உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
14 மஞ்சட் கதிரோன் குறுகி நகரின் நெடுஞ்சாலைகளையும் மாடமாளிகைகளையும் குந்த இடமில்லாத குடியிருப்புகளையும், ஊர்ந்து செல்லவும் இடம் கிடைத்தால் போதும் என்று சாலைகளை அடைத்துக் கொண்டு ஊர்ந்து நகரும் ஊர்திகளையும், அவற்றுள் அடைந்தும் தொங்கி நின்றும் விழி பிதுங்கும் மக்களையும் பார்த்து போதும் என்று இருட்குகையில் மறைந்து செல்லும் நேரம் பார்த்துப் பனிமகள் வஞ்சகமாகத் தன் போர்வையை விரிக்கிறாள். நடைபாதை ஓரமொன்றில் வெற்றுடம்பையும் கந்தலையும் எலும்பெடுத்த கைகளால் குளிருக்குப் பாதுகாப்பாய்க் கட்டிக் கொண்டிருக்கும் ஐந்தாறு செல்வங்களையுடைய தாயொருத்தி, காய்ந்த ரொட்டித் துண்டுகளைப் பங்கிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு யமுனா தெருமுனையில் நிற்கிறாள். கிடைத்த இடங்களிலெல்லாம் பற்றிப் பரவும் சொறி சிரங்கைப் போல் மரத்தடிகளிலும் சாலையோரப் பகுதிகளிலும் இப்போது நெருங்கிக் கிடக்கும் நகரத்துச் சேரிகளெல்லாம் அவளுக்கு இப்போது பரிச்சயமானவையே; முரட்டுக் கதர்ச் சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு அவள் திரும்பும்போது முகம் நசுங்கிய ஒரு மாடி பஸ் செல்கிறது. முனையிலிருந்து பத்தடி தொலைவில்தான் பஸ் நிற்க வேண்டும். ஆனால் நிறுத்தப்படாத பஸ்ஸிலிருந்தே உள்ளே ஈ புழுக்கள் போல் அடைந்து கிடக்கும் வெள்ளை சள்ளைகளில் சில விடுதலையாகின்றன. பஸ் நிற்குமிடத்தில் காத்துக் கிடக்கும் கும்பலில் சில துளிகள் தொத்திக் கொள்கின்றன. சாம்பல் வண்ண நிஜாரும் கையில்லா ஸ்வெட்டருமாகச் சோர்ந்து வரும் ஒரு மெல்லிய ஐந்தரையடி உருவத்தை எதிர்நோக்கிக் கண்கள் ஆராய்கின்றன. சாலையில் இயக்கம் நிச்சயமில்லாத மனித வாழ்வை நினைப்பூட்டிக் கொண்டே இருப்பது போல் ஓர் பிரமையைத் தோற்றுவிக்கிறது. மாடிகளில், கடைகளில் விளக்குகள் எரிகின்றன. நடைபாதைகளில் ஆண்கள் பெண்கள், முதியோர் சிறுமியர், வறியர் எளியர்... என்று முடிவில்லா இயக்கம். போக்குவரத்தைக் கண்காணித்து ஆணையிடும் போலீஸ்காரன் வெள்ளையுடுப்புடன் கையை உயர்த்தி, அசைத்துச் சமிக்ஞைகள் செய்து முச்சந்தியைச் சமாளித்துக் கொண்டிருக்கின்றான். நடுவில் செல்லும் டிராம் பாதை வெறிச் சென்றிருக்கிறது. அதற்கு என்ன ஆபத்தோ? பார்த்துக் கொண்டே இருக்கையில் டிராமுக்கும் பஸ்ஸுக்கும் காத்திருக்கும் கும்பலுங்கூட இருளில் கரைகிறது. அவள் முனையில் வந்து நிற்பதை அவன் பார்த்தால் கடிந்து கொள்வான். "ஏன் இங்கே வந்து நிற்கிறே? சொன்னால் கேட்கிறதில்லேன்னு