உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
5 இரண்டு நாட்களுக்கு ஆசை காட்டிவிட்டு ஊமைப் புழுக்கமாக வாட்டுவாயோ என்று மண்-வானைப் பார்த்து உருகும் வெப்பம். கோவை நகரத்தில் பொதுவான நிலையிருந்தாலே நீருக்கு நெஞ்சுலரக் காத்துக் கிடக்க வேண்டும். பஞ்சாலைகளில் சீக்குப் பிடித்தது போக ஆரோக்கியமானவைகளும் தண்ணீர்த் தட்டில் தவிக்கும் நிலை. வறுமையும் புழுதியும் வறட்சியும் தெருவெல்லாம் உற்சாகங்களை அடியோடு வறட்டி இருக்கின்றன. மலையடிவாரத்திலிருந்து வரும் வண்டிக்காக ஜோசஃபும் யமுனாவும் நிற்கின்றனர். அவர் அவளை ரயிலேற்றிவிட்டு மறுநாள் பாதயாத்திரையில் பங்கு கொள்ளப் போகிறார். பெண்கள் வாசனை முகப்பொடியும் பூவுமாகக் கடைவிரித்து அலங்காரம் செய்து கொள்ளும் அறையில் அந்த மணங்களை அமுக்கிக் கொண்டு உட்புறமிருந்து நாற்றம் வீசுகிறது. குடலுக்குள் புகுந்து அங்கு என்ன இருந்தாலும் தள்ளி விடுவேன் என்று சவால் விடுகிறது. தங்கள் மனப் பலவீனங்களையும் உடல் அழுக்குகளையும் வெளியில் காட்டுவதைப் பண்புக் குறைவாகவும் அநாகரிகமாகவும் கருதும் காலம் பழையதாகி விட்டது என்று அவளுடைய அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது. தந்தை படுக்கையோடு படுக்ககயாக நோயில் விழு முன் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் அவளும் தாயும், மதுரைப் பக்கத்துக் காந்தி கிராமத்துக்குப் போனார்கள். மதுரை ரயில் நிலையத்துப் பொதுக் குளியறையில் அம்மா பெண்கள் முகம் சுளிக்க ஒரு அறிவுரை நல்கிவிட்டுத் தேய்த்துக் கழுவினாள். இப்போது இன்னும் காலம் முன்னேறிச் செல்கிறது. சந்திர மண்டலத்தில் முதல் மனிதன் அடிவைத்து விட்டான். நகரமே பார்க்காத, வெளிச்சம் தெரியாத ஆதிவாசிப் பெண்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் புறத் தூய்மையின் சுகத்தை அறியாத பேதைகள். ஒரு வகையில் அந்த எளியவர்களுக்குச் சுத்தம் ஆடம்பரமும் கூட. இந்த மலைக்காட்டு ஏழைகள் குளித்துத் துணி துவைத்தால் துணிகள் கரைந்துவிடும் என்று துவைக்காமலிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பளிங்குக்கல் பரவிய குளியலறையில் வந்து புழங்கும் நாகரிக மக்கள் சுதந்திரத்தின் சுகம் மிஞ்சி, அகம்பாவமாகிவிட்ட நிலையில் தங்கள் மலினங்களை நாணமின்றி வாரி இறைக்கின்றனர். குளித்து உடை மாறும் அணியலறையில் செருப்பைத் தொடும் தேக்க நீர் நாற்ற நீராக இருக்கிறது. பீங்கான் பாண்டத்தில் எவளோ ஒருத்தி போடக் கூடாத பொருளைப் போட்டு, அது அடைத்து போகும் பணியைச் செய்திருக்கிறாள். யமுனா துடைப்பம் தேடித் தேக்க நீரைத் தள்ளித் துப்புரவு செய்கையில் ஒரு முப்பது வயசுக்காரி, மூன்று வயசுக் குழந்தைக்குரிய உடையுடன் அங்கு வருகிறாள். யமுனாவை அவள் துப்புரவுக்காரி