2

     "கொஞ்சம் நில்லுங்க - நான் போய் முதல்லே லைட்டைப் போடறேன். அப்புறம் நீங்க வரலாம். இது எனக்குப் பழக்கப்பட்ட இருட்டு!" என்று கூறி நாலே எட்டில் மாடிக் கதவை அடைந்து பூணூலில் கோத்திருந்த சாவியால் பூட்டைத் திறந்த சாமண்ணா ஸ்விச்சைப் போட்டதும் அழுக்கு பல்பு ஒன்று சோகமாய்ச் சிரித்தது.

     "அட, எலக்ட்ரிக் விளக்கு!" என்று வியந்து கொண்டே பின்னோடு வந்து நின்றான் குமாரசாமி.

     "சத்தம் போட்டுச் சொல்லாதீங்க. ஓட்டல்காரர் காதிலே விழுந்தா 'ஓசி வீட்டுக்கு விளக்கு வேறு கொசுறா?'ன்னு 'கட்' பண்ணிடச் சொல்வார். இது அவர் வீடு" என்றான் சாமண்ணா.

     "அப்படின்னா இந்த வீட்டுக்கு வாடகை கிடையாதா?"

     "ஊஹூம், இதை ஓட்டல்ல வேலை செய்யறவங்களுக்கு விட்டு வச்சிருந்தார். இப்ப அவங்க எல்லாரும் காலி பண்ணிட்டாங்க."

     "ஏன்?"

     "ஒரு ஸர்வர் திடீர்னு இங்கே தூக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டானாம். ஏதோ காதல் விவகாரமாம். மத்த பசங்க பயத்துலே காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. அப்புறம் பேய் பிசாசு இருக்கும்னு யாருமே குடி வரலை இங்கே. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி, நான் மாட்டிக்கிட்டேன். அந்த ஓட்டலுக்கு தினமும் சாப்பிடப் போவேன். ஒருநாள் அந்த ஓட்டல்காரரிடம் ஏதாவது வாடகைக்கு ரூம் கிடைக்குமான்னு கேட்கப் போக, அவர் 'வாடகை ஒண்ணும் தர வேணாம். பாவம், உன்னைப் பார்த்தா ஏழையாத் தெரியுது. சும்மாவே இருந்துக்க' என்றார்."

     "ஓட்டல்காரர் ரொம்ப நல்ல மனுசன்னு தோணுது."

     "நீங்க ஒண்ணு. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அவருக்கு ஒரு பெண் இருக்குது. இன்னும் கல்யாணம் ஆகல்லே. அரைப் பைத்தியம். பௌர்ணமி, அமாவாசையிலே முழுசாயிடும். அந்தப் பைத்தியத்தை என் தலையில கட்டப் பார்க்கிறார் ஓட்டல்காரர். அதுக்காகத்தான் இதெல்லாம். ஒரு கல்லிலே ரெண்டு மாங்காய்!"

     "இங்கே தனியா இருக்க பயமா இல்லையா?"

     "எனக்கென்ன பயம்?"

     "ஆவி கீவி....?"

     "ஆவியாவது கீவியாவது? எமனைக் கண்டாலே பயப்பட மாட்டேன் நான்!"

     "எமனைப் பார்த்திருக்கிறீர்களா?"

     "சத்தியவான் சாவித்திரி நாடகம் போடறமில்ல, அதிலே தினம் தினம் எமனைப் பார்த்து பயம் தெளிஞ்சு போச்சு!"

     பத்துப் பதினைந்து பேர் தாராளமாய்ப் படுத்துத் தூங்கும் அளவுக்கு நீளமான ஹால். அதை ஒட்டி ஒரு சின்ன ரூம்.

     நுழைந்ததுமே, அந்த வீட்டையும் அங்குள்ள சாமான்களையும் நுணுக்கமாய் கவனித்துக் கொண்டாள் பாப்பா.

     சுவரில் கணேஷ் காப்பி கம்பெனி பிள்ளையார் படம்.

     கதவில்லாத அலமாரியில் கோதைநாயகி, வடுவூர் ஐயங்கார் நாவல்கள், அமிர்தாஞ்சன் டப்பா, பாதி வரை எரிந்து அணைந்து போன ஊதுவத்தி, அதிலிருந்து விழுதாய் ஊசலாடிய ஒட்டடைச் சாம்பல்.

     மூலையில் மண் பானை வைத்து அதன் மீது அலுமினியத் தம்ளர்.

