உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
22 "அவன் கண்ணிலே நன்னா பட்டயோ இல்லையோ?" என்று கவலையோடு கேட்டாள் கோமளம். "என்னை நல்லாப் பார்த்துட்டார். கையை ஆட்டினாரே!" "கையை ஆட்டினானா?" "ம். சன்னலுக்கு வெளியே கை நீட்டி ரொம்ப நேரம் ஆட்டினார்." "போடி அசடு! நீ கொஞ்சம் சீக்கிரம் போயிருக்க வேண்டாமோ!" பாப்பா கவலை தோய்ந்த முகத்துடன் சாமண்ணாவின் நிலையில் லயித்தவளாய் ஊஞ்சலில் உட்கார்ந்தாள். "நான் என்ன செய்வேன் மாமி! அப்பாவுக்குத் தெரியாமல் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியிருந்தது." "அவர் கோபம் தணியலையோ?" "இன்னும் இல்லை! நாடகக்காரன் சகவாசமே வச்சுக்காதேன்னு தீர்மானமாச் சொல்லிட்டார். அப்படியிருக்கும் போது, அப்பா முன்னாலே எப்படி நான் வெளியே புறப்பட முடியும்? அதனால அவர் வெளியில போற வரை காத்திருந்தேன். அப்புறம்தான் குதிரை வண்டியைப் பிடிச்சு... ஒரே வேகமா ஸ்டேஷனுக்குப் போனேன். இறங்கி டிக்கெட் வாங்கிட்டுப் போய்ப் பார்க்கிறேன். ரயில் நகர்ந்துக்கிட்டிருக்கு! மனசெல்லாம் கிடந்து தவிச்சுது. அடடா! ஏமாந்துட்டேனேன்னு நினைச்சேன்." "அவனை வழி அனுப்ப யாராவது வந்தாங்களா?" "யாரும் வந்ததாத் தெரியலை." "சிங்காரப் பொட்டு...?" "அவர் வீட்டுக்கே போய் வழி அனுப்பிச்சுட்டார்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. ஸ்டேஷனுக்கு யாருமே வரல்லே." "தெரியும் பாப்பா. அப்படித்தான் நடக்கும்னு எனக்குத் தெரியும். யாருக்கும் அவன் கல்கத்தா போறதில் இஷ்டமில்லை." "அது என்னவோ! நான் முதல் வகுப்பைத் தேடிக் கண்டுபிடிச்சு, கையைத் தூக்கிக் காண்பிச்சு அதை நோக்கி ஓடறத்துக்குள்ளே, ரயில் ரொம்ப தூரம் போயிருச்சு. அது அவர்தான்னு புரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா பெட்டி வாசல்லையே நின்னார். அந்தச் சால்வையைப் போர்த்திக் கொண்டு." கோமளம் துணுக்குற்றாள். "சகுந்தலா போர்த்தின சால்வையா?" "ஆமாம்! அதேதான். அந்த நீலக் கலர் சால்வையே தான். நல்லாத் தெரிஞ்சுதே!" என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினாள் பாப்பா! "அதனாலென்ன! அவன்கிட்டே வேறே சால்வை இருந்திருக்காது. இப்போதானே அவனும் நாலு பேர் பார்க்கும்படியா மனுஷனாயிருக்கான். பாப்பா! எனக்கு என்னவோ ஒரே சந்தோஷமா இருக்கு! உன்னைப் பார்த்துட்டுக் கையை ஆட்டினான் பாரு!" "அது சரிதான் மாமி! எனக்கு இப்போ வருத்தம் என்னன்னா, அவர் போய் ஒரு வாரம் ஆச்சு இதுவரைக்கும் ஒரு லெட்டர் போடல்லை. இப்படி இருக்கலாமா?" என்றாள் பாப்பா தாபத்தோடு. "ஒரு வாரந்தானே ஆச்சு? ஒரு மாசம் ஆகல்லையே! போன இடத்திலே என்ன அசந்தர்ப்பமோ! அதுக்குள்ளே லெட்டர் வரலைன்னு குறைப்படலாமோ! அப்புறம் பார் பாப்பா! என்னதான் இருந்தாலும் அவன் ஒரு இள வயசுப் பிள்ளை. உனக்கு நேராக் கடிதம் எழுதுவானோ? எங்களுக்கு எழுதுவான். அதிலே, பாப்பா சௌக்கியமா, பாப்பாவை விசாரித்ததாகச் சொல்லுங்கோன்னு போடுவான். உனக்கு நேரா எழுதக் கூச்சப்படுவான்" என்றாள் கோமளம். மாமி அப்படிச் சொன்னது பாப்பாவுக்கு நியாயமாகப் பட்டது. கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. அவளை மீறி ஒரு புன்னகை அவளது உதட்டில் அரும்பியது. *****
