18 ஈப்போவில் முதல் நாள் நாடகத்திற்கு நல்ல வசூல் ஆயிற்று. இரண்டாம் நாள் நாடகத்தன்றும் பரவாயில்லை. பினாங்கில் ஆன வசூல் ஈப்போவில் ஆகவில்லை என்று கோபாலிடம் குறைபட்டுக் கொண்டார் அப்துல்லா. இரண்டாம் நாள் நாடகத்தன்று மாலையில் நல்ல மழை பிடித்துக் கொண்டதுதான் வசூல் குறைவிற்குக் காரணம் என்று கருதினான் கோபால். ஈப்போவில் தங்கியிருந்த இரண்டு நாட்களில் பகல் நேரங்களில் சுற்றுப்புறப் பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டார்கள் அவர்கள். அடுத்து நாடகம் நடத்த வேண்டிய ஊர் கோலாலும்பூர். இடையில் ஒரு நாள் ஓய்வு கொள்வதற்கு மீதம் இருந்தது. "நீ விரும்பினால் வரலாம்" - என்று மாதவியிடம் மட்டும் தெரிவித்தான் கோபால். "நான் வரவில்லை" - என்று சுருக்கமாகப் பேச்சை முடித்து அவனை அனுப்ப முயன்றாள் மாதவி. ஆனால் கோபால் அதோடு விடாமல் மேலும் பேச்சுக் கொடுத்தான். "உதயரேகாவை அனுப்பிச்சும்... அப்துல்லா உன்னையே நெனைச்சு உருகிப் போயிட்டிருக்காரு..." "அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் கேமரான் ஹைலண்ட்ஸுக்கு வரலையின்னு சொன்னப் புறமும் நீங்க மேலே மேலே பேசிக்கிட்டிருந்தா அப்புறம் நான் பதில் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை." "அதுக்கில்லே; அப்துல்லா கோடீஸ்வரன். மனசு வச்சுட்டான்னாக் கோடி கோடியாப் பணத்தைக் கால்லே கொண்டாந்து கொட்டுவான்." "எங்கே கொட்டணுமோ கொட்டட்டுமே?" "நீ வீணாக ரொம்ப மாறிப் போயிட்டே." "ஆமாம் மாறித்தான் போயிட்டேன். அதை நீங்க புரிஞ்சிக்கிட்டிருந்தாச் சரிதான். "வாத்தியார் என்னமோ மாயமாகச் சொக்குப் பொடி போட்டு உன்னை மயக்கிப்புட்டான்..." தன் அறையைத் தேடி வந்து தனிமையில் கோபால் நீண்ட நேரம் பேசுவதை அவள் விரும்பவில்லை. அவன் வாயிலிருந்து வீசிய நாற்றத்தில் அப்போது அவன் குடித்துவிட்டு வேறு வந்திருக்கிறான் என்று தெரிந்தது. ஆகவே நீண்ட பேச்சைத் தவிர்க்க விரும்பினாள் அவள். அவனோ என்ன சொல்லியும் போகிற வழியாயில்லை. பேசிக் கொண்டே நின்றவன் திடீரென்று ஒரு பயங்கர மிருகத்தின் வெறியோடு தாவி அவளைத் தழுவ முயன்றான். அதை முற்றிலும் எதிர்பாராத மாதவி தன் கைகளின் முழுப் பலத்தையும் பிரயோகித்து அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள். நேரே முத்துக்குமரனின் அறைக்குப் போய்க் கதவைத் தட்டினாள் மாதவி. முத்துக்குமரன் எழுந்து வந்து கதவைத் திறந்தவன் அவளிருந்த பதற்றமான நிலையைக் கண்டு திகைத்தான். "ஏன் இப்படி உடம்பு நடுங்குது? என்ன நடந்துச்சு?" "உள்ளே வந்து சொல்றேன்" - என்று கூறிவிட்டு அவனோடு அவனறைக்குள் சென்றாள் மாதவி. கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளே சென்று அவளை உட்காரச் சொன்னான் முத்துக்குமரன். குடிக்கத் தண்ணீர் கேட்டாள் அவள். அவனே எழுந்து சென்று 'ஜக்'கிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். தண்ணீரைப் பருகிய