15

     அன்றிரவு அவர்கள் இருவரும் தனித்தனியே சிந்தைகளோடு உழம்பியவர்களாய் நெடுநேரம் உறங்காமல் புரண்டு கழிக்கிறார்கள்.

     விடியும் பொழுது சனிக்கிழமை.

     சனிக்கிழமை பிற்பகலுடன் அலுவலகம் முடிந்துவிடும். சனி பிற்பகலையும் ஞாயிற்றுக்கிழமையையும் துரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பான். உல்லாசமாக எங்கேனும் திரிந்து சின்னஞ்சிறு கதை பேசி மகிழ்ந்து இனிய பண்டங்களை வாங்கி உண்டு, அந்த இனிய நினைவுகளுடனே இரவைக் கழிக்கக் கூட்டினுள் புக வருவதை எதிர்பார்ப்பான்.

     இந்த நியதி கண்ணுக்குத் தெரியாத உறுத்தலுடனே இந்நாள் வரை தொடர்ந்திருக்கிறது. இன்று உறுத்தல் ரணமாகிக் கண்ணையே கெடுத்திருக்கிறது. தாயைப் போல் திருமண வாழ்வில் புகுந்தாளே ஒழிய, தந்தையைப் போல் அவர் இருப்பாரோ என்று ஐயங்கூடக் கொள்ளவில்லையே?

     துரை லட்சியங்களுக்காகத் தன்னை வளர்த்துக் கொண்ட நாயகன் அல்லவே? லட்சியங்கள் உலக வாழ்வுக்காக அவனை உருவாக்கின என்று வேண்டுமானால் சொல்லலாம்.

     பொழுது விடிந்த பின்னர் பேச நேரமில்லை. அவனுக்குக் காலை உணவு தயாரித்துக் கொடுத்த பிறகு அவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு அருகிலுள்ள பஸ்திக்குச் செல்ல வேண்டும். அங்கு ஒரு கிழவி, காசநோயுடன் தன் மூன்று பேரக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருப்பாள். உடையவன் இல்லாத குடும்பம் அது.

     அக்கம்பக்கங்களில் யமுனா பேசிப் பழகாததற்கு வங்காளி தெரியாதது மட்டும் காரணமில்லை. அவர்களில் எவருடைய கவனத்தையும் கவரும்படியாக அவள் ஆடை அணிகள் பூண்டிருக்கவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.

     முச்சந்தி வெறிச்சிட்டாற்போல் காட்சி அளிக்கிறது. பனி மங்கலில், இருள் போர்வையை விரிக்கும் நேரத்தில் முதல்நாள் அங்கு நிகழ்ந்த காட்சி மனக்கண்ணில் விரிகையில் ரோமம் குத்திட்டு நிற்கிறது. அங்கே இன்று போலீஸையே காணவில்லை. வழக்கம்போல் மிட்டாய்க்காரன், பாத்திரவண்டி எல்லாம் போகின்றன. அழுக்கும் நசுங்கலுமாக ஒரு பஸ் வந்து நிற்கிறது. கல்லூரிக் கன்னியர் சிலர் இறங்கிச் செல்கின்றனர். பான்வாலா, துணிக்கடைக்காரன், மருந்துக் கடைக்காரன், வரிசையாக எத்தனையோ கடைகள்... எதுவுமே உலகில் நடக்காதது போலும், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று இருப்பவளைப் போலும் குஞ்சு குழந்தைகள் சூழ, பனிவெயிலில் ஈரமில்லாத ரொட்டிகளைக் காயவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஏழைத்தாய்... குடிசை வரிசைகளில் வெயில் நேரச் சுறுசுறுப்புப் பளிச்சிடுகிறது. 'ஸத்து'மா பச்சை மிளகாயுடன் அந்தக் கிழவி எலும்புக் கூடாய்க் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறாள். பிஹாரிகளுக்குரிய எளிய உணவு அது. உலகக் கவலையற்றுப் புழுதியில் புரண்டு கொண்டிருக்கிறது ஒரு குழந்தை. யாருடைய எருமையோ தேய்த்துக் குளிப்பாட்டுகிறான் பொடியன். சாணி உருண்டைகளைக் கவனமாக உருட்டி உருட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் ஆறு வயசுப் பெண். அதுதான் வாழ்க்கை; உட்சூட்டை மாயாமல் காக்க, வெளிச் சூட்டைப் பாதுகாத்து வைக்கும் கருவூலம் சாணியை அந்தக் குழந்தை தான் சேர்த்து வந்திருக்கிறாள். யமுனா அந்தக் குழந்தைக்கு உதவியாக அதை உருட்டி உருட்டி வைக்கிறாள். அதைக் கொண்டு விற்றால் இரண்டோ மூன்றோ கிடைக்கும். இம்மாதிரி ஆயிரம் பதினாயிரம் குடும்பங்கள்; இந்தக் குடில்களில் வறுமையும் பிணியுமே கொலுவீற்றிருக்கின்றன. வங்கத் தலைநகரின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இத்தகைய சேரிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

