உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
16 லால் பஜார், வணிகப் பெருவீதியில் அவர்கள் ஏறியிருக்கும் வாடகைக்கார் ஊர்ந்து செல்லவும் வழியின்றி நிற்கிறது. அவர்களுக்கு இரவு ஒன்பதரை மணிக்குத்தான் வண்டி, என்றாலும் மாலை ஐந்து மணிக்கே அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்கள். அவர்களுடைய இரண்டு பெட்டி படுக்கைகளும் அற்பமான தட்டுமுட்டுக்களும் பின்புற டிக்கியில் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவள் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் பின்னே நெடுக வண்டிகள் நிற்பது தெரிகிறது. முன்னே மலையாய் ஒரு 'டிரக்' நிற்கிறது. ஒரு அங்குலம் அந்த டிரக் நகர்ந்தால் இந்த வாடகைக் காரும் நகருகிறது. பின்னே சாரியாக நிற்கும் வண்டிகளும் முன்னேறுகின்றன. வரிசையாகக் கடைகளுக்கப்பால் சரக்குச் சேமிக்கும் கிடங்குகள். கிடங்குகளுக்குப் பின் கங்கைத் துறைகளோ? பீஹாரிக் கூலிகள் பெரிய பெரிய சுமைகளை லாரிகளிலிருந்து இறக்குகின்றனர்; ஏற்றுகின்றனர். பாரவண்டி மனிதர்கள் மாடுகளைப் போல் இழுக்கின்றனர். எத்தனை பெரிய வணிகத் துறைமுகம்! தேயிலை, சணல் போன்ற அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பொருள்கள் இந்தப் பெருநகரின் துறையிலல்லவா குவிகின்றன! எத்தனை எத்தனை காலமாக இந்தக் கிட்டங்கிகளில் மனித ஆற்றலின் வெம்மைத் துளிகள் வீழ்ந்து உப்பேறிக் கிடக்குமாக இருக்கும்! உழைப்பின் வெம்மையிலும் நெருக்கும் நெரிசலிலும் பொரிந்து பொரிந்து மக்கள் பெருக்கம் இன்னமும் பல மடங்குகளாகும் சுமையைத் தாங்க முடியாமல் இந்நகர், ஆங்காங்கு இரத்தம் கக்கும் வறுமையுடன்... நோவுடன் தள்ளாடுகிறதா? நெருக்கமாகக் கடைகள், முஸ்லீம் மக்கள் வாழும் பகுதி போலும்; ஒரு பொறி தெறித்தால், ஊரையே சூறையாடித் தீர்க்கும் காற்று சேரும் பகுதி இதுதானோ? அம்பாரம் அம்பாரமாய்ச் சேமியாவும் இனிப்பு மிட்டாய்களும் செய்து குவித்திருக்கும் கடைகள் தொடருகின்றன. ஒரு கடையில் அழுக்குப் பனியனுடன் ஒரு சிறுவன் மஞ்சள், ஊதா, ரோஜா நிறங்களில் தட்டுக்களில் சேமியாவை வைத்துப் பூக்களைப் போல் அழகு செய்கிறான். அவன் உடலில் கருகருவென்று புகை எண்ணெய் வடிவது போல் அழுக்கும் வியர்வையும் தெரிகின்றன. பையனின் கலா ரசனையை அந்த மூச்சு முட்டும் நெரிசலில் கண்டு யமுனா உளம் கசிகிறாள். "இதெல்லாம் சேமியாவா? இவ்வளவு தினுசு?" "ஆமாம் ரம்சான் தவசு மாசம். இதான் சாப்பிடுவாங்க போலிருக்கு!" என்று கூறுகிறான் துரை. "ஓ! அதுதான் இவ்வளவு வண்ணத்துணிகள் நடைபாதையெங்கும் கடை விரித்திருக்கின்றனவா? கண்களைக் கவரும் வண்ணப் பட்டுக்களில் கால்மூடும் உடுப்புக்கள், அங்கிகள், தொப்பிகள், சப்பாத்துகள், பெண்களின் முகமலர் மறைக்கும் மெல்லிய நைலான் துப்பட்டாக்கள்... குழந்தைகளுக்குத் தாம் எத்தனை வகை உடைகள்; சின்னஞ் சிறு பெண் குழந்தைகளுக்கும் துப்பட்டாக்கள். ஜிகினா