உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
18 யமுனா அந்தப் புடவையைத்தான் உடுத்து, ரிக்ஷாவில் அவனோடு நெருங்க அமர்ந்து அந்த விருந்துக்குச் செல்கிறாள். இந்தப் பாரத நாட்டில் காந்தி என்ற ஒருவர் தோன்றி, அஹிம்சை அன்பினால் சமத்துவ நெறி என்ற ஒன்றைப் புதுமையிலும் புதுமைபோல் விளக்க, வாழ்ந்து மறைந்து இருபதாண்டுகளுக்கு மேலாகின்றன. அன்னாருக்கு பிறந்த நாளும் மறைந்த நாளும் கொண்டாடிப் போற்ற அரசு முன் நிற்கிறது. அந்த நெறியை விளக்க நூற்றுக்கணக்கான அறிஞர்கள் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்; மேடையில் முழங்குகிறார்கள். ஆனால் இங்கே மனிதனை மனிதன் சுரண்டி உயிர் வாழ்வது மட்டுமில்லை. அதற்கெல்லாம் மேலான சுகபோகங்களை, தேவைகளை அநுபவிக்கிறான்; வளர்த்துக் கொள்கிறான். பீகார் மாநிலத் தலைநகரில் போக்குவரத்துக்கு, நடுநிலை மக்களுக்குச் சாதகமான பஸ் வசதி கிடையாது. கார், இல்லையேல் மனிதன் இழுக்கும் ஊர்திதான். பனிப்படலம் ஊரைப் போர்த்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் கனமான கம்பளிகளுக்குள் முடங்கிக் கொண்டு உழைப்பறியாமல் உடற்சதை வளர்த்த ஆடவர் பெண்டிர், பட்டும் கம்பளியுமாக ரிக்ஷாக்களில் வீற்றிருக்கின்றனர். கன்னத்தெலும்பு முட்ட, ஒரு அழுக்கு வேட்டியும் ஒற்றைப் பருத்திச் சட்டையும் குளிரை வரவேற்கும் வாயில்களாக வதைக்க, அடிநிலை மனிதர்கள் மிதிகளை இயக்கிச் செல்கின்றனர். போரிங் கால்வாயின் குறுகிய பாலத்தை அவர்கள் கடக்கையில், தெருவை அடைத்துக் கொண்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு மனிதன் இழுக்கும் பாரவண்டிகள்... படார் என்று ஏதோ வெடிக்கும் ஓசை கேட்கிறது. கல்கத்தா நகர அநுபவ நினைவில் அவள் திரும்பிப் பார்க்கிறாள். சக்கரங்கள் தேய, அவன் இறங்கி முன் நின்று இழுக்கிறான். "பாலமானதால் இறங்கி இழுக்கிறானா? நாம் வேணா இறங்கிடுவமே, பாவம்?" என்று துரையின் செவிகளில் அவள் கிசுகிசுப்பது பயனில்லை. பாலத்தின் மறுபுறம் அவன் நிறுத்தி எதிரே காலியாக வரும் ரிக்ஷாக்காரனிடம் பேசுகிறான். பிறகு தான் அவளுக்கு உண்மை உறைக்கிறது சக்கரத்தில் டயர் வெடித்திருக்கிறது! "இத்துடன் அவன் கூலியைக் கொடுத்து நிறுத்துங்களேன். இனிமே நாம் நடந்து போயிடலாம்!" "உளறாதே? பாடலிபுத்ரா இன்னும் ரொம்பத் தொலைவிருக்கு! தகராறு பண்ணாம அந்த ரிக்ஷாவிலே ஏறு!" இந்தப் பகுதிக்கு யமுனா இதுகாறும் வந்ததில்லை. அழகிய சாலைகளுடன், விசாலமான தோட்டங்களுடன், பெரிய பெரிய மாளிகைகள். ஒரு மாளிகை வாயிலில் கார்களாகத் தெரிகின்றன. வண்ண