2 ஜோசஃப் முன்னதாகவே வந்து பஸ் நிற்குமிடத்தில் அவர்களுக்காகக் காத்து நிற்கிறார். முடியில் பாதிக்குப் பாதியாய் வெண்ணிற இழைகள் அடர்த்தியான கிராப்பில் பங்கு கொண்டிருக்கின்றன. சிறிய ஹிட்லர் மீசை கருப்பாகவே இருக்கிறது. விழிகளின் கூர்மை மூக்குக் கண்ணாடியிலும் தெரிகிறது. அந்த நாட்களில் ஜயப்பிரகாஷ் அச்சுத பட்டவர்த்தன் கோஷ்டியில் இருந்தவர் ஜோசஃப். ஜயப்பிரகாஷ் தீவிர அரசியலை உதறிச் சர்வோதயத் தொண்டுக்கு வழிகாட்டிய போது, ஜோசஃப் ராம்ஜியின் சேவாசிரமத்தில் பங்கு பெற வந்தார். அப்போது இந்த ஆசிரமம் கூடலூர்ப் பக்கம் அமைந்த இயற்கை வைத்திய இல்லமாகத் தானிருந்தது. அதில் எண்ணி இருபது நேந்திரங்காய் வறுவல் வில்லைகள் இருக்கும். ஆசிரமம் போன்ற அந்த விடுதியில் வறுவல் பொரியல் போன்ற தீனிகள் செய்யமாட்டார்கள். ஜோசஃப் கோவைக்கு வரும்போது நூறுகிராம் வறுவலை வாங்கிக் கொரித்துக் கொண்டு, ஊர் முழுவதும் சுற்றுவார். அதில் அவளுக்கு இருபது துண்டுகள், தங்கமொகரக்கனைப் போல் பங்கு கொண்டு வருவார். அன்று போல் இன்றும் ஜோசஃப் அம்மாவன் நிற்கிறார். அந்த வெயிஸ்ட் கோட், கதர் ஜிப்பா, வேஷ்டி... "அம்மாவன் நேந்திரங்கா வறுவல் கொண்டு வந்திருக்கிறாரோ?" என்று சிரித்துக் கொண்டே யமுனா இறங்குகிறாள், முகம் ரோஜா மலராக மாறி இருக்கிறது. "ஆஹா... ஹ...! வறுவலோ வறுவல், ஆன வெல பின்னே, குடிக்கான் வெள்ள மில்ல, குஞ்ஞே!" "நாம் ஒரு பிளாஸ்டிக் கூஜாவில் கொண்டு வந்திருக்கலாம். சொல்லக்கூடாதா யமுனா?" என்று துரை சிரிக்கிறான். பளீரென்று பற்கள் கவர்ச்சியாக இருக்கின்றன. "சுமதி தாயி ஏன் பேசவில்லை?" "பேச என்ன இருக்கிறது? காந்திஜி இருந்தால் இப்ப என்ன சொல்வார்னு நினைச்சேன்." "ஓ... அவர் தான் இல்லையே, வண்டி நிற்கிறது; வாருங்கள்..." கருநீல வண்ணத்தில் முன்னும் பின்னுமாகப் படகு போல் நீண்ட சுகமாக வண்டி. "இது யார் வண்டி?" என்று கேட்கிறாள் யமுனா. "என்ன கேள்வி? இந்தக் கோடி கோடி அணைத் திட்டத்தில் பெரியவர்களான பலரில் ஒரு ஏழைக் குடிமகனுடைய வண்டி. ஏறிக்கொள்..." அவர் சுமதி தாயியைப் பொருள் பொதிந்த பார்வையுடன் நோக்குகையில் ரங்கன் மாலைப் பெட்டியுடன் விடு விடென்று குன்றில் ஏறிச் செல்கிறான். "இந்தக் கதரும் பையும் காரும் பொருத்தமாக இல்லையே என்று பார்த்தேன்." கார் இழிந்து வளைந்து சாலைகளில் பூத்து மின்னும் விளக்கு வரிசைகளினூடே ஏறி இறங்கி அவர்களைக் கீதா மஹாலுக்குக் கொண்டு செல்கிறது. ரங்கன் அதற்குமுன் காட்சி நடக்கும் அரங்குக்குச் சென்று விட்டான். அவனை அழைத்தாலும் ஏறியிருக்க மாட்டான். "அது வழியிலே நின்று போச்சின்னா? ரெண்டெட்டில் குறுக்கே ஏறினா கீதா மஹால்" என்பான். 