வேலை செய்த போலிப்பட்டு உடுப்புக்கள். நடைபாதையில் குவிந்திருக்கும் இந்த நேர்த்திகளெல்லாம் சமுதாயத்தின் கீழ்ப்படிகளில் உடலுழைத்துப் பிழைப்பவர்களின் பணப் பைகளுக்கு எட்டக் கூடியவை என்று தான் அவள் நினைக்கிறாள். வண்டிகளில் வரும் சீமான்கள் குளிர்பதனம் செய்த பெரிய பெரிய கடைகளை நாடுவார்கள். வண்டி, நிற்கும் இடத்துக்கருகில் ஒரு முதியவர் வெகுநேரமாக ஒரு சிறுமிக்குரிய சட்டை, துப்பட்டாவைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார். விலை கேட்கிறார். கடைக்காரன் முதலில் ஆர்வத்துடன் பல நிறங்களை விரித்துப் போட்டு விலை கூறுகிறான். பிறகு அவனுக்கே அலுத்துவிட்டது போலும்! வேறு ஆட்களுக்காகப் பார்க்கிறான். முதியவரோ, அந்தச் சட்டையையும் தடவி, தன் பணப்பையையும் பார்த்து நாலரை ரூபாயை எண்ணி மலைத்தாற் போல் நிற்கிறார். இத்தனை வண்ணங்களும் நேர்த்திகளும் அத்தனை ஏழைகளுக்கும் போதா. ஆனால் விலையாகாமலேயே குவிந்திருக்கின்றன. சாணியையும் மண்ணையும் பிசைந்து உருட்டிக் காய வைத்து குடும்பத்துக்கே உயிர்ச்சூட்டைப் பெற விழையும் அத்தனை ஏழைகளும், வறட்டு ரொட்டியையோ, ஸத்துமாவையோ குடலில் இட்டு நீரை நிரப்பி உயிரின் ஈரம் காயாமல் வைத்துக் கொள்ளும் அத்தனை ஏழைகளும், அழுக்குக் கந்தல்களால் மானத்தையும் குளிரையும் ஒருங்கே போர்த்துப் பாதுகாத்துக் கொள்ள முயலும் அத்தனை ஏழைகளும், இந்தக் குவியல்களை வாங்கக் கூடுமானால்...? இரண்டு முனைகளும் ஏன் கூடவில்லை? தொழிற்பெருக்கம், பணப்பெருக்கம், மக்கள் பெருக்கம் மூன்றும் சீரில்லா வீக்கங்களாய்ப் புழுங்கி மூச்சுத் திணற முடியாமல் தன்னை அணுஅணுவாய் இழந்து கொண்டிருக்கும் ஒரு பெருநகரத்தை அந்தப் பெரிய ரவீந்திர சாரணியில் வண்டி ஊர்ந்து சென்று விளக்கிக் காட்டுகிறது. "நாம் வீட்டைவிட்டுக் கிளம்பி இரண்டு மணி நேரமாச்சு யமு. இன்னும் ஹௌரா பாலம் ரொம்ப தூரம் இருக்கு!" என்று அலுத்துக் கொள்கிறான் துரை! பனிப்படலமா, ஆலைப் புகைப்படலமா, மக்களின் பெருமூச்சுக்கள் எழுப்பிய படலமா என்று புரியவில்லை. ஹௌரா பாலத்தின் கம்பீரமான மேல் தூண்கள் உருப்புரியாத கனவுத் தோற்றமாகத் தெரிகின்றன. ஒரு காலத்தில் எழில்மிகு சுந்தரியாய் இந்நகரின் பெருமையை விளக்கிய பாலம் இன்று கழிந்த காலத்தின் சில எச்சங்களை நினைப்பூட்டும் அழகுகளில் பிதுங்கி நிற்கும் துயரச் சுமையாய் மனிதச் சுமைகளைச் சுமந்த வண்டிகளுடன் தோற்றமளிக்கிறது. கீழே ஓடும் சாசுவதமான உண்மையாகிய சத்திய கங்கையின் எழில், இந்த வீக்க நோய்களின் புழுதிப் படலங்களில் புலப்படாமல் மறைந்திருக்கிறது. இந்தப் புழுக்களில் வெய்துயிர்த்த வானும் மறைகிறது. ஒளியும் குழம்புகிறது. முன்னே பின்னே, அண்டையில் மயிரிழை அசைந்தால் மோதல்; உடனே நெருப்புப் பொறிகள். வண்டிகளில் காட்சியளிக்கும் மக்களெல்லாம் அன்றாட நகர வாழ்க்கையாம் பொதியைச் சுமந்து மந்தைமாடாய் ஒளியிழந்தனரோ? வண்டியோட்டிகள் கவனம் இம்மி