உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
20 துரை சாதாரணமாக மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பி விடுவான். சில நாட்களில் ஏழு ஏழரை மணியாவதும் உண்டு. இன்று ஏனோ விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தத்தம் குடிலுக்குச் சென்றதும் யமுனாவுக்கு அச்சம் கடுமையாகப் பரவுகிறது. வாயிற் கண்ணாடிக் கதவினூடே வெளியே பனியும் புழுதியும் பரவிய பாதையைப் பார்க்கிறாள். வாயிலில் ரிக்ஷா ஒன்று வருகிறது. குளிர்ந்த வயிற்றில் சொரேலென்ற உணர்வு குழி பறிக்கிறது. மங்கியவொளியில் தட்டுச்சுற்று வேட்டியின் நுனி புழுதியில் புரள, இந்துநாத்... நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. அவன் கதவடியில் வந்து தட்டுமுன் அவள் வாயில் விளக்கைப் போட்டுவிட்டுக் கதவைத் திறக்கிறாள். தன் அச்சங்களை விலக்கிக் கொண்டு புன்னகையுடன் வரவேற்கிறாள். "வாங்க! நேரமாயிட்டது, நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சேன்." "அப்படியா? அப்ப என்னை எதிர்நோக்கிட்டிருகேன்னு அர்த்தம்." "இல்லே, இன்னும் அவங்க ஆஃபீஸிலேந்து வரலே..." அவன் விஷமமாக அவளை நோக்கிக் கண்களைச் சிமிட்டுகிறான். அவள் நாக்கைக் கடித்துக் கொள்கிறாள். "இதோ, இப்ப வர நேரந்தான். நீங்க எங்கே இத்தனை தொலைவு?" "நம்ம தலைவர் ஒரு ஸ்கீமில் இங்கே அனுப்பிச்சார். இவனுக்கு இங்கே ஆள் பலம், பணபலம் இருக்கு. நம்ம பக்கம் இழுத்துப் போடணும்னு முயற்சி. என்னிடம் லெட்டர் கொடுத்தனுப்பிச்சார். இவன் வாய் கூசாம 'டர்ம்ஸ்' கேக்கறான். கல்லிலே நார் உரிக்கும் ஆசாமி. நீ எங்கே அந்தப் பக்கம் போயிருந்தே? என்னமோ பாலிடிக்ஸெல்லாம் விட்டுட்டேன்னு நினைச்சேன். 'பாக்டோர்' வழியா வரே?" "நான் பாலிடிக்ஸில் எப்போதுமே சேரவில்லையே. இங்கே இந்தக் குழந்தைகளைச் சேர்த்து ஸ்கூல் மாதிரி நடத்துகிறேன். அங்கே ஏதாவது உதவி கிடைக்குமோன்னு போனேன்..." "கிடைச்சுதா?" "ஹூம், பேசவே முடியவில்லை." "பேசாமல் நான் சொல்வதைக் கேட்டிருந்தாயானால் இன்னிக்கு நீ விரலசைத்தால் ஒரு கூட்டமே பின்னால் வரும்படியா முன்னுக்கு வந்திருப்பே. அதான் சொன்னதைக் கேட்க மாட்டேனுட்டியே?" "டீ போட்டுட்டு வரேன், கொஞ்சம் இருங்கள்." அவன் முன் நாள்தாளையும், பத்திரிகைகளையும் வைத்து விட்டு அவள் உள்ளே செல்கிறாள். மனசு எதையோ பற்றுக்கோலாய்த் தேடுகிறது. அவள் தேநீரைக் கலந்து கிண்ணத்தில் வார்க்கும் போது வாயிற் கதவுத் தாழ் ஓசைப்படுகிறது. விரைந்து வருகிறாள். வாயிற் கதவை இந்துநாத் தாழிட்டு விட்டு ஒரு கபடச் சிரிப்புடன் அவள் முன் வருகிறான். "கதவை ஏன் தாழிட்டீர்கள்?" அடுத்த கணம் தேநீர்க் கோப்பை அவன் முகத்தில் பட எகிறுகிறது. இந்த எதிர்பாராத தாக்குதலை அவன் சமாளிக்கு முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடுகிறாள். "சம்பா! சம்பா! அதுல்..." உடல் நடுங்குகிறது. குரல் பதறுகிறது. "மாஜி... க்யா மாஜி?" கீதுதான் ஓடி வருகிறது. "சாப் இன்னமும் வீடு வரவில்லை. தினுவைக் கூப்பிட்டேன்?" "தினு இஸ்திரி போடுகிறான். நான் வரட்டுமா?" ஏழு வயசுச் சிறுமி, கள்ளங்கபடமற்ற மான் போல் குதித்துக் கொண்டு வருகிறாள். இருளில் பீடித்துண்டு கனல், வீச்சும் விரைப்புமாய் ஓர் உருவம் எதிரே வருவது தெரிகிறது. "ராம் ராம் பேட்டி!" "யார்? பாபாவா?" பாபா கிழவனா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அவன் முஸ்லீமா இந்துவா என்றும் தெரியாது. இருபத்து