பின் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் அவனிடம் சொன்னாள் அவள். எல்லாவற்றையும் கேட்டுப் பெருமூச்சு விட்டான் அவன். சில விநாடிகள் அவளுக்கு என்ன மறுமொழி சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அவள் திடீரென்று விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். வெடித்துப் பொங்கி வந்த அழுகை அவன் இதயத்தைப் பிசைந்தது. அவள் அருகே சென்று பட்டுக் கருங்கூந்தலைக் கோதியபடியே ஆறுதலாக அரவணைத்தான் அவன். அவனுடைய அரவணைப்பில் அவள் பாதுகாப்பைக் கண்டது போல் உணர்ந்தாள். நீண்ட நேரத்திற்குப்பின் அவன் அவளிடம் கூறினான்: "ஊருக்குப் போனதும் 'போடி கழுதைன்னு' என்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியிலே தள்ளிடப் போறாராம்." "யார்? கோபால் உங்கிட்டச் சொன்னானா?" "ஆமாம், ஈப்போவுக்குப் பிளேன்ல வரமாட்டேன்னு சொன்னப்ப எங்கிட்டச் சத்தம் போட்டாரு!" "கலை ஒரு பெண்ணின் வயிற்றுக்கும் வசதிகளுக்கும் பாதுகாப்பளிக்கிறதே ஒழிய உடம்பிற்கும் அதன் கற்புக்கும் பாதுகாப்பளிப்பதில்லை". "........." அவளால் இதற்குப் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் முகத்தை நேரே பார்ப்பதற்குத் துணிவின்றிக் கீழே தரையை நோக்கிக் குனிந்தது அவள் முகம். உதயரேகா சகிதம் அப்துல்லாவும் கோபாலும் கேமரான் ஹைலண்ட்ஸுக்குப் போய்விட்டார்கள். அவர்கள் கேமரான் ஹைலண்ட்ஸிலிருந்து திரும்பியதும் குழுவினர் அனைவரும் ஈப்போவிலிருந்து திரும்பியதும் புறப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகலில் மாதவியும் முத்துக்குமரனும், குழுவைச் சேர்ந்த துணை நடிகன் ஒருவனும், ஒரு டாக்ஸி வாடகைக்குப் பிடித்துக் கொண்டு, ஈப்போவைச் சுற்றியிருந்த சுங்கை, சுங்கை சிப்புட், கம்பார் முதலிய ஊர்களுக்குப் போய்விட்டு வந்தார்கள். 'சுங்கை சிப்புட்'டில் கூட்டுறவு முறையில் நடத்தப்படும் ஒரு ரப்பர்த் தோட்டத்தையும், மகாத்மா காந்தி பெயரில் கட்டப்பட்டிருந்த காந்தி கலாசாலை என்ற பள்ளிக் கூடத்தையும் அவர்கள் பார்த்தார்கள். போகும் போதும் வரும்போதும் சாலையருகே மெழுகுவர்த்தி உருகி வருவதுபோல் கொடி கொடியாகச் சரிந்த ஒருவகை மலைகள் பார்க்க மிக அழகாக இருந்தன. எல்லா இடமும் சுற்றிப் பார்த்துவிட்டு ஏழரை மணிக்குள் அவர்கள் திரும்பி விட்டார்கள். கேமரான் ஹைலண்ட்ஸ் போயிருந்தவர்கள் திரும்ப இரவு இரண்டு மணிக்கு மேலாகி விட்டது. மறுநாள் அதிகாலையில் கோபால், அப்துல்லா, உதயரேகா மூவரும் விமானம் மூலமும், மற்றவர்கள் கார் மூலமும் கோலாலும்பூர் புறப்பட்டனர். ஸீன்கள், ஸெட்டிங்ஸ் எல்லாம் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பத்திரமாக வந்து சேர, அப்துல்லா லாரி ஏற்பாடு செய்திருந்தார். அதனால் அவை ஒழுங்காக உரிய காலத்திலே அந்தந்த ஊருக்கு வந்து சேர்ந்தன. உதயரேகாவைத் தொடர்ந்து அவர்கள் விமானத்தில் அழைத்துப் போவதிலிருந்து தான் அதைப் பார்த்து ஏங்கி வழிக்குவர முடியுமென அப்துல்லா