30

     சாயங்காலம் எல்லோருமாக ஆஸ்பத்திரிக்குப் போகும் போது, சுபத்ராவுக்காகக் காத்திருந்தார்கள். அரை மணி காத்திருந்த பிறகு,

     சேட் எழுந்து போய் டெலிபோன் பண்ணிப் பார்த்துவிட்டு,

     "இன்னும் வீட்டுக்கு வரலையாம் ஜீ" என்று டைரக்டரிடம் சொன்னார். டைரக்டர் பொறுமை இழந்து கொண்டிருந்தார்.

     "வந்திரட்டம். அவங்க இல்லாம போன நல்லா இருக்குமா?" என டைரக்டரைப் பார்த்துக் கேட்டார்.

     டைரக்டர் பதில் பேசாமல், குழாயில் புகையிலைத் தூளை நிரப்பிக் கொண்டிருந்தார். எல்லோரும் மணியை அடிக்கடிப் பார்த்தார்கள். ஆறு, ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால், ஏழு. எல்லோரும் நிதானமிழந்த நிலையில் சேட்டைப் பார்த்தனர். அவர்களது பார்வை சேட்டைக் கிளப்பி விட்டது.

     போன் அருகில் உட்கார்ந்து திரும்பவும் சுழற்றினார்.

     "நான் தான் சேட் பேசறேன்."

     "....."

     "எல்லோரும் காத்திருக்கோமே!"

     "....."

     "அதெப்படி நீங்க இல்லாமப் போயிரலாமா?"

     "....."

     அதற்குப் பிறகு சேட் வெகுநேரம் ஹாம் ஹாம் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

     அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. போனைச் சோர்வுடன் கீழே வைத்தார்.

     "என்ன சொல்றாங்க?" என்றார், டைரக்டர்.

     "இப்பத்தான் வீட்டுக்கு வந்திருக்காங்களாம். 'ரொம்ப களைப்பா இருக்கு. நான் இப்ப வந்து என்ன செய்யப் போறேன்? நீங்க எல்லோரும் பார்த்துவிட்டு வாங்க. நான் அப்புறம் பார்த்துக்கறேன்' என்கிறாங்க."

     அவர் மனக்குறிப்பை உணர்ந்து டைரக்டர், "எல்லோரும் வாங்க போவோம்" என்றார்.

     எல்லோரும் ஒவ்வொருவராக வெளியே காத்திருந்த வேனை நோக்கிப் போனார்கள்.

     சிங்காரப் பொட்டும், சேட்டும்தான் மிச்சம்.

     சிங்காரம் சிலை போல் நின்றான். கண்கள் ஒன்றில் தான் மனம் தெரிந்தது.

     "சிங்காரம்!" என்றார் சேட் கரகரத்த தொனியில். "பணம் தெய்வமாகப் போச்சு!" என்றார் பிழியும் குரலில். சிந்தனை தோய்ந்த அடியாக வைத்து அவர் வாசலுக்குப் போக, சிங்காரப் பொட்டு அவரைப் பின்பற்றினான்.

     "வெள்ளைக்காரன் அரசாள வந்துட்டானில்லே! வியாபாரம் சிம்மாசனம் ஏறும். மனிதாபிமானம் இறங்கும்" என்று தாழ்ந்த குரலில் கூறிக் கொண்டே நடந்தார்.

     எல்லோரும் வேனில் ஏறினார்கள்.

     ஆஸ்பத்திரி நிறைய 'கார்பாலிக்' நெடி மெலிதாக வீசியது.

     உள்ளே வார்டுகள் வெளிச்சங்களாகத் தெரிந்தன. வரிசையான கட்டில்கள் அனைத்தும் மௌனமாக இருந்தன.

     நர்ஸ் யாராவது நடந்தால் தான் சலனம்! மற்றபடி எல்லாமே அசைவற்றுத் தெரிந்தன!

     'ஏ' வார்டுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். ஒரு கர்ப்பக் கிருக அமைதி! மெல்லிய பாத உரசல்கள் மட்டும் கேட்டன.

     அத்தனை பேர் பார்வைகளும் உறைந்து கிடக்க, சாமண்ணா கட்டிலில் வெள்ளைப் போர்வைக் குவியலாகக் கிடந்தான். கண்கள் பனிக்கப் பார்த்தான்.

     சேட் அவன் அருகில் போய் முக்காலியில் அமர்ந்தார்.

     "சாமு!" என்றவர், இதயம் கரைந்தது போல், "உங்களுக்குப் புகழ் வரணும்னு அழைச்சிட்டு வந்தேன்! இப்படிக் காலை இழந்துடுவீங்கன்னு நினைக்கலை" என்று வெதும்பிச் சொன்னார்.

