உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
6 பூவேலி கிராமத்தில் பாரதத் திருநாளை முன்னிட்டு பதினெட்டு நாள் உற்சவம். எல்லைக்கோடியிலுள்ள தர்மராஜா கோயிலில் தாரையும் தப்பட்டையும் அதிர்வேட்டுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. "ஊர்ல என்ன விசேஷம்?" என்று பாப்பாவிடம் கேட்டான் சாமண்ணா. "தர்மராஜா திருநாள். கோவிலுக்குப் பக்கத்துலே பந்தல் போட்டு, பாரதம் படிச்சு கூத்து நடத்தறாங்க. இன்னிக்கு அர்ஜுனன் தபஸ்..." "அப்பாவைக் காணோமே இன்னும்?" "வர நேரம் தான். அதுக்குள்ளே நீங்க குளிச்சு ரெடியாயிருங்க. சோப்பு கொண்டு வரேன். அதோ வெந்நீர் ரூம்ல தண்ணி காஞ்சிட்டிருக்கு, பாருங்க" என்றாள் பாப்பா. சாமண்ணா சந்தன சோப்பில் குளித்து முடித்து வாசனையோடு வெளியே வந்த போது கண்ணைக் கசக்கிக் கொண்டான். "சோப்பு கண்ணுல பட்டுட்டுதா?" "இல்லே, அடுப்பிலந்து வந்த புகைச்சல்...!" "இலுப்ப விறகு, ஈரம் காயலே போலிருக்கு" என்றவள், "இந்தாங்க சீப்பு..." உள்ளே சமையல்கட்டிலிருந்து பாயச வாசனை மணத்தது. சாமண்ணாவின் உள்குரள்: 'பாயசத்துக்கு என்ன விசேஷம்? திருவிழாவுக்காக இருக்குமோ? அல்லது எனக்காக ஸ்பெஷலா?' வாசலில் யாரோ பேச்சுக் குரல் கேட்கவே பாப்பா எட்டிப் பார்த்தாள். ஊர் நாட்டாமைக்காரர், கணக்குப் பிள்ளை, கிராம முன்சீப், தலையாரி, தெருக்கூத்து நடிகர் (அர்ஜுனன் வேஷக்காரர்) இப்படி நாலைந்து பேர் கும்பலாக வந்திருந்தார்கள். "அப்பா இருக்காரா?" என நாட்டாமைக்காரர் கேட்க, "தோப்புக்குப் போயிருக்கார். வர நேரம் தான்" என்றாள் பாப்பா. "இது யாரு இங்க சைக்கிள் விட்டிருக்காங்க?" "டவுன்லருந்து வந்திருக்கார். டிராமாவில நடிக்கிறாரே அவர்." "யாரு சாமண்ணாவா?" "ஆமாம்... உங்களுக்குத் தெரியுமா அவரை?" "அவரைத்தான் நாங்களும் பார்க்கணும்னு பேசிக்கிட்டிருந்தோம். இந்த வருசம் விளாவில ஒருநாள் அவரை அளைச்சு வந்து கௌரவபடுத்தணும்னு..." சாமண்ணா வெளியே வந்தான். "கும்பிடறமுங்க. டவுன்ல உங்க நாடகம் அடிக்கடி பார்த்திருக்கம். 'மாடி மேல மாடி'ன்னு பாடுவீங்களே...! இப்ப இங்க பாரதக் கூத்து நடக்குது. இன்னைக்கு அர்ஜுனன் தவசுல இவர்தான் அர்ச்சுனன் வேசம் கட்டறாரு. நீங்க அவசியம் பார்க்கணும். நாங்களே டவுனுக்கு வந்து உங்களை அளைக்கணும்னு நினைச்சுட்டிருந்தோம். தேடப் போன மருந்து மாதிரி நீங்களே..." "உங்க கால்ல சிக்கிட்டனாக்கும்!" என்று சாமண்ணா சிரிக்க, "அப்படிச் சொல்லக் கூடாதுங்க. நீங்க பெரிய நடிகருங்க..." "கூத்துன்னா விடிய விடிய நடக்குமா?" "ஆமாங்க. மத்தளம் தட்டி ரெண்டு மணி நேரத்துக்கப்புறம் நடுச் சாமத்துலேதான் அர்ச்சுனன் வருவார். நீங்களும் அந்த நேரத்துக்கு வந்தாப் போதுங்க. கொஞ்சம் முன்னாடி நாங்க தீவட்டியோடு