உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
1 ஊர் எல்லையில் காம்பவுண்டுச் சுவரில் தெரிந்த போஸ்டரில் - "ராஜபார்ட் ரங்கதுரை, கோமாளி சாமண்ணா, ஜில் ஜில் ரமாமணி ஆகியோர் நடிக்கும், 'வள்ளித் திருமணம்' ஸ்பெஷல் நாடகம். காதர் பாட்சா கால் ஆர்மோனியம். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும். ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை" என்று கொட்டை எழுத்துக்கள் உரத்துக் கூறின. பாகவதர் மாதிரி ஜில்பாக் குடுமியுடன் கோமாளி சாமண்ணா கோணங்கித்தனமாக அந்த போஸ்டரில் சிரித்துக் கொண்டிருந்தான். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவன் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியது பாப்பாவுக்கு. அவள் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள். 'ஐயே, மூஞ்சியைப் பாரு!' சாலையோர வயல்களில் கரும்புச் சாகுபடி நடந்து கொண்டிருந்ததால் வெல்லப்பாகு வாசனை மூக்கைத் துளைத்தது. "அப்பா, கரும்புச்சாறு குடிக்கணும் போல இருக்கப்பா. கொடுப்பாங்களா?" "வாங்கிட்டு வாரேன் கண்ணு." வண்டி முழுதும் பச்சைப் புற்களை அடர்த்தியாய்ப் பரப்பி அதன் மீது சாயம் போன ஜமுக்காளத்தை விரித்திருந்தான் குமாரசாமி. அந்தப் புற்களைக் கை நிறைய அள்ளி மாட்டுக்கு முன்னால் போட்டதும், "இதோ வந்துர்ரேன் பாப்பா! இங்கேயே நில்லு" என்று சொல்லிக் கொண்டே சரிவில் இறங்கி நடந்தான். 'அம்மாடி!' என்று பாப்பாவும் கீழே குதித்து மரத்துப் போன தன் கால்களளப் பிடித்துவிட்டுக் கொண்டாள். குமாரசாமி இதற்குள் மண் குடுவை ஒன்றில் நுரை ததும்பக் கரும்புச் சாறு கொண்டு வந்து, "இந்தா, வடிகட்டி வாங்கியாந்திருக்கேன்" என்று கொடுக்கவும் அதை ஆவலோடு வாங்கிக் குடித்த பாப்பா, "நெஞ்செல்லாம் இனிக்குதப்பா. நீயும் கொஞ்சம் குடி!" என்றாள். "ஜாவாக் கரும்பாச்சே. அப்படித்தான் இனிக்கும்." அதைக் குடித்து முடித்ததும், "புறப்படுவமா? டயம் என்ன ஆச்சு? இருட்டுக்கு முன்னாலே நகைக் கடைக்குப் போயிரணும்" என்றான். 'வாச்'சைப் பார்த்த பாப்பா "அஞ்சரை ஆகுது" என்றாள். அவள் எட்டாவது படிக்கும் போது அம்மா வாங்கிக் கொடுத்தது. இப்போது அம்மா இல்லை. அந்த ஒற்றை மாட்டு வண்டி ஏறத்தாழ நகர எல்லைக்குள் வந்துவிட்டிருந்தது. சாலை மரத்து அக்கூ பட்சிகள் மழையைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தன. "ரொம்ப இறுக்கமாயிருக்குதில்லே மழை வரும் போல..." என்று மகளிடம் சொல்லிக் கொண்டே, "ஹய்... ஹய்...!" என்று வண்டியை வேகமாகச் செலுத்தினான். மெயின் ரோடு நாற்சந்தியில் ஐந்து லாந்தரைச் சுற்றி வண்டியைத் திருப்புகிறபோது முனிசிபல் தெரு விளக்குகள் மஞ்சளாய்ச் சிணுங்கின. தைப்பூச விழாவோடு சந்தைக் கூட்டம் வேறு. திடீரென்று அதிர்ந்த திருவிழா வேட்டுச் சத்தத்தில் மிரண்ட மாட்டை இழுத்துப் பிடித்தான் குமாரசாமி. வண்டியைச் சந்தை மைதானத்தில் கொண்டு நிறுத்தி தாழங்குடையையும் சோற்று மூட்டையையும் பத்திரப்படுத்திவிட்டு, "வாம்மா