29

     சிங்காரப் பொட்டு உள்ளே ஒரு வேகத்தில் பாய்ந்து விரைந்த போது யாரோ, "அடடே! சிங்காரம்!" என்று கூறியது கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சேட்ஜி நின்று கொண்டிருந்தார்.

     "வாங்க! எப்ப வந்தீங்க?" என்று விசாரித்த சேட்ஜி அவனை சாமண்ணா இருந்த அறைக்குக் கூட்டிச் சென்று காட்டினார். சாமண்ணா நினைவு தப்பிய நிலையில் படுத்திருந்தான். சுற்றிலும் ஒரு சிறு கூட்டம்.

     சிங்காரத்துக்கு உடம்பு பதறியது. 'அண்ணே' என்று கத்தி விடலாம் போல இருந்தது. கண்களில் நீர் தளும்பியது.

     அவன் சங்கடத்தை உணர்ந்த சேட்ஜி அவனுடைய கைகளைப் பிடித்து இழுத்து, "வாங்க போகலாம்" என்று வெளியே அழைத்துச் சென்றார்.

     "இன்னும் அஞ்சு நிமிஷத்திலே சாமண்ணாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப் போறாங்க. காலில் பலத்த அடி. இங்கேயே இப்படியே நில்லுங்க. அதோ டாக்டர் வரார். அவரைப் பார்த்துட்டு வந்துடறேன்" என்று ஓடினார்.

     சேட்ஜி திரும்பி வந்த போது அவர் முகத்தில் கவலை கவ்விக் கொண்டிருந்தது.

     "டாக்டர் என்ன சொல்கிறார்?" என்று பதறினான் சிங்காரம்.

     "ஆஸ்பத்திரிக்குப் போனப்புறம் தான் எதுவும் தெரியுமாம். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணுமாம். காலை எடுத்துடுவாங்களோ, என்னவோ?" என்று கவலைப்பட்டார் சேட்.

     "ஐயோ! எங்க அண்ணனுக்கு அப்படியெல்லாம் ஆயிடக் கூடாது" என்று தலையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

     அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே சுபத்ரா முகர்ஜி வந்து சேர்ந்தாள். வாசலில் பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது.

     "தள்ளுங்க! தள்ளுங்க!" என்று சில குரல்கள்.

     சுபத்ராவுக்கு வழி ஏற்படுத்தி அவளை உள்ளே அழைத்துச் சென்றார் சேட். சாமண்ணாவின் கால்களைப் போர்த்தியிருந்தார்கள். சாமண்ணா அறைக்குச் சென்ற சுபத்ரா அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. உடனே ஹாலுக்குத் திரும்பி விட்டாள். அவள் முகம் கரைந்து போயிருந்தது. சேட் துயரம் தோய்ந்த முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு அவள் அருகில் போய் நின்றார். "வீட்டுக்கு வாங்க சேட்! விவரமாப் பேசணும்!" என்று கூறிவிட்டுக் கார் ஏறிப் போய் விட்டாள்.

     இதற்குள் ஆஸ்பத்திரிச் சிப்பந்திகள் வந்து சாமண்ணாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்து ஆம்புலன்சில் ஏற்ற, அது பெரிய ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது.

     சிங்காரத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. சாமண்ணாவுக்கு ஏற்பட்ட விபத்து அவனைக் கலக்கிவிட்டிருந்தது. ஆஸ்பத்திரி இருக்குமிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தனியாகச் சாலை ஓரமாக நடக்க முற்பட்டான்.

     அப்போது யாரோ கையைத் தட்டி அழைப்பது தெரிந்தது. திரும்பினால் சேட்!

     "இந்தாங்க சிங்காரம்! இப்போ எங்கே தங்கியிருக்கீங்க?" என்று கேட்டார்.

     "கோமள விலாஸ்லே."

     "சௌகரியமா இருக்கா?"

     "அண்ணன் தான் ஏற்பாடு பண்ணியிருக்கு! ஆனா அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சே!" என்று புலம்பினான்.

