உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
8 கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டு யமுனா அரை மணியாகக் காத்து நிற்கிறாள். நீரு புடைவை மாற்றிக் கொண்டு இன்னமும் வரவில்லை. வாசலில் கார் தயாராக நிற்கிறது. மாடியிலிருந்து வாசக் கலவைகள் காற்றிலேறிச் சவாரி செய்த வண்ணம் நாசியைக் குசலம் விசாரிக்கின்றன. மணிப் பிரவாளப் பேச்சுகள், சிரிப்பொலிகள், பட்டு மென்மைகளின் சரசரப்புக்கள்... யமுனா எட்டிப் பார்க்கிறாள். "நீரு? உனக்கு வர நேரமாகுமா? நான் முன்னே போகட்டுமா?" "இல்லே...டி! காரிலே போகலாமே?..." "நீ அஞ்சு நிமிஷம்னு சொன்ன நினைவு. ஒரு மணி நேரம் ஆகப் போகிறது." "போடி... இந்தக் கொண்டை இப்போதும் சரியில்லை..." அவளுக்குத் தலையில் குல்லா வைப்பது போல் ஒரு தோழி, அவள் தலையைப் பற்றிக் கோண்டிருக்கிறாள். "சரியா இருக்காடி?" நீரு கண்ணாடியின் முன் வலமும் இடமுமாக அசைந்து பார்க்கையில், "கச்சிதமாய் விழுந்திருக்கு..." என்று தோழி முத்தாய்ப்பு வைக்கிறாள். "பின்னே நீ என்ன சொல்லுவே? இது கொஞ்சம் லெஃப்ட்டிலே சாய்ந்தால் தான் இயற்கையாக இருக்கும்!" என்று இன்னொருத்தி வெட்டுகிறாள். "முடி கொஞ்சம் இருக்கிறவங்களுக்குத்தான் இது பிரமாதமாக இருக்கும். சைனாபஜாரில் ஒரு கடையில் நைலான் கொண்டை ஆர்டர்படி செய்து கொடுக்கிறான். ரூபமாலாவுக்கு அவன் தான் வாடிக்கை..." "பின் அங்கேயே போய் 'ஆர்டர்' கொடுக்கலாமாடி?" கொண்டையை அவிழ்த்து, பின்னலைப் போட்டுக் கொண்டு மீண்டும் ஒரு முக ஒப்பனை - திருத்தம் முடித்து அவள் கிளம்ப மேலும் அரை மணியாகிறது. "இவதான் யமுனா; எம்.ஏ. பாலிடிக்ஸ் - காந்தி நூற்றாண்டுக்காக இங்கெல்லாம் பேச வந்திருக்கா. என் 'கஸின்' - இவ ரேகா, இவ சுமி, இவ மிருணா..." என்று யமுனாவையும் தோழிகளையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கிறாள் நீரு. ரேகா யமுனாவிடம் "நீங்க வேலையாயிருக்கிறீர்களா?" என்று கேட்கிறாள். "அதான் சொன்னேனேடி காந்தி ஆசிரமம். இப்பக் கூட்டங்களில் பேசுவது முழு வேலை. இமாசலம் போக வேண்டிய சாது போலக் கதர் தவிர உடுத்த மாட்டாள். ரிக்ஷா ஏற மாட்டாள். நகை... மூச்சு விடக்கூடாது; இவளுக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கிறீங்கடி?" "ஒரு முப்பது இருக்கும்னு நினைச்சேன்..." "இல்லே, இருபத்தஞ்சு..." "சுத்த மண்டுகள்டீ! இவ நாலட்ஜ் நாப்பது ஐம்பதுன்னு கூடச் சொல்லும். ஆனா என்னைவிட ரெண்டு மாசம் சின்னவ..." "ஆ..." என்று எல்லாரும் வாயைப் பிளந்து கொண்டு அவளைப் பார்க்கின்றனர். "உங்க 'கிளப்'பில் வந்து ஒரு நாள் நான் பெண்களுக்கு காந்தி சொன்னதைப் பற்றிப் பேசட்டுமா நீரு?" "ஏய், ஐடியா! நாமும் நூற்றாண்டு கொண்டாடலாம்! ரேகாவின் தங்கை