உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
34 கோமளம் சென்ற பிறகு சாமண்ணா கட்டிலில் போய் 'தொப்'பென்று அமர்ந்தான். மூச்சு முட்டியது. இதயத்தை அமுக்கிக் கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட ஏக நேரம் ஆயிற்று. எனக்குத்தான் துக்கம் நிகழ்ந்துவிட்டது என்றால் என்னைத் தெரிந்தவர்களுக்குமா இந்த கதி! மகாலட்சுமி மாதிரி இருந்தாளே கோமளம் மாமி! களை பொருந்திய அந்த வைர பேசரி முகத்தை அவனால் மறக்க முடியவில்லை. வைரத்துக்கு ஈடு கொடுக்கும் சிரிப்பு. கையில் பூக்கூடை எடுத்து நின்றால் ரவிவர்மா சித்திரம்! அந்த ஓவியத்தை தெய்வம் இப்போது அலங்கோலமாக அழித்துவிட்டிருந்தது! "ஐயா சாப்பிடலீங்களா?" எனக் கேட்டான் கந்தப்பன். "வேண்டாம்பா, நீ வீட்டுக்குப் போ" என்று கூறி அனுப்பி விட்டான் சாமண்ணா. கந்தப்பன் மனமில்லாமல் தயங்கியபடி கதவைச் சாத்திக் கொண்டு வெளியேறினான். சாமண்ணாவுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். வாசலிலிருந்து வந்த பவழ மல்லியின் வாசனை மூக்கைத் தாக்கியது. சன்னல் ஓரம் நகர்ந்து போய் வெளியே பார்த்தான். தெரு ஓரத்திலிருந்து பவழமல்லி மரம் பூக்களை உதிர்த்துப் பாவாடை விரித்திருந்த காட்சி நிலாவுடன் கொஞ்சியது. அந்த அடக்கமான மணம் உள்ளத்தில் கிளர்ச்சியை உண்டாக்கியது. சகுந்தலா கண்முன் வந்தாள். பவள மல்லியாய்ச் சிரித்தாள். அவளை அலட்சியப்படுத்தியக் காட்சிகள் அடுத்தடுத்து வந்தன. மன்னிக்க முடியாத குற்றம் இழைத்து விட்ட கொடுமையை எண்ணிக் குமுறினான். மெதுவாகத் தத்தி நடந்து வந்து மீண்டும் கட்டிலில் படுத்தான். எண்ணச் சூழலில், சகுந்தலா சுற்றி வந்தாள். கோயில் பக்கத்திலிருந்து வாத்திய ஒலிகள் வந்தன. பக்கத்துப் பெருமாள் கோவிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டிருக்கும். ஆனித் திருமஞ்சனம். போன வருடம் இந்த உற்சவத்தை முன்னிட்டு ஸ்பெஷல் நாடகம் போட்டார்கள். கூட்டமான கூட்டம். நாதஸ்வரம் 'குகசரவணபவ'வில் குழைந்து கொண்டிருந்தது. பாண்டு வாத்திய முழக்கம் 'கும்'மென்று ஊரை மயக்கியது. வேலூர் நாதமுனி கோஷ்டியாயிருக்க வேண்டும். பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து இழையும்போது என்ன இனிமை! ஊர்வலம் அவன் வீட்டை நெருங்கி வருவதை காஸ் லைட்டுகள் பளீர் பளீர் என்று அறிவித்தன. ஊர்வல முன்வரிசை பார்வைக்கு வந்தது. பிரமுகர்களும் பட்டுப் புடவைகளும் காரைச் சூழ்ந்து நகர்ந்து கொண்டிருந்தார்கள். நாதஸ்வர வித்வான் கழுத்தில் பவுன் சங்கிலிகள் ஜொலிக்க, இடுப்பில் பட்டு வஸ்திரம் சுற்றி, மேலே குடுமியை வாரி இழுத்துப் பின் கூம்பலாக மூட்டை கட்டி, நெற்றியில் ஜவ்வாது சந்தனத்துடன் காதுகளில் வைரக் கடுக்கன் மின்ன நடந்து வந்தார். நாதமுனி கோஷ்டியின் விசித்திர உலோக வாத்தியங்கள் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டு வந்தன. 