உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
20 ஜாமீன் கிடைத்து விட்டது என்கிற செய்தி அளித்த மகிழ்ச்சியிலும் வியப்பிலும் சாமண்ணா ஆழ்ந்து விட்டபோது கோமளம் மாமி தொடர்ந்து சொன்னாள். "மாமாகிட்டே பாப்பா வந்து கரையாக் கரைச்சு சொல்லிட்டா! அவரும் ஏற்பாடு பண்ணியாச்சு! மூணு நாளைக்கு முன்பே உன்னை எங்காத்துக்கு வரச் சொல்லியிருந்தாளாமே! நீ அவளைப் பார்க்கப் போயிருந்தாயாமே! எல்லா விவரமும் சொன்னாள்." சாமண்ணா மனமெல்லாம் பொங்க, "ஆமாம் மாமி! ரெண்டு நாளா ஒரே தலைவலி. படுத்துட்டு இருந்துட்டேன். இன்னிதான்..." வார்த்தைகள் பசப்பிக் கொண்டு வந்தன. "சாமண்ணா! இதை மாத்திரம் சொல்லிட்டேன். நினைவு வச்சுக்கோ. இன்னிக்குத் தேதியிலே உனக்கு யாருமே ஜாமீன் கொடுக்க வந்திருக்க மாட்டா! எல்லோரும் பேசுவாளே தவிர, ஒரு டிராமாக்காரனைப் பார்த்து முன் பணமோ, ஜாமீனோ யாரும் கொடுத்துட மாட்டா! இந்தச் சந்தர்ப்பத்திலே உனக்கு ஒரு புதுக் கம்பெனி ஆரம்பிக்கிறதுக்கும் சரி, புது நாடகம் போடறதுக்கும் சரி, நீ வடக்கே போய் சினிமாவிலே சேர்ந்து நடிக்கிறதுக்கும் சரி, எல்லாத்துக்குமே பாப்பாதான் உதவி செய்துண்டு இருக்கா! அதை ஞாபகம் வெச்சுக்கோ." "நீங்க என்னைத் தப்பாப் புரிஞ்சுண்டிருக்கேள் மாமி! நீங்க சொல்லவே வேண்டாம்." "புரிஞ்சுண்டா சரிதான்! அப்போ ஒண்ணு சொல்றேன் கேளு. நாளைக் காலையில் எழுந்ததும் பாப்பா கிட்டே போய் அவள் செஞ்சதுக்கெல்லாம் ஒரு வார்த்தை நன்றி சொல்லிட்டு அப்புறம் ரயில் ஏறு! அதைத் தவிர அந்தப் பெண்ணுக்கு வேறே எதுவுமே வேண்டியதில்லை... ஆமா..." "ஆகட்டும் மாமி! காலையிலே எழுந்த உடனே போயிடறேன்" என்றான் சாமண்ணா. மிகுதியான மகிழ்ச்சியில் அன்றிரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்து தோட்டத்தைச் சுற்றி வந்தான். மணி ஒன்பது அடித்த போது வாசலில் 'பீபிப்பீம்' என்று ஹாரன் அடித்துக் கொண்டு புதிய கார் ஒன்று வந்து நின்றது. சாமண்ணா எட்டிப் பார்த்தான். அந்தப் புது ஸெடானிலிருந்து தரகர் வராகசாமி இறங்கி வந்தார். அதன் சிவப்பு நிறம் கிளுகிளு என்று கண்ணைப் பறித்தது. ஜெர்மன் ஸில்வரில் பிடிகள் பளபளத்தன. "இப்பத்தான் மரக்காயர் கடையிலேருந்து எடுத்துட்டு வந்தேன். வெல்ல மண்டி செட்டியார் இந்தக் கலர்தான் வேணும்னு ஒத்தைக் காலிலே நிக்கிறாரு. அவருக்குத் தெரியாமல் உங்களுக்குன்னு சொல்லி எடுத்திட்டு வந்துட்டேன். மரக்காயருக்கு உங்க நாடகம், உங்க நடிப்புன்னா உயிராச்சா! 'சாமண்ணாவுக்குத்தானே! சரி, எடுத்துட்டு போ'ன்னு சொல்லிட்டார்" என்றார் வராகசாமி. தரகர் வராகசாமி ஒரு வீட்டுக்கு வந்தால் அதுவே ஒரு அந்தஸ்து! பெரிய புள்ளிகள் வீட்டில் மட்டிலுமே காணக் கூடிய இந்த வராகசாமி தன்னையும் தேடி வரும் காலம் ஒன்று உண்டு என்று சாமண்ணா எதிர்பார்த்திருந்தான். இதோ வந்து விட்டார். இப்போது சொந்த வீட்டில் வேறு குடி புகுந்தாயிற்று. அடுத்தது காரா? அவனை விட்டுப் போன எல்லா சொர்க்கமும் திரும்பி வந்தது போல உணர்ந்தான். வராகசாமி தாழ்வாரத்தில் அமர்ந்தார். "விலை என்ன சொல்றார் மரக்காயர்?" என்று கேட்டான் சாமண்ணா. "சாமண்ணா ஸார்! நீங்க விலை கேட்கலாமா? விட்டுட்டுப் போன்னு சொல்லுங்க போதும். உங்ககிட்டே பேரமோ, கீரமோ பேச மாட்டார்." உச்சி குளிர்ந்தது சாமண்ணாவுக்கு. இதற்குள் ஸெடானைப் பார்க்க நாலைந்து பேர் சூழ்ந்து கொண்டனர். டிரைவர் அவர்களைத் தள்ளி நின்று பார்க்கச் சொன்னான். பெட்ரோல் வாசனை கும்மென்று வந்து மூக்கை நிறைத்தது. சாமண்ணாவுக்கு அந்த மணம் ரொம்பப் பிடிக்கும். பெரிய மனிதர்கள் வீட்டு போர்டிகோவில் இப்படித்தான் வாசனை