உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
12 மாலை பிரார்த்தனையை முடித்துக் கொண்டு ருக்மிணி அம்மை விடுவிடென்று பாதையில் வந்து கொண்டிருக்கிறாள். மழை மூட்டம் கம்மென்றிருக்கிறது. சாப்பிடும் கூடத்தில் கலகலவென்று பேசும் குரல் மட்டும் மெல்ல ஒலிக்கிறது. முன்பெல்லாமானால் மாலை பிரார்த்தனைக்கு அவள் விடுதிக் கூடத்துக்குச் சென்றால், யமுனா தந்தையின் அருகில் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடுவாள். அவளும் உதகைக்கோ வேறெங்கோ சென்றால் ஜோசஃப் ராம்ஜியின் அருகில் இருப்பார். இன்று ஜோசஃபும் அருகில் இல்லை. இப்போதெல்லாம் அவர் தனிமையையே பெரும்பாலும் விரும்புகிறார். ருக்மிணி நினைத்துப் பார்க்கிறாள். இந்த இரண்டு மூன்று மாத காலத்தில் அவர் வெறும் மூச்சுப் பொம்மையாக மாறிவிட்டார். அஹிம்சை நெறியில் அளவற்ற நம்பிக்கை வைத்த அவர், அந்த நம்பிக்கைக்குப் பேரிடியாய் சம்பவங்கள் நிகழ்ந்ததுமே சோர்ந்து போனார். அவருடைய உடல் நலிவு, வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; உள்ளத்தில் விழுந்த அடிகளே, அவரைப் படுக்கையில் வீழ்த்தியிருக்கின்றன. சீனத் தாக்குதல் நிகழ்ந்த போது நிராயுதபாணிகளாய் எல்லையில் அணி நிற்க ஒரு படையைத் திரட்ட வேண்டும் என்று எல்லாத் தலைவர்களுக்கும் எழுதினார். வறட்சியைப் பொருட்படுத்தாமல் ஓடி ஓடித் தலைவர்களைச் சந்தித்து அஹிம்சை நெறியோடு தாக்கியவனை எதிர்நோக்கி நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்படி நிராயுதபாணிகளை வன்முறையில் வீழ்த்தினால் உலகை அது அசைக்கக் கூடும் என்று நம்பினார். முயற்சி விழலுக்கிறைத்த நீராயிற்று. அப்போதே ஒரு நள்ளிரவில் அதிர்ச்சி கண்டு கை கால் சுவாதீனம் இழந்தவர் தாம். அவர் உயிர் பிழைத்திருப்பதே அஹிம்சா நெறியில் மிஞ்சியிருக்கும் நம்பிக்கை ஒளிதான் என்று அவளுக்குத் தோன்றுகிறது. வெளி உலகச் செய்திகளை அவள் மறைத்து விடுவாளோ என்று வானொலிப் பெட்டியைத் தன்னறைக்குள் வைத்துக் கொள்வார். பத்திரிகைகளைப் படிப்பார்; யமுனாவிடம் பேசுவதென்றால் அலுப்பே கிடையாது. மாலை நேரங்களில் மெல்ல வெளியே சாய்வு நாற்காலியில் சாய்த்து வைக்கச் சொல்வார். பிறகு சக்கர நாற்காலி ஒன்று தயாரித்தார்கள். பிரார்த்தனைக்குங்கூட இடையில் போய்க் கொண்டிருந்தார். திடீரென்று எல்லாம் பிடிக்காமலாயின. மலர்களில் தான் எத்தனை மகிழ்ச்சி கொள்வார்? காட்டுக் குழந்தைகள் அந்த ஐயனைத் தேடிவரும் போது அருகில் அழைத்துத் தொட்டு மகிழ்வார். யமுனா ஊருக்குப் போன பிறகு அவர் ஒன்றிலும் பற்றுக் கொள்ளாமல் கூட்டுப் புழுவாய் முடங்கிவிட்டாரே? இப்போது உணவும் சுருங்கி, உறக்கமும் பிடிக்காமல் பிரமை பிடித்துக் கிடக்கிறார். "குழந்தைகள் வந்திருக்கிறார்கள். மாரி பையனைக் காட்ட வந்திருக்கிறான்" என்று காலையில் சொன்னாள். "போகச் சொல்" என்று சைகைதான் காட்டினார். திடீரென்று "யமுனா ஏன் இன்னமும் வரவில்லை?" என்று கேட்டார். இந்த வெறுப்பு எதற்கு அறிகுறி? ருக்மிணி எந்த நிலையிலும் கலங்கியதில்லை. இன்று அருகில் யமுனா இருந்தால் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது. குடிலில் குத்துவிளக்கு எரிகிறது. அவர் கண்களை மூடிக்கொண்டு அயர்ந்து