உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
18 சாமண்ணா அதிர்ச்சியிலிருந்து விடுபடச் சிறிது நேரம் ஆயிற்று. மெதுவாகத் தலைநிமிர்ந்து வரதாச்சாரி முகத்தை இரண்டு மூன்று முறை பார்த்தான். சுவர்ப் பல்லியாவது கண்ணை ஆட்டும் போல இருந்தது. வக்கீல் முகத்தில் இம்மிச் சலனம் கூடத் தெரியவில்லை. "அப்போ ஜாமீன் இல்லாமல் விட மாட்டான்னு சொல்றீங்களா?" என்று கேட்டான். வக்கீல் சற்றுக் கோபமாய்த் திரும்பிப் பார்த்தார். "என்ன கேட்கிறே நீ? இதென்ன சாதாரண விஷயமா? விளையாட்டா நினைக்கிறியா? கொலைக் கேஸ்! முனகாலாவுக்குத் தெரிஞ்சுதுன்னா முட்டியைப் பேர்த்துடுவார்!" கண்களை உருட்டிக் கொண்டு மேலே பார்த்தார். வழக்கமில்லாத தோற்றம் அவனைக் கொஞ்சம் அச்சம் காட்டியது. "ஒரு ஜாமீன் தான் ஏற்கெனவே இருக்கேன்னு நினைச்சேன்" என்றான். "அது, நீ ஊரிலேயே இருக்கணும் என்பதற்குத்தான். இதைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. தெரிஞ்சுதா?" சாமண்ணா கண்ணைக் கொட்டிக் கொண்டு கெஞ்சுதலாய்ப் பார்த்தான். "நீங்க தான் இன்ஸ்பெக்டர் முனகாலாகிட்டே சொல்லி..." "முனகாலா என்ன எனக்கு மாமனா? மச்சானா? இல்லை கேட்கிறேன்." வக்கீல் குரல் உயர்ந்து விட்டது. "இல்லே, சட்டத்தைத்தான் அவராலே மீற முடியுமா? டி.எஸ்.பி. யாரு தெரியுமோல்லியோ? ரோனால்டு துரை. தோண்டிப்புடுவான் தோண்டி..." அவர் சொல்கிற வார்த்தை சாட்டை அடி போல விழுந்தது. "ஒண்ணு செய்யறேன். கல்கத்தாவிலே ரெண்டே ரெண்டு வாரம் தங்கிட்டு வந்துடறேன். எல்லோரையும் திருப்திப்படுத்தின மாதிரி ஆயிடும்..." "ரெண்டு வாரமா? ரெண்டு நிமிஷம் கூட நீ இந்த ஊரை விட்டுப் போக முடியாது." சாமண்ணாவுக்குக் கிட்டத்தட்ட அழுகை வந்துவிட்டது. "அப்போ நான் என்னதான் செய்வேன்? இப்படி ஒரு இக்கட்டுலே மாட்டிக்கிட்டிருக்கேனே! நீங்க எனக்கு உதவி செய்யக் கூடாதா?" "நான் என்ன செய்ய முடியும்?" "யாரையாவது கொண்டு ஒரு ஜாமீன்..." "ஜாமீனா? குறைஞ்சது ஐம்பதாயிரத்துக்குச் சொத்து மதிப்புக் கேட்பாங்க. பணம் வெச்சிருக்கியா? கேஸ் சாதாரணக் கேஸா? கொலைக் கேஸ்! அவ்வளவு பெரிய தொகைக்கு யார் உனக்கு ஜாமீன் கொடுப்பாங்க? இப்ப கொடுத்ததே பெரிசு..." சாமண்ணாவுக்குக் கண் கலங்கியது. துக்கத்துடன், "அப்படிக் கூட இரக்கமில்லாதவங்க இருப்பாங்களா? இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் ஏதுமில்லைன்னு எல்லோருக்கும் தெரியுமே! ஒருத்தராவது எனக்கு உதவிக்கு வர மாட்டாங்களா?" "என்னை ஏன் இந்தக் கேள்வி கேட்கிறே? நீயே போய் யார்கிட்டே கேட்கணுமோ, அவங்களைக் கேளு. நீ என்ன சாதாரணமானவனா? பெரிய நடிகனாச்சே? உனக்கு யார் இல்லேம்பா! உன் பேர் ஊர் முழுக்கத் தெரிஞ்சிருக்கே!" "கேட்கத்தான் போறேன்!" "கேளு! நீ நான்னு போட்டி போட்டுண்டு முன் வருவாளே!" "வக்கீல் ஸார் கேலி பண்றாப்ல இருக்கு. ஏன் ஒரு மாதிரி பேசறீங்க? அப்படி என்ன