போகலாம்" என்றான். ஓரத்தில் புதுப் பானைகள் மலையாய்க் குவிந்து கிடந்தன. இன்னொரு பக்கம் சாம்பல் பூசணிக்காய்கள். காடா விளக்கு ஒளியில் கண்ணாடி வளையல்களைப் பரப்பிக் கொண்டு பட்டை நாமம் தீட்டியிருந்த வளையல் வியாபாரி தெலுங்கு பேசிக் கொண்டிருந்தார். சுவர் ஓரமாக அடுப்பு வைத்து மசால் வடை வேகும் வாசனை போவோர் வருவோரைச் சுண்டி இழுத்தது. கைநிறைய வளையல்களை அடுக்கிக் கொண்டு, வாய் நிறைய மசால் வடையைத் திணித்துக் கொண்ட பாப்பா, "சோடா" என்றாள் அப்பாவிடம். சற்றே தூரத்தில் அரச மரத்தடியில் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடப்பதைப் பார்த்த அவள், "அங்கே போய் வேடிக்கை பார்க்கலாமா?" என்பது போல் கண்களால் கேட்டாள். "அதுக்கெல்லாம் நேரமில்லே. இப்ப முதல்ல நகைக்கடைக்குப் போய் உன் அம்மாவின் வளையல், காசு மாலை, கம்மல் அத்தனையும் வித்து, காசாக்கிடணும். தங்கம் நல்ல விலை போகுதாம். அப்புறம் இந்த ஊர்ல நம்ம உறவுக்காரப் பையன் ஒருத்தன் எலக்ட்ரிக் ஆபீஸ்ல வேலை செய்யறானாம். உன் அழகுக்கு ஏத்த பையனாம். அம்மா சொல்லிட்டுப் போயிருக்கா, உன்னை அவனுக்குத்தான் கட்டிக் கொடுக்கணும்னு. அவன் விலாசம் கேட்டு வாங்கி வச்சிருக்கேன்." "எனக்குக் கலியாணமும் வேணாம். ஒண்ணும் வேணாம்" என்றாள் பாப்பா. "அப்படின்னா?" "ராத்திரிக்கு டிராமா பார்க்கலாம்பா. வள்ளித் திருமணம்." "முதல்லே வள்ளித் திருமணம். அப்புறம்தான் உன் திருமணங்கறயா? நல்ல பெண்ணம்மா நீ! வா, ஐயர் கடைக்குப் போய் ஏதாச்சும் சாப்பிடலாம்." "எனக்குப் பசி இல்லை. கரும்புச் சாறும் மசால்வடையும் நெஞ்சைக் கரிக்குது... நீங்க சாப்பிடுங்க." இருவரும் ஐயர் கிளப்பை நோக்கிச் செல்லும் போது, "அரிக்கன் விளக்கு வாங்கணும்னு சொன்னீங்களே, அத பாருங்க, அந்தக் கடையிலே..." என்றாள் பாப்பா. வண்டியைத் தெரு ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் அரிக்கன் விளக்கு ஒன்றை விலை பேசி வாங்கி அதில் நாடா போட்டு, 'குரங்கு மார்க்' கெரஸினும் ஊற்றிக் கொண்டார்கள். பாண்டு வாத்தியம் இசைக்க, ஆகாச வேட்டுகள் முழங்க, தண்டமாலையும் தங்க ஆபரணங்களும் மத்தாப்பு வெளிச்சத்தில் தகதகக்க, ஊரே குதூகலத்தில் எக்களிக்க தைப்பூச உற்சவர் ஏக தடபுடலாய் வீதிவலம் போய்க் கொண்டிருந்தார். கூட்டம் அலைமோதிக் கொண்டு நகர்ந்த போது, இளமையின் பூரிப்பில் பதினேழைக் கடந்து நின்ற பாப்பாவின் அழகை மத்தாப்பூ வெளிச்சத்தில் கண்டு மயங்கிய வாலிபர்கள் அவளையே கண்கொட்டாமல் பார்த்தார்கள். "பாப்பா, சாமி பார்த்தது போதும், வா. இந்த ஆசாமிங்க கண்ணிலிருந்து தப்பிப் போயிரலாம்" என்று அழைத்தான் குமாரசாமி. நகைக் கடைக்குப் போய் அம்மாவின் நகைகளைக் கல்லில் உரசி, மாற்றுப் பார்த்து, குந்துமணி எடை போட்டுப் பணம் வாங்குவதற்குள் மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. 