9

     ஒரு வாரம் வரை கொலைக் கேஸ் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இன்ஸ்பெக்டர் முனகாலா கூப்பிட்டு விடுவார் என்று சாமண்ணா தினமும் எதிர்பார்த்தான். யாரும் கூப்பிடவில்லை. வக்கீலிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லை.

     அரிதாரம் பூசிக் கொள்ளாத நாட்கள் எல்லாம் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. பொழுதும் போகவில்லை. தூக்கமும் வரவில்லை. மனசு அரித்துக் கொண்டே இருந்தது.

     டிராமா போட்டு ஊரில் ஏழெட்டு மாதங்களாக ஏற்பட்டிருந்த களை இப்போது அடியோடு போய் விட்டது. கிழிந்த நோட்டீசுகள் ஆங்காங்கே ஊசலாடிக் கொண்டிருந்தன. பாண்டு வாத்தியம் ஊமையாகி விட்டது. 'சூரியகுளம்' டிராமாக் கொட்டகை 'அம்போ' என்று சோர்ந்து கிடந்தது.

     நாடகம் நின்று போனதில் சாமண்ணாவின் துக்கத்தைக் காட்டிலும், வக்கீல் மனைவியின் வருத்தம்தான் அதிகம்.

     ஊரில் பொழுது போவதற்கு வேறு என்ன இருக்கிறது? தை, சித்திரை மாதங்களில் பெரிதாகத் திருவிழா நடந்து அதுவும் உடனே அடங்கி விடும். மற்ற நாட்களில் ஒன்றுமே கிடையாது. கடந்த சில மாதங்களாய் டிராமாதான் அந்த ஊரின் உயிரோட்டமாயிருந்தது.

     வக்கீல் வீட்டு வாசலில் கலாய்க்காரர் பாத்திரங்களுக்கு ஈயம் பூசிக் கொண்டிருந்தார். தெரு ஓரம் பள்ளம் தோண்டி ஈர மண்ணில் துருத்தியைப் பொருத்தி, 'கலாய்' பூச வேண்டிய பாத்திரங்களுக்கு நவசாரம் பூசிக் கொண்டிருந்தான் துருத்தி ஊதும் பையன். வக்கீல் மாமி நிறையப் பாத்திரங்கள் கொடுத்திருந்ததால் வாசலில் வந்து காவலாக நின்று கொண்டிருந்தாள். சைனாக்காரன் ஒருவன் முதுகில் மூட்டையுடன் 'சில்க்' துணிகள் என்பதை வினோதமாய் ஒரு ஒலி எழுப்பிக் கூவிக் கொண்டு போனான்.

     பள்ளிச் சிறுவர்கள் இரண்டு பேர் தெருவில் பாடிக் கொண்டு நடந்தார்கள்.

     "ஆனா ஆவன்னா! அலேக் ராஜா சாமண்ணா!"

     அதைக் கேட்டதும் கோமளத்துக்கு சாமண்ணாவின் நினைவு வர, சட்டென்று உள்ளே போய் வரதாச்சாரியைப் பார்த்து, "ஏன்னா! அப்புறம் சாமண்ணா கேஸ் என்னாச்சு! எல்லாம் கப்சிப்புனு இருக்கே! சாமண்ணா ஊர்லதான இருக்கான்? நாடகம் கீடகம் நடக்கும், நடக்காதா?" என்று கேட்டாள்.

     வரதாச்சாரி பருமனான 'லா' புத்தகத்தை மடக்கி நகர்த்தி வைத்துக் கொண்டே, "கேஸ் என்னடி கேஸ்! கொலை நடந்த அன்னைக்கு சாமண்ணா ஊர்லயே இல்லையே! இன்ஸ்பெக்டர் முனகாலா மூக்கு உடைப்பட்டுப் போனான் தெரியுமோ? சாமண்ணாவைப் பத்தி என்னவோ இல்லாததும் பொல்லாததுமாப் பேசினான். பொய்க் கேஸ் ஜோடிக்கிறதுலே அவன் பெரிய புலியாச்சே! ஆனா அந்தப் புலி என்கிட்ட வாலாட்ட முடியலை. அவ்வளவையும் தகர்த்தெறிஞ்சுட்டேன். முனகாலாவுக்கு யாரையாவது இப்ப இந்தக் கேஸ் சம்பந்தமா அரெஸ்ட் பண்ணி ஆகணும். பாவம், கிடந்து திண்டாடறான்."