கிடக்கிறார். அவள் அருகில் வந்து மெல்ல அந்தக் கையைத் தொட்டெடுக்கிறாள். பழைய நினைவுகள் குமுறிக் கொண்டு வருகின்றன. "கடல் எங்கோ இருக்கிறது; மலை எங்கோ இருக்கிறது. கடல் நீரில் விளையும் உப்பையும் மலை மண்ணில் விளையும் புளியையும் இணைத்து வைத்தார் யார்? இந்த இணைப்பின் அதிசயந்தான் என்ன?..." என்று அவர்கள் இறைவனின் சந்நிதியில் மணமக்களானபோது, மகாராஷ்டிரக் கவிஞரான நண்பர் வாழ்த்துக் கவிதை படித்தார். புளியும் உப்புமாய்க் கரைந்து, கபடற்ற ஏழைக் குழந்தைகளை மகிழ்விக்க வந்த நாட்களை நினைத்துக் கொள்கிறாள். கண்கள் பனிக்கின்றன. "நீ ஏன் அழுகிறாய் ருக்மிணி; எனக்குச் சொல்லாமல் எதையோ மறைக்கிறாய்." அவசரமாக அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். "உங்களிடம் ஒளிக்க எனக்கு ஒன்றுமில்லை..." "...நீ... என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டிராது போனால், இன்றைக்கு மேலான நிலையில் சந்தோஷமாக இருந்திருப்பாய். என்னால் தானே ஆளும் கட்சியின் பக்கம் சாராமல் எதிர்க்கட்சிக்கு வந்தாய்? நீ இப்போது அதற்காக வருத்தப்படாமலிருக்கிறாயா ருக்மிணி?" "பாலேட்டில் பணியாரம் செய்து தாயார் கொடுத்திருக்கையில் குழந்தை வேறு எதற்கானும் ஆசைப்படுவதுண்டா? வீணாக ஏன் மனசை வருத்திக் கொள்கிறீர்கள்?" "உனக்கு இப்போது, இந்த யுகத்தில், தியாகம், சேவை, உண்மை என்று வாழ்ந்து இந்த நாட்டை உயர்த்த முடியுமென்று நம்பிக்கை இருக்கிறதா ருக்மிணி?" "எனக்கு நம்பிக்கை ஏன் குறைய வேண்டும்? சோதனைகள் வருவது நம் நம்பிக்கையைக் குறைப்பதற்காக அல்ல. நல்லதெல்லாம் உடனே பலன் கொடுக்காது. ஒரு தலைமுறை அல்லது இரு தலைமுறை கூடக் காத்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களே?" "யமுனா அப்படி நினைப்பாளா? அந்தப் பொறுமை இந்தத் தலைமுறைக்கு வருமா? ஒரு காலத்தில் நாம் எப்படி எப்படியோ நினைத்தவர்களெல்லாம் தலைகுப்புறச் சரியும் போது, இந்த மண்ணில் தான் விளைய வேண்டுமென்று நட்ட குருத்து வேர் பிடித்து ஆலமரமாகும் என்ற நம்பிக்கை எங்கே வரப்போகிறது?" "ஏன் வராமல்? யமுனாவிடம் நிச்சயமாக நம்பிக்கை வைக்கலாம். எந்தச் சோதனை வந்தாலும் இறங்கி விடமாட்டாள்." சில விநாடிகள் உத்தரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். "அவளுக்கு இருபத்தைந்து வயசாகிறது..." அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிந்தாற் போல் அவள் அமைதியாக இருக்கிறாள். "ருக்மிணி கமலம்மா இப்போதெல்லாம் ஊட்டிக்கே வருவதில்லையா? அந்தப் பையன், அவன் பெயரென்ன, சுதீர் என்ன செய்கிறான்?..." "இப்போது இங்கே வருவதில்லை. யமுனா கமலம்மாவைப் பார்த்தேன்னு சொன்னாள்..." "அந்தப் பையனுக்கு என்ன; அப்பா தேடி வைத்ததெல்லாம் இருக்கிறது! அந்தம்மாவுக்கு யமுனாவைக் கல்யாணம் செய்து கொள்ள வேணும் என்று ஆசை உண்டு..." ருக்மிணி என்ன பேசுவாள்? உலகம் அறியாப் பாலகனாக இருந்த காலத்தில் சுதீர் அங்கு வருவான். யமுனாவும் அவனும் காடெல்லாம் சுற்றித் திரிவார்கள். இப்போதெல்லாம்... வந்தாலும் இங்கு வருவதில்லை. ஆற்றைத் தாண்டி அக்கரையில் நடமாடுகிறான். பிறகு நாட்டு வாட்டம் தீர்க்க நாசவழியே நல்வழி என்று துண்டுப் பிரசுரங்களை