11

     முத்துக்குமரன் மேடையில் அப்படி நடந்து கொண்டதைக் கோபால் ஒரு சிறிதும் விரும்பவில்லை. பினாங்கு அப்துல்லாவின் மனம் புண்படும்படி நேர்வதனால் மலேயாப் பயணமும் நாடக ஏற்பாடுகளும் வீணாகி விடுமோ என்று அவன் பயந்தான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் நடிக்கிறபோதுகூட இந்த எண்ணமும் பயமுமே அவன் மனத்தில் இருந்தன.

     நாடக முடிவுக் காட்சியில் கூட்டம் மெய்மறந்து உருகியது. திரை விழுந்த பின்பும் நெடுநேரம் கைதட்டல் ஓயவே இல்லை. மந்திரி போகும்போது முத்துக்குமரனிடமும் கோபாலிடமும் சொல்லிப் பாராட்டி விட்டுப்போனார். அப்துல்லாவும் பாராட்டிவிட்டுப் போனார். அப்படிப் போகும்போது அவரை மறுநாள் இரவு தன் வீட்டில் விருந்துக்கு அழைத்தான் கோபால்.

     மேடையில் போட்ட ரோஜாப் பூ மாலை உதிர்ந்தது போலக் கூட்டமும் சிறிது சிறிதாக உதிர்ந்து கொண்டிருந்தது.

     நிகழ்ச்சி எல்லாம் முடிந்து தேடி வந்து பாராட்டிய ஒவ்வொருவருடைய பாராட்டுக்கும் முகம் மலர்ந்த பின் அண்ணாமலை மன்றத்திலிருந்து வீடு திரும்பும்போது காரில் மாதவியிடமும் முத்துக்குமரனிடமும் குறைபட்டுக் கொண்டான் கோபால்.

     "அடுத்தவங்க மனசு சங்கடப் படறாப்பிலே பேசறது எப்பவுமே நல்லதில்லை. அப்துல்லா கிட்ட ஒரு பெரிய காரியத்தை எதிர்பார்த்து நாம் அவரை இங்கே அழைச்சிருக்கோம். அவரு மனம் சங்கடப்பட்டா நம்ம காரியம் கெட்டுப் போயிடுமோன்னுதான் பயப்பட வேண்டியிருக்கு- "

     இதற்கு மற்ற இருவருமே பதில் சொல்லவில்லை. மீண்டும் கோபாலே தொடர்ந்து பேசலானான்:

     "மேடையிலே கொஞ்சம் பணிந்தோ பயந்தோ பேசறதிலே தப்பு ஒண்ணுமில்லே..." என்று கோபால் கூறியதும் அதுவரை பொறுமையாயிருந்த முத்துக்குமரன் பொறுமையிழந்து,

     "ஆம்! அச்சமே கீழ்களது ஆசாரம்" - என்று வெடுக்கென மறுமொழி கூறிவிட்டான்.

     கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. இரண்டு பேரில் யாருக்குப் பரிந்து பேசினாலும் மற்றொருவருடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி மாதவி மௌனமாயிருக்க வேண்டியதாயிற்று. கோபாலோ கார் பங்களாவை அடைகிறவரை கடுங்கோபத்தோடு வஞ்சகமானதொரு மௌனத்தைச் சாதித்தான். முத்துக்குமரனோ அதைப் பொருட்படுத்தவே இல்லை.

     இரவு சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் மாதவி வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். முத்துக்குமரன் அவுட்ஹவுஸுக்கு வந்து விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான். பத்து நிமிஷங்களுக்குள் ஃபோன் மணி அடித்தது. பங்களாவிலிருந்து நாயர்ப் பையன் பேசினான்:

     "கொஞ்சம் இங்கே வந்து போக முடியுமான்னு ஐயா கேக்கறாரு."