     மக்கள் இந்தப் பெருநகர் வீதிகளில் நெருங்க எங்கிருந்து வருகின்றனர்? டிராம்களும் பஸ்களும் புறநகர வண்டிகளும் இந்த நகர வீதிகளை அப்படியே அப்பிக் கொள்ள, மக்கள் எங்கிருந்து நெருங்குகின்றனர்? எள் போட்டால் எண்ணெய் வழியக் கசக்கிப் பிதுங்கும் நகர வண்டிகளில் நரகவாசமாக அன்றாடம் நின்று பொறுமை இழக்காமல் மீண்டு வரும் இடைநிலைக் கும்பலில் நெற்றிகளும் கண்களும் என்றோ ஒளியிடமிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டதாய்க் காட்சி தருகின்றனவே?

     மாமேதைகளையும், ஞானிகளையும் ஈன்றெடுத்த இந்தக் கங்கை முகத்துவார மண், அவள் மனசின் அன்றைய வண்ண ஓவியங்களை அழித்துவிட்டன. ஒரு சகாப்தத்தை அழித்துக் கொண்டு இன்னொன்றைத் துவக்க இருக்கிறது வங்கம். இப்போது அந்த அழிவு காலச் சந்தியில் அவள் நின்று கொண்டிருக்கிறாள்.

     அடுத்த நாள் அந்தக் குழந்தையின் பாட்டிக்கு ஒரு கம்பளிப் போர்வையும், கம்பளிச் சட்டையும் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு அவள் திரும்புகிறாள். பெரிய வீடுகளில் சென்று படி ஏறி இறங்கி, வன்சொல் பொறுத்து இந்த ஏழைகளுக்கு இட்டு நிரப்ப வேண்டும்.

     அவள் பூங்காச் சதுக்கத்தின் பக்கம் வரும்போது இரு போலீசுக்காரர்கள் இரண்டு இளைஞர்களை இழுத்தாற் போல் நடத்திக் கொண்டு வருகின்றனர்.

     "இன்குலாப் ஸிந்தாபாத்"

     அடித்தொண்டைக் குரலும் கட்டிப் போயிருக்கிறது!

     செல்வம் படைத்தவர்கள் வீடுகளிலேறி சர்வோதயப் பண்பை உரைப்பதைப் பற்றியும், வேண்டாத துணி கம்பளிகள் திரட்டுவதைப் பற்றியும் இரவின் தனிமையில் திட்டங்கள் போட்டவளுக்கு, இப்போது ஒரு படி ஏறக்கூடத் துணிவு வராது போலிருக்கிறது. பரீட்சைக் கூட்டத்தில் கேள்வித்தாளைப் பற்றிய சிந்தனையே மரத்து உட்கார்ந்து விட்டாற் போல் குழப்பம் தோன்றுகிறது. சமாளித்துக் கொண்டு நடக்கிறாள். காய்கறி மார்க்கெட்டின் பக்கம் அழுகல் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. அது துப்புரவாளர் வேலை நிறுத்தத்தின் விளைவு. ஆனால், பாரம் சுமக்கும் மக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடக்கின்றனர். பாரம் சுமந்து முதுகொடிந்த மக்கள் அந்த அழுகலையே மூச்சுக்கு மூச்சு உட்கொள்கின்றனர். அதையே உணவாகவும் கொள்வார்கள். வங்கப் பஞ்சம் என்று அவளுடைய தந்தை ஒரு பஞ்சத்தை விவரித்ததுண்டு. வீதிகளில் சடலங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததாம். அப்போது பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் குறை கூற முடிந்தது. இப்போது...?

     கடை வரிசைகள் எந்த நேரத்திலும் இங்குக் கலவரம் நிகழக்கூடும் என்று எதிர்பார்ப்பது போல் தோன்றுகின்றன.

     திடீரென்று யமுனாவுக்கு முதல்நாள் பஸ்தியிலிருந்து சரஸ்வதி பூஜைக் காசு பிரிக்க வந்த இளைஞர்கள் நினைவு வருகிறது.

     ஒருகால் திருமதி லுச்சியை அவர்கள் இம்சை செய்யும் நோக்கில் வருவார்களோ? ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தில் பெரிய பதவி வகிப்பவன் லுச்சி. படகு போன்ற காரில் அவன் அலுவலகம் செல்கிறான். வீட்டில் சமையலுக்கு ஒரு கிழவியும், எடுபிடி வேலை செய்ய ஒரு பிஹாரி பையாவும் இருக்கின்றனர். காற்றுப் பதம் காக்கும் வசதியுடைய அறை; விதவிதமான உடுப்புக்கள், சிங்கார அலங்கார சாதனங்கள், அரசகுமாரியைப் போல் எழிலுடையவள் அவள்.