விளக்குத் தோரணங்கள் 'ஸுஸ்வாகதம்' கூறுகின்றன. இதுவும் பஞ்சம்பீடித்த விஹார மாநிலத்தைச் சேர்ந்த இடந்தானோ? ஒவ்வோர் ஆண்டிலும் குளிரிலும் வெப்ப அலையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் சாகும் விஹார மாநிலப் பகுதிதானா? காச்மீரக் கம்பளங்கள் மெத்தென்று அடிகளை வருடிவிடும் தரையில் ஆண்களும் பெண்களும் குழுமுகின்றனர். வாட்ட சாட்டமான கனத்த சாயமும் பெரிய அளவுக் கொண்டையுமாக ஒரு பெண்மணி முறுவலித்துக் கைகூப்பி வரவேற்கிறாள். முன்னறையில் மிக நேர்த்தியான இருக்கைகளில் பத்துப் பதினைந்து சுந்தரிகள் ஆண்களோடு கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். துரையின் சாத்விகமான தோற்றத்தோடு யாரையுமே இணை கூற முடியாது. ஐந்தணி நெறிகளோடு கூடிய சீக்கியர்களே பெரும்பான்மையோர்; கங்கை வளநாட்டின் செழுமைக்கு எடுத்துக் காட்டாக மற்றவர். இறுகப் பிடித்த கால் சட்டையும் தொளதொளத்த காச்மீர குர்த்தாவும், அலை தவிழ விழும் குட்டைக் கூந்தலுமாக மிச்ராவின் புதல்வி "ஆயியே, ஆயியே" என்று வருகிறாள். துரை யமுனாவை அறிமுகம் செய்து வைக்கிறான். "இந்தக் கும்பலில் நான் உன்னைக் கதர் சேலையுடன் வரவேண்டாம் என்று சொன்னது ஏனென்று புரிகிறதா?" என்று துரை அவள் செவிகளில் கிசுகிசுத்தான். யமுனாவுக்கு அது செவிகளில் விழவில்லை. சம்பாவைப் போன்று பல பெண்கள் அவள் மனக்கண்களில் தோன்றுகின்றனர். அதுல், சுனிலைப் போன்று பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், கையது கொண்டு மெய்யது பொத்தி, எருமை வாசம் செய்யும் இடங்களுக்கருகில் சோர்ந்து உறங்கும் காட்சி தோன்றுகிறது. இந்தப் பாடலிபுத்திரத் தலைநகரில் கங்கைத் தாய் வற்றாத செல்வங்களைத் திரட்டிக் கொண்டு தருகிறாள். இம்மக்களுக்காக ஒவ்வோர் ஆண்டிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தன் பொற்கரங்களால் அணைத்து, பொன் விளையும் வண்டலை நிரப்பிச் செல்கிறாள். காயும் கனியும் பொன்மணித் தானியங்களும் அவள் அருளில் கொழிக்கின்றன. நாள்தோறும் லட்சம் லட்சமாகச் செங்கற்களை அறுத்துக் குவிக்கக் களியைப் பதமாகக் கொண்டு குவிக்கிறாள். ஆனால் அந்த அன்னையின் லட்சோபலட்சம் மக்கள் மாந்தோப்புக்களிலும் குட்டையோரங்களிலும், எளிய ஸத்துமாவும், அதுவும் கிடைக்காத போது பசி மறக்க 'கய்னி'யும், இரவு கொசுத் தொல்லையும், உடல் நோவும், மறக்கக் கள்ளுடன் உறவு கொண்டும் நாட்களைக் கழிக்கின்றனர். அண்டிப் பிழைக்கும் தொழிலன்றி வேறு தொழில் முன்னேற்றம் கண்டு நிமிர்ந்து நிற்கத் தெரியாதவர்களாய்த் தவிக்கின்றனர். எங்கோ கண்காண இயலாத தொலைவில் கல்கத்தா நகரில் எத்தனை எத்தனை ஏழை பெண்களின் மணவாளர்கள் கூலிக்குப் பிழைக்கச் சென்றிருக்கின்றனர். கண்முன் விரிந்திருக்கும் சித்திரப் பூங்கனவின் காட்சிகளூடே அழிக்க இயலா உண்மையாய்ப் பதிந்திருக்கும் பரிதாபங்களிடையே சிக்கியிருக்கும் அவளை ஒரு மென்கரம் தொட்டசைக்கிறது. கார் மேகக்குழல் கவிந்த பிறை நுதலாள் ஒருத்தி தேனினுமினிய குரலில், "மாடிக்குப் போகலாமே!" என்றழைக்கிறாள். படிகளெல்லாம் கம்பள மென்மை. மாடியில் பெரிய கூடத்தில் உயரே படிக விளக்குகள் ஒளியில் மின்னி, வண்ண ஜாலங்களை வாரி இறைக்கின்றன. அந்த வண்ணக் கதிர்களில் உயிர்த்தெழுந்த மோகினிகளாய்ப் பெண்கள், இன்னொரு புறம் இணைகளாய் ஆண்கள். துரையும் அங்கு இருக்கிறான். அவர்கள் எல்லோருடைய கைகளிலும் பட்டைக் கண்ணாடிகளில் பொன்னிறத் திரவம் மின்னுகிறது. கிலுங்கிலுங்கென்று கண்ணாடிகள் இதமாக மோதும் ஒலியும் பெண்களின் மெல்லொலியும் இணைந்து ஒரு இனிய கலவையொலியைச் செவிக்கு அளிக்கின்றன. ஒரு நங்கை அவளிடம் கோகாகோலா ஒன்றைக் கொணர்ந்து கொடுக்கிறாள். அதைக் கையில் வைத்துக் கொண்டு அவள் துரையையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். பிதுங்கும் கன்னமும், தாடி தலைப்பாவுமாக மீதூண் உண்பவன் என்று தோன்றக்கூடிய தோற்றத்துடன் ஒரு 'கனவான்' கையில் புட்டியும் தம்ளருமாக 'ஹா ஹா ஹா' என்று ஏதோ நகை வெடியை உதிர்த்துச் சிரிக்கிறான். சிரித்துக் கொண்டே துரையின் கைத் தம்ளரில் புட்டியைச் சாய்க்கிறான். துரை இதற்குமுன் சில நாட்கள் பார்ட்டி என்று சொல்லிப் போகாமல் இல்லை. ஒருமுறை ஒரு மணிக்குத் தான் திரும்பினான். அவளுக்கு இந்த உணர்வே இல்லை. துரை மதுவருந்தக் கூடும் என்று கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை அவள். எல்லோரையும் போல் அவனும் புகை குடிக்கிறான். சில பெண்கள் இங்கிருந்து எழுந்து அந்தச் சிரிப்பிலும் பேச்சிலும் கலந்து கொள்ளச் செல்கின்றனர். பெரிய தலைப்பாகையை வைத்தாற் போல் கொண்டை போட்டுக் கொண்டு முதலில் அவர்களை வரவேற்ற பெண்மணியைச் சுற்றி, ஆண்கள் நாலைந்து பேர் அவளுடைய கிண்ணத்தில் செந்திரவத்தை வார்க்கப் போட்டியிடுகின்றனர். அவளுடைய கன்னங்களும் கண்களும் சிவந்து, அடக்கங்கள் மடலவிழ்ந்து, பெண்மையின் நளினங்களை நேர்கோடுகளாக்கி வாரி இரைக்கின்றன. இந்த நாடகங்களைக் கவனியாதவர்கள் போல் நாலைந்து பெண்கள் ஒரு மூலையில் கோகாகோலாவை வைத்துக் கொண்டு வேலைக்காரி தொல்லை, பனிக் கொடுமை, நோவுகள், குழந்தை