விரதம் வச்சிருக்கே?" இதற்குமேல் சாலையில் துரை பேசமாட்டான். அவர்கள் இருவரும் சேர்ந்து சாலையில் நடக்கும் போது அவன் பேசுவதில்லை. அதோ ஒரு பஸ் வருகிறது. யாரோ இரண்டு பெண்கள் இறங்குகிறார்கள். பெண்கள் இறங்குவதனால் போலும், பஸ் நிற்கிறது. செவிகளில் வளையங்களும் மூக்குக் கண்ணாடிகளுமாகப் பெண்கள்; வகிட்டில் சிந்தூரங்கள் விளக்கடியில் வரும்போதுதான் தெரிகின்றன. யார் யாரோ நடைபாதையில் நிழலுருவங்களாய்த் தெரிகின்றன. அவன் இல்லை. அவள் தன்னை மறந்து நிலைபுரியாக் கனவுலகில் நிற்கும் உணர்வோடு நிற்கிறாள். வங்க மண்ணின் தலைநகரில், உயிரும் உடலுமாகக் கரைந்து போய்க் கொண்டிருப்பது போல தன்னை மறந்து நிற்கிறாள். நூறுநூறாய் தோன்றிய இடங்களிலெல்லாம் எளியவரின் குடியிருப்புக்கள். போதும் போதாத கந்தல், வற்றிய பைகளாய் மார்பகங்கள், வாழ்க்கைச் சுமையைச் சுமந்து சுமந்து காய்த்துப் போன தடங்களாய் ஒளியிழந்த மக்களைச் சுமந்து கொண்டு சாலைகளில் திணறும் ஊர்திகள் - 'ஹா...' என்று வானம் சீறுவது போல் என்ன ஓசை? சாலையில் தாறுமாறாய் ஓடும் சிதறல்கள், தெருவிளக்குகள் ஏனோ எரியவில்லை? வெள்ளைச் சடலம் நடைபாதைக்கு இழுத்துவரப் படுகிறதா? கூட்டம்... யாரோ ஊதுகுழலை ஊதுகிறான். உடலும் உணர்வும் சில்லிட்டுப் போகின்றன. கனவா? நினைவா? என்ன?... "க்யா...க்யா பாய்ஜி?" பனிப் போர்வையோடு திகில் போர்வையும் சுருள விழ, முச்சந்தியை வெறிச்சிட வைத்துவிட்டு விரையும் மனிதத் துளிகள்... "ஏ, யமு? உனக்கு எத்தனை நாள் சொன்னாலும் தெரியாது? இங்கே வந்து வேடிக்கை பார்க்கச் சிறு பெண்ணா நீ...?" "ஆ...அந்த டிராஃபிக் கான்ஸ்டபிள்..." "உஷ், வாயை மூடிக் கொண்டு வா..." அவள் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அவன் சந்துக்குள் நுழைகிறான். நகரின் மையப் பகுதி அது. சந்துக்குள் முடுக்காய்ச் செல்லும் பழைய நாளையக் கட்டிடம். அம்மாவின் மூலமாகக் கிடைத்த ஒரு நண்பனின் இருப்பிடம். அவன் மனைவி பிரசவத்துக்குச் சென்றிருப்பதால் அதில் ஒரு பகுதியை இந்தப் புதுத் தம்பதிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறான். மரத்தட்டுப் போட்ட ஏணிப் படிகள் தம்தம்மென்று அதிர மேலே வருகின்றனர். அவள் பரபரப்பாகக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே செல்கிறாள். "உனக்கு ஏன் நான் சொன்னால் லட்சியமில்லை; உனக்கு எத்தனை நாட்கள் நான் இம்மாதிரி நேரத்தில் வாசலில் நிற்காதே என்று சொல்லியிருக்கிறேன்?" காலணியை ஒரு மூலையில் அவிழ்த்தெறிகிறான். உடுப்பை