     உண்மையில் அவள் கிலி பிடித்துப் போயிருக்கிறாளோ என்னவோ. இரண்டொரு முறைகள் அவளை நோக்கி யமுனா புன்னகை செய்ததுண்டு. ஆனால் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறாள். விரைந்து தெருவில் நுழைந்து திரும்பி படியேறிக் கதவைத் திறக்கிறாள். முன் வராந்தாவிலிருந்து பார்க்கும் போது, கீழே வெயிலுக்கு இதமாக முன்புறத்துப் புல் தரையில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அதன் மேல் அமர்ந்து கையிலுள்ள கிண்ணத்திலிருந்து ஸ்பூனால் ஏதோ அருந்திக் கொண்டிருக்கிறாள். முன்புறம் ஏதோ ஒரு சினிமாப் பத்திரிகை. இவளே அந்த முகப்பு அட்டைத் தாரகையைப் போன்றுதான் உடை அணிந்திருக்கிறாள். மினுமினுப்பான ஒட்டப் பிடிக்கும் கால் சட்டையும், மேலே மிகவும் மிருதுவான கம்பளிச் சட்டையும் அணிந்திருக்கிறாள். முரடர்களைப் போல் இருவர் - அந்தச் சுற்றுக்கு வெளியே முறுக்கிய மீசைகளுடன் பீடி குடித்துக் கொண்டிருக்கின்றனர். இவளுடைய பாதுகாப்புக்காக அந்த முரடர்கள் கூலிக்கு வந்திருப்பார்களோ? 'பஸ்தி'ப் பையன்கள் கேட்ட தொகையையே கொடுத்திருக்கலாமே? இந்த முரடர்களைக் காவலுக்கு வைப்பதை விட அது மேலல்லவோ? ஒரு வகையான பரபரப்பும் திகிலும் அவளை கவ்விக் கொள்கின்றன.

     விடுவிடென்று மேலே ஏறியவள் கீழே இறங்குகிறாள்.

     முரடர்கள் கார்ஷெட்டைக் கடந்து புல்வெளிக்குச் செல்லும் வாயிலில் நிற்கின்றனர். கிருஷ்ண... கம்சன் நாடகத்தில் வரும் சானுர மல்லர்களின் நினைவு வருகிறது. "நான் மாடி ஓரப் பகுதியில் இருக்கிறேன். பங்களாவில் அம்மாளைப் பார்க்க வந்தேன்" என்று கூறிவிட்டு அவளாக உள்ளே நுழைகிறாள்.

     "நமஸ்தே பஹன்ஜி!"

     அவள் சினிமாப் பத்திரிகையிலிருந்து திரும்பிப் பார்க்கிறாள். ஆனால் முகமலர்ந்து 'வாருங்கள்' என்று வரவேற்கவில்லை.

     "என்ன வேண்டும்?"

     யமுனா பதிலுக்கு உள்ளக் கசிவுகளை எல்லாம் வெளியாக்கும் புன்னகை செய்கிறாள்.

     "ஒன்றுமில்லை சோதரி. நான் அதோ அந்த மாடியில் இருக்கிறேன். உங்களிடம் சிறிது பேசிப் போக வந்தேன்?"

     "ஓ...?" என்றவள் உள்ளே நோக்கி, "நந்து!" என்று குரல் கொடுக்கிறாள். "ஒரு நாற்காலி கொண்டுவா!"

     நந்து நாற்காலி கொண்டு வருகிறான்.

     யமுனாவுக்குச் சமையலறை ஜன்னலிலிருந்து அந்தக் கீழ்ப் பகுதியின் பின்புறச் சந்து தெரியும்.

     காலையில் உழக்கு 'ஸத்து' மாவும், இரண்டு பச்சை மிளகாய், வெங்காயமும் மாலையில் உலர்ந்த ரொட்டி நான்கும், ஒரு வியஞ்சனமும் நந்துவுக்கு உணவு. குழாயடியில் வைத்துக் கொண்டு அவன் உண்பதை அவள் பார்த்திருக்கிறாள். எத்தனை தூண்டி விட்டாலும் எழுச்சியே காண முடியாமல் அழுந்திப் போன முகம்; மேலுக்குக் கோடு போட்ட துவைத்த துணிச்சட்டை; அரையில் வெண்மை மங்கிய வேட்டி. அவனைப் பார்த்துக் கொண்டே யமுனா உட்காருகிறாள்.