விசிறிவிட்டுப் போனான். அந்தப் பெண்ணின் நம்பிக்கையையும் அசைத்துவிட்டுப் போனான் என்றெல்லாம் எப்படிச் சொல்வது? "யமுனாவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. நீ அதை நினைப்பதில்லையா ருக்மிணி?" "எப்படி நினைக்காமலிருப்பேன்?" "என் மகள் ஜான்ஸிராணியாகணும்னு எனக்கு இஷ்டமில்லை. ஒரு சீதையாக, ருக்மிணியாக உன்னைப் போல..." நெஞ்சு விம்மி முட்டுகிறது. ருக்மிணி அந்த நெஞ்சை நீவி விடுகிறாள். கண்ணீர் பொங்குகிறது. "நான் இருக்கும் போது நீங்கள் இப்படியெல்லாம் வருந்தக் கூடாது. அவளுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பற்றிய உணர்வு எனக்கு எப்போதும் இருக்கிறது. சிறு வயதில் அவளை அனியனிடம் விட்டுவிட்டுக் கவலையில்லாமல் நம் பணியைச் செய்தோம். அவளை இந்தச் சாதாரண ஆசாபாசங்களுடன் நாம் வளர்க்கவில்லை. அவள் குத்துவிளக்காய் நிழலைத் தாங்கினாலும் சுற்றுப்புறமெல்லாம் ஒளி காட்டுவாள்..." "ஆமாம். அந்தப் பையன் துரை எங்கே? ஓ, இன்டர்வ்யூன்னு போனானில்லை?" "ஆமாம் வேலை கிடைக்குமாம். அனியனுக்குக் கடிதாசி வந்திருக்கு..." "நல்ல பையன். அவனைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?" "நல்ல பையன். இனிமையான சுபாவம்..." "யமுனாவும் அவனும்..." ருக்மிணியை அவர் பார்க்கிறார். அவளுக்கு இது தோன்றியதே இல்லை. துரைக்கு யமுனா...யமுனாவைத் துரைக்கு... "ஏன்... நீ பேசவில்லை? மனிதன் எத்தனை ஒட்டாது விரக்தியுடன் வாழப் பழகினாலும் நம்பிக்கைத் துளிரைத் தன் பாரம்பரியத்தில் தான் காண ஆசைப்படுகிறான்... பெரிய பெரிய மனிதர்கள் கூட இதற்கு விலக்கில்லை... நீ என்ன நினைக்கிறாய்?" "யமுனா வரட்டும். பிறகு, அவள் மனதறிந்து செய்யலாம்..." "எனன்னெக்கமோ அண்ணா இவ்வளவு சிரத்தையுடன் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாரே என்று. அது ஒரு பக்கம் நம்மைக் கண்டால்தான்... குழந்தையாவது வேற்றுமை இல்லாமல் போகட்டும் என்று சொன்னேன்..." "நான் துரையிடம் சொல்லி அனுப்பினேன். அவளுக்கு எதிர்காலத் திட்டம் என்று ஒன்று நிச்சயமாக இல்லை என்று தெரியும். பார்ப்போம்..." ருக்மிணி எழுந்திருக்கிறாள். இருள் பரவியாயிற்று. ரங்கன் பால் கறந்து வைத்திருக்கிறான்! அவள் உள்ளே சென்று அடுப்பை மூட்டுகிறாள். குடிலின் வாயிலில் கால்களைக் கழுவிக் கொண்டு யாரோ உள்ளே நுழையும் அரவம் கேட்கிறது. அனியனோ? "வணக்கம்மா!" சமையல் பகுதியின் பக்கம் துரை சிரித்துக் கொண்டு நிற்கிறான். ஆண்மையின் வீச்சான முரட்டுத்தனமோ, செருக்கின் துடிதுடிப்போ இல்லை. பணிவும், அமைதியும், முந்தைய தலைமுறையினர் எட்டி நிற்க வைத்து ஒதுக்கிய பரிதாபமும் இன்னமும் கண்களில் நிழலாடுவது போல் தோன்றுகின்றன. "வேலை கிடைத்து விட்டதம்மா!" என்று கைகுவிக்கிறான். "அப்படியா! எங்கே?" "இன்னும் பத்து நாளில் 'ஆர்டர்' வரும். கல்கத்தாவில் தான் டிரெயினிங் இருக்குமாம்! சம்பளம் நானூறு ரூபாயும் அலவன்சும்..." "ரொம்ப சந்தோஷம். ஆனால் நீங்க போனால் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும்." "முதலில் ஒரு வாரத்தில் ஆர்டர் வருவதானால் இங்கே வீண் செலவு பண்ணிட்டு வருவானேன்னு பார்த்தேன். ஆனால் யமுனா தான் ஒத்துக் கொள்ளலே." "யமுனாவா? பார்த்தீங்களா?" "பார்த்தீங்களாவாவது?" அதற்குள் "அம்மா!" என்று