டான்ஸ் ஆடத் துடியாய்த் துடிக்கிறாள். ஊர் முழுதும் கூட்டி அமர்க்களம் பண்ணி விடலாம். அவளும் எங்கெங்கோ போய்ப் பேசுகிறாள். நாம் விளம்பரம் கொடுக்க வேண்டாம்?" யமுனாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று பல சமயங்களில் புரியவில்லை. அரசியல் வண்ணங்களின்றி உயரிய இலட்சியங்களை இளம் உள்ளங்களில் தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருக்கும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பள்ளிக்கூடங்களிலிருந்து அவளைச் சொற்பொழிவாற்ற அழைக்க வரும் போது, பெரியப்பா, 'என் மகள் என் மகள்!' என்று உறவு கொண்டாடுகிறார். அவர் உத்தியோக நாள்களின் வேடத்தில், மூடிய கோட்டும் வெள்ளை நிஜாரும் அணிந்து, காரில் அவளை அழைத்துச் செல்கிறார். அறிமுகமாக நாலு வார்த்தைகள் பேசும் சந்தர்ப்பத்தையும் தானே எடுத்துக் கொள்கிறார். சிறுவர் சிறுமியர் கட்டிய பசுக்களைப் போல் வந்து உட்கார்ந்திருக்கின்றனர். முடிவில் 'செல்வி யமுனா எம்.ஏ., காந்திய லட்சியவாதி, காந்தி இந்த நூற்றாண்டு கண்ட மாதர்குலமணி' என்றெல்லாம் சம்பந்தமில்லாமல் அடைமொழிகளும் அடுக்கு மொழிகளுமாகப் பாராட்டி நன்றி தெரிவிப்பார்கள். "என்ன மரியாதை தெரியுது இதுகளுக்கு? ஒத்தை மாலையை வாங்கி வச்சிருக்கா! மாலைக்கா நீ அங்கேருந்து இங்கே வந்திருக்கே?" என்று பெரியப்பா முணுமுணுக்கவும் சந்தர்ப்பங்கள் அமைகின்றன. சில பள்ளிக்கூடங்களில் காந்தி கண்காட்சி என்று பத்திரிகை அட்டைப்படங்களை - சினிமாக்காரர்கள் உட்பட கத்தரித்து ஒட்டி வைத்திருக்கின்றார்கள். "ஓ! காந்தி என்றால் உருகிப் போய்விடுவேன்" என்று நீச்சல் உடை அழகியான திரைத் தாரகையின் கூற்றும் ஓரிடத்தில் இடம் பெற்றிருந்தது. காந்தியைப் பற்றிய பேச்சுப் போட்டிகளை ஓரிரு சங்கங்களில் ஏற்பாடு செய்தார்கள். அடுக்கு மொழிகள் முதலிடம் பெற்றுச் சொல்லுக்குப் பொருளே தேவையில்லை என்று தான் சிறுவர் சிறுமியர் புரிந்து கொண்டு விளாசினார்கள். ஒரு மாதர் சங்கத்தில், வயிரமும் பட்டும் பளபளப்பை வாரி வீச, சதைகள் உடை மீறிப் பிதுங்கி வழிய ஒரு அம்மாள் தலைமை வகித்தாள் - "காந்தி நம் நாட்டுக்குச் சூது செய்து, வாது செய்து, சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்" என்று தொடங்கி, தன்னையும் காந்தியோடு ஒப்பிட்டுப் பேசலானாள். யமுனா 'ஐயோ' என்று தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அரசியல் நெடிவீசும் ஆசாமிகள் சில இடங்களில் தலைமை வகிக்க வந்தார்கள். வடநாட்டுக் காந்தியிலிருந்து வழுக்கி, தென்னாட்டுக் காந்தியைப் பற்றிப் பேசி ஒப்புமை கண்டார்கள். அன்றாட வாழ்க்கையில் குழந்தைகள், சத்தியம், எளிமை, அஹிம்சை ஆகிய லட்சியங்களோடு வாழ முயல வேண்டும் என்பதுதான் அவள் பேச்சின் சாரம். ஆனால் தலைமை வகித்து முடிவுரை செய்பவர்களோ, நன்றி கூறுபவர்களோ, பேச எழுந்திருக்கும் போதே தன் முயற்சிகள் பயனளிக்கப் போவதில்லை என்ற நிராசையே அவளுக்கு உண்டாயிற்று. ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற துடிதுடிப்பு உந்துகிறது. ஆனால்... "எங்கே இறங்கணும், யமு?" நீரு கேட்ட பின் தான் நினைவுலகுக்கு மீள்கிறாள். "ஓ, லஸ் வந்து விட்டதா? இங்கேயே நிறுத்திக் கொள். இறங்கிக் கொள்கிறேன்." "நீ இடத்தைச் சொல்லேன்?" "இதுதான் இடம்." யமுனா கதவைத் திறந்து கொண்டு ஒரு சிரிப்பு சிரித்து விடை கொடுக்கிறாள். மழை குமுறிக் கொண்டு கொட்டத் தயாராக இருக்கிறது. பூங்கா வளைவைக் கடந்து விடுவிடென்று நடக்கிறாள். மழைக்கு அஞ்சி ஓடுவது போல் தானிருக்கிறது. இலட்சலட்சமாய் மக்கள் குடிசைகளில் வெயிலையும் மழையையும் எதிர்த்துப் போராடும் நகரம் என்ற நினைவையே அடியோடு அகற்றும் விசாலமான தோட்டம். வண்ணப் பூக்களும் பூங்கொடிகளும் அணைத்து நிற்கும் பால்கனிகளுடன், கனவுலகக் காட்சியாய்த் தோற்றம் தரும் மாளிகை. வாயிலில் கூண்டு இருக்கிறது. கூர்க்காவைக் காணவில்லை. அவள் உள்ளே பாதையில் நடக்கிறாள். நேராக மாளிகையின் முகப்புக்குச் செல்லாமல் வலது பக்கமுள்ள சிறிய இல்லத்துக்குச் செல்லும் பாதையில் நடக்கிறாள். ஜன்னல்கள் சாத்தியிருக்கின்றன. கமலம்மா சன்னல்களைச் சாத்த மாட்டாரே? ஸுஸ்வாகதம் என்று பசுங் கீரையினால் எழுதப் பெற்றிருக்கும் முன்வாயில் கோலம் களையிழந்து கிடக்கிறது. வாயிற் கதவிலும் பூட்டு தொங்குகிறது. ஒரே ஒரு கூடமும் ஒட்டிய பூஜை அறையும் குளியலறையும் கொண்ட இல்லம் சாத்திக் கிடக்கிறது. கூடத்தில் ஊஞ்சற் பலகை தொங்கும். நேர் எதிரே மாமா, சுதீரின் தந்தை, ஆலமரமாய்ப் பரவி நிற்கும் வர்த்தக நிறுவனத்தைத் தோற்றுவித்த முதல்வர், படத்தில் காட்சி தருவார். அந்தக் காலத்தில் கதர் உடுத்தி காந்தி பக்தரானாலும், தொழில் வளர்ச்சிக்கு அந்த இலட்சியங்கள் முட்டுக்கட்டை போடாதவாறு பார்த்துக் கொள்ளத்தானே வேண்டும்? அரசோடு இணங்கி, இணங்க வைத்து, ஆளுங்கட்சிக்கு அள்ளிக் கொடுத்து, சலுகைகளைப் பெற்றுப் பல்கிப் பெருகினார் என்று சொல்லலாம். தோட்டத்துப் பின்புறப் பாதையிலும் யாரையும் காணவில்லை. பெரிய மூன்றடுக்கு மாளிகையை நிமிர்ந்து பார்க்கிறாள். வழவழவென்ற வண்ணச் சுவர்கள் தெரியும் விசாலமான அறைகள்; நேர்த்தியான வாயில் திரைகள். பக்கச் சுவரை ஒட்டி இரண்டு தென்னை மரங்கள் ஓங்கி உயர்ந்து, ஊஞ்சல் தொங்கும் மூன்றாம் மாடி முகப்புக்கு அழகு செய்கின்றன. மண் தொட்டிகளிலிருந்து படாதப் பூங்கொடிகள்; தொங்கும் இழைகளில் ஊசலாடிக் கொண்டு மயங்கச் செய்யும் பசுங்குவியல்கள் - இத்தனை