     "உங்கள் கணவர் இப்போது சாப்பாட்டுக்கு வரும் நேரமோ?"

     "இல்லை... அவர் ஊரில் இல்லை. டில்லிக்குப் போயிருக்கிறார். ஒரு சிநேகிதியை சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறேன்."

     "நீங்கள் இந்த ஊருக்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டது போல் இருக்கிறது!"

     "...ஆறுமாசம் தானாகிறது. தரித்திரம் பிடித்த ஊர்! இதற்கு முன் நாங்கள் பாட்னாவில் இருந்தோம். அங்கு எவ்வளவு வசதிகள் தெரியுமா? சொன்னால் நீ நம்ப மாட்டாய். அருமையான பங்களா. ஐந்து வேலைக்காரர்கள். இங்கே பார், அவர் ஊரில் இல்லை என்றால் எனக்கு வெளியே செல்ல வசதியாகக் கார் டிரைவர் கிடையாது. இந்தக் கிழவிக்குச் சமைக்கத் தெரியவில்லை. அங்கேதான் நாங்கள் எத்தனை பார்ட்டிகள் கொடுப்போம்? வாரந் தவறினாலும் பார்ட்டி தவறாது. இங்கே எடுபிடிக்கு ஆள் கிடைக்கவில்லை. வந்தாலும் புடவை தோய்க்க மாட்டானாம். சம்பளமோ கேட்க வேண்டாம். பிறகுதான் இவனை அங்கிருந்து தருவித்தோம்..." என்று சொல்லிக் கொண்டே வருபவள், அப்போதுதான் நந்து அங்கேயே நிற்பதைப் பார்க்கிறாள் போலும்.

     "ஏ, இங்கே ஏன் நிற்கிறாய்? உள்ளே போய்த் துணி எல்லாம் பெட்டி போடு" என்று விரட்டுகிறாள்.

     "இங்கே இவனையும் மற்றவர்கள் கெடுத்து விடுவார்கள் போலிருக்கு. நேற்று பஸ்திப் பையன்கள் வந்து என்ன அட்டகாசம் செய்தார்கள் தெரியுமா? இவனைக் கடை கண்ணிக்குப் போகச் சொன்னால் கூட உடனே திரும்பி வருகிறானா என்று பார்க்க வேண்டியிருக்கிறது" என்று சங்கடங்களை எல்லாம் கொட்டுகிறாள்.

     "ஆமாம் முக்கியமாக அதை விசாரிக்கவே வந்தேன். சரஸ்வதி பூஜை என்று வந்தார்களே. நான் ஐந்து ரூபாய் போட்டேன். ஏன், இங்கே கதவை உடைத்துச் சத்தம் போட்டார்கள்?"

     "இங்கே நான் ஒரு ரூபாய்தான் போட்டேன். பின் என்ன? இவர்களுக்குப் பூஜையாவது புரஸ்காரமாவது? வயிற்றுப் பூஜை... கட்சிப் பூஜை! ஐம்பது ரூபாய் வேணுமாம். நான் கதவைச் சாத்திவிட்டுப் போலீசுக்குப் போன் பண்ணினேன்; பிறகு எங்கள் ஆபீஸுக்குப் போன் பண்ணினேன். போலீஸ் ஒண்ணும் பண்ணலே; ஆபீஸ்லேருந்துதான் இரண்டு பேரைக் காவலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்! எனக்குப் பயமாக இருக்கிறது..."

     "சோதரி, நான் உங்களிடம் ஒன்று சொல்லவே வந்தேன். இந்த முரடர்களைப் போகச் சொல்லிவிடுங்கள். அவர்களால் உங்களுக்கு ஆபத்து அதிகம்..."

     அவள், கண்கள் அகலப் பார்க்கிறாள். "போகச் சொல்லிவிட்டு?"

     "ஆமாம், தீமையைத் தீமையால் எதிர்ப்பதனால் தீமை வளருமே ஒழிய, அது குறையாது. அந்த வீட்டில் பையனைக் கைது செய்யப் போலீஸ் வந்தது. போலீஸ்காரனை நேற்று சவுக்கில் குத்தி விட்டார்கள். இனி போலீஸ் பழி தீர்க்க வரும். யோசித்துப் பாருங்கள்..."

     அவள் கண்களை உருட்டி விழிக்கிறாள். ஏளனக் குரலில், "அப்படியானால் இங்கே மறுபடியும் காலிக்கும்பல் வரட்டும் என்கிறாயா?" என்று கேட்கிறாள்.

     "ஆமாம். வருவார்கள் என்று தான் சொல்கிறேன்..."

     யமுனா சற்றும் எதிர்பாராத விதமாக அவள் கீச்சுக் குரலில் கத்துகிறாள்.