     "நீங்க கவலைப்படாதீங்க. தெய்வம் துணை புரியும். இப்ப நீங்க ஓட்டலுக்குத்தான் போயிட்டிருக்கீங்களா?"

     "அண்ணனை இந்த நிலையில் விட்டுட்டு எப்படிங்க போக முடியும்? ஆஸ்பத்திரிக்குப் போயிட்டிருக்கேன்."

     "இப்ப ஆஸ்பத்திரியில் யாரையும் அனுமதிக்க மாட்டாங்க. நீங்க ஓட்டலுக்குப் போறதுதான் நல்லது. வாங்க உங்களை ஓட்டலிலே விட்டுறச் சொல்றேன். கம்பெனி வண்டி இருக்கு" என்று கூறிய சேட் தம் கையைத் தூக்கிக் காண்பிக்க வரிசையாக நின்ற கார்களில் ஒன்று வரிசையிலிருந்து விடுபட்டு அவரைத் தேடி வந்தது.

     "ஏறிக்குங்க."

     சிங்காரம் அரை மனத்தோடு ஏறிக் கோமள விலாஸுக்குச் சென்றான்.

     சேட்ஜி ஆஸ்பத்திரி வரை சென்று சாமண்ணாவை ஸ்பெஷல் வார்டில் சேர்த்துவிட்டு, "இதோ வந்துடறேன்" என்று வார்டு நர்ஸிடம் சொல்லிக் கொண்டு வீடு திரும்பிய போது வழியில் கோமள விலாஸில் இறங்கிச் சிங்காரத்தின் அறைக் கதவைத் தட்டினார்.

     "என்னங்க! சாமண்ணாவுக்கு ஒண்ணுமில்லையே!" என்று கேட்டான் சிங்காரம்.

     "ஒண்ணுமில்லை. ஆபரேஷன் உண்டா இல்லையான்னு சாயந்திரம் தான் சொல்வாங்களாம். இப்ப அதுக்குள்ள நான் உங்களைப் பார்க்க வந்தது ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசலாம்னுதான்."

     "சொல்லுங்க..."

     "ஊரிலே உங்க நாடகம் சக்கைப் போடு போடுதாமே?"

     "உங்களுக்கு யார் சொன்னாங்க?"

     "என் மகன் எழுதியிருந்தான்."

     "அப்படீங்களா? அண்ணன் புண்ணியத்துலே எனக்கு நாடகத்துலே ஹீரோவா சான்ஸ் கிடைச்சுது. நாலு பேர் மெச்சும்படிப் பேரும் கிடைச்சுட்டுது. அண்ணன் தான் எனக்கு வாழ்க்கை அமைச்சுத் தந்தவர். இப்படி ஆயிட்டுதேன்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப துக்கமாயிருக்கு சேட்!"

     "கவலைப்படாதீங்க. பெரிய பெரிய டாக்டரெல்லாம் வந்து பார்த்துக்கிட்டிருக்காங்க. குதிரை ஏற வேணாம்னு சொன்னோம். ஹண்டர்வாலி சினிமாவெல்லாம் பார்த்துட்டு அவர்களைப் போல இவரும் செய்யணும்னு நினைச்சார். சொன்னாக் கேட்கல்லே. இன்னும் ரெண்டே ஷாட்தான் பாக்கி. அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு. டைரக்டர் வந்திருந்தாரே பார்த்தீங்களா?" என்று கேட்டார் சேட்.

     "நான் பார்க்கலையே!"

     "மரத்தடியிலேதான் நின்னுட்டிருந்தார். பாவம், அவருக்குத் தான் ஏகப்பட்ட கவலை! நீங்களும் நானும் பேசிட்டிருந்தோமா! உங்களைப் பற்றி என்கிட்டே விசாரிச்சாரு. சொன்னேன்! அவர் என்ன சொல்றார்னா, மீதி ஷாட்டுக்களை உங்களை வச்சே எடுத்துரலாமேங்கறார்!"

     "என்னை நடிக்கச் சொல்றீங்களா?"

