உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
35 நினைக்க நினைக்க மனசில் வேதனையும் ஆச்சரியமும் பெருகியது சாமண்ணாவுக்கு. 'தொடர்ச்சியாக எந்த பின்னமும் இல்லாமல் என் மீது உயிரை வைத்துள்ள பாப்பாவை உதாசீனப்படுத்தி விட்டேன். இது எவ்வளவு பெரிய தவறு? சில நாட்களே பழகிய சுபத்ரா என்னை அலட்சியப்படுத்துகிறாள் என்று தெரிந்தபோது மனம் என்னமாய்த் துடித்தது? எத்தனை வேதனைப்பட்டேன்? அப்படித்தானே துடித்திருப்பாள்?' ஆதியிலிருந்தே அடி பிசகி விட்ட குற்றத்தை இப்போது உணர்ந்தான். 'ஏதாவது ஓரிடத்தில் ஸ்திரமாக மனம் ஊன்றிப் பழகாமல் எட்டாத கனிக்கு ஆசைப்பட்டேனே' என்று வருந்தினான். 'பாப்பா மீது அரும்பு சிநேகம் வைத்தேன். அதை வாட விட்டு விட்டேன். சகுந்தலா மீது மலர் சிநேகம் வைத்தேன். அது காய்க்காமலே போய் விட்டது. சுபத்ரா மீது கனி சிநேகம் வைத்தேன். அது கனியாமலே போய் விட்டது. இதற்கெல்லாம் நானே தான் காரணம். ஒருவர் மீது நிலைக்காமல் மேலே மேலே மேலே போனதால் ஒருநாள் தடால் என்று பாதாளத்தில் விழ வேண்டி வந்தது. ராத்திரி சகுந்தலாவின் திருமண ஊர்வலம் போன போது ஏற்பட்ட மன எழுச்சி இன்னும் அடங்கவில்லை. அதன் வேதனை இன்னும் அடிமனத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்படியானால் எத்தனையோ தியாகங்கள் செய்து, எத்தனையோ முறை ஏமாற்றத்துக்குள்ளாகியும் விடாமல் தொடர்ந்து என்னையே எண்ணிக் கொண்டிருக்கும் பாப்பாவின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்! என்னுடைய அலட்சியம் எவ்வளவு வேதனை தந்திருக்கும்? ஒவ்வொரு கணமும் நரகத்தில் இருந்தது போல் உணர்ந்திருப்பாள். சொல்லொணாத் துயரம் அடைந்திருப்பாள்.' "சரி; இப்போதாவது அவளைத் தேடிச் சென்று செய்த குற்றத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிடு" என்றது உள்மனம். "இப்போதா? வேறு கதி இல்லை என்று தெரிந்ததும், அடையும் சரணாகதி இது என்பது பாப்பாவுக்குப் புரியாதா?" "அப்படியானால் அவளை மறந்துவிடப் போகிறாயா நீ? அவளைப் பார்க்கப் போவதே இல்லையா?" "நிச்சயமா இல்லை." "மாமி கடுதாசியிலே எழுதியிருக்காளே! நாளை அந்தத் திருவிழா முடிஞ்சதும் பாப்பா உன்னைப் பார்க்க ஓடோடி வரப் போகிறாளே!" "வரட்டும்!" "நீ எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. உன்னை அவள் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறாள். உன்னிடம் மாறாத, அழியாத, அசைக்கமுடியாத அன்பு வைத்திருக்கிறாள். அந்தத் தூய்மையான, உண்மையான உள்ளத்தில் உன்னைத் தவிர வேறு யாருக்குமே இடமில்லை என்று கூறுவாளே, அப்போது நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?" சாமண்ணா யோசித்தான். 'நாளை பாப்பா வந்தால் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்? சகுந்தலையை அடியோடு மறந்து போயிருந்த துஷ்யந்தனைப் போல் அல்லவா நான் இத்தனை நாளும் பாப்பாவை மறந்திருந்தேன்! இப்போது அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்?' 