     "நீங்க ஐயர் தானே?" என்று தயங்கிக் கேட்டான் குமாரசாமி.

     "எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

     "பூணூலில் சாவி மாட்டியிருக்கீங்களே!"

     பாப்பா ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டு நின்றாள்.

     தூரத்தில் டீக்கடை வெளிச்சம் தெரிந்தது. தேய்ந்து போன கிராமபோன் ரிகார்டில் 'கோடையிலே இளைப்பாறி'க் கொண்டிருந்தார் எஸ்.ஜி. கிட்டப்பா.

     ஜன்னலை ஒட்டினாற்போல் பெரிய காலி மனை. சுவர் ஓரத்தில் வேப்ப மரம். இன்னொரு பக்கம் ஓட்டலுக்குச் சொந்தமான உருட்டுக் கட்டைகளும் பிளந்த விறகுகளும் குவிக்கப்பட்டிருந்தன. அதன் மீது பரங்கிக் கொடிகள் அடர்ந்து படர்ந்து மஞ்சளாய்ப் பூத்திருந்தன. அருகே இரண்டு கழுதைகள் அசையாமல் நிழல் சித்திரமாய் நிற்க, நாலைந்து தவளைகள் ஜலதோஷக் குரலில் சமீபத்திய மழையை வாழ்த்திக் கொண்டிருந்தன.

     "சாப்பிடுவோமா, தம்பி!" என்று குமாரசாமி கேட்க, பாப்பா சட்டென்று அந்த இடத்தைப் பெருக்கி இலை போட்டுப் புளியோதரையை எடுத்து வைத்தாள்.

     சாமண்ணா சாப்பிட அமர்ந்தான்.

     "சங்கோசப்படாதிங்க தம்பி! இது உங்க வீடு!" என்றார் குமாரசாமி.

     "வீடு ஓட்டல்காரருடையது. சாப்பாடு உங்களுடையது!" என்று சிரித்தான் சாமண்ணா.

     "தமாஷாப் பேசறிங்களே! தம்பிக்கு எப்ப கல்யாணம்?"

     "இந்தக் கூத்தாடிக்கு யாருங்க பெண் கொடுப்பாங்க? கொடுத்தாலும் அரைப்பைத்தியம், முழுப்பைத்தியம் இப்படித்தான் வரும்..."

     பாப்பா அவன் இலையில் இன்னும் கொஞ்சம் புளியோதரை வைத்தாள்.

     "போதும். அவ்வளவையும் எனக்கே போட்டுடாதீங்க."

     "நிறைய்ய இருக்குங்க. நீங்க சாப்பிடுங்க" என்றாள் பாப்பா.

     "உங்களை ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன், கேட்கலாமா?"

     "தாராளமாக் கேளுங்க..."

     "நாடகம் ஆரம்பிக்கறதுக்கு முந்தி சாப்பிடற வழக்கமில்லையா?"

     "சில நாளைக்குச் சாப்பிடுவேன். சில நாளைக்குக் காசு இருக்காது. நாடகத்திலே ஒரு சீன்ல நான் நாலு ஆரஞ்சு, அஞ்சு பலாச்சுளை அரை டஜன் வாழைப்பழம் அவ்வளவையும் அப்படியே விழுங்கறாப்பல ஒரு காட்சி வரும். ஜனங்க அதை ரொம்ப ரசிப்பாங்க. இன்னைக்கு மழை வந்து நாடகம் பாதியிலே நின்னு போச்சா? அதனால அந்த சீன் இல்லாமப் போயிட்டுது. நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத ஆளுங்க" என்றான்.

     திடீரென்று அந்த அழுமூஞ்சி பல்பு அணைய பாப்பா விரைந்து அந்த அரிக்கன் விளக்கை ஏற்றி வைத்தாள்.

     "இதுக்குத்தான் வீட்டிலே ஒரு பெண் பிள்ளை இருக்கணுங்கறது..." என்றான் குமாரசாமி.

     "டிராமாவிலே என் சீன் வர்றப்பத்தான் மழை வந்து கெடுக்கும். சாப்பிடறப்போ விளக்கு அணைஞ்சு போகும். லாட்டரி டிக்கெட் வாங்கினால் முதல் பரிசுக்கு அடுத்த நம்பர் என்னுடைய நம்பராயிருக்கும். சின்ன வயசிலேயே அப்பா அம்மாவை இழந்து அனாதையா ஊர் ஊரா அலைஞ்சேன். கடைசியிலே டிராமாக் கம்பெனியிலே சேர்ந்தேன். அங்கேயும் கோமாளி வேஷம் தான். அரைப்பட்டினிதான். என் வாழ்க்கையே ஒரு நாடகமாப் போச்சு. மொத்தத்திலே நான் ஒரு கத்தரி யோகக்காரன்" என்று விரக்தியோடு சொன்னான் சாமண்ணா.

