7

     தலையில் ஜரிகைத் தலைப்பாகையுடன் முனகாலா ராமா நாயுடு மிடுக்குடன் காணப்பட்டார். புஷ்டியான அடர்ந்த மீசை அவர் முகத்துக்கு கம்பீரம் தந்தது.

     வெட்கமும் வேதனையும் உடம்பெல்லாம் பிடுங்கித் தின்ன, சாமண்ணா அவர் எதிரில் ஒரு துரும்பாக நின்றான்.

     "என்னப்பா சொல்லு! நீ குடியிருந்த மாடியிலதான் கொலை நடந்திருக்கு. ஓட்டல்காரர் மண்டையில உருட்டுக் கட்டையால அடிச்சிருக்காங்க. உனக்கும் அந்த ஓட்டல்காரருக்கும் ஒரு நாள் பெரிய 'ரப்சர்' நடந்திருக்காம். அன்னைக்கு அந்த ஓட்டல்காரரை நீ ஆவேசமா சட்டையைப் பிடிச்சு இழுத்து நடுரோட்ல கொண்டு போய் மல்லாத்தி, 'உன்னைச் சும்மா விடறனா பாரு'ன்னு மண்ணை வாரி இறைச்சயாம். இப்ப எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கறே. கொலை நடந்தப்ப ஊர்லயே இல்லேன்னு சாதிக்கிற. இதையெல்லாம் என்னை நம்பச் சொல்றயா?"

     இன்ஸ்பெக்டர் தலைக்கு மேல் பிரேமுக்குள்ளிருந்து ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி நீலக் கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தார்.

     சற்று எட்டத்து அறையில் அடைபட்ட கைதி ஒருவன் கம்பிக் கதவைப் பிடித்தவாறு நின்றான்.

     ஸ்டாண்டில் நான்கு துப்பாக்கிகள் குத்திட்டு நின்று கொண்டிருந்தன.

     "நான் அன்னைக்கு சத்தியமா ஊர்ல இல்லே சார்! அதுக்கு ஆதாரம் இருக்குங்க" என்றான் சாமண்ணா.

     "உன் பேரு என்ன சொன்னே?"

     "சாமண்ணா!"

     "தகப்பனார் பேர்?"

     "கைலாசம் அய்யர். காலமாகிவிட்டார்."

     "நீ என்ன செஞ்சிட்டிருக்கே?"

     "சின்னையா கம்பெனில நான் ஒரு நடிகன்."

     "ஓட்டல்காரரை எத்தனை நாளாத் தெரியும்?"

     "ஒரு வருஷமாத் தெரியும். அடிக்கடி நாடகத்துக்கு வருவார். நானும் அவர் ஓட்டலுக்குப் போவேன். அங்கிருந்து வீட்டுக்கு அழைச்சிட்டுப் போவார். ஸ்வீட் கொடுப்பார். அன்பாப் பழகுவார்..."

     "அப்புறம் எப்படி ரப்சர்?"

     "அவருக்கு ஒரு பெண் இருக்கா. அரைப் பைத்தியம். அதைக் கலியாணம் செஞ்சுக்கச் சொன்னார். நான் முடியாதுன்னேன். அதிலிருந்து ஆரம்பிச்சதுதான்..."

     "நீ குடியிருந்த மாடி வீட்டுச் சாவி அவர்கிட்டே எப்படிப் போச்சு?"

     "அது அவருடைய வீடாச்சே! அவர்கிட்ட இன்னொரு சாவி இருந்திருக்கும்."

     "வாடகை கொடுக்காம பாக்கி வைச்சிருந்தியா?"

     "வாடகையே வேணாம். சும்மா இருந்துக்கோன்னு பலமுறை சொல்லியிருக்கார்..."

     "அப்புறம் ஒருநாள் வாடகை கேட்க வந்தப்பதான் கொலை செஞ்சயா?"

     "நான் எதுக்கு அவரைக் கொல்லணும்?"

     "இந்தாப்பா உண்மையைச் சொல்லிடு. இந்தப் போலீஸ் உத்தியோகத்துலே உன் மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன் தெரியுமா? 302 இந்த ஆளை ரூமுக்குக் கொண்டு போ! மயிலே மயிலே இறகு போடுன்னா போடமாட்டார் போலிருக்கு..."

