உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
17 நினைவு தெரிந்த நாட்களாய்க் காலையில் எழுந்து பிரார்த்தனைப் பாடல்களைப் பாடிப் பழகிய யமுனாவுக்கு, உடலைக் குறுக்கும் குளிருக்கு இதமாக, தடிமனான பஞ்சு மெத்தைப் போர்வைக்குள், மனிதச் சூட்டின் அணைப்புச் சுகத்தில் ஒடுங்கிக் கிடக்கும் போதும், அதிகாலையில் விழிப்பு வந்து, முள்ளாய் உறுத்துகிறது. அவள் கல்கத்தாவில் இருந்த நாட்களில் கூடப் பிரார்த்தனை நியமத்தை விட்டதில்லை. காலையில் ஐந்தரைக்கேனும் எழுந்து சமையலறையில் சென்று பிரார்த்தனையை முடித்துக் கொள்வாள். 'என் விருப்பத்தை மீறி அவள் போகக்கூடாது' என்ற அவனுடைய கடுமை இரு தரப்புக்குமுள்ள சமமான விட்டுக் கொடுக்கும் தன்மையில் இருந்து அவனை வெகு தொலைவுக்குக் கொண்டு சென்று விட்டது. அந்த விலங்கை அசைத்து அசைத்து அவள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள். அதுல் கதவடியில் நின்று "மாஜி" என்று குரல் கொடுக்கும் வரையிலும் சித்திரவதையாக இருக்கிறது. "பால்... பால் வந்து விட்டது!" கையைத் தள்ளி அணைப்பை உடைத்துக் கொண்டு துள்ளிக் குதித்து வருகிறாள். கூனிக் குறுகிக் கொண்டு ஒரு ஏழெட்டு வயசுச் சிறுவன் கையில் பால் புட்டிகளுடன் நிற்கிறான். தொளதொளக்கும் அரை நிஜாரை இடுப்பில் இழுத்துச் செருகிக் கொண்டு, (அதற்குக் கொக்கி, பித்தான் எதுவும் கிடையாது). மேலேயும் பித்தான் இல்லாத ஒற்றைச் சட்டையுடன் ஒடுங்கி நின்றான். முடி செம்பட்டையிலும் செம்பட்டைப் பஞ்சுப் பிசிறுபோல் மண்டையைக் காட்டிக் கொண்டு பரந்திருக்கிறது. முகம் கை கழுத்தெல்லாம் கங்கை வண்டல் குழிகளிலும் குட்டைகளிலும் செழித்து வளரும் கொசுக்களின் முத்திரைகள். இரண்டு புட்டிகளுடன் உள்ளே வருகிறான் பையன். யமுனா இனிய குரலில் பிரார்த்தனை கீதங்களை இசைக்கும் போது சிறுவன் வாயிற்படியிலேயே நிற்கிறான். முகம் கழுவிப் பல் துலக்கிச் சுத்தம் செய்து கொள்ளும் போது அந்தச் சிறுவனும் அப்படித் தூய்மையாகிறான். அடுப்பை மூட்டித் தேநீருக்கு வைத்துவிட்டு அவள் அவனை எழுப்ப வருகிறாள். "எழுந்திருங்க... டீ போட்டாச்சு." "ப்ளீஸ், ரொம்பக் குளிர் யமுனா..." "உஹும். நீங்கள் பல் விளக்காமல் நான் டீ கொடுக்க மாட்டேன்." "ப்ளீஸ் யமு, குளிருக்கு விதிவிலக்களியேன்..." "இது என்னங்க கெட்ட வழக்கம்? நீங்க இந்த ஊருக்கு வந்த பிறகு ரொம்ப மோசமாயிட்டீங்க. நான் கண்டிப்பாக இடம் கொடுக்க மாட்டேன்..." "தரமாட்டியா?" "ஊஹும்!" யமுனா பிடிவாதமாக உள்ளே வந்து பாலைக் காய்ச்சுகிறாள். அதுல் இதற்குள் வாயிற்புற