எண்ணுவதாகத் தோன்றியது மாதவிக்கு. அவள் அப்துல்லாவை நினைத்துப் பரிதாபப்பட்டாள். அவள் முத்துக்குமரனிடம் கூறினாள்: "எங்கோ மூலையில் கிடந்த உதயரேகாவுக்கு மலேயாவிலே வந்து இப்படி ஒரு யோகம் அடிக்கணும்னு தலையிலே எழுதியிருக்குப் பாருங்க..." "ஏன்? அவமேலே பொறாமையாயிருக்கா உனக்கு?" "சே! என்ன பேச்சுப் பேசறீங்க நீங்க?... நான் சொல்ல வந்தது அவயோகத்தைப் பற்றியே தவிர, எனக்கு அதிலே பொறாமையின்னு அர்த்தமில்லை. அவ வரக்கண்டுதான் நான் பிழைச்சேன்..." "இல்லேன்னா?" "........." அவள் பதில் சொல்லவில்லை. அவ்வளவு கடுமையாக அவளைக் கேட்டிருக்கக்கூடாதென்று அவனும் அந்தப் பேச்சை அவ்வளவிலேயே நிறுத்தினான். தான் அப்படிக் கடுமையாகப் பேசும் ஒவ்வொரு தடவையும் அவள் தனக்கு முன் மௌனம் சாதிப்பதைப் பார்த்து அவனுக்கே அவள் மேல் உள்ளூறக் கருணை சுரந்தது. நிராயுதபாணியாக எதிரே நிற்கும் பலவீனமான எதிரியை ஆயுதங் கொண்டு துன்புறுத்தியதைப் போல உணர்ந்தான் அவன். "உனக்கு ஆட்சேபணையில்லேன்னா நீயும் எங்ககூட மரீலின் ஹோட்டல்லே தங்கலாம். ஆனா வாத்தியாருக்கும் சேர்த்து இங்கே ஏற்பாடு செய்ய முடியாது." "அவசியமில்லை! நான் இங்கே தங்கல்லே. அவர் தங்கற இடத்திலேயே நானும் தங்கிக்கிறேன்..." என்றாள் மாதவி. உயரமான கட்டிடங்களும், சீன எழுத்திலும், மலாய் எழுத்திலும், ஆங்கிலத்திலுமாக மின்னும் நியான்ஸைன் விளக்குகளுமாகக் கோலாலும்பூர் முற்றிலும் புதியதொரு தேசத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வை அவர்களுக்கு அளித்தது. சாலைகள் எல்லாம் பளீரென்றும் கச்சிதமாகவும் இருந்தன. மெட்ராஸில் பார்த்திராத தினுசுகளில் சிறிதும் பெரிதுமாகப் புதிய புதிய கார்கள் நிறையத் தென்பட்டன. மலாய்க்காரர்கள் யார், சீனர்கள் யார் என்று வித்தியாசம் கண்டுபிடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்த தினத்தன்று மறுநாள் காலையில் உள்ளூர்க் காலைத் தமிழ்த் தினசரியில் நடிகர் கோபாலைப் பேட்டி கண்டு வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பேட்டியில், "இங்கே நீங்கள் நடத்த இருக்கும், 'கழைக் கூத்தியின் காதல்' என்ற நாடகத்திற்கு முன் அதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட நேர்ந்தது பற்றி மலேயாத் தமிழர்களுக்கு எதுவும் கூறுவீர்களா?'' என்று ஒரு கேள்வி இருந்தது. "முழுக்க முழுக்க நானே திட்டமிட்டு மலேயாத் தமிழர்களுக்காகத் தயாரித்த நாடகம் இது! இதன் வெற்றியை நான் என் வெற்றியாகவே கருதுவேன்" - என்று அந்தக் கேள்விக்கு மறுமொழி கூறியிருந்தான் கோபால். அதைப் படித்த போது மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் தாங்க முடியாத ஆத்திரம் வந்தது. "உபசாரத்துக்குக் கூட இது நீங்க எழுதின நாடகம்னு ஒரு வார்த்தை சொல்லலை, பார்த்திங்களா? அவருக்கு எத்தினி திமிரு இருந்தா இப்படிப் பதில் சொல்லியிருப்பார்." "நீ சொல்றது தப்பு மாதவீ! அவனுக்குத் திமிரும் கிடையாது, ஒரு