     கான்ஸ்டபிள் சாமண்ணாவை அந்த அறைக்குக் கொண்டு போனார்.

     அந்த அறை ஒரு கிடங்கு போல் காற்று வசதி, வெளிச்சம் இல்லாமல் இருந்தது. இன்ஸ்பெக்டர் முனகாலா நுழைந்தார்.

     சாமண்ணா அழுது கொண்டிருந்தான்.

     'ஹீரோவா இருந்து மேடையில் அழ வேண்டும் என்று நினைத்தேன். கோவலன் வேஷத்துல அழ வேண்டியவன் இப்படி கொலைக்களத்திலே...'

     "உண்மையைச் சொல்லிடு. நாடகத்திலே நடிக்கிறதாச் சொல்றே? என்ன வேஷம் போடுவே?"

     "அரிச்சந்திரன், கோவலன், நல்லதங்காள் இப்படி எல்லா நாடகத்துலேயும் சின்னச் சின்ன வேஷம்..."

     "அரிச்சந்திரன் பொய் சொல்ல மாட்டான். ஆனா நீ பொய் சொல்றே. உண்மையைச் சொல்லிடு. இல்லேன்னா கேஸ் ரொம்ப ஸீரியஸாப் போயிடும்."

     "அன்னிக்கு நான் ஊர்லயே இல்லாதபோது இந்தக் கொலையை நான் எப்படி செஞ்சிருக்க முடியும்?"

     "எங்கே போயிருந்தே?"

     "பூவேலி கிராமத்துக்கு..."

     "அங்கே என்னா?"

     "தெருக்கூத்து பார்த்துக்கிட்டிருந்தேன். அர்ஜுனன் தபஸ். அன்னி ராத்திரி ஊர் ஜனங்க என்னைக் கௌரவிச்சாங்க. நான் ஒரு கலைஞன் என்கிற முறையிலே எனக்கு மாலை போட்டாங்க."

     "சாட்சி இருக்கா?"

     "ஊர் முழுக்குமே சாட்சிதான்!"

     "அப்படியா?"

     முனகாலா யோசித்தார். "இந்தாப்பா கான்ஸ்டபிள் இவனை லாக்-அப்பிலே போட்டு வை. அப்புறம் விசாரிக்கலாம்" என்று உத்தரவு போட்டார். சாமண்ணா லாக்-அப் அறைக்குக் கொண்டு போகப்பட்டான்.

     உள்மனம், 'இப்படி நாடகக் கம்பெனியிலே சேரவும் வேண்டாம், அடுத்தடுத்து சோதனை வரவும் வேண்டாம். அரிச்சந்திரனுக்குக் கூட இவ்வளவு சோதனை வந்திருக்காது.'

     சின்ன வயசில் எத்தனையோ பேர் புத்தி சொன்னாங்க, கேட்டனா? படித்திருக்கலாம். அப்பா மாதிரி கனபாடிகளாயிருக்கலாம். நாலு ஊரில் பாரதம் படித்துச் சம்பாதிச்சிருக்கலாம். எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு இப்படி விடாப்பிடியாக நாடகத்தில் சேர்ந்தேன். என் தலையெழுத்து ஒரு பக்கம் மாலை மரியாதை! இன்னொரு பக்கம் போலீஸ் லாக் அப்...!

     மறுநாள் காலை கான்ஸ்டபிள் கதவைத் திறந்த போது 'இன்னும் என்ன நேரப் போகிறதோ' என்று நடுங்கினான்.

     கான்ஸ்டபிள் அவனை இன்ஸ்பெக்டர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

     யாரோ ஒருத்தர் வக்கீல் மாதிரி இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார். தலையில் தலைப்பாகை, நெற்றியில் ஸ்ரீசூரணம், காதில் வைரக் கடுக்கன், கறுப்பு கோட்.

     "என்னங்க, இவ்வளவு தூரம்? காலையிலேயே கிளம்பி வந்துட்டீங்களே?" என்று போலீஸ் நாயுடு அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

     சாமண்ணா உள்ளே நுழைந்ததும் வக்கீல் அவனை உன்னிப்பாய்ப் பார்த்தார்.

     முனகாலா திரும்பினார்.