மாற்றிக் கொள்ளும் போது அந்தச் சினம் வெளியாகிறது. "மன்னித்துக் கொள்ளுங்க. எனக்கு அந்த நேரத்தில் உள்ளே நிலை கொள்ளலே..." கண்ணீர் குபுக்கென்று உடைகிறது. உண்மையில் நாள் முழுதுமே நிலை கொள்ளவில்லை என்று எப்படிச் சொல்வாள்? அவன் அவளை அருகே இழுத்து அணைத்துக் கொள்கிறான். அவனுக்காக ஒரு பெண்... ஒரு பெண்ணா?... யமுனா? அணையை உடைத்துக் கொண்டு பேச்சு அலையலையாக எழும்புகிறது. "நான் இவ்வளவு பயங்காளியாக எப்படியானேன்? எனக்கே என்னைப் புரியலே? பகலெல்லாம் பஸ்திகளில் சுற்றிச் சுற்றி நடக்கிறேன். ஐயோ, மக்கள் எவ்வளவு... எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்! நேரமானதும், நீங்க எஸ்பிளனேட் கும்பலில் பஸ் கிடைக்காமல் நிற்கிறீர்களோ? இல்லே, பஸ் நகரமுடியாமல் நிற்கிறதோ? குண்டு வெடித்ததோ? அப்படியோ இப்படியோன்னெல்லாம்..." "உஷ். அசட்டுத்தனம். இந்த நகரத்தில் நீ ஒருத்திதானா அதிசயமாய் இப்படிப் புருஷனை வேலைக்கனுப்பிவிட்டு நிற்கிறாய்? ஐயே... அட எம்.ஏ. படிச்ச லட்சணமே!..." "இன்றைக்கு, அதோ நாலாவது வரிசையில் தெரியவில்லை அந்த மாடி. முக்கர்ஜி வீட்டுக்குப் போலீஸ் வந்தது. சோதனை போட்டதில் வெடிகுண்டுகள் செய்யும் சாமானெல்லாம் இருந்ததாம். ஒரு பையன் வெடவெடவென்று இருப்பானே, கன்னங்களில் பருவோடு? அசுடோஷ், அவனைக் கூட்டிப் போயிற்று. ஒரே களேபரம். ஐயோ...! காந்திஜி கண்ட பாரத நாடா இது?" "இத பார் யமுனா. இதெல்லாம் மறந்து விட்டு இப்ப டீ கொண்டு வருவாயாம்! நான் உனக்கு ஒரு சந்தோஷ சமாசாரம் சொல்லப் போகிறேன்!" "எனக்கு மனசே சரியாக இல்லை. அந்த... அந்தப் போலீசுக்காரன்; அவன் வீட்டில் மனைவி, அவன் வேலை முடிஞ்சி வரப்போறான்னு எப்படிக் காத்திருப்பாள்! ஆமாம், ஒருவேளை அசுடோஷைப் பிடித்துப் போனதன் எதிரொலியா அது? யார் என்ன பண்ணினார்களென்றே புரியவில்லை! ஹான்னு சத்தம் கேட்டது, சரசரன்னு வெள்ளையா, இழுத்திட்டு வந்தார்கள்... கத்தி வீசியா கொன்றது?" "நீ இப்போது டீ கொடுக்கப் போறியா, நானே போடணுமா?" அவள் உள்ளே வந்து ஸ்டவ்வை மூட்டித் தேநீருக்குப் பாத்திரத்தை வைக்கிறாள். கிண்ணங்களில் தேநீரை வார்த்து எடுத்துக் கொண்டு வரும்போது அவன் மோடாவில் உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். கண்ணீர் கோத்த விழிகள்; சுருங்கிய இதழ்கள்; அவள் மணவாழ்வின் தலைவாயிலில் நிற்கும் புதிய மனைவியாகவே தோன்றவில்லை. சில நாட்களில் பேயறைந்தாற் போல் காண்கிறாள்! சில நாட்களில் கனவில் நடப்பது போல... ஒன்றரை மாச காலமாகவில்லை. அவர்கள் அங்கு