உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
14 பின் வரிசையில் பாப்பா தலைகுனிந்து இருக்கும் நிலை கண்டு கோமளத்தின் உள்ளம் உருகியது. அந்தப் பருவகால உணர்வுகள் அவள் அறியாததல்ல. அதன் வேகங்கள், சக்திகள், ஆத்திரங்கள், வெறிகள், உன்மத்தங்கள் எல்லாமே அவள் அனுபவித்து அறிந்தவைதான். பருவம் அரும்பும் போது அந்த உணர்வும் அரும்புவதாயிற்றே! கோமளத்தின் யௌவனம் சற்று முன்னரே தழைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், அவளது பதினோராவது வயதில், அவளது அத்தை மகன் ராஜன் கட்டுக் குடுமியுடன் மயில்கண் வேட்டி கட்டி, மலையாள முண்டு போர்த்தி வந்து நிற்பானே, அதை யாரால் மறக்க முடியும்? நன்றாகப் பாடுவான். குரல் தேனாக இனிக்கும். ஹரிகேசவ நல்லூர் பாகவதரிடம் பாடம். 'பையன் பிரமாதமாக வருவான்' என்பது அவர் கணிப்பு. அவனுக்கு அப்போது பதினெட்டு வயதுதான். அத்தை பத்மாசினியின் ஒரே மகன். அத்தை குடும்பமே சங்கீதக் குடும்பம். ராஜன் அதற்கு முழு வாரிசாக வந்திருந்தான். ஒரு ராத்திரி, கோமளத்தின் வீட்டில் நவராத்திரியின் போது அவன் பாடிய அந்தக் காட்சி நினைவில் வந்தது. ராஜன் நடுக்கூடத்தில் நாயகமாக உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறான். அந்தக் கூடத்தின் விஸ்தாரத்துள் அவன் குரல் சிற்றலையாக அலைகிறது. அதன் ரீங்காரக் குழைவுகள் எல்லோர் உள்ளங்களையும் பிசைந்து எடுக்கிறது. எல்லோரும் மெய்மறந்து கிடைக்கிறார்கள். பதினோரு பிராயமே ஆகியிருந்த கோமளத்துக்கு, உடல் அமைப்பில் அதற்குள் சிறுமித்தனம் மறைந்து பருவ மாறுதல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்பா ஜாதகக் கட்டைத் தூக்கி மூன்று வருடமாக வியர்த்துக் கொண்டிருந்தார். அன்று ராஜன் பாடத் தொடங்கியதுதான் தாமதம்! கோமளத்தை ஒரு புதிய உணர்வு போர்த்திக் கொண்டது. கோபால கிருஷ்ண பாரதியின் 'வாராமல் இருப்பாரோ' என்ற அந்தப் பாடல் வரியும், சுருட்டி ராகத்தின் இனிமையும், அத்தான் ராஜனின் அழகு வடிவமும் ஆண்மையும் எல்லாமே அவள் மனத்துள் ஒரு மயக்க உணர்ச்சியைக் கிளறி விட்டது. உள்ளே ஒரு கள்ள நினைவு தோன்றி, 'ராஜன், ராஜன்' என்று சொல்லிக் கொண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. இரவெல்லாம் உணர்ச்சிப் பெருக்கில் கிடந்து உழன்று விட்டுக் காலையில் எழுந்ததும், "அம்மா, இங்கே வந்து பாரு" என்று கிணற்றடியில் பாவாடையை ஒரு கையால் சற்றே உயர்த்திக் கொண்டு சிறுமி கோமளம் இரைய, அம்மா ஓடிவந்து பார்த்து அவளது நிலையை உணர்ந்து, "ஐயோ ராமா! வெளியிலே சொல்லித் தொலைக்காதேடீ. கல்யாணத்துக்கு முன்னாலே திரண்டுட்டாளான்னு நாலு பேர் சிரிக்கப் போறா!" என்று தலையில் அடித்துக் கொண்டது இன்னும் அவன் நினைவில் உள்ளது. ராஜன் தான் அவளது முதல் விழிப்பு, முதல் காதல், முதல் மோகம். அதற்குப் பின் அப்பா பதினைந்தே மாதத்திற்குள் வரன் பார்த்து அவளுக்கு வரதாச்சாரியைத் திருமணம் செய்து வைத்து விட்டார். இருந்தும் மனசில் விழுந்த முதல் ஓவியம், ராஜனின் உருவம், மறக்க முடியாதபடி கல்லில் செதுக்கியது போல் நிலைத்து விட்டது. அத்தை வசதியில்லாதவள். அப்பாவுக்கு, 'அவன் ஒரு பாடகன் தானே!' என்ற அலட்சியம்! விறுவிறு என்று மூன்று வருடத்தில் முன்னுக்கு வந்த ராஜன் திடீரென்று டி.