என்று நினைத்திருக்க வேண்டும். "அப்புறம் சுத்தம் செய், அப்பால் போ!" என்று விரட்டுகிறாள். யமுனா நிமிர்ந்து பார்க்கிறாள். "பொது இடங்களில் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளக் கூடாதா, பெண்கள்? அதுவும் படித்த பெண்கள் இதை நினைத்துப் பார்க்க வேண்டாமா?" அவள் மறுமொழி ஏதும் கூறவில்லை. "அப்படியா சேதி?" என்று ஏளனமாகக் கேட்பது போல் பார்வையை வீசிவிட்டுப் போகிறாள். துடைப்பத்தை மூலையில் வைத்துவிட்டு அவள் அலுப்போடு வெளியே வருகிறாள். அரை வயிறும் முக்கால் முதுகும் தெரியக் காட்டிக்கொண்டு நாலைந்து பெண்கள். கொடுக்கு மீசைகள் குறுந்தாடிக் கோலங்களில் சில இளைஞர்கள். மனிதன் சந்திரனில் காலூன்றி, மனித குலத்துக்கு ஒரு முன்னேற்றத் தாவல் என்று முழங்கிய வீரனைப் பற்றிய விமரிசனங்கள்; கலகலக்கும் சிரிப்புகள்; கத்திக்குத்து இரத்தங்கள், பெண்ணுடலின் விரிவான கோலங்கள்; காமக் களியாட்டங்களின் சங்கேதப் படலங்கள் ஆகியவற்றை அட்டைகளில் விளம்பரம் செய்து கொண்டிருக்கும் புத்தகங்களைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு ஒரு அழுக்குச் சட்டைப் பையன் ரெயிலடி மேடையில் ஊர்ந்து செல்கிறான். அந்தப் புத்தகங்களில் பொதிந்துள்ள விஷயங்களைப் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாது; அக்கறையுமில்லை. அவற்றை அவன் ஆங்கிலம் படித்த மேல்நாட்டு நாகரிகக்காரர்களுக்குத்தான் விற்கிறான். "எந்தா யமுனா சிந்தனை வயப்பட்டது?" "ஒண்ணுமில்ல; பாத்ரூம் கழுவப் போனேன்; தண்ணீரில்லை." "ஓ; அது சரி. ஆனா இது பாபுஜி இருந்த காலமில்ல. நீ செய்வதைப் பார்த்து நாணி யாரேனும் உதவ வரலியே?" "நான் இந்த வேலையைக் கூலிக்குச் செய்வதாக நினைத்தாள் ஒருத்தி..." யமுனா கலகலவென்று சிரிக்கிறாள். அவரோ அவளைப் பெற்று வளர்த்த தந்தை தன் மகள் கணவன் வீடு செல்ல விடைபெற நிற்பது போல் உணர்ச்சி தழுதழுக்க நோக்குகிறார். "யமுனா, எனக்கு உன்னைப் பார்க்கப் பெருமையாயிருக்கு; ஒரு கலாகாரன், தன் சிருஷ்டியைப் பார்த்துச் சந்தோஷப்படுவது போல், நிண்டம்மையும் அச்சனும் காட்டுக் குழந்தைகளை மக்களாய் சுவீகரிச்சு உன்னை நான் சுவீகரிச்சு, மகளே வில்வித்தையும் குதிரையேற்றமும் கற்பிச்சு மகனை யுத்தரங்கத்துக்கு அனுப்புவது போல் எனக்குள்ளே ஒரு எண்ணம். என் கண்முன் வளர்ந்த நீ எப்படி இருக்க வேணும்னு நினைச்சேனோ, அதெல்லாம் கை கூடினாப் போல் சந்தோஷம். ஆனால் எத்ர கட்டிக் கொடுத்தாலும், சொல்லிக் கொடுத்தாலும், சமர பூமியைக் கண்டதும் நடுநடுங்கிப் போகிறவர்கள் தான் இந்த அஹிம்சா வழியில் அதிகமான பேர்களும், பதவியையும் பொறுப்பையும் வகிக்க வருபவர்கள் தான் எல்லாரும். அந்தக் களத்தில் மின்மினிப் பூச்சிகளாக ஆண்மையிழந்து சுற்றிக் கொண்டிருப்பவர்களையே