'அது யார்? வேட்டியும் சட்டையுமாய் இடுப்பில் சரிகை உத்தரீயத்தை இழுத்துக் கட்டிக் க்ண்டு? டாக்டர் ராமமூர்த்தியா! ஓகோ! தெரிந்தவர் வீட்டுக் கல்யாணமோ?' அடுத்து மலர் அலங்காரத்துடன் ஊர்வலம் சென்ற கார் அன்னம் போலத் தவழ, அதில் அந்த இளம் தம்பதியர் உட்கார்ந்திருக்க, சாமண்ணாவின் குடல் உள்ளே சுருண்டது. மணமகன் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மணமகளைப் பார்த்ததும், யார் அது? சகுந்தலாவா? நெற்றிச் சரத்திலும், மாட்டலிலும், மூக்குத்தியிலும், அந்தச் சிற்ப முகம் ஜொலித்தது. அந்தக் கரு விழிகளின் இன்பச் சுழல்களில் அவன் எத்தனை முறை மயங்கியிருக்கிறான்! இதயத்தில் ஒரு கன நாடி டண் என்ற சத்தத்துடன் அறுத்தது. கைகள் சன்னல் கம்பிகளை இறுகப் பற்றின. அவற்றை விடுவித்துக் கொண்டு நெற்றிப் பொட்டை சுழிகளில் வைத்து அழுத்தினான். 'நீதான் அவளைப் புறக்கணித்தாயே! இப்போது ஏன் வேதனைப் படுகிறாய்? உனக்கும் அவளுக்கும் தான் பந்தம் இல்லையே! அவள் இப்போது இன்னொருத்தன் மனைவி! இனி அவள் உனக்குச் சொந்தமல்ல, உன்னை ஏறெடுத்தும் பாராள்!' ஊர்வலம் நகர நகர, பெரிய பெரிய நிழல்கள் சன்னல் வழியே உள்ளே விழுந்து பூதாகாரமாய் இயங்கின. சிறிது நேரத்தில் தெருவில் எல்லாம் மறைந்து பழைய அமைதிக்கு வந்துவிட்டது. சந்திர ஒளியுடன் கூடிய அமைதி. சாமண்ணா இதயத்தை அமுக்கிக் கொண்டு கட்டிலை நோக்கி நகர்ந்தான். கன்னம் முழுதும் நனைந்திருந்தது. காற்றின் அசைவுகளில் தூரத்திலிருந்து வந்த 'சக்கினி ராஜா' விட்டு விட்டுச் சிறிதும் பெரிதுமாய்க் கேட்டது. இரவு முழுதும் எதையோ பறி கொடுத்துவிட்ட சோகத்துடன் உறக்கமின்றிப் புழுங்கிக் கொண்டிருந்தான். பொழுது புலர்வதற்குள்ளாகவே கந்தப்பன் வந்து, "ஐயா, கிளப்லேர்ந்து இட்லி காப்பி வாங்கி வந்திருக்கேன். சாப்பிடறீங்களா? சுடச் சுட இருக்குது" என்றான். சாமண்ணாவுக்கு எரிச்சலாக இருந்தது. தானும் தன் தனிமையும் அப்படியே இருக்க வேண்டும் போலிருந்தது! குறுக்கீடு பிடிக்கவில்லை. 'சூடு! எல்லாமே காலம் கடந்து ஆறிப் போச்சு' என்று எண்ணிக் கொண்டான். மனதில் அந்த ஊர்வலமும், சகுந்தலாவின் குளிர் முகமும் மாப்பிள்ளை யாரென்று தெரியாத வேதனையும் சூழ்ந்து கொண்டிருந்தன. அந்தச் சிற்ப முகம், நெற்றிச் சரம், மாட்டல்... உள்ளம் குமைந்து பழைய கணக்குகளைப் புரட்டிக் கொண்டிருந்தது. வாழ்வில் எங்கெங்கே சரியான வழியை விட்டு விலகினோம் என்பது புரிந்தது. புகழும் பணமும் கண்களை மறைத்துவிட்டது தெரிந்தது. பழைய வாழ்க்கை முன் ஜன்மம் போல் இருந்தது. இப்போது அதுதான் அவனுக்குச் சொந்தம் போலவும் தோன்றியது. சிங்காரப் பொட்டுவின் ஆறுதலான வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. அதெல்லாம் உணர்ச்சிவயத்தில் கூறிய வார்த்தைகள்! இந்தக் காலத்தில் யாரையாவது யாராவது ஆயுசு வரை பாதுகாக்க முடியுமா? 