     "இப்ப தூங்கியாச்சு, காலையிலே பார்க்கலாமின்னு சொல்லு" என்று பதில் கூறி ஃபோனை வைத்தான் முத்துக்குமரன். சிறிது நேரம் கழித்து மறுபடி ஃபோன் மணி அடித்தது. மாதவி பேசினாள்:

     "அப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சு பேசுறதிலே உங்களுக்கு என்னதான் சந்தோஷமோ தெரியலை. வீணா அடுத்தவங்க மனசைச் சங்கடப்படுத்தறதிலே என்ன பிரயோசனம்?"

     "நீ எனக்குப் புத்திமதி சொல்லிக் கொடுக்கிறியாக்கும்..."

     "சே! சே! அப்படியொண்ணுமில்லை. அந்த மாதிரி நினைச்சீங்கன்னா நான் ரொம்ப வருத்தப்படுவேன்."

     "வருத்தப்படேன். அதனாலே என்ன?"

     "என்னை வருத்தப்படச் செய்யறதிலே உங்களுக்கு என்ன அத்தினி சந்தோஷம்!"

     "பேச்சை வளத்தாதே, எனக்குத் தூக்கம் வருது..."

     "நான் பேசத் தொடங்கினாலே தூக்கம் வந்துவிடும் போலிருக்கு."

     "காலையில் இந்தப் பக்கம் வாயேன்."

     "சரி! வரேன்..."

     -அவன் ஃபோனை வைத்தான். முதல் நாள் ஸ்டேஜ் ரிஹர்ஸலின் போது வேறு தூக்கம் விழித்திருந்த காரணத்தினால் முத்துக்குமரனுக்குத் தூக்கம் கண்ணைச் சொருகியது. நன்றாகத் தூங்கிவிட்டான். சொப்பனம் கூடக் குறுக்கிட முடியாதபடி அத்தனை அயர்ந்த தூக்கம். காலையில் எழுந்ததுமே கோபாலின் முகத்தில் தான் அவன் விழிக்க நேர்ந்தது. முதல் நாள் ஒன்றுமே நடைபெறாதது போல் சுபாவமாகச் சிரித்துக் கொண்டே வந்தான் கோபால்.

     "காலையில் எழுந்திருக்கிறதுக்குள்ளாகவே அஞ்சாறு சபா செகரெட்ரீஸ் ஃபோன் பண்ணிட்டாங்க, நம்ம நாடகத்துக்கு அதுக்குள்ளேயே ஏகப்பட்ட 'டிமாண்ட்' வந்திருக்கு."

     "அப்படியா?" - என்பதற்கு மேல் முத்துக்குமரன் அதிகமாக எதுவும் பதில் சொல்லவில்லை. தன்னைக் கோபித்துக் கொள்ள முயல்வதும் முயற்சி தோல்வியடைந்து, தன்னிடமே சரணடைய வருவதுமாகக் கோபால் இரண்டுங்கெட்ட நிலையிலிருப்பதை முத்துக்குமரன் உணர்ந்தான்.

     "இன்னும் ரெண்டு வாரத்திலே மலேயா புறப்படணும். ஒரு மாசம் நாடகக் குழுவோட அங்கே போகணும்னா அதுக்கு எவ்வளவோ ஏற்பாடு செய்யணும், இப்பவே பிடிச்சுத் தொடங்கினால்தான் முடியும்" - என்று மறபடியும் கோபாலே பேச்சைத் தொடங்கினான்.

     "அதற்கென்ன? கூப்பிட்டால் போக வேண்டியது தானே?"- என்று இதற்கும் முத்துக்குமரனிடமிருந்து மிகச் சிக்கனமான பதிலே கிடைத்தது. இப்படி அவன் கூறிய ஒவ்வொரு சிக்கனமான பதிலும் கோபாலை என்னவோ செய்தது.

     "நீ பேசின பேச்சாலே அப்துல்லா மனசு சங்கடப்பட்டிருக்குமோன்னுதான் நான் பயந்தேன். நல்ல வேளையா அவரு அப்பிடி எதுவும் காண்பிச்சுக்கலே. ஆனா இப்பப் பார்க்கறப்ப நான் பேசின பேச்சாலே உன் மனசு சங்கடப்பட்டிருக்கும் போலத் தெரியுது."