'டிராமாவுக்கு லேட்டாயிடுத்தே!' குமாரசாமியின் இடுப்பில் இப்போது நகைகளுக்குப் பதிலாக நூறு ரூபாய் நோட்டுகளாய் மாறி இருந்தன. அடிக்கொரு தடவை இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவன், "ஐயாயிரம் எதிர்பார்த்தேன். ஆறாயிரமாக் கெடச்சுட்டுது" என்று காவிப் பற்களைக் காட்டினான். "உரக்கப் பேசாதீங்க. எவனாவது பிக்பாக்கெட் அடிச்சுடப் போறான்." "அவன் பொழைச்சுருவானா அப்புறம்?" என்று மீசையைத் தடவியவன், "இனிப்பு ஏதாச்சும் சாப்பிடறயாம்மா. ஜாங்கிரி, மைசூர்ப்பாகு!" எதிரில் பெட்ரமாக்ஸ் விளக்கில் பிரகாசித்த மிட்டாய்க் கடையைக் காட்டினான். "வேணாம்." "காராசேவு?" "ஊஹூம், டிராமா போவம்." சூரியகுளம் தகரக் கொட்டகையில் வள்ளித் திருமணத்தை முன்னிட்டு வாசலில் சரிகைத் தொப்பிக்காரர்கள் பாண்டு வாசித்துக் கொண்டிருந்தார்கள். தெரு ஓரம் சாய்ந்திருந்த வேப்ப மரக் கிளைகளில் கலர் மின்சார பல்புகள் நிர்வாணமாய் எரிந்து கொண்டிருந்தன. திருவிழாவுக்கு வந்திருந்த கிராமத்து மக்கள் அத்தனை பேரும் நாடகம் பார்க்க 'ஜே ஜே' என்று நெரிசலாய் நின்றார்கள். அந்தக் கூட்டத்தில் எப்படியோ முண்டி அடித்துப் புகுந்து டிக்கட் பொந்தில் கையை விட்டு இரண்டு முதல் வகுப்பு டிக்கட்டுகளை வாங்கி வந்துவிட்டான் குமாரசாமி. ஒன்பது மணி என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் நாடகம் பத்தரை மணிக்குத்தான் ஆரம்பமாயிற்று. திரைக்குள்ளேயிருந்து சாம்பிராணி மணம் வீச, "ஜெய ஜெய கோகுல பாலகா..." என்று காதர் பாட்சா கணீரென்று குரலெடுத்துப் பாட அந்தக் குரலும் ஹார்மோனிய நாதமும் கொட்டகையை நாத வெள்ளத்தில் மிதக்கச் செய்தன. "கோகுலாட்டமிக்கும் குலாம் காதருக்கும் என்ன சம்பந்தம்னு கேட்பாங்களே, பார்த்தியா பாப்பா! இப்ப பாடறவரு காதர் பாட்சா சாயபு - பாட்டு 'கோகுல பாலகா!' வேடிக்கையா இல்லை?" பாப்பாவின் கவனமெல்லாம் எப்போதும் திரை விலகும். எப்போது கோமாளி சாமண்ணாவைப் பார்க்கலாம் என்பதிலேயே இருந்தது. மாலையில் போஸ்டரில் பார்த்த அந்த ஆசை முகம் அடிக்கடி அவள் நினைவில் தோன்றித் தோன்றி... கடைசியாகத் திரை விலகி சாமண்ணா மேடைக்கு வந்தான். வரும்போதே கண்களைச் சுழற்றினான். சார்லி சாப்ளின் மாதிரி கால்களைத் தொட்டி போல் வளைத்தான். பிரம்பைச் சுழற்றினான். குல்லாயைப் பிரம்பால் தூக்கித் தலைக்கு மேல் சுழற்றினான். குளுகுளுவென்று கொட்டகை முழுதும் சிரித்தது! அவனுடைய ஒவ்வொரு அசைவுக்கும் கைதட்டலும் ஆரவாரமும் பிரமாதப்பட்டது.
"மாடி மேலே மாடி அதன் மேலே ஒரு லேடி அவளும் நானும் ஜோடி." என்று பாடிக் கொண்டே ஆர்மோனியத்தின் அருகில் வந்து நின்றான். காதர்பாட்ச அந்த மெட்டிலேயே சரளி வாசித்தார். சாமண்ணா சுழன்று சுழன்று ஆடி, தலைகீழாக ஒரு பல்டி அடித்து அந்த வேகத்திலேயே எழுந்து நின்ற போது கொட்டகை அதிர்ந்தது. "ஒன்ஸ்மோர்!" என்ற விஸில் சத்தம்! சாமண்ணாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை. மறுபடியும் அந்தர் பல்டி! அடுத்த காட்சியில் வள்ளி வேடத்தில் வரப் போகும் ஜில் ஜில் ரமாமணி இப்போது லேடி வேடத்தில் வந்து நின்றாள். சாமண்ணாவுக்கு எதிர்ப் பாட்டு பாடினாள். சிருங்காரமாய் அவனைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள். சாமண்ணாவை அவள் அணைத்துக் கொஞ்சியது பாப்பாவுக்குப் பிடிக்கவில்லை. 