14 அந்தப் பத்திரிகைப் படத்தைப் பற்றிய கவனத்தை கோபாலிடமிருந்து வேறு திசைக்குத் திருப்பிவிட முயன்றாள் மாதவி. முத்துக்குமரன் கோபாலின் கேள்விகளைப் பொருட்படுத்தாமலே இருந்து விட்டான். இப்படிப்பட்ட கேள்விகளைத் தங்களிருவரையும் தேடிவந்து அவன் கேட்பதே சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு; முத்துக்குமரன் கோபால் இருவருமே கோபித்துக் கொண்டு விடாமல் நாசூக்காக நிலைமையைச் சமாளித்துவிட விரும்பினாள் மாதவி. அவளுடைய முயற்சி பயனளிக்கவில்லை. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின், "இராத்திரி பிளேன்ல அப்துல்லா ஊருக்குத் திரும்பராரு. நான் வழியனுப்ப 'ஏர்ப்போர்ட்' போறேன். நீங்க யாராச்சம் வரீங்களா?" என்று கோபால் கேட்டான். முத்துக்குமரன், மாதவி இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனரே ஒழிய அவனுக்கு மறுமொழி கூறவில்லை. அவர்கள் தயக்கத்தைப் புரிந்து கொண்ட அவன், "சரி நான் போயிட்டு வரேன்" - என்று விமான நிலையத்துக்குப் புறப்பட்டான். போகும் போது அந்தப் பத்திரிகையை அவன் எடுத்துச் செல்லவில்லை. அங்கேயே புல்தரையில் மறந்தார்ப் போலப் போட்டு விட்டுப் போய் விட்டான். "அப்துல்லாவை வழியனுப்பறத்துக்கு நீ போவியே? போகலியா?" - என்று முத்துக்குமரன் கோபால் தலைமறைந்ததும் மாதவியைக் கேலி செய்தான். அப்போது நாயர்ப் பையன் ஓடி வந்து, "டாக்ஸி ரொம்ப நேரமா வெயிட்டிங்கில் இருக்கு. டிரைவர் சத்தம் போடறான்" - என்று அவள் நிறுத்தி விட்டு வந்த டாக்ஸியைப் பற்றி நினைவூட்டினான். தான் ஒரு டாக்ஸியில் வந்ததையும் அது வெகு நேரமாக வெயிட்டிங்கில் நிற்பதையும் அவள் அப்போதுதான் நினைவு கூர்ந்தாள். உடனே முத்துக்குமரனின் பக்கம் திரும்பி, 'நான் புறப்படட்டுமா? இல்லை இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகட்டுமா?' என்று கேட்பது போன்ற பாவனையில் பார்த்தாள். முத்துக்குமரன் அவளைப் போகச் சொன்னான். "டாக்ஸி நிற்கிறதுன்னாப் புறப்பட்டுப் போயேன். நாளைக்குப் பார்த்துக்கலாம்." அவள் போக மனமின்றியே புறப்பட்டாள். அவனிடம் இன்னும் நிறையப் பேச வேண்டுமென்று மனத்தில் ஒரு குறையோடுதான் புறப்பட்டாள் அவள். அவன் தோட்டத்திலிருந்து எழுந்து அவுட்ஹவுஸு க்குப் போய்ச் சேர்ந்தான். மறுநாள் காலையில் பிரயாணத்துக்காகப் புதிய பட்டுப் புடவைகள் எடுத்துக் கொள்ளச் சொல்லி - அவளுக்கு டெலிபோன் செய்தான் கோபால். பாண்டிபஜாரில் ஏர்க்கண்டிஷன் செய்த பட்டு ஜவுளிக்கடை ஒன்றில் கோபாலுக்கு அக்கவுண்ட் உண்டு. நாடகங்களுக்கு வேண்டிய பட்டுப் புடவைகளைக்கூட அவள் அங்கே போய்த்தான் எடுத்துக் கொள்வது வழக்கம். பில் நேரே அங்கிருந்து கோபாலுக்கு அனுப்பப்பட்டுவிடும். "பதினொரு மணிக்கு நீ அங்கே வருவேயின்னு கடைக்காரர்களுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடட்டுமா?" - என்று கோபால் அவளிடம் கேட்ட போது அவள் சரி என்று சொல்லியிருந்தாள். அதனால் அவசர அவசரமாகக் குளித்து உடை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாரானாள் அவள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|