     "அது சரி; சாமண்ணா என்ன ஆனான்? அப்புறம் அவனைக் காணவே காணமே! மறுபடியும் நாடகம் நடத்தப் போறாளாமா? இல்லை, இனி நடக்கவே நடக்காதா?" என்று வருத்தப்பட்டாள்.

     வரதாச்சாரி பேசவில்லை.

     "வாயை மூடிண்டு பதில் சொல்லாம இருந்தா எப்படி? பாவம், அந்த சாமண்ணாவை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. அந்த அப்பாவிப் பையனைப் பார்த்தா கொலை பண்ணினவன் மாதிரியா இருக்கு! அவன் முகத்திலே தேஜஸ் ஜொலிக்கிறதே! அவனுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்கோ! ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுங்கோ."

     கோமளம் கொஞ்சம் தாங்கலோடு ஊஞ்சலில் போய் உட்கார்ந்தாள்.

     "வாப்பா, வா! உனக்கு நூறு ஆயுசு" என்ற வரதாச்சாரியின் குரல் கேட்டு திரும்பினாள். இரண்டாம் நிலை வாயிலின் வழியே சற்று இளைத்துப் போன உருவம் உள்ளே நுழைந்தது. "உள்ளே போ. உன்னைப் பார்க்கவே முடியலையேன்னு மாமி தவிச்சுண்டிருக்கா. உன் கேஸ் என்ன ஆச்சுன்னு ரொம்பக் கவலைப்படறா" என்று வக்கீல் சொல்ல, வருவது சாமண்ணா என்று தெரிந்ததும், கோமளத்தின் முகம் பிரகாசமாயிற்று.

     சாமண்ணா கைகூப்பி நின்றான். "வா வா. உட்காரு, உட்காரு" என்று மாமி இரண்டு முறை ஆர்வத்தோடு அழைத்த பிறகும் சாமண்ணா உட்காராமல் கூடத்துத் தூணில் சாய்ந்தும் சாயாமலும் நின்றபடி, "பரவாயில்லை மாமி!" என்றான்.

     பக்த பிரகலாதன் நாடகத்தில் அவன் பிரகலாதனாக வந்து தூண் பக்கத்தில் நிற்கும் சாயல் போலவே இருந்தது அது. கோமளத்திற்குச் சிரிப்பு வந்துவிட்டது! சாமர்த்தியமாக அதை அடக்கிக் கொண்டாள்.

     "சாமண்ணா! இப்போ என்ன செய்துண்டிருக்கே? எப்படி இருக்கே? உங்க டிராமா இல்லாமே இந்த டவுனே டல்லாப் போச்சுப்பா. ஊர்ல உற்சாகமே இல்லே. பாவம், இளைச்சுட்டியே!" என்றாள் ஆயாசத்தோடு.

     "என்ன சொல்வேன் மாமி! நானும்தான் டிராமா இல்லாமே ரொம்பக் கஷ்டப்படறேன். நாடக நடிகன்னா வாழ்க்கையில் அவன் வேறு எதுக்குமே லாயக்கில்லை! மத்தவா மாதிரி வேறு தொழில் செய்து பிழைக்கவும் தெரியாது. திரும்பவும் நாடகம் எப்ப ஆரம்பிக்கப் போறாங்கன்னுதான் நானும் காத்துட்டு இருக்கேன். ஹும்... அதுக்கிடையிலே இந்தக் கேஸ் வேறே" என்று பெருமூச்சு விட்டான்.