வந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அவனும் அவளுமாக அந்தப் பெரிய நகரத்தின் சிறப்பிடங்களைக் காணச் சென்றார்கள். அவள் எங்கு சென்றாலும் சோக நிழலைச் சிரமப்பட்டுச் சுமந்து கொண்டுதான் வருகிறாள். அவன் தேநீர்க் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு அவள் கையை ஆதரவோடு பற்றி அழுத்துகிறான். "யமு, நாம் இந்தச் சனியன் பிடித்த ஊரைவிட்டுப் போகிறோம். உனக்குச் சந்தோஷமாக இருக்கும். நாம் பாட்னா கிளைக்குப் போகிறோம்..." "ஓ... ஆமாம், போலீசுக்காரனை நின்ற நிலையில் இப்படிக் கொலை செய்தது யாராக இருக்கும்? என் கண் முன் இன்றைக்கு நான் ஒரு கொலை நடந்ததைப் பார்த்தேன். உயிர்க் கொலை... பாருங்க. எனக்கு உடம்பு சிலிர்க்கிறது." அவன் அந்தக் கையை ஆத்திரத்துடன் உலுக்குகிறான். "போலீசுக்காரன் நாசமாகப் போகட்டும். எல்லாம் லஞ்சக் கழுதைகள். நான் சந்தோஷச் செய்தி சொன்னேனே யமு..." அவன் முகம் மிக அருகில் வருகிறது. "என்னோடு மூன்று பேருக்கு செலக்ஷன் ஆச்சே? அதில் நான் ஒருத்தன் தான் வெளியூர் போறேன். அங்கே இந்த மாதிரித் தொந்தரவெல்லாம் கிடையாதாம். நான் இங்கேயே போட்டிருவாங்களோ என்னமோ, வீடு வேறு தேடணுமேன்னிருந்தேன், உனக்குச் சந்தோஷமாயில்லே?" "எனக்குச் சந்தோஷமாக இருக்கவே மறந்து போனாப் போல இருக்கு. எனக்கு என்னை... நான் அமைதியாக இருக்கவே முயற்சி செய்கிறேன்... நேற்றுக் காலையில் நீங்கள் ஆஃபீசுக்குப் போனதும், பத்துப் பையன்கள் கும்பலாய் வந்தார்கள். பக்கத்துப் பஸ்திப் பையன்கள் தான். "சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம் பஹன்ஜி கலெக்ஷனுக்கு வந்தோம்" என்றார்கள். நான் ஒரு அஞ்சு ரூபாய் கொடுத்தேன் போய்விட்டார்கள். அவர்கள் கீழே, இதோ பெரிய வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவ, அதான் காஷ்மீர்க்காரியில்லே அவ; என்ன சொன்னாளோ தெரியலே, ரூபாய் ஐம்பதுக்குக் குறைஞ்சு எடுக்க மாட்டோம்னு ரகளை பண்ணினார்கள். அவளோ கதவைச் சாத்திக் கொள்ள 'நாளைக்குப் பார்த்துக் கொள்கிறோம்'னு கருவிக் கொண்டு போனார்கள். வீட்டுக்காரனானால், குண்டு வீசுவார்களேன்னு இவளை வங்காளியில் திட்டித் தீர்த்தான். இன்றைக்குப் பாருங்கள், பயந்து கொண்டு வாசலில் ஒரு குண்டனைக் காவல் போட்டிருக்கிறாள்." "ஒழியட்டும் யமு. நாம் இந்த ஊரைவிட்டுப் போவது உனக்குச் சந்தோஷமாக இல்லையா?" "நாம் இந்த ஊரைவிட்டுப் போகிறோம். ஆனால் பெரிய நகரத்தில் நான் பார்த்து, பயந்து போன துயரத்தின் நினைவுகளும் போய்விடுமோ? போர்க்களத்தில் மயங்கி, புறமுதுகு காட்டும் கோழை போல என்னை நினைத்துக் கொள்கிறேன்..." 