கன்றின் குரல் ஒலிக்கிறது. அலுப்பும் சோர்வும் புழுதியும் அழுக்கும் நீட்டிய கரங்களுள் சங்கமமாகின்றன. "இப்போதுதான் உங்களை நினைத்தோம்... மகளே..." விழிகள் நனைந்து பளபளக்க அவர்களிருவரையும் ருக்மிணி பார்க்கிறாள். இவர்கள் இருவருமாக வருவார்கள் என்று அவள் சற்று முன் கூட நினைக்கவில்லை. எண்ணங்கள் செயலாவதற்கு இது தோற்றுவாயா? அவர்களிருவரையும் பெரியவரிடம் அனுப்பிய ருக்மிணி விரைவாக உணவு தயாரிக்கிறாள். 'வங்கத் தலைநகரில் வன்முறைச் செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இந்தப் பையன் அங்கே போகிறான். யமுனா... யமுனா... அவள் தன் எதிர்காலம் குறித்துச் சிந்தனை செய்யாமலா இருப்பாள்?' தகப்பன் அறிவைப் பார்ப்பான்; தாய் பொருளைப் பார்ப்பாள்; மகள் அழகனை வேண்டுவாள் என்பது உலக வழக்கு. இங்கே அந்த உலக வழக்கைத் தகர்த்துப் புதுமையைத் தோற்றுவிக்க அவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள். யமுனா துரையை விரும்புவாளோ? அவளுடைய மனதை அறியும் அந்தரங்க நெருக்கமே தன்னிடம் இல்லை போலிருக்கிறது அவளுக்கு. அம்மாவனிடம் தான் அவளுக்கு சலுகை நெருக்கமெல்லாம். பெரியவரின் அறையில் பேச்சும் சிரிப்பொலியும் கலகலப்பாக இருக்கின்றன. 'அனியன்' அங்குதானிருக்கிறானோ. யமுனா தன்னுடைய கூட்டங்களைப் பற்றித்தான் பேசுகிறாள். சினிமா தாரகை காந்தியைப் பற்றிக் கேட்டாலே உருகுவதையும், மாதர்குல திலகம் மாணிக்கவல்லியம்மை காந்தி சூதுகள் செய்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததைப் பற்றிப் பேசியதையும், நாவேந்தன் காந்தியாரையும், அறிவுலகம் மாமேதையையும் ஒப்பிட்டுச் சொற்களை அடுக்கி அடுக்கிக் கோபுரம் கட்டியதையும் விவரிக்கிறாள். ஒரே சிரிப்பு. "எந்தா ஏடத்தி? மோள். வல்ய... பிரசங்கியாயி?" "ஆமாம்... வ...ல்...ய, வலிய... வலிய..." என்று யமுனா சிரிக்கிறாள். "போகும்போது கடவுளே, அவர்கள் பெரியப்பாவுக்கு ஒரு மாலையை வைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வேன். மாலை போஸ்டர் அடுக்குமொழி சோடா, மைக்கு... ஆமாம், கூட்டத்தில் எட்டு பேரே இருந்தால் கூட மைக் கட்டாயம் வேண்டும். எல்லாம் குறைவில்லை. பெண் மிகமிக அழகு தான். கண்கள் தாம் இல்லை. நான் எதற்காகப் பேசினேன் என்று எனக்கே புரியவில்லை. மேடையேறி ஏறி எல்லோரும் அது இது என்று புகழ்வதைக் கேட்டுக் கேட்டு, நான் நிசமாகவே லீடராயிடுவோமோன்னு பயம் வந்துவிட்டது. துரை கூப்பிட்டார். 'லீடர்ஷிப்'புக்கு ஒரு கும்பிடுன்னு ஓடிவந்து விட்டேன்." துரை சிரித்த முகம் மாறாமல் அவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். "என்னைப் பார்க்க இவர் பெரியப்பா வீட்டுக்கு வந்த பிறகு தான் இவருக்கு உலகமே புரிந்தது. கேளுங்கள் அம்மாவா? சுவாரசியமாக இருக்கும்." "சேச்சே, என்ன யமுனா நீங்க. அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்க!" "பெரியப்பா அடுத்த முறை என்னையே படி ஏற்றுவாரா என்பது சந்தேகம்..." என்று யமுனா நிறுத்துகிறாள். "இனி பேசியது போதும். சுடுநீர் இருக்கிறது. குளித்துச் சாப்பிட வாருங்கள். துரை, நீங்களும்..." என்று ருக்மிணி பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைக்கிறாள். |