எழவும் கிடையாது. சுபாவத்திலே அவன் பெரிய கோழை, வெளியிலே பெரிய தீரன் மாதிரி நடிக்கிறான். இந்தப் பேட்டி விஷயம் வேறே மாதிரி நடந்திருக்கும், பத்திரிக்கைகாரங்களை அப்துல்லாதான் 'மரீலீ'னுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருப்பார். பேட்டி எடுக்கறப்ப அவரும்கூட இருந்திருக்கார்னு இந்தப் பேட்டியிலேயே போட்டிருக்கே படம், அதுலேருந்து தெரியுது. இதோ பாரு படத்தை. முதல்லே கோபால், நடுவிலே உதயரேகா. அப்புறம் அப்துல்லான்னு மூணு பேருமா நிக்கறாங்களே. அப்துல்லாவுக்குப் பயந்து அவன் உன் பெயரையோ என் பெயரையோ சொல்லாமல் விட்டிருப்பான். அவன் உன் பேரையும், என் பேரையும் சொல்லி அப்துல்லா அதை வேண்டாம்னுருக்கணும்." "இருந்தாலும் இருக்கும்! ஆனா இது அடுக்கவே அடுக்காது. நாடகத்தை எழுதி முழுக்க முழுக்க 'டைரக்ட்' பண்ணின உங்களை அவர் மறந்து போன பாவம் அவரைச் சும்மா விடாது." "பாவ புண்ணியத்தைப் பார்க்கிறவங்க இன்னிக்கி உலகத்திலே யார் இருக்காங்க?" என்ற அவளுக்கு விரக்தியான குரலில் மறுமொழி கூறினான் முத்துக்குமரன். அவர்கள் தங்கியிருந்த 'ஸ்டிரெயிட்ஸ் ஹோட்ட'லில் சைனீஸ் உணவும் காண்டினெண்டல் உணவு வகைகளும்தான் இருந்தன. எனவே காலைச் சிற்றுண்டியும் பகலுணவும், இரவு உணவும் அம்பாங் ஸ்டிரீட்டிலிருந்து ஒரு இந்திய ஹோட்டல்காரர் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். காபி, கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம் போன்றவைகளை மட்டும் அவர்கள் தங்கள் ஹோட்டலிலேயே ஏற்பாடு செய்துகொண்டார்கள். வந்த தினத்தன்று இரவு எங்கும் போகவில்லையாயினும் மறுநாள் காலை அவர்கள் மகாமாரியம்மன் கோவிலுக்கும், பத்து மலைக்கும் போய்விட்டு வந்தார்கள். அவர்கள் பத்து மலைக்குப் போயிருந்தபோது நீண்ட நாட்களுக்கு முன் மதுரையில் ரொட்டிக் கடை வைத்திருந்த ருத்ரபதி ரெட்டியாரைத் தற்செயலாக அங்கே சந்திக்க நேர்ந்தது. அவரும் உடனே அவனை அடையாளம் கண்டு கொண்டார். பெட்டாலிங் ஜெயாவில் ரொட்டிக்கடை வைத்திருப்பதாகவும், இரண்டு வருஷத்துக்கு ஒருதரம் ஆறுமாதம் ஊர்போய் வருவதாகவும் தெரிவித்தார் ரெட்டியார். புது தேசத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தெரிந்த மனிதரைச் சந்தித்தது மிகவும் இன்பமாயிருந்தது. மாதவியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு தான் சென்னைக்கு வந்து கோபால் நாடகக் குழுவில் இருப்பதையும் தெரிவித்தான் முத்துக்குமரன். "சினிமா எங்கே ஓடிப்போறது? பார்த்துக்கலாம்." "சரி! நாளை மத்தியானம் உங்க ரெண்டு பேருக்கும் நம்ம வீட்டிலே சாப்பாடு. பெட்டாலிங்ஜெயாவுக்கு வந்துடுங்க... அது சரி; எங்கே தங்கியிருக்கீங்கன்னு சொல்லவே இல்லியே?" "ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டல்லே இருக்கோம். சாப்பாடு பலகாரம்லாம் அம்பாங் ஸ்ரீட்லேருந்து கொண்டாந்து தராங்க..." "நம்ம வீட்டிலேயே வந்து தங்கிடுங்களேன்." "அது முடியாது! நாடகக் கம்பெனி ஆட்கள் எல்லாரோடவும் சேர்ந்து தங்கியிருக்கோம். தனியாப் போறது நல்லாயிருக்காது. விடவும் மாட்டாங்க..." "சரி! ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்கு நாளை மத்தியானம் கார் அனுப்பறேன். வந்துடுங்க" - என்று கூறிவிட்டு விடை பெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தார் ருத்ரபதி ரெட்டியார். அவர் சென்ற பின்பு சிறிது நேரம் அவரைப் பற்றியும் மதுரையில் பத்து வருடங்களுக்கு முன் அவரோடு பழக நேர்ந்தது பற்றியும் அவருடைய குணாதிசயங்கள் பற்றியும் சிறிது நேரம் மாதவியிடம் வியந்து சொல்லிக் கொண்டிருந்தான் முத்துக்குமரன். பத்து மலையிலிருந்து அவர்கள் திரும்பி ஹோட்டலுக்கு வந்தபோது எதிர்பாராத விதமாகக் கோபால் அங்கே வந்திருந்தான். "என்ன வாத்தியாரே! இந்த ஹோட்டல்லே எல்லாம் வசதியா இருக்கா? ஏதாவது வேணும்னாச் சொல்லுங்க. நான் வேறே எடத்துலே தங்கிட்டேன்கிறதுக்காக உங்க குறைகளைச் சொல்லாம விட்டுடப்பிடாது-" என்று ஒரு டிரேட் யூனியன் லீடரிடம் அவனுடைய குறைகளைத் தொழில் நடத்துகிறவன் கேட்பது போல் கேட்டான் கோபால். உண்மைப் பிரியமில்லாமல் ஓர் உபசாரத்துக்காகக் கேட்கப்படும் அந்த வார்த்தைகளை முத்துக்குமரன் ஸீரியஸாக எடுத்துக்கொள்ளவுமில்லை; பதில் சொல்லவுமில்லை. அவன் போன பிறகு மாதவி முத்துக்குமரனிடம் கேட்டாள்: "விசாரிக்கிற லட்சணத்தைப் பார்த்தீங்களா? உதட்டிலே கூட ஒட்டாமே வார்த்தைகளைப் பேசறாரு..." "விட்டுத்தள்ளு அவன் பேச்சை, நாம எல்லாம் இங்கே அவனைப் பத்தி என்னென்ன பேசிக்கிறோமோன்னு திடீர்னு பயம் வந்திருக்கும். அந்தப் பயத்திலே பார்த்திட்டுப் போகலாம்னு வந்திருப்பான்." "உதயரேகாதான் இந்தப் பக்கம் தலையையே காட்டலே, ஒரேயடியா அப்துல்லாகிட்டவே இருந்துட்டா..." "அப்துல்லா விட்டால்தானே?" மாதவி இதைக் கேட்டுச் சிரித்தாள். முத்துக்குமரன் மேலும் தொடர்ந்தான்: "அப்துல்லாவும் விடமாட்டாரு. அவளுக்கும் இங்கே வந்து நம்ம முகத்தையெல்லாம் பார்க்கிறதுக்கு வெட்கமாக இருக்குமில்லே..." "வீணா ஏன் அடுத்தவங்களைக் குறை சொல்றே...? அவளைக் குறை சொல்லிப் பிரயோசனமில்லே. முதமுதல்லே யாராவது ஒரு அயோக்கியன் அவளை இந்த லயன்லே கொண்டாந்து விட்டிருப்பான். வயித்துக் கொடுமை நல்லது கெட்டது அறியாது!... இப்படிப்பட்டவங்க மேலே எனக்கு எப்பவுமே ஒரு அநுதாபம் உண்டு மாதவி." அவள் உதயரேகாவைப் பற்றிப் பேசுவதை அவ்வளவில் விட்டு விட்டாள். இன்னும் சிறிது நேரத்துக்கு அதே பேச்சைப் பேசினால் இறுதியில் அது தன் வரை வந்து நின்று விடுமோ என்று அவளுக்கே உள்ளூர ஒரு பயம் இருந்தது. முத்துக்குமரன் வேறு தன் பேச்சில், "முத முதலிலே யாராவது ஒரு அயோக்கியன் அவளை இந்த 'லயன்லே' கொண்டாந்து விட்டிருப்பான்" என்று அழுத்திக் கூறியிருந்தான். முன்பு எப்போதோ தான் முத்துக்குமரனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "என்னை இந்த லயன்லே கொண்டாந்ததே கோபால்தான்" என்று தான் கூறியபோது 'இந்த லயன்லேன்னா