இன்றைக்கு நாடு முழுசும் பார்க்கிறோம். நீ ஏது பதவி வகிச்சாலும் எரிமுட்டை தட்டி ஜீவனம் செய்தாலும் பத்து நூறு குட்டிகளுக்குப் படிப்பிச்சாலும், ஒரு முரட்டுப் புருஷனுக்கு மணவாட்டியானாலும் சத்தியத்தையும் அஹிம்சையையும் முழு வடிவத்தில் அந்த வாழ்விலே, அந்தத் தொழிலிலே காணவேணும். அப்போள் லோகத்துள்ள சக்தியெல்லாம் நிண்டே பங்கில் வரும். சத்தியமே ஜயம்னு ஏட்டில் வரஞ்சு வச்சாப்போல அது வராது குஞ்ஞே. அதை வாழ்விலே வரைந்து கொள்ள வேணும். நான் உனக்கு என்றென்றைக்கும் எப்போதும் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான். ஊருக்கு இதைச் சொல்லத்தான் உன்னை ஆசையோடு உருவாக்கினேன்..." சரளமாக மெதுவாக இழிந்து கொண்டிருந்த அருவி பெரிய பெரிய பாறைகளையும் மண்ணையும் காட்டிக் கொண்டு வறண்டு விட்டாற்போல் அவளுக்குத் தோன்றுகிறது. தண்ணீர் வழியும் போது தோன்றாத அச்சம், தண்ணீரில்லாத போது தோன்றுகிறது. "எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, அம்மாவா! சில சமயங்களில் பயமாக இருக்கிறது. உங்களை, அம்மையை, அப்பாவை, எல்லோரையும் இந்தக் காட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டு போக வேண்டும் போல் ஒரு பரபரப்பு. உங்களிடம் சொன்னால் கேலி செய்வீர்கள்..." "எந்த பயம் பற்றி?..." அவருடைய புருவங்கள் அவளுடைய முகத்தைக் கண்டு சுருங்குகின்றன. "அக்கரையிலிருந்து மாரன்கோரனெல்லாம் இங்கு வந்து அரிசி கேழ்வரகெல்லாம் கடத்திப் போகலாமா? அம்மாவே யார் பக்கம், என்ன நினைக்கிறாள், என்னிடம் ஏன் மறைக்கிறாளென்று புரியவில்லை, அம்மாவா!" "அம்மையோ? என்ன பொய்? எனக்குப் புரியவில்லை மகளே?" அவள் விளக்குகிறாள். "ரத்தப் பசிக்காரர்க்குச் சோறிடுவது முறையோ அம்மாவா? அக்கரையில் சுதீர் அப்பாவி மலைக்காட்டுப் பணியரையும் அடியரையும் ரத்தப் பசிக்காரர்களாக்க, அந்த துரோகிகளுக்கு இங்கே தெரிந்து உதவி செய்யலாமோ?" "யமுனா, பசியென்று வரும்போள் தராதரம் பார்ப்பவள் அம்மையல்லே. ரத்தப்பசி எப்படி வரும்? வயிற்றுப் பசி முற்றும் போது வரும். வயிற்றுப் பசி அவிஞ்சால் - பின்ன அது வரான் வழியல்ல. யமுனா, காட்டில் இருக்கும் நிசப்புலிகளை விட, நாட்டில் பசுத்தோல் போர்த்திய புலிகள் நிறைய வளர்ந்துவிட்ட அபாயத்தைச் சமாளிக்க, நிசப்புலிகளே வந்து போலிகளைக் காட்டிக் கொடுக்கும் நிலை இன்றைக்கிருக்கிறது. ஆண்டவனுக்கே அர்ப்பணமாக்கிக் கடைசி வரையில் அன்பு வழியில் தைரியமாக நடப்பது தான் நம் கடமை, யமுனா. பாபுஜி நவகாளியில் அடிவச்சு யாத்திரை செய்தப்போள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கொள்ளைக்காரனும் கொலைகாரனும் வந்து கண்ணீர் விட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு நம்பிக்கை போகாது. சுதீரனும் சகாக்களும் நம் ஆசிரமத்தை இரத்தக் களறியாக்க வரும்போதும் அஹிம்சை தீபத்தைக் கையிலேந்திக் கொண்டு, அச்சமின்மை என்ற வாளாயுதத்தை நெஞ்சில் தாங்கி நிற்போம். அச்சமேது மகளே? நீ பாடுவாயே? 