இங்க வந்து உங்களைக் கூட்டிட்டுப் போறோம். நாற்காலி போட்டு வைக்கட்டுங்களா?" "அதெல்லாம் ஒண்ணும் வேணாம். தரையில உட்கார்ந்தே பாக்கறேன். தெருக்கூத்துன்னா அப்படித்தான் பார்க்கணும். அர்ஜுனன் கிரீடம் வச்சு புஜம் கட்டியிருப்பாரில்ல?" "அப்படியேதாங்க... கையில மரக்கத்தி புடிச்சி, ஒவ்வொரு பாட்டுக்கும் பாவாடை பறக்கச் சுத்திச் சுத்தி வருவாரு. தூள் பறக்கும்." "தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு. எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ராத்திரி வந்துடறேன். குமாரசாமி வந்ததும் அவர்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க." "இதோ, அவரே வந்துட்டாரே!" "என்ன கும்பலா எல்லாரும் இப்படி...?" என்று கேட்டுக் கொண்டே வந்த குமாரசாமி சாமண்ணாவைப் பார்த்துவிட்டு, "வாங்க தம்பி, நீங்க எப்ப வந்தீங்க?" "இப்பத்தான், கொஞ்ச நேரமாச்சு, இன்னைக்கு ராத்திரி நான் கூத்து பாக்க வரணுமாம்...!" "நீங்க ஒரு பெரிய நடிகர் இல்லையா? நீங்க வந்தால் அது இந்தக் கிராமத்துக்கே பெருமையாச்சே!" தர்மராஜா கோயிலுக்கு முன்னால் அர்ஜுனன் தபசுக்காக, பனை மரம் வெட்டி வந்து, அதன் மீது பரண் கட்டியிருந்தார்கள். அர்ஜுனன் அந்தப் பரண் மீது அமர்ந்து தவம் செய்வான். மேலே ஏறும்போது ஒவ்வொரு படிக்கும் ஒரு பாட்டுப் பாடுவான். தவம் முடிவதற்குள்ளே ஏறத்தாழ பொழுதே விடிந்து போகும்! அப்புறம் தான் அர்ஜுனன் கீழே இறங்கி வருவான். அன்று சாமண்ணா வந்திருக்கும் உற்சாகத்தில் கூத்து ரொம்ப நேரம் நீண்டு விட்டது. கிழக்கு வெளுத்து சூரியன் தலைகாட்டுகிறபோதுதான் அர்ஜுனன் கீழே இறங்கி வந்தான். கிராம மக்கள் சார்பில் சாமண்ணாவுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்திய அர்ஜுனன் நாலு வார்த்தை பேசும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க சாமண்ணா எழுந்து பேசினான். "பூவேலி கிராம மக்களே வணக்கம்! இங்கே இன்று மிகச் சிறப்பாக 'அர்ஜுனன் தபஸ்' நடத்திய தெருக்கூத்துக் கலைஞர்களைப் பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன். நடிகர்களைக் கூத்தாடி என்கிறார்கள். அது கேவலம் அல்ல. அம்பலத்தில் கூத்தாடுகிற நடராஜப் பெருமான் கூட ஒரு கூத்தாடிதான். சுமக்க முடியாத இவ்வளவு பெரிய பூமாலையைப் போட்டு என்னைப் பூவேலிக்குள் அடைத்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் அன்பினால் மட்டும் என்னைக் கட்டுப்படுத்தவில்லை. இந்தப் பூவேலியாலும் கட்டுப்படுத்தி விட்டீர்கள்" என்று கூறிய போது கிராம மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தன் பேச்சை பாப்பா ரசிக்கிறாளா என்று சாமண்ணா சாடையாகத் திரும்பிப் பார்த்த போது அவளும் கைதட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். "வண்டி