     "........."

     "நான் ஒண்ணும் தப்பாச் சொல்லிடலை."

     "நான்தான் நேத்தே சொன்னேனே, அச்சமே கீழ்களது ஆசாரம்னு"-

     "அதைப் பத்திப் பரவாயில்லை. நான் பயந்தாங்கொள்ளீன்னு நீயே திட்டினா அதை நான் ஒப்புத்துக்க வேண்டியதுதானே?"

     "நான் உன்னையோ இன்னொருத்தரையோ குறை சொல்லலியே? 'அச்சமே கீழ்களது ஆசாரம்'னு ஒரு பழைய பாட்டுச் சொன்னேன், அவ்வளவுதான்."

     "இருக்கட்டுமே! இப்ப அதைப்பத்தி என்ன? மலேயாவுக்கு நீயும் வரணும். மாதவி, நீ, நான் மூணு பேரும் பளேன்ல போயிடலாம். மத்தவங்க கப்பல்லே முன்னாலேயே பொறப்பட்டுடுவாங்க. ஸீன்ஸ்யெல்லாம்கூட முன்னாடியே கப்பல்லே அனுப்பிச்சிடணும்."

     "நான் மலேயாவுக்கு வந்து என்ன செய்யப் போறேன் இப்ப? நீங்கள்ளாம் நடிக்கிறவங்க, நீங்க போகாட்டி நாடகமே நடக்காது; நான் வந்து எதைச் சாதிக்கப் போகிறேன்?"- என்றான் முத்துக்குமரன்.

     "அப்படிச் சொல்லப்படாது. நீயும் வரணும், நாளைக்கே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ண ஏற்பாடு செஞ்சிக்கிட்டிருக்கேன். இன்னிக்கு ராத்திரி அப்துல்லாவை இங்கே நம்ம பங்களாவுக்கு டின்னருக்கு அழைச்சிருக்கேன். அவரிட்ட ரெண்டொரு விஷயம் பேசிக்கிட்டா எல்லா ஏற்பாடும் முடிஞ்ச மாதிரிதான்."

     "அதுக்கென்ன? செய்ய வேண்டியதுதானே?"

     "இப்படி யாருக்கு வந்த விருந்தோன்னு பட்டும் படாமலும் பதில் சொன்னா பிரயோசனமில்லை, எல்லாம் நீயும் சேர்ந்துதான்!"

     திடீரென்று கோபாலிடம் தன்னைச் சரிக்கட்டிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு வளர்ந்திருப்பதை முத்துக்குமரன் கண்டான். காரியத்தை எதிர்பாத்துச் செய்யப்படும் இத்தகைய செயற்கையான விருந்துகளை முத்துக்குமரன் எப்போதுமே வெறுத்தான். முத்துக்குமரனின் மனநிலைகள் இது மாதிரி விஷயத்தில் எப்படி இருக்கு என்பதெல்லாம் கோபாலுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான் கோபால். அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மாதவி வந்து சேர்ந்தாள். அவளும் அன்றிரவு பினாங்கு அப்துல்லாவை விருந்துக்கு அழைத்திருப்பதைப் பற்றியே பேசினாள். பினாங்கு அப்துல்லா எவ்வளவு பெரிய கோடீசுவரர் என்பதைப் பற்றியும் விவரித்தாள்.

     "பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாலே ரெண்டு சங்கீத வித்வானோ, ரெண்டு நாடகக்காரனோ சந்திச்சுக்கிட்டாங்கன்னா - தங்கள் தங்கள் கலைகளைப் பத்தி அக்கறையாப் பேசிக்குவாங்க. இப்ப என்னடான்னா 'யாருக்கு விருந்து போடலாம்! - யாருக்கு எது செய்து என்ன காரியத்தைச் சாதிக்கலாம்'னு தான் பேசிக்கிறாங்க. கலைத்துறை அழுகிப் போயிருக்கறதுக்கு இதைவிட வேறென்ன நிதர்சனமான சாட்சி வேண்டும்?"