செஞ்சுட்டேன் மாமா?" "சே, சே! என்ன செஞ்சியா? என்ன செய்யலை? நீ முன்னுக்கு வரணும்னு நாலு பிரமுகர்கள் கிட்டே பணம் பறிச்சு நாடகம் அரங்கேற்றி... உன்னை நாலு பேர் முன்னாலே பெரிய மனுஷனா நிறுத்தி, புது நாடகத்துக்கு கலெக்டரையே அழைச்சு... ஊரையே திமிலோகமாக்கிட்டோம். நீ என்னடான்னா இப்ப எல்லாத்தையும் துண்டை உதர்ற மாதிரி உதறித் தள்ளிட்டு கல்கத்தா போறேங்கறே! உனக்கு உன் காரியம்தான் பெரிசாப் போச்சு!" வக்கீலின் கோபத்துக்குக் காரணம் புரிந்துவிட்டது. சாமண்ணா உடனே கேட்டான், "ஏன் மாமா, நான் முன்னுக்கு வரணும்னு நினைக்கிறது தப்பா? நான் ஒரு பெரிய சினிமா ஸ்டார் ஆகணும்னு ஆசைப்படறது குத்தமா?" வக்கீலின் கோபம் முகத்தில் தெரிந்தது. மூக்கு சிவுசிவு என்று ஆகியது. "உன் லட்சியத்துக்காக நீ மத்தவா முகத்திலே கரியைப் பூசிடறதா? பணம் போட்டவங்க எல்லாம் பட்டை நாமத்தைப் போட்டுக்கணுமா? அதுதான் உன் மரியாதையா? உன் இஷ்டப்படியே செய், போ. இப்பவே போ. என்கிட்டே வாதாடிண்டு நிக்காதே. இனிமே எனக்கு இதிலே அக்கறை கிடையாது!" துண்டை எடுத்து மேலே போட்டார். நேராகக் கிணற்றடிக் கோடிக்குப் போய்க் கொண்டிருந்தார். சந்தர்ப்பம் வெடித்துவிடும் நிலையில் இருந்தது. வக்கீல் நிறைய அடக்கிக் கொண்டு போகிறார் என்பது தெரிந்தது. சற்று விக்கித்து நின்றான். பிறகு மெள்ள எழுந்து மெதுவாக வெளியே நடந்தான். அடுத்த நாள் தனது பிரச்னையை எடுத்துக் கொண்டு சாமண்ணா ஊரில் சுற்ற ஆரம்பித்தான். பாவலரிடமிருந்து தன் வேட்டையை ஆரம்பித்தான். தனது நிலையை அவரிடம் விவரமாய் எடுத்துச் சொல்லி, "உங்களால் உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டான். பாவலர் தமக்குள்ள சங்கடங்களை விவரித்தார். தமது கடன் சுமையைச் சொல்லித் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அடுத்து ராவ்பகதூரைக் கேட்டபோது, "இந்தா, சாமண்ணா! இதைப் போல விவகாரத்தையெல்லாம் இங்கே கொண்டு வராதே! நான் ஒரு பிரின்ஸிபிள்காரன். இம்மாதிரி விவகாரம் எல்லாம் எனக்குப் பிடிக்காது" என்றார். பண்ணை பரமசிவத்துக்கு - ஏற்கெனவே கோர்ட்டில் இரண்டு வழக்குகள் நடந்து கொண்டிருந்தன. எனவே, புதுச் சிக்கலில் மாட்டிக் கொள்ள அவர் தயாராயில்லை. இரண்டு நாள் அலைந்ததில் சாமண்ணாவுக்கு உலகம் சற்றுப் புரியத் தொடங்கியது. எல்லோரும் ஏதாவது ஒரு பிரச்னையை எடுத்துப் போட்டார்கள். உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். 'தன்னை ஊர் புகழ்கிறது. தன்னிடம் எல்லோரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தூரத்தில் இருக்கும் வரை தான். யாரையும் அண்டி உதவி கேட்காத வரைதான்' என்று தோன்றியது. கவலை உள்ளத்தை பாரமாக அழுத்தியது. கடவுள் தன்னை எப்படியும் கைவிட மாட்டார் என்று நம்பினான். மூன்றாம் நாள் இரவு, கோவிலுக்குப் போகாதவன், போனான். பிரகாரத்து விநாயகரிடம் வெகு நேரம் நின்று