வீசும். இழுத்து இழுத்து அதை அனுபவித்திருக்கிறான்! ஒரு கணத்தில் அதிலிருந்து சகுந்தலா இறங்குவது போலவும், நீளப் படிக்கட்டுகளில் இடுப்பை இப்படியும் அப்படியும் வளைத்து ஏறுவது போலவும் காட்சி துவங்கியது. மனசில் இன்பச் சுரப்பிகள் நிறையச் சுரந்தன. அவன் பார்வையில் ஏற்பட்ட மோகத்தை வராகசாமி நொடியில் அறிந்து கொண்டார். எழுந்தார். "வெள்ளோட்டம் பார்த்துடுவோமா?" என்றார். அவர் முன்னே செல்ல, சாமண்ணா பெரிய சமஸ்தானாதிபதி போல் பின்னே சென்றான். வரி வரியாகப் படிகள். நான்கு படிகள் இறங்கியதும், கிசுகிசு என்று காதில் குறுகுறுத்தது. சாமண்ணா சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான். அது ஒரு விஸ்தாரமான தெரு. அதன் நீள வியாபகம் பூராவும் கண்ணில் தெரிய, அத்தனை வீட்டு வாசலிலும் அவரவர் நின்று, அந்த ஸெடானையும் சாமண்ணாவையும் வினோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி நெஞ்சில் ஆழ்ந்து படிய, சாமண்ணாவின் நடையில் மிடுக்கு ஏறியது. பார்வையில் ஒரு பெரிய மனுஷத்தனம் தொற்றியது. கம்பெனி டிரைவர் காக்கிச் சட்டை யூனிபாரத்தில் சாமண்ணாவுக்கு ஒரு ஸல்யூட் அடித்தான். பிறகு பின்புறக் கதவை உலோக நாதத்துடன் அவன் திறக்க, ஏராளமான சூரியப் புள்ளிகள் நாலாபுறமும் சிதறின. சாமண்ணா ஏறிக் கொண்டான். ஸீட்டில் அமர்ந்த போது ஏதோ இங்கிலீஷ்காரி மடியில் அமர்ந்தது போல் அவ்வளவு சொகுசாக இருந்தது. டிரைவர் அந்தக் கதவை ஓர் அடிமைப் பணிவோடு குனிந்து அடைத்துவிட்டு, முன் பக்கம் போய் பானெட் துவாரத்தில் நீளக் கம்பியைக் கொடுத்து விருட் விருட்டென்று சுழற்றி மோட்டாரைக் கிளப்பினான். இரைச்சலோடு சிறுசிறு குவியல்களாகப் புகை விட்டுக் கொண்டு ஜம்மென்று புறப்பட்டது கார். ஏழை சாமண்ணா அவனிடமிருந்து உதிர்ந்து விட்ட மாதிரி இருந்தது. கார் ஊரை விட்டுப் பெருஞ்சாலையில் ஓடிய போது கப்பலில் மிதப்பது போன்ற உணர்வில் பிரயாணம். உடம்பு அதிகம் நலுங்கவில்லை. சிலுசிலு என்று முகத்தில் வீசிய காலைக் காற்றின் குளுமை கன்னத்தில் கொஞ்சியது. அன்று காலையில் பாப்பாவைப் போய்ப் பார்க்க வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தான். வக்கீல் மாமி கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பிய வார்த்தைகள் காதில் ரீங்கரித்தன. இப்போது பாப்பாவின் நினைவு வர 'சாயங்காலம் போய்ப் பார்த்தால் போயிற்று' என்று பயணத்தைத் தள்ளிப் போட்டான். இந்தக் காரின் சுகத்தை அடைய புது ஜன்மமே எடுக்க வேண்டும். பதினோரு மணிக்குக் கார் திரும்பியது. "மாலையில் அந்த 'மல்லிகை ஓடை' வரை இன்னொரு வெள்ளோட்டம் போய் வரலாமா?" என்று வராகசாமி ஆசையைக் கிளப்பி விட்டார். ஐந்து மைலில் மல்லிகை ஓடை இருந்தது. அதன் இரு கரைகளிலும் மல்லிகைப் பந்தல்கள் மண்டிக் கிடந்தன. அவற்றை ஒட்டினாற் போல் தென்னை மரங்கள், மாந்தோப்புகள். கார் அருந்ததி தெருவைத் தாண்டிய போது சாமண்ணா, "நிறுத்து!" என்றான். அங்கே பெரிய மைவிழிகளோடு சகுந்தலா அவன் காரில் செல்வதை ஆச்சரியத்துடன் பார்த்தாள். "எங்கே இப்படி?" என்று அவன் கேட்க, "கார் வாங்கியாச்சா?" என்று ஆவல் தெறிக்க அருகே வந்தாள் சகுந்தலா. நீல நிற ஸில்க் அணிந்து, பளிச்சென்று வெட்டும் மோதிரம் அணிந்திருந்தாள். கண்கள் நீலங்களாக ஒளிர்ந்தன. சிவந்த உதடுகள். சாமண்ணாவின் கண்கள் பிரமித்தன. "கார் வெள்ளோட்டம் பார்க்கிறேன்." "ஓ! பிரமாதம்!" "ஏறிக்குங்க! திருப்பிக் கொண்டு வந்து விடறேன்" என்றான். புன்னகை குழிய ஏறினாள். கார் ஓடைக்கரை நோக்கிப் பறந்தது. ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|