'சாமண்ணா, இந்தத் தண்டனை உனக்கு வேண்டியதுதான். அழு, வாய் விட்டு கதறி அழு! அப்போதும் உன் துக்கம் தீராது. அப்போதே உன் அம்மா சொன்னாள். நினைவு இருக்கிறதா? பள்ளிக்கூடம் போடா, பள்ளிக்கூடம் போடான்னு அடிச்சிண்டாளே! கேட்டாயா? ஊர் ஊராகத் திரிஞ்சியே, நாடகத்திலே சேர்ந்து எல்லாம் கிழிச்சுடப் போறேன்னு சொன்னியே, அம்மா உனக்கு முழு மனசா அதுக்கு அனுமதி தந்தாளா? பெரியவங்களுக்குத் தெரியாதா? கலை உலகம் எவ்வளவு மோசமான உலகம்னு! நேத்திக்குப் பணக்காரன் இன்னிக்கு விலாசம் இல்லாமல் போயிடுவான். அவன் போகாவிட்டாலும், தன்னைத் தானே அழிச்சுக்கிற சுபாவம் அவனை சூழ்ந்துடும். அடேயப்பா! கல்கத்தாவில் என்ன ஆட்டம் ஆடினாய்! டாக்டரை விசாரிச்சியா? சகுந்தலாவைச் சரியானபடி கவனிச்சியா? சிங்காரப் பொட்டுவைத்தான் நல்ல முறையில் நடத்தினாயா? அகங்காரம், பணத் திமிர், புகழ்ச் செருக்கு உன் கண்களை மறைத்துவிட்டன! சுபத்ரா மீது கொண்ட மோகத்தில் அப்படித் தலை கால் தெரியாமக் கிடந்தியே! சுவர்க்கமே கிடைச்சுட்ட மாதிரி இறுமாந்தியே! அப்ப சகுந்தலா கிள்ளுக் கீரையாத் தோணினாளே! அத்தனையும் என்னாச்சு? சொப்பனம் போல எல்லாம் போயிடலையா? வாழ்க்கையை முறிச்சுகிட்டியே! இன்னும் குறை நாளை எப்படி வாழப் போறே? யார் உனக்கு என்ன செய்துடப் போறா? "அம்மா" என்று திடீரென்று பொங்கி வந்த துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். உள் குரல் தீனமாக ஒலித்தது. 'அம்மா! உன் சொல்லைக் கேட்காமல் ஆட்டம் போட்டேன். தப்புதான். இறுமாப்பில் எல்லாரையும் உதாசீனப்படுத்தினேன். குற்றம்தான். இப்ப அதையெல்லாம் நினைச்சு துக்கப்படுகிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இது என்பதை உணர்கிறேன். சோற்றுப் பசி வந்தா நல்லது. எனக்கு ஆப்பிள் பசி வந்துட்டுது. அதுக்காக மேலே உச்சத்துக்குப் போய் டமால்னு விழுந்துட்டேன். கால் மட்டும் இல்லை, வாழ்க்கையே ஊனமாயிட்டுது. என்ன செய்யப் போறேம்மா?' கந்தப்பன் பிடிவாதமாய் காப்பியும் இட்லியும் எதிரில் வைத்து சாப்பிடச் சொன்னான். சாமண்ணாவின் கண்களில் கண்ணீர் அருவி போல் கொட்டியது. இயந்திரம் போல இட்லிகளை விழுங்கினான். காப்பியைக் குடித்தான். "மாமா!" என்று குரல் கேட்டு வாசல் பக்கம் பார்த்தபோது அச்சச்சோ லல்லு வந்திருந்தாள். "இந்தாங்கோ! கடிதாசி!" என்றாள். "ஏது?" என்றான் சாமண்ணா. "வக்கீலாத்து மாமி தந்தா! ஊருக்குப் புறப்பட்டுப் போறாளோன்னோ! உங்களுக்குச் சொல்லிக்கிறா." "இட்லி சாப்பிடறியா லல்லு!" என்று கேட்டான். "வேண்டாம் மாமா! கல்யாண வீட்லே இப்பத்தான் சாப்பிட்டுட்டு வரேன்." "கல்யாண வீடா? யாருக்குக் கல்யாணம்?" "சகுந்தலாவுக்குத்தான். மாப்பிள்ளை ரொம்ப அழகாயிருக்கான் மாமா. சகுந்தலா கொடுத்து வெச்சவள்!" 'சொரேர்' என்றது சாமண்ணாவுக்கு. மௌனமாக அந்தச் செய்தியை இட்லித் துண்டோடு சேர்த்து விழுங்கினான். அப்புறம் கடிதத்தைப் பிரித்தான்.