     "அப்படியே அழுகிப் போயிருந்தாலும் அதை நீங்க ஒருத்தரே சீர்திருத்திப்பிட முடியும்னு நினைக்கிறீர்களா?"

     "நிச்சயமா இல்லே! உலகத்தைச் சீர்த்திருத்தறதுக்காக நான் அவதாரமும் எடுக்கலை. ஆனா இரண்டு தலை முறைகளை நெனைச்சுப் பார்க்கிறேன். ராஜாதி ராஜன்லாம் தன்னோட வீட்டைத் தேடிவரச் செய்த கம்பீரமான பழைய கலைஞர்களையும், மந்திரிகளையும் பிரமுகர்களையும் வீடு தேடி ஓடும் கூன் விழுந்த முதுகுடன் கூடிய இன்றையக் கலைஞர்களையும் சேர்த்து நினைக்கறப்ப எனக்கு வேதனையாயிருக்கு மாதவி.”

     -அவன் இந்த வாக்கியங்களைச் சொல்லிய உருக்கமான குரலுக்குக் கட்டுப்பட்டு என்ன பதில் சொல்லதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தாள் மாதவி. சிறிது நேர மௌனத்திற்குப்பின் பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள் அவள்.

     "நாடகத்தைப்பத்தி ஜனங்க ரொம்ப நல்லாப் பேசிக்கத் தொடங்கிட்டாங்க. எனக்கு, ஒனக்குன்னு சபாக்காரங்க இப்பவே 'டேட்' கேக்கிறாங்க! நல்ல கட்டுக் கோப்போட கதையை எழுதியிருக்கீங்க, அதுதான் காரணம்..."

     "நீ கூட ரொம்ப நல்லா நடிச்ச மாதவீ. இப்படி வாய் விட்டுப் புகழறது எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. நீ அதைச் செய்யத் தொடங்கிவிட்டதுனாலே நானும் செய்ய வேண்டியிருக்கு..."

     "நல்லா இருக்கிறதை நல்லா இருக்குன்னு சொல்றது கூடத் தப்பா என்ன?"

     "இந்தக் காலத்திலே ரொம்ப மோசமா இருக்கிறதைத்தான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குன்னு அழுத்தி அழுத்திச் சொல்றாங்க. அதனாலே நிஜமாகவே நல்லாயிருக்கிற ஒண்ணைப்பத்தி நாம எதுவுமே சொல்லாம இருக்க வேண்டியிருக்கு."

     "இருக்கலாம்! ஆனா எனக்கு, உங்களை எல்லாரும் புகழறதைக் கேட்டாலே சந்தோஷமா இருக்கு. இருபத்தி நாலு மணி நேரமும் உங்களை யாராவது புகழமாட்டாங்களான்னு நான் கேக்கறதுக்கு ஏங்கிட்டிருக்கேன்."

     -இப்படிக் கூறியபோது அவள் குரலில் தாபமும் தாகமும் நிறைந்திருந்தது. அவள் ஜீவகளை ததும்புகிற வாலிபப் பருவத்துக் கவிதையாய் அவனருகே நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கண்களின் வசீகரமான ஒளி, இதழ்களின் கனிவு, எல்லாம் தோன்றித் தோன்றி அவனை மயக்கின. அருகே நெருங்கி நின்ற அவள் மேனியின் நறுமணம் அவனுடைய நாசியை நிறைத்துக் கிறுகிறுக்கச் செய்தது. கூந்தல் தைலத்தின் வாசனையும், சாதிப்பூவின் மணமும், பவுடர் கமகமப்பும் பரப்பிய விறுவிறுப்பில் அவன் கிறங்கினான். நெகிழ்ந்து வரும் ஓர் இனிய சங்கீதத்தைப் போல் அவள் அழகுகள் அவனை வசப்படுத்தின. அவளைத் தாவி இழுத்து இறுக அணைத்துக் கொண்டான் அவன். கொய்து சூடிக்கொள்ள முடிந்தவளின் கைகளுக்குள் இலகுவாக நெகிழ்ந்து போய் விழும் ஒரு குழைந்த பூவைப்போல் அவனுடைய தழுவலில் இருந்தாள் அவள். அவன் காதில் பூ உதிர்வதுபோல் அவள் குரல் ஒலித்தது.