பி.க்கு ஆளாகிப் பத்து மாதத்தில் உருக்குலைந்து அத்தைக்கு முன்னாடியே இறந்து போனான். கோமளத்துக்கு அது ஒரு பலத்த அடி. ராஜனை அவள் மணந்திருந்தாள் அவனுக்கு இந்த வியாதியே வந்திருக்காது என்று எத்தனை முறை நினைத்திருக்கிறாள்! அந்த வலி இன்னும் அவளிடம் இருந்தது. தொட்டுப் பார்த்தால் குபுக்கென்று அழுகை வந்துவிடும். அவளது சமூக அமைப்புக்கும், அந்தப் பழைய நாட்களுக்கும் காதல் என்ற உணர்ச்சியே ஒவ்வாது. அந்த வார்த்தையைக் கூட அவள் உச்சரிக்க முடியாது. ஏதோ அசிங்கத்தைச் சொல்லி விட்டது போல் பார்ப்பார்கள். ஆனால், சற்று முன்னேறி ஆங்கிலப் பழக்கவழக்கம் அதிகம் பரிச்சயப்பட்ட நாளில், ஒரு பெண், அதுவும் தாசி குலத்தில் பிறந்து வளர்ந்தவள் நிச்சயம் காதலைப் பற்றி நினைக்கவும் முடியும், பெறவும் முடியும். எனவே, பாப்பாவின் ஆசையில் எந்தத் தவறும் இல்லை என்று எண்ணிய கோமளம் அவளுக்காக இரக்கப்பட்டாள். அவன் படும் வேதனையைக் காண கோமளத்தால் சகிக்கவில்லை. நாடகம் முடியும் வரை காத்திருந்தாள். முடிந்தது. கோமளம் தானே வலியச் சென்று, "வா பாப்பா!" என்று அழைத்தாள். பாப்பாவின் முகம் நிமிர்ந்ததும் கோமளத்தின் மனம் பதறியது. கண்ணீர் மாலை மாலையாகப் பெருகி வாடிய முகம், தலைகலைந்து பிசிறுகளாகப் பறந்தது. கோமளம் பாப்பாவின் காதோடு, "பைத்தியம்! சாமண்ணா கடைசியிலே உன்னைத்தான் திரும்பித் திரும்பிப் பார்த்தான். நீயானால் நிமிரவே இல்லை போ! சாமண்ணா ராத்திரி தூங்க மாட்டான். சோகமா இருப்பான்" என்றாள். பாப்பாவின் இமைகள் கொட்டின. ஒரு சின்ன வெளிச்சம் விழி ஓரத்தில் அடித்தது. "அப்படியா?" என்றாள். துக்கமும் இன்பமும் கலந்து வந்த குரல் வெயில் ஊடே மழை அடிப்பது போல் இருந்தது. "பைத்தியம்! நல்ல சமயத்தில் பார்க்க மாட்டே! நீ பார்க்காததனால அவன் ரெண்டு வாட்டி கூடவே பார்க்க, அதைப் பல பேர் கவனிச்சா! வா, நாங்க போற வழியில் வெங்கடா லாட்ஜ்லதான் சாப்பிடப் போறோம். நீயும் வா!" என்று அவளை ஆதரவுடன் சேர்த்து இழுத்துக் கொண்டு கூட்டத்தின் ஊடே நடந்து சென்றாள் கோமளம். கர்ணா - அர்ச்சுனா நாடகம் முப்பத்திரண்டாம் நாளைத் தாண்டிவிட, சிங்காரப் பொட்டு மேல் ஜவ்வாதும் புனுகும் மணம் வீச, இளம் தொந்தி சற்றுப் பெரிதாகியது. தாடை எலும்பு மறைந்து போய்ச் சதைக் கோளம் ஆகிவிட்டது. டாக்டர் ராமமூர்த்தி தமது விஸ்தாரமான பங்களா தோட்டத்தில் சாமண்ணாவுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்து, முக்கியமான ஊர்ப் பிரமுகர்கள் அத்தனை பேரையும் அழைத்திருந்தார். பசுமையான வாழை இலைகள் போட்டு, பக்கத்தில் வெள்ளி டம்ளர்கள் பளபளத்தன. காஸ் லைட்டுகள் அங்கே தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டு பளீர் என்று வெளிச்சம்! தனியாகத் தென்னங்கீற்று கட்டி, உள்ளே நளபாகம் நடந்து கொண்டிருந்தது. பாயச வாசனை அந்தப் பிரதேசத்தையே தூக்கி அடித்தது. பாப்பாவுக்கும் அழைப்பு போயிருந்தது. ஆனால் அவளுக்கு