'அவள் நாளைக்கு இங்கே உன்னைத் தேடி வரத்தான் போகிறாள். உன்னைப் பார்த்ததும் புதையலில் கிடைத்த பொக்கிஷம் மாதிரி மகிழப் போகிறாள்!' சாமண்ணா நிமிர்ந்தான். "கந்தப்பா!" என்று அழைத்தான். கந்தப்பன் ஓடி வந்தான். "நேத்து மாசிலாமணி முதலியார் வந்தாருன்னு சொன்னியே!" "ஆமாங்க! நீங்க தூங்கிட்டிருந்தீங்க. அதனாலே உங்களை எழுப்ப வேணாம். அப்புறம் வர்றேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு." "ஊர்லேதான் இருக்காரா?" "ஆமாங்க!" "அவரை இப்ப அழைச்சுட்டு வர முடியுமா?" "வரேங்க." மத்தியானம் மாசிலாமணி குடையோடு வந்தார். அவர் தான் அந்த வீட்டை சாமண்ணாவுக்கு முடித்துக் கொடுத்தது. கல்கத்தாவுக்குப் போகுமுன் கொஞ்சம் முன்பணம் கொடுத்திருந்தான். இரண்டு மாசத்தில் மீதியைத் தருவதாக ஒப்பந்தம். இப்போது மூன்று மாதங்கள் ஓடி விட்டன. மாசிலாமணி வந்த போது, "மன்னிக்கணும். இந்த வெயிலில் உங்களை வரச் சொன்னதுக்கு" என்றான் சாமண்ணா. "என்ன அப்படிச் சொல்றீங்க? நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர்! எவ்வளவு புகழ்! இப்ப கால் போயிட்டுது. அதனால ஊரோடு வந்து சேர்ந்துட்டீங்க. நீங்க நல்ல நிலையிலே இருக்கறப்போ ஆயிரம் பேர் வருவாங்க. இப்ப திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாங்க. இதுதான் உலகம். வாழ்வும் தாழ்வும் மனுஷங்களுக்கு சகஜம். அதை மறக்கக் கூடாது. அப்படிச் சிலபேர் தான் இருப்பாங்க. இப்ப அந்த நிலையிலும் உங்களைத் தேடி வர்றவங்கதான் உங்ககிட்ட உண்மையான அக்கறை உள்ளவங்க. இது புரிஞ்சாப் போதும்" என்று மாசிலாமணி கூறியபோது சாமண்ணாவுக்குப் பாப்பாவின் நினைவு தோன்றி 'சொரேர்' என்றது. கண் கலங்கினான். "முதலியார்! நாளைக்கு நான் ஊருக்குப் புறப்படறேன். இப்ப எதுக்குக் கூப்பிட்டேன்னா - நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. முழு வீட்டையும் எழுதி வாங்கிக்குங்க. எனக்கு இப்பப் பணம் தேவைப்படுது. நான் கொடுத்த 'அட்வான்ஸ்' மூவாயிரத்தையும் திருப்பித் தந்துட்டாப் போதும். நீங்கதான் அதுக்கு ஏற்பாடு செய்யணும்" என்றான் சாமண்ணா. "ஊருக்கா? எந்த ஊருக்குப் போறீங்க?" "சொந்த ஊருக்குத்தான். பூர்வீகம். எங்க அம்மா பிறந்து வளர்ந்த ஊர்! என் ஆயுசு வரை இருக்க அது இடம் கொடுக்கும். கையில் இருக்கிற சொற்பப் பணத்தை பாங்கிலே போட்டு வச்சா அந்த வட்டியிலே என் காலம் ஓடிடும்! போதும்; கடவுளை எப்பவும் மறக்காமல் இருக்க அவரே வழி சொல்லிக் கொடுத்து இப்போ நேரமும் அமைச்சுக் கொடுத்துட்டார்!" "கவலைப்படாதீங்க! நாளைக்குப் பணத்தோடு உங்களை வந்து பார்க்கிறேன். ஒரு நாள் டயம் கொடுங்க" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் மாசிலாமணி. மறுநாள் விடியும் போதே மேகத் திரளோடு இருந்தது. பகல் மந்தமாக இருந்தது. சாமண்ணா கந்தப்பனை அழைத்துத் தன் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான். கந்தப்பன் தயங்கினான். "என்ன யோசனை பண்றே? சாமான்களை எடுத்து வை" என்றான் சாமண்ணா. "ரெண்டு நாள் கழிச்சுப் புறப்படலாங்க; பரணி