     "இப்படியே இருந்துடணும் போல இருக்கு - "

     "இப்பிடியே இருந்துவிட ஆசைப்பட்ட முதல் - ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவேதான் உலகமே படைக்கப்பட்டது..."

     "அவள் கைகள் அவன் முதுகில் மாலைகளாய் இறுகித் தோளின் செழிப்பான பகுதியில் பிடியை அழுத்தின.

     சிறிது தொலைவில் பங்களாவிலிருந்து அவுட்ஹவுஸுக்கு வரும் பாதையில் யாரோ நடந்து வரும் செருப்பு ஓசை நெருங்கிக் கேட்கலாயிற்று.

     "ஐயோ! கோபால் சார் வர்ராரு போலிருக்கு...விடுங்க... விட்டுடுங்க..." என்று மாதவி பதறிப் பரபரப்படைந்து அவன் பிடியிலிருந்து திமிறி விலகிக் கொண்டாள். முத்துக்குமரன் இதை வெறுப்பவன்போல் அவளை உறுத்துப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்தன, கோபமான குரலில் அவன் சொற்களை உதிர்த்தான்.

     "நேற்று ராத்திரி நாடகம் முடிஞ்சு திரும்பி வர்ரப்ப கோபால் கிட்ட அவனுக்காகச் சொன்னதையே இப்ப உனக்காகவும் உங்கிட்டத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கு. 'அச்சமே கீழ்களது ஆசாரம்!'"

     அந்தச் சமயத்தில், "என்ன நேத்து ராத்திரியிலிருந்து வாத்தியாரு எல்லாரையும் கவிதையிலேயே திட்டிக்கிட்டிருக்காரு?" என்று வினவிக் கொண்டே கோபால் உள்ளே நுழைந்தான். மாதவி முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சுபாவமாகக் கோபாலை எதிர்கொண்டாள்.

     "மாதவி! உன் போட்டோ காப்பி ரெண்டு வேணும். பாஸ்போர்ட் அப்ளிகேஷனுக்குத் தேவை. நாளைக்குள்ளே அத்தனை அப்ளிகேஷனையும் அனுப்பிடணும்னு பார்க்கிறேன். அதோட நம்ம சாரையும் (முத்துக்குமரனைச் சுட்டிக்காட்டி) ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டுப் போயி - பாஸ்போர்ட்சைஸ் படம் எடுத்துடணும். மத்தியானத்துக்குள்ளார நீயே அழைச்சிட்டுப் போயிட்டு வந்துடணும். நாள் ரொம்பக் குறைச்சலாயிருக்கு,"

     "எங்கே? நம்ப பாண்டிபஜார் ஸன்லைட் ஸ்டூடியோவுக்கே அழைச்சிட்டுப் போகட்டுமா?"

     "ஆமாம். அங்கேயே அழைச்சிட்டுப்போ. அவன் தான் சீக்கிரம் எடுத்துக் கொடுப்பான்..."

     உரையாடல் மாதவிக்கும் கோபாலுக்கும் இடையே தொடர்ந்ததே ஒழிய முத்துக்குமரன் அதில் கலந்து கொள்ளவே இல்லை.