பிசகினால் காலனுக்கு வரவேற்பளித்து விடுவார்கள். ரெயில் நிலையத்தை அடையும் போது, தாயின் கருப்பையை விட்டு வெளிவந்தாற் போலிருக்கிறது. சாமான்களுடன் ரயிலடி மேடையிலேயே வந்து உட்காருகின்றனர். ரெயில் நிலையமா அது? உலகச் சந்தையின் ஒரு பகுதி பெயர்ந்து கொண்டாற் போலிருக்கிறது. என்ன கும்பலம்மா! பனி வாடையில் குறுகிக் குறுகி உட்கார்ந்திருப்பவர், படுத்திருப்பவர், அபின், கஞ்சா, மயக்கத்திலிருப்பவரோ என்று ஐயுறும் வண்ணம் நீட்டிக் கிடக்கும் வெள்ளைத் தோல் யுவர்கள், பழம் விற்பவர்கள், தேநீர் விற்பவர்கள், இனிப்பு விற்பவர்கள், பொம்மை விற்பவர்கள், புத்தகம் விற்பவர்கள், காலணி மெருகு போட வருபவர்கள், உடல் மெருகேற்ற வருபவர்கள், பெட்டிகள், படுக்கைகள், மூட்டைகள், தட்டுமுட்டுக்கள், பல்வேறு மொழிகள், உடைகள், கூச்சல்கள் பலநூறு குதிரை ஆற்றல்களுடன் ஓங்கரித்துக் கொண்டு பூதம் பூதமாக வரும் போகும் வண்டிகள்...! "இவ்வளவு கூட்டம் ஏன் இன்னிக்கு?" "இன்னிக்கா? இது நித்தியக் கூட்டம். நீ ஸியால்தா ஸ்டேஷன் பார்க்கலியே? அங்கே இருபத்து மூன்று வருஷக் கூட்டம். இப்ப சாமான்களைப் பத்திரமாகப் பார்த்துக்கோ; குப்தா வருவார். நான் போய்ச் சாப்பிட ஏதேனும் வாங்கி வரேன்..." துரை போகிறான். குளிர் விர்ரென்று அடிக்கிறது. கதர்ப் போர்வை அந்தக் குளிருக்குப் போதுமானதாக இல்லை. இழுத்துப் போர்த்துக் கொள்கிறாள். வண்ணக் கலவையாய்ப் போய்க் கொண்டிருக்கிறது கூட்டம். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் பிரயாணிகள்தாமா இல்லையா என்று புரியவில்லை. இருகைத் துடைப்பங்களால் குப்பையைக் கூட்டிக் கொண்டு துப்புரவாளர் போய்க் கொண்டிருக்கின்றனர். அந்தப் பேரியக்கத்தினிடையே, பறக்கும் தும்பியின் கால்களைக் கட்டி வைத்தால் சிறகுகளை மட்டும் அடித்துக் கொண்டு பறக்க முடியாமல் துடிப்பதைப் போன்ற உணர்வில் சிக்கிப் பிரமை பிடித்தாற் போல் உட்கார்ந்திருக்கிறாள் அவள். ஆங்காங்கு நிராசை படிந்து தொங்கும் முகத்துடன் சில இளைஞர்கள் கண்களில் படுகின்றனர். ஓர் இளைஞன் அவளருகிலும் வருகிறான். மெழுகு காகிதத்தாலான குறிப்பேடு - அதில் எழுதிக் காட்டிவிட்டு, அதன் அட்டையில் தொங்கும் குஞ்சக் கயிற்றை விசைபோல் இழுக்கிறான். முடியுள்ள துடைப்பான் எழுத்தை அழித்து விடுகிறது. அதை அவளிடம் அவன் வேண்டுமா என்று கேட்பது போல் காட்டிக் கொண்டு நிற்கிறான். விலையை மட்டும் வாய் திறந்து ரூபாய் ஒன்றரை என்று சொல்கிறான். அவள் வேண்டாம் என்று சொல்ல மனமின்றியும் வேண்டுமென்று வாங்க மனமின்றியும் தயங்குகையில் அவன் அவளைக் கடந்து செல்கிறான். பலரும் அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சிலர் அவனை மீண்டும் எழுதச் சொல்லி அழித்துப் பார்க்கின்றனர். ஆனால் வாங்க முன் வரவில்லை. வாங்காததற்காக அவன் முகம் சுளிக்கவில்லை. எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் அவன் கூட்டத்தில் மறைந்து