கோலாகலத்திலும் மனிதப் பூண்டைக் காணவில்லையே? யமுனா வீட்டின் முன்புறம் செல்லாமல் சுற்று வழியிலேயே பின்பக்கம் செல்கிறாள். அங்கே பணியாளர் குடியிருப்புகள் துண்டாக அமைந்திருக்கின்றன. பின்பகுதித் தாழ்வரையில் சமையற் பணியாளர் (சுப்பையா இல்லை) ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து திடீர்ச் செய்திகளைச் சுடச்சுடத் தரும் தாளைச் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். "...ஏங்க, கமலம்மா இல்லையா?" அவர் தாளிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்க்கிறார். "இல்லையே." "ஊரிலில்லையா?" "ஆமாம். சுவாமிகளைப் பார்க்க சிருங்கேரி போனார் நேத்துதான்." "ஓ... வர நாளாகுமா?" "அதெல்லாம் அம்மா ஒண்ணும் சொல்றதில்லை; என்னன்னு விவரம் தெரிவிச்சா, வந்தா சொல்றேன்." "இங்கே பெரிய வீட்டிலும் யாருமில்லையா?" "சின்னவரும் சம்சாரமும் ஜப்பான் போயிருக்கா. பெரியம்மா உள்ளே இருப்பார். யாரைப் பார்க்கணும் நீங்க? ரேகா கூட இன்டர்நேஷனல்னு வந்திருக்கும் 'கெஸ்ட்' கூடப் போயிருக்காப்பல..." "கமலம்மாவைத்தான் பார்க்க வந்தேன், வேறொண்ணுமில்ல..." அவள் நடக்கத் திரும்புகிறாள். அவளுடைய எளிமையான கோலம், கமலம்மாவிடம் ஏதேனும் உதவி கோரி வரும் ஏழைப் பெண்ணாக அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அலட்சியமாக மறுபடியும் நாள்தாளில் கண்களை ஊன்றுகிறார். அவள் சட்டெனத் திரும்பி, "கமலம்மா வந்தபின் ஊட்டியிலிருந்து யமுனா வந்திருந்தான்னு சொன்னாப் போதும்" என்று கூறுகிறாள். மறுமொழிக்குக் காத்திராமல் திரும்புகிறாள். எத்தனை பெரிய மாளிகை; என்னென்ன வசதிகள்; பெரிய பெரிய காற்றோட்டமான அறைகள் வெறுமையாக இருக்கின்றன. அதே சமயம், சுத்தமும் சுகமும் அண்ட முடியாத சாக்கடைக் குட்டையே தோட்டமாகக் கொண்டு குடிசைகளில் புழுக்களாய் நெளியும் மக்கள். மனிதகுலம் நாகரிகப் பாட்டையில் செல்கிறது என்று இந்த மாளிகைகளை மட்டும் பார்த்துக் கொண்டு சொல்பவர்கள் மனச்சாட்சியைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் தாம்! வேறென்ன? மாளிகையிலிருந்து வெளியேறி அவள் பஸ் நிறுத்தத்தில் வந்து நிற்கிறாள். சுவரின் எதிரே வரிசையாகச் சுவரொட்டிகள்; ஒன்றன் மேலொன்றாக நீ முந்தி நான் முந்தி என்று அடிபிடியாகப் பற்றிக் கொண்ட இடங்களிலெல்லாம் சுவரொட்டிகள். காமக் களியாட்டங்களின் பச்சையான காட்சிகளை, முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் பெரிய அளவில் வைக்கிறார்கள்; இங்கே கழுத்து நோகாமல் பார்க்கச் சிறிய அளவில் ஸெக்ஸ், காட்டுமிராண்டித்தனமான கொலை, கொள்ளை வன்முறை என்று ஒரு படத்தின் காட்சிகளைப் பற்றிய சுய விளம்பரங்கள். அரசியல்வாதிகளின் சுய