'இந்த பொண்ணுக்குப் புத்தி சரியாகத்தான் இருக்கிறதா' என்று துரை ஐயுறுகிறான். "போர்க்களமாவது, பரங்கிக் காயாவது? பெரிய பெரிய அரசியல்வாதிகளும் சமுதாய வீரர்களும் புகமுடியாத பிரச்னை இந்த ஊர்ப் பிரச்னை. நீயும் நானும் இங்கிருந்து என்ன செய்ய முடியும் யமு?..." "காந்திஜியைக் கடைசியாக சந்தித்தாளே மார்கரெட்டு வொயிட் என்ற பத்திரிகைக்காரி, அவள், "அணுகுண்டுக்கு முன் உங்கள் அஹிம்சை என்ன செய்ய முடியும்! அதை அதே வகையில் தானே எதிர்க்க வேணும்" என்று கேட்டாளாம். அப்போது "அஹிம்சைத் தத்துவத்தில் என் நம்பிக்கை அளவு கடந்தது. அந்த நம்பிக்கை என்ற மகாசக்தியே, உயர அணுகுண்டை போடவந்த எதிரிக்கு என் இதயத்தை எட்ட வைக்கும்" என்றாராம் காந்தி மகாத்மா. அந்த மகா சக்தியை நான் நினைத்துப் பார்க்கிறேன்; தெருமுனையில் வந்து நிற்கிறேன். பஸ்திகளில் உள்ள ஏழைகளுக்கு நான் ஒரு சகோதரியாக உதவப் போகிறேன். நான் இதுவரை இப்படிக் கண்முன்..." அவன் ஆத்திரத்துடன் அவள் வாயை இறுகப் பொத்துவது போல் முத்தமிடுகிறான். குத்தப்பட்ட புலிபோல் கிளர்ந்து வரும் வேட்கை... உடலினால் துய்க்கும் இன்பங்களனைத்தும் நியாயமற்றவை என்ற மாதிரியானதொரு கருத்துகளிடையே அவள் ஒதுங்கி வளர்ந்திருக்கிறாள். அந்த வகையில் தன்னை மிக உயர்வாகக் கருதிக் கொண்டிருக்கிறாள். இந்துநாத்தின் விரசமான கண்சிமிட்டலும் சிரிப்பும் அதனாலேயே அவளுக்கு வெறுப்பூட்டின. ஆனால், இந்த மணவாளன் தன்னிடம் நியாயமான உரிமைகளைத்தான் எடுத்துக் கொள்கிறான் என்றாலும், ஒரு குற்ற உணர்வு. உதடுகளை அழுந்தத் துடைத்துக் கொள்ளச் செய்கிறது. "அப்படியானால், நீ என்னோடு வரப் போறதில்லையா யமு?" கிணற்றுக்குள்ளிருந்து மேலே வெளிச்சத்தைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாள். தான் மனைவி... எதிரே நிற்கும் துரை வெறும் துரையல்ல... அவளிடம் முழு உரிமைகளும் கொண்ட கணவன். இந்த நிலையில் அவளுக்கும் சில கடமைகள் உண்டு என்றெல்லாம் நினைவுகள் முட்டி மோதுகின்றன. "என்னை எதிர்நோக்கி, முச்சந்தியில், அபாயமான நிலையிலும் நீ துடிப்புடன் காத்திருக்கிறாய் என்றறியும் போது உன்னை அங்கேயே நெஞ்சோடு நெஞ்சம் கூழாக அழுத்திக் கொள்ள வேணுமென்று துடிதுடிக்கிறது. ஆனால் உன்னருகில் வந்ததும், அதெல்லாம் உண்மையில்லாத பிரமையோன்னு தோன்றுகிறது யமு! உனக்கு... உனக்கு என்னைப் பிடிக்கலையா?" இதயத்திலிருந்து வெறும் துடிப்புகளாய் மட்டும் இக்கேள்வி அவள் செவியில் மோதுகிறது. அவளுடைய