கொண்டாந்திருக்கேன். வீட்டுக்குப் போவமா?" என்று சாமண்ணாவிடமிருந்த மாலையை வாங்கிக் கொண்டான் குமாரசாமி. "கொஞ்ச தூரம் தானே? நடந்தே போயிடலாமே?" "வேண்டாம் தம்பி! கூத்து பாத்தவங்க வழியெல்லாம் மூத்திரம் வழிய விட்டிருப்பாங்க. காலை வைக்க முடியாது" என்றான் குமாரசாமி. சாமண்ணாவும் பாப்பாவும் வண்டியில் ஏறி அமர ஒரு சின்ன கும்பல் அவர்களை வழி அனுப்பி வைத்தது. வண்டி வீட்டு வாசலில் போய் நின்றதும், "நான் இப்பவே புறப்படலாம்னு பாக்கறேன். அப்பத்தான் வெயிலுக்கு முன்னால் டவுனுக்குப் போய்ச் சேரலாம்" என்றான் சாமண்ணா. "என்ன அவசரம் தம்பி? ரெண்டு நாளைக்கு இங்கதான் தங்கிட்டுப் போறது. பாப்பா எல்லாத்தையும் விவரமா சொல்லிட்டுது. நடந்ததைப் பத்திக் கவலைப்படாதீங்க. இது உங்க சொந்த வீடு மாதிரி..." "ரொம்ப சந்தோஷம். ஆனாலும் இப்ப நான் இங்கே தங்கறது அவ்வளவு சரியாயிருக்காது. கிராமத்துலே நாலு பேர் நாலு தினுசாப் பேசுவாங்க. அதுக்கெல்லாம் இடம் தரக் கூடாது பாருங்க. பாப்பாவுக்குக் கல்யாணமாயிட்டுதே! அவள் கணவன் அநியாயமா நடந்துகிட்டதையெல்லாம் பாப்பா சொன்னா..." "டவுனுக்குப் போய் என்ன செய்யப் போறீங்க? எங்கே தங்கப் போறீங்க? அங்கதான் டிராமாவிலே சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாமே?" "ஆமாம். இருந்தாலும் இன்னொரு முறை கேட்டுப் பாக்கறேன். காண்ட்ராக்டருக்கு உள்ளூர என்னைச் சேத்துக்கணுங்கற எண்ணம்தான். ஆனா அந்த ஓட்டல்கார அயோக்கியன் தான் தடை போட்டு வெச்சிருக்கான். இருக்கட்டும். அவனை நான் சும்மா விடப் போவதில்லை" என்று பற்களை நறநறவென்று கடித்தான் சாமண்ணா. "அவனை மறந்துடுங்க தம்பி! எதுக்கு வீண் வம்பு? கொஞ்ச நாளைக்கு பொறுமையா இருங்க. நீங்க இப்ப டவுனுக்குப் போறதில பாப்பாவுக்குக் கொஞ்சம் கூட இஷ்டமில்லே..." "பாப்பா மனசிலே என்ன இருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும். எனக்கு ஒரு லட்சியம் இருக்கு. அதுதான் இப்ப எனக்கு முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம் தான். என் மூச்சு பேச்சு எல்லாமே நாடகம் தான். என் நடிப்பைக் கண்டு இந்த நாடே வியக்கணும். என் கோமாளி வேஷத்தையும் நடிப்பையும் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா இதிலே எனக்கு திருப்தியோ மகிழ்ச்சியோ இல்லை. நான் ஒரு ஹீரோவா, கதாநாயகனா மாறி என் நடிப்பாலே ஊரையே அழ வைக்கணுங்கறதுதான் என் ஆசை. அதை நடத்தியே தீருவேன். எனக்குள்ளே ஒரு பிசாசு இருக்கு. 'சாமண்ணா! நீ ஒரு பிறவி நடிகன். உன் நடிப்பைக் கண்டு இந்த உலகமே பாராட்டப் போகுது. ம்... புறப்படு. உன் லட்சியப் பயணத்தை இப்பவே தொடங்கு' என்று என்னை அது தூண்டிக்கிட்டே இருக்கு. உடம்பெல்லாம் எப்பவும் ஒரு ஆவேசம் வந்த மாதிரி இருக்கு" என்று கூறியவள் திரும்பி பாப்பாவைப் பார்த்து, "நான் வரட்டுமா?" என்று கேட்டான். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, 'நீங்க போகத்தான் வேணுமா?' என்பது போல் கண்களால் கேட்டுக் கொண்டே ஒப்புக்குத் தலையசைத்தாள் பாப்பா. "வெந்நீர் போட்டிருக்கு. குளிச்சு இட்லி சாப்பிட்டுப் போங்க. அப்பத்தான் கூத்துப் பாத்த மயக்கம் தெளியும்" என்றான் குமாரசாமி. "இட்லி சாப்பிட்டப்புறம் ஒரு தூக்கம் போடச் சொல்லுங்க. தூங்கி எழுந்திருப்பதற்குள் மணி ஒண்ணரையாயிடும். அப்புறம் சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்வீங்க..." என்று சிரித்தான் சாமண்ணா. "சாப்பாட்டுக்கு மேல் தான் புறப்படுங்களேன். வெயில் தாழ்ந்தாப்பல..." என்றாள் பாப்பா. "ஆமாம். அதுக்குள்ளே ராகுகாலமும் போயிடும்!" என்றான் குமாரசாமி. அவர்கள் பேச்சைத் தட்ட விருப்பமின்றி ஒரு தூக்கம் போட்டு சாப்பிட்ட பிறகே புறப்படத் தயாரானான். எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை அவனிடம் தந்த பாப்பா, "இதைக் கொஞ்சம் போஸ்ட் பண்ணிர முடியுமா?" என்று கேட்டாள். "லெட்டர் யாருக்கு?" "விலாசம் கவர் மேலேயே எழுதியிருக்கேன்." அதை வாங்கிச் சட்டைப் பையில் திணித்துக் கொண்ட சாமண்ணா சைக்கிள் ஏறிச் சென்றபோது, தெருக்கோடி வரை அவனையே கண் கொட்டாமல் பார்த்து நின்றாள் பாப்பா. சூரியகுளம் நாடகக் கொட்டகை வெறிச்சோடிக் கிடந்தது. கொட்டகையில் யாரையுமே காணவில்லை. எலெக்ட்ரீஷியன் சிட்டிபாபு மட்டும் மின்சார வயர் ஒன்றைப் பல்லால் கடித்து ஃப்யூஸ் போட்டுக் கொண்டிருந்தான். சாமண்ணாவைக் கண்டதும், "வாங்கய்யா" என்று ஜீவனில்லாமல் சொன்னான். "என்ன பாபு! இன்னைக்கு நாடகம் இல்லையா?" "அர்த்தால் நடக்கப் போகுதாம். அந்நியத் துணிகளை நடுரோடில கொளுத்தப் போறாங்களாம். பெரிய கலாட்டாவாயிருக்கும் போல இருக்கு. அதனால டிராமாவை நிறுத்தி வெச்சிருக்காங்க." "காண்ட்ராக்டரை எங்கே காணோம்?" "இப்பத்தான் வீட்டுக்குப் போனார்." "காதர் பாட்சா?" "அவன் லீவ்ல போயிட்டான்!" "சரி; காண்ட்ராக்டர் வந்தா நான் அப்புறம் வந்து பாக்கறேன்னு சொல்லு." சாமண்ணா வெளியே வந்து கொஞ்ச தூரம் நடந்து அரைக் கதவாய்ச் சாத்தி வைத்திருந்த 'அஞ்சு ராந்தல்' தண்ணீர்ப் பந்தலுக்குள் நுழைந்தபோது சில பேர் அவனை விநோதமாகப் பார்த்து ரகசியக் குரலில் பேசிக் கொண்டார்கள். அவசரமாக ஒரு காப்பி வாங்கி குடித்துவிட்டுப் பக்கத்து வெற்றிலை பாக்குக் கடை முன் போய் நின்றான். அங்கே, சுதேசமித்திரன் வால்போஸ்டரில் - "அம்பாள் லாட்ஜ் ஓட்டல் முதலாளி மர்மக் கொலை! சாமண்ணா மீது சந்தேகம்! போலீஸ் சாமண்ணாவை வலைபோட்டுத் தேடுகிறது!" ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|