'அன்புள்ள சாமு, உன் விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து எனக்குத் துக்கம் பொங்கி வருகிறது. இந்தச் சமயத்தில் எங்க ஆத்துக்காரர் இல்லாமல் போனார். நான் உன்கிட்டே பேசினப்போ ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அதை நான் மறக்கலாமோ? எவ்வளவு பெரிய தப்பு! நம்ப பாப்பா பற்றித்தான். ஊருக்குப் போயிருக்கா அவள். நாளை காலையிலே வந்துடுவாள். நீ வந்திருக்கிறதோ, உனக்கு நடந்திருக்கிறதோ அவளுக்கு எதுவும் தெரியாது. நான் கடுதாசியிலே எழுதி அவளுக்குக் கொடுத்தனுப்பியிருக்கேன். இந்த ஊர்லேருந்து புறப்பட்ட போது உன்னை வழி அனுப்ப ஸ்டேஷனுக்கு அவள் ஓடி வந்து பார்த்தாளாம்! வண்டி புறப்பட்டுடுத்தாம். அப்புறம் கல்கத்தாவுக்கே வந்து உன்னைப் பார்க்கணும்னு துடிச்சிண்டிருந்தா! ஆனா சந்தர்ப்பமே இல்லாமல் போயிட்டுது. நீ போனதிலிருந்து எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து உன்னைப் பற்றி விசாரிச்சுண்டே இருந்தாள். அந்தப் பெண் வேற குலத்திலே பிறந்துட்டுதே தவிர, அதைப் போல நல்ல பெண்ணை உலகத்திலே பார்க்க முடியாது. ஞாபகம் வச்சுக்க, நீ ரெண்டாம் முறை நாடக சபை ஏற்படுத்தினியே, அது யார் பணம்னு நினைச்சே? எங்காத்து மாமாவும் மத்தவாளும் சேர்ந்து பணம் போட்டிருக்கான்னுதானே? இல்லை. உண்மையில எல்லாப் பணமும் பாப்பாதான் போட்டிருக்கா! உன்னை எப்படியும் முன்னுக்குக் கொண்டு நிறுத்தணும்னு அவளுக்கு அத்தனை ஆர்வம். எங்கேயோ பிறந்து எங்கேயோ தப்பிதமா ஒருமுறை திருமணமும் நடந்து போச்சு! ஆனாலும் உன்னை அவள் மறக்கவேயில்லை. சதா உன் நினைவு தான். எனக்குத் தாலி கட்டாத கணவர் அவர்தான்னு உன்னைப் பற்றி அடிக்கடி சொல்லிண்டிருக்கா. ("வாழ்நாள் முழுக்க ஒருத்தி ஒருவனோடு வாழணுங்கறதெல்லாம் இப்ப இல்லை. காலம் மாறிப் போச்சு. ஒருவனைப் பிரிஞ்சப்புறம் இன்னொருவனுடன் வாழறதிலே தப்பில்லைன்னு ஆயிட்டுது. ஒருவனை விடாம இன்னொருவனுடன் வாழறதுதான் தப்பு. ஒரு பெண் எப்போது எவனோட வாழறாளோ அப்போது அவனுக்குத் துரோகம் செய்யாமலிருந்தாப் போதும். அது தான் கற்புன்னு ஏதோ ஒரு புஸ்தகத்துலே படிச்சிருக்கேன். எனக்கு அந்தக் கருத்து புடிச்சிருக்கு. நான் அப்படித்தான் வாழப் போறேன்! அப்படி இன்னொருத்தனுடன் வாழறதுன்னு தீர்மானிச்சா அந்த இன்னொருத்தர் நீங்களாத்தான் இருப்பீங்க..." பாப்பா எப்போதோ சொன்ன இந்த வார்த்தைகள் அவன் காதில் இப்போது ரீங்கரித்தது...)
உனக்கு எத்தனை சமயங்களில் எப்படியெல்லாம் உதவி செஞ்சிருக்கா தெரியுமா? அப்படிப்பட்டவள் உனக்கு நேர்ந்த விபத்தைக் கேட்டு சும்மா இருப்பாளா? நாளைக்குத்தான் அவள் சொந்தக் கிராமம் பூவேலிக்குத் திரும்பி வரா. நாளைக்கு அவங்க ஊர்க் கோவில்லே படையலாம். மறுநாளே உன்னை ஓடி வந்து பார்ப்பாள்! நான் சொல்றதைக் கேளு, சாமு! வாழ்க்கையை இனிமேலும் பாழாக்கிக்காதே! அந்தப் பெண் உன்னையே நம்பிண்டு இருக்கா! நீ என்ன நிலையிலே இருந்தாலும் உன்னை அவள் ஏத்துப்பா. அப்படி ஒரு பெரிய குணம் அவளுக்கு.
உன் பிரியமுள்ள,
கோமளம். ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|