'இந்தப் பொறாமை உணர்வு தனக்கு ஏன் வர வேண்டும்? யாரோ ஒரு கூத்தாடிப் பையனை யாரோ ஒரு கூத்தாடிப் பெண் தொட்டால் அதைக் கண்டு நான் ஏன் பெருமூச்சு விட வேண்டும்?' பாப்பாவின் உள் மனம் கேட்டது. அவனுடைய அந்தக் கோணங்கி 'மேக்கப்'புக்குப் பின்னால் ஓர் அழகு இருந்தது. கண்களில் வசீகரம் தெரிந்தது. அந்தக் காலத்து நாகரிகமான பாகவதர் ஜில்பாக் குடுமியே அவனுக்கு ஒரு கவர்ச்சியைத் தந்தது. அரிதாரம் பூசி மேக்கப் மூலம் அவன் தன் வயதை உயர்த்திக் காட்டியிருந்த போதிலும் அந்த முகத்தில் இருபது வயதின் இளமை ஒளிந்திருந்தது. நாடகம் முடிந்ததும் அவனை நேரில் பார்த்து நாலு வார்த்தை பாராட்டிப் பேச நினைத்தாள் பாப்பா. நாடகம் சூடு பிடித்து சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்த கட்டத்தில் திடீரென்று வானம் பொத்துக் கொண்டது போல் பேய்மழை கொட்டத் தொடங்கியது. கனத்த மழைத் துளிகள் தடதடவென தகரக் கொட்டகை மீது விழும் சத்தத்தில் நாடக பாத்திரங்களின் பேச்சு அமுங்கிப் போகவே, தரை மகா ஜனங்கள் விசில் அடித்து கலாட்டா செய்தனர். "பணம் வாபஸ் கொடு" என்று சில குரல்கள். "ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை" என்று பதிலுக்குச் சில குரல்கள். தொடர்ந்து பெய்த மழை காரணமாகக் கொட்டகையின் கூரை ஒழுகத் தொடங்கி, அடுத்த சில நிமிடங்களுக்குள் கீழே வெள்ளம் புரளவே எல்லோரும் அவசரம் அவசரமாக எழுந்து வெளியே ஓடத் தொடங்கினர். பாப்பாவும் குமாரசாமியும் மழைக்கு அஞ்சி வாசல் படிக்கட்டில் நின்றனர். குமாரசாமி தான் வைத்திருந்த ஈச்சங்குடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, "நீ இங்கே நில்லு பாப்பா. நான் போய் வண்டி கொண்டாரேன்" என்று வேகமாக நடந்தான். நாடகத்துக்கு வந்த கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. இதற்குள் அரிதாரத்தை அழித்துக் கொண்டு முகத்தைத் துடைத்தபடியே வெளியே வந்து நின்றான் சாமண்ணா. படியில் நின்று கொண்டிருந்த பாப்பா தன் தந்தை சென்ற திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று தத்திக் குதித்த தவளை ஒன்று அவள் பாதத்தில் பட்டு சில்லென்று உறைக்கவே, பயந்து போய் 'ஆத்தாடி!' என்று அலறிக் கொண்டே பின்பக்கம் சாய்ந்தாள். படிக்கட்டில் தவறி விழப் போன அவளை சாமண்ணா சட்டென்று தன் கைகளால் தாங்கிக் கொண்டு, "தவளைக்கா இப்படிப் பயந்துட்டீங்க?" என்று சிரித்தான். பாப்பாவுக்கு நெஞ்சம் படபடத்தது. வெட்கத்தில் முகம் சிவந்தவளாய், "மன்னிச்சுருங்க" என்று கூறி விலகிக் கொண்டாள். "பரவாயில்லை. ஆனால் பாவம்! தவளை தான் ரொம்பப் பயந்துருச்சு!" என்று ஜோக்கடித்தான் சாமண்ணா. பாப்பாவுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. நாணத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள். 