என்னா அர்த்தம்?' என்ற பதிலுக்கு இவன் கோபமாகக் கேட்டிருந்தது இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதே மாதிரி இன்றும் 'இந்த லயன்லே' என்ற வார்த்தையை அவனே உபயோகித்து விட்டான். சாதாரணமாக அந்த வார்த்தையை அவன் உபயோகித்தானா அல்லது ஏதாவது உள்ளர்த்தத்தோடு உபயோகித்தானா என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளேயே புழுங்கினாள் அவள். இந்நிலையில் உதயரேகாவின் நடத்தையைப்பற்றி மேலே பேச்சை வளர்ப்பது இருவரும் சுமுகமாகப் பேசிக் கொண்டிருக்கும் அமைதியான சூழ்நிலையைக் கெடுப்பதாக முடியும் என்று எண்ணிப் பயத்தோடு அந்தப் பேச்சை நிறத்தினாள் அவள். ***** கோலாலும்பூரில் முதல் நாள் நாடகம் நல்ல வசூலைத் தந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்கும் ஹெவி 'புக்கிங்' இருப்பதாக அப்துல்லா கூறிக்கொண்டிருந்தார். வந்த இரண்டாவது நாள் மத்தியானம் ருத்ரபதி ரெட்டியாரின் கார் ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்கு வந்து அவர்களை விருந்துக்கு அழைத்துக் கொண்டு போயிற்று. ருத்ரபதி ரெட்டியார் குடியிருந்த பெட்டாலிங்ஜெயா பகுதி புதிய புதிய நவீனக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. கோலாலும்பூரில் புதிய அழகிய எக்ஸ்டென்ஷன் என்று அதைப் பற்றி ருத்ரபதி ரெட்டியாரின் டிரைவர் விவரித்துக் கூறினான். ருத்ரபதி ரெட்டியார் மலேயாவுக்கு வந்து பெரும் பணக்காரராகியிருப்பதாகத் தெரிந்தது. முதல் தரமான பாண்டிய நாட்டுச் சைவச் சமையல் விருந்தில் கிடைத்தது. விருந்து முடிந்ததும் மாதவிக்கு ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியையும், முத்துக்குரனுக்கு ஓர் உயர்தரமான ஸீகோ கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாக வழங்கினார் ரெட்டியார். அவர் மாதவியிடம் தங்கச் சங்கிலியை வெற்றிலை பாக்குப் பழத்தோடு வைத்துக்கொடுக்க முன் வந்தபோது அதை வாங்கிக் கொள்ளலாமா கூடாதா என்பது பற்றி முத்துக்குமரன் என்ன நினைக்கிறான் என்று அறிய விரும்பியவள்போல தயக்கத்தோடு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். முத்துக்குமரன் அவள் பயத்தை கண்டு சிரித்தான். "சும்மா வாங்கிக்க. ரெட்டியார் நம்ம அண்ணன் மாதிரி. அவரிட்ட நாம வித்தியாசம் பாராட்டக்கூடாது." அவள் வாங்கிக் கொண்டாள். கடிகாரத்தை ரெட்டியாரே முத்துக்குமரனின் கையிலே கட்டி விட்டார். "ஏதோ கடவுள், புண்ணியத்திலே இங்கே கடல் கடந்து வந்து நல்லா இருக்கோம். நல்லா இருக்கறப்ப நமக்கு வேண்டியவங்களை மறந்துடப்பிடாது" என்ற ரெட்டியார் கூறினார். "மாதவி! ரெட்டியார் இப்ப இப்பிடி இருக்காரேன்னு நினைக்காதே. மதுரையிலே இருக்கறப்ப நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சிநேகிதம். கவிராயர் குடும்பத்திலே பிரியம். எங்க நாடக சபா நாயுடுவுக்கு அந்தக் காலத்திலே இவருதான் வலது கை." "தெரியும் அம்மா? ஆனா, அவரு, இப்ப உச்சாணிக் கொம்பிலே இருக்காரு. இந்த