     "ஏன்? மிச்சப் பேரெல்லாம் என்ன செஞ்சிண்டிருக்கா? எல்லோரும் சேர்ந்து ஆரம்பிக்கலாமே!"

     "செய்யலாம், பணம் வேணாமா?"

     "பணமா!" என்று சற்றே பார்வையை உயர்த்திய கோமளம், "நீ நினைச்சா பணம் வராதா என்ன?"

     "எப்படி மாமி வரும்? நானே இங்கே சோற்றுக்கு லாட்டரி அடிச்சிண்டிருக்கேன்!"

     "அப்படியெல்லாம் பேசாதே! அனுமான் பலம் அனுமானுக்குத் தெரியாது. உன் நடிப்பிலே மயங்கிப் போனவா எத்தனை பேர் தெரியுமா? தலையெழுத்தா உனக்கு? கையில் வெண்ணெயை வெச்சுண்டு நெய்க்கு அலைவாளோ?"

     "கையில் வெண்ணெயே இல்லை. வெறும் திண்ணையில்தான் உட்கார்ந்துண்டு பொழுது போக்கறேன். வெண்ணெய் எங்கே இருக்கு?"

     "நன்னா யோசிச்சுப் பார்த்தாத் தெரியும்."

     "புதிர் போடாதீங்க; எனக்கும் ஒண்ணும் விளங்கலே."

     "அந்தப் பொண்ணு பாப்பா இருக்காளே! அவகிட்டே எக்கச்சக்கப் பணம் இருக்கே! உனக்காக அவள் உயிரையே கொடுப்பாளே! லேசா ஒரு வார்த்தை விட்டாப் போதுமே! மகாலட்சுமி மாதிரி கொண்டு வந்து கொட்டுவாளே! உனக்கில்லாததா?"

     "கொடுப்பாள்; ஆனால் அதிலே எனக்கு விருப்பமில்லையே..."

     "ஏன் அப்படிச் சொல்றே?"

     "காரணமாகத்தான்! எனக்கு இஷ்டமில்லைன்னா அதில ஏதோ விஷயம் இருக்குன்னு வச்சுக்குங்க..."

     "அப்படியா? அவள் ஜாமீன் மட்டும் வேணுமாக்கும்? அது பரவாயில்லையோ?"

     "நானா அவளை ஜாமீன் கேட்டேன்? அவளாவேதான் எனக்குத் தெரியாம இதைச் செஞ்சிருக்கா. முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா நான் அனுமதிச்சிருக்கவே மாட்டேன்."

     "அவள் இல்லேன்னா வேறே யாரு உன்னை வெளியிலே கொண்டு வந்திருக்கப் போறா? ஜெயில்ல கிடந்து திண்டாடியிருப்பே. அதுக்காக நீ அவளுக்கு நன்றி சொல்லணும். அதை விட்டுட்டு யார் செய்யச் சொன்னா, எவா செய்யச் சொன்னான்னு கேட்கிறியே, இது உனக்கே நியாயமாயிருக்கா?" என்று சிறிது காரமாகவே பேசிய கோமளம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

     "யாரும் செய்திருக்க மாட்டாங்கறது நன்னாத் தெரியும். நன்றியோட இருக்கணுங்கறதும் தெரியும். நீங்க வருத்தப்படாதீங்க. என்னைப் பத்தித் தப்பா நினைச்சுக்காதீங்க. என் மேலே கோபப்படாதீங்க. இந்த விஷயத்திலே நான் நினைக்கிறது வேறே. அதையெல்லாம் உடைச்சுப் பேச இது சந்தர்ப்பம் இல்லை. பின்னாலே நானே சொல்றேன் உங்களுக்கு" என்றான்.

     "என்னவோ, அந்தப் பெண் உன் மேல வெச்சிருக்கிற பிரியத்தை நீ புரிஞ்சுண்டா சரி."