வளர்ப்பின் சிக்கல்கள் ஆகியப் பிரச்னைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாட்டிலும் கையுமாக ஒருவன் வருகிறான். "குளிருகிறதா ரொம்ப?" என்று சிரிக்கிறான். "குளிரே இல்லை, போங்கள்!" என்று எல்லோரும் தங்கள் பானங்களை மூடிக் கொள்கின்றனர் கைகளால். "இதோ இந்தக் கோலாவைக் குடியுங்கள் புதிய பிராண்ட், எக்ஸெலண்ட்... வெறும் கோலா!" "மிஸஸ் ஷர்மா! கொஞ்சம்...?" "வேண்டாம், வேண்டாம்! இந்த பிராண்டே போதும்!" என்று எல்லோரும் ஒரே குரலாகச் சேருகின்றனர். அவன் அகன்ற பிறகு யமுனா ஒருத்தியிடம் கேட்கிறாள், "அந்த புட்டியில்...?" "ஹாஞ்ஜி... கலந்து இம்சை செய்வார்கள், இந்தப் பார்ட்டிகளின் விசேஷமே இதுதான்." "மிக வருத்தமாக இருக்கிறது." "ஹாஞ்ஜி... ஆண்கள் இப்படித்தான். நிலை மறந்து விடுகிறார்கள்." "இங்கு நடக்கும் எல்லா விருந்துகளிலும் இது உண்டா?" "ஹாஞ்சி...!" இது அப்பட்ட மேல் நாகரிகமுமல்ல; கீழ்த்தனமுமல்ல. புதிய பணத்தால் மேலே ஏறி வான் கோழித்தனம் காட்டும் நாகரிகம். கையில் புட்டியுடன் தொப்பையும் பிதுங்கும் கன்னங்களுமாக ஒரு 'கனவான்' உடலை ஆட்டி நடனமாடுகிறான். விகாரமாக வேதனையாக இருக்கிறது, மற்றவர்களோ சிரிக்கிறார்கள். துரையும் கையில் தம்ளருடன் அவளைத் திரும்பிப் பார்க்காமலே சிரித்துக் கொண்டிருக்கிறான். அவள் தன்னந்தனியே ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறாள். ஒரு கால் அவள் வாழ்வு சுதீருடன் பிணைக்கப்பட்டிருக்குமானால்... அவன் நிச்சயமாக இத்தகைய கேலிக்கூத்து விருந்துகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மாட்டான் என்று தோன்றுகிறது. வன்முறைகளில் நம்பிக்கை வைப்பவர்களுக்குப் புலால், மது, உடலின்பங்கள் எல்லாவற்றிலும் லட்சிய விரோதங்கள் இருக்காது. ஆனால், பாசாங்கு செய்ய மாட்டார்கள். சுதீரின் தோற்றம், குடும்பச்சூழல், கல்வி - எல்லாமே துரையின் இளம் பருவச் சூழலிலிருந்து மாறுபட்டவை. ஆனாலும் துரைக்குக் காலையில் அது பால் குடிக்க வருவது கூடப் பிடிக்கவில்லை... "ஓ! ஹௌ நைஸ்... இந்த ஸாரி நேபாலிலிருந்து வாங்கி வந்ததா பஹன்ஜி? ஜரிவேலை எவ்வளவு ஆயிற்று? நல்ல ஜப்பான் ஜரி போலிருக்கிறதே?" கேள்வி கேட்பவளை யமுனா நிமிர்ந்து பார்க்கிறாள். "எனக்குத் தெரியாது. என் கணவர் வாங்கி வந்தார். அவருக்குத் தான் தெரியும்..." "என்ன அழகான கலர்! நம்ம ஊர் நைலக்ஸுக்கும் இதற்கும் பார்த்த உடனே வித்தியாசம் தெரிகிறதில்லை?" அந்தக் கணத்திலேயே முள் ஆடையைச் சுற்றிக் கொண்டிருப்பது போல் அவதிப் படுகிறாள். வழுக்குக் கிணற்றுக்குள் துரை, தான் மட்டும் இறங்கவில்லை, அவளையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டல்லவோ இறங்குகிறான்? கொல்லென்று கூட்டத்தில் ஓர் அமைதி. "ஆயியே, ஆயியே!" என்ற குரல்கள். பெண்கள் அனைவரும் எழுந்து நிற்கின்றனர். கையிலிருக்கும் கண்ணாடிகளை அப்பால் வைத்துவிட்டுக் கைகுவிக்கின்றனர் பல ஆண்கள். யமுனா வந்திருக்கும் மதிப்புக்குரிய பெண்மணி யாரோ என்று பார்க்கிறாள். 'மாதாஜி!...' சுமதி தாயுடன் வந்திருந்த அம்மையார்! ஒரு காலத்தில் சோஷியலிஸ்ட் கட்சியின் தூண்போல விளங்கியவரின் மனைவி. பளபளவென்று மின்னும் வெண்பட்டுச் சேலை, இடது மூக்கில் நட்சத்திரமாகக் கதிர்களை வாரி வீசும் வைரம். வகிட்டில் சிந்தூரமில்லாத நரைத்த முடியின் பின்புறமே தெரிகிறது. முதுமையிலும் செழிப்பின் மினுமினுப்புக் குறையவில்லை. ஒவ்வொருவராக மிச்ரா அவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான். "நமஸ்தே, மாதாஜி. நமஸ்தே... நமஸ்தே...!" தலையை மூடிக் கொண்டிருக்கும் சேலை வரம்பு அசையாமல், கைகுவித்து, தங்க பிரேம் மூக்குக் கண்ணாடிக்குள் கரிய குஞ்சங்கள் இல்லாத விழிகளுடன் புன்னகை பூக்கும் மாதாஜி... "துரைராஜ் ஸேல்ஸ் இன்ஜினியர். மிஸஸ் துரைராஜ்." மாதாஜி, அவளைப் புன்னகையுடன் நோக்குகிறார். "நமஸ்தே மாதாஜி, யமுனா! என்னை நினைவிருக்கிறதா?... ஊட்டியில் பார்த்தீர்களே?" மூக்குக் கண்ணாடியை உயர்த்துவது போல் சரிசெய்து கொண்டு மாதாஜி, பார்க்கிறார். "ஊட்டியிலா?... பெங்களூர் காங்கிரஸுக்குப் போய் வந்த போது... நீ காங்கிரஸுக்கு வந்திருந்தாயாம்மா?" "இல்லே மாதாஜி, சுமதி தாயுடன்... ராம்ஜி மகள்." "ஓகோ?" என்று உடனே ஆவேசமாக யமுனாவைத் தழுவிக் கொள்கிறாள். "ராம்ஜி... ருக்மணிபாயின் மகளா? அந்த நாட்கள் பாபுஜியுடன் ஆசிரமத்திலிருந்த அந்த நாட்கள்..." உண்மையிலேயே அந்த நாட்களின் நினைவில் மாதாஜியாகிவிட்ட பிரதிபாதேவி பெருமூச்சு விடுகிறாளா? வைர மூக்குத்தி ஏழுவண்ணக் கதிர்களை வாரி வீசுகிறது. கழுத்தில் தங்கக் கொப்பி போட்ட துளசி மணிமாலை! "இங்கே எங்கே இருக்கிறாயம்மா?" "ஸ்ரீகிருஷ்ண நகரில்..." "பக்கத்தில்தான். ஒரு நாள் வீட்டுக்கு வாம்மா." "உங்கள் வீடும் அந்தப் பக்கத்தில்தானா மாதாஜி?" 'ஒரு பெரிய கட்சித் தலைவரின் வீடு, முன்னாள் மந்திரியாரின் இல்லம், எங்கே இருக்கிறது என்று தெரியாமல்தான் கேட்கிறாளோ!' என்ற எண்ணம் முகத்தில் மின்னி மறைய "ஆம், கட்டாய்ம் வா!" என்று கூறுகிறார் மாதாஜி. யமுனா சுற்றுப்புறத்தை மறந்து ஏதோ கனவுலகில் மிதந்தவளாய் திட்டங்களிட்டுக் கொண்டு விருந்து நேரத்தைக் கழிக்கிறாள். |