     "இந்தா மேன்! உனக்கு ஜாமீன் கொடுத்திருக்காங்க! நீ போவலாம்! ஆளு ஊருக்குள்ளேயே இருக்கணும்; தெரிஞ்சுதா? தினமும் ஒரு தடவை இங்கே ஆஜராகணும்..."

     தலையை ஆட்டினான்.

     "அப்போ நான் வரேன் நாயுடு" என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டு ஒரு தோரணையோடு புறப்பட்டார் வக்கீல்.

     சாமண்ணா வக்கீல் பின்னோடு நாய்க்குட்டி போல் தொடர்ந்து சென்று, "ரொம்ப நன்றி ஐயா, எனக்கு ஜாமீனில் விடுதலை வாங்கித் தந்த உங்களை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். நீங்க யாரு? எனக்கு எப்படி உதவி செய்ய வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என உணர்ச்சி பொங்கக் கேட்டான்.

     "மத்தியானம் மூணு மணிக்கு மேல வீட்டுக்கு வந்து என்னைப் பாரு. தென்னை மரத்துத் தெரு, வக்கீல் வரதாச்சாரி வீடுன்னு கேளு."

     வாசலில் குதிரை பூட்டிய பெரிய பீட்டன் வண்டி நின்றது.

     வரதாச்சாரி தார்ப்பாய்ச்சிய பின்புறம் தெரிய உள்ளே குனிந்து ஏறி மெத்தையில் அமர்ந்தார். கடுக்கன் அப்படியும் இப்படியும் வெட்டு வெட்டியது. வாயாடித்தனமும் ஓர் அலட்சியமும் சேர்ந்த கம்பீரம் முகத்தில் தெரிந்தது.

     ஃபைல் கட்டை எதிர் மெத்தையில் வீசிவிட்டு, காலரைத் தளர்த்தினார்.

     மேலே ஏறி உப்பரிகை சீட்டில் உட்கார்ந்த வண்டிக்காரன் 'டிங், டிங்' என்று காலை அழுத்தி மணி அடிக்க, குதிரைகள் இரண்டும் முறித்து இழுத்து பீட்டனைக் கிளப்பிச் சென்றன.

     ஓட்டுச்சார்பு இறங்கிய 'போர்டிகோ'வுடன் பெரிய வீடு. வாசலில் 'ஆர்ச்' போல் வளைந்த கம்பிகளின் மீது மல்லிகைக் கொடி மண்டிக் கிடந்தது. ஆள் கதவைத் திறக்க, வரதாச்சாரி சொகுசாகக் கீழே இறங்கினார்.

     வாசலில் பாம்பாட்டி மகுடி ஊதிக் கூடை பெட்டியிலிருந்த சர்ப்பத்தைச் சீண்டி ரோஷம் உண்டு பண்ணினான். அது பெரிதாகப் படமெடுத்துச் சீறியது. உள்ளிருந்து மடிசார் மாமி அரிசி கொண்டு வந்து போட்டாள். தலையில் ஈரத்துணி சுற்றிக் கூந்தலோடு சேர்த்துக் கோடாலி முடிச்சுப் போட்டிருந்தாள்.

     படிகள் ஓரம் செம்மண் இட்ட கோலம் வரி வரியாகப் போட்டிருக்க, வாசல் நடையில் ஏறினார் வரதாச்சாரி.

     பாதி வெளிச்சமாய் ஒரு கூடம். பெரிய பெரிய கண்ணாடி பீரோக்கள். ஒரு பீரோ நிறைய கொலு பொம்மை.

     தலைப்புப் புடைவையை இழுத்து மூடி, பேசரியும், அட்டிகையும் மின்ன கணவனைத் தொடர்ந்து கூடத்திற்கு வந்தாள்.

     "சாமண்ணா தெரியுமோ உனக்கு?" என்று மனைவியிடம் கொஞ்சலாகக் கேட்டார் வரதாச்சாரி.

     "கோமாளி சாமண்ணாவா?" என்று மாமி கேட்ட போது அத்தனைப் பற்களும் பளீர் பளீர் என்று ஒளி வீசின.

     "ஆமாம்! அவன் நாடகத்தில் வந்துட்டா வாயிலே ஈ பூத்தாக் கூடத் தெரியாம சிரிப்பியே..."

     கோமளம் ஒரு தோளைக் குலுக்கிக் கன்னத்தில் இடித்துக் கொண்டாள்.