     "கவலைப்படாதீங்க. சீக்கிரமே நல்ல காலம் பொறக்கும்?" என்றான் குமாரசாமி.

     அப்போது மீண்டும் அந்த மின்விளக்கு எரிய ஹால் பிரகாசமாயிற்று. "பார்த்தீங்களா!"

     காலையில் காகம் கரையும் முன்பே எழுந்துவிட்ட பாப்பா அந்த வீட்டையும் வாசலையும் பெருக்கிச் சுத்தப்படுத்தி விட்டு, 'சாமண்ணா படுத்துள்ள அறையைப் பெருக்கலாமா?' என்று எட்டிப் பார்த்தாள்.

     அவன் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தான்.

     'அப்பா கூட இன்னும் எழுந்திருக்கலையே! இவங்க எழுந்திருப்பதற்குள் குளியல் வேலையை முடித்துவிடலாம்' என்று எண்ணியவளாய் பாத்ரூமுக்குள் சென்றபோது கதவு மக்கர் செய்தது. காலின் கீழே கிடந்த செங்கல்லைத் தள்ளிக் கதவுக்கு முட்டுக் கொடுத்து, சடுதியில் குளியலை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். குமாரசாமி வேப்பங்குச்சி ஒடித்துப் பல் விளக்கிக் கொண்டிருந்தான்.

     "அப்பா, அவர் எழுந்துட்டாரா பாருங்க."

     குமாரசாமி அறையில் எட்டிப் பார்த்து "தம்பி!" என்று குரல் கொடுக்க, சாமண்ணா எழுந்து உட்கார்ந்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. "உடம்பெல்லாம் வலிக்குது. தலைவலி தாங்க முடியலே..." என்றான்.

     "டாக்டரை அழைச்சுட்டு வரட்டுமா?"

     "வேணாங்க. சூடா காப்பி சாப்பிட்டா எல்லாம் சரியாப் போயிடும். இதுக்கெல்லாம் டாக்டரைக் கூப்பிட்டா கட்டுப்படியாகுமா?"

     அவனைத் தொட்டுப் பார்த்த குமாரசாமி, "உடம்பு சுடுதே!" என்றான்.

     பாப்பா பதறிப் போய், "அப்பா, நீங்க சீக்கிரம் போய்க் காப்பி வாங்கிட்டு வாங்க" என்றாள்.

     குமாரசாமி படி இறங்கிப் போனதும், "தலையை ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டுக் கொண்டே சாமண்ணா அருகில் போய் அவன் நெற்றியைப் பிடித்து விட்டாள்.

     சாமண்ணாவுக்கு அது இதமாக, ஆறுதலாக, இனிமையாக இருந்தது. வலியெல்லாம் குறைந்து விட்டது போல் தோன்றியது.

     அந்த ஜுர வேகத்தில் பாப்பாவின் கரங்களைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு, "பாப்பா! நீ எப்பவும் இந்த மாதிரி என்னோடேயே இருக்கணும் போல இருக்குது. என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட மாட்டியே...?" என்று அவளைத் தன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான்.

     "ஐயோ, விடுங்க என்னை" என்று வெட்கத்தோடு திமிறிக் கொண்டாள் பாப்பா. அவள் கைகள் நடுங்கின; கண்களில் பயமும் படபடப்பும் தெரிந்தன.

     "கோவமா, பாப்பா?"

     அவள் பதில் எதுவும் கூறாமல், "அமிர்தாஞ்சனம் கொண்டு வரட்டுமா?" என்று கேட்டாள்.

     "உம்" என்றான்.

     அவள் அமிர்தாஞ்சனம் எடுத்து வந்து அவன் நெற்றியில் தேய்த்தாள்.

     "உன்னோடு பழகினது கொஞ்ச நேரம்தான். ஆனாலும் ரொம்ப நாளாப் பழகின மாதிரி தோணுது. உன் அளவுக்கு என்னிடம் அன்பு காட்டினவங்க, ஆதரவாப் பேசினவங்கன்னு இதுவரை யாருமே கிடையாது. என் வாழ்க்கையிலே நீ ஒருத்திதான் முதல் முதல்..."