போகிறான். அடுத்து ஒரு பேனா விற்கும் இளைஞன் வருகிறான். பால்பாயின்ட் பேனா. அவளிடம் நிற்கிறான். "என்ன விலை?" "நாற்பது பைசா..." யமுனா உடனே நாற்பது பைசாவைக் கொடுத்து ஒன்று வாங்குகிறாள்; நன்றாக எழுதுகிறது. அப்போது துரை சுடச்சுடப் பூரி கிழங்கும், தண்ணீருமாக வருகிறான். "இத பாருங்க, பேனா வாங்கினேன்; நாற்பது பைசா; நல்லா எழுதுகிறது! இவங்கல்லாம்தான் வேலையில்லாப் பட்டதாரிகளோ?" என்று கேட்கிறாள் மெதுவாக. "இருக்கும். ஆறிப்போகிறது சாப்பிடு இதை. நான் அங்கேயே சாப்பிட்டு விட்டேன்..." பகலெல்லாம் வீட்டைச் சுத்தமாக்கி, சாமான் கட்டும் வேலையில் சாப்பிடப் பொருந்தவில்லை. இப்போது உணவைக் கண்டதும் பசி தீவிரமாகக் கிளர்ச்சியுறுகிறது. அவள் இரண்டு வாய் கூடப் போட்டுக் கொள்ளவில்லை. ஒரு பசித்த குழந்தை அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பது கண்களில் படுகிறது. அவசரமாக, முடித்துக் கொண்டதாகப் பாவனை செய்துவிட்டு, தொன்னையோடு கொடுத்து விடுகிறாள். நல்ல வேளையாக, துரை கவனிக்கவில்லை. குப்தா வந்திருக்கிறார் ஒரு இனிப்புப் பொட்டலத்துடன், வழியனுப்ப. அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறார். "நமஸ்தே!" "நமஸ்தே!" "இங்கு விருந்து கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். பாட்னாவில் வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று சிரிக்கிறார். அவர் தாம் ஒரு நண்பரின் முகவரி கொடுத்திருக்கிறார். அங்கே முதலில் தங்கிக் கொண்டு வீடு பார்க்க வேண்டும். வண்டி குறித்த நேரத்திற்கு மேடைக்கு வந்துவிடுகிறது. பெட்டி தேடி, இடம் தேடி சாமான்களை அவர்கள் ஏற்றுகின்றனர். முதல் வகுப்பு என்பதையே அப்போதுதான் அவள் உணர்ந்தாற்போல் நிற்கிறாள். "ஃபர்ஸ்ட் கிளாஸா!" "பின்னே, கம்பெனியின் உயிர் நாடியான விற்பனை இன்ஜினீயர்! மூணாங்கிளாஸா? தகராறு பண்ணாமல் ஏறு" என்று துரை அவள் செவிகளில் கிசுகிசுக்கிறான். இந்தப் பிரயாண சுகம் இதுவரை அவள் நுகராத ஒன்று. அவள் வாயடைத்துப் போகிறாள். பிறகு அவளுக்கு எதுவுமே நினைவில் நடப்பதாகத் தோன்றவில்லை. தன்னுடைய உள்மனதால் ஏற்க முடியாத வாழ்க்கையைத்தான் அவள் வாழ வேண்டுமா? அந்தக் கூட்டம், வண்டிகள், இன்னும் வழியனுப்ப வரும் அலுவலக நண்பர்களுடன் பேசும் துரையின் உற்சாகமான குரல் - எல்லாம் ஆழமாகவே பதியவில்லை. தூக்கக் கலக்கத்துடன் திரைப்படம் பார்ப்பது போல் நோக்கிக் கொண்டிருக்கையில் அவளுடைய செவிகள் சிலிர்க்க, அவன் குரல் கேட்கிறது. "வணக்கம், வீட்டுக்குப் போனேன். எனக்கு ஜோசஃப் சொல்லித்தான் சமாசாரமே தெரியும்! வீட்டில் விசாரித்ததில் நீங்கள் ஸ்டேஷனில்தானிருப்பீர்கள் என்று தகவல் சொன்னார்கள். யமு, எங்கே யமு?..." வண்டிக்குள்ளிருந்து மழை காலத்து வானம் போன்ற முகத்துடன் அவனை அவள் பார்க்கிறாள். அவன் - சுதீர், எப்போதும் போல் கேலியும் சிரிப்புமாக