'சூதுவாதற்ற, எளிய, நேரான, பொறுப்புள்ள... செயலில் நிறைவு காணும் குடிமகன். இவனை விட எந்த வகையில் நாமெல்லாரும் மேம்பட்டவர்கள்' என்று எண்ணிக் கொண்டே யமுனா அணியறைக்குள் நுழைகிறாள். அணியறைக்குள் மேற்பர்வை செய்யத் தேவையில்லாத கோலாகலம். அவர்கள் முன்பொரு முறை ஆதிவாசிகள் சம்மேளன்ம் நடந்தபொழுது உதகை நகர் வந்து கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த முழுநேர நிகழ்ச்சி புதியது. உற்சாகமும் கலகலப்பும் நிரம்புகிறது. "என் பொட்டு சரியாக இருக்கா, அக்கா?" "பின் போட்டு விடுங்கக்கா?" குழந்தைகள் அவரவரே ஒருவருக்கொருவர் வேடம் பூண உதவி செய்து கொள்ளப் பழக்கி இருக்கின்றனர். தொட்டால் ஒட்டும் பொய்ச் சாயமினுக்கு கிடையாது. பால பூர்வமான பேச்சு நடிப்புத்தான் சிறப்பு. பாரதத் தாயாக வேடமணிந்திருக்கும் பார்வதி இருளர் குலப்பெண். கரிய மினுமினுத்த முகத்தில் அவள் மட்டும் ரோஸ் பவுடரையும் ஜிகினா தூளையும் போட்டுக் கொண்டிருக்கிறாள். ஜிகினா மின்னும் முடி; சந்தன வண்ணத்தில் பச்சைக் கரையிட்ட சேலை; வெள்ளை சோளி, மூவண்ணக் கொடி கையில். "நல்லாயிருக்காக்கா!" "பிரமாதம் போ!" சிறுவன் மோகன், சரிகைத் தொப்பியும் கோட்டுமாக நிற்கிறான் முருகி, புத்லீபாய் வேடத்தில் பாபா காந்தி அவனுடைய அண்ணன் ரங்கன் - மீசை அற்புதம்! "அக்கா, எல்லாரையும் ஒரு 'க்ரூப்' போட்டோ எடுக்கணும். ஏற்பாடு செய்யுங்கக்கா" என்று கூறும் பிரேமா ஆசிரியை. படகர் வகுப்பைச் சேர்ந்தவள். இப்போது அணியறையில் புதியதொரு சிரிப்பலை பரவுகிறது. சத்தியத்தையும் கொல்லாமையும், இல்லறத்தையும் துறவறத்தையும் அரசியலையும் அன்பு நெறியையும் அன்றே தம் குறளில் பொதிந்து தந்த தெய்வப் புலவர் தோன்றுகிறார். "இன்ஜினியர் ஸாரே? அஸ்...லாயி!" துரை தன் சடை முடியைச் சற்றே விலக்கிவிட்டுச் சிரிக்கிறான். "அப்படியா? இது... (சடைமுடியைக் காட்டி) ரொம்பப் பெரிசில்லை?" "ஆமாம், அதற்கேற்ற உடலில்லை உங்களுக்கு!" என்று உரைக்கிறாள் யமுனா. "தொப்பையில்லை..." என்று துரை மீண்டும் சிரிக்கிறான். "தப்பு. தெய்வப் புலவர் நீட்டலும் மழித்தலும் வேண்டாமென்று சொன்னவர். அவருக்குச் சடாமுடி, தாடி எல்லாம் இருக்குமா என்பது ஐயத்திற்குரியது. ஆனால் தொந்தி நிச்சயமாக இருக்காது. அருளும் அறிவும் ஒளிரும் அந்தப் புலவர் வற்றிச் சுருங்கிய