"அன்புமிக்க சகுந்தலாவுக்கு வணக்கம், கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் உங்களுக்குத்தான் முதல் கடிதம் எழுதுகிறேன். ஊர் இங்கே இந்திரலோகம் போல இருக்கிறது. தெருக்களில் கார்கள், சாரட்டுகள் ஏராளம். நிறைய 'வெள்ளைக்காரர்கள்' இருக்கிறார்கள். 'லேக் ஏரியா' பக்கம் நான் தங்கியிருக்கிறேன். பெரிய வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். வேளா வேலைக்குச் சாப்பாடு. ஷூட்டிங் இன்னும் இரண்டு தினங்களில் ஆரம்பமாகிறது. ஸ்டூடியோவில் எல்லாம் வெள்ளைக்காரர்களாம். 'ஆஷூன் போஷூன்' என்று வங்காளிகள் எனக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறார்கள் இங்கே. ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தேன். வாழ்க்கையில் என் அம்மாவுக்கு அடுத்தபடி உங்கள் அப்பாவைத்தான் நினைக்கிறேன். எனக்கு அவ்வளவு ஒத்தாசை செய்திருக்கிறார். இன்று கல்கத்தாவில் பயாஸ்கோப்பில் நடிக்கும் அளவுக்கு நான் வளர்ந்திருப்பது உங்கள் அப்பாவால்தான். அப்புறம் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டாமா! ஆத்மாவுக்கு எது ரொம்ப அருகில் இருக்கிறது என்று உபன்யாசகர்கள் கேட்பார்கள். பகவான் என்று பதில் சொல்லுங்கள் என்பார்கள். நான் சகுந்தலா என்று சொல்லுவேன். நம் இருவரும் அவ்வளவு நெருக்கமாகி இருக்கிறோம். இங்கே கல்கத்தா வந்த பிறகு என்ன நினைக்கிறேன் தெரியுமா? நீங்கள் இங்கே வந்தால் இங்குள்ள புதுமைகளை எப்படி எப்படி பார்ப்பீர்கள், எப்படி எப்படி ரசிப்பீர்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். உங்கள் ரசிப்பையே நான் அனுபவிக்க விரும்புகிறேன். இப்படி நினைப்பதற்கு ஆதாரம் மல்லிகை ஓடைப் பக்கம் அன்று நாம் நடந்து சென்ற போது ஏற்பட்ட நெருக்கம் தான். இங்கே வேலை எல்லாம் முடிந்ததும் உடனே ஊருக்குத் திரும்பி வந்துவிடுவேன். ஒருவேளை, நீங்கள் கல்கத்தா வர சந்தர்ப்பம் கிடைத்தால், அதை எண்ணிப் பார்க்கும்போதே மனம் சிலிர்க்கிறது.
தங்கள் அன்பார்ந்த
சாமண்ணா. அந்தக் கடிதத்தை சகுந்தலா ஆறு தடவை படித்துவிட்டாள். முதலில் படித்த போது ஒரு அசுவாரசியமான புன்னகை ஏற்பட்டது. சாமண்ணா கையெழுத்து கோணல்மாணலாக இருந்தது. அதிகம் படித்திருக்க மாட்டான். ஆனாலும் இவ்வளவு அழகான வார்த்தைகளை எப்படி எழுதியிருக்கிறான். உண்மையிலேயே என்னிடம் ஏற்பட்டுள்ள அன்பின் சக்திதான் அழகான வார்த்தைகளாக வந்திருக்கின்றன! அப்புறம் இரண்டாம் முறை. மூன்றாம் முறை என்று படித்த போது மனம் அங்கங்கு ஆதங்கமுடன் நின்று முறுவல் பொழுந்தது. பின்னும் வாசித்த போது உள் உணர்வில் மென்மையாக ஒரு புதுமை உணர்ச்சி கலந்தது போல் இருந்தது. மேனி எங்கும் ஒரு அரும்பு நடுக்கம் பரவியது. பார்வை அடிக்கடி கடிதத்தை விட்டு வெளியேறி சூன்யத்தை அன்போடு பார்த்தது. ஒரு துஷ்யந்த கம்பீரத்தில் சாமண்ணாவின் முகம் ஒரு வசீகர வடிவில் தோன்றி மறைந்தது. "கடிதம் எழுதிவிட்டார் பார்த்தியா?" மெதுவான குரலில் அவள் உள் மனம் குதூகலித்தது. கல்கத்தா போய் பத்து நாட்களுக்குப் பிறகுதான் ஷூட்டிங் தொடங்கியது. தளவாடங்களையும் மனிதர்களையும் அரும்பாடுபட்டுத் தயாரிப்பாளர்கள் குறித்த இடத்தில் கொண்டு குவிப்பதற்கு அத்தனை