     "பிரியமாத்தான் இருக்கா, ஒத்துக்கறேன். ஆனா அதுக்கு மேலே போயிடக் கூடாதேன்னு கவலைப்படறேன். உங்களுக்குத் தெரியாததில்லை. நான் பிராமணக் குடும்பத்துல பிறந்தவன். எங்கப்பா சாமவேதம் படிச்சவர். கௌரவமா வாழ்ந்தவர். அவர் வயத்துலே பிறந்த நான் எங்க குடும்ப கௌரவத்தைக் காப்பாத்தணும் இல்லையா? சாதாரண நிலையிலேருந்து ஏதோ கொஞ்சம் முன்னேறி என் வயத்தைக் காப்பாத்திக்கிற நிலைக்கு வந்திருக்கேன். ஒரு சமயம் நினைச்சா, அது கூட வந்தாச்சான்னு சந்தேகமா இருக்கு!"

     "அதெல்லாம் வந்தாச்சு. அசம்பாவிதமா இந்தக் கொலைக் கேஸ் குறுக்கிட்டு உன்னை நிம்மதியில்லாமப் பண்ணிடுத்து. இல்லைன்னா இத்தனை நேரம் நீ ஜாம்ஜாம்னு நாடகத்திலே ராஜாவாட்டம் நடிச்சிண்டிருப்பியே!"

     "அதுக்குத்தான் நானும் ஆசைப்படறேன். ராஜா ஆகாட்டாலும் ராஜா மாதிரி நடிக்கிறதுக்காவது 'சான்ஸ்' கிடைக்காதான்னு ஏங்கிண்டு இருக்கேன்."

     "நிச்சயமாக் கிடைக்கும்; கவலைப்படாதே!"

     "கிடைக்கணும்! உங்க ஆசீர்வாதம். அப்புறம் பாருங்கோ, எனக்குச் சின்ன வயசிலே பெரிசு பெரிசா கனவு கண்டே வழக்கமாயிடுத்து. நான் ஓகோன்னு வரணும்! ஆமாம்! சாதாரணமா செலவுக்குக் கிடைச்சது வரவு என்கிற மாதிரி இல்லாமல் அமோகமா வாழணும். எங்க தாத்தா அப்படி வாழ்ந்தவராம். அம்மா சொல்லிச் சொல்லி ஆச்சரியப்படுவா. அந்த அமோகத்தை நானும் எட்டணும். அதுக்குக் கடவுள் அனுக்கிரகம் இருக்கணும்."

     "நடக்கும்! நடக்கும்! ஏன் நடக்காது?"

     "இருந்தாலும் மனித யத்தனம்னு ஒண்ணு இருக்கோல்லியோ! நான் இப்ப அந்த யத்தனத்திலே இருக்கேன் - எத்தனை நாள், எத்தனை காலம் யத்தனம் பண்ணணுமோ, அதுவரைக்கும், அந்த லட்சியத்தை அடையற வரைக்கும் நான் என் சொந்த சுகத்தில், சொந்த வசதியில் ஆழ்ந்துட கூடாதுன்னு கங்கணம் கட்டிண்டிருக்கேன்."

     கோமளம் சற்றே வியப்பாக நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் குரலில் ஒரு வைராக்கியம் தொனித்தது.