அறையைத் தட்டிப் பெருக்கி மிதியடிகளைச் சுத்தம் செய்து விட்டு "தொட்டியில் பெரிய ரோஜா பூத்திருக்கு மாஜி!" என்று கூவிக் கொண்டு வருகிறான். "இத பாருங்க; ரோஜா எவ்வளவு அழகாயிருக்கு, எழுந்து வாங்களேன்." துரை அசையவில்லை. அதுல் ஓடிப்போய் நிதாவையும் கூட்டி வருகிறான். அந்தச் செடியை அவர்களே நட்டுத் தண்ணீர் வார்த்திருக்கின்றனர். எத்தனை பெரிய ரோஜா! நிதாவுக்கு நான்கு வயசிருக்கும்! அதே அச்சு; அதே செம்பரட்டை; அதே கொசுக்கடி உடல். பழைய கவுனும் யாரோ கொடுத்த பழைய பைஜாமாவும். அவளுக்குப் பல் விளக்கி முகம் கழுவி விடுகிறான். சதைப் பற்றில்லாத அந்த முகத்திலும் காலை மலர்ச்சியின் புதுமையோடு குறுகுறுக்கும் விழிகள் அரிசிப் பற்களைக் காட்டிச் சிரிக்கும் கவடற்ற குருத்து. "பைட்டோ!" என்று கூறுகிறாள். காலைச் சம்மணம் கட்டிக் கொண்டு சில்லென்ற சிமிட்டித் தரையில் உட்காருகிறாள் நிதா. அவள் வேலைக்கென்று ஒரு ஆளும் வைத்துக் கொள்ளவில்லை என்பதை துரை அறிவான். ஆனால், இந்தப் பஞ்சப் பனாதைகள் எதற்கு அடிக்கடி வருகின்றன? "இதுகளை எல்லாம் எதுக்கு உள்ளே விடுகிறே யமு. பிறகு நாளைக்கு ஏதேனும் காணாமப் போனா வீணா இதுங்க பேரில் சந்தேகப்பட வேண்டிவரும்..." யமுனா கணவனை உறுத்துப் பார்க்கிறாள். "அப்படி உங்களிடம் நான் புகார் செய்ய மாட்டேன். ஏழைக் குழந்தைகள். ஏனிப்படி பேசறீங்க?" "நான் இருக்கும் வரை இவங்க உள்ளே வர வேண்டாம். நான் ஆபீஸுக்குப் போன பிறகு நீதானே ராஜ்யம் நடத்தறே?" "நீங்க இப்படி வேற்றுமை பாராட்டுவது எனக்கு மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது." "அதையே நானும் திருப்பிப் படிக்கிறேன். நீ என்னிடம் வேற்றுமை பாராட்டுகிறாய்?" "அர்த்தமில்லாமல் திருப்பிப் பேசாதீங்க..." "நான் சொன்னால் அர்த்தமில்லை, நீ பேசினால் அப்படியே பொருள் சொரிகிறது!" யமுனா மறுமொழியின்றி தேநீரை வைத்துவிட்டு உள்ளே செல்கிறாள். அவன் தேநீரைக் குடித்துவிட்டு ஏதோ யோசனையுடன் அமர்ந்திருக்கையில் இதழ்களில் படிந்த பாலின் செழுமையைத் துடைத்துக் கொண்டே குழந்தைகள் வருகின்றன. அவனுக்கு அமைதி குலைகிறது. அவள் தனக்கென்று செலவேதும் செய்து கொள்வதில்லை. கதர்ச்சேலையைத் தவிர உடுப்பதில்லை. அவளே சோப்புப் போட்டுத் துவைத்துக் கொள்கிறாள். வேலைக்கு ஆளில்லை. சுறுசுறுப்பாக வீடு சுத்தமாக்குகிறாள். குளியலறை கக்கூஸெல்லாம் கழுவிவிடுகிறாள். கடை கண்ணிக்குத் தானாகவே போய்ச் சாமான்களை வாங்கி வருகிறாள். நடைதான். ஆனால், இந்த மாதிரிக் கண்ட குழந்தைகளுக்கும் பால் வாங்கிக் கொடுப்பதும், வீட்டில் கூட்டம் போடுவதும் அந்தச் சிக்கனத்துக்கு