விளங்குகிறான். கோடு போட்டதொரு சட்டை! மடிப்பு அலுங்காத கால்சட்டை; கனவு காணும் கண்கள்; வாராத சுருண்ட கேசம். "ஸோ... யூ ஆர் எ கிருஹராணி! விஷ் யூ போத் ஆல் த ஹாப்பினெஸ்..." துரை சிரிக்கிறான். "எங்கே இங்கேதான் இப்ப இருக்காப்போலயா?" "ஆமாம் ஆமாம்..." என்றபடியே அவன் யமுனாவைப் பார்க்கிறான். "பாட்னாவில் எங்கே? அட்ரஸ் சொல்றீங்களா?" "வீடெல்லாம் இனிமேல்தான் பார்க்கணும். நீங்க ஆபீஸில் விசாரிச்சால் தெரிஞ்சிடும்..." என்று அலுவலக முகவரியைச் சொல்கிறான் துரை. "அங்கே நான் வருவேன்..." என்று யமுனாவைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். "அம்மாவன் வந்திருந்தாரா?" "ஆமாம், 'மட்ரா' ஸ்டேஷனில் பார்த்தேன். எங்கோ யூனிவர்ஸிடி ஸெமினார்னு வந்தாராம். யமுனாவைப் பார்த்துப் போகணும்னு நினைச்சேன். அங்கே வரதுக்கில்லே; சொல்லுன்னார் சொல்லிட்டேன்." "அப்புறம், இதோ ஒரு பரிசு மிஸ்டர் துரை, என் வாழ்த்துக்களுடன்!" கையிலிருக்கும் சிறு புத்தகப் பாக்கெட்டையும், ஒரு இனிப்புப் பொட்டலத்தையும் கொடுக்கிறான். துரை நன்றி கூறுகிறான். பிறகு திடீரென்று வந்தாற்போல் கூட்டத்தில் கலந்து மறைகிறான். வண்டி கிளம்பும் வரையிலும் இருக்கும் அலுவலக நண்பர்களிடம் துரை என்ன பேசுகிறானென்று அவளுக்குப் புரியவில்லை. அந்தப் பெரிய இரயிலடி மேடையின் வண்ண விசித்திரக் கலவைக் குரல்களிலிருந்து விடுபட்டு வண்டி அவர்களை வேறு திசைக்குக் கொண்டோடுகிறது. "ஏனிப்படி மருண்டு போயிருக்கிறே யமு?..." "ஒண்ணுமில்லியே! அது என்ன புத்தகம்? மாவின் பொன்மொழிகளா?" என்று கேட்கிறாள் வெப்பமான குரலில். துரை அப்போதுதான் நினைவு வந்தாற்போல் பழுப்புக் காகிதத்தை அகற்றுகிறான். அட்டையில் காந்தி படம்! 'காந்தி என்ற ஒருவர், நாட்டுக்கு எந்த அளவில் கேடு செய்திருக்கிறார்!' என்பது தலைப்பு. 'அதை ஆக்கியோன் சுதீர்...' அட்டையை நீக்கினால், உட்பக்கம், காந்தியம் என்ற பிற்போக்கு முட்டாள்தனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் அறியாமை மிகுந்த இந்நாட்டின் குழந்தைகளுக்கு அதைச் சமர்ப்பணமாக்கி இருக்கிறான். அதைப் பார்க்கையில் ஆத்திரம் கிளர்ந்து வருகிறது. உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். "கிழிச்சுப் போடுங்கள். இதென்னத்துக்கு நமக்கு?" "ஆத்திரப்படாதே யமு! என்னதான் சொல்றார்னு படிச்சுப் பார்ப்போமே யமுனா. நீ அந்தச் சீனத்துப் பேனாவைக் கொடுத்து அவரிடம் இதில் ஒரு கையெழுத்து வாங்கியிருக்கலாம். பரிசுன்னு சொல்லிட்டுக் கைப்பட ஒண்ணும் எழுதாம கொடுத்திருக்கிறார்." தூக்கிவாரிப் போடுகிறது அவளுக்கு. "ஏது சீனத்துப் பேனா?" "நீ யாரோ ஒரு வேலையில்லாப் பட்டதாரியிடம் இரக்கம் கொண்டு வாங்கினாயே, அந்தப் பேனா..." "ஐயோ?..." பேனாவைப் பார்க்கிறாள், 'மேட் இன் சைனா' என்ற எழுத்துக்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன. |