உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
15 பாப்பா மூர்ச்சையாகிச் சாய்கிறபோதே குமாரசாமி அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். "டாக்டர்! டாக்டர்" என்று வக்கீல் மாமி கோமளம் குரல் கொடுக்க, டாக்டர் ராமமூர்த்தி ஒரு டம்ளரைத் தவற விட்டுக் கொண்டு விரைந்து வந்தார். "எல்லோரும் தள்ளி நில்லுங்க; காத்து வேணும்" என்று சூழ்ந்து நின்ற கும்பலை விலக்கிக் கொண்டு வந்த டாக்டர், பாப்பாவின் கைநாடியைப் பார்த்துவிட்டு, "ஒண்ணுமில்லை. லேசான அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க. வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் படுக்க வையுங்க. மருந்து அனுப்பறேன்; சரியாயிடும்" என்றார். எதிர் வரிசையில் அமர்ந்திருந்த சாமண்ணா எழுந்து நின்று சற்றுத் தள்ளி நின்றபடியே கவனித்தானே தவிர முகத்தில் கவலையோ, பரபரப்போ, எந்தச் சலனமுமே தெரியவில்லை. "கொஞ்சம் இங்க வரேளா?" என்று கோமளம் கணவரை அழைக்க, "என்னாச்சு? என்னாச்சு?" என்று பதறிக் கொண்டு வந்தார் வக்கீல். "மயக்கமா விழுந்துட்டா! நான் இவளை பீட்டன்ல நம்மாத்துக்கு அழைச்சுண்டு போறேன். நீங்க மீட்டிங் முடிஞ்சதும் சீக்கிரம் வந்து சேருங்க" என்றாள் கோமளம். "சரி, சரி! போய் பீட்டனைத் திருப்பி அனுப்பு. வந்துடறேன்." இரட்டைக் குதிரை பீட்டன் 'டக் டக்'கென்று முகப்பில் வந்து நிற்க நாலைந்து பேர் தாங்கலாகப் பாப்பாவை அழைத்துச் சென்று அதில் ஏற்றினார்கள். வெகுநேரம் தெளிவில்லாமல் சோர்வாகவே படுத்திருந்த பாப்பாவுக்கு டாக்டர் அனுப்பிய மருந்தைச் சாப்பிட்டதும் ஒருமுறை வியர்த்துக் கொட்டியது. அப்புறம்தான் பாப்பா கொஞ்சம் ஈனசுரத்தில் முழங்கத் தொடங்கினாள். கோமளத்திற்கு துக்கம் பொங்கி வந்தது. இளம் தளிர் போலப் படுத்திருந்த பாப்பாவைத் தொட்டுப் பார்த்து, தலையைத் தடவிக் கொடுத்து, "இப்ப எப்படி இருக்கு? ஹார்லிக்ஸ் சாப்பிடறயா? இல்லே ரசம் சாதமாய்க் கரைச்சுத் தரட்டுமா?" என்று கேட்டுக் கொண்டிருந்தாள். பாப்பாவுக்குக் கண்களில் நீர் பனித்தது. கோமளத்தை, "அம்மா, நீங்க போய் சாப்பிடுங்க, எனக்கு இப்ப ஒண்ணும் வேணாம்" என்றாள். "எல்லாம் சரியாப் போயிடும். எல்லையம்மனுக்குப் பொங்கல் படைக்கிறதா வேண்டிக் கொண்டேன். டாக்டரும் வந்து பார்க்கறதாச் சொல்லியிருக்கார். கொஞ்ச நேரத்துல வந்துடுவார்" என்றாள். விருந்து முடிந்து ராத்திரி பத்து மணிக்குப் பிறகு தான் டாக்டர் வந்தார். பாப்பாவுக்கு ரத்த அழுத்தம் சரியாயிருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்துவிட்டு இரண்டு மாத்திரைகளைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி, "ஆகாரம் கஞ்சிதான்" என்றார். "நாளையிலிருந்து சாத்துக்குடியும், ஆப்பிளும் நிறையச் சாப்பிடலாம். பாப்பா முட்டை சாப்பிடுவே இல்லையோ" என்றார். மூன்றாம் நாள் பாப்பா சகஜமாக எழுந்து நடமாடத் தொடங்கினாள். "மாமி, இவளவு உபசாரம் போதும். யார் இப்படிப் பண்ணுவாங்க? சொந்தத் தாயார் கூடச் செய்வாளாங்கறது சந்தேகம் தான்! எத்தனையோ ஜன்மத்துக்கு உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். நான் பூவேலிக்குப் போயிட்டு ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் வரேன். நீங்க தான் எல்லாத்தையும் கவனிச்சுக்கணும்" என்று கொஞ்சம் கவலையோடு சொன்ன போது பாப்பாவின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அவள் கவலைப்படுவது எதற்காக என்று கோமளம் புரிந்து கொண்டாள். "வாசலில் குதிரை வண்டியோட உங்க அப்பா காத்துண்டிருக்கார். எல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கறேன். நீ புறப்படு, ராகு காலத்துக்கு முன்னே" என்றாள் மாமி. பாப்பாவைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றி வழி அனுப்பி வைத்தாள். தெரு முழுக்க எட்டிப் பார்த்தது. "இனிமே பட்டினி, பரிதவிப்பு எதுவும் வச்சுக்காதே. வேளா வேளைக்கு ஒழுங்காச் சாப்பிடு" என்று செல்லமாகப் போலிக் கோபத்துடன் சொன்னாள் கோமளம். "வெறும் பட்டினிக்கா மயக்கம் வந்தது மாமி? உங்களுக்குப் புரியாதா?" என்று ஓர் அர்த்தப் பார்வையை வீசினாள் பாப்பா. குதிரை ஒரு கனைப்புக் கனைத்துவிட்டு ஒரு காலன் மூத்திரம் கொட்டித் தீர்த்ததும், சிலிர்த்துக் கொண்டு கிளம்பியது. தெருக் கோடி வரை ஜல் ஜல் ஜல்... இரண்டு நாட்களாகியும் சாமண்ணா கோமளம் மாமியை வந்து பார்க்கவில்லை. மாமிக்கு இது உறுத்தலாகவே இருந்தது. அப்படி என்ன பவிஷு வந்து விட்டது. இந்த சாமண்ணாவுக்கு? பாப்பாவிடம் இவனுக்காக எவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கிப் பேசியிருப்பேன்? ஒரு மரியாதைக்காவது என்னை வந்து பார்த்தானா?" என்று எண்ணிக் கொண்டாள். பிறகு தானாகவே ஒரு நாள் சாமண்ணாவைக் கூப்பிட்டனுப்பினாள். சாமண்ணா, புது நாடகம் தயாரிக்கும் மும்முரத்தில் உலகத்தையே மறந்திருந்தான். "என்ன மாமி! கூப்பிட்டேளா?" என்று அவன் எதுவுமே நடக்காத மாதிரி சாதாரணமாய்க் கேட்டுக் கொண்டு வந்த போது அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. "சாமண்ணா! இதுதான் மனுஷாளோட நன்றிக் கடமையா? நாம்ப சாப்பிடறது உப்பு யாருடையது என்று நினைச்சுப் பார்க்கணும்டா!" என்று சற்றுக் காட்டமாகவே பேசினாள் கோமளம். மாமியிடமிருந்து இப்படி ஓர் அதிர்வெடியை அவன் எதிர்பார்க்கவில்லை. கண் கலங்கிப் பிரமித்துப் போய் நின்றான். "மாமி! அடியேன் செஞ்ச அபசாரம் என்னன்னு சொல்லுங்கோ! சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்றேன்" என்று விலவிலக்கக் கூறினான் அவன். "பாவம், அந்தப் பாப்பாவை ஒரு நடை எட்டிப் பார்த்தாயா நீ, இல்லை, ஒரு வார்த்தை யாரிட்டியாவது கேட்டு விட்டியா? ஊரே நம்மாத்துக்கு வந்து அவளைப் பார்த்துட்டுப் போச்சு. சின்னவா, பெரியவான்னு ஒருத்தர் விடாம வந்து போயிருக்கா. பாப்பாவுக்கும் அவாளுக்கும் பந்தமா, பாசமா? ஏதோ ஊரிலே ஒரு பெரிய மனுஷி சொத்தோடு சுகத்தோடு இருக்கா. அம்மா இல்லாதவளா அனாதையா இருக்காங்கற ஒரு இது தானே? நீ வந்து பார்த்தியா? பேசினியா? உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டியா? கேட்கக் கடமைப்பட்டவனா, இல்லையா? நீ சொல்லு பார்க்கலாம்." மாமி கோடை மழை போலப் பொழிந்து நிற்க, சாமண்ணாவின் சர்வ நாடியும் ஒடுங்கிவிட்டது. "மாமி மன்னிச்சுடுங்கோ! நீங்க இப்படிப் பேசுவேள்னு நான் எதிர்பார்க்கலை. என் போதாத காலம், நீங்க மனம் நொந்து பேசும்படி நேர்ந்துவிட்டது மாமி! உண்மையைச் சொல்றேன். என் மனசெல்லாம் இங்கேயேதான் இருந்தது. ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். எங்கம்மா கடைசியா, எனக்குச் சொன்ன வார்த்தை. அது ஒரு லட்சுமணர் கோடு மாதிரி. அதுதான் என்னை இங்கே வரவிடாமல் தடுக்கிறது. பாப்பாவை வந்து பார்க்கலாம், ரெண்டு வார்த்தை இதமாப் பேசலாம்னு பல தடவை நினைச்சேன். ஆனாலும் என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லை மாமி! எங்கே ஒரு வார்த்தை பேசினாக் கூட மனசிலே பாசம் கிளை விட்டிருமோங்கற பயம் தான். அவளோட பார்வை பட்டாக் கூட என் மனசிலே அன்பு கனிஞ்சுடுமோன்னு ஒரு அச்சம். கனிஞ்சா ஒண்ணும் தப்பில்லைதான். ஒத்துக்கறேன். ஆனா எனக்குத் தெரியாம மனசிலே அது வளர்ந்துண்டே போயிட்டால் அப்புறம் என் சத்தியம், உறுதி, அம்மாவுக்குக் கொடுத்த வாக்கு எல்லாம் என்ன ஆறது?" "இத பார்! சும்மா எதையாவது சொல்லித் தப்பிக்கப் பார்க்காதே சாமண்ணா! நீ என்ன சொன்னாலும் அதை நான் ஒப்புக்க முடியாது. நீ அவளைப் பார்த்திருக்கணும்! உன்னைத் தினமுமா வந்து பார்க்கச் சொன்னா? ஒரே ஒரு வாட்டி, ஒரு ரெண்டு நிமிஷம் மாமாவைப் பார்க்க வர்ற ஜாடையிலே இங்கே அவளை எட்டிப் பார்த்திருக்கலாமே!" கோமளம் தன் கட்சியை விடாமல் வற்புறுத்தினாள். "ஒத்துக்கறேன் மாமி! ஒத்துக்கறேன், தப்புதான். அதை நான் செஞ்சிருக்கணும்தான். அதுக்குள்ளே 'புதிய நாடகம் போடணும்'னு டாக்டர் சொல்லிட்டார். அந்த லட்சியத்துலே, ஆசையிலே எல்லாத்தையும் மறந்துட்டேன்." "புது நாடகமா? டாக்டரா அப்படிச் சொன்னார்!" "ஆமாம், நாடகக் கம்பெனி பங்குதாரர் ஆச்சே! புதுசு போடணும்னு சொல்லிட்டார். அதுக்காக எங்கெங்கேயோ அலைஞ்சு புதுப்புது கதைகளா தேடிப் பிடிச்சுப் படிச்சுப் பார்க்கிறோம். ஒண்ணும் நாடகத்துக்குச் சரிப்பட்டு வரலே. ராமமூர்த்தியோட பெண் சகுந்தலாவே பல புஸ்தகங்களைப் பார்க்கிறா! இது சம்பந்தமா அவர் வீட்டுக்கும், என் வீட்டுக்குமா அலைஞ்சுண்டு இருந்துட்டேன்..." கோமளத்துக்குப் பொங்கி வந்தது. "இந்தா சாமண்ணா! பங்குதாரர், பங்கில்லாதார்னு எதையேனும் சொல்லிண்டு நிற்காதே! அப்போ எங்க ஆத்துக்காரர் பங்குதாரர் இல்லையா?" "ஐயோ! இல்லைன்னு சொல்வேனா? அவர் தன் செக்ரடரி ஆச்சே!" "சாமு! இப்போ ஒரு சமாசாரத்தை உடைச்சுச் சொல்றேன் கேட்டுக்க! இந்த நாடகத்துக்கு நிதி திரட்டினார்களே, இதுலே டாக்டரும் பங்குதார் இல்லே, வக்கீல் மாமாவும் பங்குதார் இல்லே. இவா ரெண்டு பேரும் நிஜமாகவே பங்கு போட்டவான்னு நினைச்சுண்டிருக்கியா?" சாமண்ணாவுக்குச் சுரீர் என்றது. "போடலியா மாமி? அப்படின்னா பின்னே யார் கொடுத்தா?" "எங்க வீட்டுக்காரருக்காவது கொஞ்சம் மனசு உண்டு. டாக்டருக்கு அதுவும் கிடையாது. எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார். அப்படியே