விழிகளில் மடை திறக்கின்றன. "நீ... வருத்தப்படக்கூடாது, யமு... உனக்கு என்னைப் பிடிக்காமல்..." "அப்படியெல்லாம் நினைக்காதீர்கள்..." அவன் கைகளை எடுத்துக் கண்களில் வைத்துக் கொண்டு கண்ணீரை அடக்கிக் கொள்கிறாள். "நீ தேவையில்லாமல் பூப்போன்ற மனசை வருத்திக் கொள்ளாதே யமுனா. நாம் பிறருக்குத் தீமை நினையாமல் நம்மளவுக்கு நேர்மையாக வாழ்வதே இக்காலத்துக்கு ஏற்ற சேவை. பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் செய்ய முடியாததையா நம்மால் செய்ய முடியும்? யமுனா நீ...நீ... குருடனுக்குக் கிடைத்த ஒளி. எனக்கு... என் வாழ்விலே கிடைத்த புதையல். உனக்கு ஏதேனும் நேர்ந்தால் என் உலகமே அழிஞ்சு போகும். யமு... நீ அதற்கா ஆசைப்படுறே!" "திருமணம் சுதந்திரங்களுக்குக் காவலா? தடையா? காவலுக்கும் தடைக்கும் வித்தியாசம் உண்டு இல்லையா?" "நமக்கு ஒரு துன்பமும் வராது. நாம் இருவரும் மேலானவர்களாக இருக்கப் போகிறோம். நீ கண்ணீர் விடக் கூடாது..." அவள் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொள்கிறாள். சமையலும் சாப்பாடும் எதிரொலிகள் இன்றியே முடிகின்றன. ஒரு பெரிய அறையும் சமையல் அறையும் தான், மொத்தமாக இல்லத்தின் அளவு. சமையல் அறை மிகவும் சிறியது. மண்ணெண்ணெய் அடுப்பும், சில தட்டுமுட்டுகளும் தான் சாமான்கள். பெரிய அறையில் இரண்டு பெட்டிகளுக்கு மேல் சுருட்டி வைக்கப் பெற்ற படுக்கைகள். ஒரு பெட்டி சர்க்கா. கள்ளிப்பெட்டித் தட்டுகளில் சில புத்தகங்களைக் கொண்ட அலமாரி. சுவரில் ஒரு காந்தி படமும் ராமர் பட்டாபிஷேகக் கோலப் படமும் தொங்குகின்றன. ஒரு சிறு தட்டில் ஊதுபத்தி செருகும் பீங்கான் யானையும் சிறு சட்டங்களில் இணைந்த இராமகிருஷ்ணர், சாரதாமணி படங்களும் இருக்கின்றன. துரை ஊதுபத்திகளைக் கொளுத்தி வைக்கிறான். படுக்கைகளை விரித்துக் கொசுவலை கட்டுகிறான். இந்த ஒரு மாச காலப் புதிய இல்லறத்தில் அவன் பங்கெடுத்துக் கொள்ளும் பணி அது. இருவரும் கொசு வலைக்கு வெளியே நாட்டு நடப்பைப் பற்றியோ, பத்திரிகை, புத்தகங்களைப் பற்றியோ பேசுவார்கள். பேச்சு எங்கு தொடங்கினாலும் கல்கத்தா நகரக் குடிமக்களின் சங்கடங்களில் வந்துதான் முடிவது வழக்கம். அன்று துரை அவள் உட்கார்ந்து பேசும் மனநிலையில் இல்லை என்று உணர்ந்தவனாய், கொசுவலைக்குள் சாய்ந்தே, அலுவலகத்திலிருந்து கொண்டு வந்த பொறிகள் சம்பந்தமான விளம்பரப் புத்தகம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வெகு நேரமான பின்னரே அவனுக்கு யமுனா அருகிலில்லை என்பதே புரிகிறது. புத்தகத்தை