     அறை ஒரு முறை விம்மியது.

     சாமண்ணாவால் பேச முடியவில்லை.

     கண்கள் பொங்கிக் கொண்டு பார்த்தன. கூட்டத்தில் அத்தனை பேரும் 'மனித நன்றி'களாகத் தெரிந்தார்கள்.

     அவனது மௌனம் எல்லோரையும் கலக்கிவிட்டது. சுற்றி நின்ற அத்தனை பேரும் தங்கள் கால்களையே இழந்தவர்களைப் போல் வருத்தம் தோய்ந்து நின்றனர்.

     இப்போதுதான் சாமண்ணாவுக்கு ஓர் உண்மை பளிச்சிட்டது.

     இத்தனை நாளும் ஸ்டூடியோவில் கும்பலாக இருந்து உரசி, தழுவி, ஏசி, இணைந்து தனித்தனி மனிதர்களாக இயங்கினார்கள். இவர்கள் அத்தனை பேர் ஊடேயும் இப்போது தனியான நேசம் ஒன்றும் ஒரு குடும்பப் பாசமாக மாறியிருப்பதை உணர்ந்தான்.

     இல்லாவிடில் அன்னிய நாட்டில் பிறந்த இந்த வெள்ளைக்கார டைரக்டர் எனக்காக ஏன் அழ வேண்டும்?

     சாமண்ணா கையை அவர்பால் உயர்த்தினான்.

     அதைச் சட்டென்று பற்றிக் கொண்டு, "ஸாம் - யூ" என்று வழக்கமான முறையில் அவன் பெயரை உச்சரித்தார். அதற்கு மேல் வார்த்தை வராமல் தத்தளித்து நின்றார்.

     காற்று ஒருமுறை விசும்பிக் கொண்டது.

     "சாமூ! நாங்கள் எல்லாரும் என்னென்னவோ செஞ்சு பார்த்தோம்! கவர்னர் கிட்டே பேசி, ஆஸ்பத்திரி டீன் கிட்டே சொல்லச் சொன்னோம். அவங்களும் எவ்வளவோ செஞ்சு பார்த்தாங்க! வேற வழியில்லாமல் போச்சு. காலை எடுத்துடணும், எடுக்காட்டி உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டாங்க" என்றார் சேட்.

     சேட்டிடம் அவ்வளவு பெரிய இதயம் இருக்கும் என்று சாமண்ணாவுக்குத் தெரியாது.

     சொந்த மகனுக்கு நேர்ந்தது போல் அவர் விசித்ததைக் கூடியிருந்தவர் எல்லாருமே கண்டு கண்கலங்கினர்.

     சாமண்ணாவின் மனம் நெகிழ்ந்து கூழாகிவிட்டது. இதயம் அடைத்தது.

     அவர்கள் வரும் அந்த நிமிடம்வரை, 'இந்த வாழ்க்கை இனி எதற்கு?' என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தான்.

     ஆனால் இப்போது இவர்களது இரக்கங்களைப் பார்க்கிற போது எங்கிருந்தோ ஒரு புதிய தென்றல் வீசி அவனைப் பரவசமாக்கியது.

     ஆகா, இவர்களது பாசத்தை அடைவதற்காகவே வாழ வேண்டும் என்று மனசு அடித்தது.

     "சேட்! ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கேன். உங்க அன்பைப் பெற்றதற்கு! என்னை உயரத்தில் கொண்டு வைக்கணும்னு ரொம்பப் பாடுபட்டீங்க. அதிலே ஏதோ ஒரு அம்சம் ஆண்டவனுக்குப் பிடிக்கலை. இப்படி ஆயிட்டேன்! என் சொப்பனத்திலே கூட நினைக்கலை. நான் இப்படி ஆவேன்னு! ஒரே நிமிஷத்திலே கடவுள் என்னை வயோதிகன் ஆக்கிட்டாரே!"

     மேலே பேச்சு ஓடவில்லை. கலகல என்று நீர் கொட்டியது.

     சேட் அவன் கையைப் பிடித்தார். மார்பை மென்மையாகத் தொட்டார்.

     "சாமூ! கவலைப்படாதீங்க! ஆண்டவன் எப்போதும் தவறே செய்யமாட்டார். தவறு மாதிரி தோன்றினாலும் அது நன்மையிலே தான் முடியும். இப்போ படத்தை முடிச்சுட்டேன்! வாங்கறதுக்குப் போட்டாப் போட்டி! சாமூ! இதிலே பணம் சம்பாதிச்சா, நான் பேசின தொகைக்கு மேலே இன்னொரு மடங்கு கொடுத்துருவேன்! உங்களை அம்போன்னு விட்டுற மாட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. மனோதிடத்தோடு இருங்க!"