     சிறிது நேரத்திற்குப் பின் கோபால் அங்கிருந்து புறப்பட்டபோது, வாசற்படி வரை போய்த் திரும்பி, "மாதவீ! இதோ ஒரு நிமிஷம்..." - என்று கண்ணடிப்பது போல் ஒரு கண்ணைச் சிறக்கணித்து அவளைக் கூப்பிட்டான் கோபால். அவன் அப்படி மாதவியைக் கண்ணடித்துக் கூப்பிட்டதை முத்துக்குமரன் மிகவும் அருவருப்போடு கவனித்தான். அவனுள்ளம் குமுறியது. மாதவியும் போவதா, வேண்டாமா என்று தயங்கியவளாக முத்துக்குமரன் பக்கமும் கோபால் பக்கமுமாக மாறி மாறிப் பார்த்தாள். அதற்குள் மறுபடியும் கோபால் தெளிவாக அவளை இரைந்து பெயர் சொல்லியே கூப்பிட்டு விட்டான். போவதைத் தவிர வேறு வழி அவளுக்குத் தோன்றவே இல்லை. அவள் வெறுப்பு உமிழும் முத்துக்குமரனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கப் பயந்தபடியே அறை வாசலில் நின்ற கோபாலைப் பார்த்து வரச் சென்றாள். கோபாலோ அவளை அங்கேயே நிறுத்திப் பேசி அனுப்பாமல் கூடவே அழைத்துக் கொண்டு பங்களா முகப்புவரை வந்து விட்டான். அவளுக்கோ உள்ளூற ஒரே பதற்றம்.

     கோபால் கண்ணசைத்துக் கூப்பிட்டதும், தான் அவனோடு கூடவே புறப்பட்டு பங்களா வரை வந்து விட்டதும் முத்துக்குமரனின் மனதில் என்னென்ன எண்ணங்களை உண்டாக்கும் என்று நினைத்து அஞ்சியபடியே கோபால் கூறியவற்றை மனமில்லாமல் காதில் வாங்கிக் கொண்டு நின்றாள் அவள்.

     "பினாங்கு அப்துல்லா ஒரு தினுசான பேர்வழி. நீதான் கவனிச்சுக்கணும். அவரை 'ஓஷியானிக்'லேருந்து கூட்டியாரதுக்கே உன்னைத்தான் அனுப்பப்போறேன்."

     "........"

     "என்னது! நான் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீ எங்கேயோ பராக்குப் பார்த்துக்கிட்டு நிக்கறே?"

     "இல்லே; நீங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டுத்தான் நிக்கிறேன். 'ஓஷியானிக்' ஹோட்டலிலே போயி அப்துல்லாவைக் கூட்டியாரணும். அப்புறம்?"

     "அப்புறம் என்ன? அவரு மனசு சந்தோஷப்படறாப்பல பார்த்துக்கணும். உனக்கு நான் படிச்சுப் படிச்சுச் சொல்லணும்கிற அவசியமில்லே? நீயே எல்லாம் பார்த்துக் குறிப்பறிஞ்சு செய்யக்கூடியவ..."

     "........"

     "விருந்துக்கு யார் யாரை அழைச்சிருக்கேன்கிற லிஸ்டு விவரம்லாம் செகரெட்டரிகிட்ட இருக்கும். அதை வாங்கித் திரும்பப் பார்த்து உன் குரலாலே ஒரு தடவை 'ரிமைண்ட்' பண்ணினயின்னா பிரமாதமா இருக்கும்" - என்று சொல்லி விட்டு மறுபடியும் கண்களைச் சிமிட்டிக் கொண்டே செழிப்பான அவள் முதுகில் சுபாவமாகத் தட்டிக் கொடுத்தான் கோபால். வாழ்வில் இதுவரை இப்படி ஓர் ஆடவன் தட்டிக் கொடுப்பதில் பயிர்ப்போ, நாணமோ, கூச்சமோ அடைந்திராத அவள் இன்று அவற்றை அடைந்தாள். கோபாலின் கைபட்ட இடம் இன்று அவளுக்கு அருவருப்பை அளித்தது. முத்துக்குமரன் அவளை அந்த அளவு மாற்றியிருந்தான்.

     தான் முதுகில் தட்டிக் கொடுக்கும் போதோ கண்களை அசைக்கும் போதோ அந்த உற்சாக குறுகுறுப்பின் எதிர் விளைவோ, வரவேற்போ அவள் முகத்தில் இல்லாததைக் கோபால்கூட அன்று கவனித்தான். கேட்கவும் செய்தான்.