     "மாமி! சாமண்ணாவுக்கு ஆசை, பாசம், நேசம், இதயம் இதெல்லாம் எதுவும் இல்லைன்னு நினைச்சுடாதீங்கோ! எல்லாமே இருக்கு! நிறையவே இருக்கு! நான் நடிகனாச்சே! இல்லாத உணர்ச்சியை எல்லாம் கூட இருக்கும்படி காட்டணுமே! ஆனா மாமி இந்த உணர்ச்சி எல்லாத்தையும் நான் மறக்கடிச்சுட்டு புழுவா வாழ்ந்திருண்டிருக்கேன். என் மேலே அனுதாபப்பட்டு யாராவது உதவி செய்ய முன்வந்தால் அவாளையும் என் துரதிர்ஷ்டம் துரத்தும். அப்படி ஒரு ராசி எனக்கு. என்ன ஆனாலும் சரின்னு நான் ஒரு வெறியோடு, லட்சியத்தை நோக்கிப் புறப்பட்டிருக்கேன். எங்கே போய் நிற்பேனோ எனக்கே தெரியாது. நான் திடமாச் செயல்படணும். அப்பப்போ சோதனை வரும். அதுக்கெல்லாம் ஈடு கொடுத்து நிமிர்ந்து நிற்கணும். உள் மனம் அப்பப்போ என்னைச் சுண்டி விட்டுக் கொண்டே இருக்கு. 'டேய் சாமண்ணா, எச்சரிக்கையா இருடா. இப்போ கிடைக்கிற களாக்காய் மேலே கண் வைக்காதேடா. அப்புறம் பலாக்காய் கிடைக்காமல் போயிடும்'னு. அதனால் தான் இந்த ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டேன் மாமி!" என்றான்.

     கோமளத்திற்கு அவன் பேச்சு வியப்பைத் தந்தாலும் அதனூடே மனம் உடைந்து போன ஒரு நடிகனின் லட்சியக் குரல் கணீர் என்று ஒலித்தது.

     "அப்படின்னா இப்ப என்ன செய்யப் போறே? அந்தப் பெண் உதவியே வேண்டாம் என்கிறாயா?"

     "செய்த உதவி வரைக்கும் சரி. அதுக்காக அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். ஆனால் அது என் மனசிலே ஒரு பாசத்தை வளர்த்து எங்கள் உறவைப் பலப்படுத்திட கூடாதேன்னு தான் பயப்படறேன்."

     "அதென்ன மர்மமோ? அதென்ன பயமோ! கேட்டாலும் சமயம் வரப்போ சொல்றேங்கறே? அப்படின்னா உனக்கு யார் உதவியும் வேண்டாம் என்கிறயாக்கும்?"

     "அப்படிச் சொல்லுவேனா? இப்போ வேறு யாராவது தனவான், கனவான் உதவி செய்வதாயிருந்தால் அதை தாராளமா ஏத்துப்பேன்..."

     அவனை மீறி ஒரு நாடகச் சிரிப்புச் சிரித்தான்.

     "நீ சொல்றதெல்லாம் நியாயமாத்தான் இருக்கு. ஆனா இப்ப இந்த இக்கட்டிலிருந்து நீ தப்பிக்கணுமே! அதுக்கென்ன வழி? அதுதான் எனக்குப் பெரிய கவலையாயிருக்கு. மாமாவைப் பார்த்துப் பேசிட்டுப் போ. அவர் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். அடிக்கடி வந்து அவரைப் பார்த்துப் பேசு. நானும் அவரிடம் சொல்றேன். நல்லது நடக்கும்."

     சாமண்ணா கைகூப்பி, "வரேன் மாமி! உங்க ஆசீர்வாதம் எப்பவும் இருக்கணும்!" என்றான்.

     வரதாச்சாரி உள்ளே வந்தார். "சாமண்ணா சொல்றதைக் கேட்டேளா?" என்று இழுத்தாள்.

     "கேட்டேன்! கேட்டேன்! எனக்கு மட்டும் பாப்பா மாதிரி அழகோடும் சொத்தோடும் ஒரு பெண் கிடைச்சிருந்தா இந்த நிமிஷத்திலேயே அவளைக் கலயாணம் பண்ணிண்டிருப்பேன்" என்றார் வக்கீல்.

     "உக்கும்! பண்ணிப்பேளே! இன்னும் நாலு கல்யாணம் கூடப் பண்ணிப்பேள். எனக்குத் தெரியுமே!" என்று தோளில் இடித்துக் கொண்டாள் கோமளம்.