'அச்சமில்லைன்'னு அன்னுசமர நடந்த போது பாடிய பாட்டு? அது இன்னும் இருக்கு..." இந்த நம்பிக்கையைச் செவிமடுக்கையில் உள்ளம் புல்லரிக்கிறது. "நல்ல நல்ல காரியங்களுக்கு வேண்டி ஒரு முறை காத்திருந்தாலும் பாதகமில்லை மகளே, நம்பிக்கை இழக்கக்கூடாது." "பெரியப்பாவே எல்லா ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார் என்றால் எப்படி இருக்குமோ. அதுவேறு தெரியவில்லை. அவருடன் அதிகமாகக் கூட நான் பழகியதில்லை..." "உனக்கு அதெல்லாம் சொல்லித் தர வேண்டுமா, யமு? அங்குள்ள சர்வோதய சங்கம் மூலமாகத்தான் பேச்செல்லாம் ஏற்பாடு செய்வார். நீ உன் ஆழமான எளிமையான பேச்சால் உண்மைக்கு உயிர் கொடுக்கணும்..." அவள் வண்டி வரும் திசையைப் பார்த்துக் கொண்டு மௌனமாக நிற்கிறாள். "யாருக்குக் கல்யாணம்? பெரியச்சன் மகனுக்கோ?" "இல்லை. மகளின் மகளுக்கு. நான் இரண்டு வருஷத்திற்கு முன் போயிருந்தப்போ கூட மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தார். நீருவுக்கு ஐ.ஏ.எஸ்.ஸாக..." "ஓ! ரஸமாகப் பொழுது போகும், அப்போது உனக்கு?" "நான் அங்கே படித்து முடிந்து வரவேணுமென்று ஒரே பிடியாக இருந்தார். பெரியம்மை காலமான பிறகு நான் இப்பத்தான் அங்கே போறேன்." "அப்ப ஒருகால் பெரியச்சன் உனக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சிருப்பாரோ?" "ஓ... ஒரு ஐ.ஏ.எஸ். பார்ப்பாராக இருக்கும்!" "த்ஸ...த்ஸ...ஐ.ஏ.எஸ்.ஸைக் கல்யாணம் கழிக்க ஆசையுண்டானால் சொல் மகளே? க்யூவில் நிற்க ஞான் கொண்டு வரும், ஆசையுண்டோ?" யமுனா மறுமொழி ஏதும் கூறவில்லை. வண்டி வந்து விட்டது. கூட்டம் மூன்றாம் வகுப்புகளை முற்றுகை இட முண்டியடித்துக் கொண்டு ஓடுகிறது. இடத்தைக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் பல பேருடன் முட்டி மோத வேண்டியிருக்கிறது. ஓரத்திலுள்ள ஒற்றை ஆசனம். எத்தனையோ முறைகள் பல சந்தர்ப்பங்களை ஒட்டி அவள் சென்னைக்குப் பிரயாணம் செய்திருக்கிறாள். பெரிய தந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறாள் எனினும் இப்போது காலவரையறை ஏதும் இல்லாத நாட்கள் தங்கக் கூடும். எதிர்காலம் திட்டவட்டமாகத் தெரியாது. வண்டி, தொழில் நகரத்துக் குடிசைகளை எல்லாம் தாண்டிச் செல்கிறது. கோயமுத்தூரில் எல்லாப் பகுதிகளும் அவளுக்குத் தெரியும். வண்டி டெக்ஸ்டூலைக் கடந்து செல்கையில் விளக்குகள் பூத்துவிட்டன. "கொஞ்சம் காலை எடுத்துக்கிறீங்களா?" இரட்டைப் பின்னல் தொங்க அவற்றில் கனகாம்பரம் சரமும் ஊசலாட, பூக்குலுங்குவது போல் நைலான் சேலையில் நிற்கிறாள் ஒரு தங்கை. "நீங்க...