     "ஏன் என்னவோ போல இருக்கே?" -

     "ஒண்ணுமில்லே. எப்பவும் போலத்தானே இருக்கேன்?" - என்று சிரிக்க முயன்றாள் மாதவி.

     "ரைட்டோ! அப்ப நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன். சொன்னதையெல்லாம் நீ கவனிச்சுக்க" -

     அவன் புறப்பட்டுப் போய் விட்டான். அவள் மனத்திலே ஒரு சிறிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. பினாங்கு அப்துல்லாவைக் கோபால் இரவு டின்னருக்குத் தான் அழைத்திருந்தான். இரவு டின்னருக்கு அழைத்து வரவேண்டுமானால் அவரை மாலை ஏழு மணிக்கு மேல் அழைக்கப் போனால் போதும். ஆனால் கோபாலோ - 'முன்னாலேயே போய் அவரிடம் உல்லாசமாகக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, - அழைத்துக் கொண்டுவா' என்கிற தொனி இருந்தது.

     பெரும்பாலும் கோபால் தன்னை, 'ஒரு நிமிஷம் இப்படி வந்துட்டுப் போயேன்' - என்று கண்ணைச் சிமிட்டி அழைத்துக் கூப்பிட்டுச் சொல்லி விட்டுப் போன சமயங்களில் தான் எங்கெங்கே போய் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை எல்லாம் இந்த விநாடியில் நினைவு கூர்ந்தாள் அவள். அவற்றை இரண்டாவது முறையாக நினைப்பதற்கு இன்று அவளே அருவருப்பும் கூச்சமும் அடைந்தாள். முத்துக்குமரன் என்கிற கலைக் கர்வம் மிகுந்த கம்பீர நாயகனை அவள் சந்தித்துப் பழக நேரவில்லை என்றால் இன்றுகூட அந்தக் கூச்சமும் கர்வமும் அவளுக்குப் புரிந்திருக்கப் போவதில்லை. சிலரை நினைத்து வாழத் தொடங்கிவிட்டபின், அதற்கு முன்னால் வாழ்ந்த விதங்களை இரண்டாம் முறையாக நினைவுக் கூரவும் தயங்கும்படி அவர்கள் செய்து விடுகிறார்கள். மாதவியும் முத்துக்குமரனுடன் பழகியபின் அப்படித்தான் இருந்தாள்.

     கோபால் சொல்லிவிட்டுப் போயிருந்த வார்த்தைகளிலிருந்து தொனித்த அர்த்தத்தின்படி செய்வதாயிருந்தால் மாதவி அப்போதே ஹோட்டலுக்குப் புறப்பட்டுப் போய் அப்துல்லாவைச் சந்தித்திருக்க வேண்டும். பின்பு அப்படியே அங்கிருந்து மாலை ஏழு மணிக்கு மேல் அப்துல்லாவை அழைத்துக் கொண்டு வரவேண்டும். ஆனால் அவள் அன்று இப்படிச் செய்யவில்லை. நேரே முத்துக்குமரனுக்கு எதிரே போய் நின்றாள். அவன் கண்கள் அவளை நோக்கி நெருப்புக் கங்குகளாகக் கனன்றன. குரல் இடியாக அதிர்ந்தது.

     "என்ன, போயிட்டு வந்தாச்சா? துரை மகன் மைனர் கணக்கா கண்ணடிச்சுக் கூப்பிட்டானே!"

     "நான் செய்த பாவம், உங்களுக்குக்கூட என்மேல் கோபம் வருகிறது.

     "அவன் கண்ணைச் சாய்ச்சுக் கூப்பிட்டவிதம் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

     "நான் என்ன செய்யட்டும் அதற்கு?"

     "என்ன செய்யட்டும்னா கேட்கிறே. அதான் நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே சிரிச்சுக்கிட்டு ஓடிப்போனியே! அதைவிட மோசமா இன்னும் வேறே ஏதாவது செய்யணுமா என்ன?"