ஈடாக இருக்கிறது. "யமு..." "எஸ்..." ஈரக் கூந்தலைத் துவட்டிக் கொண்டு முன் வந்து நிற்கிறாள். "இன்னிக்குச் சாயங்காலம் மிச்ரா வீட்டில் ஒரு பார்ட்டி. நீ வரணும்." "நேத்தே சொன்னதுதானே, வந்தால் போச்சு!" "நான் வந்து நீ ரெடியாகும் வரையிலும் காத்திருக்க முடியாமல் இருக்கலாம். அவசரமாக வருவேன்..." "நானொண்ணும் உங்களைப் போல் சோம்பேறி இல்லை..." "கழுதை! அதற்காகச் சொல்லல்லே. இந்த ஆசாமி எங்களுக்கு மிகவும் உபயோகப் படக்கூடிய புள்ளி. செல்வாக்குக்காரன்..." "இருக்கட்டுமே? அதனால் நான் பயப்படுவேன்னு பார்க்கிறீங்களா!" "நம் முன்னேற்றம் இம்மாதிரியான சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது." "ரொம்பச் சரி." "அதனால் நீ கொஞ்சம் 'ஸ்மார்ட்'டாக வரணும்னு சொல்றேன்." "இந்தத் தரக்குறைவான பேச்சுக்கு உங்களை நான் சும்மா விடப் போவதில்லை. நான் இப்ப ஸ்மார்ட்டாக இல்லையா?" "ஸ்மார்ட்டுன்னா..." "எனக்குப் பொருள் தெரியும். கவலையில்லாமல் போங்க!" உண்மையில் துரை மனசுக்குள் சங்கடப்படுகிறான் என்பதை அவள் இத்தனை நாட்களில் தெரிந்து கொண்டிருக்கிறாள். இந்தச் சூழல் கல்கத்தா நகர வாழ்வைப் போலில்லை. மேலும் அங்கு அவன் பயிற்சியில்தானே இருந்ததாகப் பெயர்? இங்கே அலுவலகத்தைச் சார்ந்து வெளி வட்டாரங்களில் இவனைப் போன்ற இளம் அதிகாரிகள், தொழில் துறையாளர் பலர் நண்பர்களாகியிருக்கின்றனர். சிலர் மனைவியருடன் இவர்கள் வீட்டிற்கும் வந்திருக்கின்றனர். இந்த அந்தஸ்தை உத்தேசித்து வாயில் அறையில் சோபா செட்டுகள், பிரம்பு நாற்காலிகள் வாங்கிப் போட்டிருக்கிறான் வாடகைக்கு. அவனுடைய தோற்றத்திலும் மாறுதல்கள் இசைந்திருக்கின்றன. காலையில் அன்றாடம் முகத்தை மழுமழுப்பாக்கிக் கொள்ள உயர்ரக சாதனங்கள், வாசனை லோஷன், பவுடர் வகையறாக்கள்; தேவைக்கு இரண்டு ஜோடிக் காலணிகள்; மடிப்பலுங்கா ஸுட், டை போன்ற உடைகள் என்றெல்லாம் உயர்ந்திருக்கின்றன. ஆனால் யமுனாவின் தேவைகளில் மாறுதலே இல்லை. அந்த வசதியுள்ள நடுத்தரக் குடும்பத்துக்கு இசைந்த வீட்டைச் சுற்றி, அவளுடைய கண்களில் பட்டவை வறுமையும், பிணியும், புழுதியும், அறியாமையுமே. தன் தேவைகளைக் குறைத்து அந்தப் பிணிகளைத் துடைப்பதே வாழ்வின் இலட்சியம் என்று பழகியவளல்லவா! அதுல், நிதா, கீது - இவர்கள் அருகிலுள்ள வண்ணாத்தியின் குழந்தைகள். சுனில், ராம், சுஷ்மா - இவர்கள் அக்கம் பக்கம் சீமான் வீடுகளில் எடுபிடி வேலை செய்ய வந்த குடிசைக் குழந்தைகள். இந்தக் குழந்தைகள் பகல் நேரங்களில் புழுதியில் விளையாடிக் கொண்டும், பாதி