     "அவன் தமாஷ் எனக்குப் பிடிக்கும்னா. நீங்க இப்படித்தான் கேலி பண்ணுவேள்! பக்த ராமதாஸிலே மிளகாப் பொடித் தமாஷ் பண்ணுவான் பாருங்கோ, சிரிச்சு வயிறு புண்ணாயிடும். காதர் பாச்சா ஆர்மோனியமும், சாமண்ணா கோமாளித்தனமும் சேர்ந்துட்டா சொல்லவே வேணாம்."

     "உனக்கு சாமண்ணாவைப் பார்க்கணுமா?"

     "ஏன்! நம்மாத்துக்கு வரப் போறானா?"

     "மத்தியானமா வரச் சொல்லியிருக்கேன். பாவம், ஒரு கொலைக் கேஸ்ல மாட்டிண்டிருக்கான். இன்னைக்கு அவனை ஜாமீன்ல மீட்டுண்டு வந்திருக்கேன்."

     கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்தார்.

     அன்று நடந்தது பூராவையும் ரிப்போர்ட் செய்தார்.

     "ஆமாம்! இந்தப் பிள்ளையாண்டான் (சாமண்ணா) கொலை பண்ணியிருப்பான்னு நீங்க நம்பறேளா?"

     "ஏண்டி, டிராமாக்காரனுக்கு என்ன புத்திடி வரும்? குடிப்பான், கூத்தி வச்சுப்பான், அப்புறம் ஒண்ணொண்னா எல்லாம் தான் செய்வான்."

     "சாமண்ணாவை அப்படிச் சொல்லாதீங்க! 'மானீர்! கள்ளுக் குடியாதீர்!'னு ஒரு பாட்டுப் பாடுவானே நாடகத்துலே."

     "அது நாடகம்! அசல் வாழ்க்கையிலே அப்படியே நடந்துப்பான்னு நம்பறியா?"

     "எனக்கென்னவோ அவன் கொலையெல்லாம் செய்வான்னு தோணல்லே..."

     "அவனை ஜாமீன்ல விடுதலை பண்ணிக் கொண்டு வரச் சொன்னது யார் தெரியுமோ? அதைக் கேட்கலையே நீ?"

     "தெரியாதே, யாரு?"

     "மேட்டுக்குடி மிராசுதார் சாம்பசிவ ஐயர் தெரியுமோ?"

     "ஏன் தெரியாது! உங்க பெரிய தாத்தாவுக்கு நல்ல பழக்கம்னு சொல்வேளே!"

     "அபரஞ்சின்னு ஒருத்தியை அவர் வச்சிண்டிருந்தார்."

     "ஓ! தஞ்சாவூர் நவராத்திரி தர்பார்லே ஆடுவாளாமே அவளா? ரொம்ப அழகா இருப்பாளாமே!"

     "அவளுடைய சாட்சாத் மகள் தான் இப்ப இவனுக்கு ஜாமீன் கொடுத்திருக்கா. அந்தப் பொண்ணுக்கு பாப்பான்னு பேரு."

     "அந்தப் பொண்ணு!"

     "ஆமாம்! அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கா. கழுத்திலே மூக்கிலே மாட்டிண்டு வந்து நிக்கறயே நீ! அவள் ஒண்ணுமே போட்டுக்கலை! ஒரு ஜோடி தோடு. ஒரு சின்னச் சங்கிலி! அழகுன்னா அப்படி ஒரு அழகு! அசந்துட்டேன்..."

     "தெரியுமே! இவ்வளவு காலைல கோர்ட்டுக்குப் போறேன்னு அத்தரும் புனுகுமா நீங்க கிளம்பறப்பவே நினைச்சேன். அந்தப் பெண்ணைப் பாக்கறதுக்குத்தான் அத்தனை அவசரமா புறப்பட்டேளா?"

     "ஏண்டி எனக்கென்ன வயசு? அந்தப் பொண்ணுக்கு என்ன வயசு? என்னைப் போய்..."

     "சபலம் தானே? இந்த ஆம்பிளைகளை நம்பவே கூடாது. அதுசரி; அந்தப் பெண்ணுக்கும் சாமண்ணாவுக்கும் அப்படி என்ன உறவாம்? அவனை மோகிக்கிறாளாமா...?" என்று கேட்டவள் சட்டெனப் பேச்சை நிறுத்தினாள்.