வேண்டிக் கொண்டு வெளியே வந்தான். அர்ச்சனை முடிந்து திரும்பிப் போகும் கோமளம் மாமியை எதிரும் புதிருமாகப் பார்த்து விட்டான். "ஏது சாமண்ணா, ஆளையே காணல்லை? எங்களையெல்லாம் மறந்துட்டியா?" என்றாள் கோமளம். "மறப்பேனா மாமி!" என்று ஈனசுரத்தில் பேச்சைத் தொடங்கியவன் அதுவரை நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கூறினான். அப்படிச் சொல்லும்போது கூடவே அவன் மனசில் ஒரு சந்தேகமும் ஓடியது. மாமி வேறு எங்கே தன்னைக் கொத்தி எடுத்துவிடப் போகிறாளோ என்ற பயம் தான் அது. கோமளம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். ஒரு இடைவெளிக்குப் பிறகு அவனைப் பார்த்து, "சாமண்ணா உன் ஆசை எனக்குப் புரியாமல் இல்லை. மத்தவங்க நியாயமும் தெரியறது. வக்கீல் மாமா எல்லாத்தையும் சொன்னார். இதெல்லாம் தர்மசங்கடமான சமாசாரங்கள். எது சரி எது தப்புன்னு சொல்ல முடியாது" என்றாள். புது நாடகம் தயாரிக்க இத்தனை செலவு செய்துவிட்டு திடீர் என்று கல்கத்தா போகிறேன் என்று சொல்வது அவளுக்கும் பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பேசினாள். "பரவாயில்லை; ஒண்ணும் கவலைப்படாதே! ஊரிலே நாலு பேர் நாலு விதமாச் சொல்லுவா. எல்லாரும் இனிக்கப் பேசுவாளே தவிர, காரியம்னு வரப்போ தூர விலகிப் போயிடுவா! நான் எங்காத்து மாமாவையும் சேர்த்துத்தான் சொல்றேன்." "அவரைச் சொல்லாதீங்கோ மாமி. தங்கமானவர்." "தங்கமானவர்தான். இல்லைன்னு சொல்லலை! அவர் வக்கீலா இருக்கிறதாலே சில அசௌகரியங்கள் உண்டு. ஆமா! இன்ஸ்பெக்டர் முனகாலாவை லேசுப்பட்டவர்னு நினைக்காதே! உள்ளூரப் பகைதான்... விடு... இப்போ ஒண்ணு சொல்றேன். ஏற்கெனவே, உனக்கு யார் உதவி செய்தாளோ, அவள் காலிலேயே போய் விழு. இந்த நெருக்கடியில் அவளைத் தவிர வேறு யாரும் உனக்கு உதவி செய்ய மாட்டா. கையிலிருக்கிற வெண்ணெயை விட்டுட்டு நெய்க்கு அலையாதே! உன் எல்லா விவகாரங்களுக்கும் பாப்பா ஒருத்திதான் ஆதரவு காட்டுவாள். லேசா வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொன்னாப் போதும். உனக்காக அவள் உயிரையும் கொடுப்பா. யாரையும் எதிர்பார்க்காதே! நேரே அவள்கிட்ட போ! விஷயத்தைச் சொல்லு! ஜாம்ஜாம்னு நடக்கும்." சாமண்ணா எல்லாவற்றுக்கும் தலையாட்டினான். கோமளம் சொன்ன வார்த்தைகள் இதமாக இருந்தன. ஆனாலும் அவனுக்கு பாப்பாவை அண்டுவது அவ்வளவு பிடித்தமான காரியமாகத் தோன்றவில்லை. டாக்டரிடம் கேட்டால் என்ன? அவனது அடிமனத்தில் அந்த ஆசை இருந்தது. போய்க் கேட்டான். "ஏன் சாமண்ணா! இந்த விஷயம் போலீஸ் கேஸ்! நான் ஒரு டாக்டர்! நான் எல்லோர்கிட்டேயும் சௌஜன்யமா இருக்க விரும்பறவன். உன் விஷயத்திலே பல பேர் பலவிதமா பேசறா! கடந்த ரெண்டு மூணு நாளா ஊர்லே உன்னைப் பற்றி ஒரே வதந்தியா இருக்கு. இதிலே என் மண்டையும் சேர்ந்து உருளறதை நான் விரும்பலை! வேறே என்ன உதவி வேணாலும் கேளு, செய்யறேன்!" என்றார் டாக்டர். ஓர் இருட்டு அடித்தது போல் இருந்தது. டாக்டர் புன்னகை செய்து கொண்டே பேசினார். 