விளம்பரங்கள், எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு சுவரைப் பற்றிக் கொண்டிருக்கின்றன. மழை இனி தாக்குப் பிடிக்க முடியாது என்று இப்போது தூற்றல்களாக விசிறி விட்டு உடனே வலுக்கிறது. கைப்பையைத் தலைக்கு நேராகச் சரித்துக் கொண்டு, அருகில் தென்படும் கடைப்பக்கம் ஓடி ஒதுங்குகிறாள். "ஹலோ...?" வெள்ளையாகத் தெரியும் ஒரு கொத்திலிருந்து தனியாகப் பிரிந்து வருபவன் போல் இந்துநாத் வருகிறான். கறுப்புக்கரை போட்ட கதர் வேட்டி, ஜிப்பா, கையில் ஒரு நீளவாட்டு ஜிப் பை. "இப்படி உள்ளே வாங்க, மழை விழுகிறதே? எங்கே இப்படி...? உங்களை அப்புறம் பார்க்க வரணும்னு நினைப்பு. தலைவரோடு வெளியே போயிட்டேன். இப்பத்தான் வசந்த நகர் ஸ்கூல்ல நீங்க பேசினதா மீனாட்சி சொன்னா. உங்க மீட்டிங் ஒண்ணு ஏற்பாடு செய்யணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் வந்துட்டீங்க... நூறு வயசு..." "ஐயையோ? பூமி தாங்காது!" என்று யமுனாவும் சேர்ந்து சிரிக்கிறாள். "பி.எம். விசிட் சம்பந்தமா ஏகரகளை, ஒரே சண்டை. இப்ப யாருக்கும் ஒண்ணும் புரியலே. என்னடா வரேன்னு சொல்லிட்டுப் போனானே ஆளையே காணோமேன்னு நினைக்கப் போறீங்க..." என்று குரலை இறக்கி அவன் முடிக்கு முன் யமுனா குறுக்கிடுகிறாள். "நோ நோ... பெரியப்பா தான் சொன்னாரே?" "அதான் பேப்பரில் பார்த்திருப்பீங்களே? தெருப் பசங்க சண்டை போல ஆயிட்டுது..." "நீங்க என்ன சம்பந்தமில்லாமல் பேசுறீங்க? நீங்க ரைட்டா, லெஃப்டான்னு தெரிந்து கொள்ளலாமா?" "அதென்ன அப்படிக் கேட்டுட்டீங்க? ஒரு நாட்டுக்கு ரைட்டும் வேணும், லெஃப்டும் வேணும். இடது கையில்லாம முடியுமா, வலது கையில்லாம முடியுமா?" "அது சரி..." "வலது பக்கம் ஆளு அதிகமானால் இடது பக்கமும் இடது பக்கம் பளு அதிகமானால் வலது பக்கமும் சரியத்தானே வேண்டியிருக்கு? அரசியலில் இப்ப இன்னும் ஒரு நிலவரமும் புரியலே. யார் பக்கம் வலு அதிகம்ங்கறது சொல்ல முடியாம ஒரே குழப்பமாயிருக்கு. நீங்க பாலிடிக்ஸ் படிச்சிருக்கீங்க. நடைமுறைக்குப் படிப்பெல்லாம் ஒத்து வராது. ஏனிப்படி நாம் இங்கே நின்னு பேசணும்? மழையோ இப்போதைக்கு விடாது போலிருக்கு. உள்ளே வாங்கோ காப்பி சாப்பிடலாம்..." "வேண்டாம், இப்ப வீட்டுக்குப் போயிடணும். நான் சாப்பிட வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறேன்." "எப்ப? மணி இப்போதே பன்னிரண்டரை. ஒரு பஸ் பிடிச்சு, இரண்டு பஸ் பிடிச்சில்ல போகணும்? உள்ளே வாங்கோ ஒரு காப்பி இல்லாட்டா வேறு ஏதானும் சாப்பிடலாம்..." மழைக்கு நின்ற இடம் ஓட்டல் படிதான் என்பதை அவள் இப்போதுதான் கவனிக்கிறாள். மழை பெய்தாலும் உள்ளே புழுக்கத்துக்குக் குறைவில்லை. 