கோபம் வருகிறது. இருளில் அவளை அவன் உற்றுப் பார்க்கிறான். அவளுடைய விழிகளில் ஈரம் பளபளக்காமலில்லை. "யமுனா? என்ன இது? நான்சென்ஸ், என்னை எதற்காக இப்படி உயிரோடு கொல்றே?" பக்கத்திலிருக்கும் சிகரெட் பெட்டியைத் தேடுகிறது கை. அவன் பற்றவைக்க முயலும்போது அவள் ஆத்திரத்துடன் அதைப் பிடுங்கிப் போடுகிறாள். "நீங்க ஏன் இப்படி என்னைவிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போறீங்க?" அவன் கை அவளுடைய கைகளுக்குள் இருக்கிறது. "அது நானா, நீயான்னு நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக்க!" "நான் என்ன தப்பு செஞ்சேன்னு சொல்லுங்க. நான் அதற்குச் சரியா மாறுகிறேன்..." "உன்னை, தப்பு செய்ததாகச் சொல்ல நான் யார்? நீ உயர்ந்த இடம்... நான் தாழ்ந்தவன்..." "இப்படி நீங்கள் பேசினால் எனக்குச் சந்தோஷமா இருக்கும்னு பேசறீங்களா?" "இத பார் யமுனா, நான் சாதாரண மனுஷன். ஆபீளிலிருந்து வீட்டுக்கு வரும்போது மனைவி சந்தோஷமாகச் சிரிச்சுப் பேசணும்னு நினைப்பேன். உலகத்தில் சாதாரண மனுஷனுக்குப் போல் சந்தோஷம் கிடைச்சாப் போதும்னு நினைக்கிறவன் நான். நீயோ, உனக்கும் எனக்கும் ரொம்பத் தொலைவுன்னு நிதமும் சொல்லாம சொல்லிட்டிருக்கே. அது என் துரதிர்ஷ்டம்." "நீங்க என்னைப் புரிஞ்சுக்காம பேசறீங்க. சில சமயம் படி இடறிப் போறாப்போல குழப்பமாயிருக்கு..." அவன் அவளுடைய சொற்களின் ஆழத்தைப் புரிந்து கொள்பவனாகத் தெரியவில்லை. எட்டி விழுந்த சிகரெட் பெட்டியை எடுத்து ஒன்றைப் பற்ற வைத்துக் கொள்கிறான். "இதெல்லாம் நீங்கள் புதிசாக ஏன் பழக்கம் பண்ணிக் கொள்ளணும்? நீங்க அடியோடு மாறிப் போயிருக்கிறீங்க..." "ஒரு மனிதன் என்னிக்கோ கூழ் குடிச்சான்... இப்ப இன்னிக்கு அப்படியே இருக்கணும்னு நீ சொல்றே. நீ எனக்குப் பிடிக்காமே எத்தனையோ செய்யறே. நான் தடுக்கிறேனா? இந்த அற்ப சுதந்திரங்களில் நீயும் தலையிட வேண்டாம்." "உங்கள் உடல்நலம், மனநலத்தை நினைச்சு சொல்றேன். நாம் எளிமையாக, தூய்மையாக வாழ்ந்து எவ்வளவோ நல்ல பலன்களைக் காணப் போவதாகக் கோட்டை கட்டினேன்..." "என்ன எளிமை? தூய்மை? என் தொழில் முன்னேற்றத்துக்குத் தகுந்தபடி நடக்க வேண்டியிருக்கு. உன்னை ஒத்துழைன்னு வற்புறுத்தினேனா? என்னைப் போலிருப்பவன் வீட்டிலேயே மாசம் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யறான். நான் என் உறுத்தலை வெளிக்காட்டிப் பயனில்லைன்னு ஒதுங்கிடறேன்..." "நீங்கள் நண்பர்களை வீட்டுக்கழைத்து விருந்து கொடுப்பதை நான் வேண்டாம் என்று சொல்வேனா? அதற்காக ஒரு அநியாயம் நடக்க நாமே ஒத்துழைப்பதா? ஒரு போதைச் சரக்கு இல்லாமல் எதுவும் ஆகாதுன்னு ஒரு நிலையையே நாமே ஒப்புக் கொள்வதா? பலவீனத்துக்கு, தெரிஞ்சு நாமே நியாயம் சொல்லிக் கொள்வதை விட, டிரிங்க்ஸ் இல்லாம விருந்து கொடுப்போம்னு சொல்ல உங்களுக்கு ஏன் மனசு வரலே?..." "அப்படிப் போனால் பார்ட்டி எதற்குக் கொடுக்கணும்? அதுவே ஃபிராடுதான்..." "நானொண்ணும் அப்படிச் சொல்லலியே?" "உன் காந்தித்தனம் குறுக்கே வரப்ப, அதெல்லாம் விரோதந்தான். மனுஷன் வாய்க்கு ருசியாய்ச் சாப்பிடக் கூடாது! கண்ணுக்குக் குளிர்ச்சியாக உடுத்தக் கூடாது! எல்லாரும் பஞ்சம் பனாதைகளாகக் கப்பறை ஏந்தவேணும். மகாத்மா, மகாத்மாவாக அப்பத்தான் இருக்க முடியும்னு உன் காந்தி சொல்லியிருக்காரு..." "நீங்களா இப்படிப் பேசறீங்க? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க. அந்தமாதிரி ஒருத்தர் இல்லேன்னா... நீங்க நீங்க..." நச்சுச்சொல் தெறித்துவிடாமல் அவள் சட்டென்று விழுங்கிக் கொள்கிறாள். ஆனால் துரைக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது. "ஏன் முழுங்கறே? நீங்க உசந்த சாதி மனப்பான்மையைப் போக்காதவரை ஒண்ணையும் பெரட்டிடலே; ஆமாம், தெரிஞ்சுக்க!" அவள் விக்கித்து நிற்கிறாள். படி இடறிவிட்டது மெய்தான். |