     "ஹா? வருவார்கள்னு நீ சொல்றியா? அப்ப, நீயும் ஒரு நக்ஸலைட்டா?... ஹே பகவான்!" பகவானைக் கூப்பிட்ட கையோடு "தர்வான், தர்வான்!" என்று கூச்சலிடுகிறாள்.

     வெளியே நின்ற முரடர்கள் உள்ளே வரும்போது யமுனாவுக்கு ஒருபுறம் சிரிப்பும், மறுபுறம் அழுகையுமாக வருகிறது.

     "க்யா மேம் ஸாப்?" என்று அவர்கள் கேட்கையில் அவள் யமுனாவின் பக்கம் கைகாட்டிவிட்டு உள்ளே ஓடிச் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள்.

     அந்த முரடர்கள் அவள் அருகில் வரத் துணியாமல் மீசைகளை முறுக்கிக் கொண்டு வசை பாடுவதில் இறங்குகிறார்கள். அவள் அவர்களிடம் "சோதரர்களே! நான் மேலே குடியிருக்கிறேன். ஹிம்சை செய்யும் நக்ஸலைட்டுகளுக்கும் எனக்கும் எந்த வகைத் தொடர்பும் கிடையாது. உங்கள் எஜமானி அம்மா மிகவும் பயந்து போயிருக்கிறார்... சொல்லுங்கள்..."

     தோல்வியை விழுங்கிக் கொண்டு விடுவிடென்று அவள் மாடி ஏறி வருகிறாள்.

     முதல் அநுபவம், இப்படித்தானிருக்கும் என்றாலும் தோல்வி அடையக் கூடாது. துரையிடம் இதைச் சொன்னால் எப்படிச் சிரிப்பார்? அந்த முரடர்கள் கைத் தடிகளால் அவள் மீது போட்டிருந்தால்? ஆண்டவனே! என்ன அவநம்பிக்கை! சகோதரனைச் சகோதரன் நம்பாத கொடுமை!

     'இவ்வளவு சுகபோகங்களுடன், தேவைக்கு மீறியதெல்லாம் அநுபவிக்கும் போது, கண்முன் பல உயிர்கள் அடிப்படைத் தேவைகளுக்கே இல்லாத நிலையில் போராடுகிறார்கள் என்ற கசிவு தாய்க்குலத்தில் உதித்தவளுக்கு ஏன் ஏற்படவில்லை?'

     யமுனாவுக்கு உள்ளே வந்தாலும் மனம், குத்துப்பட்டாற் போன்ற வேதனையில் மாய்கிறது. பிற்பகல் மணி ஒன்றடித்தாயிற்று. துரை இன்று பகலுணவு கொள்ள வந்துவிடுவான்.

     கோதுமை மாவைப் பிசைந்து வைத்துவிட்டு பூகோசை அரிந்து கொண்டிருக்கிறாள்.

     அப்போது படால் என்று பேரோசை கேட்கிறது. கட்டிடமே அதிர்ந்து தூக்கிவாரிப் போடுகிறது.

     "விடாதே, பிடி...பிடி...பிடி...அடியுங்கள் கொல்லுங்கள்!" என்றெல்லாம் கூடக் குரல்கள். மாடிப்படிகள் அதிரும் காலோசைகள்; பெட்ரோல் எரியும் நாற்றம்; கலவரம்.

     கைக்கத்தியைப் போட்டுவிட்டு அவள் வெளிக் கதவைத் திறப்பதுதான் தாமதம். சட்டென்று ஒரு பொடியன் உள்ளே நுழைகிறான். கதவை அறைந்து சாத்துகிறாள்.

     பதின்மூன்று வயசு இருக்காது. தொளதொளத்த கந்தலாய் ஒரு பைஜாமா சட்டை. எண்ணெய் கண்டு பல நாட்களான முடி. புறங்கைகளும் கன்னங்களும் பனிக்கு வெளுத்திருக்கின்றன. புகல் தேடும் கண்கள்.

     யமுனா மின்னல் வேகத்தில் புரிந்து கொள்கிறாள். பையனை உள்ளே வைத்துக் கதவைச் சாத்திக் கொண்டு வெளியே வருகிறாள்.

     "என்ன? என்ன?..."

     "பொடியன், பொடிப்பயல் தேங்காய் எண்ணெய் டப்பா மாதிரி இருந்தது. தூக்கிக் கொண்டு வந்ததை நான் பார்த்தேன்?" என்று பின் கட்டுக்காரன் மாடி வராந்தாவில் ஓடித் தேடுகிறான்.

     "பெட்ரோல் பாம் போடுகிறான்னு தெரியவில்லை. உங்க வீட்டுக்கு எண்ணெய் வாங்கிவரான்னு நினைச்சேன். இல்லாட்டி அங்கேயே நொறுக்கியிருப்பேன்... எங்கே ஓடியிருப்பான்? படி இறங்கவில்லை?..."