'இந்த அழகு முகமா இத்தனை கோணங்கி செய்யுது!' என்று எண்ணிக் கொண்டாள். "நீங்க முன் வரிசையில் தானே உட்கார்ந்திருந்தீங்க? கூட உட்கார்ந்திருந்தவர் யாரு? உங்க அப்பாவா?" "ஆமாம்; அதோ வண்டி கொண்டாரப் போயிருக்கார். இப்ப வந்துருவார்." "சாரல் அடிக்குது, இப்படித் தள்ளி வந்து நில்லுங்க." "உங்க நடிப்பும் பேச்சும் ரொம்ப தமாஷாயிருந்தது. பாழாப் போன இந்த மழை வந்து கெடுத்துட்டுது" என்று சொல்ல நினைத்தாள். ஆனால் பேச்சு வரவில்லை. "எந்த ஊரு?" "பூவேலி." "இப்ப கிராமத்துக்கா போறீங்க?" "இல்லை. ராத்திரிக்கு எங்கயாவது லாட்ஜில தங்கிட்டு காலம்பற கிராமத்துக்குப் போலாம்னு பாக்கறோம்." "மணி பன்னிரண்டு ஆகப் போகுது. மழை வேறே. லாட்ஜில இந்த நேரத்துல எங்க இடம் கிடைக்கப் போகுது? திருவிழாவாச்சே! உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா ராத்திரி என் வீட்டிலேயே தங்கிட்டுப் போகலாம்" என்று அழைத்தான் சாமண்ணா. "அப்பாவைக் கேளுங்க." குமாரசாமி வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய போது பாப்பாவும் சாமண்ணாவும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, "அடடே, நீங்களா! ரொம்ப சிரிப்பா நடிக்கிறீங்களே!" என்றான். "அப்பா! நம்மை இவர் வீட்டுக்குக் கூப்பிடறாரு. லாட்ஜிலே இடம் கிடைக்காதாம். ராத்திரி தங்கிட்டுப் போகலாம்னு சொல்றாரு..." "தம்பிக்கு எதுக்கு சிரமம்?" "சிரமம் ஒண்ணும் இல்லீங்க...?" "நீ என்னம்மா சொல்றே?" பாப்பா பேசாமலிருந்தாள். அதில் அவள் சம்மதம் தெரிந்தது. "சரி, தம்பி! உங்களுக்குத் தொந்தரவு இல்லேன்னா வாரோம். ஏறிக்குங்க" என்றான். சாமண்ணா முன் பக்கமாகவே வண்டிக்குள் புகுந்து குமாரசாமி பக்கத்தில் உட்கார, பாப்பா பின்பக்கமாய் முனையிலேயே உட்கார்ந்து அடைப்புக் கம்பியைச் செருகிக் கொண்டாள். "எப்படிப் போகணும் தம்பி? வழி சொல்லுங்க!" "தெற்கால திருப்பி ஓட்டுங்க. அதோ தெரியுது பாருங்க ஒரு லாட்ஜ். அதுக்குப் பின் சந்துதான். அங்கே ஒரு சின்ன மாடி வீடு தெரியும். அதுதான் என் வீடு." "மாடி மேலே யாராச்சும் லேடி இருக்காங்களா?" என்று கண் சிமிட்டினான் குமாரசாமி. "யாரும் இல்லீங்க, நான் ஒண்டிக் கட்டைதான். என் அப்பா அம்மா சின்ன வயசிலேயே காலமாயிட்டாங்க. அதிகம் படிக்கல. கூத்தாடியாயிட்டேன்." "அப்படிச் சொல்லாதீங்க. கலைஞனாயிட்டேன்னு சொல்லுங்க." "ஆமாம். இந்தக் கலைஞன் அரை வயிற்றுச் சோற்றுக்கு தினம் தினம் அந்தர் பல்டி அடிக்க வேண்டியிருக்குது!" "சோறு சாப்பிட்டீங்களா?" "இனிமே எங்கே சாப்பிடறது? ஏகாதசிதான்." "நாங்க சாப்பாடு கொண்டாந்திருக்கோம். சாப்பிடறீங்களா?" "புளியோதரையா?" "எப்படித் தெரியும்?" "அதான் மணக்குதே!" வாசலை அடையும் போது மழை வேகம் தணிந்திருந்தது. படிக்கட்டுகளின் அடிவாரத்தில் படுத்திருந்த பசி நாய் ஒன்று எழுந்து நின்று 'படபட'வென்று காதடித்து வாலைக் குழைத்தது. "ஜிம்மி!" என்று அழைத்தவன், "எப்பவும் இங்கத்தான் கிடக்கும். நான் அரைப்பட்டினி, இது முழுப் பட்டினி!" என்று சிரித்துக் கொண்டே போய்க் கதவைத் திறந்தான் சாமண்ணா. பாப்பா வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் சென்றாள். ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|