இவர்களெல்லாம் போட்டாலும் நூறு இருநூறுக்கு மேலே போட்டுட மாட்டா. புது டிராமா தொடங்கறதுன்னா சும்மாவா? ஆயிரக்கணக்காப் பணம் வேணுமே! அவ்வளவு தொகையை ஒரேயடியா யார் தூக்கிக் கொடுப்பான்னு நினைச்சுப் பார்த்தாயா?" "இவா யாரும் கொடுக்கலியா?" என்று தணிந்த குரலில் வியந்தான். "ஒத்தை தம்பிடி கொடுக்கல்லே! நான் சொல்றது வெளியிலே தெரிய வேணாம். அத்தனை பணத்தையும் கொடுத்தது யார் தெரியுமோ? பாப்பாதான். ஆமாம்; நீ அலட்சியப்படுத்தறயே அதே பாப்பாதான்! ஏன் கொடுத்தா தெரியுமோ? உன் மேலே அவள் வச்சிருக்கிற அபிமானத்தினாலே கொடுத்தா. நீ நல்ல நடிகனாச்சே, முன்னுக்கு வரணுமேங்கற அக்கறையில கொடுத்தா. உன்னை அவ உயிருக்குயிரா நேசிக்கிறா. அதை நினைவிலே வச்சுக்கோ." சாமண்ணா பிரமிப்பில் தோய்ந்தான். வெறும் பிரமிப்பு மட்டுமல்ல. ஒரு வேதனையை உணர்வதாகவும் இருந்தது. கை, கால் இயங்கவில்லை. கண் இமைக்கவில்லை. கோமளம் ஊஞ்சலில் ஆசுவாசமாக அமர்ந்தாள். சற்று நேரம் அங்கே நிசப்தம் நிலவியது. "சரி மாமி! இப்ப எல்லாம் புரியறது. நீங்க ஏன் என்னை அன்போடு கடிஞ்சீங்கன்னு இப்ப தெரியறது. உண்மை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா நீங்க அதை எங்கிட்ட சொல்ல முடியாமத் தவிச்சிருக்கீங்க! இப்போ உங்களுக்கே பொறுக்க முடியாமப் போகவே உடைச்சு வெளியிலே விட்டுட்டீங்க. எனக்காக ஒரு ஜீவன் அன்பு காட்டறதும் பாடுபடறதும் இப்போ தெரிஞ்சுப் போச்சு! உங்களுக்கு கோடிக் கும்பிடு மாமி! இப்போதே போய் அவளைப் பார்க்கிறேன்." "இரு இரு. அவசரப்படாதே! நான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரியப்படாது. பாப்பாவிடம் போய், 'நீ கொடுத்தாயாமே'ன்னு கேட்கக் கூடாது. நீ அவசரப்பட்டுப் போக வேண்டாம்! ரெண்டு நாள் கழித்துப் போய்ப் பார். உடம்பைப் பற்றி விசாரி. அன்பா, இதமா நாலு வார்த்தை பேசிட்டு வா. அதனாலே உறவு உடனே ஒட்டிண்டுடும்னு பயப்படாதே!" என்றாள் கோமளம். சாமண்ணா வீடு திரும்பினான். இரவு முழுவதும் குழப்பமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு யோசித்தான். சகுந்தலா திடீரென்று தன் பார்வைக்குள் தோன்றியிராவிட்டால்...? 'கடவுள்தான் அப்படி ஒரு பெண்ணை என் வாழ்க்கையில் குறுக்கிட வைத்திருக்கிறார். அறிவும், அழகும், குலமும், குணமும் உள்ள பெண் சகுந்தலா! என் லட்சியமே சகுந்தலாவைப் போன்ற ஒரு பெண்ணைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதானே! அந்த அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்குமா? இப்போது சந்தர்ப்பம் கூடி வருவது மாதிரி இருக்கிறது. சகுந்தலா என்னை நேசிக்கிறாளா? என்னைக் காதலிக்கிறாளா? அவள் சிரிப்புக்கும் நெருக்கத்துக்கும் என்ன அர்த்தம்?' பாப்பாவையும் சகுந்தலாவையும் தன் மனத்தராசில் வைத்து எடை போட்டபோது அந்தத் தராசு இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது. கடைசியாகச் சகுந்தலா நின்ற தட்டுதான் கனத்துக் கீழே இறங்கியது. யோசித்தான். புன்முறுவலாய் அதை அங்கீகரித்தான். ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|