என்னவோ இந்த விருந்துக்குச் செல்ல ஒப்பவில்லை. அந்த அழைப்பின் பின்னணியில் சகுந்தலா இருக்கிறாள் என்பதே காரணம். விருந்துக்குப் போய்விட்டு மனத்தை ரணமாக்கிக் கொண்டு திரும்ப அவள் இஷ்டப்படவில்லை. ஆனால் ஆறு மணிக்குக் கோமளம் வந்து, "நன்னாருக்கு. வராம இருப்பியோ, சாமண்ணா என்ன நினைப்பான்?" என்று செல்லமாக அதட்டியே அவளை அழைத்துச் சென்று விட்டாள். ஒரே மினுமினுப்பாக இருந்தது விருந்தினர் வரிசை! அத்தனை பேரும் சீமான்கள், சீமாட்டிகளாக வந்திருந்தார்கள். ப்ரூச், நாகொத்து, ஒட்டியாணம், காது சரம், அட்டிகை எல்லாம் மின்னின. பல ஜரிகைத் தலைப்பாக்கள்! சாப்பிட்டு முடிந்ததும் ஆரவாரத்திடையே ராமமூர்த்தி எழுந்து பேசத் தொடங்கினார். "சகோதர சகோதரிகளே, நான் என் தொழிலை விட்டுடலாம்னு பார்க்கிறேன். ஒரு டிராமா கம்பெனியை எடுத்து நடத்துகிறதாக உத்தேசம். (சிரிப்பு) வேடிக்கைக்காச் சொல்லவில்லை. இந்த கர்ணா - அர்ச்சுனா நாடகம் அப்படிப் போடு போடென்று போடுகிறது. கம்பெனி வாங்கிய கடன் எல்லாம் அநேகமாக அடைஞ்சுடுத்து. அது மட்டுமில்லை; கம்பெனி நம்ம ஊர் மைதானத்தையே விலைக்கு வாங்கிடும் போல் இருக்கு! (கரகோஷம்). இவ்வளவும் முப்பத்தைந்தே நாட்களுக்குள். யாரும் இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு அதிகம் சம்பாதிச்சிருக்க முடியாது. இந்த நாடகத்தில், அதென்னவோ அத்தனை ஜனங்களுக்கும் சாமண்ணாவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நேத்திக்குப் பிறந்த சின்னக் குழந்தை கூட 'வில் விஜயனே' பாட்டுப் பாடறது. இன்னும் ஒரு மாசம் நாடகம் நடந்ததுன்னா, ஊர்லே முக்கால்வாசிப் பேரும் அர்ச்சுனர்களாக ஆயிடுவா! (ஒரே சிரிப்பு). அப்படி ஒரு நாடகப் பைத்தியம் ஏற்பட்டுப் போச்சு. சாமண்ணா நடிப்பாலே! சிங்காரப் பொட்டு அவர்களே இதை ஒத்துக் கொண்டிருக்கிறார் என்றால் சாமண்ணாவைப் பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஒரு விருந்து நடத்தணும் சாமண்ணா பேருக்குன்னு நான் முதல் முதல் சொன்னப்போ அவர்தான் முன்னாலே நின்னு அது ரொம்பப் பொருத்தம்னு சொன்னவர். இப்படி எல்லோராலும் ஒரே மனதாக எண்ணப்பட்டுப் புகழப்பட்ட சாமண்ணாவுக்கு இந்த மலர் மாலையை அணிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்." டாக்டர் ராமமூர்த்தி மாலையைச் சாமண்ணாவின் கழுத்தில் போட அங்கு கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் பலத்த கரகோஷம் செய்தனர். டாக்டர் பேச்சை ஆமோதித்துப் பலரும் பேச, கடைசியில் சகுந்தலா கையை உயர்த்தினாள். "என் மகள் பேசணும்னு ஆசைப்படறா. அவளுக்கு நான் என்னைக்குமே எதுக்குமே தடை விதிச்சது கிடையாது" என்று சொல்ல, சகுந்தலா எழுந்து நின்றாள். சாமண்ணாவைக் கடைவிழியால் பார்த்தாள். பிறகு பேச்சை ஆரம்பிக்க, அவள் எதிரே இருந்த பாப்பாவின் கண்கள் சற்றே சுழன்றன. பக்கத்தில் கோமளம், "பாப்பா! பாப்பா!" என்று உசுப்பினாள். பாப்பா நினைவில்லாமல் நாற்காலியிலிருந்து கீழே சரிந்து விட்டாள். 'ஆ' என்று பல குரல்கள் எழுந்தன. ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|