மெய்யுடன் தான் தோற்றம் தருவார்..." என்று யமுனா நிறுத்துகிறாள். "அது சரி; இப்ப என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் இந்த வேஷம் போடவா, வேண்டாமா?" "சே, விடக்கூடாது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே அன்பையும் அறத்தையும் கொல்லமை நெறியையும் அவர் அருளியிருப்பதைக் காட்ட வேண்டும். இந்த முடி, தாடி இரண்டையும் அளவைக் குறைத்தால் நல்லது; இல்லையா அம்மாவா?" "சர்தார்ஜி மாதிரி இருக்கலாம். வள்ளுவர் வட நாட்டாரா என்ற பிரச்னையைக் கிளப்பலாமானால் செய்யட்டும்..." அப்போது அணியறை வாயிலிலிருந்து வந்த ஒரு பெண் யமுனாவின் முழங்கையைப் பற்றுகிறாள். "யாரு, கமலம்மாவா? வந்திருக்காங்களா..." "ஆமாம். சேர்லே உட்கார்ந்திருக்காங்க..." அரங்கத்தில் கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது. ரங்கன் பெரிய முண்டாசும் கோட்டுமாகக் கம்பீரமாக மேடையில் நின்று "சைலன்ஸ்!" என்று கத்துகிறான். உடனே ஒரு குபீர்ச் சிரிப்பு கூரையை முட்டுகிறது. டிக்கெட்டில்லாத காட்சியாதலால் பெண்களும் குழந்தைகளும் நெருக்கி வழிகின்றனர். யமுனாவுக்கு எத்தனையோ முகங்கள் பரிச்சயமானவை; புன்னகைகள் அவளை விசாரிக்கின்றன. ஓரமாகச் சுவரோடு ஒட்டி அமைந்த நாற்காலி வரிசை ஒன்றில் காஷ்மீரச் சால்வையும், நூலிழைகளாய் நரைத்த கூந்தலுமாகக் கமலம்மா கை காட்டுகிறாள். "நமஸ்தே, வாங்க, நீங்க மதறாஸ் போயிட்டீங்களோன்னு நினைச்சேன். ரொம்ப சந்தோஷம்..." "அடுத்த வாரந்தான் போகிறேன். ராத்திரிக்கு இங்கே தானே தங்குவாய்?" "ஆமாம். இவங்கல்லாம் ஸ்கூல் ஹாலில் தங்கிடுவாங்க; நானும் கூட..." "வேண்டாம். நீ வாயேன்; அங்கே தங்கலாம்!" "சரி..." "அம்மா வரலே? ஏம்மா, அப்பாவைக் கூட மெள்ள வண்டியில் சாய்த்தாற் போல் வச்சுக் கூட்டி வரக் கூடாதா?" "வரலாம். அவருக்கு வரவேணுமின்கிற ஆர்வமே இல்லாமப் போயிட்டுதே! அம்மாவை அவர் போகச் சொன்னார். ஆனால், அம்மா அப்படி வரமாட்டாளே?" "எனக்கு ஊருக்குப் போகுமுன்ன அங்கே வரணும்னு. காரைப் பையன் எடுத்திட்டுப் போயிடறான்." கமலம்மா இதைக் கூறும் போது குரல் தழுதழுப்பது தெரியாமல் மறைத்துக் கொள்கிறாள். ஆனால் பயனளிக்கவில்லை. "நீ வாம்மா; நாடகம் முடிஞ்சி நான் காத்திருப்பேன்!" தொண்டையில் சொல் இடறி விழுவதைப் போலிருக்கிறது. ஜோசஃப் கூட்டத்தை வரவேற்று, காந்தியடிகள் தம் வாழ்க்கையின் வாயிலாக விளக்கிய லட்சியங்களைப் பற்றிச் சொல்ல முயலுவதே இந்தக் கலை நிகழ்ச்சிகளின் நோக்கம் என்று