மூன்று வருஷங்களுக்கு முன் அவன் கிழக்கு வங்காளத்திலிருந்து வகுப்புக் கலவரத்தில் பெண்டு பிள்ளைகளை எல்லாம் இழந்து சித்தம் கலங்கிய நிலையில் வந்தவன் என்று சொல்கிறார்கள். அவன் பல நாட்கள் ஹுக்கா குடித்துக் கொண்டு தனக்குள் பேசிக் கொண்டிருப்பான். அவை, கடந்து சென்ற வண்ணமயமான நாட்களைப் பற்றிய நினைவுச் சிதிலங்கள் என்று தோன்றும். பல நாட்களுக்கு ஒன்றுமே பேச மாட்டான். அவன் அங்கிருந்த பெரிய வீட்டுத் தோட்டத்தை விட்டு அப்பால் மட்டும் போக மாட்டான். பனிக்கொடுமை கரைய ஆதவன் மெல்ல நகைக்கும் போது முகமலர்ந்து வரவேற்கும் ரோஜாக்களெல்லாம் அவன் குழந்தைகள். அவற்றை யாரேனும் கிள்ளச் சம்மதியான். அவற்றைப் பார்த்துப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்திருப்பான்; கைகொட்டிச் சிரிப்பான். பெரிய வீட்டில் ஒரு நேரம் சத்து மாவும், ஒரு நேரம் ரொட்டியும் பருப்பும் கொடுப்பார்கள். அவனுக்குச் சம்பளமென்று ஏதும் கிடையாது. கோழிக் கூண்டுக்கு அருகில் இன்னொரு கோழிக்கூண்டு போல் இருக்கும் அறைதான் அவனுடைய அறை. அவன் மேனி அழுக்கை துணி அழுக்கை கங்கையிலும் கரைக்க இயலாது. "இருட்டில் ஏன் வரே பேட்டீ? பொல்லாத மிருகங்கள் உலவும்... நீ பத்திரமாகப் போ!" என்று அவளுடனே திரும்பும் பாபா அன்று சற்று இளகி இருக்கிறான் போலிருக்கிறது. "டீக் ஹை பாபா. மிருகங்கள் இருக்கின்றன" என்று அவள் உடனே சொல்லியிருக்க வேண்டாம். பீடித் துண்டை விட்டெறிந்து விட்டு "எங்கே பேட்டீ?" என்று ஓடி வருகிறான். வாயிற்படியில் நிற்கும் துரை மீது அவன் பாய்ந்து விட்டான். "என் மகளை... காலிப்பயலே? உன்னை விட்டேனா பார்? குத்தி இந்தக் கையை இரத்தக் கரையாக்கிக் கொண்டு சாவேன்..." துரை அலறிக் கொண்டு உள்ளே ஓட, யமுனா கத்த பெரிய வீட்டிலிருந்து எஜமானி வந்து கூச்சலிட, தினு பாபாவை விலக்கி அழைத்துப் போகிறான். "என்னங்க? நெஞ்சைப் பிடித்து அமுக்கி விட்டானா...?" துரை சந்தேகம் கரையாமல் பார்க்கிறான். தேனீர்க் கோப்பை உடைந்து சிதறி இருக்கிறது. "அதுசரி, என்ன கலாட்டா? இங்கே யார் வந்தது?" அவள் தயங்கித் தயங்கி இந்துநாத்தைப் பற்றி விவரிக்கிறாள். துரை இவளை நம்பலாமா என்று பார்ப்பதைப் போல் பார்க்கிறான். "நீ... எக்ஸ் மினிஸ்டர் வீட்டுக்கா போயிருந்தே?" "ஆமா..." "நீ என்னிடம் போறதாகச் சொல்லலையே?" "சும்மாதான், கல்கத்தாவில் பண்ணனும்னு நினைச்சேன். இங்கே தேவை அதிகமாயிருக்கு. உதவி கேட்கலாம்னு போனேன்." "என்னிடம் சொன்னால் நானும் வந்திடுவேன்னு பயமா யமுனா?" அவனுடைய கண்கள் அவளை ஊடுறுவுகின்றன. "இல்லே. நீங்க கூட வருவீங்கன்னு நினைக்கலே..." "அப்படியில்ல யமுனா, அவங்க சிநேகம் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்." மாதாஜி கார் வாங்கிக் கொள்வதைப் பற்றிக் கூறுயது நினைவில் முட்டுகிறது. "நீ இன்னொரு நாள் செல்லும்போது சொல். மாதாஜீக்கு ஒரு நல்ல் பிரசன்ட் வாங்கி வருகிறேன்..." யமுனா இதற்கு மறுமொழி கூறாமல் அவனை உறுத்துப் பார்க்கிறாள். "என்ன யமு?" "ஒண்ணுமில்லே, நான் இன்னொரு தடவை போவேனான்னு நினைச்சேன். அறியாமைச் சேற்றில் அழுந்திய ஏழைகளை அமுக்கிக் கொண்டு மிஞ்சும் வண்மையை கேவலமான இன்பங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சுரண்டலை நாமும் செய்ய நான் விரும்பவில்லை." "ஓ..." என்று இழுக்கும் துரை விஷமமாக, "சற்று முன் இங்கே வந்தது சுதீர்குமாரோ?..." என்று கேட்கிறான். அவள் நெஞ்சு சில்லிட்டுப் போகிறது. |