நேரத்தில் எஜமான், எஜமானியர் குரல் கொடுக்கும் போது ஓடிப் போவதுமாக இருந்ததைப் பார்த்தாள். "நீங்களெல்லாம் ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை?" என்று அங்கு வந்த மறுநாள் அவர்களிடம் அவள் கேட்டாள். "பள்ளிக்கூடமா?" "ஆமா, ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை?" வண்ணாத்தி கூறினாள்; "இந்தக் கழுதையைப் பள்ளிக்கு அனுப்பினால் நான் துறைக்குப் போகும்போது யார் குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டு வேலை செய்வார்கள்? இஸ்திரி போட யார் உதவி செய்வார்கள்?" சுனிலின் தாய் சம்பா கூறினாள்: "பெரிய பையனை படிக்க வைத்தேன். ஒரு மாசம் பன்னிரண்டு ரூபாய் சம்பளம், நோட்டுப் புத்தகம், ட்யூஷன், பங்கா... முப்பது ரூபாய் செலவாயிற்று. இவர்களுடைய அப்பன் கல்கத்தாவில் வேலை செய்து இரண்டு மாசத்துக்கோ மூணு மாசத்துக்கோ ஒருமுறை பதினைஞ்சோ இருபதோ அனுப்புகிறான். எப்படிப் படிக்க வைப்பது? இப்போதுதான் கார் வாலியிடம் சொல்லி அவனுக்கு ரிக்ஷா இழுக்கும் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்." உண்மையில் சம்பாவைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இருபது வருஷ மண வாழ்வில் கணவனுடன் இருபது நாட்கள் அவள் கூடி இருந்ததில்லை. இந்த அழகில் அவள் இரண்டாவது மனைவி. "மாஜி, துணியெல்லாம் நீங்களே துவைக்கிறீர்களே? இதற்கு முன் மதறாஸி மாஜிகளுக்கு நான் வேலை செய்திருக்கிறேன். சாம்பார் மசாலா அரைப்பேன்; சட்டினி அரைப்பேன்..." என்றெல்லாம் அடுக்கியபோது, யமுனா தேவையில்லை என்று மறுத்தாள். ஆனால் நிராசை படிந்த முகமும் கையில் குழந்தையுமாக அவள் படியிறங்கிச் சென்றபோதுதான் அவளுடைய தேவையைப் பற்றிய உணர்வு யமுனாவுக்கு உறைத்தது. "சம்பா, இங்கே வா. நான் உனக்கு ஒரு வழி சொல்லித் தருகிறேன்" என்று தன் சர்க்காவைக் காட்டினாள். "இதைக் கற்றுக் கொள். உன் பசி தீர்க்கும் காமதேனுவாக இது இருக்கும்!" என்றாள். "இது எனக்கு வராது மாஜி!" என்றாள் சம்பா. "ஏன் முயற்சி செய். நீ தன்மானத்தோடு பிழைக்க முடியும்...!" ஆனால் அவளுக்கு முயற்சி செய்யப் பொறுமை இல்லை. அடுத்த நாள் அவள் வரவில்லை. குழந்தைகளை மட்டும் இழுத்து அவள் படிப்புச் சொல்லிக் கொடுத்தாள். அதுல், இத்தனை நாட்களுக்கு - இரண்டு மாசங்களுக்கு - அ, ஆ வரிசையைக் கூடக் கற்கவில்லை. சுனில் இங்கு வருவதே ஏதேனும் திண்டி கிடைக்குமோ என்ற நோக்கத்தில்தான். நிதாவை அடித்து அழவிடுவது அவன் பொழுதுபோக்கு. அ, ஆ கற்பிக்க அவள் மரக்கட்டை எழுத்துக்கள் வாங்கி