எடுத்துரைக்கிறார். அன்பாலும், அருளாலும் சிறுமைகளை ஒழிக்கப் பாடுபடுவதே இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதன் பொருள். பாரத நாட்டின் பண்பாடாய் வந்த அஹிம்சையும் சத்திய நெறியும் நைந்து, வன்முறையிலும் ரத்தப் புரட்சியிலும் இளம் சமுதாயம் நம்பிக்கை வைக்கும் அபாயத்தை உணர்ந்து, அதைப் போக்கும் வழிகாண இந்த நூற்றாண்டைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்துகிறார். யமுனா அரங்கத்து மூலையில் அவரைப் பார்த்துக் கொண்டு சிந்தனை ஓட்டமே நிலைத்து விட்டாற் போல் நிற்கிறாள். உற்சாகக் கலகலப்பை எல்லாம் எங்கோ மலை முகட்டில் மிதந்து வரும் கரிய நிழல் அழித்து விடுவதைப் போல் ஒரு பிரமை. பாரததேவி மேடையில் தோன்றுகிறாள். அவள் தம் புதல்வர் புதல்வியர் அவள் முன் சத்தியப் பிரதிக்ஞை எடுத்துக் கொள்கின்றனர். வள்ளுவர் தம் குறளில் காந்தியத்தைக் காட்டுகிறார். சின்னஞ்சிறு மோகனின் உள்ளம் அஹிம்சை நெறியிலும், அன்பு வழியிலும் அருட்கனி கொய்யப் பக்குவமடைவதை விளக்கும் காட்சிகள் மேடையில் உயிர்க்கின்றன. "அடாடா? இத்தனையும் இருளர் மக்களா? நம்ப முடியலியே!" "ஆசிரமம் இருக்கு இருக்குன்னு சொல்லுவாங்க. என்ன அழகாகத் தமிழ் பேசி, பாடி...!" பாராட்டுரைகள் மலர்ச் சரங்களாய் உள்ளத்தை மகிழ்விக்க வருகின்றன. நன்றி கூறுவது அவள் பொறுப்புத்தான். ஆனால் துரையிடம் வந்து, "உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். எனக்காக நீங்க நன்றி சொல்லி விடுங்களேன்; கொஞ்சம்!" "ஏன், பரவாயில்லை. நீங்க நல்லாப் பேசுவீங்க!" "உங்ககிட்ட புகழுரை கேட்கவா வந்தேன்? எனக்காகப் பேசமாட்டீர்களாக்கும்?" துரைதான் நன்றி கூறுகிறான். கிடைத்த சந்தர்ப்பத்தில் யமுனாவின் ஆற்றலைப் புகழ்ந்து வைக்கிறான். அவளுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. "இதெல்லாமா சொன்னேன்?" அவனுடைய கண்களும் பற்களும் போட்டி போட்டுக் கொண்டு ஒளிருகின்றன. கூட்டம் கலையுமுன் யார் யாரோ யமுனாவைச் சூழ்ந்து கொள்கின்றனர். "மாதாஜி ராம்ஜியின் மகள்..." "பேடீ...!" என்று அந்த அம்மையார் அவளைத் தழுவிக் கொள்கிறாள். பழம் பெரும் சோஷலிசவாதியான ஸின்னாஜியின் மனைவியாம் மாதாஜி. அவளுடைய தந்தை அந்தப் பழைய நாட்களில் காந்தியடிகளுடன் சம்பாரன் சத்யாக்ரகத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது அவர்களுடைய இல்லத்தில் தான் தங்கினாராம். பாரத நாடு விடுதலையடைவதைப் பார்க்காமலே கண்களை மூடிவிட்டார் ஸின்னாஜி. ஒரு