     நான்கு பேர்களாக அவள் சாத்திய கதவை உடைக்கிறார்கள்.

     "உள்ளே யாருமில்லை. கதவை உடைக்காதீர்கள். நான் திறக்கிறேன். உடைக்காதீர்கள்."

     அவளுடைய கத்தல் எடுபடவில்லை. காரையும் மண்ணும் பொல பொலவென்று உதிர கதவு திறந்து கொள்கிறது.

     அடுத்த கணம் பத்து ஓநாய்கள் நடுவே அகப்பட்ட திருட்டு ஆட்டுக்குட்டியைப் போல் பையன் வதைப்படுகிறான்.

     "ஆண்டவனே! ஐயோ! குழந்தையை அடிக்காதீர்கள். அடிப்பதனால் தீமை ஒழியாது; கருணை காட்டுங்கள்! ஐயோ! இந்தப் பாரத பூமியில்..."

     நெஞ்சு அடைக்கிறது. குரல் வெளியே வராமல் அவள் விம்முகிறாள். பையனின் மூக்காலும் வாயாலும் இரத்தம் ஒழுகுகிறது. தரதரவென்று அவனை இழுத்துச் செல்கின்றனர்.

     கீழே பெட்ரோல் சிதறிய இடங்களிலெல்லாம் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. புல்தரை பொசுங்க மேஜை மீது இளம் வெயிலில் எஜமானியும் தோழியும் உணவு கொள்ள நந்து சுத்தம் செய்த மேஜை, பிளாஸ்டிக் விரிப்பு, உணவுப் பண்டங்கள் எரிகின்றன.

     திருமதி லுச்சி கரிந்த மேற்சட்டையுடன் ஓரமாக நின்று "மாடிக்காரி பிசாசு. அவள் நக்ஸலைட் உடந்தை. அவளைக் காலி பண்ணச் சொல்லுங்கள். அவள் தான் குண்டு போட்டாள்!" என்று வீட்டுக்காரனிடம் கத்துகிறாள்.

     "க்யா பாத்ஹை?" என்று வீட்டுக்காரன் அவளைப் பார்த்து மிரட்டிக் கேட்கப் படியேறி வருகிறான்.

     "நான் ஹிம்சையை வெறுப்பவள் ஐயா. அந்தச் சகோதரி என்னைத் தவறாக எண்ணுகிறாள். பையன் வந்ததையே நான் பார்க்கவில்லை. பார்த்தால் நான் தவிர்த்திருக்க மாட்டேனா?..."

     யமுனா அனுப்பிவிட்டு உள்ளே வந்து அலங்கோலங்களைப் பார்க்கிறாள். காந்தியடிகளின் படம் கீழே விழுந்திருக்கிறது. ஆனால் உடையவில்லை.

     கருணை? அது மனித மனங்களில் செத்துவிட்டது. ஐயனே!

     தரையில் பையனின் இரத்தம் சிந்தியிருக்கிறது.

     "நேற்று அந்தக் கொலை... இன்று இதுவா?"

     அந்த முரடர்கள் சிறுவனை அடிக்கும்போது முதலில் அவள் ஏன் பாய்ந்து உள்ளே செல்லவில்லை? என்னை முதலில் கொன்று விட்டு என்னிடம் அடைக்கலம் புகுந்த பையனைக் கொல்லுங்கள் என்று ஏன் சொல்லவில்லை?

     'அவள் அச்சத்தை இந்த அளவுக்குக் கூட வெல்லவில்லையே?...'

     துண்டுதுண்டாகத் தன்னைக் குதறிக் கொள்கிறாள்.

     கண்முன் அடைக்கலமாக ஓடிவந்த ஓர் உயிரை, இளங்கன்று பயமறியாது என்று விளைவறியாமல் விளையாடிவிட்ட ஒரு சிறுவனின் உயிரை, ஒரு கூட்டம் வதைத்து எடுக்கையில் அவள் பார்த்துக் கொண்டு நின்றாள்! இவள் அஹிம்சை வழி, அன்பு வழி என்று தன்னைப் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தவள்! அறியாமையினால் அஞ்சி ஒளிந்த பெண்களைக் காட்டிலும் தான் மேலானவள் என்று குன்றேறி நின்றவள்! எல்லோரையும் போன்றவளல்ல நான் என்று இறும்பூது கொண்டவள், இடறி விழுந்துவிட்டாள். "அம்மையே என்னைக் காட்டிக் கொடுத்து விடுவாயோ?" என்று கெஞ்சி வந்த அந்தக் கண்களை அவள் எப்படி மறப்பாள்?