கிருத்திகை குறுக்கே நிக்குது" என்றான் கந்தப்பன். சாமண்ணா விரக்தியோடு சிரித்தான். "இனிமே நாள் நட்சத்திரம் பார்க்கறதா இல்லை. அதெல்லாம் என்னை இனி ஒண்ணும் செய்யாது. செய்ய வேண்டியதையெல்லாம் செஞ்சுட்டுது. பாக்கி ஒண்ணும் இல்லை. ஆக வேண்டியதைப் பாரு" என்று தீர்மானமாய்க் கூறினான் சாமண்ணா. ராகுகாலம் கழித்து மாட்டு வண்டி ஒன்று கொண்டு வந்தான் கந்தப்பன். வயதான வண்டிக்காரர் கையில் சாட்டையுடன் கும்பிடு போட்டார். "ராமர் கோயில் அக்கிரகாரத்துக்கு எப்போ போய்ச் சேரலாம்?" சாமண்ணா கேட்டான். "ராத்திரி ஒன்பதுக்குள்ளே போயிரலாங்க! இப்போதே புறப்பட்டாத்தான் முடியும். மழை வர மாதிரித் தெரியுது." "மாசிலாமணி முதலியார் வந்துரட்டும். இதோ இப்ப வந்துடுவார்." மாசிலாமணி சொன்னபடியே பணத்தோடு வந்துவிட்டார். "இப்ப இதை வெச்சுக்குங்க. வீட்டு விஷயம் அப்புறம் பேசிக்கலாம்," என்று கூறி ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். மெள்ள க்ரச்சை ஊன்றி வாசலுக்கு வந்தான் சாமண்ணா. வண்டி ஏறும் போது சற்றுத் தயங்கி ஊரை ஒரு முறை வளைத்துப் பார்த்தான். தெருக்கோடியில் பெருமாள் கோயில் கோபுரம் தெரிந்தது. அந்த ஊரில் அவனோடு பழகிய அத்தனை பேரும் அவன் கண்ணில் தெரிந்தார்கள். இறந்து போன வக்கீல் தொடங்கி, டாக்டர், சகுந்தலா, நாடக நடிகர்கள், பாட்டுக்காரர்கள், ஓட்டல்காரர், ஆர்மோனியக்காரர், மாடிப்படி நாய் எல்லாருமே! கண்ணில் நீர் பெருகியது. ஏதோ போன ஜன்மத்தில் அவர்களோடு வாழ்ந்தது போல் தோன்றியது. தெருவும் ஊருமே இப்போது அந்நியமாகத் தோன்றியது. வண்டி புறப்பட்டதும் கந்தப்பன் கைகூப்பினான். தெரு முடிந்ததும் சாலை இரு பக்க மர வரிசை நடுவே ஓடியது. கருத்த ஆகாயம் பிரம்மாண்டமாகத் தெரிய, காற்று ஊசி வாடையாக அடித்தது. 'ஹய் ஹய்' என்றான் வண்டிக்காரன். 'கிறிச் கிறிச்' என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது அந்த வண்டி. "அம்மா வருகிறேன்" என்று துக்கம் பொங்க வாய்விட்டுக் கூவினான் சாமண்ணா. தும்பைப் பூ நரையோடு, அம்மா அவனை இடுங்கிய கண்களால் பார்ப்பது போல உணர்ந்தான். "அம்மா! உன் சந்நிதானத்திற்கே வந்து விடுகிறேன். கால் ஊனமாயிட்டுது! தெரியுமோ? நம்ம பழைய வீட்டிலேதான் இருப்பேன்! என்னை ஆசீர்வாதம் பண்ணு!" சின்னச் சாலையிலிருந்து வண்டி பெரிய சாலைக்குத் திரும்பியது. வானம் கரியதாகி நாலு திசையும் விரிந்திருந்தது. மழை மேகங்கள் அடுக்கடுக்காகப் புரண்டன. பிரம்மாண்ட இருட்டு ஒன்று அவன் வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தது. பூமி அத்தனையும் குளிர்ந்துவிட்டது. திடீரென்று பாப்பா உருவம் தோன்றியது. அமைதியாக அலையும் ஆழ்ந்த கருவிழிகள். சாந்தம் நிறைந்த புன்னகை முகம்! இளம் சிவப்பில் உதடுகள். ரேகை இழைகள் போல் காது வழியே வழியும் கூந்தல்! "பாப்பா!" தொண்டை கிழியக் கத்தினான். காற்று அதை அள்ளிச் சென்றது. வண்டிக்காரன் திரும்பிப் பார்த்தான். ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|