மகள், மகன், அம்மையார் எல்லாருமே அரசியலில் பங்கு பற்றியவர்கள். மருமகன் மாநில மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தான். எல்லாச் செய்திகளையும் மாதாஜியே மூச்சுவிடாத கீச்சுக் கிரலில் அப்பட்ட ஹிந்தியில் தெரிவிக்கிறாள். அவர்களுக்கெல்லாம் விடை கொடுத்துவிட்டு, சிறுவர் சிறுமியருக்கு உற்சாகமான பாராட்டுகளை வழங்கிவிட்டு அவள் திரும்பும் வரையிலும் கமலம்மா வண்டியில் அமர்ந்திருக்கிறார். ஜோசஃப் கதவடியில் நிற்கிறார். "மன்னிக்கணும். நீங்க ஏம்மா காத்திருக்கணும்? முன்ன போயிட்டா நான் வர மாட்டேனா..." "நீங்களும் வரீங்களா அம்மாவா?" "இல்ல நீ போயிட்டு வா யமு. காலையிலே வரேன்..." வண்டி ஓட்டி, கதவை அறைந்து சாத்துகிறான். கமலம்மாவின் கை மென்மையாக அவள் தோளில் படிகிறது. "வெகு அழகாகப் பண்ணிட்டேம்மா. எனக்குச் சொல்லவே தெரியலே. இத்தனை குழந்தைகள் மனசிலும் நீ சொல்ல வந்தது பதிஞ்சிருக்கும்" குரல் தழுதழுக்கிறது. கமலாம்மா ஏன் இவ்வளவு நெகிழ்ந்து போகிறார்! சுதீர் மேநாடு சென்று ஏதோ ஒரு தொழிற் பட்டத்தையோ நிர்வாகப் பயிற்சியையோ பெற்று வந்து, தந்தை ஆலமரமாகப் பெருக்கிய வர்த்தக நிறுவனங்களை ஒரு குடைக்கீழ் ஆண்டு கொண்டிருந்தால் கமலம்மா இப்படி அற்பத்துக்கு நெகிழ்ந்து போவாரோ? இந்தச் சேலையின் மீது நலிந்த கையைப் போட்டு அன்பை இழைய விடுவாரோ? வாழ்க்கையின் வண்மையில், எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாதவர் தாம் வன்முறைப் புரட்சியில் நம்பிக்கை வைப்பார்கள். சுதீருக்குக் கண் விழிக்கும் போதே வாழ்க்கை ஒளிமயமான வண்ணக்குடை பிடித்திருக்கிறது. ஏன் இப்படி? ஏன்... ஏன்? வண்டி சாரிங் கிராஸ் வளைவுப் பாதையில் ஏறி மேலே செல்கிறது. வாயில் பச்சைக் கம்பளப் பரப்பா, ரோஜாப் பூக்களா ஒன்றும் தெரியவில்லை. வண்டி ஓட்டி, வண்டியை நிறுத்திக் கொண்டு தான் இறங்கிக் கதவைத் திறக்கு முன் யமுனா முந்திக் கொள்ள முயன்றும் பயனில்லை. வீட்டு முன் அறை விளக்கைச் சமையற்காரர் போடுகிறார். கண்ணாடிக் கதவு திறந்து கொள்கிறது. மெத்தென்ற கம்பள விரிப்பும், பளபளக்கும் பட்டைக் கண்ணாடிக் குடுவையில் 'ஆஸ்டர்' பூக்களும், குளுமையான இளநீல ஒளியும்... "உள்ளே வாம்மா யமு...? சுப்பையா, எனக்கும் பாலை சூடாக்கி விட்டு யமுனாவுக்குத் தட்டுவை!" என்று பணிக்கிறார் கமலம்மா. சோடா பாட்டில் கண்ணாடிக்குள் தெரியும் கோலிகள் போன்ற விழிகளுடன் அவர்களைப் பார்த்து விட்டு வணக்கத்துடன் உள்ளே செல்கிறார் சுப்பையா. |