     பிறகு, கூட வந்தவர்களும் தனித்தனி மனங்களைத் திறந்து தைரியத்தைப் பொழிந்தார்கள்.

     இவர்களோடு பேசிக் கொண்டிருந்த போதிலும் சாமண்ணாவின் மனம் மட்டும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அடிக்கடி அறை வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தன சாமண்ணாவின் கண்கள்.

     கடைசியில் அடக்க முடியாத நிலையில், "சுபத்ராவுக்குத் தெரியுமில்லே?" என்று கேட்டான்.

     "தெரியும். அவங்க கூட இப்போ எங்களோடு வர்றதாத்தான் இருந்தாங்க! அதுக்குள்ள ஏதோ அவசரமா ஏதோ வேலைன்னு..." என்றார் சேட்.

     "அவங்களும் கோஷும் கார்லே போயிட்டிருந்தாங்க! நான் புறப்பட்டபோது பார்த்தேன்!" என்று ஒரு வெகுளி துணைக் காமிராமேன் கூறினான்.

     சாமண்ணாவின் முகத்தில் இறங்கிய அந்த நிழலை சிங்காரப் பொட்டு ஒருவனால்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

     சில கணங்கள் வரை, சாமண்ணாவின் பார்வை வெறுமை ஆகியது. சாமண்ணாவின் உள்ளம் வேதனைப் படுவதை உணர்ந்து கொண்ட சேட்,

     "ஒரு புரோக்ராமுக்குப் போறாங்க. வந்துருவாங்க!" என்றார். அது தனக்காகச் சொல்லப்படும் ஆறுதல் வார்த்தை என்பதை சாமண்ணா புரிந்து கொண்டு வறட்சியாக ஒரு புன்னகை காட்டினான்.

     பிறகு உரையாடல் சினிமாவைப் பற்றித் திரும்பியது.

     எல்லோரும் சிறிது பரவசமாகப் பேசினார்கள். அந்தக் கணத்தில் சாமண்ணாவின் துக்கத்தை எல்லோருமே மறந்தார்கள்.

     அரைமணியில் எல்லோரும் பேசிவிட்டுப் புறப்பட்டுப் போக, ஒரே ஒரு நிழல் மட்டும் தயங்கித் தயங்கி நின்றதை சாமண்ணா கவனித்தான். எல்லோரும் வெளியேறிவிட்ட பிறகும் சிங்காரப் பொட்டு திரும்பி வந்து நிற்பதைக் கண்ட சாமண்ணா, "என்ன சிங்காரம்?" என்று கேட்க, முகத்தை இறுக மூடிய வண்ணம் பதில் பேசாமல் நின்றான் சிங்காரப் பொட்டு.

     சாமண்ணா அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

     "அண்ணே! இந்தக் கோலத்திலேயா நான் உங்களைப் பார்க்கணும்? என்னால் தாங்க முடியலையே!"

     புலம்பி விசிக்க, சிங்காரப் பொட்டுவின் விம்மல் அடங்க நேரம் ஆயிற்று.

     "இந்தா பாரு, சிங்காரம்! நீ அழுதயானா எனக்கு துக்கம் அடக்க முடியாம வந்துடும்! நீதானே என்னைச் சமாதானம் பண்ண வந்திருக்கே! அதை விட்டுட்டு நீயே அழலாமா?" என்றான்.

     சிங்காரம் அழுகையை அடக்கினான்.

     "இனிமே மாட்டேன்! இனிமே அழமாட்டேன். சாமா அண்ணே! கவலையே படாதீங்க! இதனால என்ன நடந்தாலும் சரி, இனிமே இந்த அடியவன் தான் தங்களுக்கு ஊன்றும் காலாய் இருப்பேன்! ஆமாம், நான் தான் அது! நானாத்தான் இருப்பேன்!" என்றான் ஆவேசம் வந்தவன் போல.

     "சிங்காரம், பதட்டப்படாதே! மெதுவாகப் பேசு! மெதுவா..." என்று சொல்லியவாறு சாமண்ணா அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தான்.

     சிறிது நேரம் வரை சாமண்ணாவின் அலையும் கண்களுக்கு இடம் கொடுத்து விட்டு,

     "அண்ணே!" என்றான்.

     சிங்காரத்தின் நா தழுதழுத்தது.

     சாமண்ணா திடுக்கிட்டுத் திரும்பினான்.

     "அவள் வரமாட்டா!"

     சிங்காரம் தணிந்த குரலில் சொன்னான்.