     "ஆமாம்."

     "அடையாளம் தெரிஞ்சுடுமே?"

     "தெரியாது. உங்க முகத்தை குளோஸப்ல காட்டாமல் லாங் ஷாட்ல முடிச்சுடலாம். டயலாக் எதுவும் கிடையாது."

     சிங்காரம் யோசித்தான்.

     "ஏங்க! அண்ணன் இடத்திலே நான் நடிக்கலாமா?"

     "அப்படிச் சொல்லாதீங்க. பெரிய சான்ஸ் இது. விட்டுறாதீங்க. நீங்க செய்யறது தப்பே இல்லை! அவரு ஒத்துப்பாரு! நீங்க இல்லாட்டி எப்படியும் வேறே ஆளைப் போட்டு எடுக்கப் போறோம்.

     "எதுக்கும் அண்ணனை ஒரு வார்த்தை கேட்டுடுவோம்."

     "அவர் என்ன சொல்லப் போறார்? படம் நல்லபடியா முடிஞ்சாப் போதும்னுதான் நினைப்பார். நீங்க நடிக்கிறதைத் தான் அவரும் விரும்புவார். அது எனக்குத் தெரியும்!" என்றார் சேட்ஜி.

     மறுநாளே சிங்காரத்தை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்கள். குதிரைக்குப் பதில் கார் உச்சி மீது ஒரு ஆசனம் வைத்து, அதை குதிரை சவாரி போல் சாமர்த்தியமாகப் படமாக்கினார்கள்.

     அரண்மனையிலும் ஒன்றிரண்டு காட்சிகள் எடுத்தார்கள். அப்புறம் இரண்டே வாரத்துக்குள் முடித்து விட்டார்கள்.

     இடையில் சிங்காரம் இரண்டு முறை சேட்டோடு ஆஸ்பத்திரிக்குப் போய் சாமண்ணாவைப் பார்த்துவிட்டு வந்தான்.

     "ஆபரேஷன் ஆகியிருக்கு!" என்று மட்டும் சொன்னார்கள். மேற்கொண்டு விவரம் எதுவும் சொல்ல மறுத்து விட்டனர்.

     ஷூட்டிங் வேலை முழுவதுமாக முடிந்ததும் சேட்ஜி அந்தப் படத்தில் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரையும் ஒருநாள் விருந்துக்கு அழைத்திருந்தார். சாமண்ணாவைத் தவிர எல்லோரும் வந்திருந்தனர். சுபத்ரா வந்திருந்தாள். டைரக்டர் அவளுக்கு மாலை அணிவித்துப் பாராட்டிப் பேசினார். "இந்த நேரத்தில் சாமண்ணா இங்கே இல்லாதது பெரும் குறைதான்" என்றார்.

     விருந்து முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றதும் சேட்ஜி சிங்காரத்தைத் தனியாக அழைத்துப் பேசினார்.

     "இந்தா, சிங்காரம்! சகுந்தலை படம் நல்ல விலைக்கு வித்துப் போச்சு! அடுத்தது சாவித்திரி எடுக்கப் போறேன். அப்புறம் 'தேவயானி'. அந்த இரண்டு படங்களிலும் நீங்க தான் நடிக்கணும். என்ன சொல்றீங்க?" என்று கேட்டார்.

     சிங்காரத்திற்கு வியர்த்தது.

     "நானா!" என்று இழுத்தான்.

     "ஆமாம்! உங்களுக்கு நல்ல நடிப்புத் திறமை இருக்காம். டைரக்டர் சொல்றார். உங்களை அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. சுபத்ராவும் ஒத்துக்கிட்டாங்களாம்!"

     திடீரென்று அவனுக்குச் சொர்க்க வாசல் திறந்து விடுவது போலிருந்தது. கூடவே சாமண்ணாவின் நினைவும் தோன்றிச் சங்கடப்படுத்தியது.

     "ஏங்க! அண்ணன் தான் வீட்டுக்கு வந்தாச்சே! அப்புறம் என்ன? உடம்பு தேறினதும் கொஞ்ச நாளில் அவரையே போட்டு எடுத்துட வேண்டியதுதானே? எதுக்கும் அவரை ஒரு வார்த்தை கேட்டுருங்க. அவர் இடத்தை அவர் சம்மதம் இல்லாம எடுத்துக்க என் மனசு ஒப்பலை. அண்ணன் ஆசீர்வாதம் செய்து நடிக்கச் சொன்னால் தாராளமாக நடிக்கிறேன்" என்றான் சிங்காரம்.

     "அண்ணன் நிச்சயம் ஆசீர்வாதம் செய்வார் பாருங்க" என்றார் சேட்ஜி.

     "அதெப்படிச் சொல்றீங்க?"

     "அவராலே இனிமே நடிக்கவே முடியாது!"

     "முடியாதா? ஏன்?"

     "அவர் வலது கால் போயிட்டுது!"

     "என்ன சொல்றீங்க சேட்ஜி?"

     "சாமண்ணாவின் வலது கால் எலும்பு நொறுங்கி அதை வெட்டி எடுத்தாச்சு. இனிமே அவராலே நடிக்க முடியாது."

     சிங்காரத்தின் ஒரு தாப வேகம் சுர்ரென்று சீறியது. "என்னது? எங்க அண்ணனால் இனிமே நடிக்கவே முடியாதா?" என்றான் ஆவேசத்துடன்.

     சேட்ஜி மௌனமாய் நின்றார்.

     "அப்போ நானும் நடிக்க மாட்டேன். அவருக்குத் துரோகம் செய்ய மாட்டேன்" என்றான்.

     "சிங்காரம்! உணர்ச்சி வசப்படாதீங்க. உங்களுக்குக் கடவுளாக் கொடுத்திருக்கிற சந்தர்ப்பம் இது! முடியாதுன்னு சொல்லாதீங்க!"

     "ஊஹூம்! நீங்க என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். அண்ணன் சொன்னாத்தான்."

     "அண்ணனை இன்னிக்கு நாங்க சாயங்காலம் சந்திக்கப் போறோம். அப்போ நீங்களும் வர்றீங்களா? அவரையே கேட்டுருவோம்."

     "வரேன்!"

     அருகில் சுபத்ரா நின்றாள். அலட்சியமாக, எதிலும் ஆர்வம் இல்லாதவள் போல் காணப்பட்டாள்.

     "நீங்களும் சாயந்திரம் ரெடியா இருங்கம்மா" என்று சுபத்ராவிடம் சொன்னார் சேட்.

     "இன்னைக்குச் சாயந்திரமா?" என்று கேட்டாள் சுபத்ரா.

     "உங்ககிட்டே முன்னாடியே சொல்லியிருந்தேனே! வரேன்னு சொல்லியிருந்தீங்களே!"

     "அப்ப சொன்னேன்..." என்று இழுத்தவள், "சாயந்திரம் வேலை இருக்கும் போல இருக்கே..." என்றாள்.

     "சாமண்ணாவின் காலை எடுத்தப்புறம் நீங்க அவரைப் பார்க்கவே இல்லையே! அவர் சுபத்ரா வரலையான்னு தினமும் கேட்டுக்கிட்டே இருக்காரே!"

     சுபத்ரா சுவாரசியமில்லாமல் நின்றாள். அவளுக்கு விருப்பம் இல்லை போல் தெரிந்தது.

     "நீங்க எத்தனை மணிக்குப் போகப் போறீங்க?" என்று கேட்டாள்.

     "ஆறு மணிக்கு!" என்றார் சேட்.

     "ஸாரி! எனக்கு வேறு 'எங்கேஜ்மெண்ட்' இருக்கு. முடிஞ்சா நானே வந்து பார்க்கிறேன். நீங்க எனக்காக காத்திருக்க வேணாம்!" என்று கூறி விட்டுக் காரில் ஏறிப் படீரென்று கதவை அடித்தாள்.

     அந்த அடி சிங்காரத்தின் மனத்தில் ஓங்கி அடித்தது போலிருந்தது.