நாட்களாகிவிட்டன. காலையில் எட்டு மணிக்கே சாமண்ணாவை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார்கள். கேட்டுக்குள் நுழைந்ததும், அருமையான பாதைகள், நிழல் தரும் வயதான மரங்கள். மேக்-அப் அறையில் எத்தனை கண்ணாடிகள்! எத்தனை வர்ண புட்டிகள்! மேக்-அப்காரர் ஒரு வங்காளிக்காரர். ஆங்கிலம் கலந்த வங்காளியில் பேசினார். அவர் இரண்டு தரம் முகத்தில் பூசியதுமே, அதில் ஜொலிப்பு வந்துவிட்டது. அரிதாரம் பூசினால் விறுவிறு என்று இருக்குமே, அதுமாதிரி இல்லை. அரைமணி நேரத்தில் தலையில் டோபா வைத்து, கிரீடம் வைத்து, ஆடையணிகள் பூட்டி சாமண்ணாவை துஷ்யந்தனாக்கி விட்டார்கள். சாமண்ணா பெரிய நிலைக் கண்ணாடியில் முழு உருவத்தைப் பார்த்ததும் கண் துள்ளியது. ஒரு அடி பின்னால் நகர்ந்து, 'உண்மைதானா' என்று பார்த்தான். உண்மைதான்! 'எனக்கு இவ்வளவு முகவெட்டா? இப்படி ஒரு மன்மதத் தோற்றமா? அம்மா! நீ இருந்து இதைப் பாராமல் போய் விட்டாயே?' என்று உள் மனம் சிலும்பியது. "துஷ்யந்தன் ரெடியா?" என்று ஒரு குரல் கேட்க, ஒருவர் உள்ளே ஓடி வந்து, "வாங்க, வாங்க" என்று அவனை உபசரித்து அழைத்துச் சென்றார். அந்த கேட்டில் நுழைந்ததும் சாமண்ணாவின் கண்கள் பரபரத்தன. அந்தப் படப்பிடிப்பு வகையறாக்களை அப்போதுதான் வாழ்வில் முதல்முறையாகப் பார்க்கிறான். கீழே தரை எங்கும் பாம்புகள் போல ரப்பர் ஒயர்கள் ஓடின. ஆச்சர்யமாக எதிரே ஒரு அரண்யக் காட்சியை அட்டையினாலும் துணிகளாலும் உண்டாக்கியிருந்தார்கள். கொளுத்துகிற பகல் போல் அங்கே வெளிச்சம் சாடியிருந்தது. சாமண்ணாவை அங்கே நிறுத்தி வைத்ததும், ஒரு தண்டவாளத்தில் காமிரா மிஷின் நகர்ந்து வந்தது. இரண்டு பேர் அந்தக் காமிரா வண்டியைத் தள்ளி வந்தார்கள். நெடிதான ஒரு வெள்ளைக்காரர் சாமண்ணா அருகில் வந்து "யூ ஆர் த ஹீரோ?" என்று குழைவாகக் கேட்டார். அந்த வெள்ளைக்காரர்தான் டைரக்டர் என்று தயாரிப்பாளர் சேட் சாமண்ணாவிடம் தெரிவித்தார். அவனிடம் குழைந்து பேசிய அந்த டைரக்டர் அடுத்த கணம் மற்ற சிப்பந்திகளிடம் பேசும் போது மிகவும் கெடுபிடியாக இருந்தார். ஸவுண்ட் இஞ்சினியர் ஓடி வந்து, நீண்ட கழி போன்ற மைக் பகுதியை சாமண்ணாவின் தலைக்கு மேலே நிறுத்தி வைத்தார். பக்கவாட்டத்தில் மிருதங்க, வயலின், ஹார்மோனியப் பாடகர்கள் தயாராக இருந்தார்கள். எல்லாம் தயாரான நிலையில் டைரக்டர், 'ரெடி' என்று கூறியதும், சேட் ஒரு தேங்காய் மீது கற்பூரத்தைக் கொளுத்தி வந்து திருஷ்டி சுத்தினார். அவசரமாக டைரக்டர், வசனத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொல்லிக் காதால் கேட்டுக் கொண்டார். "ரைட்! இந்த ஷாட்லே ஆரம்பிக்கலாம். ஹீரோயினை உடனே அழைச்சுட்டு வா!" என்றார் டைரக்டர். இரண்டே நிமிடத்தில் சாமண்ணா அருகில் சகுந்தலை வேடம் தரித்த ஒரு பெண் மின்னல் போல் வந்து நின்றாள். "இவங்கதான் சகுந்தலையா நடிக்கிறாங்க! வங்காள நாடகத்திலே பிரபலமானவங்க! சுபத்ரா முகர்ஜின்னு பேர்!" என்று சேட் அறிமுகப்படுத்த சாமண்ணா அவளைப் பார்த்தான். அழகான மீன் விழிகள் கொஞ்சிக் கொண்டு பார்க்க முகம் பட்டுச் சிவப்பில் மினுமினுக்க, சுபத்ராவின் அழகில் பிரமித்து மயங்கி நின்றான் அவன். ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|