     "திட்டுங்க, நல்லாத் திட்டுங்க...நீங்க எதை திட்டினாலும் எப்படித் திட்டினாலும் எனக்குப் பிடிக்கும்? நாய்க்குட்டி பேய்க்குட்டின்னு என்ன வேண்டும்னாலும் சொல்லுங்க...கேட்டுக்கறேன்..."

     "மானமில்லாட்டி எதை வேணாக் கேட்டுக்கலாம், உறைக்கவே உறைக்காது."

     "உங்ககிட்டப் பழகிப் பழகித்தான் எவ்வளவோ மாறிக்கிட்டிருக்கேன். நீங்களே இப்படிப் பழி சொன்னா எப்படி?"

     "தொலையட்டும்! இப்பக் கேக்கறதுக்குப் பதில் சொல்லு. அந்த 'அயோக்கியன்' எதுக்காகக் கூப்பிட்டான் உன்னை?"

     "ஒண்ணுமில்லை, அப்துல்லாவை விருந்துக்கு அழைச்சிட்டு வர்றதுக்குப் போகணுமாம்..."

     "யாரு?"

     "வேற யாரு? நான் தான்,"

     "நீ எதுக்குப் போகணும்? அவன் போகட்டுமே? அவனுக்கும் போக முடியாட்டி செகரெட்டரி எவனாவது போய்க் கூட்டிக்கிட்டு வரட்டுமே?"

     "எங்கிட்டக் கூப்பிட்டுச் சொல்றாரு...நான் எப்படி மாட்டேங்கறது?"

     "முடியுமா? அதான் நேத்திலிருந்தே சொல்லிக்கிட்டிருக்கேனே 'அச்சமே கீழ்களது ஆசாரம்னு'."

     "........"

     "கலையினோட எல்லாப் பிரிவிலேயும் இன்னிக்கு வியாபாரம் கலந்துரிச்சி. இனிமே இதைத் திருத்தவே முடியாது. விற்கக் கூடாததை எல்லாம் விற்றுச் சாப்பிடத் துணியும் பஞ்சப்பட்ட குடும்பம் போல இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து கலைஞர்கள் கூன் விழுந்த முதுகுகளுடன் பணத்தைத் தேடி இன்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். கர்வப்பட வேண்டிய அளவு மனோதிடத்தைத் தன்னிடம் மீதம் வைத்துக்கொள்ளாத கலைஞர்களையே இங்கே பட்டிணத்தில் நான் அதிகமாகப் பார்க்கிறேன். இது இந்தக் காலத்தைப் பிடிச்சிருக்கிற நோய் போலிருக்கு."

     "நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்கப் பத்து வருசத்துக்கு முன்னாடியே நான் உங்களைச் சந்திச்சிருக்கணும்னு தோணுது."

     - அவள் குரல் கம்மிப் போய் வந்தது. அதிலிருந்த கழிவிரக்கத்தை அவனும் உணர்ந்தான். அவளுடைய நெகிழ்ந்த குரல் அவன் உள்ளத்தை உருக்கியது. அவன் அவள் முகத்தைப் பார்த்தபடி சில விநாடிகள் ஒன்றும் பேசத் தோன்றாமல் இருந்து விட்டான். அவள் அவனைக் கேட்டாள்:

     "இப்ப, நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க..."

     "எங்கிட்ட ஏன் கேட்கிறே?"

     "உங்ககிட்டத்தான் கேட்கணும். அவரு சொன்னபடி நான் இப்பவே அப்துல்லாவைப் பார்க்கப் போறதில்லை. வேணுமானா சாயங்காலம் கூப்பிடப் போகலாம்னு இருக்கேன். அதுவும் நான் தனியாப் போகப் போறதில்லே. உங்களையும் கூட்டிக்கிட்டுப் போகப் போறேன்."

     "நானா? நான் எதுக்கு?"

     "எங்கூட நீங்க வராமே வேறே யார் வருவாங்க?" - இந்த வாக்கியத்தைக் கேட்டு முத்துக்குமரனுக்கு மெய் சிலிர்த்தது.