நீ... யமுனால்ல?" "ஆமாம். அருணாதானே?" "அருணாவேதான்." பெருமிதம் ததும்பும் சிரிப்பொன்று இதழ்களில் விளையாடுகிறது. உயர்நிலைப் பள்ளியில் யமுனாவுக்கும் கீழ்வகுப்பில் அருணா படித்தாள். மாணவர் மன்றப் பேச்சுப் போட்டியில் ஆண்டுதோறும் அவள் பரிசைத் தட்டிக் கொண்டு செல்வாள். அடுக்குமொழி அருணா என்றே பெயர் அவளுக்கு. நல்ல குரல் அவளுடைய சொத்து. அவளுடைய மாமன் திராவிட முன்னேற்றக் கட்சியின் ஒரு தலையாய உறுப்பினன். அவர்களுடைய வீட்டில் அண்ணாதுரை விருந்துண்ண வந்திருக்கிறார். ஏன், அவளுக்கு அந்தப் பெயரை வைத்ததே அவர்தாம். அந்தக் காலத்திலேயே அந்தத் தலைவரின் பெயர் சொன்னாள் உருகிப் போவாள். "இங்கே எப்படி அருணா?" "நாலு நாளா மேல்வட்டத்தில் பிரசாரக் கூட்டங்கள்; பேசிப் பேசித் தொண்டைக் கட்டிப் போச்சு..." தொண்டை கட்டித்தான் இருக்கிறது. "ஏனிப்படி மூணாங்கிளாசில் வரே?" "ஏன் யமு? என்னை என்னன்னு நினைச்சிட்டே? நாங்க ஏழைங்க; எங்கக் கட்சி ஏழைங்க கட்சி." யமுனா சிரித்துக் கொள்கிறாள். "நீ என்ன பண்ணிட்டிருக்கே யமு? எம்.ஏ. பண்றேன்னு சொன்னாங்க..." "ஒண்ணும் புரியலே. உன் பாடு பரவாயில்லே அருணா..." "என்ன பரவாயில்லே? ஒரே நாளில் ரெண்டு மூணு மீட்டிங் இருந்திடுதா? சமாளிக்க முடியறதில்ல..." "ஆனா, உனக்கு இதுதானே எத்தனை நாளாகவோ குறிக்கோளாக இருந்தது?" அருணா அழகாகச் சிரிக்கிறாள். சிறு கூடான உடல்வாகு, உதட்டருகில் ஒரு மச்சம். கவர்ச்சி நிறைந்த கண்கள்! அவள் பேசும் போது கண்கள் இணைந்து பாவங்களை வெளியிடுகின்றன. சுருண்டு அடர்ந்த தலைமுடி, குட்டையான இரட்டைப் பின்னல்களாக விளங்குகிறது. மார்புப் பள்ளத்தில் அழகாக இரு உதயசூரியன் பதக்கம் இழைகிறது. கறுப்பிலே சிவப்பு ரோஜாக்கள் அச்சிட்ட சேலை. "பிரசாரம் என்றால் என்ன பேசுவாய்?" "பேச்சு மட்டுமில்லை. பேச்சு, பாட்டு இரண்டும் கலந்து கதாகாலட்சேபம் மாதிரி..." "அதெப்படி?" "ஆட்சியில் என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறோம் என்று கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்வதுதான். இந்த நடப்பு ஆண்டில் எத்தனை பள்ளிகள், சாலைகள், மருத்துவமனைகள் திறந்தோம். ஆட்சிக்கு வந்த பின் என்னென்ன திட்டமிட்டு நிறைவேற்றி இருக்கிறோம் எனப்தைப் பாட்டாக, கதையாகச் சொல்வோம்." "நகரங்களில் செய்யமாட்டாயா? இதெல்லாம் யார் ஏற்பாடு செய்வார்கள்? "ஏன் செய்யாமல்? அந்தந்த வட்டத்தின் செயலாளர்கள் ஏற்பாடு செய்வார்கள்." "இதற்கு மாதச் சம்பளம் உண்டா?" "இல்லே, ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனைன்னு பங்கு போட்டுக் கொள்வோம்..." "நாங்கன்னா யாரு?" "பக்க வாத்தியக்காரர்களெல்லாந்தான். நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க