'சகுந்தலா எங்கே? அவளைக் காணவில்லையே... அவள் இருந்திருந்தால்...' முகம் கவிழ்ந்த நிலையில் வெளியே வந்தான். அவனது முன்னேற்றத்துக்கு ஊரே எதிர்த்து நிற்கின்றாற் போல் தோன்றியது. ஊகூம்! இதை விடக் கூடாது! ஆமாம் விடக்கூடாது! மறுநாள் விடியற்காலையில் சாமண்ணா சைக்கிளை எடுத்துக் கொண்டு பூவேலி கிராமத்தை நோக்கிப் புறப்பட்டான். பாப்பா வீட்டு முன்னால் சைக்கிளை நிறுத்தியபோது உடம்பு உதறியது. நிமிர்ந்து வாயில் நிலையைப் பார்த்தான். அங்கே குமாரசாமி நின்றது சற்று திகைப்பாக இருந்தது. புன்னகை செய்தான். குமாரசாமி பதில் சமிக்ஞை செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டது வேதனையாக இருந்தது. "வணக்கம்" என்று படியில் ஏறி நடையில் நின்றான். "என்ன வேணும்?" என்றார் குமாரசாமி. அந்தக் குரலில் பற்றுதல் இல்லை. நிலையைப் பிடித்துக் குறுக்கே அவர் நின்று கொண்டிருந்தது அவன் உள்ளே போவதைத் தடுப்பது போல இருந்தது. பழைய உபசாரம் எதுவும் இல்லை. இடுக்கு வழியே உள்ளே பார்த்தான். பாப்பா தென்படவில்லை. எங்கே அவள்? "என்ன வேணும்?" என்றார் குமாரசாமி சற்று முறைப்பாக. தன் நிலையை விளக்கி விவரங்களைக் கூற ஆரம்பித்தான். இடையில் எப்படியும் பாப்பா அங்கே வந்து விடுவாள் என்று எதிர்பார்த்தான். அவள் வரவில்லை. குமாரசாமி இரக்கம் காட்டுவார் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவரிடம் எந்தவித மாறுதலும் தெரியவில்லை. எல்லாவற்றையும் கல் போல நின்று கேட்டுக் கொண்டார். அவன் முடித்த பிறகு அவர் ஓர் அழுத்தப் பார்வையாகப் பார்த்தார். "இந்தாங்க! உங்களுக்கு இனிமே நாங்க உதவறதுக்கு வழியில்லை. ஆமாம்! இந்த மாதிரி பிரச்னை, விவகாரம் எல்லாம் வச்சிக்கிட்டு இனி இங்கே வராதீங்க. நாங்க இதுவரை பட்டது போதும். நீங்க போகலாம்" என்றார். "பாப்பா!" "அவளை நீங்க பார்க்க முடியாது!" ஓங்கி முகத்தில் அடி விழுந்தது போல இருந்தது. சற்று நேரம் வாயடைத்து நின்றான். பிறகு, "வரேன்" என்று கூறிவிட்டுத் திரும்பி வாசலில் இறங்கி சைக்கிள் ஏறி மிதிக்க ஆரம்பித்தான். கிராமத்துப் பாட்டை வந்ததும் துக்கம் பொங்கி வந்தது. கண்ணீர் பீறிட்டு இருபுறமும் வழிந்தது. கிராமத்து எல்லையைத் தாண்டி அரை மைல் போயிருப்பான். அங்கே இன்னொரு வழியாக அந்தப் பாட்டையைக் குறுக்கிடும் பாதையில் ஒரு மாட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரர் ஸ்தானத்தில் பாப்பா உட்கார்ந்திருந்தாள். சோர்வான பாப்பா, அசதியான பாப்பா, மெலிந்து காணப்பட்ட பாப்பா. அவள் கண்கள் அவனையே பார்த்திருக்க, வெலவெலத்து சைக்கிளை நிறுத்தினான். 'இவள் எப்படி இங்கே வந்தாள்?' அவள் வண்டியை நிறுத்திக் கீழே இறங்கி வந்து அவன் எதிரில் நின்றாள். ஆப்பிள் பசி : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|