     அவனை இங்கே வராதே என்று தடுத்திருந்தாலேனும் வேறு எங்கேனும் ஓடி ஒளிந்து தப்பியிருப்பானே? அவனைக் கொலைக்காரர்கள் கையில் பிடித்தல்லவோ கொடுத்து விட்டாள்? கையுமெய்யுமாகக் கூட அல்ல. 'உனக்கு அடைக்கலம் கொடுக்கிறேன்' என்று வஞ்சகமாக! பெண் அஹிம்சையின் வடிவானவள் என்று அண்ணலின் மொழியை உருகி உருகிப் படித்தாளே? ஒரு தாய் தன் மகவுக்கு ஊறு செய்யும் என்று கொடிய அறுவை வாதனையையும் மயக்க மருந்தின்றிப் பொறுத்துக் கொண்ட செய்தியை அவள் நினைந்து நினைந்து வியந்திருக்கிறாள். இன்று எந்தப் பெண்ணும் அத்தகைய உயர்வில் நிற்கவில்லை. அஹிம்சையின் வடிவங்கள் சுயநல மொத்தைகளாகி விட்டார்கள். அவளும் இதற்கு விதிவிலக்கல்ல.

     துரை வீட்டினுள் அடிவைக்கும் போது, இளம் மனைவி வெளியிலிருந்து வரும் சோர்வுக்கு மாற்றாகக் காட்சியளிக்கவில்லை. சோகமே உருவாக இருந்தவள் எழுந்து அடுப்பைப் பற்றவிடப் போகிறாள். கதவு அதிர்ந்து உதிர்ந்து காரை மண் சிதறிக் கிடக்கிறது இரத்தக் கறைகள்... கீழே மயான அமைதி...

     "யமுனா? என்ன இது? ஏது இரத்தம்?..."

     அவளுடைய கண்ணிதழ்கள் ஈரம் படிந்து கூம்பியிருக்கின்றன.

     "என்ன யமு?..."

     "நான்... ஒரு பெரிய தப்புச் செய்து விட்டேன். ஒரு பிஞ்சுப் பையனைக் கொலை செய்ய உடந்தையாகி விட்டேன்."

     "உஷ்... என்ன நடந்தது; கலாட்டாவா? நான் நேற்றே உன்னை அந்தக் காந்தி படத்தைக் கழற்றி வைத்துவிடு என்று சொல்ல நினைத்தேன். என்ன நடந்தது?"

     அவள் நடந்ததை விவரிக்கையில் துரையின் முகத்தில் சூடேறுகிறது.

     "யமு, உனக்கு எத்தனை தரம் நான் சொல்லிவிட்டேன், நாம் இங்கே அந்நியர்கள். நீ ஏன் இவர்கள் விஷயங்களில் தலையிடுகிறாய்? நாம் பிழைக்க வந்தவர்கள். அதிலும் நான் புதியவனாக இங்கு வேலைக்கு வந்திருக்கிறேன். நாம் ஊரை விட்டு நல்லபடியாகக் கிளம்ப வேண்டாமா? நீ என்ன பச்சைக் குழந்தையா பொறுப்பில்லாமல் விளையாட...?"

     "நீங்க ஏன் கோபிக்கிறீங்க? நான் அவளிடம் சொன்னது தப்பா? முரடர்களை அழைத்தால் கலகந்தானே..."

     அவனுடைய குரல் உச்சத்தில் வெடிக்கிறது! "உன் லட்சியமும் நீயும்! நீ அதிகப் பிரசங்கி! நானும் போனால் போகிறதென்று பொறுத்துப் பார்க்கிறேன்; நீ என்ன நினைச்சிட்டிருக்கே?"

     இதுதான் அவளுக்கு அவனுடைய சினத்தைப் பார்க்கும் முதல் சந்தர்ப்பம்.

     "இந்தக் கல்கத்தா நகரம் நாசமாகப் போகட்டும். நீ ஏன் தலையிட்டுக்கறே? கதவை ஏன் திறக்கணும்? வெளியே உனக்கென்ன வேலை? சரி. முதலில் இந்த ரத்தத்தை துடை! இந்தக் காந்திப் படத்தைக் கழற்றி வை. இல்லாட்டி நானே உடைச்சிடுவேன்!"

     யமுனா மறுமொழியின்றிக் கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள். காந்தி படம் பெட்டிக்கடியில் மறைகிறது. தரை சுத்தமாகிறது.

     "முகத்தைக் கழுவிவிட்டு வா முதலில். ஏன் எப்பப் பார்த்தாலும் அழுது சாவுறே? எனக்கு இந்த அழுமுகம் கண்டாலே வீட்டில் இருக்கப் பிடிக்கலே..."

     முகத்தைச் சோப்பைப் போட்டுக் கழுவிக் கொள்கிறாள்.