ஒரு குழு இருக்கிறது. ஊருக்குத் தகுந்தாற் போல் வசனங்களை மாற்றி அமைப்போம். தேர்தல் சமயத்தில் ஓய்வே இருக்காது..." "உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது அருணா..." அருணா அதை ஒப்புக் கொண்டு கலகலவென்று சிரிக்கிறாள். பிறகு அவள் கால்களுக்கிடையில் வைத்த கூடையை இழுத்துத் திறந்து இரண்டு வால்பேரிக்காய்களை எடுக்கிறாள். ஒன்றை யமுனாவிடம் கொடுத்து விட்டு மற்றதைக் கடிக்கிறாள். "ஒரே பசி. கார் அலையக்குலைய வேகமாகக் கொண்டு வந்துவிட்டது" அவள் ஒன்றைத் தின்று முடித்து இன்னொன்றைக் கடிக்கையில் யமுனா பாதிகூட மெல்லவில்லை. "வால்பேரி நல்லாயிருக்கில்லே?" "எனக்கு உன்னுடைய நிகழ்ச்சி ஒண்ணு கேட்கணும்னு ஆசையாயிருக்கு." அருணா கபடமில்லாமல் சிரிக்கிறாள். "நீ ரொம்பப் படிச்சிருக்கே யமுனா; நான் சொல்றதெல்லாம் கிராம மக்களுக்கு." "தேர்தல் சமயத்தில்தான் பிரசாரம் செய்வீங்கன்னு நினைச்சேன். எப்போதுமா பிரசாரம்?" கண்களை உருட்டி விஷயத்தின் தீவிரத்தை அவள் விளக்குகிறாள். "பிரசாரம் ஒரு கட்சி நிலைச்சி நிற்க உயிர்த்தண்ணி சோறு மாதிரி. அது பதவியில் இருந்தாலும் தேவை, இல்லாட்டியும் தேவை. தேர்தல் இல்லாத காலத்தில் தான் அவசியம் தேவை." "அப்ப, பொய்யான பிரசாரத்தினால் கூட ஒரு கட்சி பதவிக்கு வந்து விடலாம் இல்லையா?" அருணா யமுனாவின் கையைப் பற்றிக் கொண்டு உதட்டைக் கடித்துப் பொய்க் கோபம் காட்டுகிறாள். "ஏ, குறும்பு! பொய்ப் பிரசாரம் எதற்குச் செய்ய வேண்டுமாம்? பொய்ப் பிரசாரத்தில் எப்படி வரமுடியும்? நம் மக்கள் முட்டாள்களா? இந்தக் கட்சி பதவிக்கு வருவதற்கு மக்கள் எல்லோரும் இதற்கு முன் இருபது வருஷ ஆட்சியில் தங்களுக்கு அடிப்படைத் தேவைகூடக் கிடைக்கவில்லைன்னு புரிஞ்சிட்டதுதான் காரணம். தென்னாட்டுக் கிராமங்களில் காந்தியைப் பலருக்குத் தெரியாது. ஆனால் அண்ணா என்று சொன்னால் லட்சோப லட்சம் மக்கள் உருகிப் போகிறார்கள். ஒவ்வொரு குடிசையிலும் நான் உங்களில் ஒருவன் என்று கலந்து கொண்டவர் அவர்." யமுனாவுக்கு 'இப்போது அடிப்படைத் தேவைகள் கிடைக்கின்றனவா?' என்று கேட்க ஆசைதான். அவள் கிடைக்கிறது என்று தான் சொல்வாள். இல்லை என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது. "அது போகட்டும். அருணா - நீ திருமணம் செய்து கொள்ளலியா?" "அதைப்பற்றி யோசிக்கவே எனக்குப் பொழுதில்லை. சரியாப் போகுது..." "யார் கண்டது? அடுத்த தேர்தலுக்குப் பிறகு நீயே மந்திரியாகி விடலாம்!" அருணாவுக்கு இந்தப் புகழுரை பிடித்திருக்கிறது! சிரித்துக் கொள்கிறாள். "அறுபத்தேழிலேயே அண்ணா, 'பாப்பாவை நிறுத்தி வச்சா ஓட்டை வாரிட்டு வந்திடும். வயசாகலியேன்னு பார்க்கிறேன்' என்றார். ஆனால் நான் தேர்தலுக்கு நிற்க மாட்டேன்." "ஏன்?" "எனக்கு