     அவள் மௌனமாக இருந்தாள்.

     "நான் நேற்று ராத்திரி ஒரு வேடிக்கையான கனவு கண்டேன். அதைச் சொல்லட்டுமா?"

     "சொல்லுங்க."

     "திடீர்னு நான் செத்துப் போயிடறேன். எனக்காக யாருமே அழலே. 'சாமண்ணா, நீ செத்துப் போயிட்டயா'ன்னு நாலைஞ்சு பேர் மட்டும் அழறாங்க. அவங்க யார்னு பார்த்தா அத்தனை பேரும் சாமண்ணா!"

     "அப்புறம்?"

     "நாலு பேர் என்னைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போறாங்க... அந்த நாலு பேர் யாருன்னு பார்க்கிறேன்."

     "யார் அது?"

     "அவங்களும் நானே தான். நாலு சாமண்ணா என்னைத் தூக்கிட்டுப் போறாங்க..."

     "அப்புறம்?"

     "நெருப்புச் சட்டி தூக்கறவன், கொள்ளி வைக்கிறவன், எலும்பு பொறுக்கறவன், பால் விடறவன், அஸ்தி கரைக்கிறவன் எல்லாமே நான் தான். ரொம்ப வேடிக்கையாயில்லே."

     "ரொம்பப் பரிதாபமாயிருக்குங்க."

     "இப்ப எனக்காகக் கண்ணீர் விட நீ ஒருத்தி இருக்கேங்கற நினைப்பே எனக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கு தெரியுமா?"

     "பாப்பா, சுடச்சுட காப்பி கொண்டு வந்திருக்கேன்" என்று கூஜாவைக் கொண்டு வைத்தான் குமாரசாமி.

     "இந்தாங்க காப்பி, இதைக் குடிங்க, தலைவலி பறந்துரும்" என்றாள் பாப்பா.

     "பல் விளக்கலையே...!" என்று இழுத்தான் சாமண்ணா.

     "யானை பல்லா விளக்குது?" என்று குமாரசாமி கேட்க சாமண்ணா சிரித்துக் கொண்டே காப்பியை வாங்கிக் குடித்தான். தன்னுடைய அத்து மீறிய செயலுக்காகப் பாப்பா தன் மீது கோபப்படவில்லை. அப்பாவிடமும் அது பற்றிச் சொல்லவில்லை என்று எண்ணும்போது அவனுக்கு வியப்பாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

     காப்பியைக் குடித்து முடித்ததும் அவன் உடம்பெல்லாம் ஒரு முறை குப்பென்று வியர்த்துக் கொட்டியது.

     "ஜுரம் விட்டுப் போச்சு போல இருக்கு" என்று சிரித்தாள் பாப்பா.

     "தம்பி, அப்ப நேரமாகுது. மழைக்கு முன்னே நாங்க புறப்படறோம். உடம்பைப் பார்த்துக்குங்க. பூவேலிக்கு ஒரு முறை வந்துட்டுப் போங்க..." என்றான் குமாரசாமி.

     அந்த நேரம் "சாமண்ணா" என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டு, "யார் பாருங்க, காதர் பாட்சா மாதிரி தெரியுது" என்றான் சாமண்ணா.

     காதர் பாட்சாவேதான்!

     "தம்பி! இன்னும் கொஞ்ச நாளைக்கு நாடகம் கிடையாதாம்" என்று சொல்லிக் கொண்டே வந்தார் காதர்.

     "ஏனாம்?"

     "இந்த மழை அடியோட நின்னப்புறம்தான் மறுபடி நாடகமாம். லெட்டர் போட்டப்புறம் வந்தாப் போதுமாம். நம்மையெல்லாம் அவங்கவங்க ஊருக்குப் போகச் சொல்லிட்டார் காண்ட்ராக்டர். எல்லாருக்கும் சம்பளம் பட்டுவாடா பண்ணிக்கிட்டிருக்காரு. நீயும் போய் வாங்கிக்க!" என்றார் காதர்.

     "என்ன சொல்றே காதர் நீ? சம்பளத்தை வாங்கிக்கிட்டு நான் எங்கே போவேன்? எனக்கு ஊரார், உறவினர் யாரும் கிடையாதே!" என்று பாப்பாவைப் பரிதாபமாய்ப் பார்த்தான் சாமண்ணா.