'குடும்பம்' என்ற தடுப்புக்குள் செல்கின்றனர். அந்த நேரத்தில் சாப்பாட்டுக் கூட்டமே அதிகம். "நீங்க காப்பி வேண்டாம்னா, என்ன சாப்பிடறீங்க? ஏம்பா? ரெண்டு ரோஸ் மில்க் கொண்டு வா" என்று அவளைக் கேட்டும் மறுமொழியை எதிர்பாராமலும் பணிக்கிறான். உலர்ந்த நெஞ்சுக்கும் புழுக்கத்துக்கும் அந்தப் பானம் இதமாகத்தான் இருக்கிறது. அவன் 'ஸ்ட்ரா'வைத் தூக்கி எறிந்து விட்டு ஒரே மூச்சில் டம்ளரைக் காலி செய்கிறான். கைக்குட்டையால் நெற்றியை ஒத்திக் கொண்டு, "மிஸ் யமுனா, நீங்க நிச்சயமா அரசியல் உலகுக்கு வந்துதான் ஆகணும்" என்று புன்னகை செய்கிறான். "நான் சும்மா முகஸ்துதி பண்ணுறேன்னு நினைக்காதீங்கோ. நீங்க ஒரு வயிரம். பட்டை போட்டுட்டா அரசியல் வானில் உதய நட்சத்திரம். உங்களுக்கு நல்ல பின்னணி, படிப்பு, கிளாமர் எல்லாம் இருக்கு. உங்களை எப்படி உருவாக்கணும்கறதை நான் உங்களைக் கண்ட போதே திட்டம் போட்டுட்டேன். என்ன சொல்றீங்க...?" இன்னும் பாதி தம்ளர் கூட உள்ளிறங்கவில்லை. குத்துவிளக்கின் சுடர்போல் ஓர் அடக்கமான புன்னகை அவள் முகத்தில் விளங்குகிறது. உண்மையில் தீராத மற்றும் மரணத்துக்கஞ்சாத நேர்மையும், எளிமையுந்தான் தேவையென்று சொல்ல வந்த அவள் இந்த வகையில் தான் பிறரைக் கவருகிறாளா? "ஏன் சிரிக்கிறீர்களிப்ப?" "இல்லே வயிரத்துக்குப் பட்டை போடறதுன்ன என்னன்னு நினைச்சேன்!" "நீங்க ரொம்ப குறும்பு போலிருக்கு! அரசியல்னா இப்ப அவனவன் பதவி, பணம், அதிகாரம்னு முன்னேற வாய்ப்பளிக்கும் களம்னுதான் அர்த்தம். இதிலே புகுந்து வெற்றிகரமாக வர ஒரு சாமர்த்தியம் வேணும். நீங்க ஒரே நேர்க்கோடா, ஹும். கொள்கைப்படிதான் போகணும்னு நிலவரம் புரியாம முட்டிக்கக் கூடாதே? அதான் பட்டை போடற வேலையை எங்கிட்ட விட்டுடுங்கன்னேன்." "புரிகிறது... நீங்க உட்காருன்னா, நான் உட்காரணும், பேசுன்னா பேசணும். எழுந்திருன்னா எழுந்திருக்கணும்? அதாவது உங்க தொழுவத்தில் கட்டின மாடு போல..." 'ஆஹா, ஆஹா'வென்று அவன் சிரிக்கிறான். மற்றவர்கள் அவர்களைத் திரும்பிப் பார்க்கும்படி அவன் சிரிக்கும் போது யமுனா உள்ளூறக் கூறுகிறாள். "என்னமாப் பேசறீங்க? நீங்க நிச்சயம் இந்த எழுபத்திரண்டில் எங்கேயானும் நின்னு ஜயிச்சு, நிச்சயமாப் பதவிக்கு வந்தே ஆகணும்... வரணும்..." அவள் அவசரமாகத் தம்ளரைக் காலி செய்துவிட்டு மேஜையில் வைக்கிறாள். "நான் நிச்சயமாக அரசியல் பதவிக்குப் போட்டி போட மாட்டேன்." "உங்களைப் போல இருக்கிறவள்ளாம் இப்படிச் சொல்லித்தான் இந்த நாடே உருபடாம போயிருக்கு. நீங்க மாட்டேன்னா யார் விடப் போறா! நான் முதல்ல இப்ப ஒரு டாக்சியைப் பிடிச்சிண்டு வரேன்..." என்று வேட்டி தடுக்க, நிழலுள்ள நடை பாதையோரம் சென்று வண்டி பேசுகிறான். யமுனா அம்மாவனுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டே நிற்கிறாள். |