இந்த வாழ்க்கை தான் பிடிச்சிருக்கு. இது கலை. கலைக்காக வாழ்வதுதான் எனக்கு இஷ்டம்..." என்று உதயசூரியன் முகப்பை உதட்டில் வைத்துக் கொள்கிறாள். கலை! பிரசாரமும் ஒரு கலையோ? இருக்கலாம். அறுபத்து நான்கு கலைகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம். வாழ்க்கையில் அரசியல் என்றாலும் அதில் ஒரு முகமாகக் குவிய, திட்டவட்டமாக இளவயசில் ஒரு கோட்பாட்டை வரையறுப்பது சுதந்திர சிந்தனைகளைத் தடைச் செய்வதுதானே? பொதுவுடைமைத் தத்துவ நாடுகளில் இதைக் கண்ணுங் கருத்துமாகச் செய்கிறார்கள். சுதந்திர சிந்தனை என்றாலும், சட்டதிட்டக் கூடுகளில் வளரும் செடியாகவே வளருகிறது. அவளும் அப்படித்தான் அம்மாவனும் அப்படித்தான். அவர்கள், காந்தி என்ற ஒருவர், இலட்சியம் என்று கண்ட சட்டதிட்டங்களுக்கு தம்மைப் பழகிக் கொண்டிருக்கின்றனர். யமுனாவுக்கு டெரிலீனும் காஞ்சிபுரமும் பிடிக்கவில்லை. பழக்கந்தானே காரணம்? ஆனால்... இப்போதெல்லாம் காந்தியடிகளின் பெயரைச் சொன்னாலே அவள் மனமொன்றி விடுவதில்லை. அது குருட்டு பக்தி என்று அறிவு குறுக்கிடுகிறது. சத்திய வாழ்வு வாழ முடியுமா என்று அவர் தம்மைச் சோதனைக்குள்ளாக்கிக் கொண்டார். வெற்றியின் பிசிறுகளை உலகம் கண்டு கொண்டது. அவருடைய மட்டத்துக்கு கோடானு கோடியும் உயர முடியுமா? ஆழ்ந்து சிந்தனை செய்தால் சுதீர் கூறினாற் போல் வாழ்க்கையில் ஒரு போலித்தனம் வளரவே அவர் வழி காட்டி இருக்கிறார்... திடீரென்று எங்கோ வழிமாறிப் போவது போல் குளிர் சிலிர்ப்பு ஓடுகிறது. உடல் குலுங்குகிறது இலேசாக. "என்னைப் பற்றியே கேட்டியே? நீ இப்போ எங்கே போயிட்டிருக்கே அதைச் சொல்லலியே?" "நானா? பெரியப்பா வீட்டுக்கு..." "பட்டணமா?" "ஆமாம்; பரங்கிமலைக்கும் பல்லாவரத்துக்கும் நடுவே வீடு... சந்தானம்னு, செகரிடேரியட்லேருந்து ரிடையராகி இருக்கிறார்." "போன முனிசிபல் எலெக்ஷனில் சுதந்திரக் கட்சியிலே நின்னாரே அவரா?" "ஆமாம். அப்படின்னு என்னை வரச்சொல்லி லெட்டர் கூட எழுதியிருந்தார்." "நீ ஏன் வந்திருக்கக் கூடாது. யமு? நான் கூட்டணி பிரசாரத்துக்குப் போயிருந்தேன். அவரு கார் தானே வந்தது? எங்க மாமனுக்கு ரொம்ப வேண்டியவர். புத்தி வாக்கம் தொகுதியிலே எங்க மாமன் சட்டமன்றத்துக்கு நின்னு வெற்றி பெற்றப்ப சந்தானமையரு கூட்டணிப் பக்கம் இருந்தாரே?" "ஓ...?" "நீ ஏன் வரலே?" "எனக்கு அரசியல்னா பயமாயிருக்கு அருணா." "நீ இப்படிச் சொல்வது தப்பு. ஆளுங்கட்சியோடு கூட்டா இருக்கிறப்ப உனக்கென்ன பயம்..." "எனக்கு உன்னைப் போலெல்லாம் பேசத் தெரியாது அருணா." "அதெல்லாம் சும்மா. நான் நம்பமாட்டேன். சொகுசா கல்யாணம் கட்டிக்கிட்டு உக்காந்திடுவியோ என்னமோ?" அருணாவோடு அவளும் சேர்ந்து சிரிக்கிறாள். "அதுவும் கூடத் தப்பில்லே..." |