டப்பென்று மூடிவிட்டு விலுக்கென்று எழுந்திருக்கிறான். சமையலறையில் குறுகிய பரப்பில், கால்களையும் நீட்ட முடியாமல், கண்மூடி - "யமு..." "..." "யமு...!" தோளைப் பற்றி அவன் உலுக்கினான். "இது என்ன அசட்டுத்தனம் யமு? நீ... நீ... ஏன் இப்படி இருக்கிறாய்?" "எனக்கு மனசு சரியில்லே. நான் இன்னிக்கு இங்கேயே, இப்படியே படுக்கிறேன்!" துரை அயர்ந்து போகிறான். "நான் என்ன, அவ்வளவு மோசமானவனா?" அவள் தலையே நிமிரவில்லை. "யமுனா, நான் இன்னிக்கு எவ்வளவோ சந்தோஷமாக வீடு திரும்பி வந்தேன்... போகட்டும், ஆனாலும் நீ நினைக்குமளவுக்கு நான் கடையனாக நடந்து கொள்ள மாட்டேன். வசதியாகப் படுக்கையில் வந்து படுத்துக் கொள்!" தாம்பத்தியப் பிணைப்பின் மெல்லிய இழைகளைப் பற்றிய பிரக்ஞையே அவளுக்கு வரவில்லை. அவை கண்ணுக்குத் தெரியாமல் சிக்கலாகி ஊடறுபட்டுப் போகக்கூடும் என்ற உணர்வு எப்படி வரும்! தான் செய்யக் கூடாததொன்றைச் செய்துவிட்ட குற்ற உணர்வில் தான் இப்போதும் குறுகுகிறாள். "எனக்கு வசதியெல்லாம் வேண்டாங்க. இந்த மூணு நாலு மாசத்தில் நான் வேண்டாத வசதிகளெல்லாம் பழகிட்டேன். முன்போல பிரார்த்தனை செய்யக்கூட மனசு பொருந்தல்லே..." "யமுனா, லட்சியம் என்பது தொலைவில் தெரியும் அம்புலி, அது வழி காட்டிக் கொண்டிருக்கும். ஆனால் எல்லாருமே அதைப் பிடிக்கணும்னு நினைச்சுச் செயல்படணும்னா அது பயித்தியக்காரத்தனம் தெரியுமா?" "அப்படியில்லே. என் பிரார்த்தனை இந்நாட்களில் வலிவுள்ளதாக இருக்கவில்லை. இல்லாவிட்டால் இன்னிக்கு முச்சந்தியில் என் கண்முன் இப்படி ஒரு கொலை விழுந்திருக்காது!" அவன் வாயடைத்துப் போய் நிற்கையிலே அவள் மனம் தொடர்ந்து தன் கொடிகளில் செல்கிறது. உண்மையில் அவள் துரையை எதிர்பார்த்து ஒருவகை சுயநலத்துடனே தெருவில் நின்றாள். தெருவில் நிற்கையில் அவள் அச்சத்தை வெல்லவில்லை; தனியே நிற்பதாகவே தோன்றியது. அவன் வருகிறானோ என்ற தாபத்தில் அந்த அச்சத்தைத் துடைத்துக் கொண்டாள். அவன் வீடு திரும்பியதும் அவள் எல்லாவற்றையும் மறந்து அந்தச் சின்னஞ்சிறு இன்ப உலகக் களியாட்டத்தில் சுற்றுப்புறத்தை மறந்து போகிறாள். பிறகு மீண்டும் அவன் பிரிந்து சென்ற பிறகு தனிமை சூழ்கிறது... "உள்ளே வந்து வசதியாகப் படுத்துக்கோ யமுனா. உன்னால் என்னை நம்ப முடியலேன்னா, நான் வேணா வெளியே வராந்தாக்குப் போயிடட்டுமா?" "...வேண்டாம், வேண்டாங்க. நீங்க அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. நான் என் மனசை இன்னும் தூய்மையாக்கிக் கொள்ளணும்னுதான் நினைக்கிறேன்." |