தேசத்திலேயே பெரிய வைர வியாபாரி அப்துல்லாவோட 'கஸ்ட்டா' வந்து தங்கியிருக்காரு. நம்மைப் போலொத்தவங்களை மதிப்பாரோ, மாட்டாரோ? மரீலின் ஹோட்டலுக்குப் போறதுன்னாலே பயம். அங்கே டவாலியிலிருந்து, வெயிட்டர் வரை அத்தினிபேரும் இங்கிலீஷ்லேதான் பேசுவாங்க. எனக்கோ இங்கிலீஷ்னாலே பயம். பேசவும் வராது. கேட்கவும் புரியாது..." "என்னை மாதிரீன்னு வச்சுக்கயேன்..." என்று முத்துக்குமரன் மாதவியிடம் குறுக்கிட்டுக் கூறினான். "பழகினாத் தானே வந்திட்டுப் போகுது." "அப்படியிலேலேம்மா! ஒரு தபா பாரு; என் வியாபார சம்பந்தமா ஹாங்காங் போறதுக்காக - பிளேன் டிக்கட் வாங்கறதுக்காக மரீலினுக்குப் போயிருந்தேன். பி. ஓ. ஏ. ஸி. பிளேன் கம்பெனிக்காரன் ஆபீஸ் அந்த மரீலின் ஒட்டல்லேதான் கிரவுண்ட்ப்ஃளோர்ல இருக்கு. அங்கே ரிஸப்ஷன்ல ஒரு சீனச்சி - சின்ன வயசுக் குட்டி இருந்தா! அவ கீச்மூச்னு இங்கிலீஷ்ல பேசினப்ப எனக்கு ஒண்ணுமே ஓடலே. கொஞ்சம் மலாய்மொழியும், சீனக்காரன் பாஷையும் எனக்குத் தெரியும். துணிந்து சைனீஸ் பாஷை பேசினேன். அதுக்கப்பறம் தான் அந்த சீனச்சியும் சிரிச்சுக்கிட்டே சைனீஸ் பேசினா. டிக்கட்டை வாங்கிக்கிட்டு வந்து சேர்ந்தேன். எதுக்குச் சொல்றேன்னா இங்கிலீஷ் வேண்டியது தான், தெரியாதவங்ககிட்ட அதைப் பேசிச் சங்கடப்படுத்தறாங்களேங்கிறது தான் வருத்தமாயிருக்கு?" "மாதவிக்கு அந்தக் கஷ்டமே இல்லே ரெட்டியார் சார்! அவளுக்கு இங்கிலீஷ், மலையாளம், தமிழ் எல்லாமே நல்லாப் பேசத் தெரியும்; எழுதவும் தெரியும்..." "ஆமாமா! மலையாளத்திலே எல்லாருமே இங்கிலீஷ் நல்லாப் படிச்சிருப்பாங்க..." ரெட்டியாரிடமிருந்து அவர்கள் விடைபெற்றுப் புறப்படும்போது மாலை மூன்றரை மணி ஆகிவிட்டது. மாலைக் காபி சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டு தான் அவர்கள் பெட்டாலிங்ஜெயாவிலிருந்து புறப்பட்டார்கள். புறப்படும்போது ரெட்டியார், "இந்தா முத்துக்குமார்! இங்கே இருக்கிறவரை எது வேணும்னாலும் என்கிட்டக் கூசாமக் கேக்கலாம். வெளியிலே சுத்தறதுக்குக் கார்கீர் தேவையின்னாலும் ஃபோன் பண்ணு..." என்று பாசத்தோடு கூறினார். அவருடைய அன்பு முத்துக்குமரனை வியப்பிலாழ்த்தியது. மீண்டும் ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்குத் திரும் பியபோது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது. அன்று பகலில் அளவுக்கதிமாகக் குடித்ததினால் கோபால் பாத்ரூமில் வழுக்கி விழுந்து முழங்காலில் ஒரு சிறு ஃபிராக்சர் - வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் துணை நடிகர்கள் அனைவரும் கோபாலைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பதாகவும் ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டல் ரிஸப்ஷனில் கூறினார்கள். அந்த ரிஸப்ஷனிஸ்டிடமே கோபால் சேர்க்கப்பட்டிருந்த பிரைவேட் நர்ஸிங் ஹோமின் விலாசமும் இருந்தது. அதை எழுதி வாங்கிக் கொண்டு ரெட்டியாரின் காரிலேயே அங்கே