வந்தாள். அவற்றைத் தரையில் அடித்து ஆடியே அவன் உடைத்திருக்கிறான். "மாஜி, இவனுக்குப் படிப்பு வேண்டாம்!" என்று அதுல் கூறுவான். "படிப்பான். படித்தால் தான் சாஹப் போல் ஆகலாம். பசியாமல் சாப்பிட, குளிர் நடுங்காமல் போர்த்துக் கொண்டு நல்ல உடை உடுத்து வாழ முடியும்..." சுனிலுக்கு அதிலெல்லாம் கவர்ச்சியே உண்டாவதில்லை. அவன் இவ்வகையில் பொழுதைக் கழிக்கையில் பங்களா கேட்டிலிருந்து எஜமானின் குரல் அதட்டிக் கொண்டு வரும். "மாஜி! சுனில் கெட்ட பேச்சுப் பேசுகிறான்!" என்று அதுல் தெரிவித்தான் ஒருநாள். "சரி, நீ அதைக் கேட்க வேண்டாம்" என்று எங்கோ பார்வையை மிதக்கவிட்டாள் யமுனா. அந்த ஆதிவாசிக் குழந்தைகளுக்கும் இவர்களுக்கும் இடையேயுள்ள வேற்றுமைகளை எண்ணியது அவள் மனம். "இல்லே மாஜி, பங்களாவிலுள்ள மேம்சாப் சொல்றாங்களாம், இந்த வீட்டு சாஹபுக்கும் உங்களுக்கும் கல்யாணமே ஆகலியாம்; வகிட்டில், குங்குமம் ஏன் வைக்கலியாம்னு கேட்கிறான். அப்புறம், நீங்க மேம்சாப் இல்லையாம். மேம்சாப்பா இருந்தா அவங்களே துணி தோய்ப்பாங்களா, கடைக்குப் போவாங்களா நடந்துன்னு கேட்கிறான்..." யமுனா சிரித்துக் கொண்டே, "மேம்சாப்னா, பசியெடுத்தா அவங்களே சாப்பிட மாட்டாங்களா? யாரானும் தான் அவங்களுக்காகச் சாப்பிடுவாங்களா?" என்று கேட்டுப் பேச்சை மாற்றுகிறாள். ஏற்றத் தாழ்வுகள் இரத்தத்தோடு ஊற, பிஞ்சுப் பருவத்திலேயே வேற்றுமைகள் விதைக்கப்படும் கொடுமையை அவள் தவிர்க்க முயலுகிறாள். பலன், அவள் தன்னைப் போன்ற பொருளாதாரப் படியில் உள்ளவர்களை விட்டு விலகி விலகிப் போகிறாள். யமுனாவை, அக்கம் பக்கங்களில் யாருக்கும் பிடிக்கவில்லை. மாலையில் துரை வீடு திரும்பும்போது, அவள் கச்சிதமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். குழலை நீண்ட பின்னலாகப் போட்டுக் கொண்டு ஒரு பொன்னிற ரோஜாவைச் செருகியிருக்கிறாள். கஞ்சி போட்டு மடித்த பூப்போட்ட இளநீலக் கதர்ச்சேலை, அதே வகைச் சோளி. செவிகளில் இரண்டு பொய் முத்துக் குண்டலங்கள். நெற்றியில் சிந்தூரப் பொட்டு. அவன் முகத்தில் நெஞ்சு தளும்பும் புன்னகை மலருகிறது! கையிலிருக்கும் பழுப்புக் காகிதப் பையை அவளிடம் கொடுக்கிறான். அதை அவள் மெல்லத் திறக்கிறாள். நட்சத்திரப் புள்ளிகள் வேலைப்பாடு செய்த மிக மென்மையான இளநீல நைலான் ஜார்ஜஸ் நழுவுகிறது. "இது...இது..." அவளுக்கு நெஞ்சில் சொற்கள் முட்டிக் கொள்கின்றன. அவன் குனிந்து, நேருக்கு நேராக இறைஞ்சுவது போல் பார்க்கிறான். பிறகு அந்தச் சேலையை விரித்து அவள் மீது போர்த்துவிட்டு அருகே இழுத்துக் கொள்கிறான். |