     எண்ணெய் பளபளப்புடன் பொட்டு வைத்துக் கொள்ளச் சிமிழை எடுக்கையில் "ஏன் பவுடர் இல்லையா?" என்று குரல் கேட்கிறது. முகத்தில் பூச்சேறுகிறது. உள்ளத்துத் துயரங்களுக்கு அது பூச்சாமோ?

     "இப்படி வா; சிரிக்கவேணும் யமு..."

     முயன்றாலும் அவளுக்குச் சிரிப்பு மலரவில்லை. மாறாகக் கண்களே நிரம்புகின்றன. அவன் சட்டென்று அவளை இழுத்துக் கொண்டு கன்னங்களில் முத்தமிடுகிறான். அவள் தன்னை விடுவித்துக் கொள்ளத் திமிறுகிறாள்.

     "யமு... யமுனா ஏன்? நீ ஏன் இப்படி இருக்கறே? என்னை உனக்கும் பிடிக்கலியா? நான் கறுப்பாக இருக்கிறேன்னு என்னைப் பிடிக்கலியா? நான் மட்டமான சாதின்னு என்னை வெறுக்கிறியா? யமு! நான் உன்னை உயிராக நினைச்சிருக்கிறேன் யமு. உன்னை நான் ஒருபோதும் உள்ளத்தோடு கோபிக்க மாட்டேன் யமுனா...?"

     அவளுக்கு இதயம் விம்மித் துடிக்கிறது. சொற்கள் வெளி வராமல் கண்ணீரில் கரைகின்றன. அவன் அந்தக் கண்ணீரைத் துடைக்கிறான்.

     "நீ... உனக்கு... இன்னிக்கு நான் சுதீரைப் பார்த்தேன். ஸ்ட்ரான்ட் ரோடில் பெரிய ஊர்வலத்தின் முன்னே செங்கொடியைப் பிடிச்சிட்டுப் போறான். நான் டிராமில் உட்கார்ந்திருந்தேன். ஆர்ப்பாட்டக்காரர்கள் வரவே எல்லாம் நின்னு போச்சு..."

     அவள் விழிகளைக் கொட்ட மறந்து நிற்கிறாள்.

     "நீ... நீ... அவனைக் காதலிச்சே இல்லே?"

     "அப்படியெல்லாம் பேசாதீங்க-"

     மேலே, 'நான் யாரையும் எப்பவும் அப்படியெல்லம் நினைச்சதில்லே' என்று சொல்ல வந்தவளுக்கு ஏதோ நின்று தடையாகிறது; நாவைக் கடித்துக் கொள்கிறாள். மீண்டும் விழிகள் நிரம்புகின்றன.

     "பார்த்தாயா, பார்த்தாயா? நீ அவனையே நினைச்சிட்டுத்தான் இப்படி..."

     அவள் அவன் வாயைக் கரமலரால் மூடுகிறாள்.

     "நீங்க அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. நான் சத்தியத்தின் வழி நடக்கணும்னு நினைக்கிறவள். அதற்கு மாறான எண்ணங்களை அநுமதிக்கவே மாட்டேன். துரை, நீங்க அப்படி எல்லாம் நினைக்கவே கூடாது..."

     "நான் அப்படித்தான் நம்பிட்டிருக்கிறேன் யமு. ஆனாலும்..."

     "ஆனாலும் எல்லாம் கிடையாது. நீங்க என்னிக்கும் அப்படியே நம்பணும். நான் சத்தியத்தையே தெய்வமாக உயிருக்கும் மேலாக நினைக்கிறேன்..."

     "சரி, அந்தப் பேச்சுக் கிடக்கட்டும்; எனக்குப் பசிக்கிறது சாப்பிடுவோம் வா..."

     யமுனா அவன் பிடியிலிருந்து விடுபட்டு, அடுப்பிலிருந்த பருப்பையும் காயையும் இறக்கித் தாளித்த பின் ரொட்டிக் கல்லைப் போடுகிறாள்.

     "ஓ மறந்தே போய் விட்டேனே! யமு... ஒரு சேதி. அம்மா ஒரு கடிதாசியை திருப்பி அனுப்பி இருக்கிறார்..." அவள் மா உருண்டையை நசுக்கியவாறு அவனை நிமிர்ந்து பார்க்கிறாள். அவன் தமிழ்நாடு அரசு முத்திரை குத்திய கடிதம் ஒன்றை நீட்டுகிறான்.

     கலப்பு மணம் செய்து கொண்ட அவர்களுக்கு வரும் பொங்கல் நாளன்று முதலமைச்சர், தங்கப் பதக்கப் பரிசு வழங்குவார்!

     அவள் புறங்கையால் கடிதத்தைத் தள்ளும் பாவனையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு ரொட்டியை வாட்டுகிறாள்.