விரைந்தார்கள் அவர்கள். நர்ஸிங்ஹோம் மவுண்ட்பாட்டன் ரோடிலிருந்தது. அவர்கள் போனபோது துணை நடிகர்களும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் கூட்டமாகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் அன்றைக்கு மாலையில் நடைபெற வேண்டிய நாடகம் உண்டா இல்லையா என்பதைப் பற்றியே குழப்பமடைந்திருப்பது தெரிந்தது. கோபாலின் காலில் ஃபிராக்சர் ஏற்பட்டு - நடிக்க முடியாமற் போனதனால் அன்றைய நாடகமும் அடுத்த நாட்களுக்கான புரோகிராமும் கான்ஸல் செய்யப்படும் என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நிறைய வசூலாகி ஏராளமான டிக்கட்டுக்கள் விற்று தியேட்டரும் வாடகைக்குப் பேசியிருப்பதனால் நாடகங்கள் கான்ஸலாவதனால் தமக்குப் பெருத்த நஷ்டமேற்படும் என்று அப்துல்லா கவலையடைந்திருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். கோபாலின் காலில் கட்டுப்போட்டுப் படுக்கையில் கிடத்தியிருந்தார்கள். தூக்க மருந்து கொடுத்திருந்ததனால் அவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். "ரொம்ப மைனர் ஃபிராக்சர்தான்; ஹி வில் பி ஆல் ரைட் வித் இன் ஏ வீக் டைம். டோண்ட் வொர்ரி" என்று டாக்டர் அப்துல்லாவிடம் கூறிக்கொண்டிருந்தார். அப்துல்லாவும் உதயரேகாவும் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள். "ஹி ஹேஸ் ஸ்பாயில்ட் எவ்வரிதிங், ஈப்போவிலேயே ஹேவி லாஸ் எனக்கு. கோலாலும்பூரிலியாவது அதை 'மேக் அப்' பண்ணிடலாம்னு பார்த்தேன். ஏழு நாளைக்கும் ஹெவி புக்கிங் இருக்கு இங்கே..." என்று அப்துல்லா மாதவிடம் அழாத குறையாக ஒப்பாரி வைத்தார். அடிபட்டுக் கிடப்பவன் மேல் சிறிதும் இரக்கப்படாமல் அவர் அப்படிப் பேசியது மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. முத்துக்குமரனுக்குக் கோபமே வந்து விட்டது. "இந்தாய்யா பணம் பணம்னு பறக்காதே. உனக்கு நாடகம் தானே நடக்கணும்? அது கச்சிதமா நடக்கும். ஆறு மணிக்குத் தியேட்டருக்கு வந்துசேரு" என்று தீர்க்கமான குரலில் அப்துல்லாவிடம் கூறினான் முத்துக்குமரன். அப்துல்லா அப்போதும் சந்தேகத்துடன், "அது எப்பிடி சாத்தியம்?..." என்று ஏதோ கேட்க ஆரம்பித்தார். "பேசாதே! நாடகம் நடக்கும். தியேட்டருக்கு வா. கோபாலுக்குக் கால்லே ஃபிராக்சர்ங்கற நீயூஸ் இன்னிக்குச் சாயங்காலம் மட்டும் எந்தப் பேப்பர்லியும் வராம கொஞ்சம் பார்த்துக்க" என்று முத்துக்குமரன் போட்ட சத்தத்திலே மிரண்டு பதில் பேசாமல் வாய் மூடி மௌனியானார் அப்துல்லா. மாதவிக்கு முத்துக்குமரனின் திட்டம் புரிந்தது. அவனே கதாநாயகனாக நடிக்கப் போகிறான் என்பதில் அவளுக்குப் பெருமகிழ்ச்சி. அவனோ அவளோடு தான் நடிக்க இருப்பதற்கு மகிழ்ந்தான். சமயோசிதமாக அவனுக்கு தோன்றிய யோசனையையும் நிலைமையை அயராமல் சமாளிக்கும் அவனுடைய தீரமும் மாதவிக்கு மிகவும் பிடித்திருந்தன. அவனுடைய அந்தத் தீரம்தான் அவளை அவன்பால் ஏக்கம் கொண்டு உருகச் செய்தது. காதல் கொண்டு நெகிழ வைத்தது. |